மானிடர் வேற்றுமையில்லை

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதிரவனை மறைத்த கருமேகம் மாரியை பொழிய காத்திருக்கும் காலைப் பொழுது அது.



" இந்த மாதிரி ஒரு கேஸை நான் வக்கீல் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை சூர்யா சார்...இதற்கெல்லாமா கேஸ் போடுவாங்க" என நாட்டில் நடக்கும் குற்றங்களை எல்லாம் விட்டு விட்டு ஏதோ ஒரு பெண் கொடுத்த கேஸை கிண்டலித்து சிரித்துக் கொண்டிருந்தார் நாராயணன்.



"அந்த பெண் ஒரு பைத்தியம் சார். நல்ல வேளை பொதுநல வக்கில் எனக் கூறி என்னை மாட்டி விட்டிருப்பாங்க.
நான் அந்த பையனுக்கு ஆஜராகுறேனு சொல்லி தப்பிச்சுட்டேன் " என்றவரோ 35 வயது மதிக்கத்த கருமை நிற கண்ணனின் நிறத்தில் தோல்வி என்ற ஒன்றையே தன் வாழ்வில் கண்டிராத துடிப்புமிக்க வக்கீல்.



" அந்த பைத்தியத்துக்கு எப்படியும் யாரும் வாதாட வரப் போறது இல்லை.
வாங்க சூர்யா சார் என்ன நடக்குதுனு பார்க்கலாம் நமக்கு நல்ல ஒரு நகைச்சுவைப் படம் காத்திருக்கு " என்றவனுக்கோ ஏகபோக சந்தோஷம்.



நீதிமன்றமே அமைதியாக காட்சியளிக்க அவர்கள் இருவரும் பைத்தியம் என்று கூறியவளோ பொலிவிழந்த முகமாக காணப்பட்டாள்.



காந்த கயல் விழிகள் இன்று அவளவனை ஈர்க்காமல் தரையை பார்த்துக் கொண்டிருக்க , மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறத்தில் இருந்தவளோ நான் ஏன் இப்படி பிறந்தேன் என மனதால் வெம்பிக் கொண்டிருந்தாள்.



பொறுமை, அடக்கம், அமைதி, உதவும் மனப்பான்மை என பல நற்குணங்கள் இருந்தாலும் அவை எதையும் போற்றாமல் அவளின் நிறத்தை வைத்து தூற்றும் உலகத்தில் பிறந்தது அவள் தவறல்லவே.



கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருக்க துடைக்க கூட திராணி இல்லாமல் நிலத்தையே வெறித்துக் கொண்டிருந்தவள் சட்டென தலையை நிமிர்த்தினாள்.



அவன் தான் அவனே தான்.
தன் ஒட்டுமொத்த காதலையும்
தகுதியே இல்லாத ஒருவனிடம் காட்டினால் எப்படி அந்த காதல் வெற்றி பெறும்.
அவனைப் பார்க்கும் அவள் கண்கள் கூட அவனின் மீதான அதீத காதலை பிரதிபலித்து அவளுக்குத் துரோகம் செய்தது.



"விநாயகா இது நூறாவது தேங்காய் இன்னும் என் மேல இரக்கம் வரலையா? நான் பாவம்ல? தயவு செஞ்சு இந்த உதவி மட்டும் உன் செல்ல பாப்பாக்காக செய்ய மாட்டியா? நீயும் நானும் ஒரே இனம். எப்படினு சொல்லுப் பார்க்கலாம்? ஒரே கலர்ல " என்று சிரித்தவளின் புன்னகை உதட்டளவில் மட்டுமே.



"இன்னைக்காவது பாரதி என் காதலை ஏத்துக்கணும் ப்ளீஸ்" என்று கெஞ்சியவள் தேங்காயை உடைத்து விட்டு அவளின் பாரதியைத் தேடிச் சென்றாள்.
பாரதி அவளின் மனம் கவர்ந்த கள்வன்.



"பாரதி" என்று கத்திக் கொண்டே தன்னை நோக்கி வருபவளைக் கண்டவன் முகத்தை சுழித்தவாறு திரும்ப அதில் அவள் மனம் வருந்தினாலும் பெரிதுபடுத்தவில்லை.



"பாரதி நான் நான்.." என்று கண்களை மூடிக் கொண்டு நிற்பவளை கழுத்தை நெறித்து கொள்ளலாமா என்ற எண்ணம் அவனுக்கு.



கல்லூரியிலேயே விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் முதல் மாணவனாக இருப்பவனுக்கு பல ரசிகை பட்டாளம் இருப்பது தவறல்லவே..
அந்த ஆணவத்தில் இவளைப் போன்ற ஒரு பெண் அவனிடம் பேசுவது கூட அவனுக்கு அவமானமாகவே தோன்றியது.



"நான் லைப் லாங்க் உன்கூட சந்தோஷமா வாழணும் பாரதி, உனக்கு நல்ல தோழியா, காதலியா, மனைவியா இருக்கணும்.
நான் உன்னை காதலிக்கிறேன் பாரதி"என்று கூறி கண்களை திறந்தவள் கண்டது இவர்கள் இருவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடியிருக்க அனைவரும் இவளைப் பார்த்து ஒரு ஏளனப் புன்னகை செய்வதைத் தான்.



மனம் தாங்காமல் பாரதியைப் பார்க்க அவனின் இதழ்களிலும் அதே புன்னகைதான்.



"பாரதி" என்றவளுக்கு வார்த்தையே வராமல் தொண்டை அடைத்துக் கொள்ள



" உன் முகத்தை ஒருமுறையாவது கண்ணாடியில் பாத்துருக்கியா நீ? உனக்கு நான் வேணுமா? காதல் அதுவும் என்னை நீ!!! நல்ல காமெடி..." என்றவனுக்கு மற்றவர்களும் ஆமா ஆமா என்று கோரஸ் பாட அந்த நொடி கூட அவனின் மீது கோபம் வராமல் அவனின் காதலை யாசகமாய் கேட்கும் யாசகனைப் போலத் தான் நின்றிருந்தாள்.



"பாரதி நான் உன்னை என்னை விட அதிகமா நேசிக்கிறேன் டா..." என்றவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன்



" உன்னை நேசிக்கிற மாதிரியா நீ இருக்க ... கருச்சட்டி , கருப்பி இந்த பெயர்தான் உனக்கு சரியா இருக்கும் " என்றவன் " ஆமா உனக்கு பிடிச்ச பறவை எது ? " என்று கேட்க



" புறா " என்று கண்களில் கண்ணீருடன் கூறியவள் ஏன் எதற்கு கேட்டான் என்று கூட யோசிக்காமல் பதில் அளித்தாள்.



" உன் நிறத்திற்கு காக்கா தான் சரி...
இனிமேல் உனக்கு பிடித்த பறவை கூட காக்கா தான் சரியா ?" என்றவனிடம்



" அது தான் பிடித்த பறவைனு சொன்னா என் காதலை ஏத்துப்பியா பாரதி ?" என்று கண்ணீர் மல்க கேட்டவளைப் பார்த்து சத்தமாக நகைத்தான் அந்த கல் நெஞ்சம் கொண்ட அரக்கன்.



பாரதி என்று அவனின் கைகளைப் பிடித்தவளை "ச்சி தள்ளிப்போ உன் கலர் என் கைல ஒட்டிக்கும் " என்று தள்ளிவிட்டவன் திரும்பி கூட அவளைப் பாராது சென்று விட்டான்.



கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு இரத்தம் வந்துக் கொண்டிருக்க அதைகூட கவனிக்காமல் அவன் செல்வதை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்த பைத்தியக்காரி.



" அய்யோ என்னாச்சு " என்று ஓடி வந்த ஒருவர் அவளைத் தூக்குவதற்குள் மயங்கி சரிந்தவளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.



தூரத்தில் இருந்தே இருவரின் வாக்குவாதத்தை கவனித்துக் கொண்டிருந்தவருக்கு மனம் உலைகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.



இதை இப்படியே விட்டால் இன்று இவளுக்கு ஏற்பட்ட நிலை தான் பலருக்கும் என நினைத்தவர் அவளை கட்டாயப்படுத்தி நீதி மன்றத்திற்கு அழைத்து வந்துவிட்டார்.



அந்த சமயத்தில் கூட அவள் கேட்ட கேள்வி "பாரதி என் காதலை ஏத்துப்பானா மேடம்" என்பது தான்.



நீதி மன்றத்திற்குள் நுழைந்த பாரதி எதிரில் இருந்தவளின் மீது கொலைவெறியில் இருந்தான்.
கைகளைக் கட்டிக் கொண்டு தனக்கு வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடி நின்றிருந்தான்.



நீதிபதி உள்ளே வந்து தன் இருக்கையில் அமர வழக்கு ஆரம்பித்தது.



வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா என்ற டவாலியின் அழைப்பில் கூண்டில் ஏறி நின்றிருந்தவளின் விழிகள் மட்டும் எதிர் கூண்டில் நின்றிருந்தவனைத் தான் சுற்றி வந்தது.



அவனுக்காக போராட சூர்யபிரகாஷ் ஆஜர் ஆகியிருக்க இவளுக்காக இவளைக் காப்பாற்றிய பெண் காந்தாரி தான் ஆஜராகியிருந்தார்.



"இதெல்லாம் ஒரு கேஸா? இவ கருப்பா இருக்கா அதுனால அவனுக்குப் பிடிக்கலை.எல்லாரையும் பிடிக்கணும்னு சட்டம் இல்லையே.
நம்ம நேரத்தை வீணாக்குன இவளுக்கு கண்டிப்பா தண்டனை கொடுத்தே ஆகணும்" என்ற சூர்யபிரகாஷ் அவனிடத்தில் சென்று அமர



"கண்கள் இருந்தும் குருடனாய் சுத்திட்டு இருந்தா நான் என்ன செய்ய?
மிஸ்டர் சூர்யா நீங்க நல்ல ஹாஸ்பிட்டலுக்கு போங்க." என்றவளோ



"இந்த கேஸ் அவளைத் தள்ளிவிட்டதுக்கு, பலபேரின் முன்னிலையில் அவளை மன உலைச்சலுக்கு ஆளாக்குனதுக்காக மானநஷ்ட வழக்கு...தாங்களுக்கு தெரியாத சட்டம் இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சொல்லுறேன் பிரிவு 499 " என்றவளை முறைத்துக் கொண்டே எழுந்த சூர்யா



"மான நஷ்ட வழக்கா ? அப்போ நானும் போடுவேன் பலபேர் கூடியிருக்க பொது இடத்துல காதலிக்கிறேனு சொல்லி அவனை கஷ்டப்படுத்துனத்துக்கு" என்றவன் மேலும் தொடர்ந்தான்.



"ஏன் மா உனக்கு என்ன பெரிய உலக அழகினு நினைப்பா ? கல்லூரிக்கு படிக்க தானே வர... காதல் பண்ண இல்லையே? இந்த கலரை வெச்சுக்கிட்டே இப்படி சுத்துற கொஞ்சம் கலரா மட்டும் இருந்தா ? வீட்டுல இதைச் சொல்லி தான் அனுப்புனாங்களா நல்ல பையான பாத்து வளச்சு போடு னு " என பலப்பல கேள்விகளால் அவளை துளைக்க அவள் இல்லை என தலையாட்டியவாறே பேச்சற்று கலங்கி நின்றிருந்தாள்.



கொதித்தெழுந்த அவளின் வக்கீலோ "உங்கள் நாக்கு தேள் கொடுக்கு எனத் தெரியாமல் போய் விட்டது..." என்று அவனைப் பார்த்து ஏளனமாய் சிரித்தவள் இப்போது நான் பேசலாம்னு நினைக்கிறேன் எனக் கூறி அவர் வாதத்தை ஆரம்பித்தார்.



"உங்கள் பெயர் ?" என்று தன் பக்க வாதத்தை பாரதியிடம் இருந்து ஆரம்பிக்க



" பெயர் கூட தெரியாமல் வாதாட
வந்து விடுவது " என்ற சூர்ய பிரகாஷை பார்த்து சிரித்தவர்



" இது என் முறை நான் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம்...நான் கேட்கலாம் தானே " என்றவரின் பார்வை நீதிபதியிடம் செல்ல



"அப்ஜக்சன் ஓவர்ரூல்டு " என்றவரைப் பார்த்து



" நன்றி யுவர் ஹானர் " என்றவள் சூர்யாவை நோக்கி மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்து வாதத்தை ஆரம்பித்தார்.



இன்னும் பெயர் சொல்ல வில்லை என்பது போல் அவள் பார்வையிலேயே
" பாரதி " என்றுத் திக்கித் திணறி கூறியவனைப் பார்த்து



" வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை" என்று பாடிய பாரதியின் பெயரில் இப்படியும் ஒருவன் என அவனை நோக்கி அறுவறுப்பானப் பார்வை ஒன்றைப் பார்த்தவள்



" அவளை இதுக்கு முன்னாடி தெரியுமா? இரண்டு வருஷமா உங்களுக்குத் தோழியாக பணிபுரிந்தாளாமே...அதாவது உங்கள் அடிமையாக" என்றவளிடம்



" அவள் என் தோழிலாம் இல்லை அவளுடன் நான் பேசவே மாட்டேன் " என்றவனைப் பார்த்து காந்தாரி சிரித்தாள்.



"ஓஹோ அப்போ உங்களுக்குத் தெரியாது...ஆனால் அவ கிட்ட நான் இந்த முறை முதல் மதிப்பெண் வாங்கிக்கிறேனு கெஞ்சுனீங்களாம், செஸ் போட்டியிலையும் அவ கலந்துக்கிட்டா உங்களால வின் பண்ண முடியாது சொல்லி கலந்துக்க வேணாம்னு சொன்னீங்களாம்... இதெல்லாம் என் தோழியா இருந்தா பண்ணுனு டைலாக் வேற "
என்றவளிடம்



"ஆமா என் தோழி தான். ஆனால் இதையெல்லாம் அவ விட்டுக் கொடுக்கல என் திறமைல தான் நான் முதல் இடம் பிடிச்சேன்.
எனக்கு பிடிச்சுலாம் அவ கூட பழகல முதல்ல யாரும் என்கூட பேசல இப்போ பேசுறாங்க..." என்றான்.



" ஓஓ மத்தவங்க பேசுனதும் இவ உங்களுக்கு வேணாம் அப்படித்தானே ?"



"எனக்கு அவளைப் பிடிக்கலை அவ்வளவு தான் "



"உலகுக்கே இருளில் வெளிச்சம் கொடுக்கும் அந்த நிலவைப் போல உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கிய இந்த வெண்ணிலாவின் கலர் உங்களை உறுத்துது அவளின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்குது
சரியா ?"



" இல்லையே...அவளைத் தோழியாகக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
நான் இவளை மனைவியாகவா? " என்று ஏளனத்தில் முகம் சுழித்தவனைக் கண்டு வெகுண்டு எழுந்தவள் சீறும் சிங்கமாய்



" ஓஓஓ நீங்க என்ன கலர் ? வெள்ளை வெளேறென்று இருக்கீங்களோ ?" என்றவளின் குரலில் சிறிது பயந்தாலும்



"அவளை விட கலரா தான் இருக்கேன்"
என்றான் பாரதி.



" ஓஓ அப்போ ஒத்துக்குறீங்க கலர் தான் உங்களுக்கு பிரச்சனைனு" என்றவளிடம்



" ஆமா...அவளும் அவ மூஞ்சியும் , அவளை எப்படி நான் மத்தவங்களுக்கு என் மனைவினு அறிமுகப்படுத்த முடியும்? அவ கூட எப்படி வெளியே போக முடியும். என்னை கேவலமாக பார்க்க மாட்டாங்களா? " என்றவனை
இவன் என்ன லூசா என்பது போலத் தான் பார்த்தாள் அந்த கறுப்பு உடை அணிந்த தேவதை.



" ஓஓ அப்போ நீங்க மத்தவங்களுக்காக வாழுறீங்க...உங்களுக்காக வாழல சரியா? உங்களுக்கு ஒன்னு நினைவுப்படுத்தலாம்னு நினைக்கிறேன் பாரதி, உங்க அம்மாவும் இதோ இந்த வெண்ணிலாவின் கலர் தான். அதனால அம்மாவை மற்றவர்களுக்கு அம்மா என்று அறிமுகப்படுத்தவும் யோசிப்பீங்களோ?"என்றவளின் கேள்வியில் முதன் முறை தன் கண்ணோட்டம் தவறோ என தலையைக் குனிந்தான்.



" பாரதியின் பெயரை வைத்துக் கொண்டு இப்படி தலைக் குனியாதே" என்று கத்தியவள்



" இப்போ இருக்க சமுதாயம் இப்படி தான் ,பலபேரோட மனநிலையும் இதுதான்.
ஒரு பெண் பண்புகளுடன் இருக்கிறாளா என்று பார்க்காமல் அழகா இருக்காளா கலராக இருக்காளா என்று பார்க்கும் சமூகம் வளர ஆரம்பித்து விட்டது.
"வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டானாம்" இப்படி தான் சொல்லிட்டு சுத்துறாங்க.
ஏன் அப்போ கருப்பா மனுசங்களை கடவுள் படைச்சார் ?அப்போ அவர் தான முக்கிய குற்றவாளி. அவரின் மீது தான் நான் குற்றம் சொல்லுவேன்.
கலரை வெச்சு ஒருவரை எடைபோடுவது சரியா?
அப்போ கலர் கம்மினா அவங்க பண்பற்றவரா?
இந்த சமுதாயம் ஒவ்வொரு செயல்களிலும் அவரை தாழ்த்தி தாழ்த்தி எழ விடாமல் செய்து அவர்களை மூலையில் ஒடுக்கி வைத்து விடுகிறது.



கருப்பு நிறத்தினர்! எதுக்கு இப்படி ஒரு பாகுபாடு? அவங்களும் மனிதர்கள் தான? சாதாரண துணி கடைக்கு போனாலும் நீங்க கலரா இருக்கீங்க உங்களுக்கு இது எடுப்பா இருக்கும். அப்போ கலர் குறைவா இருந்தால்?...



இதெல்லாம் ஒரு குறையா என்றால் கண்டிப்பாக இதுவும் ஒரு குறை தான்.
உங்களுக்கு தெரியுமா இதோ இன்று கண்ணைக் கட்டிக் கொண்டு இங்கு நடக்கும் அநீதிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீதி தேவதை ஒரு கிரேக்கப் பெண் தெமிஸ் ஜஸ்டியா ,மற்றுமொரு உண்மை அவள் ஒரு கருப்புநிற தேவதை.
படத்துல வர வெள்ளை உடை அணிந்த நீதி தேவதையை பார்த்து அவங்க அப்படி தான் இருப்பாங்கனு நினைச்சுட்டு இருக்கோம் ஆனால் அது உண்மை இல்லை...



நீதி தேவதை எந்த பக்கமும் சாயாமல் நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் அவளோட கண்களை கட்டி வெச்சிருக்காங்க அதனால் தான் என்னவோ நீதித்துறையை கருமேகங்கள் சூழ்வது கூட, நீதி தேவதையின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டது.



இப்போது நடக்கும் பிரச்சனைகளும், அதுக்கான தீர்வுகளும் என்றுமே நியாயத்தின் பிடியில் இருப்பதில்லை என்பதை அறிந்திருந்தால் கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கையில் ஏந்திய வாளைக் கொண்டு அன்றே அவள் நியாயமற்ற தீர்ப்புகளுக்கு தண்டனை வழங்கியிருப்பாள்.



ஆனால் நாம் அவளின் கண்களைக் கட்டிக் கொண்டு அநீதிகளுக்கு கொடி தூக்கிக் கொண்டிருக்கிறோம் நியாய தராசு என்றும் நடுவுநிலைமையில் தான் இருக்க வேண்டும்.



இதோ இந்த வெண்ணிலாவின் நிறத்தைக் கேலி செய்து, அவளைத் தள்ளிவிட்டு அவமானப்படுத்திய பாரதிக்கு வெண்ணிலா தான் தண்டனை கொடுக்கணும் என்று நீதிபடியும் வேண்டுகோள் விடுக்க



" அப்படியே ஆகட்டும் " என்ற நீதிபதியின் குரலில் அனைவரும் வெண்ணிலாவைப் பார்த்தனர்.
அவருக்குமே இதற்கெல்லாம் நீதி மன்றம் வரவேண்டுமா என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது.



" நான் நேசிச்ச ஒருத்தருக்கு நானே தண்டனை கொடுத்தா அது சரியா இருக்காது மேடம்...அவருக்கு எந்த தண்டனையும் வேண்டாம் " என்று தலை நிமிராமல் கூறியவளைப் பார்த்துப் புன்னகைத்தரோ



பாரதியைப் பார்த்து "கருமை நிறத்திலும் தேவதைகள் இருக்காங்க பாரதி...வெள்ளையா இருக்கவங்க மட்டும் தான் தேவதை அப்படிங்கிற உன் எண்ணத்தை மாத்து" எனக் கூறி ஒரு கர்வத்துடன் அவர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.



நீதி மன்றம் அப்படியே கலைய சிலர் புலம்பிக் கொண்டே செல்ல பாரதி வெண்ணிலாவிடம் வந்தான்.



" சாரி வெண்ணிலா என்னை மன்னிச்சிரு " என்றவனைப் பார்த்து புன்னகைத்தவள்



" உன்னை மாதிரி இனி ஒருத்தவங்க வந்துட கூடாதுனு தான் நான் வக்கீல் சொன்னதுக்கு சரினு சொன்னேன்.
யாரையும் அவங்க உருவத்தை வெச்சு, கலரை வெச்சு எடை போட வேணாமே !
அவங்களும் சாதாரண மனுசங்க தான்.
அவங்க அப்படி பிறந்தது ஒன்னும் அவங்க தப்பில்லையே " என்றவள்
"நான் என்னைக்குமே உனக்கு நல்ல தோழியா இருப்பேன்" அந்த தோழி என்பதை அழுத்திக் கூறி விட்டு சென்றாள்.



நிறத்தை வைத்து அவளை
குறை சொல்வதை தவிர்த்து
அந்த நிறத்துடன் அவளை படைத்த
கடவுளை குறை சொல்லுங்கள்!



மானிடர் அனைவரும் ஒன்றே!
துலாக்கோலின் இரு தட்டுகளில் நிறங்களை வைத்து எவரையும் எடை போட வேண்டாம்.



ப்ரியமுடன்
தனு❤
 

Attachments

  • eiXUI8O87455.jpg
    eiXUI8O87455.jpg
    602.2 KB · Views: 220
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN