என்னடி மாயாவி நீ: 23

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 23

தன் காதல் தனக்குரியவளிடம் சேர்ந்து விட்டது எனும் நிம்மதியும் இவள் எப்படி டைரியை படித்தாள் எனும் அதிர்ச்சியும் ஒருங்கே இருந்தது வர்ஷித்திற்கு.

இருவரும் வெவ்வேறு எண்ண ஓட்டங்கள் பின்னால் ஓட, வர்ஷித் அலுவலக வேளையில் ஈடுபடும் போது தான் கவனித்தான், தன்னோடு வேலை செய்யும் ஒருவர் சில நாட்களாக வரவில்லையென, இதை அறிந்துகொள்ளும் பொருட்டு, நண்பனிடம் கேட்க, "அவன் கதையா கேக்காதடா கஷ்டமா இருக்கு" என வேதனை குரலுடன் கூற ஆரம்பித்தான். "அவருக்கு லவ் மேரேஜ்டா, ரெண்டு பெரும் நல்லா தான் இருந்தாங்க, ஏதோ கருத்து வேறுபாடு போல இதுல நான் சொல்றதுதான் கேக்கணும்னு சொல்லி அவன் அந்த பொண்ணுகிட்ட டிவோர்ஸ் பேப்பர நீட்டிருக்கான் மிரட்டி, நான் சொல்றத கேக்க வைக்குற நோக்கத்துல தான் டிவோர்ஸ் வரையும் போனான். ஆனால் அந்த பொண்ணு, எனக்குன்னு யாருமே இல்ல, டிவோர்ஸ் கிடைச்சிட்ட அநாதை ஆகிருவேன் அதனால தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு செய்து இறந்துட்டாங்கடா. ரொம்ப கஷ்டமா இருக்கு, மனுஷன் இப்போ துடிக்கிறாரு அத டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணும்போதே யோசிச்சுருக்கணும். ஒரு பொருள் பக்கத்துல இருந்தா அதோட அருமை புரியாதுடா , அது இல்லனா தான் புரியும்" என வருத்தம் கொண்டு அவன் முடித்தான். வர்ஷித் அந்த கதையை கேட்டு உருக்குலைந்து போய் விட்டான். அவனது நண்பன் சொல்லிய கடைசி வரிகள் அவனுக்காகவே சொல்லியது போல இருந்தது. அவனாலும் டிவோர்ஸ் கிடைத்துவிட்டால் ஆதிகாவை விட்டு பிரிய முடியாது என தோன்றியது. அவளுக்கு பிறகு எனது வாழ்க்கையில் என்ன இருக்கப்போகுது என யோசிக்க அவனுக்கு சொல்ல அளவில்லாத துயரம் தான் மிஞ்சும். அப்போதுதான் அவனது முட்டாள் தனத்தை உணர்ந்தான். 'கையில் கிடைச்சும் விட பாத்துருக்கேனே' என அவனே அவனை சாடிக்கொண்டான். 'டிவோர்ஸ் வேணும்னு துடிக்கிறேன் அவ இல்லாம நான் இருப்பேனா, அவ சந்தோசம்னு சொல்லி சொல்லி நம்ம சந்தோசத்தை மறச்சிட்டு செய்றேனே' என முதல் முறை அவன் அவனுக்காக யோசித்தான். ஆனால் 'அவளே இது வேணாம்னு தானே கொடி புடிச்சா, அவளுக்குள்ள என் மேல இருக்குறது அக்கறை தாண்டி உண்மையான லவ் போல நாம தான் தெரியாமல் அதை அழித்து விட துணிந்து விட்டோமே. நேத்து கூட டிவோர்ஸ்ல பேப்பர்ல சைன் போடும்போது அழுதாளே, அந்த கண்ணீர்ல அவ்ளோ வலி தெரிஞ்சதே ரொம்ப தப்பு பண்ணிட்டோம். அவளுக்கும் பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கணும். அவ சந்தோசத்திற்குத்தான் எல்லாம் என சொல்லி இத்தனை நாளா அவள கூறு போட்டு கொன்னுருக்கோமே, நான் டிவோர்ஸ்னு சொல்லும்போது எவ்ளோ துடிச்சிருப்பா. உனக்கு பெரிய தியாகினு நெனப்புடா. அதான் நீ தியாகம் பன்றேன்னு அவளை பண்ணவச்சிட்ட, இதுல பரிதாப காதல் வேறன்னு சொல்லி அவளை காயப்படுத்தியாச்சி சரியான அவசர புத்திக்காரன்டா நீ' என தான் தவறுகளை உணர்ந்து தன்னையே திட்டிக்கொண்டு அவளிடம் இப்பவே மன்னிப்பு கேட்க வேணும் என நினைத்தவன் இல்லை சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் என இரவில் சீக்கிரமாக வீட்டிற்கு சென்று அவளிடம் மனசு விட்டு பேசணும் என உறுதி கொண்டு காதல் கைகூடும் எனும் ஆனந்தத்தில் இருந்தான் வர்ஷித். அவனது காதல் என்று வரும்போது குற்ற உணர்வை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. அவனது மனதில் ஆதிகா ஆதிகா ஆதிகா மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள்.

அங்கு ஆதிகாவிற்கு உதறல் எடுத்தது, புரிஞ்சிப்பான் என்று தானே சைன் போட்டோம். இப்போ அதுவே எவ்ளோ பெரிய தப்பா போச்சு என பயம் பற்றி கொண்டு எரிந்தது அவளுக்குள். இந்த முறையும் என் வாழ்க்கை தோற்கப்போகிறது என எண்ணம் தொடங்கி அவளை அழ வைத்தது. சோகத்தை மறைக்க கஷ்டப்பட்டு தோற்று அரைநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போனாள். அத்தையின் மடியில் தலைவைத்து படுத்து கதறி அழுதாள். வாழ்க்கை பற்றின பயத்தில் உணர்வற்று கிடந்தாள். வசந்தா அவளிடம், என்னமா ஆச்சு சொல்லுடா என அவளை ஆசுவாச படுத்தி கேட்டார். இதற்கு மேல் இதை சுமந்தால் எங்கு மூச்சு முட்டி விடுமோ என்ற பயத்தில் "அத்தை என்ன மன்னிச்சிருங்க" என ஆரம்பித்து எல்லாமே கூறினாள் விஷ்ணுவின் காதல், பிறகு இந்த கல்யாணம், அவன் கூறிய பரிதாப காதல், விவாகரத்து, அவனின் குற்ற உணர்வுகள் என அவள் தீர்த்து வைத்த ஊருக்கு போன குழப்பத்தை தவிர்த்து எல்லாவற்றையும் கூறினாள். கூறிய பின்னே சீராக மூச்சு விடுவது போல் இருந்தது ஆதிகாவிற்கு.

"நான் அவன்கிட்ட பேசுறேன்மா நீ கவலைப்படாத" என அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு மடியிலே படுக்க வைத்து உறங்க வைத்தார். "போனது போகட்டும் இருக்கிற வாழ்க்கையை வாழாம இந்த பையன் ஏன் இப்படி செய்கிறான்? " என அவரும் வருந்திக்கொண்டார். எவ்வளவு பயம் இவளுக்கு இந்த பையனை நினைத்து இன்னைக்கு வரட்டும் பேசிக்கிறேன் என தீர்மானித்துக்கொண்டார்.

காலையில் தான் சீக்கிரமாகவே போக வேண்டும் என நினைத்தாலும் வேலை கொஞ்சம் அதிகமாவே இருந்தது அவனுக்கு. செய்வதறியாது வேலையை முடித்த பின்பே வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்து அறைக்கு போகும்போது ஒரு கோப குரல் அவனை தடுத்தது. இரண்டு மூன்று நாள் பேசாமல் போனதால் அவனும் அம்மாவின் குரலுக்கு பயம் கொண்டு அவரை நோக்கி நடந்தான். "என்னடா ஓடி ஒளியிறியா? எங்க கத்துகிட்ட இந்த பழக்கத்தை இது மட்டுமா ஏதோ குற்றஉணர்வாமே குற்ற உணர்வு எங்கிருந்து வந்தது அந்த குற்ற உணர்வு பாவம் அந்த குழந்தை உன்னால ஆபிசில் பாதி நேரம் லீவ் போட்டு வந்து ஒரே அழுகை" என கோபத்தில் திட்டினார். வர்ஷித்தும் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்களாலே மன்னிப்பு கேட்டான்.

அதை பார்த்து நிதானமாக அவனை கை நீட்டி அழைத்து உட்காரவைத்து அவனிடம் "அந்த பொண்ணு நம்மல முக்கியமா உன்ன மட்டும் நம்பி வந்த பொண்ணு. ஏதாவுதுன்னா பேசி சரி செய்" என பேசும்போதே அம்மா "உங்களுக்கு எல்லாமே தெரியுமாம்மா" என இழுத்தவனிடம் "ஒன்னு விடாம அவ சொல்லிட்டா. அவளாவுது எங்கிட்ட சொன்ன ஆனால் நீங்க ரெண்டு பெரும் ஒரு வார்த்தை என்கிட்டே சொன்னிங்களா" என கோபித்து மேலும் "உனக்கு இந்த குற்ற உணர்வு வருவதற்கு விஷ்ணுவே காரணமா இருக்குறப்போ எனக்கு கஷ்டமா இருக்குப்பா" என கூறி அவனது முகத்தை வருடினார்.

"என்னமா நீங்க, நான் நீனு பிரிச்சு பேசுறீங்க அவன் இதுக்கு காரணம்னு நீங்க என்கிட்ட வருத்தப்படலாமா மா அவன் யாரு மா என்னோட உயிர் நண்பன் நீங்க என்னோட அம்மா. இந்த சமூகத்துல நல்ல நிலைமைல நான் இருக்க காரணம் நீங்க தான்மா. நான் உங்க புள்ளமா ஏதோ சில பேர் ஏதேதோ பேசுனத காதுல ஏத்திக்கிட்டு நான்தானே தப்பு பண்ணிட்டேன்மா" என அவரின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு வேண்ட அவர் அழுது விட்டார்.

"அம்மா அழுகாதீங்க நீங்க அப்படியெல்லாம் மனச போட்டு குழப்பிக்காதீங்க. விஷ்ணு இறப்பு, ஆபீஸ்ல பேசுனதுனு எல்லாத்தையும் போட்டு நானே குழப்பிக்கிட்டேன். நானே குழம்பி இருந்தபோது எனக்கு சிலதை புரிய வச்சதே ஆதிகாதான். நானே அவகிட்ட பேசணும்னு தான் வந்தேன் நான் பாத்துக்கிறேன் நீங்க கவலபடாதிங்கமா" என எழ போனவனை தடுத்து 'அவ்ளோ அவசரமா பொண்டாட்டிய பார்க்க' என நினைத்தவர் "அவ இப்போதான் நார்மலா மேல போனா உன்னைய விரும்பாமலா அவ்ளோ வேதனை படுறா எல்லாத்தையும் யோசி மறுபடியும் அவகிட்ட போயிட்டு லூசுத்தனமா பேசாம ரெண்டு பெரும் பேசி புரிஞ்சி வாழ ஆரம்பிங்க. சீக்கிரமா ஒரு பேர குழந்தையை பெத்து கொடுத்து எங்களுக்கு போர் அடிக்காம பாத்துக்கோங்க" என கூறி மகனை அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டார். "நீ எனக்கு எப்பவுமே பிள்ளைதான், யார் என்ன சொன்னாலும் இதை மட்டும் நியாபகத்துல வச்சிக்கோ அப்படி பேசுறவன்கிட்ட இருந்து தான வெளில வந்துருவ" என கூற அவனும் சரிம்மா என்றான்.
மேலும் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும் என கேட்டான் உங்களுக்கு ஆதிகாவை மருமகளா புடிச்சிருக்கா என. ஏனென்றால், சிறு வயதில் உங்களுக்கு பிடித்த பெண் தான் எனக்கு மனைவி என கூறியிருந்தான். அவரும் அதை புரிந்துகொண்டு, "உனக்கு தெரியாதுல என் மருமகள நான் தான் தேர்வு செய்தேன் உங்க மாமா உன்னிடம் காட்டும் முன்னே என்னிடம் காட்டி என் சம்மதம் கேட்டார். அதனால், நான் தான் மருமகளை தேர்வு செய்தேன்" என சொல்ல பலநாள் மனதில் அரித்த கேள்விக்கு பதில் சொன்ன தாய்க்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவனது அம்மாவோ "முதலில் உன் பொண்டாட்டிக்கு இத கொடுத்து அவளை சமாதானம் படுத்துடா" என கூற வெட்க சிரிப்பை உதிர்த்து விடைபெற்றான்.

அறைக்கு சென்றவன் கட்டிலில் தனக்கு முதுகு காட்டி அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்த ஆதிகாவை பார்த்தான். அவன் வருகையை உணர்ந்து "வாங்க மாமா" என்றாள். தலையை மட்டும் அசைத்து புன்னகை தவழும் முகத்துடன் "இரு வரேன்" என கூறி மாற்றுடைக்கு மாறி வந்தான்.அவளின் முகம் கொஞ்சம் நம்பிக்கையும் நிம்மதியையும் கொண்டிருந்தது. 'என்ன பேசுவது எங்கிருந்து ஆரம்பிப்பது' என்பது தெரியாமல் அவளிடம் "சாப்பிட்டாயா" என கேட்டான். அக்கேள்வியில் காதலையும் அன்பையும் தேக்கி வைத்து மென்மையாக கேட்டான். அதில் ஆச்சரியம் அடைந்தவள், "இல்ல அத்தை சீக்கிரமா சாப்பிட்டாங்க எனக்கு அப்போ பசிக்கல இப்போ சாப்பிடலாம்" என முன்னே நடந்தாள்.இன்று புதிதாகவும் தெளிவாகவும் இருந்த ஆதிகா புடவையில் அழகாக இருந்தாள். அவளை பார்த்து பார்வையை அடக்க முடியாமல் தவித்து போனான் வர்ஷித். அவனது பேச்சு, பார்வை என எல்லாவற்றிலும் மாற்றத்தை உணர்ந்த ஆதிகா வர்ஷித்திற்கு பரிமாறிவிட்டு அவளும் அமர்ந்து உண்டாள்.

அம்மா கீழே சொன்ன பேரப்பிள்ளை என்ற சொல்லுக்கும் இங்கு ஆதிகா சேலை, பூ என காணப்படுவதற்கும் அம்மாவின் எண்ண ஓட்டங்களை படித்தான். அவர்களின் ஆசையை நிறைவேற்ற இவனுக்கு ஆசை பிறந்தது. ஆதிகாவும் இதற்கு தயார் என்பது போல இருந்தது அவளது நடவடிக்கையும் சாதாரணமாக புடவை அணிவதே அவளுக்கு அபூர்வம் பிறகு என்ன ஆனாலும் அப்பா அம்மா கூடவே சேர்ந்து உண்பவள் இன்று என்னோடு சாப்பிடுகிறாள் இது எல்லாமே தனக்காக அவள் செய்வது போலிருந்தது அவனுக்கு.

வர்ஷித் ஆதிகாவை பார்வையால் அளவிட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். அவனின் பார்வையில் அவஸ்தையாக நெளிந்தாள் அவள். அவளை மேலும் வதைக்காமல் "நான் மேல போறேன் நீயும் சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சிட்டு வா" என்றான். அவளும் வெறும் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள். அவளுக்கும் முதலில் "நீ வர்ஷித் கூட அமர்ந்து சாப்பிடு, இந்த புடவையை உடுத்திக்கோ" என கூறும் போது புரியாமல் தான் இருந்தது. பிறகு இவனது பார்வையை வைத்தே புரிந்துகொண்டாள் அத்தை எதுக்கு அடி போட்டிருக்கார் என்பதை.

இவனோ வந்தவன் மெத்தையில் அமர்ந்து எப்படி பேசுவது என்ன பேசுவது என யோசித்து கொண்டிருக்கையில் மின்சாரம் நின்றவுடன் அறை வெளிச்சத்தை தொலைத்து கருமையை சூடிக்கொண்டு இன்னும் அவனுக்கு வசதி செய்தது. 'இந்த கரண்ட்க்கு என வாழ்வில் விளையாடுவதே பொழப்பா போச்சு' என திட்டிக்கொண்டு அவ வேற தனியா இருப்பாளே என கீழே இறங்க எத்தனித்தவன் அவள் மெழுகுவர்த்தியின் வெளிச்ச துணையுடன் வருவதை பார்த்தவன் தன் உணர்வுகளை கட்டு படுத்திக்கொள்ள மறுபடியும் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டான். அவளும் மெழுகு வர்த்தியை அறையில் வைத்து ஒளி பரவ செய்து விட்டு, பால்கனிக்கு சென்று கம்பியின் மீது கை வைத்து கொண்டு இரவின் அழகை ரசித்து கொண்டிருக்க அங்கு அவனோ 'இவகூட எப்படி பேசுறதுனு நான் இங்க ஒத்திகை பாத்துட்டு இருக்கேன் இவ பாட்டுக்கும் அங்க நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கா' என அவளை சீண்டும் நோக்கில் அவளருகில் போனவன் இரவின் அழகை ரசிப்பவளின் அழகை இவன் ரசிக்க தொடங்கினான். தொலைத்த பொம்மை மீண்டும் கிடைத்தால் ஒரு குழந்தைக்கு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவனுக்கு. பௌணர்மி ஒளியில் வான ஊதா நிறத்தில் புடவை அணிந்த ஆதிகா தேவதை போல் காட்சி தந்து அவன் கண்களுக்கு விருந்து படைத்தாள். அவளின் கழுத்திலும் புடவைக்கு வெளியிலும் மார்பிலும் ஊசல் ஆடும் பொன்னும் மஞ்சளும் கலந்து மின்னும் தாலியும்,வகிட்டில் தங்கியிருக்கும் அவன் கையால் இட்ட குங்குமமும் அவளை மேலும் அழகுற செய்து அவனுக்குள் இவை எல்லாம் தனக்கானவை, இவள் தனக்கானவள் என ஏதோ ஒன்று கூறி கொண்டே இருந்தது அவனுக்குள்.

அவனின் பார்வை வீச்சுகள் தன்னை தாக்குவதை உணர்ந்தவள் அவனை பார்க்க இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டது. நிலமையை இளகுவாக்க "என்ன எல்லாமே புதுசா இருக்கு" என அவன் கேட்க ஆதிகாவும் "நான் மட்டுமா நீங்களுந்தான்" என அவனை கீழிருந்து மேல் வரை பார்த்தாள். அவன் வெற்று உடம்போடு கீழே ஷாக்ஸ் மட்டுமே போட்டிருந்தான். அவனின் விரிந்த மார்பும் திரண்டாலும் தோள்களும் முறுக்கேறிய புஜமும் கண்ணில் புதிதாக குடியேறிய காதல் மொழியுடன் ரசனை பார்வையும் கலந்து அவளை திக்கு முக்காட வைக்க அவளின் பார்வையை உணர்ந்து அதனால் ஏற்படும் அவஸ்தைகளை தாங்கமாட்டாமல் "அது...இதுதான் என்னோட இயல்பு. இப்படித்தான் எப்பவுமே இருப்பேன் இப்போ கொஞ்ச நாள்தான் வீட்ல இருக்கும்போது ட்ஷிர்ட்லாம் போடுறேன் இனிமேலும் இப்படி தான் இருப்பேன்" என தடுமாற்றத்துடன் கூறி "சரி இப்போ நீ சொல்லு" என்றான் "அத்தைதான் கட்ட சொன்னாங்க" என வெளியில் சொல்லிவிட்டு மனதினுள் 'உனக்கு தெரியாமலா இருக்கும் சரியான ஆளுடா நீ நடிச்சாலும் நடிப்ப கேடி அதான் பார்வையே சரி இல்லையே' என செல்லமாக திட்டினாள்.

மின்சாரமும் தனிமை வழங்க, அவளை நெருங்கி தன் பக்கம் திருப்பி வர்ஷித் அவளின் முகத்தில் ஒரு விரல் நுனியால் கோலமிட அவளின் கண்கள் அந்த சுகத்தில் தானாக மூடி கொண்டன. காதருகில் போனவன், "அன்னைக்கு கரண்ட் போன போது விட்டுட்டு போனத இப்போ தொடரவா" என மெதுவாக அவன் குரல் தென்றலோடு கலந்து அவளது காதுக்குள் நுழைய அவளுக்கு வெட்கம் படர ஆரம்பித்தது. அந்நேரம் அவனது ஆராய்ச்சி முகத்தை தாண்டி கழுத்துக்கு கீழ போகும்போது அவளின் பெண்மை விழித்து கையை தடுத்து நிறுத்தினாள். "அப்போ பதில் சொல்லு தொடரவா" என காதில் கிசுகிசுக்க அவளின் வெட்கத்தையே பதில் என எடுத்துக்கொண்டு அவளை மேலும் நெருங்கி கையில் அவள் மதி முகத்தை ஏந்தி மென்மையாக இதழ் போர் நடத்தினான் அவள் இதழுக்குள். மெல்ல மெல்ல தன் வாசம் இழந்தவள் அவனின் செய்கையின் சுகம் அறிந்து அதற்கு தானும் ஈடு கொடுக்க அவனின் பின்னந்தலைக்குள் கையை விட்டு அலைபாய விட்டிருந்தாள்.

இவர்களின் செயலை கண்டு நாணி நிலாமகளும் தன் காதலன் நினைவில் தன்னை தொலைத்து மேகங்களை அள்ளி தன்னை மூடி வெட்க பட்டுகொண்டாள்.

காற்றே இவர்களுக்கு மூச்சு வழங்க வரிசை கட்டி நிற்க, தன்னவள் மூச்சுக்கு சிரம படுவதை உணர்ந்தவன் மனமில்லாமல் விடுவிக்க அவளது முகமோ செம்பருத்தி பூவென சிவந்து இருந்தது. அன்று குறைபாடு கூறிய அவளது இதழ்கள் இன்று நிறைவானது போல ஒரு எண்ணம் அவனுக்கு. மேலும் அவனை பார்க்க முடியாமல் தன்னவனின் மார்புக்கூட்டுக்குள் தன்னை பொதித்துக்கொண்டாள். அவனும் இறுக்கி அணைத்திருந்தான். இந்த ஏகாந்த நிலையை இருவரும் கலைக்க விரும்பவில்லை. இருவருக்குள்ளும் பேச வேண்டியது நிறைய இருந்தாலும் இதை இப்போது மனமார ஏற்றுக்கொண்டனர்.

அவளது பிரத்யேக நறுமணத்தை மூச்சால் சுவைத்த படியே அவனது விரல்கள் அவளது வெற்றிடையில் விளையாட, அவள் தடுக்க நினைத்தும் அவளால் தடுக்க முடியாமல் அவனது தொடுகையை விரும்பி ஏற்றது அவளின் அகமும் புறமும். அவன் குனிந்து தன்னவளின் கழுத்து வளைவில் முகம் பதித்து முத்தம் வைத்து காதில் "மேல தொடரட்டுமா? " என அவனது வசீகரம் பொழியும் வார்த்தைகளால் கிசுகிசுக்க அவள் பதற்றத்தில் என்ன சொல்வது என தெரியாமல் "கரண்ட் வரட்டும்"என்றாள். தேவையே இல்லாத கரண்ட்க்கு இருவரும் காத்திருந்தனர்.

இதுவும் சில நொடிகளே என்பது போல இந்த காத்திருப்பும் சில நொடிகள் தான் நடைபெற்றது. தன்னவளை கையில் ஏந்தினான். பதறியவளை கண்டு, "நாம ரெடியா இருப்போம் வந்தவுடனே ஆரம்பிக்கலாம்" என கண்ணடித்து சிரிப்போடு கூற அவள் அவனின் சிரிப்பில் மதி மயங்கி போனாள். அவளை பூ போல் தூக்கியவன் உள்ளே சென்று பெட்டில் கிடத்திய நேரம் அவர்கள் எதிர்பாத்து காத்திருந்த மின்சாரமும் வந்தது. அவளின் பொன்னிறம் கலந்த மேனியை பார்வையால் மீண்டும் ஒரு முறை அளந்துவிட்டு விளக்கை அணைத்தான். அருகில் சென்று படுத்தவன் படபடப்புடன் படுத்திருந்தவளின் நெற்றியில் முத்த அத்தியாயத்தை ஆரம்பித்தான். அப்போது "சிறிது நேரம் பேசலாமே" என அவளும் கொஞ்ச நேரத்திலிருந்து முயற்சித்து இப்போதான் அந்த குரல் அவனின் செவி அறையை எட்டியது. சரி என விலகி, அவளை தன் வெற்று மார்பின் மேல் போட்டுகொண்டு அவனே கேட்டான். "நீ உனக்கு என்ன புடிக்கும்னு சொல்லு" என கூற அவள் சகஜம் நிலைக்கு சென்று கூற ஆரம்பித்தாள். கொஞ்சம் நிறுத்தி மீண்டும் தொடர போனவள் அவனை பார்த்து அதிர்ந்தாள். அவனோ அவளது சொல்லை கேக்காமல் அவளின் கண்கள் பேசும் மொழியையும் அவள் பேசுவதற்கு ஏற்றார் போல நடனமாடும் ஜிமிக்கியையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க, கடைசியில் இதழுக்கு வந்தான். அதரமோ பேசி பேசி வறண்டு கோடுகாள் தெரிய அதை ஈரப்படுத்தி குளிர்விக்கும் எண்ணத்திற்கு உயிர் கொடுத்து இதழை சிறை செய்தான். அவள் எதிர்பாக்காததால் விழி விரிய இருந்தாள். அவன் எல்லைகளை மீற அவளோ கண்களாலே "வேண்டாம் வேண்டாம்" என இறைஞ்ச, அதை படித்தவன் அவளிடம் கேட்க அவளும் "இப்போ வேணாமே" என கூற அவளை விட்டு விலகி அவளுக்கு முதுகு காட்டி படுத்துகொண்டான்.

இனி தொடர்வது ஊடலா அல்ல கூடலா என்பதை அடுத்த பகுதியில் பாப்போம்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 23
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN