உன்னுள் என்னைக் காண்கிறேன் 24

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் காலையில் அவன் சொன்னது போலவே கிளம்பினார்கள். தேவ், மித்ரா, ருத்ரா மற்றும் தாத்தா என்று இவர்கள் நால்வரும் ஓர் காரிலும் வேதா, விசாலம், நித்திலா, விசாலத்தைப் பார்த்து கொள்ளும் நர்ஸ் ஓர் காரிலும் சென்றார்கள்.வண்டியை டிரைவர் ஓட்டியதால் குழந்தையுடன் மித்ராவும் தேவ்வும் பின் சீட்டில் அமர்ந்தார்கள்ஐந்து மணி நேரத்தில் போய்ச்சேயவேண்டியஊரை விசாலத்தின் உடல்நிலை காரணமாக வண்டியை மெதுவாக ஓட்டியும் அங்கங்கே நிறுத்தி அவருக்கு வேண்டியதைச் செய்ததில் மதியம் வரை ஆனதுஅதனால் மதிய உணவை சற்று ஒதுக்குப் புறமான சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்தி எடுத்து வந்த உணவை அனைவரும் சாப்பிட்டனர். கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிறகு பாதுகாவலரோடு அனைவரையும் கிளம்பச் சொன்னவன், அவர்களுக்கு முன்பே மித்ராவை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான்

ருத்ராவை அவர்களுடன் விடும் போது மட்டும் கேள்வியுடன் பார்த்த மித்ராவை, “நாம போக டைம் ஆகும், அதனால தான்” என்றான்.அதன் பிறகு அவர்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது தூரம் தாண்டிய பிறகு மரம் செடி கொடிகள் இல்லா வயல் வரப்பு அற்ற தண்ணீரே இல்லாத வானம் பாரத்த பூமியாக இருந்தது. அங்கு வெய்யிலின் உக்கிரம் அதிகம் என்பது ஏ.சி காரில் அமர்ந்து போகும் மித்ராவாலேயே உணர முடிந்தது.மொத்தத்தில் அந்த இடமே ஓர் பாலைவனம் போலிருந்தது. அதை எல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த மித்ராவுக்கே பகீர் என்றானது.‘இப்படிப் பட்ட ஊரிலா இவர்கள் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்?! இந்த ஊர் வளர்ச்சி அடைய ஏன் இவன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கான்? நாம் கேட்டால் நம்மிடம் சத்தம் போடுவானா? ஐயோ! இப்படி பார்த்து வரும் இந்த நரகத்திற்கு முடிவேயில்லையா?’ என்று அவள் வருந்தும் போது அழகான நுழைவாயில் தென்பட்டது.அதில் ‘இந்திரபுரி தங்களை அன்புடன் வரவேற்கிறது!’ என்று எழுதி இருந்ததைப் படித்தவள் ‘அடப்பாவி! இந்த ஊருக்கும் உன்னோட பேர் தானா?! நாராயணா இந்த தேவ் அலும்பல் தாங்கலப்பா!’ என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்தவள் கார் நின்றும் வெளியே வராமல் அமர்ந்திருக்க, தேவ் இறங்கச் சொன்ன பிறகே இறங்கினாள். ‘அட நிஜந்தான்! இதத் தான்டி போறதுக்குள்ள விடிஞ்சிடும்! அதான் நாம போறதுக்கு லேட் ஆகும்னு சொன்னானா?’ என்று நினைத்தாள்.ஏனென்றால் அங்கு ஊரே கூடி இருந்தது! தேவ்வை ஒரு வயதான பெரியவர் வந்து கட்டித் தழுவி “வா அப்பு, இப்பதேன் இங்கிட்டு வர தெரிஞ்சிதாக்கும் உனக்கு?” என்று கேட்க அவரிடம் சிரித்து “அதான் வந்துட்டேனே பெரியப்பா!” என்று மழுப்பினான் தேவ். பிறகு அவளையும் “வா தாயி” என்று அழைத்து இருவருக்கும் மாலைகள் போட்டார்கள்.பின் எங்கோ பட்டாசு வெடித்தது அதன் பிறகு மயிலாட்டம் ஒயிலாட்டம் பேண்டு வாத்தியம் என்று பலவகை இசை நடனங்கள் வைத்து அவர்கள் இருவரையும் காரில் அமர வைத்து பாட்டி வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தெருவெங்கும் காகிதத்தால் தோரணம் கட்டி அங்கங்கே பச்சை தென்னை ஓலையைக் கட்டி இருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குப் போய் சேரும் வரை சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் நின்று அவனுக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார்கள். அதற்குள் வீடு வந்து விட இருவரையும் நிற்க வைத்து ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.கொள்ளு தாத்தா வாசுதேவ பூபதி வெளி வாசலிலேயே நின்று அவனை அணைத்து உள்ளே அழைத்துச் சென்றார். ஊர் பெரியவர்கள் அவன் சொந்தங்களில் பெரிய பெரிய தலை கட்டுகள் முதல் ஊர் வெட்டியான் வரை அவனைக் காண அங்கு காத்திருந்தனர்.பின்னே? கடந்த ஐந்து வருடமாக வராதவன் மனைவியுடன் இன்று முதல் முறையாக வந்திருக்கிறானே! “எப்படி இருக்கீங்க அப்பாரு?” என்று தாத்தாவிடம் நலம் விசாரித்தபடி அமர்ந்தவன் “அப்பத்தா எங்க காணோம்?” என்று கேட்டபடியே அவரைச் சுற்றும் முற்றும் கண்களால் தேட. “அவ உன்றமேல உக்கிரமா இருக்காளாக்கும்!” என்றார் அவர் குரல் தாழ்த்தி ரகசியமாக. உள்ளேயிருந்து வந்த அவன் அப்பத்தா “ஏன் இத்தினி வருசம் இல்லாம இப்பதேன் உனக்கு அப்பத்தா நெனப்பு வந்ததாக்கும்! இப்ப நீ வந்து கூப்டுப்போட்டா நான் ஓடியாந்து உன்ற முன்னால நிக்கோணுமாக்கும்?!” என்று வரும்போதே அதிகாரம் பண்ணியவர் அதைக் குரலில் காட்டாமல் அங்கு சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து “இத்தினி வருசமா வாராத என்ற பேராண்டி இப்பதேன் வந்திருக்கான். நாங்களே இன்னும் அவன கண்ணுகுளிர பாக்கல பேசல! அதுக்குள்ளார நீங்க எல்லா சனமும் பாக்க பேச வந்துட்டிகளாக்கும்? அவன் எப்டியும் ஒரு வாரம் இங்கதேன் இருப்பான்! பொறவு உங்களுக்குனு நேரம் ஒதுக்குவான். அப்ப நாங்க சொல்லி விடறோம், எல்லா சனமும் அப்ப வாங்க. இப்ப ஸோலிய பாக்கக் கெளம்புங்க, அம்புட்டுதான்!” என்றவர்“வாராத புள்ள வந்திருக்கு, அதுக்கு களைப்பா இருக்குமே அத குளிக்கச் சொல்லி சோறுதண்ணி குடுத்து ரஸ்ட் (ரெஸ்ட்) எடுக்கச் சொல்லுவோம்னு இல்லாம ஊர்ல இருக்கிறவங்க அல்லாரையும் கூட்டி நடுக் கூடத்தில் ஒக்கார வச்சிப்போட்டு கட்சிக் கூட்டம் கணக்கா இல்ல பண்ணப் பாக்குறாக இந்த மனுசன்!” என்று நின்று இருந்தவர்களிடம் ஆரம்பித்து கடைசியாகத் தன் கணவனிடம் வந்து முடித்தார் அவர்.தேவ்வின் பாட்டி மற்றவர்களைப் போகச் சொல்லும் போதே அவர் அவர்கள் தலையசைப்புடன் கலைந்து சென்று விட “நானும் அதத்தேன் ஜெக்கு சொல்ல வந்தேன்” என்று அவர் கணவர் இழுக்க “க்கும்… என்னத்த சொல்ல வந்தீகளோ?!” என்று மோவாயைத் தன் தோளில் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தன் பேரனிடம் சென்றார்.அவன் கண்ணத்தைத் தன் இரண்டு கைகளிலும் தாங்கி “ஏங் கண்ணு எப்டி இருக்க? எம்புட்டு எளச்சிப் போய் இருக்கயா! ஏய்யா ஸோலி ஸோலினு ஓடுரியலோ? இப்பதேன் உன்ற அப்பாரு அப்பத்தா நெனவு வந்து பாக்க வந்தியோ? அட வரத்தேன் முடியல, முச்சூடும் அந்தக் போன் கழுதையோடத் திரியரீயலே! அதுல ஒரு ரெண்டு வார்த்தை இந்த அப்பத்தா கூடப் பேச உனக்குத்தேன் நேரம் இல்லையாக்கும்!” என்று அவர் குறைபட“இல்ல... இல்லவே இல்ல! அப்பாருவ மறந்தாலும் மறப்பனே தவிர உன்ன மறப்பனா ஜெக்கு?!” என்று அவருக்கு ஐஸ் வைத்தவன் தன் இரண்டு கையையும் அவர் இடுப்பில் சுற்றிப் போட்டு அவர் வயிற்றில் தன் முகம் புதைக்க“அடேய் பேராண்டி, அது என்ற ஊட்டுக்காரிய நான் செல்லமா கூப்புடற பேராக்கும்!” என்று அப்பாரு ஞாபகப்படுத்த. “ஆமாம், ஊர்ல இல்லாத பொல்லாத பேரு! என்ற பேராண்டிக்கு இல்லாத உரிமையாக்கும்? நீங்க வேணா வேற பேர் சொல்லிக் கூப்டுபோடுங்க!” என்று தன் கணவனுக்குக் கட்டளை இட்டவர்“நீ என்ன அப்டியே கூப்பிடு கண்ணு! இதக் கேக்கதேன் என்ற சீவன் வாழுது” என்று பேரனிடம் குழைந்து கொஞ்சியவர் அவன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டார். “போய்யா போ, வெந்தண்ணி வச்சிருக்கேன். துணி மாத்திப் போட்டு வா, நானே தண்ணி வார்த்துப் போடறேன். பொறவு சாப்ட்டுபோட்டு நல்லா தூங்கு. நாளையில் இருந்து என்ற புள்ள, கால் தரைல படாம சுத்திட்டு இருக்குமாக்கும்!” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.வந்ததிலிருந்து அங்கிருந்த கூட்டத்தையும் அவன் தாத்தா பாட்டியையும் பார்த்து வாய் பிளந்து நின்ற மித்ராவை அப்போது தான் பார்த்தார் ஜெக்கு என்கிற ஜெகதாம்மாள்! “என்னங்க அம்மணி? என்ற பேரன் கண்டுபிடிச்ச சீம சிறுக்கி நீதானாக்கும்?! ஏன் சீமைல இருந்து வந்தா மருவாத தெரியாதாக்கும்! பெரியவகளுக்கு வணக்கம் சொல்ல மாட்டீயளோ? வாய ஆனு பொளந்து பாத்துப்போட்டு இருக்கரவ? ஏன் அந்த சீமைய விட்டு வாரதுக்கு உனக்கு இப்பதேன் மனசு வந்ததாக்கும்?வந்த உடனே மாமியையும் பொண்ணையும் எங்கோனு தேடாம ஊட்டுக்காரனுக்கு வேண்டியதைக் கவனிச்சிப் போடாம வாயப் பொளந்து நிக்கறத பாரு! போ, போய் அவனுக்கு வேண்டியத எடுத்துக் கொடுத்துப்போட்டு நீயும் குளிச்சிப் போட்டு சீக்கிரம் வர வழியப் பாரு!” என்று அவளை அதட்டி அனுப்பி வைத்தார் ஜெக்கு.‘எப்போ பாரு என்ன அதிர்ச்சிக்கு உள்ளாக்கறதே இந்தக் குடும்பத்துல இருக்கறவங்களுக்கு வேலையா போச்சி!நான் வாய பிளந்து நிற்கிறேனா?! எல்லாம் என் நேரம்! பாட்டிக்கு என்ன மிரட்டல் உருட்டல்?! அப்படியே பேரன் மாதிரியே இருக்காங்க! அது என்ன சீம சிறுக்கி? சீம சரக்கு கேள்விப்பட்டு இருக்கேன்! இப்படி ஓர் பெயரை எனக்கு எதுக்கு வெச்சாங்க?!’ என்று நினைத்துக் கொண்டே சற்று முன் தேவ் சென்று மறைந்த அறைக்குள்ளே இவளும் நுழைய.அங்கு தேவ் சட்டையில்லாமல் வெறும் ஷார்ட்ஸ்உடன் சூட்கேசில் எதையோ தேடிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தவள் “கருமம்! கருமம்! பெண்கள் இருக்குற வீட்டுல இப்படியா இருப்பாங்க?” என்று அதட்டியவள் அவனைப் பார்க்க விரும்பாமல் அவனுக்கு முதுகாட்டி நின்று இவள் பெட்டியைத் திறக்க, அவள் சொன்ன பாவனையில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் ‘ஆமாம்! அன்னைக்கு கட்டிப்பிடிச்சிகிட்டு தூங்கும் போது இவளுக்குத் தெரியலையாமா?எல்லாம் மேடம் தூக்கத்தில் இருந்ததால! பேசாம நீ தூக்கத்திலேயே இருடி! அப்ப தான் எனக்கு நல்லது!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் தான் குளித்து முடித்தப் பின் போட வேண்டிய மாற்று உடைகளை டவல் முதல் கொண்டு எடுத்து வைத்தவன் “நீ குளிச்ச பிறகு இத எடுத்து வந்து கொடு மித்ரா” என்று சொல்ல “இது என்ன புதுப் பழக்கம்? ஏன் அதை நீங்களே எடுத்துட்டுப் போக வேண்டியது தான?” பட்டென்று அவள் கேட்க “இதை எல்லாம் நீ தான் செய்யணும்னு அப்பத்தா எடுத்து வரச் சொல்லுவாங்க. அந்த நேரம் நீ திரு திருனு முழிக்கக் கூடாதுனு தான் எடுத்து வச்சிட்டு சொல்றேன்” என்றவன் “ஹீட்டர் போட்டிருக்கன், தலை குளிக்காத. சாயந்திரம் ஆகிடுச்சி, குளிச்சிட்டு மட்டும் வா!” என்று கரிசனமாகக் கூறஅதே நேரம் வெளியிலிருந்து அப்பத்தாவின் குரல் கேட்டது. “என்ற ஐயனே, செத்த விரசா வாங்க. பொழுதுக்குள்ள குளிச்சிப்போடுங்க ராசா” என்று அவன் மித்ராவுக்குச் சொன்ன அதே கரிசனத்துடன் அவர் கூப்பிட, அவன் வெளியே சென்றான். இவள் குளித்து முடித்து துணி மாற்றும் நேரம் கதவு தட்டப்பட. சென்று திறந்ததில் வேலைக்கார பெண்மணி ஒருவர் “அம்மணி, பெரியாத்தா ஐயாவோட துணிய எடுத்து வரச் சொன்னாங்கங்க. பொறகால இருக்காங்கங்க” என்று சொல்லிச் சென்றாள்.உடனே அவன் வைத்து விட்டுப் போனதை எடுத்துக்கொண்டு அவள் பின்னே சென்றவள். அங்குப் பார்த்தால், குழந்தையைக் காலில் போட்டு குளிக்க வைக்காத குறையாக அவனை உட்கார வைத்து முதுகுக்கு சோப்பு போட்டுக் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார் ஜெக்கு. இதை எல்லாம் விட அவர் உட்சபட்சமாக செய்தது,சிறு குழந்தையைப் போல் தேவ்வின் பின்புற கழுத்தைத் தன் இடது கையால் அழுத்திப் பிடித்து தன் வலது கையால் சோப்பைக் குழைத்து அதை அவன் முகத்தில் தேய்த்து தண்ணீரால் வாரிக் கழுவ, அதைப் பார்த்தவளோ ‘இந்த பாட்டி என்ன லூசா? எருமமாடு மாதிரி இருக்கான்! ஏழு கழுத வயசு ஆகுது, இப்ப போய் இதையெல்லாம் செய்துட்டு இருக்காங்க!’ என்று நினைத்து நின்றிருக்க.“பொழுது சாயப் போகுது கண்ணு, வெரசா தண்ணி வார்த்துப் போட்டு வா ராசா” என்று அவனிடம் சொல்லி விட்டுத் திரும்பியவர் அங்கு மித்ரா நிற்பதைப் பார்த்து, “என்ன? எப்ப பாரு வாயப் பொளந்து நிக்கறவ! துணிய அவன் வந்த பொறவு கொடுத்துப் போட்டு வா” என்றவர் “இன்னைக்கு ஒரு நா மட்டும்தேன் நான் அவனுக்கு முதுகு தேய்ச்சி விட்டனாக்கும்! நாளையிலிருந்து நீ தான் செய்யோனும்” என்று அவளுக்குக் கட்டளை இட. “அப்படியா அப்பத்தா?!” என்று கண்கள் மின்ன உதட்டில் ஓர் கோனல் சிரிப்புடன் அவள் கையிலிருந்த துண்டை தேவ் வாங்கிக் கொள்ள.இவளுக்குத் தான் தூக்கி வாரிப் போட்டது. ‘அடப் பாவி! அப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் செய்ய சொல்லுவியா?’ என்று நினைத்துப் பல்லைக் கடித்தவள் திரும்ப. “ந்தா செத்த நில்லு!” என்றார் அப்பத்தா. அவள் நின்று என்ன என்று பார்க்க“குளிச்சிப்போட்டு அப்டியே வந்துட்டியோ? நெத்தியில குங்குமத்தக் காணோம்! அந்தி சாயர நேரத்தில இப்டியா இருப்பாக? போ போய் குங்குமத்த நெத்தியில வச்சிப்போட்டு தலைய ஒதிரி கட்டிப்போடு. பூவ கொடுத்து அனுப்பிப் போடறேன், வாங்கித் தலையில வச்சிப்போட்டு போய் சாமி அறையில விளக்கு ஏத்திப்போடு” என்று அவளிடம் நீட்டி முழங்கிச் சொல்ல இவள் சரி என்ற தலையசைத்து விலக.“ஏன் சீமையிலிருந்து வந்தவக வாய் தொறந்து பேசிப்போட்டா வாயில இருக்கிற முத்து ஒதிரிப்போடுமோ?” என்று நக்கல் பண்ண இவள் “சரிங்க” என்று சொல்ல, “அது என்றா சரிங்க? நான் உனக்கு அம்மச்சிதேன்! அதனால் என்ன அம்மச்சினே கூப்டோனும்” என்று அதட்ட “சரிங்க அம்மச்சி” என்றவள் அந்த இடத்தை விட்டு ஓரே ஓட்டமாக உள்ளே ஓடி மறைந்தாள்.போகும்போதே ‘ஆமாம்... இவர் பேரனுக்கு நான் முதுகு தேய்ச்சி விடணுமா? அதுக்கு வேற ஆளப் பார்க்கச் சொல்லுங்க! ஏன்? பேசாம இங்கு இருக்கிற வரைக்கும் அதை அவங்களே செய்யட்டுமே!’ என்று நினைத்தவள் பின் பாட்டி சொன்னதைச் செய்து விளக்கேற்றி விட்டு வர, எதிரில் வந்த வேலைகாரப் பெண்மணி “அம்மணி பெரியாத்தா உங்கள உள்ளாற முற்றத்திற்கு வரச் சொன்னாங்க” என்று சொல்லிச் செல்ல அங்கு சென்றாள்.அங்கு ஊஞ்சலில் அவன் அப்பத்தா அமர்ந்திருக்க, அவர் மடியில் தலை வைத்துக் கால்களைத் தரையில் தொங்க விட்டபடியே கால்களால் ஊஞ்சலைத் தள்ளி விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் தேவ். வந்து நின்றவளைப் பார்த்த அப்பத்தா, “சாப்ட என்ற பேரன் கோழிக் கறி போண்டா கேட்டுப் போட்டான். அதேன் செய்ய சொல்லிப் போட்டேன். அந்தப் பக்கம்தேன் சமயக்கட்டு! முடிச்சிப் போட்டாங்களானு பாத்துப் போட்டு அல்லாருக்கும் வட்டுல வெச்சி கொடுத்துப்போடு” என்றார். அதன்படியே சென்று எடுத்து வந்து அவள் தாத்தா உட்பட அனைவருக்கும் கொடுத்து விட்டு தனக்கென்று இரண்டை ஓர் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தாள் மித்ரா.வந்ததிலிருந்து வேதாவை அவள் பார்க்கவில்லை. அவர் தேவ்வின் அம்மா அறையிலே இருக்கிறர் போல என்று நினைத்தவள் ‘இந்த நித்திலா நமக்கு முன்ன வந்துட்டா. ஆனா வந்ததிலிருந்து ஆளே காணோம்! ஏதோ தோட்டம் போய் இருக்காளாம்! போனவள் ருத்ராவையும் இல்ல கூட்டிட்டுப் போய்ட்டா!’ என்று சலித்துக் கொண்டு அமர்ந்திருந்த நேரம் “அம்மா!” என்ற அழைப்புடன் உள்ளே ஓடி வந்தாள் ருத்ரா.தலை முடி முழுக்க பஞ்சும் தூசியுமாக கை கால் எல்லாம் புழுதி மண் என்று இருந்தது. “இப்படியா மண்ணுல ஆட்டம் போட்ட?” என்று அலுத்துக் கொண்டே வென்னீரால் அவளுக்கு உடல் கழுவி வேறு உடை மாற்ற. அதுவரை தான் இப்போது பார்த்த மாடு கிளி பூ கொக்கு என்று அவள் பட்டியல் இட, அதைக் கேட்டுக் கொண்டே அவளுக்குத் தேவையானதைச் செய்தவள் பிறகு அவளுக்கு பூஸ்ட் கொடுத்து தேவ் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.அங்கு தேவ்வோ அவன் தாத்தாவின் மடியில் தரையில் உள்ள விரிப்பில் படுத்திருக்க, அவன் காலைத் தன் மடி மீது வைத்து நெட்டி எடுத்துக் கொண்டிருந்தார் அவன் பாட்டி. இதெல்லாம் மித்ராவுக்குப் புதுசு! இப்படி எல்லாம் அவளுக்கு யாரும் செய்ததே இல்லை! இதையெல்லாம் பார்க்க தேவ்வின் மீது சற்று பொறாமை கூட வந்தது அவளுக்கு! அதனால் அதிக நேரம் அங்கு இருக்கப் பிடிக்காமல் ருத்ராவை மட்டும் அங்கு விட்டுவிட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டாள்.அவளுக்குக் கண்கள் கூட கலங்கி விட்டது! இப்படி அணைத்துக் கொஞ்சி அவளை யாரும் மடி சாய்த்துத் தலை கோதியது இல்லை! திருமணத்திற்குப் பிறகு தான் அவள் தாத்தாவே சற்று அணைத்துப் பேசி இருக்கிறார். பாசம் இருக்கிறது, ஆனால் இப்படி எல்லாம் செய்தது இல்லை. அவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவள் மனதில் ஏக்கம் படர்ந்தது.அதன் பிறகு இரவு உணவுக்கு அனைவரையும் அழைக்க அங்கு ஓர் கூட்டமே இருந்தது. விசாலத்தின் அண்ணன் குடும்பத்தைத் தவிர அங்கு இருந்தவர்கள் யாரும் மித்ராவின் கண்ணில் படவில்லை. தேவ்வின் மாமன் மகளான மீராவும் ரேணுகாவும் அவன் இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொண்டு அவனை மாமா மாமா என்றழைத்துத் தொட்டுத் தொட்டுச் சிரித்து சிரித்துப் பேசுவது மட்டும் தான் மித்ராவுக்குத் தெரிந்தது. அவன் பக்கத்தில் உட்காரப் பிடிக்காமல் எதிரில் அமர்ந்தவள் அவர்கள் சிரித்துப் பேசுவதை நன்றாகவே பார்க்க முடிந்தது.அதிலும் தேவ் சிரிப்பதைப் பார்த்தவள், ‘அடப் பாவி என் கிட்ட மட்டும் ஹிட்லர் ரேன்ஞ்சுக்கு இருந்துட்டு இப்ப இதுங்க கிட்ட என்னமா சிரிச்சிப் பேசுறான்?! என்று மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக தேவ்விடம் வேறு பெண்கள் அவ்வாறு நடந்து கொள்வது அவளுக்குப் பிடிக்காமல் போனது. அவளையும் மீறி அது கோபமாக எழுந்தது. அந்த நேரம் பார்த்து தேவ்வின் வலது பக்கம் அமர்ந்திருந்த மீராவை எழுப்பி விட்டு அப்பத்தா அங்கு அமர ‘இப்போ தான் அம்மச்சி, சரியான ஒண்ண செய்து இருக்கிங்க!’ என்று மனதுக்குள் கவுன்டர் கொடுத்தவள். பின் அவன் அப்பத்தா அவனுக்கு ஊட்டி விடுவதைப் பார்த்ததும் முகம் சுருங்க சாப்பிட ஆரம்பித்தாள் மித்ரா.இரவு அறைக்கு வந்ததிலிருந்து எங்கு படுப்பது என்று மித்ரா யோசிக்க “என்ன நிக்கர? நேத்து ஒன்னாதான கட்டில்ல படுத்தோம்? அப்ப நான் உன்ன ஏதாவது செய்தனா? பேசாம தான படுத்தேன். இப்பவும் அதே போலே படுத்துக்கலாம்” என்று சொல்லி தேவ் சிரிக்க, ‘விட்டா இவன் ஏதேதோ பேசி மானத்தை வாங்குவான்’ என்று நினைத்தவள்,“சரி! ஆனா, இரண்டு பேரும் தூர தூர தான் படுக்கணும்” என்று அதட்டியவள் சுவற்றோரம் கட்டிலின் முனையில் போய் படுத்துக் கொள்ள. சரி என்று முதலில் தள்ளிப் படுத்த தேவ் அவள் தூங்கின பிறகு அவள் வயிற்றில் கை போட்டு அவளை அணைத்துக் கொண்டு தூங்கினான். இரவு படுத்தவள் காலையில் கதவு தட்டும் சத்தத்தில் தான் கண் விழித்தாள். அதுவும் அசைய முடியாமல் தேவ் அவளை வளைத்துப் பிடித்துப் படுத்திருக்க,அவனை உளுக்கி எழுப்பியவள் “யாரோ கதவு தட்றாங்க போய் என்னனு கேளுங்க” என்று சொல்ல “அப்பத்தாவா தான் இருக்கும். காலையில் நான் இவ்வளவு சீக்கிரம் எழுந்தன்னு தெரிஞ்சா அவ்வளவுதான்... சத்தம் போட ஆரம்பிச்சிடும்! அதனால நீயே போய் என்னனு கேளு” என்று சொல்லி அவன் மறுபடியும் படுத்துத் தூங்க, “காலையிலா?!” என்று மணியைப் பார்த்தவள் அது ஐந்து என்று காட்ட “அட பாவத்தே! நான் நடுராத்திரினு இல்ல நினைச்சேன்” என்று வாய் விட்டுப் புலம்பியவள் ஓடிச் சென்று கதவைத் திறக்க, அப்பத்தா தான் நின்றிருந்தார்.இவள் இன்னும் தூக்கக் கலக்கத்திலேயே அவரைக் கேள்வியாய் பார்க்க “என்ற முழிக்ககரவ? நேத்து ராவே சொல்லிப் போட்டேனுல்ல? கருக்காலே எழுந்து கோவில் போகோனும்னு! ம்… போ, செத்த வெரசா குளிச்சிப்போட்டு வா. ந்தா.. இந்தக் குழாயும் உறையும் மாட்டிப்போட்டு வாராம ஒழுங்கா ஒரு நல்ல சீலைய கட்டிப்போட்டு வா!” என்று சொல்லிச் செல்ல இவளும் சீக்கிரம் குளித்து வந்தாள். ‘அச்சோ! எக்ஸாமுக்குக் கூட நான் இவ்வளவு சீக்கிரம் எழுந்து படிச்சது இல்லையே! எனக்குத் தூக்கம் தூக்கமா வருதே. அங்க நான் உனக்குத் துணையா இருப்பேனு சொல்லிட்டு எப்டி தூங்கறான் பாரு! எல்லாம் என் நேரம்’ என்ற புலம்பலுடன் தான் ரெடியாகி வந்தாள் மித்ரா.வந்தவளிடம் அதிகம் சலங்கை வைத்த கால் கொலுசைப் போடச் சொல்ல, முதலில் தயங்கியவள் பிறகு அவர் முறைக்கவும் போட்டுக் கொண்டாள். அது மட்டுமா? தங்கத்தில் வளையல் போட்டிருந்தாலுமே அது கூடவே கை நிறைய கண்ணாடி வளையல், தலை நிறையப் பூ, கழுத்தில் வைர அட்டிகையும் காசு மாலையும் கொடுத்துப் போடச் சொல்லி கூடவே இவை எதையும் எப்போதும் கழட்டக் கூடாது என்றும் நகை மட்டும் தூங்கும் போது கழட்டி வைக்கலாம் என்ற சலுகையுடன் உத்தரவிட்டார்.அதை எல்லாம் போட்டவள் ‘இப்போ நம்மளப் பார்த்தா சினிமா படத்துல வர்ற ஜெகன் மோகினி மாதிரி இல்ல இருப்போம்?!’ என்று தன்னைத் தானே வர்ணித்துக் கொண்டாள்.வீட்டுக்கு வந்த பிறகும் அவளை உட்கார விடாமல் விரட்டிக்கொண்டே இருந்தார் பாட்டி. எல்லாத்துக்கும் மேலாக தேவ் காலையில் சாப்பிடும் நேரத்தில் அவன் பக்கத்திலிருந்து பரிமாறி அவன் சாப்பிட்ட இலையிலேயே அவளையும் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னது தான் கொடுமை. மறுக்க முடியாமல் அதையும் செய்தவள் தேவ் ஏதாவது சொல்லித் தடுப்பானா என்று அவன் முகம் பார்க்க அவனோ எதுவுமே சொல்லவில்லை. அது வேறு கோபம் அவளுக்கு.காலையில் வெளியே சென்ற தேவ் மாலை தான் வந்தான் வரும்போதே கௌதமும் உடன் வர அவனைப் பார்த்த அப்பத்தா சந்தோஷத்துடனும் உரிமையுடனும் அவனை உள்ளே அழைத்துச் சென்று உபசரிக்க, அதைப் பார்த்தவள் யார் என்று நித்திலாவைக் கேட்கதேவ்வுக்கு பனிரெண்டு வயது இருக்கும் போதே இதே மாதிரி ஓர் கோவில் திருவிழா நேரத்தில் தேவ் எங்கோ வெளியே போனபோது ரோட்டில் விபத்து ஏற்பட்டு தாய் தந்தையர் அடையாளம் தெரியாத வகையில் இறந்து விட, அந்த விபத்தில் உயிர் பிழைத்த கௌதமைத் தன்னுடன் அழைத்து வந்தவன் தன் குடும்பத்தில் ஒருத்தனாக வளர்க்க, தேவ்வின் குடும்பத்து விரோதிகளால் அந்த வருட திருவிழாவில் அவன் ஊர் மக்களைக் கொல்ல சதித் திட்டம் போட அதைத் தெரிந்து கொண்ட கௌதம் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் அடிபட்டு மிதிபட்டு ஏழு வயது சிறுவனான அவன் தப்பித்து வந்து தேவ் தாத்தாவிடம் அனைத்தும் சொல்லி, அன்று அந்த ஊருக்கு வரவிருந்த பெரிய இழப்பில் இருந்து காப்பாற்றினான். அன்று முதல் கௌதமைத் தன் சகோதரனாக நினைத்து நட்பு பாராட்டி அவனுக்கு சகலமும் செய்து பழகி வருகிறான் தேவ்.படிக்கவைத்து சொந்தமாகப் பத்திரிகை நிறுவனத்தையும் வைத்துக் கொடுத்ததோடுநில்லாமல் தேவ்வின் மாமன் மகள் மீரா அவனை விரும்ப அவன் குலம் கோத்திரம் பிறப்பு என்று பார்க்காமல் தேவ் சம்மதம்னு சொன்ன ஒரே வார்த்தைக்காகவே கௌதமுக்கு மீராவைக் கொடுக்க சம்மதித்தனர்மீராவின் குடும்பமும் அவன் சொந்தங்களும். இதை எல்லாம் நித்திலா சொல்ல, எப்போதும் தேவ்வைக் கெட்டவனாகப் பார்த்த மித்ராவுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புதிய பரிமாணத்தைக் கொடுத்தன.அவனைப் பற்றி முதல் முறையாக சற்று நல்லதாகவே நினைத்தாள். ‘அதிலும், இவ்வளவு பெரிய முற்போக்கு சிந்தனைவாதியா தேவ்?!’ என்று நினைக்க, அதில் அவளையும் அறியாமலே அவள் மனதில் நிம்மதியும் இதமும் பரவத்தான் செய்தது.அன்றிரவு நேற்று போல் மித்ரா தூங்கின பிறகு தேவ் அவளை அணைத்துக் கொள்ள, தூங்காமல் விழி மூடி படுத்திருந்தாலும் மித்ரா அவனைத் தடுக்கவில்லை.மறுநாள் காலை வழக்கம் போல் அப்பத்தாவுடன் கோவிலுக்குச் சென்று வர அன்றைய தினத்திலிருந்து கோவில் திருவிழா ஆரம்பமானது. அவனுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்துஎல்லோரும்அம்மனுக்குப்பொங்கல் வைத்து வழிபட்டுப் பின் அம்மனைத் தேரில் அமரவைத்து வடம்பிடித்து இழுத்தனர். அங்கு நடந்த பூஜை புனஸ்காரம் எல்லாம் மித்ராவுக்குப் புது அனுபவமாக இருந்தது. அங்கிருந்த அரசியல்வாதிகள் முதல் கலெக்டரில் ஆரம்பித்து சாதாரண கிராமத்து மக்கள் வரை தேவ்வுக்கு கொடுக்கும் மரியாதையைச் சமபங்காக அவளுக்கும் கொடுக்க,அதை எல்லாம் பார்த்தவள் இவை எல்லாம் தேவ்வின் மனைவி என்ற நினைப்பில் மனதில் முதன் முறையாக பெருமையும் பூரிப்பும் பூத்தது மித்ராவுக்கு!திருவிழாவில்போட்டிருந்த கடைகளையும் மற்ற இடங்களையும் தேவ்வுடன் கை கோர்த்துக் கொண்டே சுற்றி வந்தாள்!‘இது என் ஊர்! தேவ்வின் சொந்த பந்தங்கள் எல்லாம் என் சொந்தங்கள்!’ என்றும் ‘தேவ் என் புருஷன்!’ என்றும்மனதால் உரிமை கொண்டாடினாள் அவள் அதே மனநிலையுடன்வீட்டிற்கு வர அவர்கள் மூன்று போரையும் நிற்க வைத்து சுற்றிப் போட்டார் அப்பத்தா. ருத்ராவுடன் தங்கள் அறைக்கு வந்தவுடன் பலூனை எம்பி எம்பித் தட்டி விளையாடியருத்ராவுடன் சேர்ந்து இவளும் தன் உயரத்திற்குத் தட்டி விட்டு விளையாட.அதைப் பார்த்த ருத்ரா “ஐய்… அலகா பறக்குது பலூன்! இன்னும் உயர அடிம்மா” என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க, தன் உயரத்திற்கும் மேல் எம்பி பலமாக ஓர் தட்டுத் தட்ட, அந்த பலூனோ அந்த அறையில் இருந்த பரண் மேல் போய் விழுந்தது. மேல போன பலூன் திரும்ப கீழ வராமல் போக, பலூனைக் கேட்டு உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள் ருத்ரா. எவ்வளவு சமாதானப் படுத்தியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல், “சரிடா குட்டிமா! நான் அப்பாகிட்ட சொல்லி வேற வாங்கித் தரேன்” என்று சொல்ல “இல்ல, எனக்கு அது தான் வேண்டும்” என்று அடம்பிடித்தது அந்த சின்ன வாண்டு.“சரி நான் வெளியே போய் யாரையாவது கூப்பிட்டு வந்து எடுத்துத் தறச் சொல்றேன்” என்று அவள் வெளியே செல்ல நினைக்க, அம்மா வெளியே போய்விட்டால் பலூன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவளுக்கு முன்பே கதவின் பக்கம் போய் நின்ற ருத்ரா தன் கையையும் காலையும் விரித்து வைத்துக் கொண்டு “இல்ல, எனக்கு நீ தான் எடுத்துத் தரணும்” என்று அதிகாரம் பண்ணவும், ருத்ரா நின்ற பாவனையில் சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டவள் “எல்லாத்துக்கும் வர வர பிடிவாதம் பிடிக்கிற குட்டி நீ! அப்புறம் அம்மாவுக்கு கோபம் வரும்” என்று பொய்யாக மிரட்டியவள்,

பின் வேறு வழியின்றி அவளே எடுக்கும் முயற்சியில் இறங்கினாள். தான் கட்டியிருந்த சேலையை இழுத்துச் சொருகியவள் பரண்மேல் ஏறுவதற்கு எந்த வசதியும் இல்லாததால் அங்கிருந்த மரக்கட்டிலின் விளிம்பில் ஏறி நின்று தன் நுனி விரலால் எம்பி கையால் துழாவ அப்போதும் பலூன் அவள் கைக்கு கிடைக்கவில்லை. சலித்துப் போனவள், “குட்டிமா எடுக்க முடியல! நித்திலா அத்த கிட்ட குச்சியோ கோலோ எடுத்துட்டு வரச் சொல்லு அப்பவாது எடுக்க முடியுதானு பார்ப்போம்” என்று சொல்ல “தோ போறேன்!” என்று சிட்டாய் பறந்தாள் ருத்ரா.மித்ராவோ கொஞ்சம் தடுமாறி வலது பக்கமாக விழுந்தால் கட்டிலிலும் இடதுபக்கமாக விழுந்தால் தரையிலும் என்ற நிலையில்நின்றிருக்க, ‘சரி நாம் ஓர் எம்பி எம்பித் தான் பார்ப்போமே அப்படியே விழுந்தாலும் கட்டிலின் பக்கம் விழுந்துக்கலாம்’ என்ற தைரியத்தில் சற்று மேல் நோக்கித் தாவ அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்தான் தேவ்.அவளைப் பார்த்தவன் “ஏய்! ஏய்! என்னடி பண்ற?” என்று கத்தியவன் அவளை நெருங்க, திடீர் என்றுகத்தியதில்மித்ரா விழப் போக, அவளைப் பிடித்தவன் அப்படியே அவளுடன் சேர்ந்து கட்டிலில் சாய்ந்தான் தேவ்! இருவரும் ஒருக்களித்துப் படுத்த நிலையிலேயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருந்தனர்.கண்களை இறுக்க மூடி அவனைக் கட்டிக் கொண்ட மித்ரா கண்களைத் திறக்காமலே நடுங்கும் குரலில் “அப்ப நான் கீழ விழுந்துட்டனா?” என்று கேட்க “இல்ல! கட்டில் மேல தான் விழுந்த” என்றவன் “ஆமாம், உனக்கு எதுக்கு இப்போ இந்த குரங்கு வேலை?” என்று அதட்ட “நான் என்ன செய்ய? மேல போன பலூனக் கேட்டு உங்க பொண்ணு ஒரே அழ” என்று அவள் சொல்ல “இந்த பலூன் இல்லனா வேற பலூன நான் வாங்கி தரப் போறன்! அதுக்கு ஏன்டி மேல ஏறின?” என்று கேட்க “ஆமாம், நான் சொன்னா அவ அப்டியே கேட்டுடுவா பாருங்க... அப்படியே உங்கள மாதிரியே பிடிவாதம்” என்று இவள் குறை பட “மித்ரா பேசாம நாம இப்படிச் செய்யலாமா?” என்று இரகசியமாக அவன் கேட்க,அதுவரை கண்களை மூடியிருந்தவள் பட்டென்று கண் திறந்து “என்ன?” என்று கேட்க “என்ன மாதிரி பிடிவாதத்துல தான் ஒரு பொண்ணு இருக்கே! அப்ப உன்ன மாதிரி பிடிவாதத்திலையும் உன் பேச்சை மட்டும் கேட்கற மாதிரி ஒரு பையன பெத்துப்போமா?” என்று ஹஸ்கி வாய்சில் கேட்க, அப்போதுதான் தூக்கி சொருகின சேலையுடன் தன் கால்கள் அவன் கால்களோடு பின்னி இருக்க அவனை அணைத்தபடி கட்டிலில் தான் படுத்திருப்பதை உணர்ந்தவள், பட்டென அவனை விலக்கி எழுந்து அமர “என்ன மித்ரா உனக்குச்சம்மதமா?” என்று மீண்டும் அவன் சரசமாகக் கேட்க, அவன் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியே ஓடினாள் மித்ரா.‘இந்த மாதிரி எல்லாம் தேவ் தன்னிடம் பேசியது இல்லை. இது தான் முதல் தடவை. ஆனால்எனக்குக்கோபம் வருவதற்குப் பதிலாக சந்தோஷம் ஏன் வருகிறது?’ என்று தன்னையே கேள்வி கேட்டவள் அந்த சம்பவத்தை மறக்க முயற்சி செய்தாள்.அதன் பிறகு அவன் கண்ணிலே படாமல் சுற்றிக் கொண்டிருந்தவள் இரவும் அவனுக்கு முன்பே ருத்ராவுடன் அறைக்கு வந்து அவளை அணைத்துக் கொண்டே தூங்க, பிறகு வந்த தேவ்வும் அவளிடம் பேச நினைத்தவன் எதுவும் பேசாமல் தூங்கி விட்டான். மறுநாள் காலையில் எழுந்து வழக்கம் போல் தன் வேலைகளைப்பார்த்தாள் மித்ரா.தேவ்வின் நெருக்கம் மித்ராவுக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் மனதுக்குள் ஏதோ தப்பு செய்வது போல் பயத்தையும் உணர்ந்தவள் அவனை விட்டு விலகிப் போனாள். அவள் அப்படி விலகுவதை உணர்ந்தோ இல்லை அவளிடம் சகஜநிலையை உருவாக்க நினைத்தோ, காலையில் எழுந்ததில் இருந்து மித்ராவை சீண்டிக் கொண்டிருந்தான் தேவ்.அதிலும் மித்ரா அன்று அப்பத்தா முன்பு மறந்து போய் அவனை பெயர் சொல்லிக் கூப்பிட்டு விட, அதைக் கேட்டவரோ அவளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட அதில் கண்கலங்கித் தேவ்வைத் தன்னை காப்பாற்றச் சொல்லி துணைக்கு அழைக்க. அவனோ அவளுக்கு நிற்காமல் மேற்கொண்டு வெறுப்பேற்றுவதற்காக அப்பத்தாவிடம் தன்னை அத்தான் என்று அழைக்கச் சொல்ல அன்று முழுக்க அவளை அப்படிக் கூப்பிடச் சொல்லிப் பாடாய்ப் படுத்தி விட்டார் அப்பத்தா!அன்று தூரிய மழையில் தேவ் நனைந்ததால் சளி பிடித்து விட, இதைப் பார்த்த அப்பத்தா சில பச்சிலைகளை அரைத்து சாறு எடுத்து அதை மித்ராவிடம் கொடுத்து இரவு படுக்கும் போது தேவ்வின் கழுத்திலும் நெஞ்சிலும் பூசி விடச் சொல்ல.காலையிலிருந்து அவன் மேல் கடுப்பில் இருந்த மித்ரா அந்த சாறைப் பார்த்த உடன் அவனை அழ வைக்க தனக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தாள். காலை தோட்டத்தில் விளையாடிய ருத்ரா அங்கு வளர்ந்திருந்த பிரண்டைச் செடியை தன் கையால் ஒடித்து ஒடித்துப் போட, அதைப் பார்த்த அப்பத்தா அதில் உள்ள சாறு கையில் பட்டால் ஊரல் எடுக்கும் என்று சொல்லித் தடுக்க. அதை அங்கிருந்து கேட்ட மித்ராவோ இப்போது அதை தேவ்விடம் சோதித்துப் பார்க்க நினைத்தாள்.கையில் கத்தரிக்கோளுடன் தோட்டத்திற்குச் சென்றவள் அங்கிருந்த பிரண்டைகளை எடுத்து வந்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி அப்பத்தா கொடுத்த மூலிகைச் சாறைக் கீழே ஊற்றி விட்டு இந்தச் சாறை தேவ்வுக்குத் தடவ எடுத்து வைத்தவள். இரவு ருத்ராவை நித்திலாவுடன் படுக்க அனுப்பியவள் தேவ்வுக்காக காத்திருக்க.உள்ளே வந்தவனோ அவள் இன்னும் தூங்காமல் இருப்பதைப் பார்த்து “என்ன மேடம் நேற்று அவ்வளவு அவசரமா தூங்கினிங்க? இன்னைக்குத் தூங்காம உட்கார்ந்து இருக்கிங்க என்ன விஷயம்?” என்று அவளை சீண்டியவன் உடை மாற்றி வந்து படுக்க, அப்போதும் அவள் படுக்காமல் கட்டிலில் சம்மனமிட்டு அமர்ந்து இருப்பதை பார்த்தவன், தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க. அவள் கிண்ணத்தில் இருந்த சாறைக் காட்ட, “ஓ…. அப்பத்தா பூசிவிடச் சொன்னதா?” என்று கேட்டவன் தான் அணிந்திருந்த பணியனைக் கழற்ற அந்தச் சாறை மயில் இறகால் நனைத்து அவன் மார்பில் பூசி விட்டாள் மித்ரா.“ஏன், மேடம் விரலால் பூசி விட மாட்டீங்களோ?” தன் மனைவியின் விரல் தன் நெஞ்சில் பட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. ‘நான் என்ன லூசா? என் கை எல்லாம் ஊரல் எடுக்க வைக்க?’ என்று நினைத்தவள் “அம்மச்சி தான் இப்படி செய்யணும்னு சொன்னாங்க!” என்றாள் அப்பாவியாக. நன்றாகத் தடவியவள் பின் ஒண்ணுமே தெரியாதது போல் அவனுக்கு முதுகு காட்டிப் படுக்க, “மித்ரா, அப்பத்தா ஏதோ தெரியாம மாத்திக் கொடுத்துட்டாங்கனு நினைக்கிறேன்!அந்தச் சாறு பட்ட இடமெல்லாம் ஊரலும் எடுக்குது எரியுதுடி. போய் அப்பத்தாவைக் கூட்டிட்டு வாயேன்” என்று அவன் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அசையாமல் படுத்திருந்தாள் மித்ரா. அவள் அப்படி இருப்பதைப் பார்த்தவன் “சரி, நானே போய் கேட்கிறேன்” என்று எழுந்தவனை. “ஐய்யயோ போகாதிங்க! போகாதிங்க!” என்ற கூவலுடன் எழுந்து உட்கார்ந்தாள் மித்ரா. காலையில் இருந்து அப்பத்தாவிடம் திட்டு வாங்கினது இன்னும் மறக்குமா என்ன அவளுக்கு?!அப்போது தான் அவன் மார்பைப் பார்த்தவள் அது சிவந்து போய் தடிப்பு தடிப்பாக அங்கங்கே வீங்கிப் போய் இருக்க. “அச்சச்சோ! எனக்கு இப்படி ஆகும்னு தெரியாதுங்களே! நான் சும்மா ஊரும்னு இல்ல நினைச்சன்?! அதனால தான பாட்டிகீ கொடுத்த சாறை ஊத்திட்டு நான் இதை வச்சன்” என்று துடித்தவள், அவன் தலையை எடுத்து தன் மடிமீது வைத்துக் கொண்டு கண்ணீர் விட, “செய்யறத எல்லாம் செஞ்சிட்டு இப்போ எதுக்குடி அழற? ராக்ஷஷி!” என்று அவன் கத்த,சுவற்றில் நன்றாக சாய்ந்து இரண்டு காலையும் நீட்டி அவன் தலையைத் தன் தொடையில் வைத்தவள், அரிப்பதால் அந்த இடத்தில் அவன் நகம் படாமல் இருக்க அவன் இரண்டு கைகளையும் சேர்த்து அவன் வயிற்றில் வைத்து தன் கையால் பிடித்துக்கொண்டவள். “நான் சும்மா விளையாட்டுக்குத் தாங்க செய்சேன். இப்போ இப்படி ஆயிடுச்சே” என்றவள் குனிந்து உதட்டைக் குவித்து அந்த இடத்தில் ஊப்…. ஊப்….. ஊப்…. ன்று ஊதியவள். “எனக்குத் தெரியலையே! நீங்களாச்சம் சொல்லுங்களேன், நான் இப்போ என்ன செய்ய?” என்று அழுதுகொண்டே கேட்க, அதற்கு அவனிடம் பதில் இல்லாமல் போக,‘என்ன சத்தமே காணோம்?’ என்று நினைத்து தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, அவனோ தன் கண்ணிமைகளை அசைக்காமல் அவள் முகத்தையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்தான். ‘எனக்கு என்ன தேவைனு உனக்குத் தெரியாதா மித்ரா?’ என்று அவன் கண்ணால் கேட்க, கூடவே அவன் கண்ணில் காதலும் ஏக்கமும் போட்டிப் போட்டது. அவன் ஏக்கத்தை ஒரு பெண்ணாக இல்லை என்றாலும் மனைவியாக புரிந்து கொள்ளத் தான் அவளால் முடிந்தது ஆனால் இரண்டு பேருக்குள்ளேயும் பேசித் தீர்க்காத பல பழைய விஷயங்கள் அப்படியே இருக்க, இப்போது அவளால் என்ன செய்ய முடியும்?

அவள் பேசாமல் தலை குனிய, தன் முகத்தை அவள் கால் பக்கமாக திருப்பியவன் அவள் பிடியிலிருந்து தன் இடது கையை உறுவியவன் அவள் கொலுசில் ஆரம்பித்து மெட்டி அடி பாதம் என்று தன் விரலால் கோலம் போட, அவன் விரல் பட்டதில் காலில் ஏற்பட்ட குறுகுறுப்பு அவள் உடல் எங்கும் பரவ மனதுக்குள் இம்சையாக உணர்ந்தாள்! அதுவும் சுகமான இம்சையாக உணர்ந்தாள் மித்ரா! சிறிது நேரம் கழித்து,“நான் பாட்டுப் பாடறன், நீங்க தூங்கறிங்களா?” என்று இவள் கேட்க “ம்ம்ம்…..” என்றான் விரலால் கோலம் இட்டுக் கொண்டே!“யமுனை ஆற்றிலே

ஈரக் காற்றிலே

கண்ணணோடுதான் ஆட…உண்மையில் அவள் குரலின் இனிமையிலும் பாட்டு சுவாரஸ்யத்திலும் அவன் தூங்கி விட தன்னை மீறி அவளும் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கியவள். திடீர் என்று தூக்கம் கலைந்து பார்த்தவள், தேவ் தன் இடுப்பைச் சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவள் வயிற்றில் தலை கவிழ்ந்து முகம் புதைத்து தூங்க, அவன் கேசத்தைத் தன் விரலால் கோதியவள், பின் அவன் முகம் நிமிர்த்தி தலையணையில் அவனைப் படுக்க வைத்தவள் முதல் முறையாக அவனை ஒட்டிக் கொண்டு படுத்தாள் மித்ரா!மறுநாள் திருவிழாவின் போதுஊர்மக்கள்அனைவருக்கும் கறிசோறு போடுவதைதேவ் குடும்பமே செய்து வர அன்று அவன் டென்ஷனுடனேயே திரிவது போல் பட்டது மித்ராவுக்கு. உற்றுப் பார்த்தால் அவன் மட்டும் அல்ல எல்லோருமே இறுக்கத்துடனே இருப்பதாகவேப் பட.அதைத் தெரிந்துகொள்ள வேதாவிடம் “என்ன பிரச்சனை அத்த? என்னாச்சு ஏன் எல்லோரும் கொஞ்சம் டென்ஷனா இருக்காங்க?” என்று கேட்க “பிரச்சனை ஒன்னும் பெரிசு இல்ல மித்ரா! சொல்லப் போனால் பிரச்சனையே இல்ல!... தன்னுடைய மண்ணையும் நாட்டு மக்களையும் நல்ல முறையில் வச்சி பாதுகாப்பவன் தானே ஓர் நல்ல அரசன்? அதைத் தான் தேவ்வின் தாத்தா செய்து வந்தார். அவரைப் பின் பற்றி இன்றுவரையில் தேவ்வும் செய்து வரான்.உனக்குத் தெரியுமா? இந்த இடம் அவன் சமஸ்தானம்! தேவ் இந்த இடத்திற்கு ராஜா! அப்படியிருக்க நாட்டு மக்கள் வாழ அவன் தாத்தாவை விட இவன் நிறைய செய்யணும்னு ஆசைப் பட்டான். அதனால் நல்ல பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, பஸ்வசதி, இயற்கையை அழிக்காத விவசாயம், படித்து முடித்து திறமையோடு இருப்பவர்களுக்கு நல்ல வேலை, இதை எல்லாம் விட இன்னும் வளர்ச்சியே அடையாத எத்தனையோ பின் தங்கிய கிராமங்களைத் தத்து எடுத்து அவர்களையும் முன்னேற்றுகிறான்” என்று நிறுத்தி “இதுல தப்பு என்ன இருக்கு மித்ரா?” என்று அவர் கேட்க “தப்பா? இதுல தப்பு இல்லையே அத்தை” என்றாள் மித்ரா.“ஆனால் இதைத் தானே தப்புனு சொல்றாங்க! வரும்போது பார்த்து இருப்பியே தண்ணீயே இல்லாத காய்ந்து போன ஊரை?! அந்த ஊர்க்காரன் தான் தப்புனு சொல்றான். அவன் ஊரில் வளர்ச்சியே இல்லாமல், அவனைத் தாண்டியிருக்கும் நம் ஊரில் சகல வித வளர்ச்சியும் இருப்பதால் அந்த ஊர் இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து அவர்கள் கிராமத்தைத் தேவ்வைத் தத்து எடுக்கச் சொன்னாங்க. தேவ்வும் சம்மதம் தெரிவித்து அதற்கான வேலையில் இறங்க, அந்த ஊரை ஆள்பவன் விடுவானா? தேவ் மாதிரி அந்த ஊருக்கு அவன் ராஜாவாச்சே?!தேவ் மேலிருக்கும் போட்டிப் பொறாமையில் அந்த ஊரை அழித்தே தீருவேன்னும் தத்து எடுக்கத் தேவ்வை விட மாட்டேன்” என்ற முடிவுடன் இருக்கான். இதையெல்லாம் மனசில் வச்சிகிட்டு நம்ம ஊர்லயிருந்து அவன் ஊர் வழியாகப் போகும் பஸ்களுக்கு இடையில் பல பிரச்சனைகள் கொடுக்க. நெறய பேர் உயிர் பயத்தில் தினமும் செத்து செத்துப் பிழைத்தாங்க,அவர்களுக்குத் தீர்வாக வேறு ஒரு வழியில் ஆற்றின் மீது பாலம் கட்டிக் கொடுத்து ஊர் மக்கள் போய் வர தேவ் வழி செஞ்சான். ஆனால் அவன் இதுவரை அந்தப் பாலத்தின் வழியாக ஊருக்குள் வந்தது இல்ல. எப்போதும் அவன் ஊர் வழியாகத் தான் வருவான். அன்று கூட அதனால் தான் எங்கள அந்தப் பாலத்தின் வழியா அனுப்பிட்டு உன் கூட அவன் அந்த வழியா வந்தான்!” என்று அவர் சகலமும் சொல்லி முடிக்க மித்ராவுக்கு மனதுக்குள் பெருமையாக இருந்தது!.‘என் கணவன் நல்லவன் மட்டும் இல்ல, மற்றவர்கள் நல்லா வாழ வழி செய்பவன்! அதற்காக அவன் எந்த எல்லைக்கும் போவான், தன் உயிரையும் துச்சமென நினைப்பவன். வீரன்! உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று காட்டவும் அப்படியே வந்தாலும் ஒண்டிக்கி ஒண்டி நின்று பார்க்கத் தயார் என்பதற்காகவே அவன் எப்போதும் அந்தப் பக்கமாக வருகிறான்’ என்று நினைத்து என் கணவன் என்று பெருமைப் பட, அவள் மவுனத்தைப் பார்த்த வேதாவோ தப்பாக நினைத்து“ஏன் மித்ரா, இப்படிச் செய்து அந்தப் பக்கமாக வருவதால் பல பகைவர்களை சம்பாதித்துக் கொள்வது தப்புனு நினைக்கிறியா?” என்று கேட்க “இல்ல அத்த இல்ல! இப்படி எல்லாம் என் புருஷன் செய்யறத நான் பெருமையா நினைக்கிறன்! அவர் என்ன தப்பா செய்யறார்? நல்லது தான செய்யறார்! இன்னும் சொல்லப் போனா எனக்கு இப்படி எல்லாம் செய்யற கணவர்தான் வேணும்னு நினைச்சன்! இந்த வினாடியில் இருந்து அவர் செய்யற எல்லா நல்லதுக்கும் நான் துணை இருப்பேன்!” என்று உணர்ச்சி பெருக்கில் கூறி அவர் கையை அழுத்த.என் கணவர் என்று சொன்ன வார்தையில் உச்சி குளிர்ந்தார் வேதா! “ஓ….. அதனால் தான் அந்த எதிரிகளால் இன்று எதாவது நடந்து விடுமோனு பயப்படுறாறா?” என்று கேட்டவள் உடனே “இல்ல இல்ல.. பயம் இல்ல! யாருக்கும் எதுவும் நடக்காமல் இருக்க சற்று அதிக அக்கறை எடுத்துகணுமே! அதனால் தான் இப்படி டென்ஷனா இருக்காறா?” என்று பதிலும் அவளே சொல்லிக் கொள்ள, “ஆம்” என்று தலையசைத்தார் வேதா.சற்று நேரம் இருவரும் அவரவர் சிந்தனையில் அமர்ந்திருக்க வேலைக்காரப் பெண்மணி ஒருவர் அங்கு வந்து அப்பத்தாவுக்கும் தேவ்வின் அம்மாவுக்கும் மதிய உணவு வீட்டிலிருந்து வந்து விட்டதாக சொல்ல “ஏன் வீட்டிலிருந்து வந்திருக்கு? இங்க கறிசோறு சாப்பிட மாட்டாங்களா இரண்டு பேரும்?” என்று மித்ரா கேட்க“அக்கா (விசாலம்) எப்போ படுக்கையில் விழுந்தாங்களோ, அப்போதிலிருந்தே சாப்பிடறது இல்லஅப்பத்தா. நாளைக்குப் பூ குழி விழாவுல அவங்க இறங்கப் போறாங்க. அதனால் தான் சாப்பிடல” என்றார் வேதா. “பூ குழினா என்ன?” என்று மீண்டும் அவள் கேட்க, “தீ மிதி திருவிழாவத் தான் அப்படி சொல்லுவாங்க. நாளைக்கு யார் யார் எல்லாம் தீ மிதிக்கப் போறாங்களோ அவங்க யாரும் கறிசோறு சாப்பிடக் கூடாது.இந்த ஊர் அம்மன் அரக்கனை அழித்துக் கொன்றவள்! அவனைக் கொன்ற பாவத்தைப் போக்கவும் அந்த அரக்கனின் உதிரம் தன் உடலில் பட்டு விட, அதைக் கழுவித் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ளவும் அக்னி மூட்டி அதில் இறங்கித் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டதால் இந்த ஊர் மக்கள் தங்கள் வேண்டுதல்களை அந்த தாய் நிறைவேற்றி விட்டால் அதையே நேர்த்திக் கடனாகச் செய்து வராங்க” என்று அவள் கேட்காத சில கோவில் தகவல்களையும் தந்து விட்டு அவர் சென்று விட,அவர் அப்படிச் சொன்னதில் ஆணி அடித்தார் போல் அங்கேயே அமர்ந்து அவர் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. “தன் பாவத்தைப் போக்கவும் தன் மேல் பட்ட அசிங்கத்தைக் கழுவிக் கொள்ளவும் அந்த அம்மனே தீயில் இறங்கினாள் எனும் போது, நான் செய்த பாவத்தைப் போக்கவும் எனக்கு ஏற்பட்ட அசிங்கத்தைக் கழுவவும் நானும் நாளைக்குத் தீயில் இறங்கினால் என்ன?” என்று முடிவு எடுத்தவள். அவளை சாப்பிட அழைக்க வந்த நித்திலாவிடம் தனக்கு கறிசோறு வேண்டாம்னும் நாளைக்கு தான் தீ மீதிக்கப் போவதாகவும் சொல்லி அனுப்பினாள் மித்ரா.நித்திலா சென்று தேவ்விடம் என்ன சொன்னாளோ? சற்று நேரத்திலே அங்கு வந்ததேவ் “என்ன மித்ரா, நித்திலா ஏதோ சொல்றா? எதுக்கு நீ தீ மிதிக்கப் போற?” என்று கேட்க “அப்படிச் செய்தா நாம செய்த பாவம் விலகுறது மட்டும் இல்லாம நம்ம மேல ஒட்டுன அழுக்குக் கறை எல்லாம் போய்டுமாமே! அப்ப நான் செய்யட்டுமா?” என்றாள் தலையை ஆட்டி வெகுளியாக. அவள் முகத்தையே பார்த்தவன் எதை நினைத்துச் சொல்கிறாள் என்பது புரிய “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!” என்க. “இல்ல நாளைக்கு நான் போவன் தான்! செய்வேன் தான்!” என்றாள் உறுதியாக.அவள் முகத்திலும் குரலிலும் உறுதியைப் பார்த்தவன் “நீ என்ன சொன்னாலும் சரி! சாப்பிடு இல்ல சாப்பிடாம பட்டினி கிடந்தாலும் சரி! உன்ன நான் விட மாட்டேன், ரூமுக்குள்ளயே உன்ன அடச்சி வச்சிக் கூடவே உனக்கு நான் காவல் இருப்பனே தவிர உன்ன பூ குழியில் இறங்க விட மாட்டேன்!” என்று அவளை விட உறுதியான குரலில் கூறியவன் அங்கிருந்து சென்று விட,இனி தேவ் என்ன கேட்டாலும் சம்மதிக்க மாட்டான்னு உணர்ந்தவள் முதல் முறையாக அவளாகவே அப்பத்தாவிடம் சென்றவள். மதிய உணவுக்குப் பிறகு சற்று ஓய்வாக மர நிழலின் கீழிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தவரிடம் வந்து நின்ற மித்ரா, “அம்மச்சி உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்றாள். “என்றா அதிசயம்! நீயாவே வந்து நிக்கரவ! சரி புள்ள, அத இப்படி செத்த கட்டில்ல ஒக்காந்து சொல்லு தாயி” என்று கட்டிலில் இடம் கொடுத்தார். அவர் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் “நாளைக்கு உங்க கூட சேர்ந்து நானும் தீ மிதிக்கவா?” என்றாள் நேரடியாகவே.“ஏன் தாயி, எதுக்கு?” என்று கேட்க அவள் தேவ்விடம் சொன்னதையும் அதற்கு தேவ் சொன்ன பதிலையும் சொல்ல, “அதனால் நீங்க தான் அவர் கிட்ட எடுத்துச் சொல்லணும் நான் உங்க கூட இறங்குறனு!” என்று இவள் வழி எடுத்துக் கொடுக்க “அவன்தேன் வேணாமுன்னு சொல்லிப்போட்டானுல்ல? பொறவு எதுக்கு? விடு கண்ணு” என்றார் அவர். “இல்ல, அப்படிச் செய்தா பாவம் போகுமாமே! அதான்..” என்று மித்ரா மறுபடியும் சொல்ல.“இப்ப உன்ற ஆரு கண்ணு பாவம் செஞ்சிப்போட்டவனு சொல்றது? நீ சொக்கத் தங்கம் கண்ணு! அதேன் என்ற ராசாவோட கிரீடத்துல வைரமாட்டும் ஜொலிக்கரதுக்கு நீ வந்து போட்ட! நீ செஞ்சிப்போட்ட புண்ணியம்தேன் என்ற ராசா உனக்கு கெடைச்சானல்லோ, என்ற ராசா செஞ்சிப்போட்ட புண்ணியம்தேன் நீ அவனுக்கு கெடைச்சதும் கண்ணு! மனசுக்குள்ளாற எதும் போட்டுக் கொடாயாம என்ற பேராண்டி சொல்றத அப்டியே கேட்டுப்போடு! என்ன நா சொல்றது?” என்று அவர் இதமாக எடுத்துச் சொல்ல, எப்போதும் கோபமாகவே பேசும் அம்மச்சி இன்று இப்படிப் பேச அதில் மனம் நெகிழ்ந்தவள், “நான் கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கவா?” என்று அனுமதி கேட்க,“அடி ஆத்தி! இத வேற கேப்பியோ கண்ணு?! நீயும் என்ற பேத்திதேன், படுத்துக்க தாயி” என்று சொல்லி அவளை அரவணைத்துக் கொள்ள, அவர் மடியில் படுத்துத் தன் மனதுக்கு அமைதி தேடினாள் மித்ரா.பிறகு வீட்டிற்கு வர இரவு உணவுக்கு எவ்வளவு அழைத்தும் வெளியே வராமல் தங்கள் அறையிலே இருந்தாள் மித்ரா. மதியமும் சாப்பிடவில்லை இரவும் வரவில்லை.இதெல்லாம் தேவ்வுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் அவளை சமாதானப் படுத்தவில்லை. இரவு சாப்பிட்டு அறைக்கு வந்தவன் அவளிடம் எதுவும் பேசவும் இல்லை. இரவு பத்து மணிவாக்கில் அம்மன் அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சி கோவிலில் இருக்க, அதற்குப் பெண்களும் குழந்தைகளும் போகக் கூடாது என்பதால் அதை அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் அவன் மட்டும் கிளம்பியவன், பிறகு இரவு ஒரு மணிக்குப் பூஜை முடித்து வந்து படுக்க அவள் இன்னும் தூங்கவில்லை என்பதை அறிந்தவன் அவளைப் புரட்டித் தன் மார்பு மீது போட்டு அவளை இறுக்கி அணைத்தான்.“நான் சொல்றதக் கேளுடி, எனக்கு வேண்டுதல் இருக்கு நான் தீ மிதிக்கப் போறனு நீ கேட்டிருந்தா நான் சரினு சொல்லியிருப்பேன். நீ என்னமோ பாவம் அழுக்கு கறைனு ஏதேதோ சொல்ற. இப்படி எல்லாம் சொன்னா நான் எப்படி சம்மதிப்பேன்? முதல்ல இப்படி எல்லாம் உளர்றத நிறுத்து. அதை எல்லாம் நேர்த்திக் கடனா மட்டும் பாரு” என்று அவள் தலையை வருட, அவனை ஒட்டிக் கொண்டு படுத்திருந்தவள் “இல்ல நான் சொல்றதையும் கொஞ்ச…….” என்று அவள் ஆரம்பிக்க,“போதும் மித்ரா, நிறுத்து! உன் பைத்தியக்காரத் தனத்திற்கும் ஒரு அளவு இருக்கு. இவ்வளவு நேரம் நான் பொறுமையா பேசினன். என் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கு” என்று அதட்ட அவள் உடல் நடுங்கியது. அதை உணர்ந்தவன் “நீ எந்த பாவமும் செய்யல. உன் மேல எந்த அழுக்கும் ஒட்டிட்டு இல்ல. நீ எனக்கே எனக்குனு பிறந்த தேவதை!” என்று கூறியவன் அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தம் வைக்க,தேவ் இப்படி முத்தம் கொடுப்பது ஒண்ணும் முதல் முறை இல்லைதான். ஆனால் இந்த முத்தம் ஏதோ புதிதாக ஆழப் பதிந்தது அவள் மனசுக்குள்! ஆனாலும் அவள் மனதின் மூலையில் ‘என்னுடைய பழைய வாழ்க்கையில் முன்பு நடந்ததைப் பற்றி தெரிந்த பிறகும் தேவ் இப்படி சொல்வானா இல்லை மட்டமாக நினைப்பானா?’ என்று யோசித்தவள் பிறகு அதை மேற்கொண்டு சிந்திக்க முடியாமல் கண்களை இறுக்க மூடி தூங்க ஆரம்பித்தாள் மித்ரா.மறுநாள் காலை தீ மிதி திருவிழா சிறப்பாக நடந்து முடிய மாலை அம்மனின்உக்கிரத்தைக் குறைக்க அம்மனை மஞ்சளில் நீராட்டுவார்கள். இதையே அந்த ஊர் இளசுகள் அதாவது முறை கொண்ட பிள்ளைகள் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவார்களாம். இதையெல்லாம் நித்திலா மூலம் அறிந்த மித்ரா சினிமாவில் வருவது போல் தேவ்வைத் துரத்திப் பிடித்தி அவன் மேல் மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும் என்று ஆசையில் எங்கோ போயிருந்த தேவ் திரும்ப வரும் வரை காத்திருந்து அவன் வந்து விட்டான் என்றறிந்து ஓர் சொம்பு நீரில் மஞ்சள் கலந்து அவனைத் தேடிச் செல்ல.அவனோ கொல்லைப் புறத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, பேசியவர் போகும்வரை இவள் மறைவாக நின்று எட்டி எட்டிப் பார்க்க அவளைப் பார்த்து விட்டான் தேவ். பேசி முடித்து வீட்டின் உள்ளே சென்றவன் வேறு ஒரு வாசலின் வழியாக வெளியே வந்தவன் பின்புறமாக அவளை அணைக்க, யாரோ ஏதோ என்று கத்தப்போனவளை “ஏய்! கத்தாதடி நான் தான்” என்று சொல்லி அவளை முன்புறம் திருப்பியவன் “இப்ப எதுக்குடி என்ன மறஞ்சிருந்து பார்த்த? அது என்ன கையில?” என்று கேட்க “மஞ்சள் நீர்” என்றாள் வெட்கத்துடனே.இப்படி அவளைப் பார்ப்பது தேவ்வுக்குப் புதுசு! “அது எதுக்குடி?” கேட்க. “உங்க மேல ஊத்த” என்றாள் மீண்டும் வெட்கப்பட்டு! “அடியேய், அது மாமன் பொண்ணு அத்தை பையன் மாதிரி முறை உள்ளவங்க மேல ஊத்தறதுடி” என்று இவன் விளக்க, “இருக்கட்டுமே! நான் உங்க மாமன் பொண்ணுதான்! நீங்க என் அத்த பையன் தான்! இன்னும் சொல்லப் போனா என் புருஷன் மேல நான் ஊத்துறன்!” என்று அவள் மிடுக்காகச் சொல்ல அவள் சொன்ன பதிலில் சிரித்தவன் “அப்ப ஊத்து” என்றான் தேவ். “இப்படிக் கட்டிப் பிடிச்சிட்டு இருந்தா எப்படி ஊத்தறதாம்?” என்று அவள் சினுங்க, “சரி விட்டுறன்” என்றவன் அவளை விடுவித்து சற்று விலகி நிற்க, “அச்சோ…. அச்சோ….” என்று தலையிலேயே அடித்துக் கொண்டவள், “இப்படி எல்லாம் சினிமாவில ஊத்த மாட்டாங்க! நீங்க ஓடணும் நான் துரத்தி வந்து ஊத்தணும்” என்று சினுங்கலோடு சொல்லி அவள் தன் இமைகளைத் தாழ்த்திக் கொள்ள,“சினிமால அந்த ஒரு சீன் மட்டும் தான் வருமா?” என்று அவன் கேட்க “ஆமாம்!” என்று தலையாட்டியவள் பிறகு அவன் குரலில் உள்ள மாற்றத்தை உணர்ந்து விழி உயர்த்தி அவன் முகம் பார்க்க அவன் பார்வையோ தன் உதட்டின் மேல் இருப்பதை உணர்ந்தவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் “ச்சீ…..” என்று சொல்லி அவனைப் பிடித்து தள்ளிவிட்டு ஓடினாள் மித்ரா.சற்று தூரம் ஓடியவள் அவளுக்கு வலது புற திசையில் இருந்து மீரா மஞ்சள் நீருடன் கௌதமை துரத்தி வருவது காதில் கேட்க, ‘எங்கே வரும் மீரா தன் கணவன் மேல் ஊத்தி விடுவாளோ?’ என்ற பயத்தில் திரும்பத் தேவ்வை தேடி இவள் செல்ல அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றவன் பின்புறம் கொலுசொலி கேட்க என்ன என்று கேட்கத் திரும்பியவன் முகத்தில் சடாரென்று மஞ்சள் நீரை ஊற்றியவள்“ஐய்….! நான் ஊத்திட்டனே!” என்று அவள் குதியாட்டம் போட, அதே நேரம் மீராவோ அங்கு கௌதமின் மேல் ஊற்றியிருக்கப், பின் இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் பார்த்து அசடு வழிய விலகிச் சென்றனர். அன்று முழுக்க இதே சந்தோஷமான மனநிலையிலேயே இருந்தான் தேவ்.மறுநாள் திருவிழாவின் கடைசி நாளான இன்று சுமங்கலி பூஜை என்றும் நாள் முழுக்க விரதம் இருந்து கோவிலில் திருக்கல்யாணம் முடிந்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என்றும் அப்பத்தா தெளிவாகச் சொல்லி விட, அதைக் கேட்ட மித்ராவும் அவர் சொன்ன படியே நாள் முழுக்க விரதம் இருந்தாள். காலையில் வெளியே சென்ற தேவ் பத்து மணி வாக்கில் வீட்டிற்கு வந்தவன், மித்ராவைத் தேட, அவள் கணக்குப் பிள்ளை அறையில் வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்க அங்குச் சென்றவன் அவளைத் தங்கள் அறைக்கு வரும்படி அழைக்க, ‘என்னவாக இருக்கும்? என்ற யோசனையுடன் அவள் எழுந்துச் செல்ல. அங்கு போனால் கடையிலிருந்து நிறைய ஃபிரஷ் ஜுசை பிளாஸ்டிக் டின்களில் அடைத்து அவள் குடிக்க வாங்கி வந்திருந்தான் தேவ்.அதைப் பார்த்தவள் ஏன் என்று அவன் முகம் பார்க்க “அப்பத்தாலாம் கடுமையா விரதம் இருப்பாங்க. உன்னையும் அப்படி இருக்கச் சொல்லுவாங்க. நீ ஒண்ணும் அப்படி எல்லாம் இருக்க வேண்டாம். நீ தான் பசி தாங்க மாட்டியே?! அதனால் இந்த ஜுசை மட்டுமாவது குடி” என்ற தேவ்வை ஒரு தாயாய் தன் பசியைப் போக்கத் துடிக்கும் கணவனைப் பெருமைப் பொங்கப் பார்த்தவள் “யார் சொன்னா எனக்குப் பசி எடுக்கும்னு? இது என் செல்லப் புருஷனுக்காக அவர் நல்ல மாதிரி இருக்கணும்னு வேண்டிக்கிட்டு நான் மனசார செய்ற பூஜை! அதனால எனக்குப் பசியே எடுக்காது” என்றவள் அவனை நெருங்கித் தன் இரண்டு கையையும் அவன் கழுத்தில் மாலையாக இட்டு அவன் முகத்தை வளைத்து, “வேணும்னா ஒன்னு செய்யலாம்” என்றவுடன் அவன் “என்ன?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க.“என் புருஷன் என் மனசுல தான் இருக்கார்! அப்ப, இந்த ஜுசை எல்லாம் அவரே குடிக்கட்டும். என் மனசுல இருந்தபடியே எனக்குத் தெம்பையும் தைரியத்தையும் அவர் கொடுப்பார்” என்று தலையை ஆட்டி ஆட்டி அவள் கூற, அவள் கண்ணையும் முகத்தையும் பார்த்தவன் ‘இது வெறும் வார்த்தை இல்லை! அவள் மனதின் உள்ளிருந்து வந்தது!’ என்று அறிந்தவன், உள்ளத்தில் சந்தோஷம் பொங்க “ஏன் மித்ரா கிஸ் பண்ணா விரதம் கெட்டுப் போய்டுமா?” என்று கேட்க, இமைகளைத் தாழ்த்திக் கொண்டு “ம்ம்ம்…..” என்று அவள் மறுபடியும் தலையசைக்க அவளுடன் சேர்ந்து அவள் காதில் போட்டிருந்த ஜிமிக்கியும் ஆடியது. அதைப் பார்த்து ரசித்தவன் “அப்ப நைட் வச்சிக்கலாமா?” என்று ஹஸ்கி வாய்சில் கேட்க, ‘என்ன’ என்று திடுக்கிட்டு விழி உயர்த்தி அவன் முகம் பார்க்க. “நான் முத்தத்த வச்சிக்கலாமானு கேட்டன்டி” என்றான் தேவ் மழுப்பலாக. அவன் மழுப்பலில் வாய் விட்டுச் சிரித்தவள் எக்கி அவன் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி, “வச்சிக்கங்க! வச்சிக்கங்க!” என்று கூறி அவனை விட்டு விலகி, “இப்ப இந்த ஜுசை நீங்களே குடிச்சிடுங்க” என்று சொல்லிச் சென்றாள் மித்ரா.அன்று கோவிலில் திருக்கல்யாணம் நடக்க, அம்மன் மடியில் வைத்துப் பூஜித்த தாலிச் சரடை (மஞ்சள் கயிறை) அனைத்துப் பெண்களுக்கும் கொடுக்க. சிலர் அங்கேயே தங்கள் தாலிக் கயிறை மாற்றிக் கொள்ள ,மித்ராவின் கயிறு இப்போது தான் மாற்றியது என்பதால் அவளைப் பிறகு மாற்றச் சொல்லி விட, சரி என்றாள்.பின் வீட்டிற்கு வந்து பூஜை அறையில் பால் பழம் இனிப்பு வைத்துப் பூஜித்துக் கணவன் காலில் விழுந்து நமஸ்காரம் வாங்கி கணவன் கையால் கொடுக்கும் பால் பழத்தை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்பதால் வீட்டிற்கு வந்து பூஜை செய்து தேவ் கையால் வகிட்டிலும் திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைக்கச் சொன்னவள் பின் அவன் காலில் விழுந்து வணங்கி அவன் கொடுத்த பாலும் பழமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க, இருவருக்குள்ளும் இன்று தான் திருமணம் நடந்தது போல் சந்தோஷம் பிறந்தது! இருக்காதா பின்னே? இரண்டு மனங்களும் ஒன்றாகி விட்டது இல்லையா?! பின் அவள் கையைப் பிடித்துச் சென்றவனோ அப்பாரு அப்பத்தா, மித்ராவின் தாத்தா மற்றும் விசாலத்தின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க.விசாலத்திடம் மட்டும், “அன்னைக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க கூப்டப்ப நான் வரல. அது தப்புதான்! அதுக்காக என்ன மன்னிச்சிடுங்க அத்த” என்றாள் மித்ரா அந்தத் தவறை உணர்ந்தவளாக. “என் மகனை நீ நல்லா பார்த்துக் கிட்டா எனக்கு அதுவே போதும்” என்று ஒரு தாயாகக் கூறி அவளை அணைத்துக் கொள்ள, வார்த்தைகள் குழைவாக வந்தாலும் அவர் பேசியது மித்ராவுக்கு நன்றாக புரிந்தது. இரவு உணவுக்குப் பிறகு தங்கள் அறைக்கு வந்தவள் ருத்ராவைக் கட்டிலின் சுவற்றோரம் விட்டு விட்டு இவர்கள் இருவரும் பக்கம் பக்கம் படுக்க தேவ் வழி செய்திருக்க, அதைப் பார்த்தவள் சிரித்து விட, அவள் சிரிப்பதைப் பார்த்து அசடு வழிந்தவன் “நீ பக்கத்துல இல்லனா எனக்கு தூக்கம் வர மாட்டுதுடி!” என்று அவன் கூற ‘எனக்கும் அப்படி தான்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் பின் அவன் மார்பிலே தலை சாய்த்துப் படுத்து விட, சிறிது நேரம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. திடீர் என்று தேவ், “ஏன் மித்ரா நாம இங்கையே இருந்திடுவோமா?” என்று கேட்க.“ஆனா உங்களுக்கு அங்க தான வேலை?” - மித்ரா“பரவாயில்ல! அதை நான் எப்படி மேனேஜ் பண்ணனமோ அப்படிப் பண்ணி க்கிறேன்” - தேவ்“இப்ப ஏன் திடீர்னு இங்க இருக்கலாம்னு சொல்றீங்க? - மித்ரா“ஏன்னா நீ இங்க தான சந்தோஷமா இருக்க!” என்று தேவ் சொல்ல, தன் கணவன் தனக்காக பார்க்கிறான் என்று உணர்ந்தவள் “இல்ல! இனிமே நான் எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பேன். அதனால் நாம அங்கேயே இருக்கலாம்” என்று சொல்ல, தன் மனைவி தனக்காகப் பார்க்கிறாள் என்று சந்தோஷப் பட்டவனோ. அவளைப் பார்க்கும் போது எல்லாம் “போன வாரம் இருந்த மித்ராவுக்கும் இன்று இந்த வினாடி இருக்கும் மித்ராவுக்கும் எவ்வளவு வேறுபாடு!’ என்று நினைத்து ஆச்சரியப் பட்டுத்தான் போனான் அவன்.முன்பு இருவருக்கும் இடையில் இரும்பு சுவராக இருந்தது பிறகு கல்சுவராக மாறி இப்போது மெல்லிய நூல் சுவராக உள்ளது. அதுவும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. அந்த நூல் சுவரும் அறுபடுவதற்காகக் காத்திருக்கிறான் தேவ்! ஆனால் மித்ராவோ, ‘அந்த நூல் சுவர் உடையுமா இல்லை கடைசி வரை இருக்குமா?!’ என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள். இருவரும் தங்கள் சிந்தனையிலேயே இருக்க அன்றைய இரவு அப்படியே கழிந்தது.மறுநாள் காலையில் அவள் வழக்கம் போல் சீக்கிரமாக எழுந்திருக்க நினைக்க, அவள் எழ முடியாதபடி வயிற்றில் அவன் கை போட்டுப் படுத்திருக்க. ‘இவருக்கு இதே வேலையா போச்சி!’ என்று மனதுக்குள் சந்தோஷமாக நினைத்து சலித்துக் கொண்டவள் அவன் புறமாக திரும்பி “ஏங்க காலையிலே கோவிலுக்குப் போகணும் லேட்டானா அம்மச்சி திட்டுவாங்க!” என்று சொல்ல, அவனோ “பேசாம தூங்குடி, நேற்றோட கோவில் திருவிழா முடிஞ்சிடுச்சி. அதனால அப்பத்தாவும் வரமாட்டாங்க, உன்னத் திட்டவும் மாட்டாங்க” என்றவுடன் அவனுடன் சேர்ந்து இவளும் சற்றுக் கண் மூடினாள்.சிறிது நேரத்திற்குள் ஒருகளித்துப் படுத்திருந்த அவர்கள் இருவருக்கும் இடையில் ருத்ரா வந்து படுக்க, அதைப் பார்த்த மித்ரா “ஏன்டி குட்டி வாண்டு, உன் இடத்தில படுக்காம இங்க எதுக்குடி படுக்கற?” என்று அதட்ட, ருத்ராவோ “அது தான் உன் இடம். இதுதான் பாப்பா இடம். அப்டி தானே அப்பு?” என்றவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனைத் துணைக்கு அழைக்க, அவனோ “ஆமாம் செல்லம், என் குட்டிமாக்கு தான் இந்த இடம்! அப்பறம் தான் உங்க அம்மாக்கு!” என்றவன் மித்ராவைப் பார்த்துக் கண் சிமிட்ட.ஏற்கனவே ருத்ரா வந்து படுத்ததில் முகம் தொங்கிப் போனவள் தேவ் இப்படிச் சொல்லவும் கண் கலங்கி விட்டாள். அதைப் பார்த்தவனோ, மல்லாந்து படுத்து ருத்ராவைத் தன் இடது பக்க தோளில் படுக்க வைத்தவன் வலது கை நீட்டி “இங்கு வா” என்று அழைக்க இவள் வராமல் முரண்டு பண்ண, அதில் கோபம் உற்றவன் “என்ன மித்ரா குழந்தை எதிர்க்க?” என்று அதட்ட அதன் பிறகு அவனிடம் வந்து ஒட்டிப் படுத்தாள் மித்ரா. குழந்தையிடம் கூட தன்னை விட்டுக் கொடுக்க முடியாத அவளின் மனநிலையை உணர்ந்தவனோ “நீங்க ரெண்டு பேர் தான் என் உலகம்! நான் உங்க ரெண்டு பேருக்கும் தான் சொந்தம்!” என்றான் தேவ்.திருவிழா முடிந்த மறுநாள் அவன் ஊரில் கோச்சிங் சென்டரைத் திறக்க இருந்தான் தேவ். கலெக்டரில் இருந்து க்ளார்க் போஸ்ட் வரை சேர அங்கு கோச்சிங் தர ஏற்பாடு செய்திருந்தான். முழுக்க முழுக்க எல்லா கிராமப்புற இளைஞர்களும் இலவசமாகப் படித்து திறமை மற்றும் துடிப்பு உள்ளவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வழி செய்து, அப்படிப் பட்டவர்களை அவன் தத்து எடுத்த கிராமங்களில் அரசாங்க ஊழியர்களாக உட்கார வைத்து அந்த ஊர்களுக்கு நல்லது செய்ய நினைத்தான்.ஏனெனில் அரசாங்க அதிகாரிகள் ஒழுங்காக இருந்தால் அந்த ஊரே வளர்ச்சி அடையும் என்பது அவன் எண்ணம்! அப்படிப் பட்ட கோச்சிங் சென்டர் கட்டிடத்திற்கு நாளை திறப்பு விழா! இதெல்லாம் தேவ்வே மித்ராவிடம் சொன்னது. அது சம்மந்தப் பட்ட இறுதி கட்ட வேலையை இன்று மாலை முடிக்கப் போக வேண்டும் என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.காலையில் இவன் தோட்டம் தொரவுகளைப் பார்க்கப் போய் விட, இத்தனை நாள் இருந்த வேலைகள் இன்று எதுவும் இல்லாமல் மித்ரா மட்டும் அமர்ந்திருக்க. அதைப் பார்த்த அப்பத்தா, “வெட்டு வெட்டுனு எதுக்கு இப்பிடி சொம்மா ஒக்காந்து கெடக்கவ? செத்த பொடிநடயா நம்ம தோட்ட தொரவுகள பாத்துப்போட்டு வாராமுல்ல? என்ற பேரனும் அங்கிட்டுத்தானே கெடக்கான்!” என்றார். அவர் முதலில் சொல்லும் போதே அங்கு போக வேண்டுமா என்று தயங்கியவள், தேவ் அங்கிருக்கிறான் என்றவுடன் போக சம்மதித்தாள் மித்ரா. பிறகு அவளை நித்திலாவுடனும் மீராவுடனும் அனுப்பி வைத்தார் அப்பத்தா.முதலில் மாந்தோப்பில் அவனைத் தேட, அவன் அங்கில்லை என்றவுடன் தென்னந்தோப்புக்குப் போக, அங்கும் அவன் இல்லை. ஆனால் அங்கிருந்த பப்பு செட்டுடன் இருந்த தண்ணீர் தொட்டி அவள் கண்ணைக் கவர, அதனிடம் சென்றவள் செவ்வக வடிவத்தில் நல்ல பெரிய நீர் தொட்டி சுற்றி சிமெண்ட் பூசி இருக்க நவீன யுக நீச்சல் குளம் போல் இல்லாமல் அந்தக் காலத்து குளம் போல் இருந்தது. அந்த நீரில் கால் நனைக்க நினைத்தவள் புடவையைச் சொறுகிக் கொண்டு அந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்து, தன் கால் நுனி விரலால் தண்ணீரைத் தொட அது சில்லென்று இருந்தது. அதனால் காலை மட்டும் நனைத்து நீரில் விளையாட, திடீரென்று ஒரு கை அவள் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தது.சடாரென நீரில் விழுந்தவள் சமாளிக்க முடியாமல் இரண்டு மூன்று முறை எம்பி நீரைக் குடிக்க, அவளைப் பிடித்து மேல் நோக்கி தூக்கியது அந்தக் கரம்! அது தேவ் தான் என்பதை அறிந்தவள், அவன் தோளில் தன் கைகளை ஊன்றி நிமிர்ந்து இடது கையால் தன் முகத்தில் இருந்த நீரைத் துடைத்து எறிந்தவள். “அறிவு இருக்கா? இப்படி தான் செய்வாங்களா? நித்திலாவும் மீராவும் இங்க தான் இருக்காங்க தெரியுமா?” என்று கோபப் பட. அவள் சொன்னதில் சிரித்தவன், “அவங்க நான் தண்ணிக்குள்ள இருக்கறத முன்னாடியே பார்த்துட்டாங்க! அதனால் தான் உன்ன என் கிட்ட விட்டுட்டுப் போய்ட்டாங்க” என்று சொல்ல “அப்படியா?” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க அங்கு யாரும் இல்லை!பின் அவனிடம் திரும்பியவள் “அதுக்காக இப்படி தான் செய்யறதா?” என்று மறுபடியும் கேட்டவள் தன் இரண்டு கையாலும் அவன் தோள்களை சராமாரியாக அடிக்க. “ஏய்…. ஏய்…. அடிக்காதடி! அதான் உடனே தூக்கிட்டன் இல்ல?” என்றவன் திடிர் என்று அவளிடம் “ஏன் மித்ரா, நீயா எனக்கு கிஸ் கொடுத்ததே இல்ல, இப்ப கொடேன்!” என்று கேட்க அதற்கு அவள் பேய் முழி முழிக்க, “சரி, லிப்ல வேணாம். அட்லீஸ்ட் நெத்தியிலாவது கொடேன்” என்று மீண்டும் அவன் குழைய, “உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்படி எல்லாம் பேசுறிங்க! முதல்ல என்ன அங்க உட்கார வைங்க, நான் போறேன்” என்றவள் ஒரு கையை நீட்டி சிமெண்ட் கட்டையைக் காட்ட“முடியாது, நீ கொடுக்கற வரைக்கும் நான் உன்ன போக விட மாட்டன்!” என்று அவன் சொல்ல “நீங்க சரிப்பட்டு வரமாட்டிங்க, நானே போய்க்கிறேன்” என்றவள் அவனிடம் இருந்து திமிரி காலை நீரில் உதைத்துக் கொண்டு இறங்கப் பார்க்க, “அடியேய் ராட்சஷி! இருடி நானே விடறேன்” என்றவன் அவளை சுவற்றின் மீது அமரவைத்தவன், “நித்திலாவும் மீராவும் இங்க தான் பக்கத்துல இருப்பாங்க, பார்த்து சீக்கிரமா வீட்டுக்குப் போ” என்றான் கரிசனமாக. “சரி சரி” என்றவள் “தண்ணி ரொம்ப சில்லுனு இருக்கு, நீங்களும் சீக்கிரம் குளிச்சிட்டு வீட்டுக்கு வாங்க” என்றாள் அதே கரிசனத்துடன்.அவள் மேலே அமர்ந்திருக்க, தண்ணீருக்குள் இருந்தபடியே அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன் “இப்படி எல்லாம் சொன்னா நான் சீக்கிரம் வர மாட்டன். எனக்குப் பிடிச்ச மாதிரி சொன்னா தான் நான் சீக்கிரம் வருவேன்” என்று சொல்ல, ‘என்ன மாதிரி?’ என்று சிறிது யோசித்தவள். பின் “டேய் புருஷா, சீக்கிரம் வீட்டுக்கு வாடா” என்று சொல்ல ‘இல்லை’ என்று தலையாட்டினான் தேவ். பிறகு “இந்தர் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்றாள் சின்னக் குரலில் அதில் கண்கள் பளிச்சிட! “இது எனக்குப் பிடிச்சிதான் இருக்கு! ஆனா நான் கேட்டது இது இல்ல!” என்று அவன் மீண்டும் மறுக்க.சற்று நேரத்திற்குப் பிறகு அவன் கேட்பது என்ன என்று புரிய, “ப்ளீஸ் அத்தான், தண்ணி ரொம்ப சில்லுனு இருக்கு அத்தான். சீக்கிரமா வீட்டுக்கு வாங்க அத்தான்!” என்றாள் அவன் முகம் பார்க்காமல் வெட்கம் ததும்பிய குரலில். சற்று நேரம் அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன், “நீ வீட்டுக்கு சீக்கிரம் போ” என்றான். திடீர் என்று அவன் குரலில் மாற்றம் தெரிய, ‘ஏன் எதற்கு இந்த திடீர் மாற்றம்?’ என்று யோசித்து அறிந்தவள் இவ்வளவு நேரம் இருந்த சகஜ நிலை மாறியது மனதை ஏதோ செய்ய.அதே மனநிலையில் அவனை விட்டுப் போக மனமில்லாமல் சுவற்றிலிருந்து வெளிப்பக்கமாக மண் மேட்டில் குதித்தவள். “டேய் லம்பா, உனக்கு திமிர் ஜாஸ்தி தான்! என்னையே அத்தான் சொல்ல வச்சிட்ட இல்ல? நீ வாடா வா! நைட் ரூமுக்கு தான வரணும்?! வா, நீயா நானானு ஓர் கை பார்த்திடுவோம்!” என்று ஏற்றி இறக்கி சொல்ல, அவள் சொன்ன பாவனையில் வாய் விட்டுச் சிரித்தவன்“அதுக்கு எதுக்குடி நைட்? இப்பவே பார்த்துடுவோம்!” என்று சொல்லி அவன் சுவற்றைப் பிடித்து மேலே எம்ப, எங்கே நிஜமாவே ஏறி வந்து தன்னை அடித்து விடுவானோ என்று பயந்தவள் ஓர் அடி பின்னே நகர. ஆனால் அவன் கண்ணில் குறும்பைப் பார்த்தவள், பின் தன் கண்ணை உருட்டி நாக்கைத் துருத்தி இடுப்பையும் தலையையும் ஆட்டி அவனுக்கு ‘வேவ்வ வேவ்வ’ என்று பழிப்புக் காட்டியவள். இறுதியில் “போயா!” என்ற சொல்லோடு அங்கிருந்து ஓடியே போனாள் மித்ரா.கட்டடத் திறப்பு விழா சம்மந்தமாக ஏதோ பேச மதியம் போக இருந்தவன் திடீர் என்று காலையிலேயே அதற்கான அழைப்பு வர, தோட்டதில் இருந்தபடியே மித்ராவுக்குப் போன் பண்ணி அவசரமா போக வேண்டியிருப்பதால் மதியம் உணவுக்கு வரமாட்டேன் என்றும் இப்போது போட்டுக்கொண்டு போக டிரஸ்சும் காரும் கௌதமிடம் கொடுத்தனுப்பச் சொன்னவன், இந்த தகவல்களையும் அப்பத்தாவிடம் சொல்லச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட.இவளும் அப்பத்தாவிடம் தகவல் சொல்லி மதிய உணவையும் சாப்பிட்டு முடித்து ஓர் குட்டித் தூக்கம் போட்டு எழுந்துப் பார்க்க, அப்போதும் தேவ் வந்திருக்கவில்லை. மனதுக்கே சற்று என்னமோ போல் இருக்க, வீட்டுத் தோட்டத்தையும் தாண்டி வாழைத் தோப்பு இருக்க அங்கே சற்று நேரம் இருந்து விட்டு வர அப்பத்தாவிடம் அனுமதி கேட்க. யாரும் இல்லாமல் தனியாக அனுப்பத் தயங்கியவர், அவள் முகம் சோர்ந்து போய் இருப்பதைப் பார்த்து சம்மதித்தார். “தோ பாரு கண்ணு, பொழுதோட வெரசா வந்துடோணும்! வெளங்குச்சா தாயி?” என்று சொல்லி அனுப்பினார்.அங்கு போய் சற்று நேரம் தான் இருந்திருப்பாள். அதற்குள் யாரோ அவளை நெருங்கி “அம்மணி, நம்ம தேவ் ஐயாவ ஆரோ கத்தியால குத்திப் போட்டுட்டாங்! ரத்தம் ஊத்தி ஐயா சாகக் கெடக்காரு தாயி! அங்கிட்டு ஆரையும் காணோம் தாயி! அதேன் உங்ககிட்ட சொல்லிப்போட ஓடி வந்தேனுங்!” என்று வந்தவன் பதட்டத்துடன் கூற. முதலில் மித்ராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஏதோ இன்று நடக்கப் போகுது’ என்று அவள் மனதுக்குப் பட்டது தான்! ஆனால் இப்படி தன் வாழ்வே அழிந்து போகும் என்று அவள் நினைக்கவில்லை. முன்பிருந்த மித்ராவாக இருந்தால் கொஞ்சமாவது நிதானித்து யோசித்துக் கேள்வி கேட்டு இருப்பாள்.ஆனால் இப்போது இருப்பவளோ தேவ்வை விரும்புவது மட்டும் இல்லாமல் தன் உயிரே இனி அவன் என்று இருப்பவள். அதனால் எதுவும் யோசிக்காமல் எங்க எப்படி என்ற கேள்வியுடன் உடல் பதற உயிர் உருக அவள் நடக்க முற்பட, அவளையும் மீறி கால்கள் நடக்க முடியாத அளவுக்குத் துவண்டது. ‘இது துவண்டு விழும் நேரம் இல்லை! தேவ்வைக் காப்பாற்ற வேண்டிய நேரம்’ என்று நினைக்க. அவளை அப்படிப் பார்த்தவுடன் வந்தவனே, அவனிடம் கார் இருப்பதாகவும் அதிலேயே போகலாம் என்று சொல்லவும் எந்த சந்தேகமும் இல்லாமல் அவனுடன் கிளம்பினாள் மித்ரா.போகும் வழியெல்லாம் அவள் கதறி அழுது அவளைப் பெற்ற தாய் தந்தையரிடமும் அந்த ஊர் அம்மனிடமும் அவள் வைத்த ஒரே வேண்டுதல், ‘என் கணவனுக்கு எதுவும் நடந்திருக்கக் கூடாது என்றும் அவனை நல்ல மாதிரியா தன்னிடம் சேர்க்க வேண்டும்’ என்பது தான்! அந்த காருக்குள் இருப்பவர்கள் நல்லவர்களா இல்லை தேவ் குடும்பத்துக்குத் தெரிந்தவர்களா என்று கூட யோசிக்கும் அளவுக்கு அவள் மூளை வேலை செய்யவில்லை! அன்று தேவ் எப்படி உறைந்து சுய சிந்தனையின்றி இருந்தானோ, அதே மனநிலையில் தான் இன்றும் மித்ரா இருந்தாள். கார் ஊரையும் தாண்டி வேறு எங்கோ போக, அவள் “எந்த இடம்? எந்த இடம்?” என்று அழுதபடியே கேட்டுக் கொண்டு வர வண்டியோ பாழடைந்த வீட்டின் முன் நின்றது.அவள் இறங்கி உள்ளே ஓட, அவளை ஓட முடியாத படி அவள் கையைப் பிடித்து பின்புறமாக முறுக்கி அவளை அவன் இழுத்துச் செல்ல, அப்போது தான் அவளுக்குச் சரியில்லாத இடத்தில் தான் வந்து மாட்டிக் கொண்டோம் என்பதே புரிந்தது. அதே நேரம் அவள் இன்னோர் கையையும் வளைத்துப் பின்புறமாகப் பிடித்தவன் பிறகு அவளை இழுத்துச் சென்று ஒருவன் முன் நிறுத்த, அவனோ பார்க்க தேவ்வை விட சற்று கூடுதல் வயது உள்ளவனாகத் தெரிந்தான். அவன் வேறு யாருமல்ல, தேவ் தத்தெடுக்கவிருக்கும் பக்கத்து கிராமத்து ஜமீன்தார் தான் அவன்!அவளைப் பார்த்ததும் “என்னடி நீதேன் தேவ் ஊட்டுக்காரியா?” உன்ற புருசனுக்கு என்ன பெரிய ஹீரோயிசம் பண்றதா நெனைப்பாக்கும்? அப்படி பண்றதா இருந்தா அவன் ஊருக்கு மட்டும் பண்ணிப் போட வேண்டியது தான? எதுக்கு நாட்டுல இருக்கற ஊருக்கு எல்லாம் நல்லது பண்ணோனும்? அதும் என் ஊருக்கு?அவன் கிட்ட மறுக்கா மறுக்கா சொல்லிப் போட்டேன் என்ற கிட்ட வச்சிக்காதனு, கேட்க மாட்றானல்லோ! எத்தினி மொற அவன கொல்றதுக்கு பிளான் போட்டன் தெரியுமா? ஒவ்வொரு தடவையும் அவன் தப்பிச்சிப்போடறான்!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொருத்தன் அங்கு வந்து நிற்க, “என்னங் பிரபு பாத்திங்களா? இவ தான் தேவ் ஊட்டுக்காரி! அதேன் உன்ற தங்கச்சி பவித்ரா இருக்க வேண்டிய எடத்தில இருக்கறவ!” என்று அந்த ஜமீன்தார் இப்போது வந்த பிரபுவிடம் சொல்ல, “அதால தான் சொல்றேன், முதல்ல இவளப் போட்டுத் தள்ளுனு!” என்று பிரபு எடுத்துக் கொடுக்க,“இருங்க! இருங்க!அவசரப்பட்டுப் போடாதிங்க! இவளே அவ ஊட்டுக்காரனுக்குப் போன் போட்டுப் பேசி அவன இங்கிட்டு வரவெக்கோணும்! அவன் வந்த பொறவு இவ கண் எதிர அவனப் போட்டுத் தள்ளிப்போட்டு அதுக்கு அப்பறம் இவளப் போட்டுத் தள்ளிப்போடுவோம்! உன்ற ஊட்டுக்காரன் நெனச்சிகிட்டு இருப்பான், நாளைக்குக் கட்டடத் திறப்பு விழா நடக்கும்னு! ஆனா உங்க ரெண்டு பேருக்கும் சங்கு ஊதற விழாதேன் நடக்கப் போகுது அம்மணி!” என்று உற்சாகக் குரலில் சொன்னவன்இப்படி மாட்டிக் கொண்ட இந்த நிலைமையிலும் அவள் மனதுக்கு நிம்மதியாகப் பட்டது. ‘அப்பாடா! தேவ்வுக்கு ஒண்ணும் ஆகலை. என் புருஷன் நல்ல மாதிரி தான் இருக்கார்!’ என்று அமைதி அடைய. அந்த அமைதியைக் குலைப்பது போல் மீண்டும் அந்த ஜமீன்தார் பேசினான். “இப்ப போன் போட்டுத் தரன், உன்ற ஊட்டுக்காரன் கிட்ட பேசி நான் இப்படி மாட்டிக் கிட்டன் அதனால் உடனே கிளம்பி இங்க வாங்கனு சொல்லு.உன்ற ஊட்டுக்காரன் அறிவாளி பாரு! அதனால நீயே பேசினா தான் உன்ற ஊட்டுக்காரன் நெம்புவான்” என்று சொன்னவன் தேவ்வின் நம்பரைத் தட்டி ஸ்பீக்கரில் போட்டு அவள் முன் நிட்ட, அங்கு தேவ் எடுத்து “ஹலோ” என்று சொல்ல “ம் பேசு” என்றான். இவள் வாயை இறுக்க மூடி மாட்டேன் என்று தலையாட்ட, “இங்க பாரு வீணா அடிபட்டே சாகாத!” என்று அவன் மிரட்ட, இதற்குள் தேவ் அங்கு காரை நிறுத்தி விட்டுப் பலமுறை “ஹலோ ஹலோ” என்று கத்த, இவள் மறுபடியும் அமைதி காக்க கோபத்தில் ஒரு அறை விட்டான் பிரபு.அவன் அடித்ததில் அவள் “அம்மா” என்று அலற, அது மித்ரா என்று கண்டு பிடித்தவன் “மித்ரா! மித்ரா! என்ன ஆச்சி? எங்க இருக்க? என்ன பிரச்சனை?” என்று பதட்டப் பட, “இங்க வராதிங்க தேவ்! வராதிங்க! என்ன நடந்தாலும் வராதிங்க!” என்று கத்தினாள் மித்ரா. மறுபடியும் அவளுக்கு அறை விட்டு, “நாங்க தான்டா உன்ற ஊட்டுக்காரியக் கடத்தி வச்சிருக்கோம்! வெரசா இங்கிட்டு வா! ஆனா தனியா வாரோனும்! என்று அந்த ஜமீன்தார் சொல்ல, “வரேன்டா! வரேன்! ஆனா இதுக்கப்புறம் அவ மேல கை வெச்சா, ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டீங்க!” என்று கொதித்தான் தேவ்.“எதற்கும் ஓர் சந்தேகத்துக்கு வீட்டிற்கு அழைத்து மித்ரா இருக்கிறாளா இல்லையா என்று கேட்டு உறுதிப் படுத்தியவன் பிறகு அவன் சொன்ன இடத்திற்கு வண்டியைத் திருப்பினான். இடையில் ஏ.சி.பிக்கும் கௌதமுக்கும் பேசியவன் எதற்கும் ஆம்புலன்ஸ் உடன் வரச் சொல்லிப் போனை வைத்தான். ஆனால் அங்கு ஜமீன்தாரோ, “இப்போ அந்த தேவ் பய வந்த உடனே சுட்டுத் தள்ளிப் போடுங்க! இவளையும் முடிச்சிப் போடுங்கடா! பொறவு எனக்கு போன் பண்ணோனும், அடுத்து என்ன செய்யோணும்னு நான் சொல்லுதேன்” என்றவன் “வாங்க பிரபு, இப்ப நாம கெளம்புவோமுங்க. இது சம்மந்தமா வேற ஸோலி கெடக்குங்க, அத பாப்போமுங்க!” என்று சொல்லிச் சென்று விட,மித்ராவை ஓர் இடத்தில் கட்டிப் போடலாம் என்று நினைத்து அவளைப் பிடித்திருந்தவன் அவளை முன்னே நடத்திச் செல்ல மற்ற மூன்று பேரும் வெளியே இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைத்த மித்ரா பின்புறமாவே தன் வலது காலைத் தூக்கி அவன் காலுக்கு ஒரு உதை விட, எதிர்பாராத நேரத்தில் கிடைத்த உதையால் அவன் கால்கள் மடிய தரையில் சாயும் நேரம் அவள் கையின் பிடியைத் தளர்த்தினான். அந்த நேர இடைவேளையில் அவள் எதிர் புறம் ஓட, கீழே விழுந்தவனோ அவளைத் தடுக்க தன் பக்கத்தில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து ஓங்கி அவள் கால் மீது வீச, அது அவள் வலது காலின் கண்டைச் சதையில் பட்டு பலத்த அடியைக் கொடுத்தது. “அம்மா!” என்ற குரலுடன் சற்று தள்ளிப் போய் வெளியே விழுந்தாள் மித்ரா. விழுந்தவள் புரண்டு தவழ்ந்து பக்கத்தில் இருந்த புதருக்குள் போய் படுத்துத் தன்னை மறைத்துக் கொண்டாள்.அவர்கள் நாலா புறமும் அவளைத் தேட, மூச்சு விடும் சத்தம் கூட வெளியே கேட்காத அளவுக்கு அந்த புதரில் புதைந்து போனாள் மித்ரா. ‘இனி தேவ் வந்து தன்னைக் காப்பாற்றினால் தான் உண்டு. ஆனால் அவர் வரும் போது இவர்கள் யாரும் அவரை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும்!’ என்று வேண்டிய நேரம் அந்த இடத்தில் வந்து சேர்ந்தான் தேவ். “மித்ரா! மித்ரா!” என்று அவளைக் கூப்பிட்டுக் கொண்டே சுற்றி சுற்றித் தேட.தேவ்வின் குரலோ புதருக்கு அருகில் கேட்க, அங்கிருந்து அவனைக் கூப்பிட நினைத்து எழுந்துப் பார்க்க. அவளுக்கு இடது புறமாக அந்த நான்கு பேரில் ஒருவன் நின்றிருக்க ‘இப்போது நாம் கத்தினால் இவனால் ஆபத்து வரும்!’ என்று அமைதி காத்தவள். கடைசியில் தேவ் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல. அப்போதுதான் கவனித்தாள், துப்பாக்கியுடன் மறைந்திருந்த ஒருவன் தேவ்வைக் குறி பார்ப்பதை! வேறு வழியின்றி “தேவ், உங்கள குறி வெக்கிறான், மறஞ்சிக்கோங்க!” என்று கூக்குரலிட, தேவ் சடாரென குனிந்து பல்டியடித்து ஒரு மரத்தின் பின் மறைந்து அவனும் தற்காப்புக்காக வைத்திருந்த தன் பிஸ்டலை வெளியே எடுத்தான்.அதேசமயம் குண்டும் இலக்குத் தவறி அதே மரத்தின் மீது பட்டது. ஆனால் இறுதியில் மித்ரா தான் வேறு ஒரு அடியாளிடம் மாட்டிக் கொள்ள தேவ் தப்பினாலும் இவள் உயிரையாவது எடுத்தே தீர வேண்டும் என்ற வெறியில் தன் கையில் இருந்த கத்தியால் அவள் வயிற்றில் குத்த ஓங்கின நேரம் மித்ரா அவனிடம் இருந்து திமிரிக் கொண்டு விலக, சரியாக அவள் வயிற்றில் இறங்க வேண்டிய கத்தி அவள் விலாவில் இறங்க, “அம்மாஆஆஆஆஆஆ……..!” என்ற அலறலுடன் கீழே விழுந்தாள் மித்ரா.அந்த அலறலைக் கேட்டு ஓடி வந்த தேவ், “ஹாசினி……!” என்ற கதறலுடன் அவளைத் தன் மடி தாங்கியவன் அவளைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டவன் அவளைத் தூக்கிச் செல்ல அதற்குள் ஆம்புலன்ஸும் போலிசும் வந்து விட அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி. ஸ்டெச்சரில் படுக்க வைத்து ஆக்சிஜனை மாட்டும் நேரம் நர்ஸ்சைத் தடுத்தவள், தேவ்விடம் “எ… என… எனக்கு என்… ன நடந்…… தாலு… ம் சரி கட்… டிட… த்த நீங்க…. திறந்….. தே….. ஆக….ணும்! என்…. புரு…. ஷன்…. யார்…. கிட்… டையும்… தோற்…க… கூ… டாது…! இது… என்… மே… ல… சத்…தி… யம்…!” என்றாள் மித்ரா திக்கித் திணறி!அதைக் கேட்டவன், அவள் கையை இறுக்கப் பற்றி அவள் முகம் வருடி “இல்லடி இல்ல! உனக்கு எதுவும் நடக்காது. நீ என்ன விட்டுப் போக மாட்ட. நீ இல்லனா நான் உயிரோடவே இருக்க மாட்டனு என் தாத்தாவுக்குத் தெரியும். அதனால உன்ன என் கிட்ட சேர்த்துடுவாரு. நீ என் கிட்ட வந்திருவ ஹாசினி!” என்று கதறினான் தேவ். பின் அவளுக்கு ஆக்சிஜன் மாட்டி முதலுதவி செய்ய அதற்குள் ஆஸ்பிட்டல் வர, அவளை ஸ்டெச்சரில் வைத்து ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர்.அது வரை அவன் கண்ணீர் வழியும் முகத்தையே இமைக்காமல் பார்த்து வந்தவள், ஆப்பரேஷன் தியேட்டர் வாசலில் நெருங்கவும் தேவ்வின் கையைப் பிடித்து அவனை அருகே வரச் சொல்ல, “என்னடா?” என்று கேட்டு அவள் முகம் நோக்கி குனிந்தான் தேவ். அவன் நெற்றியில் தன் இதழ் பதித்தவள், “ஐ ல..வ் யூ அ..த்..தான்!” என்று சொல்லி கண்ணில் இருந்து கண்ணீர் வழிய கண்களை மூடி மயக்கத்தில் விழுந்தாள் மித்ரா.

 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 24
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN