சாதி மல்லிப் பூச்சரமே!!! 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 2

அங்கே ஒரு மாட்டு வண்டி குடை சாய்ந்திருக்க, அதில் கால் மேல் கால் போட்டு வலது கையை நெற்றியில் கொடுத்த படி படுத்திருந்தான் ஒருவன்.

அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட காளி, “என்னடே வேந்தா! நீ ஒன் மனசுல என்னதாம்ல நெனச்சிட்டு கெடக்க? இந்த பொடிப் பயல விட்டு என்னைய கெடத்துற அளவுக்கு நீ பெரிய ஆளாடே? என்கிட்டயே ஒன் சேட்டைய காட்டுதியா?” என்று எகிற, அப்பொழுதும் எந்த சலனமும் இல்லாமல் அதே இடத்திலேயே படுத்திருந்தான் வேந்தன்.

“பார்லா! ஒமக்கு சரசு அக்காவ கரெக்ட் பண்ணிக் குடுத்தா நான் மாப்ள. இல்லனா இப்போம் பொடிப் பயலா? ஆனா ஒண்ணு மாமா, நீ அறிவாளிதேன். பொய் சொல்லி ஒன்னைய கெடத்திட்டு வந்தேங்கிறதயே கற்பூரமா அறிஞ்சிகிடுதியே!” என்று ஓணான் காளியைக் கலாய்க்க, அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

“வேந்தா! வேணாம்டே. நீ ஏன் இப்படி செய்யுதேன்னு எனக்கு தெரியும்லே. யாரோ ஒரு பழக் கடக்காரிக்காக என்னைய பகைச்சிக்காதடே. நாம எல்லாம் ஒரே சாதி, ஒண்ணுக்குள்ள ஒண்ணு, தூரத்து உறவு வேறடே மாப்ள” என்று இவன் படபடக்க,

அதேநேரம் பட்டென எழுந்து நின்று வேட்டியை மடித்துக் கட்டியவன்,

“கேளுடே நரேன், நாம எல்லாம் ஒரே சாதியாம்ல! எது? கஞ்சா விக்கறதும் சூதாட்டத்தோட நைட்டு கிளப் நடத்துறதும்னு இருக்க நீயும் நானும் ஒண்ணா? இதுல அந்த அக்காவ வேற நைட்டு கிளப் ஆட்டத்துக்கு கூப்ட்டு இருக்க. அதுவே வயித்துப் பொழப்புக்கு சந்தையிலே பழக்கடை வெச்சிகிட்டு கெடக்கு. நீ எதுக்கு வம்பு பண்ற?” என்று வேந்தன் எகிற,

“ஏலே! அவள ஒரு நைட் ஆட வுட்டா * அந்த பண்ணையார் நெறைய துட்டு தரேன்னு சொன்னாம்டே”

“த்துத்தேறி! துட்டுக்காக இப்படி செய்வியாலே?”

“சரிடே, வழக்கமா பஞ்சாயத்துல கெட்ற பணத்த விட இந்த முறை அதிகமாவே பணம் கட்டுதேன். என்னைய வுட்ருலே” காளி முடிக்கக் கூட இல்லை,

அதற்குள் அவனை நெருங்கி ஓங்கி முகத்தில் ஒரு குத்து விட்டு இருந்தான் வேந்தன், பின் கழுத்திலும் இவன் ஒரு வெட்டு வெட்ட, வாங்கியவனுக்கு ஒரு வினாடி உலகமே சுற்றியது.

“நீ செய்யுத தப்புக்கு எல்லாம் எங்க சாதி பயல்கனு சொல்லி பணத்த கெட்டிட்டு ஐயாருகிட்டயிருந்து தப்பிக்கிறாப்போல என்ட்டயிருந்தும் தப்பிக்கலாம்னு நெனைக்கிறியாலே? இந்த மதிவேந்தன் பஞ்சாயத்துல ஒரே தீர்ப்புதேன்! அதுவும் பொண்ணுங்க மேல கைய வெச்சா, வெச்சவன் தலையே இருக்கக் கூடாதுலே! அதாம்ல என் தீர்ப்பு!” என்று சொல்லியவன் தன் வலது கையிலிருந்த காப்பைத் திருகியபடி மறுபடியும் இவன் முன்னேற, அதே நேரம் போலீஸ் ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார்கள் காவலர்கள்.

வந்திருந்த எஸ்.ஐயைப் பார்த்தவன் “சார்! நீங்க ரொம்ப நாளா தேடிகிட்டு கெடந்த ஆள் இவுக தான். புடிச்சிகிட்டு போங்க. ஊர் எல்லையில இவுக பிளஷர்ல கஞ்சா வச்சி இருக்குதான், அதையும் எடுத்துகிடுங்க. கேஸ் எப்படி வேணா போட்டுக்கிடுங்க. சாட்சிக்கு ரெண்டு பேத்த நான் அனுப்புதேன்” வேந்தன் முடிக்க,

“எலே மாப்ள! நான் ஒனக்கு மச்சான் முறைடே. இப்படி செய்யாதடே” காளி வேண்ட

“அந்த ஒறவை எல்லாம் நீங்க தப்பு செஞ்சப்பம் தாண்டியாச்சி மாமோய்! செத்த நாள் மாமியார் வீட்ல களிய ருசி பாரும். போ போ” வேந்தன் நக்கல் அடிக்க

“ஒன்னைய பாத்துக்கிடுறேன்டே!” என்ற சொல்லுடன் ஓட நினைத்த காளியை சுற்றிப் பிடித்தனர் காவலர்கள்.

“மிக்க நன்றி மதிவேந்தன். இவனால பல பேருக்கு பல பிரச்சனை. இவன் விஷயத்துல ஐயாரு தலையிடாம பர்த்துக்கோங்க, மீதியை நான் பார்த்துக்கிறேன்” என்ற சொல்லுடன் எஸ்.ஐ அவனிடம் கை குலுக்கியபடி விடை பெற,

“சூப்பர்ணே!” என்ற சொல்லுடன் ஓடி வந்து அண்ணனைக் கட்டிக் கொண்டான் நரேன்.

அப்போது அவனுடைய கைப்பேசியிலிருந்து,

“மல்லி மல்லி இவ சாதி மல்லி பூத்திடுச்சி உன் பெயரை சொல்லி”

என்ற பாடல் இசைக்க, அதை ஒருவித மயக்க நிலையிலிருந்து கேட்டவன், கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்க,

“மாமோய்! தோ வந்துகிட்டே இருக்குதேன்” என்று இவன் சொல்ல

“என்னடே மாப்ள நீ! இங்கன ஐயாரு எம்புட்டு கோபமா இருக்காக! எப்போம் புடிச்சி உன் போனுக்கு போட்டா இப்போதாம்ல ஒன்னைய புடிக்க முடிஞ்சது. செத்த வெரசா வாடே” என்று அந்த பக்கம் கந்தமாறன் அவசரப்படுத்த,

“ஐயாருக்கு சில்லுனு சூஸ குடுத்து கூல் பண்ணி வை மாமோய். தோ வாரேன்” என்றவன் முதுகு பக்கம் வைத்திருந்த கூலர்சை எடுத்து போட்டுக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டியபடி அங்கு நிறுத்தியிருந்த தன் புல்லட்டில் ஏறியவன்,

“ஏலே நரேன்! சீக்கிரம் வெரசா வாடே” என்று தம்பிக்கு சொன்னவன் இவன் புல்லட்டுக்கு ஒரு உதை கொடுக்க, புழுதியைப் பறக்க விட்ட படி பாய்ந்து சென்றது அவன் புல்லட்.

ஜல்லிக்கட்டில் ஒரு மிராசுதாரரின் பெயரைச் சொல்லி அவர் காளையை வெளியே விட, அந்த காளையும் என்னைப் பிடிக்க யார் இங்கு இருக்கிறார்கள் என்பது போல் சுற்றிப் பார்க்க, ஆனால் அந்த காளையைப் பிடிக்கத் தான் எந்த இளைஞர்களும் முன் வரவில்லை.

அது அப்படிப்பட்ட காளை! இதுவரை இருபது பேரின் வயிற்றைக் கிழித்து குடலைப் பார்த்திருக்கிறது அந்த காளை. பல பேருக்கு பரலோகத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்கிறது. அதனாலேயே அதன் உரிமையாளன் திமிராய் இருக்க, அவன் திமிரை ஒடுக்க ஐயாரு இட்ட சபதப் படி கடந்த மூன்று வருடமாக மதிவேந்தன் தான் அந்த காளையை அடக்கி வருகிறான்.

இதோ இப்போதும் எல்லோரும் அவனை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஓரிடத்தில் ஆரவாரம் அதிகமாய் கேட்க, அங்கே வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்கொண்டு (வேட்டியை கால்களுக்கிடையில் கொண்டு போப் முதுகில் சொருகிக் கொள்வது) அரங்கத்திற்குள் குதித்திருந்தான் வேந்தன்.

சட்டை இல்லாமல் இருக்க, தன் வலது கையின் காப்பை ஒரு முறுக்கோடு மேலே தள்ளி தன் இடது கை புஜத்திலிருந்த தாயத்தைத் தொட்டு முத்தமிட்டவன், பின் மண்ணை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு தன் மீசையை ஒரு முறை முறுக்கிய படி சீறும் சிங்கமென காளையை நெருங்கியவன் அதன் திமிலை பிடித்துக் கொண்டு அடக்க,

அதுவும் அவனிடமிருந்து திமிறியது. கூட்டத்தில் நின்றிருந்த நிலவழகியோ, “அதோ அவுக தான் என் மச்சான்!” என்று பெருமையும் காதலும் பொங்க தன் தோழிகளுக்கு வேந்தனைக் காட்ட, இவ்வளவு நேரம் வாய் பேசியவர்களில் ஒருத்தி வாய் பிளந்து நிற்க

இன்னொருத்தியோ,

“வாட் எ ஹாண்ட்சம்!” என்று பாராட்ட

“கருத்த தேகமா இருந்தாலும் சும்மா அர்னால்ட் கணக்கா இருக்கார்டி” என்று வேறொருத்தி ஜொள்ளு விட, அழகியோ வானில் பறக்காத குறைதான்.

இரண்டு முறை காளையின் திமிலைத் தவற விட்டவன் மூன்றாவது முறை அதை அடக்கி அதனிடமிருந்த பரிசு பொருளைப் பறித்திருந்தான் மதிவேந்தன்.

ஊரே கூடி ஆரவாரம் செய்ய, ஐயாரு மீசையை முறுக்க, மாமன்களான கந்தமாறனும் மூர்த்தியும் ஓடி வந்து தன் மாப்பிளையைத் தங்கள் இரண்டு தோள்களிலும் தூக்கிக் கொள்ள, அங்கு ஒரே சந்தோஷ ஆர்ப்பாட்டம் தான்.

அதன் பின் வேந்தனின் தம்பிகளான நவீனும் நரேனும் வந்து அவனைத் தங்கள் தோளில் வாங்கிக் கொள்ள, இதைப் பார்த்த அவர்களின் தந்தையான கலையரசனுக்கு வயிறு காந்தலெடுத்தது.

கலையரசன் எப்பொழுதுமே தன்னையும் தன் குடும்பத்தையும் தனியாக மதிக்க வேண்டும் என்று நினைப்பவர். ‘நாம எப்போம் தனிதேன்’ என்று தான் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்ப்பார். இழவு வீடு என்றாலும் கல்யாண வீடு என்றாலும் அவருக்கு தான் மாலை மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

இன்று பிள்ளைகள் வேந்தனை தாங்க, “என் வம்முசமாடி இவிங்க? ச்சீ! எனக்கு அவுமானத்தக் குடுக்கறதயே சோலியா வெச்சிகிட்டு திரியுறானுங்க” என்று மனைவியிடம் கர்ஜித்தவர், அங்கிருந்து விலகிச் செல்ல, தன் வழமையான மவுனத்தைத் தத்தெடுத்தார் அவர் மனைவி.

வீட்டிற்கு வந்தும் எல்லோரும் வேந்தனைக் கொண்டாட, ஐயாரு மட்டும், “என்னலே செய்து வச்சிருக்கவ? காளி நம்ப சாதி பயல்லே! திருவிழாவுக்கு வந்த அவன ஊர்க் கட்டுப் பாட்டையும் மீறி போலீஸ்ல புடிச்சி குடுத்திருக்க. நாளைக்கு அவன் அப்பன் வந்து கேக்கையில நான் என்னலே பதில் சொல்லுதேன்?” இவர் சாட,

பின் கட்டிலிருந்து முகம் கழுவி விட்டு முகத்தில் நீர் வழிய அவரிடம் வந்தவன், “என்ன கேப்பாக? அவுக என்ன தியாக செம்மல் வேலையா செஞ்சிட்டு போனாக அவுக ஐயா பெருமைப் பட?” என்று எகத்தாளத்தில் இறங்கியவன்,

“ஊர்க் கட்டுப்பாட்டை யார் மீறனாக? அவுக வண்டில கஞ்சா இருக்கப்போய் அதப் பாத்துத்தேன் போலீஸ் புடிச்சிகிட்டு போனாக. ஊர் எல்லைய தாண்டித் தான் புடிச்சாக. சும்மா என்னைய வையாதீக” என்று இவன் பதிலுக்கு எகிற,

“என்னடே ஐயாருவ இப்படி எதிர்த்து பேசுத?” என்று அவன் தாய் தாமரை கண்டிக்க

“மாப்ள!” என்று கந்தமாறன் அவனை அடக்க

“அவன் என்னைய இன்னைக்கி நேத்தா பேசுதான் தாமர? எப்போம் தம்பியாருக்கு மீசை மொளச்சதோ அப்போம்திருந்து இவன் தாத்தாங்கிற மருவாதி இல்லாமதேன் என்ட்ட துள்ளிகிட்டு கெடக்கான்” என்று ஐயாரு முடிக்கக் கூட இல்லை

“எலேய் சிவகுரு! என்னடே? சல்லிக்கட்டுல மாட்டப் புடிச்சி செயிச்சிட்டு வந்திருக்குதான் என் கொள்ளுப் பேராண்டி! அவன ஒக்கார வச்சி கறி சோறு ஆக்கிப் போடாம நாலு நல்ல வார்த்த பேசாம அவன்மேல ஆவலாதி (புகார்) சொல்லுத! அதும் பத்தாதுனு மல்லுக்கு நிக்க! அவனுக்கு இருபத்தஞ்சி வயசாச்சிலே. இப்போம் பேசாம பொறவு அவன் எப்போலே பேசுதான்? அதும் தாத்தா ஒன்ட்ட தாலே பேசுதான்” சிவகுருவின் தாய் தொண்ணுற்று ஐந்து வயது ராஜாத்தி சத்தம் போட.

ஒரு முணுமுணுப்புடன் துண்டை உதறி தோளில் போட்ட படி நடையைக் கட்டினார் ஐயாரு. அவரை அடக்கும் ஒரே ஆள், தாய் ராஜாத்தி தான்!

“என் செல்ல ராஜாத்தி! நீயாச்சு எனக்காண்டி பேசுனியே” என்று இவன் பாட்டியைக் கட்டிக் கொள்ள

“எய்யா பேராண்டி! இன்னைக்கி ரெண்டு குலோப்சாமுன் தாடே” என்று பேரனிடம் பேரம் பேசினார் அந்த பல்லு இல்லாத கிழவி.

“ஒனக்கு இல்லாததா கெழவி? ரெண்டு என்ன மூணு கூட தாரேன்” என்று ஒத்துக் கொண்டான் பேரன்.

கிழவிக்கு சிறுவயதிலிருந்து சக்கரவள்ளிக் கிழங்கையும் தேன்மிட்டாயையும் தின்று தின்று வளர்ந்த நாக்கு. இன்று பல் போய் அதையெல்லாம் தின்ன முடியாமல் போக, அதனால் அவருக்கு சக்கரையில்லாத குலோப்ஜாமுனை தினமும் தருவான் வேந்தன். என்ன இருந்தாலும் ஆடின காலும் தின்ன நாக்கும் சும்மா இருக்குமா? அதான் இப்படி. பல்லு முழுக்க கொட்டினாலும் கண்பார்வை தெரிய கொஞ்சம் திடகாத்திரமாகவே இருந்தார் ராஜாத்தி.

இருவரும் கொஞ்சிக் கொண்டிருந்த நேரம், அழகி உள்ளே வந்தவள் எதுவும் பேசாமல் “எழுந்து வா மச்சான்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பின்கட்டு செல்ல,

“என் பேரன் என்னைய கொஞ்சினா இவளுக்கு வயிறு காந்துமே!” என்று ராஜாத்தி நொடிக்க

“ஆமா கெழவி, அப்டி தான்” என்ற சொல்லுடன் தன் மச்சானைப் பின் கட்டில் நிற்க வைத்தவள் கையில் கொண்டு வந்திருந்த உப்பு, மிளகாவால் அவனுக்கு சுற்றிப் போட்டு துப்பச் சொல்ல.

“என்னத்துக்கு அழகி இதெல்லாம்” என்று கேட்டாலும் அவள் சொன்னதைச் செய்தான் அவன்.

“நீ சும்மா இரு மச்சான். ஒனக்கு எதுவும் தெரியாது, இந்த ஊர் வயசுப் பொண்ணுங்க கண்ணு முச்சூடும் ஒம்மேலதேன். பொறவு என் தோழிங்க கண்ணும். எல்லாம் கொள்ளிக் கண்ணுங்க. பத்தாததுக்கு ஜல்லிக்கட்டப் பாக்க வந்த அந்த வெள்ளக்காரி வேற ஓடி வந்து ஒன்னைய கட்டிப் புடிச்சி கன்னத்தில முத்தம் குடுக்கா. நீ சும்மால்ல இருந்த மச்சான்?” என்று இவள் கோபப் பட

“ஐயோ! பாராட்டறதுக் காண்டி அவிங்க எல்லாம் அப்டிதேன்ம்மா செய்வாய்ங்க” இவன் விளக்க

“அப்டி எல்லாம் சும்மா எடுத்துக்க முடியாது மச்சான். எப்பவும் செவத்தப் பொண்ணுங்களுக்கு கருத்த மச்சானுங்களத்தேன் ரொம்ப புடிக்கும்” இவள் தன் மனதைச் சொல்ல, அழகி நல்ல சிவந்த நிறம். மதிவேந்தனோ கருப்பிலேயே நல்ல கருப்பு என்று சொன்னால் அது தான் அவன் நிறம்.

“நெசமாவா அழகி?” என்று நம்பாமல் கேட்டவன் கனவில் சஞ்சரித்த படி அங்கிருந்து விலகினான் வேந்தன்.
இப்பொழுது இவர்கள் குடும்பத்தில் யார் யார் என்ன உறவுகள் என்று தெரிந்து கொள்ளலாமா....


சாதி மல்லிப் பூச்சரமே!!! 1
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹைய்யாஆஆஆஆ மதிமாமா💕💕💕💕💖💖💖🥰🥰🥰🥰🥰

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN