உன்னுள் என்னைக் காண்கிறேன் 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாகம் – 16

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்

நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்


ஹரிஹரனின் குரலோடு தன் குரலும் ஒரு சேரப் பாடிக் கொண்டிருந்தான் தேவ்.

இரண்டு தினங்களாக தேவ் ‘இது அது தானா’ அப்படி இருக்காது. பிறகு வேற என்னவாக இருக்கும். ஏன் இப்படி இருக்கிறேன்’ என்று பலவாறு குழம்பியவனின் மனதில் இது காதல்தான் என்று புரிய வைத்தது அன்றைய சம்பவம்.

எப்போது அவளைக் காணாமல் தவித்துத் துடித்துக் கதறி கண்ணீர் விட்டானோ அப்போதே தன் மனதில் சங்கல்பம் கொண்டான், ‘இந்தப் பிறவியில் தன் வாழ்வில் மனைவி என்று ஒருத்தி உண்டு என்றால் அது மித்ரா மட்டும் தான். இது எப்படிடா சாத்தியம்?’ என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.

‘நீ ஓர் குழந்தைக்குத் தகப்பன்! உன் மனைவி பவித்ராவால் உன் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் இன்னும் அப்படியே தான் இருக்கு. இதில் மித்ராவின் மேல் காதல்னு வேற சொல்ற. இது சரிப்பட்டு வருமா? உனக்கு இருக்கும் சிக்கலால் அவளின் உயிருக்கும் வாழ்வுக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வ?

நீ இப்படி மித்ராவை உன் மனைவியாக நடிக்க வைத்திருப்பது தெரிந்தும் பிரபு அமைதியாக இருக்கிறவன் நாளை பின்னாளில் ஏதோ செய்வான் என்பது மட்டும் உறுதி. அவனால் தனியா என்ன செய்ய முடியும்? எல்லாம் அந்த மார்த்தாண்டத்தின் கைப் பொம்மையாக இல்ல இருக்கிறான். இல்லனா சொந்த தங்கையான பவித்ராவின் வாழ்வில் இப்படி விளையாடுவானா? சொத்தும் பணமும் இப்படி எல்லாம் அவனைச் செய்யச் சொல்லுது.

மித்ரா என் மனைவியாக நடித்ததற்கே மார்த்தாண்டம் அங்கு கூண்டுப் புலியாக திரிந்தானாம். இப்போது அவளை நான் உண்மையாகவே மனைவியாக ஏற்று அவளுடன் வாழ ஆரம்பித்தால் அவளின் உயிருக்கே ஆபத்தாகப் போனாலும் போகும். இனிமேல் மித்ராவை நான் என் கண்பார்வையிலே வைத்திருக்க வேண்டும்’ என்று பலவாறு யோசித்தவன்.

‘எது எப்படியோ இனி என்ன நடந்தாலும் யார் தடுத்தாலும் இனி என் வாழ்வில் மித்ராவுக்கு மட்டும் தான் இடம். இந்தப் பிறவியில் அவள் தான் என் மனைவி! இதை அவளே மறுத்தாலும் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்’ என்று உறுதி எடுத்தவன் அதை செயல்படுத்தும் முடிவில் தன் தாயிடமும் சித்தியிடமும் தன் விருப்பத்தைக் கூறி அனுமதி வாங்கினான்.

அதே சந்தோஷ மன நிலையுடன் தன் அறைக்கு வந்தவன் சிறு குழந்தையாகக் குத்தாட்டம் போட்டான். தன் அறையில் உள்ள பொருட்களை எடுத்து வருடிக் கொடுத்து பின் அதே இடத்தில் வைத்தவன். அவனின் அறையில் நுழையும் போதே அறையின் எதிர் திசையில் உள்ள சுவர் முழுக்க கண்ணாடியைப் பதித்திருக்க. அங்கு சென்று முன்னும் பின்னுமாக நடந்து பின் கட்டிலில் படுத்துத் தன்னுள் பூத்தக் காதலை டீன் ஏஜ் பையனாக ரசித்துக் கொண்டிருந்தான் தேவ்.

ஓரே நாளில் மலர்ந்த தன் காதல், அன்று மாலைக்குள் தன் தாய் மற்றும் சொந்தங்களின் சம்மதத்தோடு மணம் வீசுகிறது என்றால் அவன் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்?

பலவாறு சிந்தித்து மகிழ்ந்த அவன் மனது இறுதியாக மித்ராவிடம் வந்து நின்றது. ‘முகம் தெரியாத அன்றே உன்னை என்னால் விட முடியலடி. அதன் பிறகும் உன் குறும்பையும் பேச்சையும் தானடி ரசித்தேன். நீ என்கிட்ட கோபம் கொள்ளும்போது கூட என்னால உன்னை விட்டு விலக முடியல. அப்பவே கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல இடம் பிடிச்சிட்டடி. ஆனா இன்று நீ காணாமல் போனப் பிறகு தான் எனக்கு அந்த உண்மையே புரிஞ்சிது.

இதுவரைக்கும் உன் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தாலும் இல்ல இனிமே என்ன நடந்தாலும் சரிடி. இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான்டி என் பொண்டாட்டி. அதை யாராலும் மாற்ற முடியாது. ஏன் அதை உன்னாலும் தடுக்க முடியாது. உன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எல்லாமே எனக்குத் தெரியும். அதே என் வாழ்க்கையில் நடந்தது எதுவும் உனக்குத் தெரியாது. அதை நானே உன்கிட்ட சொல்லுவேன்டி. ஆனா இப்போ இல்ல.

முதல்ல நீ உன் பழைய வாழ்க்கையிலிருந்து வெளியே வா. என்மேல உனக்குக் காதல் வரணும். என்னைக்கு என்ன உன் கணவனா மனசார நினைக்கிறியோ அன்று தான் நான் அந்த உண்மைகள சொல்லுவேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் திடீர் என்று அவளுக்கு ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தோன்ற. உடனே படுக்கையில் இருந்தபடியே தன் கைப்பேசியை எடுத்து ஜீவாவை அழைத்துத் தான் யோசித்ததைச் சொல்லி வாங்கி வரச் சொன்னான்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஜீவாவும் அதைக் கொண்டு வந்து கொடுக்க. அதை எடுத்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக மித்ராவின் அறை நோக்கிச் சென்றவன் அவள் அறைக் கதவு சற்றுத் திறந்தபடி இருக்க தேவ்வுக்கு வசதியாகிப்போனது. தட்டி அனுமதி கேட்க வேண்டும் என்று நினைக்காமல் உரிமையுடன் உள்ளே வர. ஆனால் மித்ரா அங்கு இல்லை. ஒருவேளை சித்தி அறையில் இருப்பாளோ என்று நினைத்துத் திரும்பிப் போக இருக்கையில் பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்கவே நின்று விட்டான். வெளியே வருவதற்காக காத்திருக்க.

அவளோ குளித்து முடித்துத் தலையில் டவலுடன் சிவப்பு நிறத்தில் இரவு உடையுடன் வெளியே வர. அவளைப் பார்ப்பதற்கு புதிதாய் பூத்த ரோஜாப்பூ போலிருந்தாள். நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் ஊறி சற்று சிவப்பேறி இருந்த இரு கன்னங்களும், மாதுளம் பழத்தின் நிறத்தில் இருந்த உதடுகளும் அவனைக் கவர்ந்தன. டவ் சோப்பின் வாசனையும் கூட சேர்ந்து தேவ்வை மயக்கியது. ‘கன்ட்ரோல் தேவ் கன்ட்ரோல்’ என்று அவனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை அந்த நேரத்தில் எதிர்பாராத மித்ரா லேசாக அதிர்ந்தாள்.

‘இந்த லம்பா இப்ப ஏன் இங்க வந்தான்? ஒருவேளை அப்போ என்னைத் திட்ட மறந்ததால் இப்ப வந்திருக்கானோ? பார்ப்போம் இதுக்கப்புறம் இவன் திட்டினா நா அழ மாட்டேன். திருப்பி நானும் கொடுக்கிறேன் இரு’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டே “ஹலோ... கதவத் தட்டிட்டு வர மாட்டீங்களா? உங்க வீடுன்னா இப்டிதான் செய்வீங்களா” என்று அதட்டியவளை வழக்கத்துக்கு மாறாகத் திட்டாமல் ஹி.. ஹி... ஹி... என்று இளித்துக் கொண்டே பூனைக் குட்டியாகக் குழைந்த படி தான் கொண்டுவந்த பொருளை ஆசையுடன் அவள் முன் நீட்ட.

“என்ன இது”

“வாங்கிப் பிரிச்சிப் பார்த்தாதானே தெரியும்”

மித்ரா அதை வாங்கிப் பிரித்துப் பார்த்ததில் விலையுயர்ந்த ஆப்பிள் ஐ போன் இருந்தது.

“இதென்ன இவ்ளோ காஸ்ட்லியான போன், யாருக்கு…”

“உன் ரூம்ல வந்து உன்கிட்ட கொடுத்தா பக்கத்து வீட்டு பாட்டிக்காகவா இருக்கும், உனக்கு தான்டி மண்டு” தான் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் மயக்கத்தில் உளர..

“என்னது டி யா? என்ன மிஸ்டர் வார்த்தை யெல்லாம் மாறுது? கொஞ்சம் பார்த்துப் பேசுங்க”

“ஆமாடி... பார்த்ததால தான இப்படி எல்லாம் பேசறேன். நீ என் பொண்டாட்டி டி. அதனால இனிமே உன்ன டி போட்டுத் தான் டி கூப்பிடுவேன். அப்புறம் என்ன சொன்ன? வார்த்தை எல்லாம் மாறுதா? ஆளே மாறிப் போய் தான்டி வந்திருக்கேன் என் பொண்டாட்டி” என்று வசனம் பேசவும்…

‘இவன் ஏன் இப்படி எல்லாம் பேசுறான்’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலே மேற்கொண்டுயோசிக்க விடாமல் அவளை இழுத்து அணைத்து இடது கையால் அவள் பின் புறத் தலையைத் தாங்கிப் பிடித்தவன் வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் இதழ்களைச் சிறை செய்தான் தேவ். முதலில் திகைத்தவள் பின் அவனிடம் இருந்து விடுபடப் போராட. அதை உணர்ந்தவனோ அவளை அசைய முடியாத படி தன் வலது கையால் அவள் இடுப்பை வளைத்து தன் பிடியை மேலும் இறுக்க.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் பசியும் இங்கும் அங்கும் அலைந்ததால் வந்த சோர்வும் சேர்ந்து கொள்ள மித்ராவால் அவனை முழுமையாக எதிர்க்க முடியாமல் போனது. ஆனால் அப்போதும் தன் வலுவில்லாத இரண்டு கைகளாலும் தன் பலம் கொண்ட மட்டும் அவன் முதுகைக் குத்திக் கொண்டிருந்தாள்.

‘இந்தக் குத்து எல்லாம் எனக்கு ஓர் வலியா’ என்பது போல் அதை விடுத்து அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தான் தேவ்.

‘டேய்…. போதும்டா நிறுத்து’ என்பது போல் தேவ்வின் மொபைல் அவனுக்குத் தடை போட்டது. அதை அலட்சியப் படுத்தினாலும் “தட்.. தட்..“ என்று சத்தம் கேட்கவே, “எவன்டா அவன்? சிவ பூஜையில் கரடி மாதிரி“ என்று திட்டிக் கொண்டே அவளை விடுவிக்க,

ஆனால் விடுவித்த அவன் கையில் தான் மித்ரா இல்லை...பின்னே படுத்துக் கொண்டே கற்பனையில் அல்லவா இவ்வளவும் செய்து இருக்கான்… ‘இந்த அளவுக்கா எனக்கு முத்திப் போச்சி’ என்று அசடு வழிய தன்னுள் சிரித்துக்கொண்டே இடது கையால் தலையக் கோதிக் கொடுத்தவன் பின் ஜீவாதான் அழைத்திருப்பான் என்று எண்ணிக் கொண்டே மொபைலை எடுத்துப் பார்க்க அவன்தான் என்று காட்டியது.

அதே நேரம் அறையின் வெளியில் இருந்து முனிபாண்டியும் “தம்பி தம்பி “ என்று கதவைத் தட்டி அழைக்க. கதவைத் திறந்த தேவ்விடம் ஜீவா அலுவல் அறையில் காத்திருப்பதாகக் கூற அங்குச் சென்றவன் அவன் வாங்கி வரச் சொன்ன ஐ போனில் தான் ஏற்கனவே வைத்திருந்த சிம்மைப் போட்டு ஆன் செய்தவன் அவனை அனுப்பியவன்.

‘என் அழகு ராட்சஸிக்கு நான் வாங்கிக் கொடுக்கும் முதல் பொருள் இது’ என்ற மனதின் குதூகலத்துடன் ஓடிச் சென்று அவள் அறைக்கதவைத் தட்டச் சிறிது நேரத்தில் மித்ரா வந்து திறந்தாள். அவள் இரவு உடையில் இருக்க, சற்று முன் தான் கண்ட கற்பனை நினைவுக்கு வர கொஞ்சம் தடுமாறினான் தேவ். முதலில் நித்திலா என்று நினைத்துக் கதவைத் திறந்தவள் அங்கு தேவ்வைப் பார்த்து திகைத்துப் பின் இரவு ஆடையின் அசௌகரியத்தால் சற்று நெளிந்தவள்.

அதனால் அவனை உள்ளே வர வழி விடாமல் ருத்ராவுக்காக தான் வந்திருப்பான் என்று நினைத்து “ருத்ரா இங்கில்ல, உங்க சித்தி அறையில் இருக்கா” எனவும்

“தெரியும் நான் குட்டிமாவைப் பார்க்க வரல“ தேவ்…

“….. ” அவள் மௌனமாக நிற்க.

“உன்னிடம் கொஞ்சம் பேசணும் மித்ரா”

“ஓ…” அவன் உள்ளே வர சற்று விலகி வழி விட்டவள் நேரே கப்போர்டில் இருந்து தன் உடைகளில் ஒன்றை எடுத்தவள் ”கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க... இதோ வரேன்” என்று கூறி உடை மாற்றும் அறைக்குள் சென்றாள். அதே சமயம் மனதிற்குள் ‘இப்போ எதுக்கு வந்திருக்கான்? ஒரு வேளை நித்திலா வண்டியை எடுத்துப் போய் ஒடச்சிட்டு வந்ததால் திட்டப் போறானோ... இவன் பணம் இவன் பொருள்னா கரெக்டா இருப்பான். அந்த வண்டிக்கான பணத்தைத் தான் கேட்கப் போறான்.

தாத்தாகிட்ட எப்படியாவது பேசி அந்த வண்டிக்கான பணத்தையாவது திருப்பிக் கொடுத்திடணும்’ என்று பலவாறு யோசித்தவள் அந்த அறையிலிருந்து திரும்பி வரும் போது சுடிதாரில் இருக்க. தேவ்வோ ‘இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் தான் உன்கிட்ட எனக்குப் பிடிச்சது’ என்று மனதில் அவளை மெச்சிக் கொண்டான்.

அவன் அமைதியாக இருக்க “ஏதோ பேசணும்னு சொன்னீங்க…” என்று நினைவுபடுத்த,

உடனே தன் கையிலிருந்தப் பெட்டியை அவள் முன் தேவ் நீட்ட,

அவள் அதை வாங்காமல் என்ன இது என்பது போல் கேள்வியாகப் பார்க்க..

“வாங்கிப் பிரிச்சிப் பாரு”

அதை வாங்கிப் பிரித்துப் பார்த்ததில் ஒரு லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் ஐ போன் இருந்தது. ‘ஐய்யோ... இதை ஏன் வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்கறான்’ இதையெல்லாம் அவள் வாங்கியது இல்லையென்றாலும் அதனுடைய விலையும் மதிப்பும் அவளுக்குத் தெரியும்.

“யாருக்கு இது?”

“இது என்ன கேள்வி, உன்னைத் தேடி வந்து உன்கிட்ட கொடுத்தா பின்ன அது யாருக்காக இருக்கும்? ஸ்மார்ட்டா பேசறோஈம்னு நெனப்பா பக்கி…” ஆசை ஆசையா வாங்கிட்டு வந்து கொடுத்தா வாங்கிப் பார்த்து சந்தோஷப்படாமல் யாருக்குனு கேட்கறா என்ற கோபத்தில் பேச,

“எனக்கு வேண்டாம்” ஒற்றை வரியில் மித்ரா சொல்லவும்..

அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. “எதுக்கு? மறுபடியும் சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சுற்றக் கிளம்பவா? நீ வர்ற வரைக்கும் இங்க எல்லாரும் டென்ஷன்ல உட்கார்ந்திருக்கவா? அப்படி உனக்காக உட்கார்ந்திருக்க இங்க யாரும் வேலை வெட்டி இல்லாமல் சும்மா உட்கார்ந்து இல்ல” என்று கத்த.

உண்மையில் மித்ராவிடம் போன் இல்லை. அவள் தாத்தா மட்டும் தான் அவளிடம் பேசுவார். அதுவும் தேவ் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்தும் அவன் நம்பருக்கு இல்லை என்றால் வீட்டில் உள்ள லேண்ட் லைன் நம்பருக்கு. இதுவரை அவளுக்குப் போன் இல்லை என்பதே அவன் மனதில் படவில்லை. இன்று அந்த போன் இல்லாமல் அவன் தவித்த தவிப்பும் துடிச்ச துடிப்பும் அவனுக்குத் தானே தெரியும்... ‘இவ என்னனா சர்வசாதாரணமா வேண்டாம்னு சொல்றா’ என்று மனதிற்குள் பொங்கினான்.

அவன் சொன்ன வார்த்தைகளில் தன்னைக் குத்திக் காட்டுகிறான் என்று பட மித்ராவின் முகம் வாடியது. “இல்ல நான் போகும் போது உங்க சித்திக்கிட்ட சொல்லிட்டுத் தான் போனேன்” என்றாள் சிறிதாகி விட்ட குரலில்.

அவள் மீண்டும் மீண்டும் அந்தப் போனை வாங்கிக் கொள்ளாமல் பேசவே, “ஆமாம், நீ யார்கிட்ட வேலை செய்ற? உன்னை வேலைக்கு வச்சது நான் தான. அப்ப நீ என் கிட்ட தான சொல்லிட்டுப் போய் இருக்கணும். என்னமோ சித்திகிட்ட சொல்லி இருக்க. அதிலும் எங்க போற எப்போ வருவனு ஏதாவது சொன்னியா. நீ பாட்டுக்கு போறனு தான சொன்ன.

இப்போ கேட்டுக்கோ, நீ எங்கே போறதா இருந்தாலும் என்கிட்ட தான் சொல்லணும் கேட்கணும். நான் பர்மிஷன் கொடுத்தப் பிறகு தான் நீ எங்கேயும் போகணும். அதுவும் கார்ல தான், ஸ்கூட்டி எல்லாம் இனிமே நீ தொடவே கூடாது. அதிலேயும் நான் சொல்ற நேரத்துக்கு எல்லாம் வீட்டில் இருக்கணும். அப்படி வெளியில் இருக்குற எந்த நேரத்திலும் நான் உன்ன காண்டாக்ட் பண்ண தான் இந்த போன். என்ன புரிஞ்சிதா” என்றான் அதிகாரமாக.

‘ஒருத்தி எவ்வளவு பெரிய விபத்திலிருந்து உயிர் பிழைச்சி வந்திருக்காளேனு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அவளை ரெஸ்ட் எடுக்க விடாம, மத்தவங்க மனசு கஷ்டப்படுமே என்ற எண்ணமே இல்லாமல் எப்படி முகத்தில் அடிச்ச மாதிரி பேசறான்…’ என்று மனதில் நொந்து போனவள்.

“ஸாரி ஸார், நீங்க சொல்றது சரி தான் ஸார். வேலை கொடுத்த முதலாளியான உங்ககிட்ட தான் நான் சொல்லிட்டுப் போய் இருக்கணும் ஸார். இனிமே அதை செய்யறேன் ஸார். அதுக்கு எதுக்கு ஸார் இவ்வளவு காஸ்ட்லியான போன்? என்னால முடிஞ்ச சாதாரண போனே நான் வாங்கிக்கிறேன் ஸார். அதுலயே நான் உங்ககிட்ட பேசறேன் ஸார். இது வேண்டாம் ஸார்” என்று வார்த்தைக்கு வார்த்தை ஸார் போட்டு இவளும் குத்திப் பேசவும்…

சாதாரணமாகச் சொல்லியிருந்தாலாவது விட்டிருப்பான் தேவ். ஆனால் அவள் வார்த்தைக்கு வார்த்தை ஸார் போடவும், “ஆமாம், உனக்கு மூளைனு ஒன்னு இருக்கா படிச்சிருக்க தான? நீ இங்கு வந்தது ஏதோ சாதாரண வேலை செய்ய இல்லை என் மனைவி என்ற வேலைக்கு வந்து இருக்க.

ஸோ அதை மனசுல வச்சிக்கோ. உனக்கான அடையாளம் வேணா சாதாரணமா இருக்கலாம். ஆனா என் மனைவிக்கான அடையாளம் மிகப் பெரிசு. அதனால் அந்த அடையாளத்துடன் இங்கிருக்கும் வரைக்கும் நடந்துக்கப் பழகு. நீ போகும் போது இதை என் கிட்ட கொடுத்துட்டுப் போ” என்று அவளை வார்தைகளால் இவனும் குத்த.

‘ச்சே.. இதுக்குத் தான் இவன்கிட்ட பேச்சே வச்சிக்காம ஒதுங்கியிருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம். இவன்கிட்ட பேசி ஒவ்வொரு முறையும் வாங்கிக் கட்டிக்கிறதே எனக்கு வேலையா போச்சு’ என்று உள்ளுக்குள் புலம்பியவள் அமைதியாக இருக்க.

“என்ன பேசாம இருக்க? அப்ப நான் சொன்னது சரி தான. நானே ஒரு சிம் வாங்கி அதை ஆக்டிவ்வும் பண்ணிட்டேன். அந்த நம்பரை ஸேவும் பண்ணி வச்சிட்டேன் என் மொபைல்ல. ஆனா என் நம்பரை இன்னும் உன் மொபைல்ல ஸேவ் பண்ணல. ஸோ இப்ப நான் உனக்கு ரிங் தரேன் என் நம்பரை ஸேவ் பண்ணிக்கோ” என்று கூறி ரிங் கொடுத்தான் தேவ். ‘க்கும்… இவ்வளவு செய்தவரு அதையும் இவரே செய்து இருக்க வேண்டியது தானே…’ என்று முனுமுனுத்துக் கொண்டே அந்த நம்பரை ஸேவ் செய்தாள் மித்ரா.

அவள் முணுமுணுத்தது கொஞ்சம் தெளிவாகவே தேவ்வின் காதில் விழுந்தது. உடனே அவன் ‘ஆமாடி அதையும் நானே செய்து இருக்கலாம் தான். ஆனா நான் முதன் முதலில் கொடுக்கற பொருள நீ வாங்கும் போது உன் முகத்தில் வர்ற சந்தோஷத்தையும் என் நம்பரை நீ எந்த பெயரில் ஸேவ் பண்ற என்றதையும் பார்க்கத்தான்டி அதைச் செய்யாமல் எடுத்து வந்தேன்’ என்று மனதுக்குள் அவளுக்குப் பதில் அளித்தவன் “என்ன செய்துட்டியா? காட்டு பார்க்கலாம்” என்று அவள் மொபைலைக் கேட்டு கை நீட்ட….

இவன் இப்படி கேட்பான் என்று சற்றும் எதிர்பாராத மித்ராவோ ஏதோ பேயைக் கண்டவள் போல் மொபைல் இருந்த கையை இழுத்துக் கொண்டவள் கண்ணில் மிரட்சியுடன் “”நா..ன் நா….ன் ஸேவ் பண்ணிட்டேன். இப்ப என்ன? இனி நான் எங்க போனாலும் உங்க கிட்ட சொல்லிட்டுப் போகணும் அவ்வளவு தானே? இனி நான் செய்றேன்” என்றவள் பின்னால் ஒரு அடி நகர்ந்து நிற்க.

அவள் அப்படி நடந்து கொள்வதைப் பார்த்ததும் ‘இவ எதுக்கு இப்போ இந்த ரியாக்ஷன் கொடுக்கறா’ என்று நினைத்துக்கொண்டே “அது மட்டுமில்ல, காலையும் நைட்டும் எனக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் வரணும். நான் உனக்கு எப்போ மெசேஜ் பண்ணாலும் திரும்ப ரிப்ளை வரணும். எப்போ கால் பண்ணாலும் நீ எந்த இடத்துல இருந்தாலும் எடுக்கணும். என்ன புரிஞ்சிதா” என்று மிரட்டிக் கொண்டே அவள் அசந்த நேரம் பார்த்து அவள் கையிலிருந்த மொபைலைப் பிடுங்கினான் தேவ்.

‘அச்சோ… போச்சா? மாட்டினோம்டா’ என்ற பாணியில் அவள் முழித்துக் கொண்டு நிற்க, ‘அப்படி அதில் என்ன தான் ஸேவ் பண்ணி இருக்கா’ என்று பார்த்த தேவ் இவ்வளவு நேரமிருந்த கோப நிலை மாறி வாய் விட்டுச் சிரித்தான். அவன் பெயரை “டெவில்” என்று ஸேவ் பண்ணியிருந்தாள் மித்ரா.

‘என் அழகான ராட்சஸி சரியானப் பொருத்தமான பெயரைத் தான் எனக்கு வச்சிருக்கா. நான் அவள் பெயரை ஸேவ் பண்ணி வச்ச மாதிரி’ என்று மனதுக்குள் குதூகலித்தவன் அந்த மகிழ்ச்சியில் வாய் விட்டே சிரித்தான்.

‘ஐய்யோ... இப்போ திட்டப் போறான்’ என்ற கலவரத்தோடு அவன் முகம் பார்க்க, இதுவரை மித்ரா பார்த்திராத படி தன் பல் வரிசை தெரிய அழகாக சிரிக்கவும், அதில் மயக்கம் போட்டு விழாத நிலையில் தான் நின்று கொண்டிருந்தாள்.

தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கண்ணிமைக்கவும் மறந்து ஆ என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்து கொண்டு அவன் தேவதை, காதல் மனைவி அப்படி நின்றதில் மயக்கத்துடனும் மனதில் பூத்த காதலுடனும் அவள் இதழைச் சிறை செய்து கற்பனையில் கண்டதை நிஜமாக்க ஓர் அடியை அவள் புறமாக எடுத்து வைத்தான் தேவ்.

அதுவரை அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரா அவன் ஓர் அடி முன்னே வைத்துத் தன்னை நெருங்கவும் ‘திட்டறதுக்குப் பதிலா எங்கே அவன் தன்னை அடிக்கத்தான் வரானோ…’ என்ற பயத்தில் தன்னை மீறி “ஸாரி” என்று கூறி சற்றே பின்னே நகர.

அவள் சொன்ன ஸாரியில் பிரேக் அடித்தார் போல் நின்றவனோ தலையை உலுக்கிக் கொண்டு மயக்கத்திலிருந்து வெளியே வந்தவன். ‘ச்சே… என்ன தப்பு செய்ய இருந்தோம். என்ன தான் அவள் என் மனைவினாலும் அவளைப் பொறுத்தவரை நான் யாரோ தானே. கொஞ்ச நேரத்தில் என்ன செய்ய இருந்தேன்... விஷ்வா சொல்ற மாதிரி எனக்குக் கொஞ்சம் கூட பொறுமையே இல்லை’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் இடது கையால் தன் தலையைக் கோதிக் கொண்டே அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் கையில் இருந்த மொபைலை கட்டிலின் மேல் வீசி விட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் அவசரமாக வெளியேறித் தன் அறையில் நுழைந்து கொண்டான் தேவ்.

‘அடியேய் ராட்சஸி, நீ என் கிட்ட சண்டையே போடுடி. அதுவே பரவாயில்ல, நீ இப்படி கொஞ்சம் இளகினாலும் என் பாடுதான் திண்டாட்டமா இருக்கு. நீ சண்டை போட்டாதான் சுலபமா உன்னை என் வழிக்குக் கொண்டு வர முடியும். ம்ம்ம்.. அதுவரை கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கு’ என்று கூறி பெருமூச்சை விட்டவனோ பின் படுக்கையில் விழுந்து வலுக்கட்டாயமாகக் கண்களை மூடி வராதத் தூக்கத்தைச் சிரமப்பட்டு வர வைத்துத் தூங்கினான்.

அங்கு மித்ராவோ ‘ஆமாம்... வரும் போது கோபமா வந்தான். போகும் போது எதற்கு சிரிச்சிட்டே போறான். அதுலையும் அவனை ராட்சஸன் என்று சொல்லியும். என்னடா ஆச்சி இவனுக்கு’ என்று தன்னைத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டவள் உடல் அசதியில் உறங்கிப் போனாள்.

காலையில் சற்று தாமதமாகத் தான் கண் விழித்தாள் மித்ரா. அதுவும் தன் மொபைல் ரிங் ஆன சத்தத்தில் தான். சற்று உருண்டு புரண்டு கண் விழிக்காமலே எடுத்து “ஹலோ” என்று தூக்கக் கலக்கத்தில் சொல்ல.

“ஏய் தூங்கு மூஞ்சி! இன்னும் எழுந்திரிக்கலையா? சரி சரி சீக்கிரம் ஃபிரஷ் ஆகி கீழ வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டுப் பிறகு போய் மீதி தூக்கத்தக் கண்டினியூ பண்ணு. சீக்கிரம் இறங்கி வா’” என்று தேவ் குதூகலக் குரலில் அழைக்க.

முதலில் யார் என்று குழம்பியவள் பின் அது தேவ் என்பதை உணர்ந்து “இதோ வரேன் ஸார்” என்றாள். பின் நேரம் பார்க்க காலை பத்து என்று காட்டியது.

அவசரமாக கிளம்பிக் கீழே வந்தால் தேவ்வும் அவள் தாத்தாவும் ஹாலில் உள்ள ஸோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்தவுடன் இவள் “தாத்தா” என்று படிகளில் இறங்கி ஓட அவரும் “மித்துடா!” என்றவர் எழுந்து அவளை அணைத்துக் கொண்டார். பின்னர் இருவரும் தத்தம் பாசமழையில் நனைய. சிறிது நேரம் அவர்களைப் பேச விட்டவன் பிறகுத் தன் தாயைப் பார்க்க அவரை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் சுமூக முறையில் ஒருவரையொருவர் குசலம் விசாரித்துக் கொண்டனர். அவன் தாய் சொல்ல வருவதையெல்லாம் வேதா அவருக்கு எடுத்துக் கூறி புரிய வைத்தார். பிறகு அவருக்கென்று கீழேயே ஒரு அறை ஒதுக்கச் சொல்லி அங்கேயே அவரைத் தங்க வைத்தவன் பின் மித்ராவை தனியே அழைத்துப் பேசினான்.

“நேற்று நடந்தது எதுவும் அவருக்குத் தெரியாது. ஸோ அவர் கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்”

சரி என்று தலையசைத்து விலக நினைக்கையில்,

“அதே மாதிரி இனிமே அவர் இங்கேயே தங்கட்டும். உனக்கும் துணையா இருக்கும். நீயும் அவருக்கு வேண்டியதப் பார்த்து உன் கையால் செய்யலாம்” என்று சொல்ல.

அவன் சொன்னது ஒண்ணும் புரியாமல் ஏன் என்று கேட்டாள் மித்ரா.

“என்ன ஏன்னு கேட்கற? நீ எங்கே இருந்தாலும் உன் தாத்தாவை உன் கூடவே வெச்சிப் பார்த்துக்கணுன்றது தானே உன் ஆசை? ஸோ அதற்குத் தான் அவரை இங்கு அழைச்சிட்டு வந்தேன்” தேவ்.

“இல்ல நானே கொஞ்ச நாள் தான் இருப்பேன்…” என்று அவள் இழுக்க…

“அது எனக்கும் தெரியும். நீ இங்கு இருக்குற வரை அவரும் இங்கேயே இருக்கட்டும். அதுக்குப் பிறகு நீ எங்க போனாலும் அவரை அழைச்சிட்டுப் போய்டு” என்று அவள் போக்கிலேயே தேவ் பேச,

‘நானும் மனசில அது தானே நினைச்சிட்டு இருக்கேன்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் வெறுமனே தலையசைத்து விட்டு விலகிச் சென்றாள் மித்ரா.

நாம் எப்போ தாத்தாவை என் கூட வச்சிக்கணும்னு என் ஆசையை இவனிடம் சொன்னோம் என்றோ என் ஆசை இவனுக்கு எப்படித் தெரிந்தது என்றோ அவளிருந்த மனநிலைக்கு எதையும் யோசிக்காமல் போனாள். யோசித்திருந்தால் தேவ்வின்மாற்றங்கள் அவளுக்குப் புரிந்திருக்கும்.

அன்றிலிருந்து நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது மித்ராவுக்கு. அன்று சொன்ன படி மித்ரா நடந்தாளோ இல்லையோ நிச்சயம் தேவ் நடந்தான். தினமும் காலையும் இரவும் அன்றைய வாழ்த்துக்களை மித்ராவுக்கு அனுப்பிவைப்பான். அதற்கான பதில் ரிப்ளை அவளிடமிருந்து வரவில்லை என்றால் போன் பண்ணித் திட்டுவான்.

மதியமும் அப்படித் தான் ருத்ராவை அழைச்சிட்டு வந்துட்டியா என்றும் சாப்டியா என்றும் மெசேஜ் வரும். சில நேரத்தில் போன் பண்ணியும் கேட்பான். தினமும் இரவு உணவை எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும் படி பார்த்துக் கொண்டான். அப்படித் தான் வீட்டிலிருந்து சாப்பிடும் நேரத்தில் மித்ராவையும் தன்னுடன் அமர்ந்து சாப்பிட வைத்தான்.

மித்ராவின் தாத்தா தினமும் மாலை நேரத்தில் அவர்கள் அரண்மனையைச் சுற்றி உள்ள தோட்டத்தில் வாக்கிங் போகும் போது மித்ராவும் அவருடன் நடப்பாள். தேவ் வீட்டிலிருக்கும் சமயம் இல்லையென்றால் வேண்டும் என்றே தன் நேரங்களை ஒதுக்கி அந்த மாலை நேரத்தில் அவளையும் அவள் தாத்தாவையும் வெளியில் பார்க்குக்கு அழைத்துப் போய் இவனுமாக மூன்று பேரும் வாக்கிங் போனார்கள். இவர்கள் நடைக்கு தாத்தாவால் ஈடு கொடுக்க முடியாது என்பதால் அவர் சற்று இடைவெளி விட்டு பின் தங்கி விட இவர்கள் இருவரும் நடந்தார்கள்.

இருவருக்குள்ளும் முன்பிருந்த சண்டை சச்சரவு இல்லாமல் நீ எனக்கு கணவனாக நடிக்க வந்தவன் நான் உனக்கு மனைவியாக நடிக்க வந்திருக்கிறேன் என்பதை மறந்து இருவரும் நண்பர்களாகப் பழகினார்கள். அவரவர்

வாழ்க்கையில நடந்த சுவாரசியமான விஷயங்கள், பிடித்தது பிடிக்காதது என்று ஆரம்பித்துப் பின் போகப் போக இன்று ஸ்கூலில் ருத்ரா இதைச் சொய்தாளாம் அதைச் செய்தாளாம் என்று அவள் மிஸ் சொன்னாங்க என்றும் வீட்டிலும் அவ என்கிட்ட இப்படி எல்லாம் வம்பு பண்ணா என்று இவளாகவே தேவ்விடம் பகிர்ந்து கொள்ளும்படி வந்து நின்றது அவர்கள் நெருக்கம்.

இது மட்டுமா? அவளுக்கென்று ஒரு லேப்டாப் வாங்கிக் கொடுத்துத் தன் பிசினஸ் மற்றும் கம்பெனி சம்மந்தப்பட்டதை எல்லாம் அவளுக்குச் சொல்லிக் கொடுத்து பகிர்ந்து கொண்டு அவளிடமும் சில ஐடியாக்களைக் கேட்டான் தேவ்.

என்ன தான் அவளிடம் பழகினாலும் அவளையும் நெருங்கிப் பழக வைத்தாலும், எங்கே தன்னை மீறி தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் சற்று இடைவெளி விட்டுப் பழகினான் தேவ்.

அவளிடம் எப்படிப் பழகினாலும் தன் திமிரையோ கெத்தையோ பிடிவாதத்தையோ எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அதே கம்பீரத்துடன் பழக. அவளே சில நேரத்தில் பெரிய மகாராஜா தான் இவன் என்று வாய்க்குள் முணுமுணுக்கத் தான் செய்வாள்.

ஆரம்பத்தில், தேவ் இப்படி பழகுவது மித்ராவுக்கு உண்மையாகப் படவில்லை. வழக்கம் போல் அவனுடைய சுயநலத்திற்காகவே தன்னிடம் இப்படி நடித்து நேசத்துடன் நடந்துகொள்வதாக நினைத்தாள். ஆனால் தேவ் அவளை ஷாப்பிங் மால், ஹோட்டல், கோவில், தீம் பார்க் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றும் அவளுக்காக என்று பார்த்துப் பார்த்து செய்வதை எல்லாம் அருகிலிருந்து பார்த்தப் பின்னரே இது அவன் சுயநலமோ அல்லது நடிப்போ இல்லையென்று உணர்ந்தாள்.

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ஒருமுறை அவளுக்குக் காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுத்துவிட மிகவும் துடித்துப் போனான் அவன். பின்னரே அவள் முழுதாக அவன் பரிவையும் நேசத்தையும் நம்பினாள். அப்போதும் அதை நட்பென்றே நம்பினாள் மித்ரா.

இந்த ஒரு மாதமாக இவர்கள் நட்பு வளர்ந்த நேரத்தில் ஆபீஸ்ஸில் இருக்கும் போது தேவ்வுக்கு அவசரக் கால் வர அதை எடுத்துப் பேசியவனின் முகம் சற்று இறுகியது. பின் தன் வேலைகளை ஒதுக்கி வைத்து ஜீவாவை அழைத்து அனைத்தையும் பார்க்கச் சொல்லி ஒப்படைத்தவன் நேரே வீட்டிற்கு வந்து தன் தாயிடமும் சித்தியிடமும் விபரம் கூறியவன் பின் நேரே மித்ராவிடம் சென்றான்.

அவள் லேப்டாப்பில் மூழ்கியிருக்க இவன் கதவைத் தட்டி விட்டு உள்ளே செல்ல. காலை பத்தே முக்கால் மணிக்கு அவனை அங்கு எதிர்பார்க்காததாலும் அவன் முகமும் சற்று சோர்ந்து இருக்கவும் “என்ன தேவ்! என்ன ஆச்சி… ஏதாவது பிரச்சனையா” என்று பரிவுடன் இவள் கேட்கவும்,

அவள் அப்படிக் கேட்டதும் அவசரமாக உள்ளே வந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு “பிரச்சனை தான் மித்ரா! ஆனா பெரிசா ஒண்ணும் இல்லை. நான் கொஞ்சம் அவசர வேலையா யு.எஸ் போக வேண்டியிருக்கு. திரும்பி வர ஒரு வாரம் ஆகும். அதான்...” என்றான் பிடித்திருந்த கையை வருடிக் கொண்டே.

‘இது என்ன புதுப் பழக்கம், கையைப் பிடித்துப் பேசுவது என்றும் தன் கையை உறுவ வேண்டும்’ என்று நினைத்தாலும் அதைச் செய்ய முடியாமல் அவன் சொன்னதற்குப் பதிலாக “அப்ப இந்த ஒரு வாரமும் நீங்க வாக்கிங் வர மாட்டீங்களா…” என்ற கேள்வியை அவனுக்குக் கொடுக்க.

“ஆமாம்டா... முடியாது தான். எனக்கும் அது கஷ்டமாகத் தான் இருக்கு. ஐயம் கோயிங் டு மிஸ் யூ...” என்றவன் அதை அவள் உணரும் முன் “நான் இல்லாத நேரத்தில் அம்மாவ ருத்ராவ உங்க தாத்தாவ ஏன் வீட்டில் இருக்கிறவங்க எல்லாரையும் நீ தான் பார்த்துக்கணும். உனக்கு ஏதாவது வேணும் எங்காவத போகணும் இல்லனா ஏதாவது தெரியணும்னா விஷ்வாவைக் கேளு. அவன் உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுவான் எல்லா வகையிலும் துணையா இருப்பான்.

ஆனா நீ மட்டும் எங்கேயும் தனியா போகக் கூடாது எக்காரணத்தைக் கொண்டும் வண்டியைத் தொடவே கூடாது. ஓ.கே? இல்ல இல்ல... யூ பிராமிஸ் மி” என்று தன் கையை நீட்டி அவளிடம் சத்தியம் கேட்க. அவளுமே “யூ டோன்ட் வொர்ரி தேவ்! ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங் அண்டு ஐ பிராமஸ் யூ... நான் வண்டியைத் தொடவே மாட்டேன். நீங்க கவலைப்படாம உங்க வேலைய நல்லபடியா முடிச்சிட்டுத் திரும்பி வாங்க” என்று தைரியம் அளித்தாள்.

அவளிடம் விடை பெற்றுக் கதவு வரை சென்றவன் பின் ஒரு வேகத்துடன் திரும்பி வந்து அவளை நெருங்கி அவள் கண்களைப் பார்த்து “திரும்பி வரும் போது நிச்சயம் நம் இருவருடைய வாழ்விலும் ஒரு மாற்றம் வரும். அதை நீ எப்படி ஏற்பனு தான் தெரியல...” என்க.

அவள் என்ன மாற்றம் என்று கண்களால் கேள்வி கேட்க வலது கையால் அவள் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி “எல்லாம் என் கேஸ் விஷயமான மாற்றம் தான். பார்க்கலாம் அது நல்ல மாற்றமாகவே இருக்கும் நம் இருவருக்கும்” என்று புதிராகப் பேசி அவசரமாகத் திரும்பிச் சென்றான் தேவ்.

‘என்ன இவன் பழைய படி புதிர் போட்டுப் பேசறான்… என்ன மாற்றம் வரப்போகுது தேவ்!’ என்று மனதுக்குள் கேள்வி கேட்டவாறு அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN