என்னடி மாயாவி நீ: 25

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 25

கூடலும் காதலுமாய் இனிதே ஆரம்பித்தது அவர்களின் வாழக்கை. விடிந்தும் சில பல செல்ல தொந்தரவு வர்ஷித் செய்ய ஆதிகா தான் செய்வதறியாமல் போனாள். அந்த அழகான நாளின் தொடக்கத்தில் ஆதிகாவும் வர்ஷித்தும் பெற்றோரிடம் ஆசி வாங்கி கொண்டு, இன்று ஊர் சுற்றலாம் எனும் திட்டம் தீட்டி முதலில் கோவிலுக்கு சென்றனர். கோவில் என்றதால் வர்ஷித்தின் சிலுமிச வேலைகள் கொஞ்சம் மட்டு பட்டிருந்தது. சாமி தரிசனம் முடித்துவிட்டு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அங்கு இருவர் ஆதிகா வர்ஷித்தை பார்த்து பதுங்கி ஒளிந்து மறைந்து செல்வது போல இருந்தது வர்ஷித்திற்கு. இதனால் யோசனையில் சிக்கினான். ஏன் இவர்கள் தங்களை பார்த்து ஒதுங்கி சென்றனர். அவர்கள் யாரென்று வர்ஷித் அறிந்துகொண்டான். மேலும் அவர்களின் தோற்றமே மாறி உள்ளதே என அவன் யோசிக்கும்போது ஆதிகாவின் பேச்சு இவனை யோசிக்க தடுத்தது.

சரி இவளை வைத்துக்கொண்டு எதுவும் யோசிக்க இயலாது. அதனால், அவசர வேலை என இவளை வீட்டில் விட்டு நாம் அவர்களை கவனிப்போம் என எண்ணி அவளை வீட்டிற்கு கூட்டி சென்றான். அவள் கோபப்பட்டாலும் சரி என ஒத்துக்கொண்டாள். வீட்டிற்கு போகும்போது அவளிடம் ஒரு கேள்வி கேட்டான், "நீ அத்தை மாமாகிட்ட டெய்லி பேசுறியா? " என அதற்கு ஆதிகா, "பேசுவேன். ஆனால், ஒருவாரமா நல்லா பேசல என்ன ஆச்சுன்னு தெரியல ஒருநாள் அவுங்க வீட்ல போய் பாத்துட்டு வரலாம்" என ஆதிகா சொல்ல அவன் வெறும் ம்ம் மட்டுமே பதிலை தந்தான்.

அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நினைத்துக்கொண்டான். வண்டியை வேகமாக செலுத்தி ஆதிகாவை வீட்டில் விட்டு அவர்களை சந்திக்க சென்றான். அவர்களின் வீடு பூட்டி கிடந்தது. அதுவுமில்லாமல் வாடகைக்கு விடப்படும் என பலகை இருக்க அதை பார்த்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது. அக்கம் பக்கம் வீட்டினரிடம் விசாரித்து, அவர்களின் தற்போதைக்கு இருக்கும் விசாலம் கேட்டு வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

அங்கு சென்று ஆதிகாவின் பெற்றோர் இருக்கும் வீட்டை பார்த்தவன் மனமுடைந்து போனான். கஷ்டப்படுகிறார்களே என வேதனை கொண்டான். "மாமா அத்தை" என கோபத்தோடு கத்தினான். அவர்கள் பயந்தது போலவே வர்ஷித் வந்து நின்றான். வெளியே சென்று இருவரும் வர்ஷித்தை அழைத்து வந்தனர். உள்ளே கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு "என்ன மாமா நடந்துச்சு? " என கேட்க அவரும் நடந்த அனைத்தையும் சொன்னார். "இத என்கிட்ட கூட சொல்ல வேணாம் ஆதிகாகிட்டயாவது சொல்லிருக்கலாம்ல மாமா" என ஆதங்கத்தோடு கேட்க "இல்ல மாப்பிள்ளை அது முறை இல்ல" என சொல்ல அவனோ, "அப்போ நாங்க எதுக்கு இருக்கோம் இதுக்குகூட வந்து நிக்கலனா" என பேசி உதவி வேண்டாம் என மறுத்தவர்களிடம் பேசி உதவி செய்தான்.

நடந்த எல்லாவற்றையும் கேட்ட வர்ஷித் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான் ஏனென்றால் அதற்கு முழு காரணம் ராகேஷ் தான். ராகேஷ் அப்பாவிடம் ஆதிகாவின் பெற்றோர் திருமணத்திற்காக பணம் கடனாக வாங்கியிருந்தனர். அதற்கு வட்டி அதிகமாகவே போட்டு தேதி கேடு வேறு கொடுத்து இதற்குள் தர வேண்டும் என விதிமுறைகள் வேறு. இவருக்கு மட்டுமில்லை அவரிடம் பணம் தேவை என போய் நின்றாலே இது தான். ஆதிகாவின் பெற்றோரால் தேதி கடந்தும் பணம் தர முடியாமல் போக வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர்.

இதற்கு வர்ஷித் பண உதவி செய்தான் வீட்டையும் மீட்டனர். "கொஞ்ச நாள் கழித்து திருப்பி தருகிறோம் மாப்பிள்ளை" என கூறிய மாமாவிடம் "உங்க வீட்டுப்பிள்ளை இதற்கு உதவி செஞ்சா நீங்க கணக்கு பாப்பிங்களா மாமா" என கேட்டான். அவர்களும் அவனது குணத்தை எண்ணி மகிழ்ந்தனர். "சரிங்க மாப்பிள்ளை திருப்பி தரல" என அவர்களையும் இவனது வழிக்கு கொண்டு வந்து விட்டான்.

அன்றே வீட்டையும் மாற்றினர். எல்லா பொருளையும் வீட்டிற்கு கொண்டு வர வர்ஷிதே அவர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தான். மாறனும் அவரது தாரமும் முன்பு இருந்த வர்ஷித்திற்கும் இப்போது உள்ள வர்ஷித்திற்கும் உள்ள மாற்றத்தை உணர்ந்து மகிழ்ந்தனர். வர்ஷித் ஆதிகாவின் அறைக்கு வந்தபோது அவர்களின் முதல் விழிகள் சந்திப்பை நினைவு கூர்ந்து நேத்து நிகழ்ந்த கூடலை எண்ணி வெட்க பட்டுப்போனான்.

அவனின் உரிமையான அத்தை மாமா என்ற அழைப்பும் அவன் செய்த உதவி மூலம் நீங்கள் எனது அப்பா அம்மா போல என கூறிய மருமகனை பார்த்து பூரிப்பு அடைந்தனர்.

"அத்தை மாமா நான் போய்ட்டு ஆதிகாவ இங்க அழைச்சிட்டு வரேன், அவ உங்கள பார்க்கணும்னு சொன்னா, அவ வரதுக்குள்ள வீட்ட பழைய மாதிரி மாத்திடுங்க, அவளுக்கு இங்க நடந்தது எதுவும் தெரிய வேணாம் தெரிஞ்சா வேதனை படுவா" என கூற மகளை மருமகன் தாங்குவதை பார்த்த பெற்றோரின் மனசு குளுந்து போனது.

வர்ஷித் வீட்டுக்கு வந்தபோது ஆதிகா கோபத்தின் உச்சியில் இருக்க "முக்கியமான இடத்துக்கு போகணும்" என அவளை கிளப்பி அவளுக்கு மட்டும் தெரியாமல் அம்மா அப்பாவிடம் ஆதிகா வீட்டில் நடந்ததை கூறி அங்கு தங்கி வருவதாக கூறி ஆதிகாவை அழைத்து சென்றான். கோபத்தில் இருந்தவளை கார் ஓட்டுவதை ஒரு இடத்தில் நிறுத்தி அவசரமாக இதழ் முற்றுகை இட்டு சமாதானம் படுத்தினான். மாமியார் வீட்டில் முத்தம் தர முடியாது என்பதால் இங்கயே கொடுத்தான் அந்த கள்வன். அங்கு சென்றவளுக்கு ஆச்சரியம் தான். வர்ஷித் தன்னை இங்கு அழைத்து வருவான் என அவள் எதிர்பாக்கவே இல்லை. அங்கு அவளுக்கு கிடைத்த கவனிப்பை விட வர்ஷித்திற்கே அதிகம்.

அன்று இரவு சாப்பாட்டை முடித்த பிறகே வர்ஷித்தை பார்க்க சென்றாள் ஆதிகா. நாள் முழுதும் வர்ஷித் மாமனார் கூடவே பேசி பொழுது கழித்தான். ஆதிகா அம்மாவிடம் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவள் சந்தோசமாக வாழ்வதாக சொன்னபோது ஆதிகாவின் அம்மாவிற்கு எல்லையில்லா ஆனந்தம். யாருமே ஆதிகாவிடம் அங்கு நடந்ததை பற்றி கூறவில்லை. அறைக்கு வந்தவள் அவனிடம் சென்று அமர்ந்து, "என்ன பண்ண மாமா? " என கேட்க அவன் முழித்தான். "முழிச்சி ஏமாத்ததே, அப்பாவும் அம்மாவும் உன்னைய நன்றியா பாக்குறாங்க என்ன நடக்குது அப்பா அம்மாவை பத்தி எனக்கு தெரியாதா" என துருவி துருவி ஆதிகா கேட்டும் அவனிடத்தில் பதில் இல்லை. "என்கிட்டே எல்லாரும் எதையோ மறைக்கிறீங்க" என அழ தொடங்கும் மனையாளை சமாளிக்க வழி தெரியாமால் அவன் இந்த வீட்டை பற்றி மட்டும் நடந்ததை கூறினான். கூறி முடித்தபின் அவனுக்கு எந்த வகையில் நன்றி கூறுவது என தெரியாமல் போனாள் ஆதிகா அவனின் பாசத்தில் மூழ்கினாள். அவன் சொன்னவுடனே அமைதியாய் அவனது மார்பு மேல படுத்துக்கொண்டு அவன் கண்களையே நன்றியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென அவனது கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தை கட்டிக்கொண்டாள். "என்ன வேணும்னு சொல்லு மாமா நான் செய்றேன்" என காதலுடன் மொழிந்தவளின் புடவையை விளக்கி அவளது வெற்று வயிற்றில் கை பதிக்க அவனுக்குள் கரைய தொடங்கினாள் பெண்ணவள். வர்ஷித், "ஆதிமா இந்த வயித்துல என்னோட உயிரு வளரனும். எனக்கு என்னோட அம்மா மாதிரி குழந்தை வேணும். என்னோட குழந்தைனு நான் உரிமை கொண்டாடணும். ஒரு அப்பாவா என்னோட குழந்தையை உள்ளங்கையில தாங்கணும்" என காதலுடன் உணர்ச்சி பெருக்கில் கூறியவன் மறந்தான் அது இருவரின் உரிமை இருவருக்கும் சொந்தம் என்பதை.

அவள் வெட்கத்தோடு சம்மதம் என கூறி அதற்கான வேலை பாடுகளில் இருவரும் இறங்கினர்.

நடுராத்திரியில் தன் மேல் தூங்குபவளை எழுப்பி, "ஆதிமா எப்போடி என்ன காதலிக்க ஆரம்பிச்ச?" என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான். அந்த கேள்வியில் தூக்கமெல்லாம் தொலைந்து போக அவளும் தன் காதல் பூத்த கதையை கூற ஆரம்பித்தாள். "விஷ்ணு இறந்ததிற்கு அப்பறம் எனக்கு வாழவே புடிக்கல, வாழ்க்கையே வெறுத்து போச்சு. அத மறக்குறதுக்குள்ளே நம்ம கல்யாணம் ஏற்பாடு நடந்து எல்லாமே நடந்துருச்சு. எனக்கு பியூச்சர் நெனச்சி ரொம்பவே பயமா இருந்துச்சு. அப்போதான் உன்கிட்ட என்னோட பாஸ்ட் பத்தி சொல்ல வரப்போ நீயே தெரியும்னு சொன்ன, எனக்கு அப்பவும் பயமா இருந்துச்சு மத்தவங்க போல அதையே சொல்லி காட்டுவியோன்னு நீ அத பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கல, எனக்கு அது ரொம்ப பெரிய சந்தோசமா இருந்துச்சு, கொஞ்சம் நிம்மதியாவும் இருந்துச்சு. அப்பவே உன்மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துச்சு. என்னோட சம்மதம் இல்லனா கூட எனக்காக என்னோட சந்தோசத்திற்காகணு செஞ்சது என் மனசுக்கு இதமா இருந்துச்சு இப்படி உன்ன மாதிரி நான் யாரையும் பாத்ததும் இல்ல. ஆனால், நீ டிவோர்ஸ் தரேன்னு சொன்னப்போ மறுபடியும் என் சந்தோசத்திற்கு யோசிக்கும் ஒருத்தரை இழக்க போறோம்னு அவளது நெஞ்சை காட்டி இங்க வலிச்சது மாமா. சரி என்ன புடிக்கமாத்தான் டிவோர்ஸ் தர போறான்னு நெனச்சப்போ தான் தோணுச்சு நீ யாரையாவது லவ் பன்னிருப்பியோனு. அப்பறம் அதுக்கு ஒரு ஆதாரம் போல டைரி என் கைக்கு வந்தப்போ என்னோட உயிரே என்கிட்ட இல்லடா நாளைக்கு என்ன விட்டு நீ போய்ட்டா என்னோட வாழ்க்கையை நெனச்சி பயத்தோட தா அத படிச்சேன்.அப்போதான் நீ எனக்குள்ள வந்துட்டன்னு எனக்கு தெரிஞ்சது. உன்னோட காதலுக்கும் நான்தான் சொந்தக்காரிணு தெரிஞ்ச உடனே எனக்கு சொல்ல முடியாத சந்தோசம்டா வாழ்க்கையில ஒரு பிடித்தமும் வந்துச்சு உன்னைய விட கூடாதுனு முடிவு பண்ணேன் உன்கூட இருக்கும்போது பாதுகாப்பா நான் உணர்வேன்டா. நீதான் இனிமேல் என்னோட நிகழ்காலம் எதிர்காலம், எல்லாமே உன்னோடதான்டா என உணர்ச்சிபெருக்கில் கூறி முடித்தவளின் நெற்றியில் முத்தமிட்டு "லவ் யூ ஆதிமா" என்றான் வர்ஷித். அவனது இரு கன்னத்திலும் முத்தமிட்டாள் அவன் காதல் கூறியதற்கு பரிசாக.

"ஆனால், அத்தை மட்டும் இல்லனா நாம இந்தளவுக்கு சேர்ந்துருப்போமான்னு தெரியல" எனும் ஆதிகா கூற்றை வர்ஷித்தும் ஆமோதித்து "உண்மை தான் அம்மா யோசிச்சு தான் நம்மகிட்ட பேசிருக்காங்க சாதாரணமாவே அம்மா ரொம்ப ஜாலியான டைப், விஷ்ணு இருக்கும்போது காமெடியா இருக்கும் அப்பாவும் அம்மாவும் எங்ககூட பிரண்ட்ஸ் மாதிரி பழகுவாங்க" என அந்த நினைவுகளில் சிரித்தவன் சட்டென கண்ணீர் சிந்தி "அந்த கிரதாக போனதிலிருந்து பழைய அம்மாவ பாக்கவே முடில இப்போதான் நார்மலா இருக்காங்க" என அழ ஆரம்பித்தான். அவனுக்கு ஆறுதல் சொல்ல மொழியற்று நின்றாள் அவள். ஏனெனில், வர்ஷித் வாழ்க்கையில் இதுபோல ஒரு நல்ல பெற்றோர் குடும்பம் என எல்லாமே அமைந்தது விஷ்ணுவால் மட்டுமே. இன்று அவன் இல்லாத வாழ்க்கையை வர்ஷித் எப்படி எதிர்கொள்வான். அவனுடைய வலியை எந்த மருந்தாலும் சரி செய்ய இயலாது என்பதை அறிந்து கொண்டாள். வாழ காத்துக்கொடுத்தவனின் வாழ்வே இல்லாமல் போக இதனை வர்ஷித்தால் ஏற்கவே முடியவில்லை. இதற்கு காலம் தான் மருந்து தர வேண்டும். அவளே அவனுக்கு ஆறுதலாக மாறினாள். தாயாய் மாறி சேயாக அவனை தாங்கி கொண்டாள். இருவரும் கண்மூடி படுத்திருக்க வர்ஷித் சகஜ நிலைக்கு மாறி அவளது கையை இறுக்கமாக பற்றி கழுத்தடியில் வைத்திருந்தான். "நானே உன்னோட கைக்குள்ள இருக்கேன் இதுல ஏன் மாமா என்னோட கையை புடிச்சி வச்சிருக்க? " என கேட்க "நீ எங்க இருந்தாலும் உன்னோட கை இருக்க வேண்டிய இடம் இதுதான்" என அவளிடம் பதில் தந்து, "நான் சொன்ன மாதிரி எப்போ என்கிட்டே உன்னோட லவ்வ உன் வாயால சொல்ல போற? " என கேள்வி கேட்டான். அவளோ, "இன்னும் உன்ன நிறைய லவ் பண்ணனும் மாமா, அதுனால நேரம் வரும்போது சொல்றேன்" என புதிர் போட்டாள்.

இருவரும் நெறய மனம் விட்டு பேசினார். விடியற்காலையில் எழ போனவளை தடுத்து, "இப்போதானடி தூங்கவே ஆரம்பித்தோம் அதுக்குள்ள எந்திரிக்கிற? " என தூக்க கலக்கத்தோடு கேட்க, "பொதுவா பொண்ணுங்க அம்மா வீட்டுல தான் பிரீயா இருப்பாங்க. ஆனால், எனக்கு அப்டியே வேற மாதிரி மாமியார் வீட்ல தான் நான் சுதந்திரமா இருக்கலாம். இங்க அப்படி இல்ல, இங்க கொஞ்சம் சீக்கிரமா எழும்பனும்" என கூற சிரித்து விடுவித்தான். இருவரும் தங்கள் வீட்டுக்கு போகும்போது வர்ஷித் ஆதிகாவிடம், " நீ எத்தனை நாளைக்கு லீவு எடுத்திருக்கடி?" என கேட்டான். அவளோ, "நான் வேலைய விட போறேன் மாமா" என சொல்ல வர்ஷித், "ஏன்டி விடுற? " என கேட்டான். "இனிமேல் என்னோட முழு வேலை உன்ன பாத்துக்குறது தான் மாமா"என கூறி கண்ணடித்து அவன் மனதில் என்றும் அழியா காதல் மனைவி ஆனாள் வர்ஷித்தின் ஆதிமா.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 25
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN