உறவாக வேண்டுமடி நீயே 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு - 1

காற்றில் அசைந்தாடும் கொடியிடையாளின் நளினமோ ஏன் சின்ன சலனமோ எதுவுமே இல்லாத கண்ணாடித் தாரகை அவள்! வான் பஞ்சு பொதிகள் எல்லாம் எங்கே தவறி விழுந்து தங்கள் கால்களில் மிதிபட்டு விடுமோ என்று நம்மை பயம் கொள்ள வைப்பவள்! தன்னுள்ளே புதைந்திருக்கும் அற்புதங்களையும் அழகையும் எந்தவித கர்வமோ ஆர்ப்பாட்டமோ ஆர்ப்பரிப்போ இல்லாமல் திறந்த புத்தகமாய் கண்டு மகிழ்ந்து கொள் என்று தன் நீல வெள்ளை வண்ணச் சேலையுடன் காட்சி தருபவள்! இப்படிப் பட்ட அழகுக்கும் பெருமைக்கும் உரியவளைத் தான் Trou-aux-Biches என்னும் ரிசார்ட்டில் தன் சூட்டில் இருந்தபடியே களங்கமற்ற நிலவைப் போல அலைகளற்ற அவ்வாழி மங்கையை ரசித்துக் கொண்டிருந்தான் அபிரஞ்சன்.



ரசித்தவனுக்கு அவளுடன் சங்கமிக்கும் ஆசை வரவும், தான் அணிந்திருந்த பாத் ரோப் கோர்ட்டைக் கழற்றி எறிந்தவன் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் பிரவேசித்து தொப்பென நீரில் சீறிப் பாய்ந்தவன் சுற்றிச் சுழன்று விலாங்கு மீனாய் நீந்தவும், கையில் போனுடன் அவன் முன் வந்து நின்றான் அவனுடைய பாதுகாவலன் ஒருவன்.



அவனைக் கண்டு நீர் சொட்டச் சொட்ட ஒரே தாவலில் மேலே வந்தவன் அங்கு பிரம்பு நாற்காலியிலிருந்த துவாலையை எடுத்துத் துடைத்த படியே தன் புருவச் சுளிப்பால் யார் என்று கேட்க



“துருவன் சார் பாஸ்!” என்று அவன் பவ்வயமாய் சொல்ல போனை இவன் வாங்கியதும் வந்தவன் சற்றே விலகி விட



“என்ன டா?”



“……”



“வாட்? புல் ஷிட்… இதைச் சொல்லத் தான் நீ போன் செய்தியா? நான் இதில் தலையிட்டேன் என்றால் எப்படிப் பட்ட அதிரடியில் செயல்படுவேன் என்று எனக்கே தெரியாது! ம்ம்ம்... சென்ட் ஆல் டீடெய்ல்ஸ்” இவன் குரலில் கோபம் இல்லை. ஆனால் அனல் பறக்கும் த்வனி இருந்தது.



இவன் பேசி முடித்ததும் குறிப்புணர்ந்து போனை வாங்க வந்த பாதுகாவலனிடம் “வேர் இஸ் மை ஐபேட்?” என்று கேட்டவன் குளிக்கச் சென்று விட இவன் வெளியே வருவதற்குள் டீப்பாய் மேல் ஐபேட் இருந்தது.



அதைத் தொடாமல் சற்று நேரம் அதையே வெறித்தவன் பின் ஷார்ட்ஸ் டீஷர்ட்டில் தன்னைத் திணித்துக் கொண்டு அங்கிருந்த ஷாம்பெயின் பாட்டிலை உடைத்து திரவத்தைக் கண்ணாடி கோப்பையில் ஊற்றியவன் பல சிந்தனைகளுடன் அந்த அறையை அளந்த படியே இரண்டு லார்ஜை தனக்குள்ளே தள்ளியபடி ஐபேடைக் கையில் எடுக்க, இவன் மனதைப் போல் இல்லாமல் வெளியே நிலா மங்கையோ அந்த இடத்தையே குளிர்வித்துக் கொண்டிருந்தாள்.



அபிரஞ்சன் மணிமேகலை! இது தான் இவன் பெயர்! எங்கு யார் கேட்டாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தன் முழுப்பெயரைச் சொல்வது இப்படித் தான்!



அவனுடைய தாய் பெயர் தான் மணிமேகலை. தந்தை செய்த சில கேடுகெட்ட செயலால் அவர் பெயரான ராகவனைக் கூட விபரம் தெரிந்த வயதில் தன் பேரோடு சேர்த்துச் சொல்ல மறுத்தவன்! பிறகு சுயமாய் தன் காலில் நிற்கும் வயது வந்த அடுத்த நொடியே பிறப்பு முதற்கொண்டு அனைத்து சான்றிதழிலும் அவரின் பெயரை நீக்கியவன்! அப்படியே அம்மா மாதிரியே ரோஷக்காரன். ஆனால் அவரிடம் இல்லாத அழுத்தம் இவனிடம் இருக்கும்.



கணவன் செய்த துரோகத்தைச் சகிக்க முடியாமல் மணிமேகலை அவரை விட்டுப் பிரியும் போது அபிக்கு பதிமூன்று வயது. துருவனுக்கு எட்டு வயது. அந்தக் காலத்து பி.ஏ. வரலாறு படிப்பைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லாமல் தன்னம்பிக்கையுடன் தனியாளாய் இந்த உலகத்திலுள்ள கயவர்களை எதிர்த்துப் போராடி வாழத் துணிந்த இரும்பு மனுஷி. நோயாளியான தந்தையிடம் திரும்ப வந்தவர் பின் தன் உழைப்பால் முன்னுக்கு வந்தார் மணிமேகலை.



பிள்ளைகளும் ஒரு வயதுக்கு மேல் தோள் கொடுக்க ஆரம்பிக்க இவரின் பாரம் சற்றே குறைந்தது. அதிலும் இவர்களின் வளர்ச்சியில் அபியின் வளர்ச்சி தான் அபரிமிதமாக இருந்தது.



அவனுடைய ஐபேடில் இளையராஜாவின் மெல்லிய கானங்கள் ஒலிக்க, அதைக் கேட்டு ரசித்த படியே அந்த இரவு நேர ஏகாந்த வேளையில் நீரில் மூழ்கி எழுந்து முக்குளித்துக் கொண்டிருந்தான் அபி.



‘அண்ணா! நாளைக்கே டிக்கெட் போடச் சொல்லிட்டு வந்துடுங்க. அவங்க உங்களைத் தான் வரச் சொல்றாங்க’ துருவனின் குரல் காதில் ஒலித்த நேரம் இவன் நீருக்குள் மூழ்கி நிமிர



‘அவங்க M.D பிஸினஸ் விஷயமா ரஷ்யா போகப் போறாங்களாம். திரும்பி வர ஒரு மாதம் ஆகுமாம். சோ நீ நாளை வந்தா மறுநாள் பேப்பரில் சைன் செய்திடுவோம் ண்ணா’ இவ்வார்த்தைகளை எல்லாம் மனதில் ஓட விட்டவன் நீருக்குள் மறுபடியும் மூழ்கி நிமிர அவனுக்குள் ஒரு தெளிவு வந்திருந்தது.



“காட்ஸ்” இவன் அழைக்க, கேட்கும் துரத்திலிருந்த ஒருவன் ஓடி வந்து நிற்கவும்

“என்னுடைய வெகேஷன் எப்போ முடிகிறது?”



“இன்னும் ஃபோர் டேஸ் பாஸ்”



“ஓஹ்.. மேலும் பிஃப்டீன் டேஸ் எக்ஸ்டென் செய்திடு”



“எஸ் பாஸ்!” என்ற சொல்லுடன் அவன் விலகவும், நீரிலிருந்து வெளிவந்தவன் அங்கிருந்த கேம்ப் ஃபயர் முன் அமர்ந்து ஒற்றை சிகரெட் எடுத்து பற்ற வைத்த படி ‘யார்கிட்ட?’ என்றான் தனக்குள் தெனாவட்டாக. தன் விடுமுறையைக் கொண்டாட பத்து நாள் மொரீசியஸ் வந்திருக்கிறான் அபிரஞ்சன்.



மறுநாள் காலையில் இவனின் விடியல் நேரத்தைக் கணக்கிட்டு துருவன் அழைக்க, தூக்கக் கலக்கத்துடனே இவன் பேசவும்



“என்ன ணா இன்னும் கிளம்பலையா?”



“ம்ஹும்... நோ...”



“அண்ணா...” என்று துருவன் ஆரம்பிக்கவும்



“டோன்ட் டீச் மீ துருவன்! லிஸன்.. எனக்கு யாரும் கட்டளை இடக் கூடாது. எனக்கு விருப்பமானதை நான் தான் செய்வேன். சோ நான் வந்து பார்க்கிறேன் இல்லைனா அவங்களை எப்படி வரவழைக்கணுமோ அப்படி வர வைப்பேன். அதில் தான் ஒரு பிசினஸ்மேனின் பவர் இருக்கு. சோ டேக் இட் ஆர் லீவ் இட். இன்னும் பதினைந்து நாள் நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். பை பை!” என்று இவன் அழைப்பைத் துண்டிக்க, இவன் குரலில் இனி என்னைத் தொந்தரவு செய்யாதே என்ற கட்டளை இருந்தது. இது தான் அடங்காத் தனம் கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தின் மன்னனாய் விளங்கும் பிஸினஸ் மேக்னட் அபிரஞ்சன்.



அபியின் தாய் மணிமேகலை வீட்டுக்கு ஒரே மகள். நல்ல நிறத்துடன் அழகானவர். ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். லட்சாதிபதியான ராகவன் அவரை ஒரு விழாவில் பார்த்துப் பிடித்துப் போய் பெண் கேட்டுத் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவி இருவரும் காதல் ததும்ப அந்நியோன்யமாகத் தான் வாழ்ந்து வந்தார்கள். தேன்கூட்டில் கல்லெறிவது போல் வந்து சேர்ந்தாள் சபிதா.



தொழிலை விரிவுபடுத்த ராகவன் பல ஊர்களுக்குச் சென்று தங்க வேண்டி வந்த நேரத்தில் எல்லாம் அவர் பி.ஏ சபிதாவும் கூட செல்ல வேண்டி வந்தது. இன்று தான் மலர்ந்த இருபதே வயதான புத்தம் புது மலர் அவள். அழகான வேலி போட்டு பாதுகாப்பாக வீட்டில் வளராமல் தான்தோன்றித்தனமாக வளர்க்கபட்டவள். ராகவனிடம் சற்று நெருங்கிப் பழக, மகள் வயது என்பதால் மணிமேகலை அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவே சபிதாவுக்குப் போதுமானதாக இருந்தது. அதன் விளைவு ராகவனை எந்நேரமும் போதையில் வைத்திருந்து இறுதியில் அவருக்கு தன்னையே கொடுத்தவள் அதையே சாக்கிட்டு அவரை அவரின் குடும்பத்திடமிருந்து பிரித்தாள் சபிதா.



பிறகு இது மணிமேகலைக்குத் தெரிய வந்து கணவன் வீட்டாரிடம் முறையிட, ஆண் என்றால் இப்படித்தான் என்ற பல்லவியைப் பாடி அவரையே அனுசரித்துப் போகும் படி சொல்லவும், கொதித்தெழுந்த மணிமேகலை பிறந்த வீட்டு ஏழ்மை நிலையிலும் கற்பு என்றால் அதை பொதுவில் இருபாலருக்கும் வை என்ற பாரதியாரின் கூற்றின் படி நின்றவர் புகுந்த வீட்டார் தடுத்தும் பிடிவாதமாக வீட்டை விட்டு பிள்ளைகளுடன் வெளியேறினார்.



அதன் பிறகு எவ்வளவு சமாதானம் செய்தும் மனைவி தன்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை அறிந்த பின் ராகவன் தன் மூத்த மகனிடம் கெஞ்ச ஆராம்பித்தார். அந்த வயதிலும் மனைவியைப் போல் மகன் பிடிவாதமாக இருக்கவும், அப்போது தான் அபியிடம் எந்த தந்தையும் சொல்லக் கூடாத விஷயத்தைப் பகிர ஆரம்பித்தார் அவர்.



என்னதான் சபிதா தாராளமாகப் பழகியிருந்தாலும் எல்லா ஆண்களையும் போல தன்னுடைய பலவீனத்தை மறைக்க அவள் எப்படியெல்லாம் தன்னை மயக்க நடந்து கொண்டாள் என்பதையும் கூடவே தன் கையால் தாலி வாங்க அவள் என்னவெல்லாம் மாய்மாலம் செய்தாள் என்பதையும் அவர் விவரிக்க அந்த பதினைந்து வயதில் அதை கேட்ட அபிக்குத் தன் தந்தையை மட்டும் இல்லை பெண்கள் மேலேயே நன்மதிப்பு இல்லாமல் போனது.



கணவனை விட்டுப் பிரிந்த பிறகு பிறந்த வீட்டின் சொற்ப சொத்தை வைத்து பல தொழில்களைச் செய்த மணிமேகலைக்கு வருமானம் கொடுத்து முன்னேற வழி செய்தது பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் துணி தான். அப்போதெல்லாம் இப்போது போல் அணை ஆடை (sanitary napkin) எல்லாம் இல்லை. இவர் பருத்தியைக் கொண்டு தானே நல்ல முறையில் சுத்தமாக தயாரித்த நாப்கின்களை கால் கடுக்க பல இடங்களுக்கு நடந்து சென்று பல பள்ளி மற்றும் கல்லூரியில் விற்பார்.



துணியை விரும்பாத பெண்கள் இதை வாங்குவார்கள். ஏன் சந்தையில் விற்கும் சானிடரி நாப்கின் உடலுக்கு உகந்தது இல்லை என்பதைத் தெரிந்த ஜீவன்கள் கூட அதை நிறுத்தி விட்டு இவரிடம் வாங்கினார்கள். ஓரளவுக்கு இவர் தொழிலில் முன்னேறவும் அதில் பொறாமைப் பட்ட சொந்தபந்தம் நட்புகள் எல்லாம் ‘பெண்களுக்கு தீட்டுத் துணி தயாரித்து விற்கிறா. இதெல்லாம் ஒரு பிழைப்பு!’ என்று அவர் காது படவே பேசி கேலி செய்ய, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முன்னேறினார் மணிமேகலை.



அதன் பின் அபி, படிப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பத்தாவதிலும் பன்னிரண்டாவதிலும் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வெற்றி பெற்றான். அதன் பலனாக நீ நான் என்று பல தொண்டு நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் முன் வந்து அவனைப் படிக்க வைத்தனர். அதனால் தன் M.B.A வை ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்து கூடவே பகுதிநேர வேலையையும் பார்த்தவன் பின் படிப்பு முடித்து இந்தியா வரும் போது அவன் அம்மாவின் தயாரிப்பை நாகரிகம் என்ற பெயரில் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எல்லோரும் ஒதுக்க, அதனால் தன் தாயின் தயாரிப்புக்கு எதிரான உடலுக்கு ஒத்து வராத ரசாயன நாப்கின் தாயாரித்து விற்க ஆரம்பித்தான் அபி.



அம்மா உண்மை நேர்மை என்ற பெயரில் எதைச் சாதித்தார்கள் இல்லை அவர் தயாரித்த பொருளின் மகத்துவம் தான் இந்நாட்டு மக்களுக்குப் புரிகிறதா என்ற ஆதங்கம் அபிக்கு. நடிகர் நடிகை இல்லை பிரபலம் என்று யாராவது ஏதாவது ஒரு விளம்பரத்துக்கு வந்து விட்டால் போதும் வௌவால் கூட்டங்களைப் போல இயற்கை வழிமுறைகளை விட்டு கார்ப்பரேட்காரனின் பொருட்கள் பின்னால் தானே சுற்றுகிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு வரவும் தன் தாயின் தயாரிப்பை மாற்றி ரசாயன அணை ஆடையை விற்பனையில் விட ஆரம்பித்தான் அபி.



அவனின் கூற்றை மெய்ப்பிப்பது போல் இந்த தொழிலில் பல லட்சங்களை சம்பாதித்து லட்சாதிபதி ஆனான். அதனால் எல்லா இல்லத்தரசிகளின் கையிலும் இவன் தயாரிக்கும் நாப்கின் தான் இருந்தது. அப்போதும் போட்டி என்ற பெயரில் எதிரிகள் மூலமாய் சிறு சரிவு வர அதற்கும் அசராமல் வேறொரு பெயரில் தங்கள் அணை ஆடையையே தயாரித்தான். வாங்குபவர்களுக்கு இது இல்லை என்றால் அது என்ற வாய்ப்பை இவனே தந்து அதிலும் தன் பிராண்டே தான் இரண்டிலும் வாங்க வைத்தான். அதிலும் மக்களைக் கவரும் இலவசம் என்ற மந்திரத்தைப் பிரயோகித்தான். அவன் போட்ட கணக்கு படியே அமோகமா விற்பனையானது. இது தான் தொழிலதிபர்களின் யுக்தி! வியாபார தந்திரம் என்றும் சொல்லலாம்.



அதில் வந்த லாபங்களை ஸ்டேஷனரி மற்றும் பிறந்த குழந்தைகள் உபயோகிக்கும் பொருட்களைத் தயாரித்து AR ENTERPRISES என்ற பெயரில் வெளியிடுகிறான். பிறக்கும் போது லட்சாதிபதியாகப் பிறந்து இடையில் கனவுகளைச் சுமந்த நடுத்தர வர்க்கமாக வாழ்ந்து இன்று கோடீஸ்வரனாக மாறித் தன் தொழில் உலக சிம்மாசனத்தில் அசைக்க முடியாத முடி சூடா மன்னனாகத் திகழ்கிறான் அபிரஞ்சன்.



இன்றும் சில விழாக்களில் தந்தையைப் பார்க்க நேரிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் ‘உனக்கான எல்லை இதுதான்! எப்பொழுதும் என் வாழ்வுக்குள் வராதே.. வரவும் முயற்சிக்காதே!’ என்ற பார்வையின் எச்சரிக்கையுடன் அவரை அங்கிருந்து விலகி ஓட வைப்பான். மீறி அவர் பேச நினைத்தால் தனக்கு என்ன மாதிரி மரியாதை கிடைக்கும் என்பது அவனின் தந்தைக்கே தெரிந்து தான் இருந்தது.



தற்பொழுது இவர்கள் அணை ஆடைக்கு எதிராக இயற்கை முறையில் ஒருவர் அணை ஆடையைத் தயாரித்து சந்தையில் விடவும் இப்போது இவர்கள் பிராண்ட் கீழே இறங்க ஆரம்பிக்க அந்த எதிர் பார்ட்டியின் நிலையறிந்து அவர்களைத் தட்டித் தூக்க நினைத்தவன், அதே பெரிய கையாக இருந்தால் பேசி அவர்கள் தயாரிப்பதை இவர்கள் மார்க்கெட்டிங் செய்வது என்று டீல் பேசலாம் என இவன் நினைக்க, அதற்கான பொறுப்பைத் தான் கம்பெனி G.M என்ற முறையில் தம்பி துருவனிடம் கொடுத்திருந்தான்.



கடந்த ஐந்து வருடமாக புது ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும் முழுப்பொறுப்பும் அவன் தான். இவன் இறுதியாக கையொப்பம் மட்டும் தான் இடுவான். அது தம்பியின் புத்திக் கூர்மையின் மீதோ இல்லை வாய் ஜாலத்தினாலோ வந்த நம்பிக்கை என்பதை விட தன் கனவு தன் நோக்கம் தன் உயரம் தன் எண்ணம் தன் செயல் என்று அனைத்தையும் அறிந்தவன் தன் தம்பி என்பதில் அவ்வளவு நம்பிக்கை இவனுக்கு. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் அபியின் மூளையாக சில பல நேரங்களில் செயல்படுபவன்.



அப்படிப் பட்டவன் தான் இன்று கிளம்பி வாங்க அண்ணா கிளம்பி வாங்க அண்ணா என்று பூபாளம் பாடிக் கொண்டிருக்கிறான். அவனும் தான் என்ன செய்வான்? இவன் கோலத்திற்குள் நுழைந்தால் அந்த எதிர் பார்ட்டியோ புள்ளிக்குள் நுழைந்தது. சரி கொஞ்சம் விட்டுப் பிடித்து இவன் வட்டத்திற்குள் நுழைந்தால் அங்கேயோ சதுரத்திற்குள் நுழைந்தார்கள். பெரிய இடம் என்பதால் துருவனால் அடித்துத் தூக்கவும் முடியவில்லை.



வேறு வழியில்லாமல் இவனும் அப்படி இப்படி என்று அவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போனால் கடைசியில் உங்கள் கம்பெனி M.D AR sir வந்து எங்கள் M.Dயைச் சந்தித்தால் தான் இறுதி முடிவை உறுதியாக சொல்ல முடியும் என்று பிடிவாதம். அப்படி கூட சொல்லக் கூடாது கட்டளை தான் விதித்தார்கள். இதை விதித்தது வேற யாரோ என்றால் அவர்களுக்குத் தாங்கள் யார் என்பதை செயலில் செய்து காட்டியிருப்பான் துருவன். ஆனால் இன்று அப்படி முடியாதே! அதனால் தான் என்றும் இல்லாத வழக்கமாக இன்று தன் அண்ணனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான்.



இது தெரியாமல் அது யார் என்னை வரச் சொல்லி கட்டளை இடுவது என்ற எண்ணத்தில் தம்பியிடம் எகிறியவன் அதன் பிறகு எந்த இடையூறும் இல்லாமல் தன் விடுமுறையை மொரீஷியஸ் தீவில் கொண்டாடி விட்டு இந்தியா திரும்பி திருச்சியிலிருக்கும் தங்கள் பங்களாவுக்குள் காலை ஏழு மணிக்கு திக் விஜயம் செய்தான் அபி.



‘அன்புருவாய் வந்தென்னை


ஆட்கொண்ட குருபரனே

அறல் பொருளின்பம் வீடுமே

தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா

சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா

போற்றிடுவேன் போற்றிடுவேன்

புவனகுரு நாதா

போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி’




என்ற கந்த குரு பாடலைத் தன் கணீர் குரலால் பூஜை அறையில் பாடி கொண்டிருந்தார் மணிமேகலை. தன் தாயின் காந்தக் குரலில் மெய் மறந்து ஒரு நிமிடம் நின்றவனோ அடுத்த வினாடியே தன்னிலை உணர்ந்து தான் வந்த சுவடு தெரியாமல் நழுவி மேலே ஏறி தன் அறைக்குள் வந்து குளித்து முடித்து பின் இவன் கீழே வரவும் அவன் தாய் தீபாராதனை தட்டுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.



இவன் ஓசை எழுப்பாமல் கடைசி படிக்கட்டில் நிற்கவும், மகனைப் பார்த்தவர் “எங்கு பார்த்தாலும் இந்த பெரிய கழுதை நிற்கிற மாதிரியே இருக்கு” என்று அவர் வாய் விட்டுப் புலம்ப, அதைக் கேட்டு இவன் சன்னமாக சிரிக்கவும்



ஒரு நொடி இன்பமாக அதிர்ந்தவர் தீபாராதனைத் தட்டை அங்கிருந்த மேஜை மேலேயே வைத்து விட்டு “அபிப்பா!” என்ற குதூகலத்துடன் ஓடிப் போய் மகனைக் கட்டிக் கொண்டார் அந்த ஐம்பத்தைந்து வயது குழந்தை.



“அம்மாஆஆஆ…” என்று இவன் அவரை அணைத்துக் கொள்ளவும்



“போடா கழுதை! நீ ஒண்ணும் என்ன சமாதானப் படுத்த வேண்டாம்” என்று பொய்யாக இவர் சண்டையிட ஆரம்பிக்கவும்



“ம்மா.... இனி நான் இங்கே தான் இருக்கப் போறேனாம். அதனால் மெல்லவே சண்டை போடுங்க. இப்போ தீபாராதனை அணையப் போகுது. முதலில் உங்க சின்னக் கழுதைக்கு காட்டுங்க. உங்க கையால் விபூதி வைக்கலைனா இன்று முழுக்க ஆபீசில் என் கிட்ட சோக கீதம் வாசிப்பான்”



பெரிய கழுதையைச் செல்லமாக முறைத்தவர் “நீ தான் தெய்வமே இல்லைன்னு சுற்றிட்டு இருக்க. என் மன திருப்திக்காகவாது நீ என் கையில் விபூதி வைத்திருக்கியா? ஆனா என் சின்ன செல்லத்தைப் பாரு. நான் சொல்லாமலே எல்லாம் செய்கிறான்” என்றவர் அந்த எல்லாம் மில் சற்று அழுத்தம் கொடுத்த படியே தன் எதிரில் வந்து நின்ற சின்ன மகனுக்கு தீபாராதனையைத் தன் கையால் ஒற்றி விபூதியையும் வைக்கவும், அபி முகத்தில் பெரியதாகவே சிரிப்பு மலர்ந்தது.



உடனே இவன் தாயின் காலில் விழவும் மகனை ஆசீர்வதித்தவர் இப்படி தினம் தினம் தனியா விழுகிறதுக்குப் பதிலா உன் மனைவி பிள்ளைகளோட விழு டா” என்று அவர் தினம் பாடும் பாட்டைப் பாடவும், எழுந்து தாயைக் கட்டிக் கொண்டவன்



“ம்மா... பசிக்குது” என்று இவன் சிணுங்க வழக்கம் போல சொல்ல நினைத்தது கேட்க நினைத்தது எல்லாம் மறந்து போனது அவருக்கு.



பிள்ளைகள் இரண்டு பேரும் டைனிங் டேபிளில் அமரவும் தன் கையால் இட்லி வடை இடியாப்பம் என்று பரிமாறியவர் “நீ இன்று வருவாய் என்று தெரிந்திருந்தால் ஏதாவது இனிப்பு செய்யச் சொல்லி இருப்பேன்” என ஆதங்கப்படவும் சின்ன மகன் தான் சாப்பிடுவதை விட்டு தாயை நிமிர்ந்து பார்க்கவும், அபிக்கு சிரிப்பு வந்தது. வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கிய படி அவன் சாப்பிடவும், துருவனின் பார்வையைச் சந்தித்தவர்



“என்ன டா பார்க்கிற? நீ என்ன தட்டு தட்டாவா சாப்பிடற? நீ சாப்பிடற காக்கா சோறு அளவுக்கு எல்லாம் என்னால் ஒன்றுக்கு நாலு பதார்த்தம் செய்து தர முடியாது. சீக்கிரமே நான் ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கலாம் என்றிருக்கேன். ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். பிறகு வருகிற பொண்ணுங்க அவங்க அவங்க புருஷனைப் பார்த்துக் கொள்ளட்டும்” அவர் குரலில் உறுதி இருக்கவும் துருவன் வாயே திறக்கவில்லை.



ஆனால் அபியோ “ஏன் ம்மா? அங்கெங்கே அம்மாக்கள் பையனுக்கு கல்யாணம் ஆனா மருமக புடவையைப் பிடித்துகிட்டு அவ பின்னாலேயே நிழலா திரியறானு கல்யாண பேச்சையே எடுக்க மாட்றாங்க. அப்படியே மீறி செய்தாலும் உஷாரா கல்யாணப் பேச்சு பேசும் போதே ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறாங்க. உங்களுக்கு சந்தேகமா இருந்தா தரகரைக் கேட்டுப் பாருங்க. திருமணம் செய்துக்கப் போற பொண்ணு மாப்பிளைய விட அவங்களை பெற்றவங்க தான் அதிகமா கண்டிஷன் போடறாங்க. அதை விட பிள்ளைகளோட சம்பாத்தியம் வேண்டுமென்று திருமணமே செய்யாமல் வைத்திருக்க தான் ஆசைப் படறாங்க. நீங்களும் அவர்களை மாதிரி இந்த காலத்து அம்மாவா இல்லாமல் ஏன் மா இன்னும் டிபிக்கல் அம்மாவாகவே இருக்குறீங்க?”



மகனை முறைத்தவர் “என்ன அபிப்பா பேசுற நீ?” மகனைக் கொஞ்சும் போதோ இல்லை கோபத்தில் திட்டும் போதோ அவர் தன் மகனை அழைக்கும் ஒரே வார்த்தை அபிப்பா என்பது தான். இப்பொழுதும் கோபத்தில் அப்படி அழைத்தவர் “அப்படி ஒரு பெற்றவங்களா இருந்து கடைசியில் அவங்க எதை சாதித்து இருப்பாங்க? சாகிற வரை சுக போக வாழ்வு.. அவ்வளவு தானே? அது ஒரு சாதனையா இல்லை வாழ்வா? அதற்குப் பிறகு அந்த பிள்ளைகளோட நிலை?



ஐந்து வயதில் ஒரு குழந்தை தாய் தந்தையர் இல்லாமல் அனாதையா இருந்தா ஐயோ பாவம்னு பரிதாபப் படுகிற அவர்கள் தான் பணமிருந்தும் தன் பிள்ளை ஐம்பது வயதில் அனாதையா நிற்கும் என்று யோசிப்பது இல்லை. ஏன்? ஐந்து வயது தான் பாவப்பட்ட குழந்தை வயதா? அந்த வயதில் கூட கௌரவம் பார்க்காமல் பிச்சை எடுக்கலாம். ஏன்.. வாழணும் என்ற வெறியில் அப்படி இப்படி உருண்டு புரண்டு கூட வாழ்ந்து விடலாம். அப்படி வாழ்ந்தவர்களும் இந்த உலகமே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு வாழ்ந்தும் இருக்காங்க.



அதே தனி மரமா ஐம்பது வயதில் இருக்கிறவங்களைப் போய்ப் பாரு. என்னடா வாழ்க்கை என்று நாட்களைத் தள்ளிக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால், தான் வாழ்கிற வாழ்வு மேலே பிடித்தம் இருக்காது. அரவணைக்க உறவும் இருக்காது. பிறகு எங்கே பிடிப்பு வரும்? அதனால் நான் சொல்கிறது இது தான். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நல்லது” மகன் ஏதோ சொல்ல வரவும்



“நிறுத்து டா… நீ என்ன கேட்க வருகிற என்று தெரியுது. அப்பாவை விட்டுப் பிரிந்த பிறகு நீங்க ஏன் வேற ஒரு வாழ்வு அமைத்துக் கொள்ளவில்லை என்று கேட்கிற.. அதானே? எனக்கு பற்றுக்கோலாய் மகன்கள் நீங்க இரண்டு பேரும் இருந்தீங்க. அதனால் நான் யோசிக்கவில்லை. அதே நான் தனி மரமா இருந்திருந்தா நிச்சயம் என்னை மாதிரி வாழ்வில் பாதிக்கப் பட்டவரை வாழ்க்கைத் துணையா ஏற்றிருப்பேன். அதில் தப்பும் இல்லை. ஆனா அப்படி மறுபடியும் தேர்ந்தெடுக்கிற வாழ்க்கைத் துணையில் தான் இப்போ இருக்கிற ஆணோ பெண்ணோ தவறு செய்கிறார்கள்” மறுபடியும் மகன் ஏதோ சொல்ல வர



“இப்போ நீ என்ன கேட்க வர? அப்போ எதிர்கால வாழ்வுக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தா போகுதுன்னு சொல்ற… சரி வளர்க்கிற பிறகு அதற்காகவாது திருமணம் செய்வியா இல்லை உன் சுயநலத்திற்காக அப்படியே விட்டு விடுவாயா? அப்படி ஒரு எண்ணம் இருந்தா அதற்கு அந்த குழந்தையைத் தத்தே எடுக்க வேண்டாம். சந்தோஷம் நிம்மதி இல்லைனாலும் பிற்காலத்தில் ஒரு வாழ்க்கைத் துணையாவது கிடைக்கும் அந்த குழந்தைக்கு..



காலத்தே பயிர் செய் என்று நம் முன்னோர்களும் சொல்லியிருக்காங்க. ஒரு பிரம்மச்சாரி ராஜாவாக வாழ்ந்து பிச்சைக்காரனாக இறக்கிறான் என்று வெள்ளைக்காரனும் சொல்லியிருக்கான்.. அதெது செய்ய வேண்டிய நேரத்தில் செய்யணும்.. புரியுதா?” எப்பொழுதும் மகன் திருமணத்திற்குத் தடை சொன்னால் அப்போதைக்கு ஏதாவது பேசிவிடுவார் தான் மணிமேகலை. ஆனால் இன்று அவனை இத்தனை நாள் பார்க்காத கோபமோ முப்பத்தியொன்று வயதாகியும் இன்னும் தன் வாயை அடைப்பதாலோ ஏதோ ஒன்று அவரை இன்று இப்படி பேச வைத்தது.



இரண்டு பிள்ளைகளும் வாயே திறக்கவில்லை. அபி மட்டும் ‘டிபிக்கல் அம்மான்னு நினைச்சேன்.. என்னமா வெளுத்து வாங்கறீங்கமா மேகலை!’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.



பொதுவாக பெரியபிள்ளை மக்காக இருக்கும். சின்னப்பிள்ளை அறிவாளியாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே அபி தான் அறிவாளி! அதற்காக துருவன் மக்கு எல்லாம் கிடையாது. என்ன.. கொஞ்சம் நீதி நேர்மை எல்லாம் அதிகமாகப் பார்ப்பவன். இரக்க குணமும் அதிகம். அபியோ நீதி நேர்மை என்ற வார்த்தையை அவனது அகராதியில் இல்லாமல் அழிக்க முற்படுபவன்.



கடைக்குட்டி என்பதால் துருவனிடம் கொஞ்சம் சுட்டித் தனம் இருக்கும். அதெல்லாம் அண்ணன் இல்லாதபோது தன் தாயிடமும் வெளியிலும் தான் இருக்கும். அதனால் தான் இன்று அண்ணன் எதிரில் தாயை எதுவும் சீண்டாமல் இருக்கிறான் அவன்.



“அம்மா! ஜோசியரை வரச் சொன்னீங்களா?” அந்த வீட்டின் பொறுப்பாளர் வேலன் வந்து கேட்கவும், மணிமேகலை அபியைப் பார்க்க அவனோ எந்த சலனமும் இல்லாமல் உணவை உண்டு கொண்டிருந்தான்.



“ஆமாம்.. அவரை உட்காரச் சொல்லி காபி கொடுங்க வேலா”



மகன்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்த படி பூஜை அறைக்குச் சென்றவர் அங்கிருந்த பிள்ளைகளின் ஜாதகத்தை எடுத்து வந்து “மகன்கள் இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்க்கணும்” என்று சொல்லி வந்தவரிடம் கொடுக்க



“வணக்கம் மணிமேகலை அம்மா! அதான் நான் இருக்கேனே.. பேஷா பார்த்திட்டா போச்சு” என்று வந்தவர் வாயெல்லாம் பல்லாக ஜாதகத்தை வாங்கிய நேரம், சாப்பிட்டு முடித்த கையைத் துடைத்த படி அவர்கள் முன் வந்து நின்றான் அபி.



வந்தவருக்கு முகத்தில் சவக்களையுடன் கை கால்கள் தந்தி அடிக்க அவர் எழுந்து நிற்கவும்,




“உட்காருங்க..” என்றவன் கால் மேல் கால் போட்ட படி தானும் அமர்ந்து கூடவே தன் தாயின் தோளைச் சுற்றி கை போட்டுக் கொண்டு ஜோசியர் சொல்வதைக் கவனிக்க ஆயத்தமானான் அபி.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN