அத்தியாயம் - 1

Arthi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"மணி எட்டாச்சு இன்னும் என்ன தூக்கம் உனக்கு? எழுந்திரு" கடிந்துக்கொண்டு ஃபேன் ஸ்விட்சை அணைத்தார் கஸ்தூரி. "அம்மா பிலீஸ் ஃபேன் ஆன் பண்ணு" சிணுங்களுடன் எழுந்து அமர்ந்தாள் மாயா. நெற்றியில் படர்ந்திருந்த நீண்ட கரிய கூந்தலை ஒரு கையால் ஒதுக்கினால். "மா திஸ் இஸ் நாட் ஃபேர்" அம்மாவிடம் உதட்டை சுளித்து கூறினாள்.

"இப்போ எழுந்து போய் பல் துலக்கிட்டு வந்தா காபி தருவேன் இல்லைனா இன்னிக்கு உனக்கு காபி இல்ல" கறாராக கூறினார் கஸ்தூரி. அழகாக சோம்பல் முறித்து பல் துலக்க சென்றாள். "இன்னிக்கு லீவு தானே கொஞ்ச நேரம் தூங்கட்டுமே!" காபியை குடித்தப் படி கேட்டார் ராஜாராம்.

"நீங்க தர செல்லம் தான் அவ கெட்டு போக காரணம். நாளைக்கு கல்யாணம் ஆகி போற வீட்ல இவ்ளோ நேரம் தூங்குனா உங்கள யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. பொண்ண எப்படி வளர்த்திருக்கா பாருனு என்ன தான் திட்டுவாங்க" கடுகடுத்தார் கஸ்தூரி.

"சரி சரி, மீனா எங்க?" பேச்சை மாற்றினார் ராஜாராம். "அவ கோவிலுக்கு போயிருக்கா. அதிகாலையே எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போய்ட்டா. இவள விட சின்ன பொண்ணு எவ்வளவு பொறுப்பா இருக்கா. இவளுக்கு எப்போ இந்த பொறுமை பொறுப்பெல்லாம் வருமோ!?" பெருமூச்சுடன் கூறினார்.

"சரி விடுமா ஒரு பொண்ணு உன்ன மாதிரி இன்னொரு பொண்ணு என்ன மாதிரி" சிரிப்புடன் சமாளித்தார் ராஜாராம். "பொண்ண மட்டும் எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டீங்களே!" கூறிக்கொண்டு காபி தயார் செய்ய சமையல் அறை நோக்கி சென்றார்.

அம்மா கலந்து தந்த காபியை ரசித்து குடித்தாள் மாயா. "அம்மா உன் கைப் பக்குவத்துக்கு நீ மட்டும் செஃப் ஆயிட்டா நாம ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பித்து விடலாம்" தந்தையை பார்த்து கண்ணடித்து விட்டு கூறினாள் மாயா. "எதுக்காக இப்போ ஐஸ் வைக்குறே!?" சந்தேகமாக பார்த்தார் கஸ்தூரி.

"ஐஸ்ஸெல்லாம் இல்ல மா, நிஜமா தான்" என்றாள். "சரி, குளிச்சுட்டு வா சாப்பிடலாம்" என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார். "அப்பா, பிரின்ட்ஸ் என்ன இன்னிக்கு வெளிய கூப்பிடாங்க நா வரேன்னு சொல்லிட்டேன். அம்மா கிட்ட பெர்மிஸ்ஸன் வாங்கி தாங்க" கெஞ்சலாக கேட்டாள்.

"கஸ்தூரி இன்னிக்கு மாயா வெளிய போகனும்னு சொல்றா. போய்ட்டு வரட்டுமே. அப்படியே அந்த கம்பயூட்டர் கோர்ஸ் பத்தியும் விசாரிச்சுட்டு வராலாம்" மெதுவாக சொன்னார் ராஜாராம். சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி, அந்த கோர்ஸ் சீக்கிரம் ஜாயின் பண்ணு, லீவ் முடிஞ்சதும் காலேஜ் சேர டைம் சரியா இருக்கும் அதுக்குள்ள இந்த கோர்ஸ் முடிச்சு வச்சுக்கோ" அம்மா அறிவுறுத்தினார்.

"சரி மா, தேக்ங் யூ சோ மச்.." கஸ்தூரி கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள் மாயா.

"அம்மா" அழகிய புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் மீனா. "மீனா, இன்னிக்கு பூஜை எப்படி இருந்துச்சு. எல்லாரும் வந்திருந்தாங்கலா?" கஸ்தூரி அர்ச்சனை கூடையை கையில் வாங்கிக்கொண்டு கேட்டார்.

"பூஜை ரொம்ப நல்லா இருந்துச்சு மா, எல்லாரும் வந்திருந்தாங்க. உன்னையும் கேட்டாங்க, உனக்கு உடம்பு சரி இல்ல அதான் வரலனு சொல்லிட்டேன்" என்றாள் புன்னகை மாறாமல்.

"சரி மா, மாயா குளிச்சுட்டு வந்ததும் எல்லாரும் சாப்பிடலாம்" என்றார் கஸ்தூரி. "சரி மா" என்று அவள் அறைக்குள் நுழைந்தாள். "ஹே மீனு வந்துட்டயா? இன்னிக்கி நா ப்ரெண்ட்ஸ் கூட சினிமாக்கு போறேன். நீயும் வா, நம்ம தளபதி படம். செம்மயா என்ஜாய் பண்ணலாம்" உற்சாகத்துடன் கூறினாள்.

"அம்மா ஓகே சொன்னா வரேன்" மீனா சிரித்தாள். "அத நான் பாத்துக்கிறேன். நீ ரெடியா இரு" வெளியில் வந்தாள். "அம்மா மீனாவும் என்கூட வரட்டுமே. அவளும் கம்ப்யூட்டர் கிளாஸ் சேரனும் தானே" என்றாள் இயல்பாக. "சரி, பத்திரமா போய்ட்டு வாங்க" அவர் சம்மதித்தார்.

"அப்படியே நாம கம்ப்யூட்டர் கோர்ஸ் ஜாயின் பண்ணிட்டு வந்தர்லாம்" மீனா கூற "நீயும் அம்மா மாதிரியே பண்ற" மாயா கண்கள் அழகாக விரிய கூறினால். "உனக்கு தெரியும் தானே எனக்கு இந்த கம்ப்யூட்டர்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. என்னோட கனவு ஒரு நம்பர் ஒன் டிசைனர் ஆகனும். அதுக்கு எதுக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ்" இயல்பாக கேட்டாள்.

"கம்ப்யூட்டர் எல்லா பீல்டுக்கும் காமன் தானே. நீ இந்த லீவ்ல உனக்கு பயன்படுற கம்ப்யூட்டர் கோர்ஸ் எடுத்து படிச்சுக்கோ" என்று மீனா கூற "சரி, எதோ சொல்றே பாக்கலாம்" என்றாள் மாயா.

இருவரும் மகிழ்ச்சியாக அந்த நாளை கழித்து விட்டு மாலை வீடு திரும்பினர். அம்மா சூடாக சமைத்து வைத்திருந்த பஜ்ஜியை இருவரும் ஒரு பிடி பிடித்தனர்.

"கோர்ஸ்க்கு அப்ளை பண்ணிடீங்கலா?" கஸ்தூரி கேட்க மாயா திரு திருவென விழித்தாள். "எல்லாம் பண்ணியாச்சு மா, நாளைக்கு ஜாயின் பண்ண சொல்லி இருக்காங்க" மீனா பதில் சொல்ல மாயா அதிர்ச்சியாக அவளை திரும்பி பார்த்தாள். "எல்லாம் பண்ணிட்டேன்" கண் அடித்தாள் மீனா.

"என் செல்லக்குட்டி" அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா.

மாயவை விட ஒரு வருடம் இளையவள் மீனா. மாயாவிற்கு மீனா மீது அளவு கடந்த பாசம், அவளை ஒரு மகளாகவே நினைத்தாள், தாய்க்கு ஈடான அன்பையே அவளுக்கு கொடுத்தாள். மீனாவும் அவளை தமக்கை என்று எண்ணாமல் அவளை தன் இரண்டாம் தாய் ஆகவே பார்த்தாள்.

இவர்கள் இருவரின் பிணைப்பு பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு மேன்மையானதாக அமைந்திருந்தது.

ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள்.

மீனா அமைதியான, எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய, இளகிய மனம் கொண்ட அழகிய பெண்.

மாயாவோ நேர்கொண்ட பார்வையும், துணிச்சலும், தைரியமும் கலந்து செய்த சிலை.

மீனாவிற்கு பாரம்பரியம், தெய்வ நம்பிக்கை, சமையல், என்று அனைத்திலும் ஆர்வம் அதிகம். மாயாவிற்கு அவை அனைத்தும் ஒரு நகைச்சுவையாகவே தெரிந்தன. அவளை பொறுத்தவரை உலகில் அன்றாடம் பல மாற்றங்கள் நிகழ்கின்றன, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டும் என்று கூறுவாள்.

அதற்கேற்ற துறையையே தேர்வு செய்திருந்தாள். நவநாகரீக ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்பது அவளது ஆசை. தன் புதிய புதிய படைப்புகளை அனைவரும் அணிந்து பாராட்ட வேண்டும், உலகின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்பது அவளது கனவு.

மீனா தனது அம்மாவைப் போலவே பாரம்பரியமாக இருக்க விரும்பினாள். ஒவ்வொரு பாரம்பரிய விஷயங்களையும் அவள் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டாள். மாயா இந்த விஷயங்களில் ஒருபோதும் அக்கறை காட்டியது இல்லை.

இருவருக்கும் பல வேற்றுமைகள் இருந்தாலும் அது அவர்களது பிணைப்பை ஒருபோதும் பாதித்ததில்லை. மாயாவை மீனாவும், மீனாவை மாயாவும் எந்த சூழலிலும் விட்டு கொடுத்ததும் இல்லை.

அன்பு, அரவணைப்போடு கண்டிப்பும் கொண்ட தாய், பாசம், நேசம், பிள்ளைகளை மலைபோல் நம்பும் தந்தை, மகளுக்கு இணையான பாசம் வைக்கும் தங்கை, இதுவே அவளது குடும்பம்.

இறைவன் அருளால் அனைத்து வரங்களையும் வாழ்வில் பெற்றிருந்தாள் மாயா.

"அன்பான அம்மாவும்,

தோழமையான அப்பாவும்

கிடைத்த குழந்தைகள்

யாரும்

'தடு' மாறியதும் இல்லை

'தடம்' மாறியதும் இல்லை"

.

.

"மாறா... சாப்பிட வா, மணி பத்தாச்சு" வள்ளியின் அன்பான குரலில் வயலில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவரை நோக்கி வந்தான் மாறன்.

பெயருக்கு ஏற்றவாறு கம்பீரமான தோற்றமும், இளகிய மனமும் கொண்டவன், அழகிய புன்முறுவலால் அனைவரையும் கவர்பவன் மாறன்.

"அம்மா, ஏன் நீங்க கஷ்ட்டப்படுறீங்க, வீட்ல வேலை ஆட்கள் யாராவது வயலுக்கு வரப்போ குடுத்து விட்டிருக்கலாம்ல மா" சிறு வருத்தத்துடன் கேட்டான்.

"நீ சாப்பிட்டயா, இல்லையான்னு தெரியாம அங்க உக்காந்து வருத்தப்பட்டுட்டு இருக்க இது எவ்வளவோ பரவாயில்ல பா" சோர்வாக அமர்ந்தார் வள்ளி.

"என்னைக்கு நா சொன்னத கேட்டிருக்கீங்க. சரி சாப்பாடு குடுங்க, பசிக்குது" என்று கூறி கைகளை நீட்டினான். சுவையான உணவுடன் தன் பாசத்தையும் சேர்த்து உணவை அவன் கையில் வைத்தார். அவனும் மனநிறைவுடன் பசியாறினான்.

மாறன் வள்ளியின் ஒரே மகன். அவனுக்கு ஒரு வயது இருந்தபோது அவன் தந்தை இறந்துவிட, தாய் வள்ளி தனியாக தன் மகனை ஆளாக்கினார்.

மாறன் பள்ளியில் இருந்து சிறந்த மாணவனாக திகழ்ந்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றான். தனக்கு மிகவும் பிடித்த விவசாயத்தை தேர்ந்தெடுத்து படித்தான். படிப்பு முடிந்து தன் சொந்த ஊரில் விவசாயம் செய்து வாழ்வை தனக்கு பிடித்தவாறு வாழ்ந்து வந்தான்.

என்னதான் புதிய புதிய மாற்றங்கள் வந்தாலும் நம் முன்னோர்கள் வழியில் வந்த கலாச்சாரமும், பண்பாடும் என்றும் மாறாது என்ற எண்ணம் கொண்டவன். தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் என அனைத்திலும் ஆர்வம் உடையவன் மாறன்.

அனைத்திலும் அதிகமாக தன் தாயை நேசிக்கும் பிள்ளை. எந்த சூழலிலும் தன் தாயை விட்டு கொடுக்காதவன்.

"தாய்யிற் சிறந்த கோவில் இல்லை"


முன்னுரை
 

Author: Arthi
Article Title: அத்தியாயம் - 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN