உன்னுள் என்னைக் காண்கிறேன் 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அப்போது தான் மித்ராவுக்கு சுளீர் என்று உறைத்தது. ‘ஆமாம்! ருத்ராவை எப்படி மறந்தோம்? நேற்று நடந்த பிரச்சனையிலும் இருந்த மனநிலையிலும் குழந்தையை எப்படி மறந்தேன்? உண்மையாவே குழந்தை என்னைத் தேடுவாளே… எனக்கு விபத்து நடந்த அன்று கூட நாள் முழுக்க என்னக் காணாமத் தேடினாளாமே… என்னைப் பார்த்த பிறகு தான் சமாதானம் ஆனா. அதுவரை அவள் இருந்ததை பண்ணதை எல்லாம் நித்திலா சொன்னாளே. இப்ப குழந்தை எப்படி இருக்காளோ?’ என்று தவித்தவள் விஷ்வா தன் பதிலுக்காக காத்து இருப்பதை உணர்ந்தவள் தாத்தாவின் முகம் பார்க்க அவரோ ‘இனிமே எதுவா இருந்தாலும் அது உன் பொறுப்பு’ என்பது போல் கண்களை மூடிக் கொள்ள விஷ்வாவுக்கு என்ன சொல்வது என்று யோசித்தவள் பிறகு,

“இல்ல டாக்டர் எப்படி இருந்தாலும் நான் நிரந்தரம் இல்ல. கொஞ்ச நேரம் குழந்தை அழுவாள் பிறகு சமாதானம் ஆகிடுவா. ஸோ நான் இங்க இருக்கறதா சொல்ல வேண்டாம்” என்க. அவனோ எதுவும் சொல்லாமல் மவுனமாக விலகிச் செல்ல “டாக்டர் ஒரு நிமிஷம், இங்க லேண்ட்லைன் இல்லையா? நான் நித்திலா கிட்ட மட்டும் கொஞ்சம் பேசணுமே”.

“அதுக்கு என்ன என் மொபைல்ல கூட பேசு” என்று சொல்லி மொபைலை நீட்ட “இல்ல டாக்டர் பிறகு இது உங்க நம்பர் என்று தெரிய வரும்” என்று அவள் தயங்க “ஓகே, கொஞ்ச நேரத்தில் என் கார்ட்லெஸ் போன் எடுத்து வந்து தறேன். அதுல பேசுங்க” என்று கூறிச் சென்றான் விஷ்வா. அவன் சொன்ன மாதிரி திரும்ப வரமுடியாமல் போக அவனின் வேலையாள் வந்து அவளிடம் அந்த போனைக் கொடுத்துச் சென்றான்.

‘அந்த வீட்டில் தன்னிடம் அன்பாகவும் பாசமாகவும் இருந்து அண்ணி அண்ணி என்று வாய் நிறைய அழைத்துத் தன்னைச் சுற்றி வந்தவள் நித்திலா. அவளிடம் சொல்லாமல் வந்துட்டோமே!’ என்று நினைத்தவள் அவள் எண்ணுக்கு அழைக்க முழு ரிங் போயும் அங்கு எடுக்கவில்லை. ஏதோ என்று பதறி மறுபடியும் அழைக்க “ஹலோ” என்றாள் நித்திலா.

“நான் மித்ரா பேசறேன் நித்திலா”

அவ்வளவு தான்… “அண்ணி எங்க இருக்கீங்க? ஏன் அண்ணி கிளம்பிப் போனீங்க? உங்களுக்கும் அண்ணனுக்கும் என்ன பிரச்சனை வேணா நடந்து இருக்கட்டும். அதுக்காக வீட்டை விட்டுப் போய்டுவீங்களா? ஏற்கனவே அவ்வளவு நாள் பிரிஞ்சி இருந்தீங்க. இப்ப மறுபடியுமா? ருத்ராவைப் பற்றி யோசிக்கவே இல்லயா நீங்க? அண்ணா கிட்ட நீங்க எங்கனு கேட்டா தெரியாதுனு சொல்றார். ஏதாவது செய்ங்கனு சொன்னா பேசாம இருக்கார்.

அம்மா பூஜை ரூமே கெதினு இருக்காங்க. பெரியம்மா எதுவும் சொல்ல முடியலனாலும் அவங்களும் சுருண்டு சுருண்டு படுத்துக்கிறாங்க. எல்லாரையும் விட ருத்ரா! சத்தியமா சொல்றேன் அண்ணி, அந்தக் குழந்தை நேற்றிலிருந்து ஒண்ணுமே சாப்பிடல. பாலையே நான் வம்பு பண்ணிக் கொடுத்துக் குடிக்க வச்சேன். இப்ப தான் குழந்த கொஞ்சம் தூங்கறா. நான் காலேஜ் கூட போகல” அவளைப் பேச விடாமல் படபட என்று இவளே அனைத்தும் பேச.

“இல்ல நித்திலா! அது வந்து...” என்று இவள் ஆரம்பிக்கும் போதே அரைத் தூக்கத்திலிருந்த ருத்ரா அங்கு பேசுவது மித்ரா என்று அறிந்து நித்திலாவிடம் இருந்து போனை வாங்கி “அம்மா…. அம்மா… நீ எங்கமா இருக்க? ஏன்மா என்ன விட்டுட்டுப் போன? இங்க வந்திடுமா” என்று அழ ஆரம்பிக்க நித்திலாவும் அழுது விட மித்ராவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

எவ்வளவு சமாதானப்படுத்தியும் ருத்ரா கேட்கவில்லை. அவள் கேட்ட கேள்வியிலும் அழுத அழுகையிலும் மித்ராவுக்கே தன்னை மீறிக் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அங்கு விக்கலும் இருமலும் கேவலுமாக குழந்தை துடிப்பதைக் கண்டவள் பொறுக்க முடியால் நித்திலாவிடம் மொபைலை கொடுக்கச் சொல்லி விஷ்வாவிடம் பேசி அட்ரஸ் அறிந்து இங்கு வரச் சொன்னாள். ஆனால் அதை தேவ்வுக்குத் தெரியாமால் செய்யச் சொன்னாள்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் குழந்தை “அம்மா” என்று ஓடி வந்து ஸோஃபாவில் அமர்ந்திருந்த மித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள். பிறகு சகஜ நிலைக்கு வந்து விட. அவள் தூங்குகிற நேரம் மீண்டும் நித்திலா பேச ஆரம்பிக்க அவள் கேட்ட கேள்விக்கு எதுக்கும் பதில் சொல்லாமல் அமைதிகாத்தாள் மித்ரா.

அன்றைய பொழுது இப்படியே செல்ல திரும்ப வீட்டிற்குக் கிளம்பும் போது படாதபாடு படுத்தி விட்டாள் ருத்ரா. அவள் அங்கேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க நாளைக்குத் திரும்ப வா என்று சமாதானம் சொல்லி அவளை அனுப்பி வைத்தாள் மித்ரா.

மறுநாள் காலை நித்திலா காலேஜ் போகும் போதே ருத்ராவை மித்ராவிடம் விட்டுச் செல்ல. தன்னோடு இருந்த ருத்ராவிடம் “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அம்மா நாளைக்கு ஊருக்குப் போய்டுவேன். நீ நல்ல பொண்ணா என்ன தேடாம இருக்கணும்!” என்று எவ்வளவு சொல்லியும் ருத்ரா கேட்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவளே சலித்துப் போய் விட்டு விட்டாள்.

இரண்டாவது நாளும் இப்படியே சென்றது. மூன்றாவது நாள் நித்திலா விட்டுச் சென்ற ருத்ராவை அழைத்துப் போக வந்த வேதா அவளிடம் சமாதானமாகப் பேசி இந்த கேஸ் முடியற வரை அவர்கள் இருவரும் ஒத்துப் போய் ருத்ராவுக்காகவாது இந்தத் திருமணத்தை செய்யச் சொல்லி எடுத்துரைத்துச் சென்று விட, அவளுக்கு வந்த கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் சேர்த்து வைத்து தேவ்வைத் தன் கைப்பேசியில் அழைத்தவள்.

அவன் எடுத்தவுடனே “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க பொண்ண முதல்ல அனுப்புனீங்க. இப்போ உங்க சித்தியை பின்னாடியே அனுப்பி எப்படியாவது இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சி திரும்பவும் என்ன உங்க மனைவியா நடிக்க வைக்கலாம்னு திட்டம் போடுறீங்களா? நெவர், அது முடியவே முடியாது. இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கோங்க.

எனக்குக் கல்யாணம் மட்டும் இல்ல உங்களையே எனக்குப் பிடிக்கல. அப்பறம் எப்படி பொய்யா கூட உங்கள கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கும்? இன்னும் சொல்லப் போனா உங்க முகத்தப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல. ஸோ இதுக்கு மேல இந்த மாதிரி சீப்பான வேலையெல்லாம் செய்யாதிங்க மிஸ்டர் தேவ்!” என்று அவனுக்குப் பேசவே வாய்ப்புத் தராமல் படபட என்று பேசி அழைப்பைத் துண்டித்தாள் மித்ரா.

இந்த இரண்டு தினங்களில் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அவள் தாத்தா எதுவும் பேசாமல் எப்போதும் போல் இப்போதும் அமைதிகாத்தார்.

மறுநாள் வழக்கம் போல் ருத்ரா வரவில்லை. ‘கல்யாணத்தைப் பற்றி பேசி நம்மள யாரும் தொந்தரவு பண்ணக் கூடாதுனு தானே அவன் கிட்ட நேற்று அப்படிப் பேசி நடந்துக்கிட்டோம். ஆனால் ருத்ராவ வர வேண்டாம்னு சொல்லலியே? பிறகு இவன் ஏன் இப்படி பண்றான்? சரி, அவனோட குழந்தை அதனால் இப்படி நடந்துக்குறான் நமக்கு என்ன? நாம ஏன் அதைப் பற்றி யோசிக்கணும்?. தாத்தாவுக்குச் சரி ஆகிட்டா நாளைக்கே நாம ஊருக்குப் போய்டலாம்’ என்ற முடிவுடன் ருத்ரா விஷயத்தை ஒதுக்கித் தள்ளினாள் மித்ரா.

ஆனால் அவள் என்ன முயற்சி செய்தும் ருத்ராவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அன்று அவளின் நினைவே இல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பியவள் இன்று முழுக்க முழக்க அவளைப் பற்றி மட்டுமே நினைத்தாள். நித்திலாவிடம் இருந்து அன்று முழுக்க போன் வரவில்லை. இவள் அழைத்தாலும் எடுக்கவில்லை. விஷ்வாவையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மறுநாள் காலையிலேயே கெஸ்ட் ஹவுஸ் வந்த விஷ்வா “நீங்க எப்போ ஊருக்குப் போறீங்க? இப்ப எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. எப்போனு சொன்னீங்கனா கூட்டிட்டுப் போய் விட்டுடறேன்” என்று பதட்டத்துடன் கூற “அப்ப தாத்தாவுக்கு சரி ஆகிடுச்சா டாக்டர்? சரி, அது இருக்கட்டும். நேற்று ருத்ரா இங்கு வரவே இல்ல டாக்டர்! அவளுக்கு என்ன ஆச்சோனு மனசுக்குக் கஷ்டமா இருக்கு. நீங்களும் வரல, அதைக் கேட்க உங்களுக்கும் நித்திலாவுக்கும் போன் பண்ணா நீங்க இரண்டு பேருமே எடுக்கல. என்னாச்சி டாக்டர் ருத்ராவுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க.

“உங்களுக்கு அப்ப விஷயமே தெரியாதா? இப்ப முழுசா எதையும் சொல்ல எனக்கு நேரம் இல்ல. நேற்று தேவ் பிடிவாதமா ருத்ராவ அனுப்பாததால குழந்தைக்கு ஜுரம் வந்துடுச்சி. அது நைட் கொஞ்சம் அதிகம் ஆகி குழந்தை உங்கள ரொம்பத் தேடி இருக்கா. அதிலேயும் உங்க நினைவா இருந்ததால நீங்க வந்து கூப்பிட்டதா கற்பனை பண்ணின குழந்தை வேகமா ரூமை விட்டு வெளியே வந்ததுல மாடிப்படியில தவறி விழுந்து அவளுக்குக் கை கால் முகம் எல்லாம் நல்ல அடி.

உங்களைப் பார்க்க விடாம தேவ் செய்தது முதல் தப்புனா தன் கண்காணிப்பிலேயே ருத்ரா இருக்கணும்னு நினைச்சி மாடில தன் ரூம் பக்கத்திலேயே ருத்ராவை வச்சது இரண்டாவது தப்பு. உங்க இரண்டு பேருக்கும் நடக்கற பிரச்சனையால பாவம் குழந்தை தான் மாட்டிட்டுக் கஷ்டப்படுது” என்று கூறி மித்ராவுக்கு அதிர்ச்சி அளிக்க.

“இப்போ எப்படி இருக்கா டாக்டர்? எங்க இருக்கா? என்று குரல் நடுங்க கேட்க.

“ஆஸ்பிட்டல்ல ஐ.சி.யுல இருக்கா. இப்பவும் அம்மா அம்மானு உங்கள தான் சொல்லிட்டு இருக்கா. நான் இப்ப அங்க தான் போறேன். உங்கள நேர்ல பார்த்துக் கிளம்புங்கனு சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்” என்றவன் நிற்காமல் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகும் தான் நின்ற இடத்திலேயே வேர் ஊன்றிப் போய் சர்வமும் அடங்க நின்று விட்டாள் மித்ரா. ‘நாம் செய்த தவறால் இன்று ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிருக்கு ஆபத்தா?’ நினைத்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கத் தோன்றாமல் சிலையாக இருந்தவள் முன் வந்து நின்றார் அவள் தாத்தா.

“நான் ஒன்று சொல்லலாமா? அப்படி நான் சொல்ல அனுமதி கிடைக்குமா?” என்று அவர் கேட்க “ஏன் தாத்தா இப்படிக் கேட்குறீங்க? நீங்க என் தாத்தா! உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, சொல்லுங்க” என்றாள் குரல் உடைய.

“ஓ… அப்படியா? நான் உன் தாத்தாவா? அந்த ஞாபகம் கூட இருக்கா உனக்கு? சின்ன வயசுல இருந்து நீ உன் இஷ்டத்துக்குத் தானமா நடந்து இருக்க? பாட்டு நடனம்னு கத்துக்கிட்ட. ஆண்பிள்ளைகளுக்கு நிகரா கராத்தேல இருந்து அவங்க ஓட்ற பெரிய பைக் மொதக் கொண்டு ஓட்டக் கத்துகிட்ட. ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை நடந்த எல்லா ப்ரோகிராம்லையும் ஸ்போர்ட்ஸ்லையும் கலந்துகிட்ட. அதே மாதிரி அவங்க சுற்றுலாவுக்கு என்று அழைத்துப் போன எல்லா இடங்களுக்கும் போய் வந்த.

இதை எல்லாம் செய்யவோ போகவோ ஓர் தாத்தாவா நீ என் கிட்ட அனுமதி கேட்டியா? இல்லயே! போறனு தகவல் மட்டும் தான் கொடுத்த… அது மட்டுமா, இப்போ உன் கல்யாணம்? இப்படி ஒருத்தரை காதலிக்கிறேன் தாத்தா, நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனு வந்து சொன்னியா? இல்லயே! நீயா போய் கல்யாணம் பண்ணிட்டு வந்து இவர் தான் மாப்பிள்ளனு சொன்ன. அதுக்கும் நான் ஏதாவது தடங்கலோ இல்ல உன்ன ஒரு வார்த்தை சொல்லித் திட்டவோ பேசவோ செய்தனா? இல்லதான... ஏன்னா என் பேத்தி எது செய்தாலும் சரியா தான் இருக்கும்னு நினைச்சேன்!

மாப்பிள்ளையும் நல்லவராகத் தான் இருந்தார். அன்னைக்கு அவ்வளவு பெரிய விஷயம் நடந்ததே, அப்பவாது என் கிட்ட சொல்லி என்ன செய்யலாம் தாத்தானு உனக்கு கேட்கத் தோனல இல்ல? புருஷன் பொண்டாட்டி சண்டைய இன்னொருத்தவங்க கிட்ட சொல்லக் கூடாது தான், நான் ஒத்துக்கிறேன்.

ஆனா அந்த ராத்திரி நேரத்தில கிளம்பி வர்ற அளவுக்குப் பிரச்சனைனா, அதைச் சொல்லனுமா இல்லையா? நீ பாட்டுக்கு உடனே கிளம்பச் சொன்னா என்ன அர்த்தம்? அதிலும் என்ன வார்த்தை சொன்ன மித்ரா? உங்களுக்கு இந்த வசதி வாய்ப்பு தான் வேணும்னா இங்கையே இருங்க... கடைசி வரைக்கும் நீ என்ன உன் தாத்தாவா நினைக்கில இல்ல?

இந்த இடத்துல உன் அப்பா அம்மா இருந்திருந்தா இப்படித் தான் நடந்துப்பியா? புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரது சகஜம். அதுக்காக வீட்டை விட்டு ஒரு பொண்ணு வெளியே வரலாமா? நான் இன்னொன்னும் கேட்கறேன், நிஜமாவே அந்தக் குழந்த உன் குழந்தையா இருந்தா இப்படித் தான் விட்டுட்டு வருவியா? அது யாரோ பெத்த குழந்த தான? அதனால் தான இப்படிச் செய்த! முதல்ல நீ இரண்டாம் தாரமா கட்டிக்கிட்டதே எனக்குப் பிடிக்கல. அதிலேயும் ஒரு குழந்தை வேற இருக்கேனு அதிகம் யோசிச்சேன்.

ஆனா இங்கு வந்து பார்த்த பிறகு மாப்பிள்ள உன் மேல வச்சி இருக்குற பாசத்தப் பார்த்தும் அந்தக் குழந்தை உன் மேலையும் நீ அந்தக் குழந்தை மேலையும் வச்சி இருக்குற பாசத்தையும் பார்த்து சரி இனி இது தான் உன் வாழ்க்கைனு முடிவு பண்ணி ஏத்துக்கிட்டேன். ஆனா நீ இன்னமும் இது தான் உன் வாழ்க்கைனு ஏத்துக்கல இல்ல? உங்க இரண்டு பேருடைய சண்டையால அந்தப் பிஞ்சுக் குழந்தை படாதபாடு படுது. அது என்ன செய்தது? ஏன் இப்படி அதை சாகடிக்குறீங்க இரண்டு பேரும்? நான் இந்த வார்த்தையை சொல்றதால நீ என் கிட்ட சண்டை போட்டாலும் பரவாயில்ல.

மாப்பிள்ள தப்பு செய்து இருப்பாருனு எனக்குத் தோனல. அப்படியே செய்து இருந்தாலும் அதை உணர்ந்து உன்னப் போகவிடாம பாதியிலேயே நிறுத்தி உன் கிட்ட மன்னிப்பு கேட்டாறா இல்லையா? தப்பை உணர்ந்து திருந்தி வந்து ஒருத்தர் மன்னிப்பு கேட்டா அவர்களை மன்னிக்காமல் போனா அப்புறம் நீ என்ன பொண்ணு சொல்லு? நான் உன்ன வளர்த்ததுல எங்க என்ன தப்பு செய்தனு தெரியல மித்ரா!

ஒருவேளை உன்னக் கூடவே வச்சிக்காம தூரமா வெச்சி உனக்குப் பணம் காசை மட்டும் செலவு செய்ததால உன் மேல எனக்குப் பாசம் இல்லனு நினைச்சிட்டியா? இல்லை என்னுடைய உறவே வேண்டாம்னு நினைச்சிட்டியா? இப்பவாது என் பேத்தியா இருந்து மாப்பிள கிட்டப் பேசி குழந்தையக் காப்பாத்தப் போறியா இல்ல உன் பிடிவாதத்துலேயே இருந்து ஊருக்குக் கிளம்பப் போறியா? உன் முடிவு எதுவா இருந்தாலும் அதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்று இத்தனை நாள் தன் மனதில் தேக்கியதையெல்லாம் உணர்ச்சி பொங்கக் கொட்டியவர் தன் அறைக்குச் சென்று விட.

ஏற்கனவே தான் செய்வது தவறோ என்று குழப்பத்தில் இருந்தவள் இப்போது அவள் தாத்தா கூறிய வார்த்தையைக் கேட்கக் கேட்க வாள் கொண்டு அறுப்பது போல் துடி துடித்துப் போனவள். கதறி அழக் கூட முடியாத தன் நிலைமையை உணர்ந்து நேரே தன் தாத்தாவிடம் வந்தவள் தான் செய்ததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டவள்.

பின் ருத்ராவைக் காண விஷ்வாவை அழைத்து எந்த ஆஸ்பிட்டல் எப்படி வழி என்ன ஏது என்று விவரம் கேட்டு அங்குச் சென்றாள் மித்ரா. வாசலிலே காத்திருந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான் விஷ்வா.

“இப்போ குழந்தை எப்படி இருக்கா டாக்டர்?”
“என்ன சொல்ல? கொஞ்சம் ரிஸ்க்கு தான் மித்ரா! ஜுரம் அதிகமாகிடுச்சி குறைக்க முடியல. அதனால குழந்தைக்கு ஜன்னி கண்டு ஃபிக்ஸ் வந்துடுச்சி”

“ஐய்யோ!” என்று அலற, “இல்ல... இப்ப இல்ல. நீங்க வாங்க.. இப்ப அதை நிறுத்த முடிஞ்சிது. ஆனா திரும்பவும் வந்தா அந்தக் குழந்தை தாங்காது. அப்படி வராம இருக்க நரம்பில் ஓர் ஊசி போடணும். அப்பவும் உத்ரவாதம் இல்ல திரும்ப வராதுனு. எதுக்கும் டிரை பண்ணிப் பார்ப்போம். அந்த மருந்தை என் ஃபிரண்ட் கிட்ட சொல்லி கேட்டிருக்கேன். அதுக்காக தான் வெய்ட்டிங்” என்றவன் அவளை ருத்ரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

வாசலிலே நித்திலாவும் வேதாவும் அமர்ந்திருக்க, அவளைப் பார்த்ததும் நித்திலா, “அண்ணி” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள். வேதாவோ அவளிடம் முகம் கொடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள நித்திலாவை விலக்கி உள்ளே சென்றவள் அங்கு கண்ட காட்சியில் அது ஐ.சி.யூ வார்டு என்பதையும் மறந்து வாய் விட்டே கதறிவிட்டாள். அங்கு ருத்ரா இடுப்பில் வெறும் ஜட்டியும் தலையில் பெரிய கட்டுடன் உச்சந்தலையில் இருந்து பாதம் வரை பல வொயர்களைப் பொறுத்தியபடி படுத்திருந்தாள்.

அதைப் பார்த்துக் கதறியவளை நெருங்கிய விஷ்வா “மித்ரா! இது ஆஸ்பிட்டல் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப். நான் தான் சொன்னனே கொஞ்சம் ரிஸ்க்கு தான்னு. இப்போ என்ன தான் நாங்க மருந்து மாத்திரையினு கொடுத்தாலும் அது ருத்ராவைப் பாதி தான் குணப்படுத்தும். அவ முழுசா குணம் ஆகணும்னா அந்த மீதி பாதி நீங்க தான். அதனால அவளுக்கு நீங்க அதை உணர்த்துங்க” என்று கூற “சரி” என்று தன் கேவலை நிறுத்தி விட்டுக் குழந்தையிடம் நெருங்கியவள்.

“குட்டிமா இங்க பாருடா. அம்மா வந்து இருக்கேன்டா, உன் அம்மா வந்து இருக்கேன்டா, திரும்ப வந்துட்டேன்டா. இனிமே அம்மா உன்ன விட்டுப் போக மாட்டேன்மா. அம்மா செய்தது தப்பு தான்டா. அதுக்காக அம்மாவ விட்டுப் போய்டாத குட்டிமா! என் பொண்ணு எனக்குத் திரும்ப வேணுமே! என் பொண்ண எனக்குப் பிடிக்குமே! நீ இல்லாம இந்த அம்மாவால இருக்க முடியாதுடா ராஜாத்தி! எழுந்து அம்மா கிட்ட வந்துடுமா. அம்மா வந்திருக்கேன் பாரு, எங்க என்ன கண்ணுத் திறந்து பாருடா குட்டி!” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் அவள் கண்ணம் வருடி அவளை நெருங்கி தன் கேவல்களுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையாக இடைவெளி விட்டுக் கூறினாள் மித்ரா.

அப்போது உள்ளே வந்த தேவ் அவளைப் பார்த்ததும் “நீ எங்கடி இங்க வந்த? நானும் என் பொண்ணும் உயிருடன் இருக்கமா இல்லையானு பார்த்துட்டுப் போக வந்தியா? இல்ல ஏதோ உயிருடன் இருந்தா மிச்ச மீதி உயிரையும் எடுத்துட்டு எங்களை குழி தோண்டிப் புதைச்சிட்டுப் போக வந்தியா?” என்று கர்ஜிக்க.

“டேய் என்னடா பேசற?” என்று அதட்டிய விஷ்வாவை.

“எல்லாம் உன்னால தான்டா. நான் தான் இவ கிட்ட எதுவும் சொல்லாதனு சொன்னேன் இல்ல? என் பேச்சை மீறி ஏன்டா சொன்ன?” என்று அவனை அதட்ட.

அவன் வார்த்தைகளை வாரிக் கொட்டி அவளைப் பேசியிருந்தாலும் அந்த வார்த்தைகளை விட அவள் மனதைச் சுட்டது, தலை வாராமல் முகத்தில் தாடி வளர்ந்து கண்கள் சோர்ந்து போய் அதையும் மீறி அந்தக் கண்களில் பயத்துடன் மூன்றே நாளில் யாரோ போல் தேவ் காட்சியளித்தது தான். ‘நான் முதன் முதலில் ராஜாவின் கம்பீரத்துடன் பார்த்த தேவ்வா இப்போ பஞ்சப் பரதேசி போல் என் கண் முன்னால் நிற்கிறான்’ என்பது தான் அது.

அதே நேரம் பார்த்து ருத்ராவுக்குப் போட வேண்டிய மருந்து அடங்கிய சிறிய குளிர் சாதனப் பெட்டியுடன் நர்ஸ் வர “டாக்டர் நீங்க ஊசி போடணும்னு கேட்ட மருந்து வந்துடுச்சி” என்று அந்தப் பெட்டியை நீட்ட, அதை வெடுக்கென்று பிடிங்கிய தேவ் “எதுக்குடா இந்த ஊசி? என் குழந்தை பிழைக்கவா? வேணாம்டா வேணாம்... என் குழந்தை பிழைக்கவும் வேண்டாம், அதனால் நாளைக்கு அம்மா எங்கேனு கேட்டுக் கதறவும் வேண்டாம். நானும் என் பொண்ணும் ஒரேடியா போய் சேர்ந்திடுறோம். அதைத் தானே இவக் கேட்கறா…” என்று வார்த்தைகளைக் கத்தி போல் வீசியவன் அதே வேகத்துடன் திரும்பி வெளியில் நடக்க ஆரம்பித்தான் கையில் வைத்திருந்த மருந்துப் பெட்டியுடன்.

“டேய் தேவ்! டேய் டேய்... என்ன காரியம்டா செய்யற?” என்று கத்திக் கொண்டே விஷ்வா அவன் பின்னாலயே ஓட.

அதிர்ச்சியிலும் அதிர்ச்சி அப்படி ஓர் அதிர்ச்சி மித்ராவுக்கு! குழந்தையை இந்த சிறிது நேரம் பார்த்தவளாளே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி இருக்க இந்த மூன்று நாட்களாக குழந்தை படும் கஷ்டத்தைப் பார்த்திருந்தும் எப்படி இவனால் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடிகின்றது என்பது தான் அந்த அதிர்ச்சி.

அங்கு தேவ் என்ன சொன்னானோ திரும்ப வரும் போது கையைப் பிசைந்து கொண்டு முகத்தில் கவலையுடன் வந்து நின்றான் விஷ்வா. அதிலிருந்தே மித்ராவுக்குத் தெரிந்து விட்டது தேவ் மனம் மாறவில்லை என்று. மனதில் பயமும் கலக்கமும் சூழ, விஷ்வா மாற்றி ஏதாவது நல்ல விதமாகச் சொல்ல மாட்டானா என்று அவன் முகம் பார்க்க “இல்ல மித்ரா! தேவ் மனசு மாறல. எதுக்கும் நீங்க போய் பேசிப் பாருங்க அப்பவாது அவன் மனசு மாறுதானு பார்ப்போம். ப்ளீஸ், ருத்ராவுக்காக இதைச் செய்ங்க” என்று அவன் கெஞ்ச.

‘நான் பேசினா மட்டும் மனசு மாறிடுவானா? ஈட்டிக்காரன் மாதிரி அவன் விஷயத்திலேயே குறியா இருப்பான். அவன் சொல்ற விஷயத்தைப் பொய்யாகக் கூட என்னால் செய்ய முடியாதே? இப்ப நான் என்ன செய்ய? இப்படி எங்க இரண்டு பேருக்கும் நடுவில் இந்தக் குழந்தை மாட்டிட்டு கஷ்டப்படுதே’ என்று மனதில் குமுறியவள் ‘எதற்கும் கடைசி முறையாக அவன் கிட்ட தெளிவா பேசிப் பார்த்திடுவோம்’ என்ற முடிவுடன் அவன் அறை நோக்கிச் சென்றாள் மித்ரா.

இவள் கதவைத் தட்டி விட்டு உள்ளே செல்ல மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு ஜன்னல் புறமாக நின்று கொண்டு வான் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ். அதைப் பார்த்தவள் அவன் திரும்பப் போவது இல்லை என்று உணர்ந்து “ஏன் தேவ்? ஏன் இந்தப் பிடிவாதம் உங்களுக்கு? நீங்க இப்படி நடந்துக்கிறதால நம்ம குழந்த தான் பாதிக்கப்படுறா. ப்ளீஸ், நான் சொல்றதக் கேளுங்க, உங்க பிடிவாதத்தை விட்டு அந்த மருந்தக் கொடுத்துடுங்க” என்று கண்ணீர் குரலில் கூற.

அவன் அப்போதும் திரும்பவில்லை. ஆனால் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாக அவன் உடல் மட்டும் விறைத்து நிமிர்ந்தது. அவன் பேசாமல் இருக்க, அதைப் பார்த்தவள் “ஐய்யோ ஏதாவது சொல்லுங்களேன் நீங்க வேற என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்றேன். என் பொண்ணுக்காக என் உயிர வேணும்னாலும் தறேன். ஆனா இந்தக் கல்யாணம் மட்டும் வேணாம் தேவ்! ப்ளீஸ் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன்” என்று கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட, அப்போதும் அவன் அசையவில்லை.

என் வாழ்க்கையில் என்ன நடந்ததுனு தெரிய வந்தா நீங்களும் உங்க குடும்பமும் என் முகத்துல காரித் துப்பிக் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிடுவீங்க. அதற்காக மட்டும் இல்ல, பொய்யா பண்ற இந்தத் திருமணத்தால என்னாலையும் நிம்மதியா வாழ முடியாது. உங்க பிடிவாதத்தால என் குழந்தைய சாகடிச்சிறாதிங்க தேவ்!” என்று கேவியவள் அப்போதும் அவன் அசையாமல் இருப்பதைப் பார்த்து ஓடிச் சென்று அவன் காலில் விழுந்து அவன் கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் அவன் பாதத்தில் தன் முகம் புதைக்கக் கதறினாள்!

“ப்ளீஸ் தேவ்! உங்க பிடிவாதத்தால என் குழந்தையச் சாடிச்சிறாதிங்க. எனக்கு என் பொண்ணு வேணும். காலம் முழுக்க சாகுற வரை உங்களுக்கு ஒரு நாயா உங்க காலடியிலே இருக்கேன். ருத்ராவ என் குழந்தையா பார்த்துக்கிறேன். அந்த மருந்த மட்டும் கொடுத்துடுங்க தேவ்! அந்த மருந்தக் கொடுத்துடுங்க.

என் பொண்ணக் காப்பாத்தி என் கிட்ட கொடுத்திடுங்க! எனக்கு என் பொண்ணு வேணும்! என் பொண்ணு எனக்கு வேணும்! என் குழந்தைய கொடுத்திடுங்க!” என்றவள் தன் நெற்றியை அவன் பாதத்தில் முட்டி தன் கண்ணீரால் அவன் பாதத்தைக் கழுவிக் கதறினாள் மித்ரா.

அவள் கதறுவதைப் பார்க்க முடியாமல் தான் தேவ் திரும்பி நின்றதே. உரிமையுடன் தன் மார்பில் முகம் புதைக்க வேண்டியவள் இன்று யாரோ போல் தன் பாதத்தில் முகம் புதைத்துக் கதறுகையில், அவனுக்குச் சொல்லவா வேண்டும்? துடிதுடித்துப் போனான் தேவ்! இரும்பான அவன் கண்களிலுமே கண்ணீர் வழிந்து விட்டது. அதை மறைத்துத் தன் இளகிய மனதை இரும்பாக்கியவன் “என்னடி வாய்க்கு வாய் என் பொண்ணு என் பொண்ணுனு சொல்ற? நீ தான் பத்து மாதம் சுமந்திருந்து என் குழந்தைய பெத்தியா? இல்ல இல்ல? நீ யாரோ தான? உண்மையாவே நீ பெத்திருந்தா அன்றைக்கு அப்படி வீட்டை விட்டுப் போய் இருப்பியா சொல்லு?” அவள் தாத்தா கேட்ட அதே வார்த்தையை இப்போது இவன் கேட்டான்.

“நீ பெத்து எடுக்கல. அதனால தான் உனக்குப் பெத்த பாசம் இல்ல. ஆனா இந்த இரண்டு மாதம் வளர்த்தியே? அந்தப் பிஞ்சும் உன்ன அம்மா அம்மானு சுத்தி சுத்தி வந்துச்சே அப்பக் கூடவா உனக்கு அந்தக் குழந்த மேல பாசம் வரல? ச்சே… உன் கிட்ட இருந்து நிச்சயம் நான் இதை எதிர்பார்க்கல மித்ரா!” என்று கசந்த குரலில் கூறியவன் “நான் செய்தத சொல்லிக் காட்டக் கூடாது தான், இருந்தாலும் சொல்றன். உன் தாத்தா ஜெயிலுக்குப் போகாம இருக்க நான் எவ்வளவு செலவு செய்தன்? அதைப் பற்றியும் என் கேஸ் பற்றியும் என் கவுரவத்தைப் பற்றியும் கொஞ்சமாவது யோசிச்சியாடி நீ?

இன்று என் குழந்தைக்கு இப்படி இருக்குனு இப்போ வந்து கதர்றியே? எல்லாம் முடிச்சி என் குழந்தை சரியாகி கேஸ்சும் முடிந்த பிறகு நீயும் ஆச்சி உன் குழந்தையும் ஆச்சி எப்படியாவது போங்கனு திரும்பவும் நீ விட்டுப் போய்ட்டா என் பொண்ணு அழுது கதறி உன்னத் தேடுவாளே அப்ப நான் என்ன சொல்ல என் பொண்ணு கிட்ட? நீ எப்பவும் வர மாட்டனு சொல்லவா? வேணாம்டி வேணாம்... அப்படி ஒன்று நடக்கவும் வேண்டாம் என் பொண்ணு கதறவும் வேண்டாம்.

அதனால் நீ இப்படியே போய்டு. நான் அந்த மருந்தக் கொடுக்கவும் மாட்டேன். நானும் என் பொண்ணும் எப்படியாவது போறோம், நீ கிளம்பு. உனக்கு உன் பிடிவாதம் தான முக்கியம்? அப்ப எனக்கும் என் பிடிவாதம் தான் முக்கியம். நான் அதிலிருந்து மாறமாட்டேன் மித்ரா!” என்றான் குரலில் உறுதியுடன் தேவ்.

தரையிலேயே அமர்ந்து அவனை மேல் நோக்கி பார்த்தவள் அவன் தன் பிடிவாதத்திலே நிற்க, அந்த உறுதியைப் பார்த்து அதை மாற்றும் விதமா “ஐய்யோ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க? என் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்ததுனு முதல்ல நான்…” என்று தன் கைகளை ஏந்திக் கொண்டு அவள் சொல்ல வர அதை முழுவதுமாக முடிக்க விடாமல் இடையில் புகுந்தது தேவ்வின் குரல். “என்னடி சும்மா சும்மா என் வாழ்க்கையில் நடந்தது என் வாழ்க்கையில் நடந்ததுனு குதிக்கிற? இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கோ மித்ரா! உன் வாழ்க்கையில் என்ன நடந்து இருந்தாலும் சரி. இந்தப் பிறவியில நீ தான் என் பொண்டாட்டி. இது என் கேஸ்சுக்காக என் கவுரவத்துக்காக என் குழந்தைக்காக என்று பொய்யா இல்லடி. எனக்காக உனக்காக நமக்காக இது நிஜ கல்யாணம். இதுல எனக்கு எந்த மாற்றமும் இல்ல.

அன்னைக்கு என்ன சொன்ன? என் முகத்தப் பார்க்க பிடிக்கலனு தான? ஆனா இப்போ இந்த ஜென்மம் முழுக்க சாகற வரைக்கும் இந்த முகத்த தான் நீ தினமும் பாரக்கணும், உன் கணவனா… சாதாரணக் கணவனா இல்ல, முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்த சகல வித சடங்குகளோட உன் கழுத்தில் நான் மஞ்சள் கயிறு கட்ட அதைத் தலை குனிந்து ஏற்று சாகும் வரை பிரிக்க முடியாத பந்தமா என்ன உன்னோட கணவனா நீ ஏற்கத் தான்டி போற. அப்படி ஓர் திருமணத்தத் தான் நான் நடத்தப் போறேன்.

இதுக்குச் சம்மதம்னா நீ இங்கு இருக்கலாம், இந்த மருந்தையும் நான் கொடுத்தற்ரேன். இல்ல முடியாதுனா, நீ இப்பவே இந்த இடத்த விட்டுப் போய்டு. ஆனா நான் என் பிடிவாதத்தில் இருந்து மாற மாட்டன்” என்று கூறி கற்சிலையாக நின்றான் தேவ்.

அவன் கண்கள் நெருப்பென சிவக்க அதை விட உக்கிரமாக அவன் கத்திக் கொண்டிருக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளோ ‘என்ன மனுஷன்டா நீ? இவ்வளவு தூரம் நான் கெஞ்சி அழுது கதற எதுக்கும் அசையாமல், அங்கு உன் குழந்த சாக கிடக்கு அதைப் பற்றியும் யோசிக்காமல், உன் சுயநலமும் உன் கவுரவமும் எல்லாத்துக்கும் மேல உன் பிடிவாதம் தான் முக்கியம் இல்ல? இதுல நீயா நானா என்ற போட்டி வேற... இதில் நீ வென்றே ஆகணும் என்ற வெறி! யாரைப் பற்றியும் நினைக்காம தனக்காக மட்டுமே வாழற சுயநலம் பிடித்த அரக்கனு உன்ன நான் சொல்லறது சரி தான்...

இப்ப உன் நேரம் நீ ஜெயிச்சிட்ட! ஆனா இந்த மித்ரா யாருனு உனக்குத் தெரியல. நான் யாருனு உனக்குக் காட்டி உனக்கான பதில் அடியும் கொடுப்பாள் இந்த மித்ரா!’ என்று மனதில் சபதம் எடுத்தாள் மித்ரா. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் தேவ் ஓர் சுயநலவாதி, பணத்திமிர் பிடித்தவன், தான் நினைத்ததை சாதித்தே தீரணும் என்று நினைக்கும் அரக்கன்! இது தான் மித்ரா கண்ட தேவ். ஆனால் அவன், அவள் வாழ்வுக்காகவும் அவளுக்காகவும் அவன் காதலுக்காகவும் தான் இவ்வளவு பிடிவாதமாக இருந்து தன் குழந்தையின் உயிரையே பணயம் வைக்கிறான் என்று தெரியாமல் மனதில் வன்மத்தை வளர்த்துக் கொண்டாள் மித்ரா. அதன் விளைவு நாளைய தினம் அவர்கள் வாழ்வில் என்னவாக இருக்கப் போகிறதோ தெரியவில்லை.

‘அங்கே சாகக் கிடப்பது உன் குழந்தைடா! அதைப் பற்றி கொஞ்சமும் உணராமல் இப்படி பிடிவாதத்துடன் நிற்கிறியே!’ என்பது போல் மித்ரா அவனைப் பார்க்க, அதை உணர்ந்தவனோ “என்ன? உன் குழந்த தான எனக்கு என்னனு தான யோசிக்கற? அது தான் என் குழந்தனு சொல்லிட்டியே. பிறகு நீ ஏன் இங்கு நிற்கற? இதுனால உனக்கு என்ன? நீ போ...” என்றவன் தன் கைப்பேசியை எடுத்து விஷ்வாவுக்கு அழைத்து அவனை வரச் சொல்ல.

வந்தவனிடம் “டேய், இவள வெளியே இழுத்துட்டுப் போடா. இதற்கு மேல் இவள் என் கண் முண்ணாடியே இருக்கக் கூடாது, கூட்டிட்டுப் போடா” என்று கட்டளையிட விஷ்வா சற்றுத் தயங்க “இப்ப கூட்டிட்டுப் போறியா இல்ல என் குழந்தைய கூட்டிட்டு நான் வேற ஆஸ்பிட்டலுக்கு போய்டவா?” என்று அவன் மிரட்ட வேறு வழி இல்லாமல் அமர்ந்திருந்த மித்ராவின் கையைப் பிடித்தான் விஷ்வா.

அவன் கையை ஒரே வேகத்தில் தட்டி விட்டவள் “நான் போக மாட்டேன். என் குழந்தையை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். எனக்கு என் பொண்ணு வேணும் அதுக்காக நான் சம்மதிக்கிறேன். இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன். நீங்க கட்ற தாலிய நான் ஏத்துக்குறேன்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் கையில் முகம் புதைத்துக் கதறி அழுது கரைந்தாள் மித்ரா.

“உண்மையாதான் சொல்றியா இல்ல இந்த நிமிஷம் என்ன சமாளிக்கணும் என்றதுக்காக பொய் சொல்றியா?” என்று தேவ் கேட்க. “இல்ல இல்ல... நான் உண்மையா முழு மனசா சம்மதிச்சி தான் சொல்றேன்” என்று அவள் அழுகையின் இடையில் கூற “இது நிஜம்னா நாளைக்குக் காலையிலே நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம், ரெடியா இரு” என்றான் கட்டளை இடுவது போல். அவள் அமைதியா இருக்க, “சரி விஷ்வா இவளக் கூட்டிட்டுப் போய் உன் கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுடு” என்க “இல்ல இல்ல... நான் போகல. இங்கையே ருத்ரா கூடவே இருக்கேன்” என்று மித்ரா மறுக்க.

விஷ்வாவோ கண்களாலேயே ‘இப்போ என்ன செய்ய?’ என்று கேட்க ‘சரி, இங்கையே இருக்கட்டும்’ என்று கண்களாலேயே பதில் அளித்தான் தேவ். இவர்களின் பார்வை மொழிகள் எதையும் அறியாமல் எழுந்த மித்ரா “அப்ப அந்த மருந்து?” என்று கேட்க அதை எடுத்து வந்து அவள் கையில் வைத்தான் தேவ்.

அதன் பிறகு ருத்ராவுடனே இருந்தவளை உடல்நிலையில் நல்லமுன்னேற்றம் இருப்பதாகவும் ஐ.சி.யூ வில் இரவு தங்க முடியாது என்று கூறி அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றவன், போகும் போதே “தாத்தாகிட்ட தேவ் எல்லாத்தையும் பேசிட்டானாம். நீங்க எதுவும் பேச வேண்டாம்” என்று கூறி அவளை வீட்டில் இறக்கி விட்டுச் செல்ல, உள்ளே வந்தவள் தாத்தாவிடம் ருத்ராவின் உடல் நிலையைப் பற்றி சொன்னவள் தன் அறைக்குள் புகுந்து கட்டிலில் வீழ்ந்தாள்.

‘நானா இப்படி? நானா இன்று கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு வந்தேன்? அன்று என் தாத்தாவின் உயிருக்காகப் போலியான வாழ்வை வாழ சம்மதிச்சேன். அதே போல் இன்று ருத்ராவின் உயிருக்காக இப்படி ஒரு திருமணத்திற்குச் சம்மதிச்சிட்டேனா நான்?

தாத்தாவாது ரத்த சம்மந்தம். ஆனால் ருத்ரா! அந்தக் குழந்தை மேல் எனக்கு அவ்வளவு பாசம் இருந்திருக்கா... அன்று நான் மனவருத்தத்தில் இருக்கும்போது என்னைத் தாயாய் மாறி அரவணைத்தவள் அந்தக் குழந்தை. அதனால் வந்த பாசமோ? இல்லைனா ஒருவேளை பூர்வ ஜென்மத்துப் பந்தமா? என் வாழ்வையே ருத்ராவுக்காகப் பணயம் வைக்கத் துணிந்ததற்கு எது தான் காரணம்?’ என்ன தான் யோசித்தும் மித்ராவுக்கு விடை தான் தெரியவில்லை.

‘எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் தேவ் தான ஜெயிக்கறான்? முன்பு தாத்தாவை இக்கட்டில் வைத்து இப்போ ருத்ராவை வைத்து. ஆனால் இதற்குப் பிறகு அவனை ஜெயிக்க விடக்கூடாது. அவனை என் கிட்ட தோத்துப் போக வைக்கணும்.

இந்தத் திருமணம் நிரந்தரம் இல்லைனு அவனுக்கு உணர்த்திட்டுப் விலகிப் போகும்போது ருத்ராவையும் தாத்தாவையும் அழைச்சிட்டுப் போய்டணும்’ என்று மனதில் உறுதியெடுத்த மித்ரா காலையிலிருந்து அனுபவித்த மன உளைச்சலாலும் உடல் சோர்வாலும் தன்னை மீறி உறங்கினாள்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 19
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN