உன்னுள் என்னைக் காண்கிறேன் 21

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 21

மித்ரா நினைத்தது எல்லாம் எதிர்காலத்தில் தனக்கு எந்த அசிங்கமும் அவமானமும் இல்லாமல் தேவ் வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்பதே அவளுடைய வேண்டுதலாக இருந்தது. அன்று மாலை மித்ராவை தேடி வந்த தேவ் “உன் திங்ஸ்ச எல்லாம் பேக் பண்ணி வச்சிடு மித்ரா. அத பழனி என் ரூம்ல வச்சிடுவான். ஸோ பீ க்யூக்! இனி அது தான் உன் ரூம்” என்றான் கட்டளையாக.

“என்னது உங்க ரூமா? அப்ப நீங்க வேற ரூம் மாற போறீங்களா?”

“நான் ஏன் வேற ரூமுக்குப் போகப் போறன்? இனிமே நீ நான் ருத்ரா நாம மூன்று பேரும் ஓரே ரூம்ல தான் இருக்கப் போறோம்” என்றான் சகஜமான குரலில்.

“நான் அங்க எல்லாம் வர மாட்டன், இங்கையே இருந்துக்குறன்” என்று அவள் கத்த..

“நீ என்ன லூசா? படிச்சவ தான நீ? நமக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வெளி உலகத்திற்கு நீயும் நானும் கணவன் மனைவி! அதுவும் ருத்ராவோட அப்பா அம்மா! அத மனசுல வச்சிகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கப் பழகு மித்ரா!” என்று அவனும் பதிலுக்குக் கத்தினான்.

“அப்படி அவளுக்கு நான் என்ன செய்யாம விட்டுட்டன்? அவள என் மகளா தான் நான் பார்த்துக்கிறேன்” என்றாள் சூடாக.

“நான் இல்லனு சொன்னனா? ருத்ராவ உன் பொண்ணா நூறு மடங்கு நீ பார்த்துக்கற. இப்ப அது இல்ல பிரச்சனை. கொஞ்சம் யோசி மித்ரா, ஓரே வீட்டுல நாம ரெண்டு பேரும் பேசிக்காம முகம் திரும்பி நின்னா இப்ப சின்னப் பெண்ணா இருக்குற ருத்ரா நாளைக்கு வளர்ந்து என்ன ஏதுனு கேள்வி கேட்டு அதனால் நம்ம திருமண வாழ்வின் உண்மை அவளுக்கு தெரியணுமா?” என்றான் சற்றே இறங்கிய குரலில்.

“ஏன் தெரிஞ்சா என்ன? எப்படி இருந்தாலும் ஒரு நாள் தெரிய தானே போகுது. நாம இரண்டு பேரும் பிரிஞ்சி ருத்ராவ நான் கூட்டுட்டு போகும் போது அப்ப அவ தெரிஞ்சிக்கத்தானே போறா?” என்றாள் மித்ராவும் அமைதியாக.

‘உனக்கு இப்படி எல்லாம் பேசினா சரி வராதுடி. வேற மாதிரி பேசினா தான் சரி வரும்’ என்று நினைத்தவன் “ஏன் அப்படியே ருத்ரா நீ பெத்து எடுத்தப் பொண்ணு இல்லென்ற உண்மையையும் சொல்லிட வேண்டியது தான? உனக்கு அது தான் வேணும்னா செய்” என்று குத்த. “இல்ல இல்ல! அந்த உண்மைய மட்டும் சொல்ல வேண்டாம்” என்று மித்ரா பதற.. “நாம யாரும் சொல்ல வேண்டாம். நம்மளுடைய வாழ்க்கையைப் பார்த்து நாளைக்கு அவளே தெரிஞ்சிக்கப் போறா. வீண் வாதம் வேண்டாம், நாளைக்கு அந்த உண்மை ருத்ராவுக்குத் தெரிய வரக் கூடாதுனா நான் சொல்ற படி கேட்டு நட!” என்று அவள் பேச்சை கோபமாக இடை வெட்டியவன் அங்கிருந்து சென்று விட

மித்ரா தான் குழம்பிபோனாள். ‘எங்களுக்குள்ள ஒத்து வரல, அதனால உன் அப்பாவும் நானும் பிரிஞ்சிட்டோம்னு சொல்லி ருத்ராவ நான் கூட்டிட்டு போனா, நான் அவ அம்மா இல்ல என்ற உண்மை எப்படி அவளுக்குத் தெரியவரும்?’ இதையெல்லாம் சொன்னால் அதற்கும் கோபப்படுவான் என்று அறிந்தவள் வேறு வழியில்லாமல் அனைத்தையும் பேக் செய்ய ஆரம்பித்தாள் மித்ரா.

அவன் சொன்ன படியே அனைத்துப் பொருளும் மாலையே அவன் அறைக்கு மாறியது. பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த வேதா இன்றைக்கே நாள் நன்றாக இருப்பதாக ஐயர் சொன்னதாகவும் அதனால் இன்று இரவே அவர்கள் இரண்டு பேருக்கும் நடக்க வேண்டிய சடங்கை வைக்கப் போவதாகக் கூறி அவளை இரவு ரெடியாகச் சொல்லிச் சென்றார் அவர்.

‘இன்னைக்கு நைட் சடங்கா? என்ன சடங்கு?’ என்று யோசித்தவள் அவர் கூறியதின் அர்த்தம் புரிய உடல் விறைத்து நிமிர்ந்தாள். ‘ஓ… இத மனசுல வச்சிகிட்டு தான் அந்த கேடி ரூம மாத்தரேன் இப்படி அப்படினு ஏதேதோ கதை அளந்துச்சா? இதுல ருத்ராவுக்காகனு பொய் வேற! என்ன ஆனாலும் சரி, இந்த ரூம விட்டு இன்று நான் நகரப்போறது இல்ல!

அவனே வந்து என்னத் தூக்கிட்டுப் போய்டுவானா என்ன? அதையும் பார்த்திடுவோம். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டன். அந்தக் கேடி என்னத் தேடி இங்க வரட்டும், நல்லா நாலு வார்த்தையைக் கேட்டு வைக்கறன். திரும்ப என் பக்கமே திரும்பாத அளவுக்கு செய்றேன்’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டு அமர்ந்திருக்க நேரம் போனதே தவிர தேவ்வோ வேறு யாரும் வந்த பாடில்லை.

இவளும் சண்டைக்கு ஆயத்தமாகி கதவை கதவைப் பார்க்க ம்..ஊம்.. இதற்குள் அவளின் உள்ள கனலும் குமுறலும் சற்று குறைந்து இருக்க கோபத்துடனே இரவு உணவு அழைப்பிற்காக அமர்ந்திருந்தாள் மித்ரா.

அந்த நேரத்தில் “அம்மா” என்ற அழைப்புடன் அறைக் கதவைத் திறந்து கொண்டு கன்றுக் குட்டியாக அவளைத் தேடி வந்தார் அவள் தாத்தா. வந்தவர் கட்டிலில் அமர்ந்திருந்த அவளைக் கட்டி அணைத்து அவள் உச்சியில் ஆசையாய் முத்தமிட்டு “என் அம்மாடா நீ! நம்ம குலசாமிடா நீ! எனக்கு எவ்வளவு பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு தெரியுமா? நீ என் பேத்திடா! மாப்பிள என்னமா சொல்றார் தெரியுமா உன்னப் பத்தி?!

‘என்ன தான் நான் உங்கள காதலிச்சி இருந்தாலும் நீங்க தான் வேணும்னு வீட்டை விட்டு வந்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து இருந்தாலும் எங்க தாத்தாவுக்கு நம்ம விஷயம் தெரிந்து ஊர் அறிய நமக்கு திருமணம் நடந்தால் தான் சேர்ந்து வாழணும்னு நீ’ சொல்லிட்டியாமே?! அத எவ்வளவு பெறுமையா மாப்பிள சொன்னார்மா! இந்த விஷயத்தில உங்க பேத்தி நெருப்பு தாத்தா! இந்த வினாடி வரை அவ விரலக் கூட என்ன தொட விட்டது இல்லைனு சொன்னார்!

அதை கேட்டவள் ‘ஆமாமா! பின்னே என்கிட்ட வாங்கின கொட்டுக்கு தெறிச்சி ஓடினவன் தான! அப்படி தான் சொல்வான்! அந்த பயம் இருக்கட்டும் பையனுக்கு!’ என்று மித்ரா அவனுக்கு கவுண்டர் கொடுக்க.

“ஊர் அறிய திருமணம் முடிஞ்சி இன்று உங்க இரண்டு பேருக்கும் சடங்கு வைக்கப் போகறதா அவங்க சித்தி வந்து சொல்லவும் எனக்கு ஒண்ணுமே புரியல... அவங்க கிட்ட எதையும் கேட்க முடியல. அதான் மாப்பிள இப்ப வந்த பிறகு அவர் கிட்ட கேட்டா, அப்ப தான் இன்னும் வாழ்க்கையே ஆரம்பிக்கைலனு இதை எல்லாம் சொன்னார், அதுவும் பெருமையா!

இன்னைக்கு என்ன நாள் தெரியுமாடா? உன் பாட்டிக்கும் எனக்கும் திருமணம் நடந்த நாள்! அவ இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பா தெரியுமா? இன்று தான் நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறிங்கனு சொன்ன உடனே என் வாசுகியே உனக்கு மகளா வந்து பிறக்கப் போறானு நான் முடிவே பண்ணிட்டேன்! என் கடைசி ஆசையும் இது தான் ! உனக்கு ஒரு குழந்தை பிறந்து அதையும் நான் என் கையால தூக்கிட்டா அதுவே போதும்! அதுகுள்ள எனக்கு எதுவும் ஆகிட கூடாது!” என்றார் அவளை அணைத்த படி உணர்ச்சிப் பிழம்பாக.

மித்ரா அவர் கூறிய எதற்குமே வாய் திறக்கவில்லை. ஆனால் அவர் கூறிய இறுதி ஆசைக்கு மட்டும் “நிச்சயம் நடக்கும் தாத்தா! என் குழந்தையை உங்க கையால தூக்க தான் போறீங்க!” என்று பொய்யாக அவரை சமாதானப் படுத்தினாலும் உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு தான் இருந்தாள்.

‘மறுபடியும் நீ ஜெயிச்சிட்ட இல்ல? நான் வரலனா நீ என்னத் தூக்கிட்டாப் போக முடியும்னு நான் நினைச்சதுக்கு நான் உன்னத் தூக்கிட்டுப் போக வேண்டியதே இல்ல, நீயாவே என் ரூமுக்கு வருவனு சொல்லாமலே செய்து காட்டிட்ட இல்ல? எங்க யார வச்சி எப்படி அடிச்சா நான் சரிப்பட்டு வருவேனு ஒவ்வொரு தடவையும் செயல்ல செய்து காட்ற இல்ல? இப்ப நான் என்ன செய்ய? எதை சொல்லி நான் மறுக்க?’ என்று பலவாறு யோசித்தாள் மித்ரா.

இந்த வீட்டை விட்டுத் திரும்ப வேற எங்கையும் போக முடியாது. உடம்பு சரியில்லனும் சொல்ல முடியாது. எல்லாரையும் எதிர்த்து கிட்டு இந்த ரூம விட்டு வரமாட்டனு சொன்னா தாத்தா நிச்சயம் பெரிய பிரச்சனை பண்ணுவாரு. அன்னைக்குத் திருமணம் முடிச்சி நான் நடந்து கிட்டதப் பார்த்து கோபத்தில் பேசாம போனவர் தான்! அதோட இப்ப தான் வந்து பேசறார். அதனால அதையும் செய்ய முடியாது. வேற என்ன செய்யலாம்?’ என்று அவள் யோசிக்கும் போது தேவ் சாப்பிட அழைப்பதாக வள்ளி வந்து கூப்பிட.

வேறு வழியில்லாமல் தாத்தாவுடன் கிளம்பிச் சென்றாள் மித்ரா. இரவு உணவு எந்த சத்தமும் இன்றி மிக அமைதியாகச் சென்றது. ஆனால் மித்ராவுக்கு தான் தேவ் தன்னைப் பார்த்து கேலி செய்து சிரிப்பதாகவே பட்டது. ‘உன்னை வென்று விட்டேன் பார்!’ என்று சொல்வதாகவே பட்டது. அது உண்மையே! தேவ் அவ்வப்போது அவள் முகத்தைப் பார்த்தான் தான்!

ஆனால் அதில் கேலியோ கிண்டலோ இல்லை. முழுக்க முழுக்க ஆராச்சிப் பார்வை! இன்றைய சடங்கை அவள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்பது தான் அது! ‘இந்த திருமணத்தைத் தான் அவள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை! ஆனால் என்னை அவள் கணவன் என்ற பந்தத்தில் வைத்ததால் தான் காலை பூ உதிர்ந்ததுக்கு அப்படி அழுதாள்!

அதே போல் மனைவிக்கு என்று இருக்கும் கடமையும் அவளுக்குத் தெரிந்து தான் இருக்கும். அதனால் எந்தப் பிரச்சனையும் தொந்தரவும் செய்யாமல் வெளி உலகத்திற்கு நடிக்கவாவது அவள் இந்த சடங்குக்கு ஒத்துக் கொள்வாள்’ என்று நினைத்து அவ்வப்போது அவள் முகத்தை பார்த்தான் தேவ்.

இன்றே தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்திட வேண்டும் என்பது தேவ்வின் எண்ணம் இல்லை! இனி இது தான் வாழ்க்கை என்பதை அவள் மனதில் பதிய வைக்கத் தான் இந்த சடங்கு. அதை அவள் புரிந்து கொள்வாளா இல்லை கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளா?’ என்ற கேள்வி

உணவு முடிந்து தன் அறைக்கு மித்ராவை அழைத்துச் சென்ற வேதா அங்கிருந்த அவள் வயதை ஒட்டிய இரண்டு பெண்களிடம் அலங்காரம் பண்ணச் சொல்ல இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்று நினைத்தவள் “நான் என் ரூம்ல குளிச்சிட்டு புடவை கட்டிட்டு வர்றேன். அதுக்கு அப்பறமா வேணா நீங்க தலை சீவி மத்த அலாங்கரத்தைப் பண்ணி விடுங்க” என்று வேதாவிடம் சொல்ல அவர் அனுமதித்ததும் விட்டால் போதும் என்ற மனநிலையுடன் அவள் அறைக்கு ஓடினாள் மித்ரா.

அங்கு சென்று பார்த்ததில் தன் உடைமைகள் அங்கு காணாமல் ‘அச்சோ எல்லாம் தேவ் அறைக்குப் போய்டுச்சே!’ என்று நொந்தவள் தன் தலையிலே கொட்டிக் கொண்டு அவன் அங்கு இருக்கிறானா இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் அவன் அறைக்கு ஓடியவள் அவசரமாகக் கதவைத் திறந்து தன் கண்கள் சுழல அவனைத் தேடியவள் அவன் அங்கு இல்லை என்பதைத் அறிந்து ‘அப்பாடா’ என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.

கதவை சாத்தியவள் அவன் வேறு எங்காது இருக்கிறானா என்று தேடிப் பார்த்தவள் அவன் இல்லை என்று உறுதியானதும், தான் பேக் பண்ணி அனுப்பிய துணிகள் நிறைந்த பையைத் தேடி எடுத்து திறந்து உள்ளே தேட. தேடியதில் அவள் கைக்கு கிடைத்தது சிறு கத்தியும் ஸ்வெட்டர் பின்ன உதவும் சற்று தடித்த க்ரோஷா ஊசியும் தான். ‘அவன் மட்டும் என்னை வரம்பு மீறி நெருங்கட்டும்! இதை வைத்து உடம்பை சல்லடையா ஓட்டை போட்டுட வேண்டியது தான்!’ என்று நினைத்தவள் பின் “ஐயோ, அதுவும் முடியாதே!” என்று வாய் விட்டு அலறினாள்.

‘இதால குத்தினால் நிச்சயம் உயிர் போகாது! ஆனால் உடல் எங்கும் ஓட்டை போட்டு காலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பானே! இப்ப கண்ணே மணியேனு கொஞ்சர தாத்தா நாளைக்கு அவனைப் பார்த்துட்டு முதல் ஆளா போலீசைக் கூப்பிட்டு என்ன மாமியார் வீட்டுக்கு இல்ல அனுப்பி வைப்பாரு! இவன் பிழைத்தாலும் பிழைச்சிப்பான்! ஆனா நான் இல்ல ஜெயில்ல களி சோறு திண்ணனும்?’ என்று குழம்பியவள் பின் மறுபடியும் பையில் தேட ஸ்பிரே நாசிலுடன் கூடிய குளோராஃபார்ம் பாட்டில் கிடைத்தது.

‘இன்னைக்கு ஒரு நாள் இதை வெச்சி சமாளிப்போம். கிட்ட நெருங்கும் போது இத அவன் மூக்குல வெச்சிட்டா மயங்கி நல்லா தூங்கிடுவான். காலையில் எதுவும் நடக்காத மாதிரி எழுந்திரிச்சிப்பான். அதன் பிறகு எப்படியாவது அடம் பிடித்து வேறு தனி ரூம் வாங்கிட்டுப் போய்ட வேண்டியது தான்’ என்று நினைத்தவள் தன் துப்பட்டாவால் மூக்கை மூடி கைக்குட்டையில் அதை ஸ்ப்ரே செய்து அதை ஒரு இடத்தில் மறைத்து வைத்தவள் வேதாவிடம் சொன்னது மாதிரியே குளித்து வெள்ளை நிற புடவையைக் கட்டியவள் மறக்காமல் அந்த கைக்குட்டையையும் எடுத்துச் சென்றாள். இவ்வளவு நேரமும் தேவ் அவன் அலுவலக அறையில் இருந்ததால் அவன் அங்கு வராமல் போனது மித்ராவின் நல்ல நேரமாகிப் போனது.

பின் அவள் வேதாவின் அறைக்கு வர அவளுக்குத் தலை சீவி பூ வைத்துச் சிறிய ஒப்பனை மட்டும் செய்து விட்டனர்.

அனைத்தும் முடிந்து அவளை தேவ் அறைக்கு அழைத்துச் செல்ல அவ்வளவு நேரம் மித்ராவுக்குள் இருந்த துணிச்சலும் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளளாம் என்றிருந்த அசட்டுத் தைரியமும் இருந்த இடம் தெரியாமல் போக உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது. என்ன தான் கையில் பாதுகாப்புக்கு என்று பொருட்கள் இருந்தாலும் தனியே இருக்கும் ஆணிடம் எப்படி சமாளிக்க முடியும் என்று கலங்கியவள் ‘எதற்கும் கொஞ்சம் மிளகாய் பொடியை எடுத்து வந்து இருக்கலாமோ?’ என்று நினைத்தவள் ‘இப்ப அதற்கும் வழி இல்லையே! இப்படி கூடவே இருந்தா எப்படி இப்பப் போய் எடுக்க முடியும்?’ என்று யோசித்து நொந்து முடிக்கும் நேரம் அவன் அறை வந்து விட ஆயிரம் உதறல்கள் உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் மறைத்து நீயா நானா பார்த்து விடுவோம் என்ற முடிவுடன் காட்டுப் புலியாக உள்ளே சென்றாள் மித்ரா.

இவள் போருக்குத் தயாராகி உள்ளே போனால், அங்கு தேவ்வும் இல்லை சடங்கு நடக்க இருப்பதற்கு அறிகுறியாக கட்டிலில் எந்த அலங்காரமும் இல்லை! ‘என்னடா இது ஏதோ சொன்னாங்க! நாம தான் ஒருவேளை தப்பா புரிஞ்சிக்கிட்டோமோ? அப்ப இந்த அலங்காரம் எத…..’ என்று அவள் யோசிக்கையில் “மித்ரா நான் இங்க இருக்கன், இங்க வா” என்று பால்கனியில் இருந்து அவளை அழைத்தான் தேவ். ‘குரல் மட்டும் வருது, ஆனா ஆள் இருக்குற இடம் தெரியலையே?’ என்ற குழப்பத்தில் மித்ரா அங்கேயே நிற்க அதை பார்த்தவன் கையில் லேப்டாப்புடன் அங்கிருந்து ரூம் ஸோஃபாவில் வந்து அமர்ந்தான்.

பட்டு வேட்டி சட்டையில் இருந்தவன் எதிரில் இருந்த ஸோஃபாவைக் காட்டி “வா மித்ரா, இங்க உட்கார். நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். அப்போதும் அவள் அங்கேயே நிற்க “உன்ன தான் சொல்றேன் இங்க வந்து உட்காரு” என்று குரலை உயர்த்த. அதற்குக் கட்டுப்பட்டு. அமர்ந்தவள் ஏதோ சொல்ல வர “பார் மித்ரா, இந்த சடங்கு சம்பிரதாயத்தில் எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல. உன் தாத்தாவுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் தான் இது. ஸோ பீ நார்மல். நீ நீயா இரு நான் நானா இருக்கேன்.

அதெல்லாம் இந்த ரூமுக்குள்ள மட்டும் தான். வெளில நாம எல்லாரையும் மாதிரி கணவன் மனைவி. அதுக்காக கொஞ்சிப் பேச சொல்லல, சாதாரணமா நடந்துக்கிட்டா போதும். அதே மாதிரி நீ என் மனைவி இந்த வீட்டு மருமகள். அதனால யார்கிட்டனா பேசும் போது அத மனசுல வச்சிட்டுப் பார்த்துப் பேசு” என்று இதை எல்லாம் அவள் முகம் பார்த்துப் சொன்னவன் “சரி நீ போய் தூங்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறி அவன் லேப்டாப்பில் முழ்கிவிட.

‘அப்பாடா… எப்படியோ அவன் என்கிட்ட இருந்து எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சிட்டான்’ என்று நிம்மதி அடைந்தவள் விட்டா போதும் என்ற மனநிலையில் தூங்குவதற்கான இடத்தை கண்களால் தேட.

அவள் இன்னும் அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன் “என்ன மித்ரா தூக்கம் வரலையா?”

“இ… இல்.. இல்ல! தூங்க சொன்னிங்க, ஆனா எந்த ரூமுனு சொல்லலியே?” என்று அவள் திக்கித் திணறி இழுக்க “வேற ரூம் எல்லாம் இல்ல. இனி இது தான் உன் ரூம். நான் முன்பே சொல்லிட்டேன் இல்ல? நீ என் மனைவி மட்டும் இல்ல ருத்ராவுக்குத் தாய்னு. இன்னைக்கு ஓர் நாள் தான் குட்டிமா நித்திலா ரூம்ல இருப்பா. நாளையிலிருந்து அவ நம்ம கூட நம்ம ரூம்ல தான் இருப்பா.

குழந்தை எதிர்க்க எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியும். ஸோ எந்த சண்டை சச்சரவும் இல்லாம நீ பார்த்துக்கோ. வேணும்னா இன்னைக்கு ஓர் நாள் நீ கட்டில்ல படு. நான் ஸோஃபாவில் படுத்துக்கறன். அதுவும் இன்னைக்கு மட்டும் தான். நாளையில் இருந்து நானும் கட்டில்ல தான் படுத்துப்பன்” என்று கட்டளை இடும் குரலில் கூற. அப்போதும் அவள் தயங்க ‘என்ன?’ என்று அவள் முகம் பார்க்க “இப்போ தான் ருத்ரா இங்கு இல்லையே?”

“அதனால் தான் நான் ஸோஃபாவில் படுத்துக்கிறேன்னு சொன்னேன்” என்று தேவ் முடித்து விட.

‘இவனுக்கு எந்த தங்கு தடையும் இல்லாமல் வார்த்தை வருது. நான் தான் மூச்சுக் கூட விட முடியாம திணற்றேன்’ என்று சலித்தவள் இதுக்கு மேலையும் உட்கார்ந்து இருந்தா இருக்குற சுமூகமான உறவும் போய் கர்சீஃப்புக்கு வேலை கொடுக்க வேண்டியதா ஆகிடும்’ என்று நினைத்தவள் எழுந்து படுக்கப் போகாமல் அவள் பையைத் திறந்து எதையோ தேட. “அங்க என்னடி செய்துட்டு இருக்க?” என்று தேவ் அதட்ட திடீர் என்று அவன் குரல் கேட்டதில் உடல் தூக்கிப் போட கைகள் நடுங்க பேந்த பேந்த முழித்தாள் மித்ரா.

அவள் அப்படி நிற்பதைப் பார்த்தவன் எழுந்து சென்று அவள் கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமரத்தி இடது கையால் அவள் தோளைச் சுற்றி அவளைத் தன் மார்பில் சாய்த்தவன் வலது கையால் அவள் தலை முடியை வருடி “ரொம்ப பயந்துட்டியாடி?” என்று மென்மையாகக் கேட்கத் தன் முகத்தை நிமிர்த்தாமல் அவன் நெஞ்சிலேயே பதித்தவள் வாய் திறந்து பதில் சொல்லாமல் “ம்ம்ம்ம்…” என்று தலை அசைத்து அவன் நெஞ்சின் மேல் உள்ள பட்டு சட்டையில் தன் முகத்தை தேய்த்தாள் மித்ரா.

அவளை அணைத்திருந்த கையே அவள் உடலின் நடுக்கத்தை அவனுக்கு உணர்த்த இன்னும் சற்று நெருங்கித் தன் நெஞ்சோடு அவளை அணைத்தவன் “என்னடி உனக்கு பயம்? நான் உன் புருஷன்! உன் விருப்பம் இல்லாம இங்கு எதுவுமே நடக்காது. இந்தக் கல்யாணத்தப் பொய்யா நினைச்சா தான் உனக்கு என் மேல பயமும் ஒதுக்கமும் வரும்.

இந்தக் கல்யாணத்த ஆயுசுக்குமான பந்தமா நினைச்சி என்ன நீ விரும்பிக் கட்டிக்கிட்டவனா நினைச்சிக்க! பிறகு இந்த பயம் ஒதுக்கம் எல்லாம் உன்ன விட்டுப் போய்டும்” என்று உள்ளம் உருகும் குரலில் எடுத்துச் சொல்லி சிறிது நேரம் அணைத்திருக்க அவள் உடலில் இருந்த நடுக்கம் குறைந்து அவள் நெளிய ஆரம்பிக்கவும் அவளை விலக்கி அமர்ந்து “ஆர் யூ ஆல்ரைட் மித்ரா?” என்று கேட்க அவள் “ம்ம்ம்..” என்று தலையசைத்தாள்.

எழுந்து சென்று ஃபிரிஜ்ஜைத் திறந்து மிதமான கூலிங்கில் இருந்த தண்ணீரை ஊற்றி அவளிடம் நீட்ட அதை வாங்கிக் குடித்தவள் திரும்பவும் அவள் பையில் எதையோ தேட “என்ன மித்ரா மறுபடியும் தேடர?” என்று இப்போது மென்மையாகக் கேட்க “சுடிதார் மாத்திட்டு படுக்கலாம்னு..” என்று அவள் இழுக்க. “ம்ம்ம்… முதல்ல இந்த சுடிதார் கண்டு பிடிச்சவனை உதைக்கணும்” என்று முனுமுனுத்துக் கொண்டே தேவ் விலகி விட ‘அவன் இப்போ என்ன சொன்னான்? தெளிவா புரியலையே!’ என்று நினைத்துக் கொண்டே சுடிதாருடன் டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்தாள் மித்ரா.

‘ஐயோ அவன் எதிர்ல தைரியமா இருக்கணும்னு நினைச்சனே! கடைசியில் இப்படி பயந்து நடுங்க வேண்டியதா போச்சே! ச்சே… அவன் என்னப் பத்தி என்
நினைப்பான்? சரியா பயந்தாங்கொள்ளினு இல்ல நினைச்சி இருப்பான்?’ என்று கூறி தன் நெற்றியிலேயே அடித்துக் கொண்டவள் அவசரமாக சுடிதாருக்கு மாறி மறக்காமல் கைக்குட்டையைத் தன் கையோடு எடுத்து வந்து அவன் முகம் பார்க்காமல் கட்டிலில் படுத்துப் போர்வையால் முகம் வரை போர்த்திக் கொண்டு தூங்கினாள் மித்ரா.

என்ன தான் அவன் சொன்னதைக் கேட்டு தைரியமாகப் படுத்தாலும் இடை இடையே முழிப்பு கலைந்து அவன் எங்கு இருக்கிறான் என்று பார்த்ததில் காலையில் இவள் சற்று தாமதமாக எழுந்து தேவ்வைப் பார்க்க அவளுக்கு முன்பே எழுந்து இருந்தான் தேவ். இவள் எழுந்து அவசரமாகக் குளித்துக் கீழே வர அந்த நேரம் வேதாவின் கைப்பேசியில் அழைத்தான் விஷ்வா.

அவளிடம் கொடுக்கச் சொல்ல சில நல விசாரிப்புக்குப் பிறகு அன்று மாலை தேவ் ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து தேவ்வுக்கும் மித்ராவுக்கும் ஒரு பார்ட்டி கொடுக்க இருப்பதை நினைவு படுத்தி அழைக்க “சரி வருகிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள் மித்ரா.

இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே நண்பர்கள் எல்லாம் முடிவு பண்ணி அவளிடம் சொன்ன விஷயம் தான். அப்போது போகக் கூடாது என்ற முடிவில் இருந்தவள், நேற்று தேவ் எந்தப் பிரச்சனையும் பண்ணாமல் அவள் விருப்பத்துக்கு விட்டு ஒதுங்கி இருந்ததால் இன்று போகலாம் என்ற முடிவை எடுத்தாள் மித்ரா.

மாலை ஏழு மணிக்கு பார்ட்டி என்றும் திரும்பி வர இரவு சற்றுத் தாமதமாகும் என்பதால் ருத்ராவை விட்டு விட்டு இவர்கள் இருவர் மட்டும் சென்றனர். அழகான பிங்க் நிறத்தில் மணி வேலைப்பாடுகளுடன் கூடிய பேப்பர் சில்க் சாரியில் தேவதையாக அவனுடன் சென்றாள் மித்ரா. அங்கு போனதில் இருவருக்கும் பொக்கே கொடுத்து வரவேற்று இருவர் கையிலும் ஒவ்வொரு பிளாட்டினம் ரிங்கைக் கொடுத்துப் போடச் சொன்னார்கள்.

எந்த தடங்கலும் இல்லாமல் இயல்பாகத் தன் விரலை நீட்டினாள் மித்ரா. அதே போல் அவன் விரலுக்கும் இயல்பாகவே மோதிரம் போட்டாள். பின் கேக் வெட்டி இருவரையும் ஊட்டி விடச் சொல்ல அதுவும் நடந்தது. அங்கு இருந்தவர்களும் இவர்களுக்கு பார்ட்டி கொடுத்தவர்களும் இளம் வயது தம்பதிகள் என்பதால் ஆட்டம் பாட்டம் கேலி கிண்டல் சிரிப்பு என்று களைகட்டியது பார்ட்டி.

அங்கு வந்தவர்களுக்கு சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் வைக்க அதில் நிச்சயம் மித்ராவும் தேவ்வும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர். வேண்டாம் என்று மறுத்து ஒரு இடத்தில் அமர்ந்து மற்ற தம்பதிகளின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்குள் கொடுத்துக் கொண்ட முத்தப் பறிமாற்றங்களையும் தோற்றால் சினுங்கலோடு கட்டி அணைத்து அடித்துக் கொண்ட அடிகளையும் அதற்கு மற்றவர்கள் செய்த ‘ஓ…..’ என்ற கேலியிலும் தன்னிலை மறந்து சிரித்துப் பேசி அவர்களுடன் ஒன்றினாள் மித்ரா. அப்படி விளையாடிய தம்பதிகளில் மனைவி ஒருத்தி தன் கணவன் தன்னை அவர் முதுகில் அமரவைத்து தண்டால் எடுக்க வேண்டும் என்று தன் ஆசையைக் கூற அதற்கு அவர் முதலில் சற்றுத் தயங்கினாலும் பின் தன் மனைவியின் ஆசை என்ற எண்ணத்தில் அவரும் ஒத்துக்கொண்டார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் ஆரம்பமானது. ஏனெனில் அவர் மனைவி சற்று பருமனாவர். கணவர் முதுகில் அவர் சம்மனமிட்டு அமர்ந்து கொள்ள, அவரும் தண்டால் எடுக்க சுற்றியிருந்த அனைவரும் கை தட்டி உற்சாகப் படுத்த அவரும் ஏதோ பெயருக்கு என்று செய்யாமல் தன் மனைவியின் ஆசைக்காக இருபத்தி ஐந்து என்று எண்ணிக்கையில் செய்ய அதைப் பார்த்த மித்ரா மற்றவர்களுடன் சேர்ந்து கை தட்டி “ஏ….ஏ…. ஏ….. ஏ….” என்று கூறி அவரை உற்சாகப் படுத்தினாள். தன்னைச் சுற்றி இவ்வளவு நடக்க அதை எதையும் பார்க்காமல் மித்ராவை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.

தன் கணவன் தன் ஆசைக்காக இருபத்தி ஐந்து எண்ணிக்கைக்கு மேல் போக தன் சந்தோஷத்தைக் கண்ணீரால் வெளிப்படுத்தினாள் அவன் மனைவி. அதைப் பார்த்த மித்ராவும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைத்தவள் சுற்றி இருந்தவர்களை மறந்து தன் நாக்கை மடித்து வலது கையின் இரண்டு விரல்களையும் நாக்கின் கீழே கொடுத்து உதடு குவித்து ‘உய்ய்’ என்று நீண்ட விசில் சத்தத்தைக் கொடுக்க.

அவள் கொடுத்த சத்தத்தில் அந்த அரங்கமே அமைதியாகி விட மெல்லிய இசை மட்டுமே அங்கு கேட்டுக் கொண்டிருந்தது. அனைவரும் அவளையே பார்க்க அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள் மித்ரா. ‘அச்சோ… தேவ் இப்போ திட்டுவானோ?’ என்று அவள் அவன் முகம் பார்க்க அவனோ உதட்டில் சிரிப்பு தவழ குறும்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திட்டுவான் என்று நினைத்தவள் அவன் சிரிக்கவும் வெட்கப்பட்டு அவனிடம் ஓடி அவன் பின் புறம் நின்று தன் இரண்டு கையால் தேவ்வின் இடுப்பில் இரு பக்கமும் அவன் போட்டிருந்த கோட்டை இருக்கப் பிடித்து அவன் முதுகில் தன் முகம் பதித்தாள் மித்ரா.

குழந்தைகள் சில குறும்புகளைச் செய்து விட்டு பின் வெட்கப் பட்டு முகம் மறைப்பது போல் தன் மனைவி தன் தோளில் முகம் மறைத்ததில் உற்சாகம் அடைந்த தேவ் கோட்டைப் பிடித்திருந்த அவள் இடது கையைப் பிடித்து அவளை முன்புறம் இழுத்து நெஞ்சில் சாய்த்து இறுக்க அணைத்தவன் பின் அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் இதழ் பதித்து சற்று சத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுக்க சுற்றி இருந்த நண்பர்கள் அனைவரும் “ஓ…..” என்று கூச்சல் இட அதில் இன்னும் வெட்கப் பட்டு விலக நினைத்தவளை விலக முடியாமல் இன்னும் இறுக்கமாகத் தன்னுடன் அணைத்துக் கொண்டான் தேவ்.

அவள் சகஜ நிலைக்கு வந்து விட்டாள் என்பதை அறிந்த அவன் நண்பர்கள் அவளிடம் மைக்கைக் கொடுத்து தேவ்வைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லச் சொல்ல அதை வாங்கியவள் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி தேவ்விடம் மைக்கைக் கொடுத்தாள்.

அதை வாங்கியவனோ “அவளை ஏன்டா வம்பு பண்ணுறீங்க? அவ சொல்லலனா என்ன? நான் சொல்றேன் என் மனைவியைப் பற்றி” என்றவன் அவள் தன் வாழ்வில் வந்து தன்னுள் எப்படி நிறைந்தாள் என்பதை கவிதையாகச் சொல்ல ஆரம்பித்தான். அவளோ அவனை விட்டு விலகி நிற்க நினைக்க. அதை அறிந்தவனோ அவள் விலக முடியாத படி அவள் தோளில் கை போட்டுத் தடுக்க வேறு வழியில்லாமல் அவனுடனே ஒட்டித் தலை குனிந்து நின்றாள் மித்ரா.

நரகத்தில்
உழன்றிருந்தேன் நான்
அவளைக் கண்ட போது....
எமனின் வாசற்படியில்
வீற்றிருந்தாள் அவளும்...
அவளையும் உயிர்ப்பித்து
என்னையும் உயிர்ப்பித்தாள்
அவளின் செயலால்
என் மகளின் மீது கொண்ட
தன்னலமற்ற அன்பால்.....
என் உயிர் பிரிவதன்
வலி உணர்ந்தேன்
அவளை காணாத போது....
அக்கணமே அவளின்
மீதான என் காதலையும் உணர்ந்தேன்.....
இன்பநதி பிரவாகமாய்
என்னுள் பாய்ந்தோடக் கண்டேன்
அவளருகினில் இருக்கையிலே....
என் சுவர்க்க வாசலாய்
உணர்ந்தேன் அவளை
அவளின் மீதான என் காதலை....
தாயின் பாசத்திற்காய்
ஏங்கும் பிள்ளைப் போல்
ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தேன்
அவளின் காதலுக்காகவும்
அவளின் ஆசை வார்த்தைக்காகவும்..
மீண்டும் எனைத்
தள்ளினாள் நரக குழிக்குள்
அவளின் விருப்பமின்மையைக் காட்டி....
என்றும் என் வாழ்வில்
விடியலில்லையோ
என்று கதறினேன் கடவுளிடம்...
ஏன் இல்லை
அவளே உன் விடியலென
தந்தான் அவளை
என்னவளாக
என் மனையாளாக....
இருண்டிருந்த என் வானத்தின்
விண்மீன் அவள்.....
இருள் படர்ந்த என் வாழ்வின்
கதிரொலி அவள்....
என் உடல் ஆவி
அனைத்தும் அவள்.....
பனி மழையென
மென் சாராலாய்
என் காதல்
அவளுள் ஊடுருவி
அவள் வாழ்வின்
துயரம் மறந்து
இன்பம் மட்டுமே உணர்ந்து..
என்னுள் அவளாய்
அவளுள் நானாய்
எங்கள் காதலைக்கண்டு
காதலே வெட்குமளவு
வாழ்வோம் நாங்கள்...

தலை குனிந்து நின்றவள் அவள் மேல் உள்ள காதலை அவன் கவிதையாய் சொல்லச் சொல்ல கண்ணில் வலியுடன் தலை நிமிர்ந்து அவன் முகம் பார்க்க.. இதுவரை அவள் முகம் பார்த்துச் சொன்னவன் இப்போது அவள் கண்களைப் பார்த்துச் சொல்ல ‘இது உண்மையா? இந்த அளவுக்கா என் மேல் காதல்?!’ என்று குழம்பியவள் ‘நிச்சயம் இருக்காது! இது இவர்களுக்காக சொன்ன பொய்யான வார்த்தைகள் என்று தெளிந்தாள்.

‘அப்படியே இது உண்மைனாலும் இவன் காதலுக்கு நான் தகுதியானவள் இல்லை!’ என்பதை உறுதியுடன் மனதாலே மறுத்தாள் மித்ரா. என்ன தான் அவன் நண்பர்களுக்காகப் பொய்யான காதல் கவிதை சொன்னாலும் அதை இவள் நம்பவில்லை என்றாலும் அவளையும் மீறி அவள் கண்கள் கலங்கி கண்ணீரை சுரந்தது! அது ஏன் என்று அவளால் அறியவோ உணரவோ முடியவில்லை.

ஆனால் அந்தக் கண்ணீரைப் பார்த்தவனோ முன்பு அவள் மனதில் ஏற்படுத்திய வலியையும் இப்போது அவளையும் மீறி அவள் அடி மனதில் அவன் மேல் ஏற்பட்டுள்ள காதல் இந்த கண்ணீர் என்று நினைத்தான் தேவ். அந்தக் கவிதை கேட்டுச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் “ஆகா…. ஓகோ….” என்று பாராட்ட அதை உணர வேண்டியவளோ உணராமல் கண்ணீரை மட்டும் சிந்திக் கொண்டிருந்தாள். தேவ் அவளை நெருங்கி “எல்லோரும் நம்மள தான் பார்த்துட்டு இருக்காங்க மித்ரா! ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செஃல்ப்...” என்று அவள் காதில் கிசுகிசுக்க தான் இருக்குமிடம் அறிந்து தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டாள் மித்ரா.

முன்பு தன் வாழ்வில் நடந்த கசப்பான விஷயத்தால் இனி தன் வாழ்வில் காதலே இல்லை என்ற உறுதியில் உடல் இறுக நின்றிருந்தாள் மித்ரா.

தேவ் கவிதை எல்லாம் சொல்லவே அவனை சூழ்ந்து கொண்ட நண்பர்கள் கேமுக்குக் கூப்பிட அவனும் மித்ராவின் மனதை மாற்ற ஒத்துக் கொண்டான். ஆனால் அதன் விதிமுறையைக் கேட்ட மித்ரா வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள். தரையில் அங்கங்கே பல வட்டங்கள் இட்டு அதில் ஒரு சில வட்டத்திற்குள் மட்டும் பூ கலர்பொடி பலூன் என்று நிரப்பி இருக்க ஒரு சில வட்டங்களோ காலியாக இருக்கும். இது எதுவும் தேவ்வுக்குத் தெரியாமல் இருக்க தேவ்வின் கண்ணைக் கட்டி விட அவன் அவள் மனைவியைக் கையில் தூக்கிக் கொள்ள அவள் பார்த்து அவனுக்குக் காதில் வழி சொல்ல அவன் அந்த காலியான வட்டங்களில் கால் வைத்து நடந்து இந்த கோடியில் இருந்து அடுத்த கோடிக்குப் போக வேண்டும். இது தான் கேம். அவன் தன்னைத் தூக்க வேண்டி வரும் என்பதால் தான் மித்ரா மறுத்தாள். வேறு வழியில்லாமல் அவன் நாலு பேர் எதிர்க்க அசிங்கப் படக் கூடாதுனு தான் அவனிடம் சிரிச்சிப் பேசவும் அவன் தன்னை தொட்டு அணைச்சி நிற்கவும் சம்மதித்தது. ஆனால் ஒரு குழந்தைபோல் அவன் தன்னை தூக்குவது கொஞ்சம் அதிகப்படியாக தோன்ற “வேண்டாம், இப்படி வேண்டாம்” என்று அவள் மறுக்க அவளை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்த தேவ் “இங்க பார் மித்ரா! நான் முன்பே சொன்னது தான். என்ன உன் ஃபிரண்டா நினைச்சிக்கோ. அதே மாதிரி இதுல யோசிக்கற அளவுக்குப் பெரிசா ஒண்ணும் இல்ல. சும்மா ஓர் கேம்தான். நமக்காகத் தான் இந்த பார்ட்டியே. நீ இப்படி ஒதுங்கி நின்னா அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? சோ எனக்காக இல்லனாலும் அவங்களுக்காக வா மித்ரா! ப்ளீஸ்...” என்றழைக்க.

அப்போதும் அவள் அமைதியாக அமர்ந்திருக்க சுற்றி இருந்தவர்கள் அனைவரும் “வாங்க சிஸ், வாங்க மேடம், வாங்கபா” என்று ஆளாளுக்கு அழைக்கத் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் அழைக்கும் போது நாம் இப்படி பிடிவாதம் பிடிப்பது நல்லது இல்ல என்று தோன்ற அரை மனதாக ஒத்துக் கொண்டாள் மித்ரா.

இருவரும் முன்னே நினைத்தது என்னமோ சாதாரணமாகத் தான். ஆனால் விளையாடும் போது அப்படி இல்லை. அவளின் முதுகில் ஒரு கையும் கால் முட்டியிடம் இன்னோர் கையையும் கொடுத்து கண்ணைக் கட்டிக்கொண்டு தேவ் அவளைத் தூக்கிக்கொள்ள, அவன் கழுத்தில் மாலையாக இரண்டு கைகளையும் கோர்த்துக் கட்டியவள் அவனுக்கு வழி சொன்னாள்.

நின்ற படி தரையில் இருப்பதைப் பார்ப்பது வேறு. ஆனால் மேல் நோக்கி ஒருவர் தூக்கி இருக்க அவர்கள் காலின் கீழே இருப்பதைப் பார்ப்பது என்பது வேறு. தேவ்வின் கழுத்திலிருந்து ஓர் கையை விலக்கி சற்று கீழே எக்கி எதுவும் இல்லாத வட்டங்களைப் பார்த்து பின் மறுபடியும் அவன் கழுத்தில் கை கோர்த்து அவன் காதில் அதை ரகசியமாய் சொல்வதற்குள் மித்ராவின் பாடுதான் திண்டாட்டமாய் போனது. இவளே இப்படி என்றால் தேவ்வின் நிலைமையோ படு மோசம்.

அவள் ஒவ்வொரு முறையும் குனிந்து பார்க்கும் போது அவள் கீழே விழாமல் இருக்க அவள் தோள்களை அழுத்திப் பற்றுவதும் பின் தளர்த்துவதும் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் நடப்பதும் மிகவும் சிரமம். அதிலும் ஒரு இடத்தில் அவள் குனிந்து பார்க்கும் நேரம் தேவ் தன் பிடியை பேலன்ஸ் பண்ண முடியாமல் தளர்த்த அதில் எங்கே தான் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் மித்ரா சட்டென எக்கி அவன் சட்டையைப் பிடித்தவள், “ஐய்யோ…. டேய் புருஷா! என்ன விட்டுடாதடா...” என்றாள் தன்னையும் மீறி! பதட்டத்தில் ‘டேய் தேவ்’ என்று சொன்னதாக அவள் நினைத்திருக்க, ஆனால் அவள் சொன்னதோ ‘டேய் புருஷா’ என்று...

அதுவும் சரியா அவன் காதில் விழுந்து விட என்னதான் அவனை உற்சாகப் படுத்த அவன் நண்பர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாலும் அதை எல்லாம் ஒதுக்கி அவன் காதில் ஒலித்தது என்னமோ அந்த அரங்கத்தில் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்த

‘நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என்ற பாடல் தான்! அந்தப் பாடலோடு அவள் சொன்ன வழியையும் கேட்டு அவன் சரியாக அடுத்த கோடிக்குப் போய் விளையாட்டில் ஜெயித்து விட அதன்பிறகு அவனால் தான் அவளிடம் இயல்பாகவும் மற்றவர்களுக்காக என்று சாதரணமாகவும் இருக்க முடியவில்லை.

இப்போது தேவ்வை விட்டு விட்டு மித்ராவை அவன் நண்பர்கள் சூழ்ந்து கொண்டு அவனுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று அவளைச் சொல்லச் சொல்ல ‘இது என்னடா வம்பா போச்சி?!’ என்று கலங்கியவள் எதுக்கும் இவர்களின் வாயை அடைக்க “அவருக்கு என்ன என்ன பிடிக்கும்னு சொல்றத விட எனக்கு அவர மட்டும் தான் பிடிக்கும் என்பதை தான் நான் இப்போ சொல்ல விரும்புகிறேன்” என்று வெட்கப் புன்னகையுடன் அவள் அவர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நண்பர்கள் பட்டாளம் “ஓ… ஓ….” என்று கூறி அவளை விடுத்து தேவ்வை சூழ்ந்து கொண்டு மித்ராவுக்குப் பிடித்ததை அவனிடம் சொல்லச் சொல்லி கேட்டனர்.

ஏற்கனவே அவள் மேல் அரை கிறுக்காய் இருந்தவன் அவள் இப்போது சொன்ன வார்த்தையில் முழு கிறுக்காய் மாறி என்ன சொல்கிறோம் என்பதை அறியாமல் அவளுக்குப் பிடித்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான் தேவ்! அவனிடம் கேட்கும் போதே ‘நம்மள மாதிரி இவனும் ஏதோ சொல்லி சமாளிக்கப் போறான்’ என்று அமர்ந்திருந்தவள்.

அவனோ அவளுக்குப் பிடித்த நிறம், உணவு, டிரெஸ், விளையாட்டு, படம் அதில் வந்த டயலாக், கடைசியாக அவளுக்குப் பிடித்த ஊர் என்று அவள் தன் நண்பர்களுடன் போய் வந்த ஊர் முதல் கொண்டு அவன் பட்டியல் இட அவன் சொன்ன ஒவ்வொரு வர்த்தைக்கும் உள்ளுக்குள் அதிர்ந்தவள் இறுதியாக அவன் சொன்ன ஊரின் பெயரைக் கேட்டு ஷாக் அடித்தது போல் எழுந்து நின்றாள் மித்ரா!

அவள் எந்த மறுப்பும் சொல்லாமல் இருப்பதே தேவ் சொல்வது உண்மை என்று அறிந்த அவன் நண்பர்கள் குதித்து ஆட்டம் போட்டனர். பின் இறுதியில் லைட் மியூசிக்கில் அவர் அவர் துணையுடன் நடனம் ஆட தேவ்வும் மித்ராவின் தோளில் கையைப் போட்டு அவளின் கையைத் தன் கையோடு இணைத்து மெல்ல இடை அசைய சுற்றி வந்தார்கள்.

இந்த நேரத்தில் அவள் தன்னுடன் முழுமையாக ஒன்றி விட்டாள் என்று நினைத்த தேவ் அவளை சட்டென இழுத்து அணைத்து அவள் இடது தோளில் தன் முகம் புதைத்தவன், அவள் முதுகு புறத்தைத் தன் கண்களால் பார்க்க மித்ராவுக்கு கழுத்தின் இறக்கத்தில் தோள் பட்டையின் ஆரம்பத்தில் ஒரு மச்சம் இருக்க குனிந்து அதை தன் உதட்டால் வருடியவன் “ஒரு பொண்ணுக்கு இப்படி முதுகுல அவள் பார்க்க முடியாத இடத்தில மச்சம் இருந்தா கணவனுக்கு அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க! அப்ப இந்த மச்சத்தால் எனக்கு அதிர்ஷ்டமா?” என்று கேட்க, ஏற்கனவே தனக்கு பிடித்தது எல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும் என்று மண்டை வெடிக்க இருந்தவள் அவன் சொன்ன இந்த வார்த்தையில் இடியே அவள் தலையில் விழுந்ததாகப் பதறி அவனை பிடித்துத் தள்ளினாள் மித்ரா!

ஆனால் தேவ் சாமர்த்தியமாகக் கீழே விழாமல் சற்றுக் கால் ஊன்றி பேலன்ஸ் செய்து நின்றவன், “என்ன ஆச்சு மித்ரா?” என்று கேட்க “வீட்டுக்குப் போகணும்” என்றாள். மொட்டையாக. ‘இவ்வளவு நேரம் இவள் இருந்ததே பெரிசு’ என்று நினைத்த தேவ் அனைவரிடமும் விடை பெற்றவன் அவளுடன் கிளம்பி விட்டான். ‘எனக்குப் பிடித்தது எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ என்று மித்ராவும் கேட்க வில்லை, ‘ஏன் திடீர்னு உனக்கு என்ன ஆச்சினு?’ தேவ்வும் கேட்கவில்லை. மவுனத்துடனே இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

இருவரும் தங்கள் அறைக்கு வர இதுவரை இருந்த சுமூக உறவிலும் மயக்கத்திலும் இருந்த தேவ் தன் கைகளை மித்ராவின் வயிற்றில் கொடுத்து அவளைப் பின் புறமாக அணைத்தவன் அவள் கழுத்து மச்சத்தில் தன் இதழ் பதித்து “அதிர்ஷ்ட மச்சம்டி உன் மச்சம்!” என்றான் குழைவான குரலில்.

அந்தக் குரலிலும் அவன் முத்தத்திலும் அவனிடமிருந்து விலகியவள் திரும்பி நின்று கண் இமைக்கும் நேரத்திற்குள் “பளார்” என அவனுக்கு அறை கொடுக்க அது தேவ்வின் கண்ணத்தில் இடி என இறங்கியது. அவன் சட்டையைப் பற்றி “என்னடா நினைச்சிட்டு இருக்க? என்னப் பார்த்தா தப்பான பொண்ணு மாதிரி தெரியுதா? அந்த ஷியாம் மாதிரி நீயும் என்ன தப்பானவளாகத் தான நினைக்கிற? அதனால தான் என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சிட்டு இங்க அங்கனு எல்லா இடத்திலும் அசிங்கமானப் பார்வை பார்த்து என்னத் தொடற...

நேத்து நைட் நான் பயந்த மாதிரி எல்லாம் நீ நடந்துக்காம கொஞ்சம் தோழனா பேசவும் சற்று மனசு நிம்மதி அடைந்து ஆறுதலுக்காக உன் தோள் சாய்ந்தா, அதுக்காக என்னை தப்பா நினைப்பியா? வெளி உலகத்துக்காகவாது நாம கணவன் மனைவினு சொன்ன வார்த்தையை நம்பி தான உன் கூட வெளிய வந்தேன்? உன் நண்பர்கள் எதிர்க்க உன்ன அசிங்கப்படுத்தக் கூடாதுனு கொஞ்சம் சிரிச்சிப் பேசி தொட விட்டா, நீ என்னத் தப்பானவள்னு நினைப்பியா? அந்த ஷியாம் மாதிரி நீயும் என்ன தப்பானவள்னு தான நினைச்ச? அப்ப நீயும் அந்த ஷியாமோட ஆளா?” என்று அவன் சட்டையை உளுக்கியவள் மீண்டும் அவனை அடிக்கக் கை ஓங்கினாள்.

ஏற்கனவே அவளிடம் அரை வாங்கியதில் கொதித்துப் போயிருந்த தேவ் பிறகு அவள் என்ன தான் சொல்ல வருகிறாள் என்பதை சொல்லி முடிக்கும் வரை பொறுமை காத்தவன், அவள் திரும்பவும் அடிக்கக் கை ஓங்கவும் அதை செய்யவிடாமல் அவள் கையைப் பிடித்துக் தடுத்தவன் அவள் தோளை பற்றி அவளை உளுக்கியவன் பின் பிடித்திருந்த கையை முறுக்கு முறுக்கி அவள் முதுகில் வைத்து அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு “மித்ரா, இங்க பாருடி! நான் உன் புருஷன்! நான் போய் உன்னத் தப்பா நினைப்பனா?” என்று அவள் தோளில் அவன் முகம் புதைத்து கூற, அதற்கு உடனே அவள் “இதோ இங்களாம் முகம் வைக்கிறியே? அப்ப என்னத் தப்பானவனு தான நினைச்ச?” சொன்னதே அவள் திரும்பச் சொல்ல நொந்து போனான் தேவ்!

‘கணவன் மனைவிக்குள்ள நடக்கற சாதரணத் தொடுகையக் கூட இவ இப்படித் தப்பா எடுத்துக்கிட்டா பிறகு நான் என்ன செய்ய?’ என்று குழம்பியவன் அவள் கையை விடுவித்து அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவன் “சரி இனிமே நான் தொடல. அதேமாதிரி நான் உன்னத் தப்பானவளாகவும் நினைக்கல. அதனால போய் நிம்மதியா தூங்கு” என்றான் தேவ்.

அப்போதும் அவள் அங்கேயே நிற்க “இப்போ போய் படுக்கப் போறியா இல்ல உன்னத் தூக்கிட்டுப் போய் கட்டில்ல போடவா?” எனவும் “வேண்டாம்! வேண்டாம்” என்று அவசரமாக மறுத்தவள் பின் கண்ணீருடனே படுத்தாள் மித்ரா. வேறு உடை மாற்றி பால்கனியில் நின்று சிகரெட்டுடன் சேர்ந்து தன் யோசனையையும் கழித்த தேவ் பிறகு உள்ளே வர மித்ரா தூங்கி இருந்தாள்.

ஆழ்ந்த தூக்கத்தில் இல்லாமல் புரண்டபடி ஏதோ முனு முனுத்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவன் அவள் பக்கத்தில் படுத்து அவளைத் தூக்கித் தன் மார்பில் போட்டு கையால் அவளை அணைத்துக் கொள்ள மித்ராவும் புரளாமல் அவன் கைவளைவில் படுத்தாளே ஒழிய அவள் முனுமுனுப்பு மட்டும் நிற்க வில்லை. அது என்ன என்று சற்றுக் குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டில் தன் காதை வைத்துக் கேட்க “நான் தப்பானவ இல்ல... நான் தப்பானவ இல்ல” என்ற வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருந்தாள் மித்ரா.

“இல்லடா நான் உன்னத் தப்பாவே நினைக்கல. நீ தப்பானவ இல்லமா” என்று தேவ் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மித்ரா அதைக் காதில் வாங்கவும் இல்லை முனுமுனுப்பை நிறுத்தவும் இல்லை. அவளை இறுக்கி அணைத்தவன் பின் அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டுத் தான் போட்டிருந்த கை இல்லா பனியனைக் கழற்றி எறிந்தவன் அவளைத் தன் வெற்று மார்பில் சாய்த்துக் கொண்டு “நான் உன் அத்தான்டா! நான் போய் உன்னத் தப்பா நினைப்பனா? நீ என் தேவதைடி! உன் அத்தான் சொல்றன் இல்ல? தூங்குடா” என்று கூறி அவள் தலையை வருடினான்.

அவன் சொன்ன வார்த்தைகளுக்காக இல்லையென்றாலும் அவன் வெற்று மார்பில் சாய்ந்ததில் ஒரு தாய் தன் குழந்தைக்குத் தரும் கதகதப்பையும் அரவணைப்பையும் உணர்ந்த மித்ரா, எந்த முனுமுனுப்பும் அசைவும் இல்லாமல் சட்டென ஆழ்ந்து தூங்கினாள். அவள் அடி மனசில் தன் மேல் காதல் இருப்பதால் தான் தன் அணைப்பிலும் தன் வார்த்தைக்கும் கட்டுப் பட்டு அவள் தூங்குவதாக நினைத்தான்தேவ்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 21
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN