சாதி மல்லிப் பூச்சரமே !!! 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 7

இப்படித் தான் ஒருமுறை தன் பத்தாவது வயதில் தென்றல், ஊர் திருவிழாவுக்காக தந்தை வீட்டிற்கு அவள் வந்திருக்க. எப்போதும் சிறுவயதில் பூபாப்பா பூபாப்பா என்று தன் தாய் மாமன் மகளை அழைத்துச் சீண்டி விளையாடுவது வேந்தனின் வழக்கம். அதே வழக்கமாக இன்று காலையிலிருந்து அவன் தென்றலைச் சீண்டி விளையாட, அவளோ தந்தைக்குத் தெரியாமல் அவனைக் கண்டிக்க, வேந்தன் அடங்கவில்லை. முறை மாமன் இல்லையா… தன்னவளை சீண்டுவதில் அலாதி இன்பம் இவனுக்கு…





அன்று கோவில் திருவிழா என்பதால் இவர்கள் குடும்பத்தார் ஒரு இடத்தில் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, செண்பகவல்லி தான் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். அவர் ஏதோ கேட்க, மகள் நிலவழகிக்கு முன்பே தென்றல் மான் குட்டியாய் துள்ளி ஓடி எடுத்து வந்து தர, அதைப் பார்த்த வேந்தன் “பாப்பா! பாத்துப் போ மா.. உழுந்துறப் போற” கரிசனத்துடன் சொன்னது மட்டும் இல்லாமல்..





தரையில் கழண்டு விழுந்திருந்த அவளுடைய கொலுசை எடுத்த படி “பாரு பாப்பா கொலுசு கழண்டது கூடத் தெரியாமா ஓடி இருக்கறவ! இந்தா பாப்பா” என்றவன் மாமன் மகளிடம் கொலுசை நீட்ட,





“என்னது பாப்பாவா? ஹாஹ்ஹா…” நக்கலாகச் சிரித்த செண்பகவல்லி “ஆமா ஆமா! புத்தியும் அப்டிதேன் வளர்ச்சி இல்லாம கெடக்கு. அவளத் தொட்டில்ல போட்டு பால் புட்டிய கொடுடே” என்று கூடவே தன் குரூரத்தைக் காட்ட, தாயின் வார்த்தையில் நிலவழகி களுக்கென சிரித்து விட்டாள்.





அவளுக்கு எப்போதுமே தென்றலைப் பிடிக்காது. அதெல்லாம் தாயைப் பார்த்து அவள் கற்றுக்கொண்டது. அதனால் தென்றலுக்கும் அவளைப் பிடிக்காமல் போனது. தனக்குப் பிடிக்காத அக்கா தன்னைப் பார்த்துச் சிரிக்கவும், அதில் கோபம் கொண்டு தென்றல் பேச இருந்த நேரம்,





அங்கேயே இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தென்றலின் பாட்டி, அவர் மட்டும் தான் தென்றலுக்குத் துணையாக ஊரிலிருந்து வந்திருந்தவர், நடந்த சம்பாஷனை எல்லாம் கேட்டதில் அவருக்கு பேத்தியைப் கிண்டல் செய்த செண்பகவல்லி மேல் கோபம் வரவில்லை. மாறாக எப்போதும் போல் மதிவேந்தன் மேல் கோபம் வர,





“அது என்ன பாப்பா? என் பேத்திக்கு தான் அழகா பேரு இருக்கில்ல? வயசு பத்து ஆகுது அவளுக்கு. இன்னும் மூணு வருடத்துல குச்சில உட்காரப்போறவ. அறிவு வேணாம்? இத்தனை பேர் முன்னாடி பாப்பான்னு கூப்பிடற! அதுசரி… உனக்கு ஏது அறிவு? படிச்சிருந்தா தான? குடும்பமே தற்குறி! அதிலும் இவன் படிப்பே ஏறாத தற்குறி. பிறகு எப்படி இருப்பான்?” என்றெல்லாம் அவர் என்னமோ அக்கம் பக்கம் பார்த்து மெதுவாகத் தான் வேந்தனை அசிங்கப் படுத்தினார்.





அதற்கே செண்பகவல்லி சிரிக்க, தென்றலுக்கு இருந்த கோபத்திற்கு “ச்சீய்! உனக்கு அறிவு இருக்கா இல்லையா? எதுக்கு என்ன பாப்பானு கூப்பிடற? படிக்காத முட்டாள்!” பாட்டி சொன்னதை இவள் கிளிப்பிள்ளையாய் சத்தம் போட்டு வார்த்தைகளை வாரி இறைத்து விட, அவளை முடிக்க கூட விடவில்லை. அதற்குள் ஒரு அறையில் மகளின் பேச்சை நிறுத்தியிருந்தார் கந்தமாறன்.





“என்ன பேச்சு பேசுத நீ? அதுவும் என் மாப்ளைய பாத்து! பொட்டப் பிள்ளைக்கு இம்புட்டு அகங்காரம் கூடாது புள்ள” அவர் இன்னும் மகளை அடிக்க எகிறிக் கொண்டு போக, அதற்குள் மூர்த்தி தான் தன் அண்ணனைத் தடுத்திருந்தார்.





குழந்தைகளின் குணாதிசயம் என்பது மாசு கலக்காத தெள்ளத்தெளிவாக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை போன்றது. அதில் தானாக வந்து எந்த அசுத்தமும் கலப்பதில்லை. அதில் சேறும், சகதியும், மற்ற அசுத்தங்களும் கலப்பது மற்றவர்களால் தான். அதே போல் வெள்ளந்தியான அவர்கள் மனதில் கோபம், பொறாமை, வன்மம், வெறி, சூழ்ச்சி போன்ற தீய எண்ணங்கள் வந்து சேர்வது அவற்றைச் செய்யும் மற்றவர்களைப் பார்த்து தான். அவர்கள் முன் நாம் அந்த குணங்களை எல்லாம் வெளிப்படுத்தாமல், தகாத வார்த்தைகளும் தகாத செய்கைகளும் சொல்லாமல் செய்யாமல் இருந்தாலே அது அவர்கள் மனதில் பதியப் போவதில்லை. மாறாக சக மனிதர்களாய் அன்போடும் பண்போடும் அவர்கள் முன் நடந்து கொண்டாலே அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். இதுவே வருங்கால சந்ததிகளுக்கு நாம் சொல்லித் தரவேண்டிய முதன்மையான பாடம்.



கந்தமாறனுக்கு இதில் மகளின் மேல் தப்பு இல்லை என்று புரிந்திருந்தாலும் இந்த சின்ன வயதில் மகள் இப்படி பேசவும், முழுக்க முழுக்க மாமியார் மேலுள்ள கோபத்தில் இதுவரை அடிக்காத தன் மகளின் மேல் அவர் கோபம் திரும்பியது. அதுவும் இல்லாமல் தன் மருமகனைத் தான் பெற்ற மகளிடம் கூட விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை அவர். பதினாறு வயது பாலகனான மதிவேந்தனுக்கோ அவமானம் பிடிங்கித் தின்றது. ஆனாலும் கோபத்தில் உர்ரென்று இருக்கும் அவன் தாய்மாமனை அவனைத் தவிர வேறு யாராலும் சமாதானப் படுத்த முடியவில்லை.





“இதுக்குத் தான் அன்னைக்கி கெடயா கெடந்து சொன்னேம்ல, படிக்கப் போடே படிக்கப் போடேனு. கேட்டியாடே? இன்னைக்கி நான் பெத்த கழுதையே ஒன்னைய இப்போம் என்ன பேச்சு பேசுதா பார்லே. ஏதோ எனக்கு குழாய்ல அடைப்புன்னு சொன்னாக. அதுக்கு நீ ஏன்டே படிக்கப் போகாம முரண்டு புடிச்சி நிக்க? இப்போம் தான் எனக்கு சரியாகிடுச்சல்லோ? நீ படிக்கப் போடே” மாமனுக்கு இருந்த கோபத்திற்கு விடாமல் மருமகனை அவரும் விளாச,





“என்னது ஏதோ அடைப்பாம்ல? அது என்ன கொழா தண்ணீல வர்ற அடைப்புன்னு நெனச்சீரோ? ரத்தக் குழாய்ல வர்ற அடைப்பு மாமா! அதச் சரி செய்யறதுக்கு பேருதாம் ஆஞ்சிகோம். அன்னைக்கி நீ கெடந்தது இன்னும் என் கண்ணுக்குள்ள அப்டியே நிக்கி! பெருசா பேச வந்துட்டாருல்ல. படிப்பு எல்லாம் எனக்கு பெரிய வெசயமே இல்ல மாமா. எனக்குதேன் அனுபவ படிப்பு இருக்குதல்லோ? வருங்காலத்துல நான் பெத்ததுங்களோட காத திருகத்தேன் ஒன் பொண்ணு படிக்குதா. பொறவென்ன?” இவன் பேச்சை மாற்ற





எல்லாவற்றையும் மறந்து மருமவனின் வார்த்தைகளில் லயித்தவர்… மகளைப் பற்றி சொன்னதும் மாமனின் முகம் போகும் போக்கைப் பார்த்தவன், “மாமோய்! அவ பத்து வயசுக் கொழந்த மாமா. அவளுக்கு என்ன தெரியுங்கிறீரு? அதுவும் இல்லாம என் வூட்டுக்காரி தான சொல்லுதா? இதே என் அத்தை ஒன்னைய இப்படி சொன்னா நீ கோபப்படுதியளா?” என்று இவன் தன் பொஞ்சாதியை விட்டுக்கொடுக்காமல் மருமகன் என்ற உரிமையில் அவருக்கே கிட்டு பிடி போட





‘ஒன் அத்தை என்னக்குடே என்னைய இப்டி எல்லார் முன்னயும் வுட்டுக் குடுத்திருக்கா?’ என்ற நினைப்புடன் தன் மருமகனை அணைத்துக் கொண்டார் அந்த தாய்மாமன். இப்படி இவர்கள் இருவரும் தங்களுக்குள் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொண்டனரே தவிர சாமாதானப் படுத்த வேண்டிய தென்றலை இருவரும் மறந்தே போனார்கள். தந்தை அடித்த பிறகு தன்னை விட அவன் தான் முக்கியமா என்ற எண்ணத்தில் தந்தையின் அடிக்குப் பயந்து மதிவேந்தனிடம் இப்படி துடுக்குத் தனமாக பேசுவதை அதன் பின் கைவிட்டாள் தென்றல்.





மதிவேந்தன் ஒன்பதாவது படிக்கும் போது கந்தமாறனுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட, அதை சரி செய்த டாக்டர் அவருக்கு முழு ஓய்வு தேவை என்று சொல்லி விட, அப்போது படிப்பை நிறுத்தி விட்டு மாமனின் வேலைகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் வேந்தன். இது முதல் காரணம் என்றால் இரண்டாவது காரணம், படித்து இன்னொருவருக்குக் கீழே வேலை செய்வதை விட தன் மண்ணில் சேற்றில் கால் புதைய விவசாயம் பார்க்கத் தான் அவனுக்குப் பிடிக்கும். கூடவே தான் முதலாளியாக இருந்து பத்து பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது அவன் எண்ணம்.





முன்பு இவர்கள் குடும்பத் தொழிலாக சொந்தமாக அரிசி ஆலை, நிலபுலங்களில் விவசாயம் தான், மற்றும் அங்கு பத்தமடைப் பாய் மிகவும் பிரசித்தம் என்பதால் அங்கு முடையும் பத்தமடைப் பாய்களை இவர்கள் தமிழ்நாட்டிலேயே மற்ற மாவட்டங்களுக்கு ஆரம்பத்தில் விற்றனர். இப்போது வேந்தன் தொழிலைப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து அந்த பாய்களை வெளிநாட்டிற்கே விற்று வருகிறான். அது மட்டுமில்லாமல் இவன் சொந்தமாக சிமெண்ட் தொழிற்சாலையும், இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலையும் துவங்கி நடத்தி வருகிறான்.





தென்றலுடைய பத்தாவது வயதில் இப்படி நடந்தது என்றால் அவளுடைய பதிமூன்றாவது வயதில் நடந்ததோ வேறு...





தென்றலுடைய பாட்டி கீழே விழுந்ததில் இடுப்பெலும்பு நகர்ந்து விட, அதனால் அவரைப் பார்த்துக் கொள்ள அவளின் சித்தி சித்தப்பா அவர் கூடவே தங்கி விடவும், அந்த வருட திருவிழாவிற்கு மகளைத் தானே போய் அழைத்து வந்திருந்தார் கந்தமாறன்.





இங்கு வந்தவளுக்கு அவளிடம் ஒன்றுக்கு இரண்டாக திரித்துக் கூற பாட்டி இல்லாததால், எந்த ஒரு சுணக்கமும் இல்லாமல் தந்தை வீட்டாருடன் ஒன்றிப் போனாள் அவள். அதிலும் கந்தமாறன் மகளை இரண்டு நாள் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்ல, தந்தை மகள் இருவருமே புது உலகத்தில் இருந்தனர்.





மகளுக்குத் தலை சீவி அலங்காரம் செய்து பார்த்தவர், அவளுக்குப் பிடித்ததை சமைத்துக் கொடுத்து தோட்டத்தில் ஊஞ்சல் கட்டி தாலாட்டியவர், மகளுடன் கை கோர்த்துக் காடு எல்லாம் சுற்ற, அங்கு பூத்த பூ, குருத்து விட்ட சோளத்திலிருந்து நன்கு வளர்ந்த கரும்பு வரை அவர் ஒடித்துக் கொடுக்க, மகளுக்கும் தந்தையுடன் பேச ஆயிரம் விஷயம் இருந்தது. இதுவரை அவள் உலகம் இது..





இரவு, மகளின் கையிலும் காலிலும் தன் கையாலேயே மருதாணி வைத்து அழகு பார்த்தவர் மகளுக்குத் தன் கையாலேயே உணவை ஊட்டி விட, உடல் அசதியால் பாதி உணவிலேயே குழந்தை என தந்தையின் மடியிலேயே தூங்கிப் போனாள் அவரின் குலசாமி.





இரண்டு நாள் தந்தை மகள் உலகத்திற்கு இடையில் வராமல் இருந்த வேந்தன் மூன்றாம் நாள் பண்ணை வீட்டுக்கு வந்து சேர, தன் மகளை விடவே தான் குழந்தை ஆனார் கந்தமாறன். காலையில் மகள் கேட்ட பூரிக்கு இவர் மாவைத் திரட்டிக் கொண்டிருக்க, தென்றலோ சமையலறை மேடை மேல் அமர்ந்து தன் கையிலிருந்த மாவு உருண்டைக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் சத்தம் எழுப்பாமல் சமையலறை வாசலில் நின்று, தான் கட்டியிருந்த வேட்டியின் ஒரு நுனியை கையில் பிடித்த படி தந்தை, மகள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த வேந்தனுக்கு அந்த காட்சி அழகிய ஓவியமாக அவன் மனதில் பதிந்தது.



“என்ன மாமோய்! என்னைய ஞாபகம் இருக்கா இல்ல மறந்துட்டியளா? எங்க நான் யாருன்னு சொல்லு பாப்பம்?” என்று கேட்ட படி இவன் உள்ளே வர





“வாடே என் மருமவனே! ஒன்னைய போய் மாமன் மறப்பனாடே?”





“இல்ல… ஒன் பொண்ணு என்னைய மறந்தாப்ல நீயும் மறந்துட்டியோனு நெனைக்குதேன்” என்ன தான் மாமனிடம் கேட்டாலும் அவன் பார்வை முழுக்க மாமன் மகளிடமே இருந்தது.





இவ்வளவு நேரம் அவன் முகத்தைப் பார்க்காமல் இருந்தவள் இப்போது அவன் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்க, தன் மனைவி தன்னைக் கண்ணால் எரிப்பதை ரசித்தவன் ஒற்றைக் கண்ணை அடித்து அவளைக் கவர நினைக்க, இன்னும் அவனை முறைத்தாள் தென்றல்.





அதை ஒதுகியவன், “மவ வந்ததும் சமையல் எல்லாம் தூள் பறக்குது! ஏன் மாமா, ஒன் மவள ஒனக்கு அம்புட்டு புடிக்குமா?” மாமனைப் பற்றி தெரிந்திருந்தும் இவன் இப்படி கேட்க,





“என்ன மாப்ள, இப்டி கேக்குத? என் மவ எனக்கு குலசாமிடே!” என்று அவர் மனதார சொல்ல





கேட்டுக்கொள் என்பது போல் மாமன் மகளிடம் ஜாடை காட்டியவன் “அப்போம் நான் யாரு மாமா?” என்று கேட்க





“நீ என் குலசாமிய பொத்திப் பாதுகாத்து நெதமும் பூச பண்ணப் போற பூசாரிடே!”





தன் தந்தையின் பதிலில் பக்கென்று சிரித்தவள், “அப்போ குடுமி வைக்காத பட்டர்னு சொல்றீங்க. அப்படி தானே ப்பா? எப்போதும் வேஷ்டி சட்டையில் சுற்றுற நீ பேசாமா குடுமியும் வச்சிக்கோடா” தன் தந்தையிடம் கேள்வி கேட்டு வேந்தனிடம் தென்றல் முடிக்க





“ஏட்டி, உன்னைய…” இவன் கையை மடித்துக் கொண்டு பாய்வதற்குள்



“என்ன தென்றல், அவன் இவன்னு சொல்லுத? மாமான்னு கூப்பிடு தாயி” தந்தை கண்டிக்க





“அதுங்கூடி மதிமாமானு கூப்ட சொல்லு மாமா” என்று இவன் எடுத்துக் கொடுக்க





இவ்வளவு நாள் இல்லாமல் இன்று தந்தையின் கண்டிப்பில் முகம் சுருங்கி இருந்தவள், வேந்தன் இப்படி அழைக்க சொல்லவும் அவன் முகத்தைப் பார்க்க, அதில் அவன் கண்ணில் குறும்பைப் பார்த்தவள் மேடையை விட்டு குதித்து இறங்கி சமையலறை வாசலில் சென்று நின்று, “அதெல்லாம் அப்படி கூப்பிட முடியாது. வேணும்னா மந்தி மாமான்னு கூப்பிடறேன். மந்தி மாமா! மந்தி மாமா! மந்தி மாமா!” என்றவள் குரல் தேய்ந்து தொய்ந்து போகும் அளவுக்கு அவள் தூரத்தே ஓடி ஒளிய





“ஏட்டி சண்டாளி! இரு.. தோ நான் வாறேன்” என்று இவன் அவளைத் துரத்த





இவர்களின் ஆட்டத்தைப் பார்த்தவர் “எலேய்! என் மவள அடிக்காதடே” என்று தன் மருமகனை சிரித்த படி போலியாய் மிரட்டினார் கந்தமாறன்.





இருவரும் சிறு வயது பிள்ளைகள் என்பதால் பெரியவர்கள் மாதிரி அன்று நடந்த பழைய பிணக்குகளை மனதில் வைக்காமல் மறந்தே போனார்கள்.





இவர்கள் இன்னும் தோட்டத்தைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்க, “பிள்ளைகளா! சாப்ட வாங்க. கால பலகாரம் முடிஞ்சாதேன் மதியத்துக்கு நான் கறி எடுக்க முடியும்?” என்று இவர் அழைக்க





மூச்சிறைக்க மாமனிடம் வந்தவன், “எதுக்கு மாமா கறி எடுத்துட்டு கெடக்க? ஒன் மவளுக்கு நத்த கறி சமைக்கறதுக்காண்டி என் சேக்காளிகிட்ட நத்தைய புடிக்க சொல்லி இருக்குதேன். அங்கன வயக்காட்டுல புடிச்சிட்டு கெடக்கானுங்க. இப்போம் வந்துடும்ல” வேந்தன் பதில் தர





“என்னது நத்தையா? ஐய! ச்சீய்!” அங்கு வந்த தென்றல் முகம் சுளிக்க



“என்ன ச்சீ? அது நம்ம வயக்காட்ல இருக்கறதுட்டி. சென்னைலயும் பெங்களூர்லயும் தூசி குப்பைனு வாழறது இல்லாம சூரியன் உதிச்சி உச்சிக்கு வர்றத்துக்குள்ளார அவன ஒங்க மண்டையில ஏத்திக்கிட வேண்டியது. பொறவு ஒடம்பு என்னவாகும்? இந்த கறிய சாப்ட்டு பாரு. பொறவு சென்மத்துக்கும் எந்த சூடும் ஒன்னைய கிட்ட நெருங்காது. மாமா! அப்டியே கூட பதனி, நொங்கு, எளநீனு எடுத்து வரச் சொல்லி இருக்குதேன். ஒழுங்கா இவள சாப்ட சொல்லுங்க மாமா...” என்று மாமன் மகளின் உடலில் கரிசனம் காட்டி தென்றலிடம் ஆரம்பித்து மாமனிடம் இவன் முடிக்க





“ஆமா தென்றல்! ஒன் மாமன் சொல்றது சரிதேன் தாயி!” என்று ஆமேதித்த படி இருவருக்கும் காலை உணவைப் பரிமாறினார் கந்தமாறன்.

 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN