உன்னுள் என்னைக் காண்கிறேன் 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 20

விடியற்காலையில் அவள் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தத்தில் கண் விழித்தவள். ருத்ராவுக்கு என்னமோ ஏதோ என்ற பயத்தில் ஓடிச்சென்று கதவைத் திறக்க நித்திலாவும் அவள் வயதை ஒட்டிய மூன்று பெண்களும் வயதான பெண்மணி ஒருவரும் அங்கு நின்றிருக்க “என்ன அண்ணி இப்படி முழிக்கறீங்க? அண்ணா உங்ககிட்ட ஒண்ணும் சொல்லலையா? காலையில் ஐந்தரை ஆறரை முகூர்த்தமாம். அதனால உங்கள ரெடி பண்ணிக் கூட்டி வரச் சொன்னாங்க. சீக்கிரம் கிளம்புங்க இப்பவே மணி நாலறை” என்று நித்திலா அவசரபடுத்த.

அதைக் கேட்டவள் ‘அவன் சொன்ன மாதிரியே செய்யறானே. ஆனால் மேற்கொண்டு யோசிக்க இப்ப நமக்கு நேரம் இல்ல’ என்று தெளிந்தவள் குளித்துக் கிளம்பினாள். புடவை கட்டும் நேரத்தில் மற்றவர்களை வெளியே அனுப்பி ஜாக்கெட்டைப் போட்டவள் அதிர்ந்து தான் போனாள். அவளுக்கென்றே கனக் கச்சிதமாக இருந்தது அது. புடவையைப் பார்க்கையில் அதிசயத்துப் போனாள்.

மயில் கழுத்துப் பச்சை நிறத்தில் புடவை இருக்க தங்கத்தையே நூலாக இழையோடிய வாரு கீழ் வாக்கில் இருந்து கொடி ஒன்று மேல் நோக்கி ஓட மேலே அந்தக் கொடியின் முடிவில் ஓர் ரோஜாப் பூ அதன் நடுவில் தேவ் மற்றும் மித்ராவின் முகம் அதுவும் பக்கம் பக்கத்தில் ஒட்டினார் போல். அந்தக் கொடிக்கு இருபுறமும் இலைகள் படர, இலைகளுக்கு நடுவில் தேவ் மற்றும் மித்ராவின் பெயர் பொரிக்கப் பட்டிருந்தது. புடவையில் ராயல் புளூ நிறத்தில் கறை வைத்து அங்கும் இதயம் வரைந்து அதற்குள் தே வெட்ஸ் மி என்று இருவருடைய முதல் எழுத்தும் எழுதி அம்புக் குறியிட்டு இருந்தது.


புடைவையின் முந்தானையில் தாஜ்மஹால் வரைந்து அதற்குள் தேவ் தன் வலது காலை மடித்து இடது கால் முட்டியைத் தரையில் ஊன்றி அமர்ந்த வாக்கில் மித்ராவை நோக்கி ரோஜாவை நீட்ட, அதை மித்ரா குனிந்து பெற்றுக் கொள்வது போல் அழகான ஓவியம். ஆனால் அது ஓவியமாகத் தெரியவில்லை, நிஜமாகவே அவர்கள் இருவரும் அப்படி ஓர் நிலையிலிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் அவ்வளவு அழகான முக அமைப்பு.

மொத்தத்தில் அழகான உயிரோட்டம் உள்ள ஓவியங்களை காகிதத்தில் இல்லாமல் புடவையில் நைந்து இருந்தது தான் கலைநயம். தங்கத்தால் இழையோடி புடவையை நைந்திருந்தாலும் புடவைக்கு மேலும் அழகு சேர்த்து கண்ணைப் பரித்தது முத்துப் பவழம் மரகதம் ரூபி என்று உண்மையான கற்களால் ஆன வேலைப்பாடுகள்தான். இவை அனைத்தையுமே தானே வடிவமைத்துப் பார்த்துப் பார்த்து ரசித்து செய்திருந்தான் தேவ்.

அதையெல்லாம் புடவையில் பார்த்தவள் ‘நிச்சயம் இதை எல்லாம் ஓரே நாளில் செய்திருக்க முடியாது. பிறகு எப்போ செய்திருப்பான்?’ என்று யோசித்தவளை அடுத்து கவனிக்க வைத்தது அங்கிருந்த நகைப் பெட்டி. திறந்து பார்க்கையில் பிளாட்டினத்தில் நீல நிற ரூபி கற்கள் பதித்த திருமண செட் ‘அடப்பாவி இதையும் மேட்ச்சா எப்ப வாங்கினானு தெரியலையே. கண்டிப்பா நேத்து நைட் இல்ல. வேற எப்ப இருக்கும்?’ என்று மீண்டும் யோசித்தவளை யோசிக்க விடாமல் தடை செய்தது நித்திலாவின் குரல். “அண்ணி இன்னுமா புடவை கட்டுறீங்க? டைம் ஆச்சு அண்ணி”.

“முடிஞ்சிடுச்சி” இதோ வரேன்” என்றவள் பின் தன் யோசனையை விடுத்து அவசரமாகக் கிளம்பினாள். தேவ்வின் அரண்மனையிலேயே திருமணம் என்பதால் அங்குச் செல்ல திருவிழா போல் ஊரே திரண்டிருந்தது. உள்ளே பரபரப்புடன் ஒரு பக்கம் மேலதாரர் அமர்ந்திருக்க மணமேடையோ சகல விதப் பூ அலங்காரத்துடன் தேவலோகத்து ரதம்போல் ஜொலித்தது.

அவளை ஆலம் சுற்றித் தனி அறைக்கு அழைத்துச் செல்ல எல்லாம் சரியா என்று பார்க்க வந்த வேதாவிடம் “அங்கு குழந்தை உடம்பு முடியாமல் படுத்த படுக்கையா இருக்கும்போது இதெல்லாம் தேவையாமா?” என்று தன் மனதில் அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்க “எனக்கு எதுவும் தெரியாது மித்ரா! எல்லாம் தேவ் தான் செய்றான். நீ அவனத் தான் கேட்கணும்” என்றவர் “இனிமே என்ன அம்மான்னு கூப்பிடாத, அத்தைனு கூப்பிட்டுப் பழகு” என்று திருத்தியவர் சென்று விட.

‘அதானே பார்த்தேன், எல்லாம் அவன் வேலை தானா? பின்ன வேற யாரு? நான் சொன்ன வார்த்தைக்காகவும் என்னை ஜெயிக்கணும்னு வீம்புக்காகவும் இதை எல்லாம் செய்கிறான்’ என்று அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தப்பான அர்த்தத்தைத் தேடிப் பிடித்து மனதில் பதித்தாள் மித்ரா.

ஆனால் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான் எனும் போது அதை ஊர் கூட்டி சொந்தபந்தங்கள் புடை சூழ சகலவித சடங்குகளுடன் தன் திருமணம் நடக்க வேண்டும் என்ற அவள் ஆசையைத் தான் இன்று தேவ் நிறைவேற்றி வைக்கிறான் என்பதை பாவம் அவள் அறியவில்லை.

யாராக இருந்தாலும் எந்தவொரு செயலையும் பொருளையும் கோபம் என்ற கண் கொண்டு பார்த்தால் தப்பாகத் தான் தெரியும். அதேபோல் தான் இன்று தேவ் மேல் உள்ள கோபத்திலும் வன்மத்திலும் அவனை வில்லனாகவே பார்த்தாள் மித்ரா. அவளை அதிகம் யோசிக்க விடாமல் அங்குப் பெண்ணை அழைக்க எழுந்து மணமேடை சென்றவளைப் பார்த்த தேவ் அவள் அழகில் சொக்கித்தான் போனான்...

முகத்தில் உள்ள சோர்வையும் குழப்பத்தையும் மீறி அவள் தேவலோகக் கன்னி போல் ஜொலிக்க அன்ன நடை நடந்து வந்தவளை முதல் முறையாக புடவையில் பார்த்தவளை தன் மனதில் பதித்துக் கொண்டான் தேவ். சில சடங்குகள் முடிந்து தாலி கட்டும் நேரத்தில் அவர்கள் வழக்கப் படி தேவ்வையும் மித்ராவையும் நேர் எதிர் எதிரே நிற்க வைத்து அவர்கள் இருவருக்கும் இடையில் முக்காலி வைத்து அதன் மேல் மித்ராவின் வலது காலை வைக்கச் சொல்லி அவள் கையில் ஒரு தேங்காயைக் கொடுத்தார் ஐயர்.

அதே மாதிரி எதிர் திசையில் நின்ற தேவ்வின் வலது காலை மித்ராவின் கால் கட்டைவிரல் மேல் அவன் கட்டைவிரலை வைக்க, இருவருக்கும் இடையில் ஓர் மஞ்சள் ஆடையைத் திரையாக இருவர் பிடித்துக்கொள்ள. மந்திரங்கள் ஓதி மாங்கல்யத்தை ஐயர் கொடுத்த நேரம் சற்றே திரை தாழ்த்தப்பட அந்தப் பொன் மஞ்சள் தாலியை மித்ராவின் கழுத்தில் கட்டினான் தேவ்.

முதல் முடிச்சுக்குப் பிறகு மற்ற இரண்டு முடிச்சைப் போட வந்த நித்திலாவைத் தடுத்து மூன்று முடிச்சையும் என் மனைவிக்கு நானே போடுவேன் என்ற கொள்கைப்படி அவனே போட்டான். இதுவரை இருந்த கொஞ்ச தைரியமும் பறந்து விட நெஞ்சில் பயம் சூழ முகம் வெளிறி உடல் நடுங்க அவன் கட்டிய தாலியைத் தலை குனிந்து ஏற்றுக் கொண்டாள் மித்ரா.

பிறகு திருமாங்கல்யம் மற்றும் நெற்றியில் குங்குமம் வைக்க மாலை மாற்ற என்று ஒவ்வொரு சடங்கிலும் மித்ரா இருகிப்போய் அமர்ந்திருக்க அவளை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் தேவ்.

மெட்டிப் போடும் நேரத்தில் அவள் பாதத்தை அவன் தொட. அந்தத் தொடுகையில் முதன் முறையாக தன்னை மீறி உடல் சிலிர்த்தாள் மித்ரா! அதை உணர்ந்தவனோ மெட்டியைப் போடாமல் அவள் முகம் பார்க்க, அவளோ தன் கண்களை மூடி மவுன நிலையில் நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்தவனோ அழுத்தம் கொடுத்து அவள் காலைப் பிடிக்க அதில் பட்டென்று கண் விழித்து அவன் முகம் பார்க்க ‘உன்னை நான் அறிவேன்’ என்ற செய்தியைத் தன் கண்கள் மூலம் அவள் கண்களுக்குள் செலுத்தியவனோ பின் மெட்டி இட்டு குனிந்து அவள் பாதத்தில் முத்தமிட்டுத் தன் முதல் முத்திரையை அவளுக்குள் பதித்தான் தேவ்.

அங்குச் சுற்றி இருந்தவர்களின் கேலி கிண்டலைத் தவிர்த்துப் புன்னகையுடனே நிமிர்ந்து அவள் முகம் பார்க்க மித்ரா தான் சற்றுத் தடுமாறிப் போனாள். அடுத்து குடத்தில் வைர மோதிரத்தை இட்டு எடுக்கச் சொல்ல மித்ரா குடத்தின் உள்ளே சும்மா கையை வைத்திருக்க அவனே மோதிரத்தைத் தேடி எடுத்து அவள் கையில் வைத்தான்.

அவன் மோதிரத்தைக் கையில் வைக்கவும் ‘எதற்கு என்று?’ இவள் கண்ணாலே கேட்க ‘நீயே வெளியில கொடு’ என்று அவனும் கண்களாலேயே பதில் சொல்ல ‘எனக்கு வேண்டாம்’ என்று மறுத்தவள் மோதிரத்தைக் கொடுக்க அவன் விரலைத் தேட அவனோ ‘எனக்கும் வேண்டாம்’ என்று மறுத்துத் தன் விரல்களை மடக்கிக் கொள்ள இப்படியாக குடத்துக்குள் சிறு மல்யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

சுற்றி இருப்பவர்கள் தங்களையே பார்ப்பதை உணர்ந்து வேறு வழி இல்லாமல் அந்த மோதிரத்தை அவளே வெளியே எடுக்க வேண்டியதாய் போயிற்று. அப்போதும் தன் பிடிவாதத்திலே நின்று தான் நல்லவன் போல் நடிக்கிறான் என்று தான் நினைத்தாளே தவிர தன் திருமணத்தின் போது இப்படி ஒரு சடங்கு விளையாட்டில் தான் ஜெயித்துத் தன் கணவன் அசடு வழிய நிற்க வேண்டும் என்று தன் தோழியிடம் அன்று கூறியதைத் தான் இன்று தேவ் தனக்காக செய்து இருக்கிறான் என்பதை அறியவில்லை அவள்...

எல்லாவற்றையும் அவன் தன் மனதிற்குள்ளேயே வைத்திருந்தால் அவளுக்கு எப்படித் தெரியும்? இது தேவ் செய்யும் மிகப்பெரிய தவறு. அவன் என்று அந்தத் தவறை உணர்ந்து தன் காதலை அவளிடம் சொல்லப் போகிறானோ...

எல்லா சடங்குகளும் முடிந்து சற்று கிடைத்த இடைவேளையில் நித்திலாவிடம் வந்தவள் “ஆமாம், இப்படிப் போறவங்க வர்றவங்க தெரிஞ்சவங்கனு எல்லாரையும் கூப்பிட்டுத் திருவிழா போல இந்தக் கல்யாணத்தைச் செய்யணுமா? ருத்ரா இப்படி இருக்கும் போது இதெல்லாம் தேவையா? நீயாவது உன் அண்ணாகிட்ட சொல்ல மாட்டியா நித்தி?” என்று கேட்க “அச்சோ அண்ணி, சத்தமா பேசாதிங்க. அவங்க எல்லாம் யாரோ தெரிஞ்சவங்க இல்ல நம்ம சொந்தக்காரங்க. பத்து பஸ் அரேன்ஜ் பண்ணி இவங்கள எல்லாம் அண்ணா கூட்டி வந்து இருக்காரு. நல்ல வேளை நீங்க சொன்னது யாரும் கேட்கல. கேட்டிருந்தா அவ்வளவு தான் இங்க ஒரு யுத்தமே நடந்து இருக்கும்.

அவங்க எல்லாம் ஊர்க் காரங்க அண்ணி. மதிப்பு மரியாதை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே எதிர் பார்ப்பாங்க. ஸோ இனி இது மாதிரி எல்லாம் பேசாதிங்க. அப்பறம் ருத்ராவைப் பற்றி கவலைப் படாதிங்க. நவ் ஷி இஸ் ஆல் ரைட். அதனால எதைப் பற்றியும் யோசிக்காம கல்யாணப் பெண்ணா இந்த நேரத்தில் அண்ணாவ மட்டும் நினைங்க” என்று அவள் சஞ்சலத்தைப் போக்கினாள் நித்திலா.

தன் வீட்டுச் சொந்தமான பெரியப்பாக்களும் அவர்கள் வழி சொந்தங்கள் கூட திருமணத்திற்கு வந்திருந்தனர். தன் தாத்தாவின் முகத்தில் மட்டும் நிம்மதி கலந்த அமைதி. அதைப் பார்த்தவளோ யாருக்காக இல்லை என்றாலும் ருத்ராவுக்காவும் தாத்தாவுக்காகவும் இந்த திருமணத்திற்குச் சம்மதித்தது தப்பே இல்லை என்று தோன்றியது. பிறகு கிடைத்த சிறிய இடைவேளையில் தேவ்வைத் தேடியவள் அவனைக் காணாமல் நித்திலாவிடம் கேட்டறிந்து அவனைத் தேடி அவன் அறைக்கே சென்றாள் மித்ரா.

அவன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க, கதவைக் கூடத் தட்டாமல் உள்ளே சென்றவள் “நீ ஜெயிச்சிட்ட இல்ல? ருத்ராவக் காட்டி உன் பிடிவாதத்துல இருந்து நீ மாறாம கடைசியில நீ ஜெயிச்சிட்ட இல்ல? நான் எவ்வளவு கெஞ்சினேன் உன்கிட்ட? அப்பக் கூட உனக்கு மனசு இறங்கல இல்ல? உன்ன பிடிக்கலனு நான் சொல்லி உன் தன்மானத்தை நான் தூண்டியதால, நான் ஜெயிக்கக் கூடாது தோக்கணும்னும் என்னப் பழிவாங்க தான இந்த திருமணத்த நடத்தின? அதுவும் ஊர் அறிய உண்மையான திருமணமா நடத்திட்ட இல்ல? அதுக்காக இந்த மித்ரா தோத்துட்டானு நினைச்சிடாத... இப்ப சொல்றேன், கேட்டுக்கோ,

நான் உன்கிட்ட தோத்துட்டேன் மித்ரா! நீ என் மனைவியே இல்ல நீ எனக்கு வேண்டவே வேண்டாம்னு உன் வாயாலயே சொல்ல வச்சி உன் வாழ்க்கையை விட்டும் இந்த வீட்டை விட்டும் நீயே என்ன அனுப்பற மாதிரி எல்லாம் நான் செய்யல, என் பெயர் மித்ரா இல்ல...” என்று சவால் விட்டவள்.

“அதனால நான் ஜெயிச்சி இங்கிருந்து போகும் போது தனியா போவேன்னு நினைச்சிடாதே. கூட என் பொண்ணு ருத்ராவையும் கூட்டிட்டுத் தான் போவேன்” என்றால் உறுதியான குரலில். அவள் சொன்னதை எல்லாம் சிறு வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன்.

“ஓ… அதானடி பார்த்தேன்! நீ உடனே சரின்னு சொல்லும் போதே எனக்கு சந்தேகம் தான்… நீ என்னப் பழி வாங்கப் போறியா? அப்புறம் என்ன சொன்ன?” என்று யோசிப்பது போல் சிறிது நேரம் தன் நெற்றியைத் தட்டிக் கொண்டவன் “ஆங்… நான் உன்ன என் மனைவியே இல்லனு சொல்லி இந்த வீட்டை விட்டுத் துரத்திடுவேனா? அதுவும் நான் தோத்துட்டேனு சொல்லி. சபாஷ்... சரியான கற்பனை. இதுல சவால் வேற நீ சவால் விட்டுட்ட இல்ல? அதை ஏற்று பதிலுக்கு நான் சவால் விடலனா அப்புறம் நான் உன் புருஷன் தேவேந்திர பூபதி இல்லையே?

இப்ப கேட்டுக்கோ! எந்தக் கல்யாணத்தை நீ ஏத்துக்கலையோ அந்தக் கல்யாணத்தை ஏத்துக்க வச்சி உன் மனசுக்குள்ள என்ன உன் கணவன் என்ற அந்தஸ்துல அமர வச்சி என்னைய விரும்பவும் வச்சி மூச்சுக்கு முன்னூறு தடவை உன் வாயால ஐ லவ் யூடா அத்தான்னு நான் சொல்ல வைக்கலை நான் உன் புருஷன் தேவ் இல்லடி” என்று பதில் சவால் விட்டான் தேவ்.

கணவன் என்ற பந்தம் காந்தத்தால் ஆன ஈர்ப்பு சக்தி உள்ள உறவு போன்றது. அதனால் மனைவி இரும்பாய் இருந்தாலும் அவனிடம் ஒட்டியே தீருவோம் என்று மித்ராவுக்குத் தெரியவில்லை. மனைவி என்பவள் காட்டாற்று வெள்ளம் போன்றவள் அதை அன்பு மற்றும் காதல் என்னும் அணை கொண்டே தடுத்து நிறுத்த முடியும் என்பதை தேவ்வும் அறியவில்லை. அதுமட்டுமா மனைவி என்பவள் பூ போன்றவள் அது சுகமான தென்றலுக்கு மட்டுமே தலை அசைக்குமே தவிர புயல் காற்றைத் தாங்க இயலாது என்பதை தேவ் அறியவில்லை.

அவனிடம் சவால் விட்டு கதவு வரை சென்றவள் பின் திரும்ப, இப்ப என்ன என்பதுபோல் தேவ் அவளைப் பார்க்க,

முதலில் சற்றுத் தயங்கியவள் பின் “இல்ல, உங்க மனைவி..” என்று பாதியிலேயே வார்த்தைகளை நிறுத்தியவளை.

“ம்ம் என் மனைவிக்கு” என்று இவனும் வார்த்தையை பாதியிலேயே நிறுத்த.

“இல்ல உங்க மனைவி எங்க இருக்காங்க?” என்று கேட்க,

தேவ்வுக்கு அவள் கேட்க வருவது என்ன என்று தெரிந்துதான் இருந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளை வம்பிழுப்பதற்காக “என் தேவதை என் வீட்டில் என் அறையில என் கண் எதிரே இதோ இங்க தான் நிற்கிறா..” என்று அவளைக் காட்டி அவன் புன்னகைக்க.

‘தேவதையா நானா...’ என்று அதிர்ந்தவள் அவன் முகம் பார்க்க அதில் கேலியை உணர்ந்தவள் “ச்சு.. நான் உங்க உண்மையான மனைவிய கேட்குறேன்” என்றாள் சற்று கோபமாக.

“நானும் என் உண்மையான மனைவியைத் தான் சொல்றேன்” என்றான் தேவ்வும் விடாமல்,

“இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது’ என்று உணர்ந்தவள் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து வேறு எங்கோ தன் பார்வையைப் பதித்து “நான் ருத்ராவோட அம்மாவக் கேட்டேன்” என்றாள் சற்று மெல்லிய குரலில், அவன் என்ன பதில் சொல்வானோ என்ற பயத்தில். அவள் இதயத் துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்க. அது ஏன் என்று யோசிப்பதற்குள் இன்னும் தான் கேட்ட கேள்விக்கு பதில் வராததை அறிந்து அவனைப் பார்க்க…

அதுவரை இமைக்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன் முகம் பார்க்கவும் அவளை நெருங்கி மென்மையாக அவள் கையைப் பிடித்து அழைத்து வந்து ஸோஃபாவில் அமர வைத்து தானும் அவளை நெருங்கினால் போல் அமர்ந்து “இங்க பாருடா நான் சொல்றத நல்லா கேட்டுகோ, என்ன புரிஞ்சிதா?” என்க.

அவள் “ம்” என்று தலை அசைக்கவும் தன் கைகளுக்குள் அவள் கையைப் பொத்தி விரல்களைப் பிரித்து வருடியவாரே “ருத்ராவோட அம்மா அதான் பவித்ரா இப்போ இந்த நிமிடம் வரை என் வாழ்க்கையில் இல்ல. அவ சம்மந்தப்பட்டத முடிக்கத் தான் யூ.எஸ் போயிருந்தேன். அப்படி ஒருத்தி என் வாழ்க்கையில் இருந்தா என்றதே இங்க என்னைத் தெரிஞ்சவங்க யாருக்கும் தெரியாது. யாரும் பார்த்தது கூட இல்லை.

இங்கு எல்லாருக்கும் நீ தான் பவித்ரா என்கிற மித்ரா! அவ பெயரைச் சொல்லி யாரும் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நான் பார்த்துக்கறேன். நீயும் கொஞ்சம் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கடா. இதையெல்லாம் அவள் விரலை நீவிக் கொண்டே பேசி வந்தவன் அவள் விரல்களை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தி அதில் தலை சாய்த்தவன் “எல்லாத்தையும் முடிச்சு நான் தனி மனிதனா ஆன பிறகு தான் உன் கழுத்துல தாலியே கட்டினேன். நான் உனக்கே உனக்கு மட்டும் தான் மித்ரா! நான் உன் தேவ்! ஸோ கவலையோ பயமோ இனி எதுவும் உனக்கு வேண்டாம்” என்று மென்மையாகக் கூறியவன் தன் கன்னத்தை அவள் விரல்களால் தேய்த்தான்.

இதுவரை ஏனோ மவுனமாக அமர்ந்திருந்தவள் அவன் அப்படிச் செய்ததில் கலைந்து வெடுக்கென்று தன் கையை உறுவிக் கொண்டு அதே ஸோஃபாவில் சற்றுத் தள்ளி அமர்ந்து “நான் உங்களுக்காக ஒண்ணும் கேட்கல. நான் ருத்ராவை என்னோடு கூட்டிட்டுப் போகும் போது அவங்க வந்து எந்தப் பிரச்சனையும் பண்ணக் கூடாது இல்ல அதான் கேட்டேன் என்று சொல்ல. அவள் கையை உறுவிக் கொண்டதில் தெளிந்தவன் சற்று முன்புறமாக கால் நீட்டி ரிலாக்ஸ்டாக ஸோஃபாவில் பின் புறம் சாய்ந்து அமர்ந்து “நானே உனக்குச் சொந்தம்னு சொல்றன். அப்ப என் பொண்ணு மட்டும் உனக்குச் சொந்தம் இல்லையா? அவளும் உனக்குச் சொந்தம் தான். இன்னும் சொல்லணும்னா ருத்ரா உனக்கு மட்டும் தான் சொந்தம்.

இந்த ஊர் உலகத்தையும் நம்ம சொந்தக் காரங்களையும் பொறுத்தவரை நீ தான் அவ தாய். நீ அவ அம்மா இல்ல என்ற விஷயம் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். ஸோ டோன்ட் வொர்ரி” என்று உறுதியளித்து அவள் மன சஞ்சலத்தைப் போக்கினான் தேவ்.

“அதே தான் நானும் சொல்றன், கடைசி வரைக்கும் ருத்ரா என் பொண்ணு! யாருக்காவும் எப்பவும் என்னால அவள விட்டுக் கொடுக்க முடியாது” என்றாள் இறுகிய குரலில் உறுதியாக. அவள் முகம் பார்த்தவன் குரலைப் போல் அவள் முகமும் இறுகியிருக்க, அதை விரும்பாமல் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்றே முன்புறம் நகர்ந்து தன் முதுகை அவள் இடது தோளில் சாய்த்தவன் “உன்னை யாருடி என்ன விட்டுக் கொடுக்கச் சொன்னா? யாருக்காகவும் கடைசி வரை எப்பவும் உன் அத்தான நீ விட்டுக் கொடுக்க வேணாம்டி என் பொண்டாட்டி!” என்று தன் முகத்தை அவள் தோளில் சாய்த்துக் காதில் ரகசியம் பேசியவன்.

சற்றே இறங்கி அவள் கழுத்தில் தன் மீசை உரச “என்ன வாசனடி இது? ஏதோ புது விதமான வாசனையா இருக்கு…” என்றவன் சற்று முன் தான் கட்டிய மஞ்சள் பூசிய கயிற்றின் வாசனையை வாசம் பிடித்தவன் அந்த இடத்திலேயே தன் இதழ் பதிக்க நினைத்து இன்னும் சற்று அவளை நெருங்குகையில் “ஐயோ அம்மா!” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அலறித் துடித்து தூர விலகிக் கொலை வெறியுடன் மித்ராவைப் பார்த்தவன்.

“அடியேய்… ராட்சஷி! ராட்சஷி! அறிவு இருக்காடி உனக்கு? இப்படியாடி கொட்டுவ? அதுவும் நாலு கொட்டு” என்று தன் தலையைத் தடவிக் கொண்டே அழாத குறையாகக் கேட்கவும்,

“பின்ன வேற என்ன செய்வாங்களாம்? எரும மாதிரி பக்கத்துல வந்து உரசுறது பல்ல பல்லக் காட்டிப் பைத்தியம் மாதிரி ஏதாவது உளர்றது கைய கால சும்மா வச்சிருக்க முடியாம என்னத் தொடுறதுனு இப்படி ஏதாவது செய்தா நான் அப்படித் தான் செய்வேன்.

உங்க கையை காலை உடைச்சி ஆஸ்பிட்டலில் படுக்க வைக்கறது மட்டும் இல்லாமல் உங்க உடம்பு முழுக்கக் சூடு வச்சி உங்க நாக்கையும் உதட்டையும் அயன் பாக்ஸால தேச்சி எடுத்துடுவேன். இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு என்கிட்ட. நான் செய்ய மாட்டனு நினைக்காதிங்க மிஸ்டர் தேவ்! இந்த மித்ரா சொன்னா அப்படியே செய்வா” என்று பெண் புலியாக உறுமி அவனை எச்சரிக்க.

அவள் கோபத்தைப் பார்த்தவன் ‘அடிப் பாவி இதைத் தான் புலி பதுங்குவது பாயறதுக்குனு சொன்னார்களா? அமைதியா இருக்காளேனு கொஞ்சம் முன்னேறினா கடைசியில் இந்த கொட்டு கொட்டவா? அதுவும் நாலு கொட்டு’ என்று யோசித்தவன்,

“யேய் என்னடி யாரோ ரோட்டில் போறவன மிரட்டுற மாதிரி இல்ல மிரட்டுற? நான் உன் புருஷன்டி” என்று அவள் ஏதோ மறந்திருப்பதாக நினைத்து அவளுக்கு ஞாபகப்படுத்த.

“அதுதான்... நீங்க என் புருஷன் என்றதால தான் நாலு கொட்டோட இப்படியெல்லாம் செய்வேன்னு சொல்லி விடறன். இதே வேறு யாராவது இருந்திருந்தா குடலை உறுவி என் கழுத்துல மாலையா போட்டிருப்பேன். ஏதோ உங்க நல்ல நேரம் நான் கொஞ்சம் அமைதியா இருந்ததால நீங்க தப்பிச்சீங்க” என்று அவனுக்குத் தான் உயிர் பிச்சைக் கொடுத்ததாக நினைத்துச் சற்றுக் குரல் உயர்த்தி எச்சிரிக்கவும்.

“என் புருஷன்’ என்ற வார்த்தையை அவள் உணர்ந்து சொன்னாளா இல்லை உணராமல் வாய் தவறி உளறினாளா என்று அவளுக்கே தெரியாது. ஆனால் தேவ்வின் மனமோ அவள் அப்படி சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது. கண்கள் பளிச்சிட உடனே அதை மறைத்தவன் அவள் மிரட்டியதற்குப் பயந்து நடுங்குகிறவன் போல் கை கட்டி வாய் பொத்தி அப்பாவியாய் தன் முகத்தை வைத்துக் கொண்டு பரம சாதுப் பிள்ளையாக எழுந்து நின்ற தேவ்,

“சரிங்க மேடம்! இனிமே இப்படி செய்ய மாட்டேன் மேடம்! சாரி மேடம், அவசரப் பட்டு என்னை எதுவும் செஞ்சிறாதிங்க மேடம்! மீ பாவம்..” என்று போலியாகக் கெஞ்சவும்,

இவள் மிரட்டியதில் அவன் உண்மையிலேயே பயந்து விட்டான் என்று நம்பி “என்னத் தொடக் கூடாது என்கிட்ட இப்படி எல்லாம் வம்பு பண்ணக் கூடாதுனு தான் சொன்னேன். என் பெயரைச் சொல்லக் கூடாதுனு நான் சொல்லல. ஸோ இனி மேடம் எல்லாம் சொல்லிக் கூப்பிட வேண்டாம்” என்று மித்ரா அவனுக்குச் சலுகை வழங்கவும்.

அதற்கும் தேவ் வாய் பொத்தி பவ்யமாகத் தலையாட்ட “ம்ம்ம்ம்… அந்த பயம் இருக்கட்டும்” என்று விரல் நீட்டி அவனை மிரட்டி விட்டுச் சென்றாள் மித்ரா.

அவள் வெளியே சென்றுக் கதவைச் சாத்தும் வரை அமைதியாக இருந்தவன் பின் தொப்பென ஸோஃபாவில் விழுந்து உருண்டு புரண்டு வாய் விட்டுச் சிரித்தான் தேவ். அப்படிச் சிரித்ததில் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்க “போடி லூசு! உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படுறவனாடி? ஆனாலும் இந்த அப்பாவித் தனமும் எனக்குப் பிடிச்சி இருக்குடி என் பொண்டாட்டி.

ஆரம்பத்துல நான் தொடும்போது பேசாம இருந்துட்டுப் பிறகு தூக்கத்துல இருந்து எழுந்தவ மாதிரி என்னமா மிரட்டிட்டுப் போறா... போடி போ, உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு மட்டும்தான் தெரியும். அதை சீக்கிரம் வெளிக் கொண்டு வருவான்டி இந்த தேவ்!” என்றவன் அவள் மிரட்டியதை நினைத்து மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

தன் அறைக்கு வந்த மித்ரா பிறகு எதற்கும் அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அங்கேயே திருமணம் நடந்ததால் நல்ல நேரம் பார்த்து பூஜை அறையில் விளக்கேற்ற கூப்பிட்டும் போகவில்லை. தேவ்வின் தாய் விசாலம் மற்றும் வந்திருந்த ஊர் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்குவதற்கு அழைத்தும் அவள் வெளியே வரவில்லை.

இதையறிந்த அவள் தாத்தா அவளிடம் வந்து “என்ன மித்ரா நினைச்சிட்டு இருக்க? என்ன பழக்கம் இது பெரியவங்களை மதிக்காதது? இதுவரை நான் உன்ன அடிச்சதே இல்ல. என்ன அடிக்க வச்சிடாத. எழுந்து என் கூட வா” என்று சற்றே அதட்ட ‘சரி, தாத்தாவுக்காக இந்த ஒரு தடவை போவோம்’ என்று நினைத்து எழுந்திருக்கும் நேரம் பார்த்து உள்ளே வந்த தேவ் “என்ன மித்ரா இங்க வந்து உட்கார்ந்துட்ட? அங்க எல்லாரும் கிளம்பறாங்க பாரு, வா” என்றழைக்க, அவ்வளவு தான்! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி அமர்ந்து கொண்டது.

“நான் ஏன் வரணும்? வர மாட்டேன். கல்யாணம் தான பண்ணனும்னு சொன்னீங்க? அதான் பண்ணிட்டேன் இல்ல? அப்பறம் என்ன? நீங்க சொல்றத எல்லாம் கேட்டு நடக்கனும்னு எந்த அவசியமும் இல்ல, நான் வரவும் மாட்டேன். மீறி என்னக் கூட்டிப் போனீங்கனா அங்க சத்தம் போட்டு எல்லார் முன்னாடியும் உங்கள அசிங்கப் படுத்துவேன்” என்று உறுதியாக நிற்கவும்.

அதைக் கேட்ட அவள் தாத்தாவோ “என்ன பேச்சுப் பேசுற மித்ரா நீ..” என்று அடிக்கக் கை ஓங்க இருவருக்கும் இடையில் புகுந்து அதைச் செய்யவிடாமல் தடுத்த தேவ் “விடுங்க தாத்தா! அவ இஷ்டப்படியே இருக்கட்டும். அவளை எந்த தொந்தரவும் பண்ணாதிங்க நான் அங்க பேசி சமாளிச்சிக்கிறேன். அவள விடுங்க” என்க.

“எதுக்கு மாப்பிள்ள நீங்க அங்க போய் அவங்ககிட்ட எல்லாம் பேசி சமாளிக்கணும்? ஏன்? எதனால இந்த மகாராணியால அங்க வர முடியாதாம்?” என்று அவர் கோபத்தில் தன் பேத்தியை விடுத்து அவனுக்குப் பரிந்து பேச அதைக் கேட்டு இன்னும் கோபமுற்றவள் “ஆமாம், நான் மகாராணி தான்! இனி நான் என் இஷ்டத்துக்குத் தான் இருப்பேன். நான் அங்கு வரமாட்டன்னா வரமாட்டன் தான்” என்று இவளும் பதிலுக்குக் கத்த வேறு வழியில்லாமல் தேவ் அவரை அடக்கி அழைத்துச் சென்றான்.

அதைப் பார்த்தவள் ‘பயபுள்ள பயந்துட்டான் மித்ரா! இனிமேல் தேவ்வுனா வெத்து மித்ராதான் கெத்து. நீ போறது சரியான ரூட்டு தான். இப்படியே போடி… அப்ப தான் இந்த வீட்டை விட்டுச் சீக்கிரமா போக முடியும்’ என்று கூறி தனக்குத் தானே சபாஷ் போட்டுக் கொண்டாள் மித்ரா.

அன்று முழுக்க இப்படித் தான் யார் பேச்சையும் கேட்காமல் யாரிடமும் பேசாமல் தன் பிடிவாதத்திலேயே இருந்தவள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் யோசிக்காமல் வேறு உடை மாற்றி ருத்ராவைப் பார்க்க டிரைவரிடம் வண்டி எடுக்கச் சொல்லித் தனியாக ஆஸ்பிட்டல் போனவள் நாள் முழுக்க அங்கேயே இருந்து விட்டு இரவு தான் வீட்டிற்கு வந்தாள். காலையில் திருமணம் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வீடு அமைதியாக இருக்க நேரே தன் அறைக்கு வந்து பூட்டிக் கொள்ள அன்றைய பொழுது இப்படியே முடிந்தது.

மறு நாள் காலை சற்று விடிந்த பிறகே எழுந்தவள் நேற்று மாதிரியே இன்றும் யாரிடமும் பேசாமல் அவள் பாட்டுக்குக் கிளம்பி ஆஸ்பிட்டல் போனாள். அங்கே ருத்ராவை ஐ.சி.யூ வில் இருந்து நார்மல் வாடுக்கு மாற்றியிருந்தான் விஷ்வா. கூடவே இருந்து அனைத்தும் பார்த்துப் பார்த்துச் செய்து தன் மகள் கண்விழித்துத் தன்னிடம் பேசும் வரை அங்கேயே இருந்தான் தேவ். ஆனால் மறந்தும் மித்ராவிடம் பேசவும் இல்லை அவள் பக்கம் திரும்பவும் இல்லை. அவன் அப்படி இருப்பதைப் பார்த்து அன்று அவள் மிரட்டியதில் தான் தேவ் பயந்து ஒதுங்கி இருக்கிறான் என்று தவறாக நினைத்துக் கொண்டாள் மித்ரா.

நார்மல் வார்டுக்கு ருத்ராவை மாற்றிவிட அன்றிரவு அவளுடனே தங்கினாள் மித்ரா,

மறுநாள் ருத்ராவைப் பரிசோதித்த விஷ்வா “ஷி இஸ் நார்மல்” என்று கூறி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

வீட்டில் ருத்ராவைத் தன்னுடனே தன் அறையிலே வைத்துக் கொண்டாள் மித்ரா. அன்றைய தினமும் அதற்கு மறு தினமும் வழக்கம் போல் இவள் யாரிடமும் பேசாமல் எதற்கும் பதில் கொடுக்காமல் தன் இஷ்டத்துக்கே நடந்தாள். ருத்ராவைப் பார்க்க தேவ் அவள் அறைக்கு வந்தால், இவள் அங்கில்லாமல் தோட்டத்திலோ இல்லை பால்கனியிலோ இருப்பாள். கூடுமானவரை வேண்டும் என்றே அவனைத் தவிர்த்தாள்.

மீறி அவளைத் தேடி வந்து ஏதாவது தேவ் கேட்டாலோ பேசினாலோ வார்த்தையால் அவனைக் காயப்படுத்திக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி அவனே அவளை ‘ச்சீ’ என்று கூறும் அளவுக்குச் செய்தாள். இல்லை என்றால் மவுனமாக அவன் விலகும்படியும் நடந்து கொண்டாள். அப்படி அவன் பேசாமல் செல்கையில் தனக்கு வெற்றி கிடைத்து விட்டதாக நினைத்துச் சீக்கிரம் இந்த வீட்டை விட்டுப் போய் விடுவோம் என்ற மகிழ்ச்சியில் மிதந்தாள் மித்ரா.

நான்காம் நாள் மாலை மித்ரா அறைக்கு வந்த வேதா. திருமணம் நடந்த நாள் அன்று பேசியதோடு சரி இன்று வரை அவரைப் பார்க்கவோ இல்லை பார்க்க நேர்ந்தால் கூட பேசாமல் சென்று விடுவாள் மித்ரா. ஆனால் இன்று தன்னைத் தேடி வருபவரிடம் முகம் திருப்ப முடியாதே அதனால் வந்தவரை சகஜமாக “வாங்க” என்று அழைத்தாள்.

உள்ளே வந்தவர் “உன் கிட்டையும் தேவ் கிட்டையும் கொஞ்சம் பேசணும் மித்ரா. தேவ்வ வரச் சொல்லிட்டன் இதோ வரணு சொல்லிட்டான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த தேவ் “என்ன சித்தி வரச் சொன்னீங்களா?”

“ஆமாம் அப்பு, பெரிசா ஒண்ணும் இல்லப்பா. உங்களுக்குக் கல்யாணமாகி நாளையோட ஐந்தாம் நாள். நாளும் நல்லா இருக்குனு ஐயர் சொல்லிட்டாரு. ருத்ராவும் உடம்பு சரியாகி வீட்டிற்கு வந்துட்டா.

அதனால நாளைக்குக் காலையில தாலி பிரிச்சிக் கோர்த்திடலாம்னு இருக்கேன். பத்து சவரனுல தாலிக் கொடி எடுக்கணும். சாயந்திரம் ஒரு ஆறு மணிக்கா இரண்டு பேரும் வந்தீங்கனா போய் வாங்கி வந்திடலாம். நம்ம வசதிக்கு அதுக்கு மேல கூட சவரன் எடுக்கலாம். ஆனா மித்ரா நாலு இடத்துக்குப் போய் வர வேண்டியிருக்கும். அதான் பார்க்கர மத்தவங்க கண்ண உறுத்தாத மாதிரி இருக்கணும்னு தான் இப்படி முடிவு எடுத்தேன்.

உங்க இரண்டு பேருக்கும் இதுல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க. ஆனா நாளைக்கே தாலி பிரிச்சிக் கோர்த்துட்டா இன்னும் கொஞ்ச நாள்ள நாம நம்ம கிராமத்திற்குப் போக வேண்டி இருக்கு அதான் கேட்குறேன்” என்று அவர் இருவரையும் பேசவே விடாமல் இவரே பேசி முடிக்க.

அவர் சொன்னதைக் கேட்டு இருவரும் மவுனம் காக்க, பிறகு தேவ்வே பதில் சொன்னான். ஆனால் பதில் மட்டும் வேதாவின் கேள்விக்கு இருந்ததே ஒழிய பார்வை என்னமோ மித்ராவின் முகத்தையே ஊடுருவியது.

அவளைய பார்த்தவன் “தாலிச் சரடு வேணாம் சித்தி! அவ முத்து பவழம் வைரம் வைடூரியம்னு எத்தனை விதமான நகைகளும் தங்கத்துல எத்தனை சவரன் வேண்டும்னாலும் போட்டுக்கட்டும். ஆனா நான் கட்டின தாலி என்னெனைக்கும் பழமை மாறாம அந்தக் கயிற்றில் தினமும் மஞ்சள் பூசிப் புதுப் பொலிவுடன் என் மனைவி கழுத்துல உரசனும். அதனால தாலிச் சரடுக்குப் பதிலா மஞ்சள் கயிற்றுலேயே கோர்த்துடுங்க” என்று அவன் முடிக்கவும்.

“மித்ரா நீ என்னமா சொல்ற?” என்று அவள் அமைதியாக இருப்பதால் வேதா அவளிடம் கேட்க அதற்கும் தேவ்விடமிருந்தே பதில் வந்தது. “அவ என்ன சித்தி தனியா சொல்றதுக்கு இருக்கு? இது என் விருப்பம் மட்டும் இல்ல அவள் விருப்பமும் கூடத் தான்...” என்று பொடி வைத்துப் பேசியவன் இறுதியில் “அவளுக்கும் இதில் முழு சம்மதம் தான் சித்தி. அதனால நீங்க தயங்காம மேற்கொண்டு எதுவா இருந்தாலும் செய்ங்க” என்று உறுதி அளித்தான் தேவ்.

இதற்கு மித்ரா எந்த தடங்கலும் செய்யவில்லை தான். ஆனால் அவனுடைய பார்வையும் குரலும் அவளுக்கு எதையோ உணர்த்துவது போலிருந்தது. அதை அவள் என்னவென்று யோசிப்பதற்குள்…

“காலையில் ஏழு மணிக்கு நல்ல நேரம். அதுக்குள்ள ரெண்டு பேரும் கிளம்பி கீழ வந்திடுங்க” என்று இடை வெட்டியது வேதாவின் குரல்.

“சரி’ என்று தேவ் வெளியே சென்று விட “மித்ரா நீயும் தான் கிளம்பி இரும்மா” என்று அவளிடம் தனியாகச் சொல்லிச் சென்றார் வேதா.

எப்போதும் எல்லா விஷயத்துக்கும் தேவ்வை எதிர்த்துப் பேசி வம்பு பண்ணும் மித்ராவால் ஏனோ இந்த விஷயத்துக்கு மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் அவளால் எதிர்த்துப் பேசக் கூட முடியவில்லை. மறுநாள் காலையில் அவர் சொன்ன படியே ஏழு மணிக்கு மித்ராவை அமர வைத்து ஏழு சுமங்கலிகளை வைத்துச் சடங்கு செய்து இருவரையும் அமர வைத்து நலங்கு வைக்கச் சொன்னவர் பின் பூஜை அறைக்குச் சென்று மித்ராவை விளக்கு ஏற்றச் சொல்ல அதைத் தட்டாமல் செய்தாள் மித்ரா. இறுதியாக இருவரையும் கோவிலுக்குப் போய் வரச் சொல்ல அதற்கும் எந்த தடங்கலும் சொல்லாமல் உடனே கிளம்பினாள் மித்ரா.

வீட்டுப் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றான் தேவ். போகும் போது இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமலே சென்றது. கோவிலில் அனைவரும் தேவ்வுக்குத் தெரிந்தவர்களாக இருக்க இருவரையும் வரவேற்றுத் தனியாக மரியாதை செய்தனர். உலகாலும் கருமாரியின் முன் இருவரும் கண் மூடி தத்தம் வேண்டுதலில் இருந்தவர்களை அவர்களுக்கான பூஜையை முடித்துக் கையில் இரண்டு மாலையுடன் இருவர் சிந்தனையையும் கலைத்தார் ஐயர்.

தேவ் கையில் ஓர் மாலையைக் கொடுத்து மித்ரா கழுத்திலும் மித்ராவிடம் ஓர் மாலையைக் கொடுத்துத் தேவ் கழுத்திலும் போடச் சொல்ல, எந்த மறுப்பும் இல்லாமல் இருவரும் அதைச் செய்தார்கள். தீபாரதனையைக் காட்டி கையில் குங்கும பிரசாதத்தைக் கொடுக்க, அதை வாங்கிய தேவ் அவன் வைத்துக் கொள்ளாமல் திரும்பி மித்ராவின் நெற்றியிலும் அவள் வகிடிலும் சட்டென வைத்தான்.

அவன் செய்கையில் மித்ரா விழி விரித்து அவனையே பார்க்க ‘இதை உனக்கு இடும் உரிமை உள்ளவன் நான் மட்டுமே’ என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவன் தொடுகை...

நேற்று அவன் பேசியதும் இன்று அவன் தொடுகையும் அவள் மனதில் எதையோ உணர்த்த அது என்ன என்று தெரியாமல் மன சஞ்சலத்தில் இருந்தாள் மித்ரா மறுபடியும் மவுனம் எல்லாம் முடித்து வெளியே வந்து காரில் ஏறிய பிறகும் உடனே காரை எடுக்காமல் சிறிது நேரம் இருந்த தேவ் “நான் மட்டும் கோவில் பிரசாதத்த உன் நெற்றில வச்சி விட்டேன் இல்ல? நீ மட்டும் ஏன் எனக்கு இட்டு விடல மித்ரா?” திடீர் என்று தேவ் கேட்கவும்,

திரும்பி அவன் முகம் பார்த்தவள் அப்போது தான் கவனித்தாள் அவன் நெற்றியில் விபூதி குங்குமம் இல்லை என்பதை. ஆனால் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் திரும்பி ரோட்டை வெறிக்க,

“ப்ளீஸ்டி பொண்டாட்டி வச்சி விடேன்” என்றான் தேவ் கெஞ்சலாக.

“…….” அதற்கும் மித்ராவிடம் எந்த பதிலும் இல்ல.

“சரி நானே வச்சிக்கறேன்” என்று சொன்னவன் அவளை சட்டன இழுத்து அணைத்து அவள் முகம் நிமிர்த்தித் தன் மூக்கோடு அவள் மூக்கு உரச அவள் நெற்றியைத் தன் நெற்றியில் பதித்து அவள் நெற்றியிலிருந்த விபூதி குங்குமத்தைத் தன் நெற்றியில் இட்டுக் கொண்டான் தேவ்.

இப்படி சட்டென இழுத்துத் தன்னை அணைப்பான் என அறியாத மித்ரா அவனைத் தடுக்கும் பொருட்டு அவன் மார்பில் கை வைத்துத் தள்ள நினைத்தவள் அது முடியாமல் போக அவன் பட்டுச் சட்டையைக் கொத்தாகத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு கண்களை இருக்க மூடிக் கொள்ள அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தேவ் மெதுவாக அவள் முகத்தைக் கீழே இறக்கித் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு அவள் உச்சந்தலையில் தன் கன்னம் பதித்து தானும் கண் மூடி அமர்ந்திருக்க.

இருவருக்குள்ளும் காதலும் இல்லை… புரிதலும் இல்லை... ஒட்டுதலும் இல்லை… ஆனால் இருவரும் தத்தம் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டது போல ஒரு நிம்மதி. எவ்வளவு நேரம் அந்த நிலை நீடித்ததோ தெரியாது. அவர்களைக் கலைக்க என்றே தேவ்வின் கைப்பேசி அழைக்க அந்த ஒலியில் மித்ரா சட்டென விலகி அமர கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் அது ஓர் மார்க்கெட்டிங் கால் என்று தெரிந்து கட் செய்து நிமிர்ந்தான்.

‘இவ்வளவு நேரம் அவன் கை அணைப்பில் இருந்தோமே’ என்று தன் மீது உள்ள கோபத்தில் “உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்றது? என்னத் தொடாத என்னத் தொடாதனு... ஒரு தடவ சொன்னா உனக்குப் புரியாது? ச்சீ.. சரியான எரும மாட்டு ஜென்மம் போல. சூடு சுரணை எல்லாம் இருந்தா தான? அதான் குடும்பத்துக்கே இல்லையே” என்று கோபமாக வார்த்தைகளை உதிர்த்தாள் மித்ரா.

அதில் கோபம் கொண்ட தேவ் “ஏய் என்னடி ரொம்பத் தான் வாய் நீளுது?” என்றவன் கொத்தாக அவள் முடியைப் பிடிக்க.

“நான் அப்படி தான்... இதுவும் பேசுவேன் இன்னும் பேசுவேன்! என்ன டி சொல்லி கூப்பிடறத முதல்ல நீ நிறுத்து” என்று பதிலுக்கு அவனிடம் உருமியவள் தன் தலையைப் பிடித்திருக்கும் அவன் கையைத் தன் பலம் கொண்ட மட்டும் தள்ள முயற்ச்சிக்க. அதை உணர்ந்த தேவ்வோ அவள் முடியைக் கெட்டியாகப் பிடிக்க, வேறு வழியில்லாமல் மித்ரா தன் தலையைப் பின் நோக்கி இழுக்க அவ்வளவு தான்!

இவையெல்லாம் ஓர் நிமிடத்தில் நடந்து விட அவள் கூந்தலில் சூடி இருந்த பூச்சரம் இழுத்து அறுபட அதிலிருந்த பூக்கள் எல்லாம் அவள் தோள் மீதும் மடி மீதும் சிதறிக் கொட்டியது. அவள் கட்டியிருந்த கத்தரிப்பூ நிறத்துப் புடவையில் அவை எல்லாம் வெண் முத்துக்களாகத் தெரிய அதை அனைத்தையும் கண் கலங்கத் தன் இரண்டு கைகளிலும் வாரி எடுத்துப் பார்த்தவள் பின் அவைகளைப் போட்டு விட்டுத் தன் முகத்தை மூடி ‘ஓ’ வென்று கதறி அழ.

முதலில் சற்றுக் கோபமாக இருந்தவனோ அவள் கதறி அழவும் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு “மித்ரா இங்க பாருடா, ஏன்டா இப்ப அழற? நான் தான் உன்ன ஒண்ணுமே செய்யலையே அடிக்கக் கூட இல்லையே பிறகு ஏன் இந்த அழுக?” என்றவன் அவள் முகத்திலிருந்த கையை விலக்க சட்டெனய் அவன் கையைத் தட்டி விட்டவள் “என்ன செய்யல நீ? செய்றது எல்லாம் செய்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்கற வேற? இன்னைக்குத் தான் தாலி பிரிச்சிக் கோர்த்து இருக்காங்க.

இன்னைக்கு தான் முதல் முறையா நாம இரண்டு பேரும் ஒண்ணா கோவிலுக்கு வந்திருக்கோம். திரும்ப நாம இன்னும் வீட்டுக்குக் கூட போகல அதுக்குள்ள அ….” என்றவள் பாதிலேயே நிறுத்தி “இப்படி செய்துட்டியே” என்று பூச்சரத்தின் நாரை அவள் தூக்கிக் காட்டி அழுகையுடன் சொல்ல,

தேவ்வுக்கோ ஏதோ புரிந்தும் புரியாததது போலிருந்தது. அபசகுணம் என்ற வார்த்தையைக் கூட சொல்ல முடியாமல் அவள் துடிக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்து தான் இருந்தது. ‘இதை இவள் உணர்ந்து அறிந்து தான் சொல்றாளா? அப்படி என்றால் இந்தத் திருமணத்தை ஒத்துக்கிறாளா? என்னை அவள் கணவனா ஏத்துக்கறாளா? அதனால் தான் எனக்கு ஏதாவது ஆகி விடுமோனு அழுது துடிக்கிறாளா?

இவள் ஆழ் மனதில் என் மேல் கொண்ட நேசம் தான் இந்த அழுகையா இல்லை திருமணம் ஆன பெண்களுக்கே உள்ள தன் கணவன் உயிர் மேல் கொண்ட பாதுகாப்பினால் விளைந்த பயமா? எது எப்படியோ...’ அவள் அழுது கரைவதைக் காண முடியாமல் “ஒரு நிமிஷம் இரு பேபி!” என்று கூறி காரை விட்டு இறங்கியவன்,

கோவில் பக்கத்திலிருந்த கடையில் பந்து பூ வாங்கி வந்து அவள் முன் நீட்டி “பேபி, அத்தான் செய்தது தப்பு தான்டா சாரி பேபி! உன் அத்தானுக்கு ஒண்ணும் ஆகாதுடா. இந்தா இந்தப் பூவை வச்சிக்கோ” என்று கூறி அவள் கையில் வைக்க முதலில் பூ வேண்டாம் என்று சொல்ல வந்தவள் அப்படி சொல்லக் கூடாது என்பதை உணர்ந்து “ஓர் பந்து பூ எதுக்கு?” என்றாள் விழி விரித்து.

“எல்லாம் உனக்கு தான்டா பேபி! வச்சிக்கோ. வேணும்னா அத்தானே உனக்கு வச்சி விடவா?” என்றவன் ஆர்வமாகக் கை நீட்ட…

“இல்ல, வேண்டாம் வேண்டாம்” என்று அவசரமாக மறுத்தவள் பின் தலை கொள்ளும் மட்டும் போதும் போதும் என்ற அளவுக்குத் தன் மன்னவன் வாங்கிக் கொடுத்தப் பூவைச் சூடிக் கொண்டாவள் மீதம் இருந்ததை அந்த காரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அவளே தன் கையால் மாலையாகப் போட்டாள்.

தன் மனைவிக்குத் தான் முதன் முதலில் வாங்கிக் கொடுத்ததை மறுக்காமல் அவள் வாங்கிக் கொண்டதில் அவன் மனம் சந்தோஷத்தில் நனைய “பேபி” என்று அழைத்தான் உணர்ச்சி வசப் பட்டு...

அவன் கூப்பிட்டதே கேட்காத மாதிரி அவள் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, ‘அவ்வளவு தான், இனி என்ன பேசினாலும் கூப்பிட்டாலும் திரும்ப மாட்டா ராட்சஷி!’ என்று மனதுக்குள் நொந்தவன் “சரி பாட்டையாவது கேட்போம்!” என்றவன் பாட்டைப் போட அதுவோ அவன் மனம் (சுச்சிவேஷன்) தெரிந்து பாடியது.

ம லரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே…’
அவர்கள் மீதிப் பயணமும் மவுனத்துடனே கழிந்தது.

தன் அறைக்கு வந்து ஆபிஸ் போக உடை மாற்ற நினைத்தவன் கண்ணாடியில் தன் சட்டையைப் பார்க்க வலது மார்பில் உள்ள இடத்தில் சற்று கசங்கி இருக்க, அதைப் பார்த்தவனோ “உன் மனச நீயே இன்னும் புரிஞ்சிக்காம இருக்கடி பொண்டாட்டி! என்னைக்குடி அத நீ புரிஞ்சிப்ப?” என்று அந்த சுருக்கங்களை நீவிக் கொண்டே கேட்டுக்கொண்டான் தேவ்.

அதே வேளையில் மித்ராவும் அவள் அறையில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘நான் இங்கிருந்து போகணுங்கறதுக்காக என்னுடைய கேரக்டரையே மாத்தி தேவ்வ டார்ச்சர் பண்ணி அடங்காம அடாவடித்தனமா நடந்து அவன் வாயாலயே தயவுசெய்து நீ கெளம்புனு சொல்ல வெக்கணும்னு நெனச்சேன். ஆனா இப்ப என்னென்னவோ நடந்துக்கிட்டிருக்கு. முதல்ல தேவ்வுக்கு மனைவியா நடிக்க வந்தேன். ஆனா இப்ப அவன் தாலியை என் கழுத்தில் சுமந்து நிஜமாவே அவன் மனைவியா மாறிட்டேன்.

இன்னைக்கு அவன் செஞ்சதுக்கு நான் எந்த எதிர்ப்பும் காட்டாம எப்படி இருந்தேன்? அந்தளவுக்கு என் மனசு செத்துப்போய் இருக்கு. அந்த சூழ்நிலையில் நான் எப்படி எதிர்க்கணும்னு கூட எனக்குத் தோணல. அப்போ இதுக்கப்புறம் நான் ப்ளான் பண்ண மாதிரி என்னால நடந்துக்க முடியாதா? ஐயோ... நெனச்சிப் பார்க்கவே பயமா இருக்கே! நான் எதிர்பார்த்தபடி எதுவமே என் வாழ்க்கையில் நடக்காதப்ப இது மட்டும் நான் நெனைக்கிற மாதிரியாவது நடக்குமா?


கடவுளே… போதும் ஏற்கனவே நான் நிறைய பட்டுட்டேன். இதையாவது நான் நெனச்ச மாதிரி நடத்திக் கொடுத்திடு. வேற ஏதாவது நடந்து நான் அசிங்கப் படற மாதிரி வெச்சிடாத’ என்று கண்ணில் நீர் கசிய கை கூப்பிக் கடவுளை வேண்டினாள் மித்ரா…..
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 20
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN