அத்தியாயம் - 4

Arthi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மூடுபனி அந்த அழகிய மரங்களின் இலைகளை விழுங்கியது, அது புதிதாய் அரும்பிய அரும்புகள், புற்கள் மற்றும் இலைகளின் அழகை தன் வெண்மையால் மறைத்தது. அது அவற்றின் நிறத்தை வெளியேற்றி, எல்லாவற்றையும் பாறையின் அதே கல் சாம்பல் நிறமாக மாற்றிக் கொண்டிருந்தது.

புதிதாய் வீசும் குளிர்ந்த காற்று மற்றும் மிருதுவான காற்று கண்ணுக்கு தெரியாத பேய் போல விசில் அடிக்க ஆரம்பித்தது. சிவப்பு மற்றும் பச்சை நிற பறவைகள் மிளகாய் போன்ற தங்கள் அழகுகளால் அவற்றின் மெல்லிசையை தொடங்கின.
பிரம்மாண்டமான தோட்டம் ஒரு அரச அரண்மனை போல நின்றது மற்றும் அடர்த்தியான உலர்ந்த வலுவான பழுப்பு நிற பெரிய கிளைகள் காலையை வரவேற்று நடனமாடின.

எண்ணற்ற அழகான பச்சை பழுப்பு நிற இலைகள் தங்கள் காலைத் திட்டங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பது போல அந்த காலை பொழுது அமைந்திருந்தது.

அந்த அழகிய அதிகாலை பொழுதை வியந்தபடி காரில் அமர்ந்திருந்தாள் மாயா. ராஜாராம், கஸ்தூரி மற்றும் மீனா மூவரும் இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்றிருக்க, மாயா அவளுக்கு இருந்த சில வேலைகளை முடித்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து சென்றாள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓர் அழகிய இயற்கை சூழலில் அமைந்திருந்த அந்த கிராமம், அவள் மனதை மயக்கியது.

"இந்த இடமெல்லாம் ஆறு வருசத்துக்கு முன் பாத்த மாதிரி இன்னும் அப்படியே இருக்கு!!" வியப்பாக கூறினாள். "ஆமா மா, இங்க இருக்கவங்க எல்லாரும் இன்னும் விவசாயத்த விடாம செஞ்சிட்டு இருக்காங்க அதான் இந்த ஊர் இன்னும் அப்படியே இருக்கு" என்றார் முத்து, இருபது வருடங்களாக அவர்களிடம் வேலை செய்பவர். அவரை அவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகவே அனைவரும் நடத்தினர்.

"அண்ணா, கொஞ்ச நேரம் வண்டிய நிறுத்துறீங்களா? நா ஃபோட்டோ எடுத்துக்கிறேன்" என்றாள் அழகாக. "சரி மா, சீக்கிரம் வாங்க. அங்க எல்லாரும் உங்களுக்காக கத்துகிட்டு இருக்காங்க" என்றார் அவர் பணிவாக.
அவளும் குஷியாக வண்டியில் இருந்து இறங்கி அந்த அழகிய காட்சியை தன் விவோ வி17 ப்ரோ கைபேசியில் படம்பிடித்தாள். அத்தோடு சில செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வண்டியில் அமர்ந்தாள்.

"அமேசிங், இந்த இடம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு" என்று ரசித்தவாறே கூறினாள்.
இருபது நிமிடத்தில் வீட்டை அடைந்தனர். "மாயா வந்துட்டா" மீனாவின் கூக்குரலால் அனைவரும் அங்கு கூடினர். வள்ளி ஆவலாக வந்து அவளை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.

"அத்த, எப்படி இருக்கீங்க?" என்றாள் பாசமாக. "நல்லா இருக்கேன் டா தங்கம், நீ எப்படி இருக்கே?" என்றார் பரிவாக அவள் கன்னத்தில் முத்தமிட்டு. "நா சூப்பர், அத விட இந்த ஊர் சூப்பரோ சூப்பர்" என்றாள் அவள் குதூகலமாக.

"ஆமா, நீதான் இந்த அத்தயையும் ஊரையும் மறந்து விட்டாயே!" என்றார் பொய் கோபத்தோடு. "மறக்கல அத்த, அதான் இப்போ வந்துட்டேன்ல இனி பாருங்க ஒவ்வொரு வருஷமும் இங்கதான்" என்றாள் ஆனந்தமாக.
"சரி டா தங்கம், இப்போ போய் குளிச்சுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கோ" என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றார்.
"மாயா நீ தூங்கு நா போய் அத்தைக்கு ஹெல்ப் பண்றேன்" என்று கூறி மீனா சென்றுவிட, மாயாவும் ஓய்வெடுக்க எண்ணினாள்.

"சரி ரொம்ப டயர்டா இருக்கு, குளிச்சுட்டு வந்தர்லாம்" என்று எண்ணி குளியல் அறைக்குள் நுழைந்தாள். சுடு நீர் அந்த குளிருக்கு இதமாக இருந்தது. குளித்து முடித்து உடை மாற்றி விட்டு வெளியில் வந்தாள்.

வந்தவள் மிரட்சியுடன் கத்தினாள். அவள் குரல் கேட்டு திரும்பிய மாறன் அவளை விட அதிர்ச்சி அடைந்தான். "இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என்றாள் எரிச்சலாக.

"அது நா கேட்க வேண்டிய கேள்வி. என் ரூம்ல நீ என்ன பண்ணுற?" என்றான். "என்னது உங்க ரூமா??" என்று கூறிக்கொண்டு. "அத்த......!!!" என்றாள் சத்தமாக.

"ஏய், இப்போ எதுக்கு இப்படி கத்துற?" என்றான் கடுப்பாக. "அப்படித்தான் கத்துவேன்" என்று கூறி மீண்டும் கத்தினாள். "என்னமா, என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் உள்ளே வந்தார் வள்ளி.

அங்கு சட்டை அணியாமல் கடுகடு முகத்துடன் இருந்த மாறனையும், எரிச்சலாக நின்று கொண்டிருந்த மாயாவையும் பார்த்து அங்கு நடந்ததை யூகித்தார்.

"மாறா, நீ எப்போ வயல்ல இருந்து வந்தே?" அவர் அவனை பார்த்து வினவ, "இப்போதா மா வந்தேன். வந்து குளிக்கலாம்னு நெனச்சா, பாத்ரூம்ல இருந்து பேய் வெளிய வருது" என்றான்.
"யாரு பேய்!!" பற்களை கடித்தப்படி கேட்டாள் மாயா.

"மாறா!!" வள்ளி கண்டிப்புடன் அவன் முகம் பார்க்க, "மா, ரூம்ல யாராச்சும் இருந்தா எனக்கு முன்னாடியே சொல்லிடுங்க" என்று கூறி அந்த இடத்தில் இருந்து வேகமாக வெளியேறினான் மாறன்.

"எப்படி அத்த இப்படி ஒரு ஜந்துவ வீட்ல வச்சிருக்கீங்க?!" என்றாள் மாயா. "அப்படி இல்லமா, அவனுக்கு கொஞ்சம் கோவம் அதிகமா வரும் ஆனாலும் அதே அளவுக்கு பாசமும் இருக்கும்.

முன்கோபம் அப்படியே அவன் அப்பா மாதிரி. சரி, நீ ஓய்வெடு, நான் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்புறேன்" என்று கூறி அறையை விட்டு வெளியே வந்தார்.
பக்கத்து அறையில் கோபமாக அமர்ந்திருந்த மாறனை பார்த்தார். "குளிச்சுட்டு வா பா, சாப்பிடலாம்" என்றார் பாசமாக. "அம்மா, அவள எதுக்கு என் ரூம்ல தங்க வச்சீங்க. என் ரூம்ல இருந்துட்டு எங்கிட்டயே திமிரா பேசுரா" என்றான் கோபம் குறையாமல்.
"உன் அறை தான் நம்ம வீட்ல வசதியா இருக்கும். அவ அங்க ரொம்ப வசதியா இருந்த புள்ள, மத்த அறைல சுடு தண்ணி கூட இல்லப்பா, அதான் உன் அறைல இருக்க சொன்னேன்.

நீ வந்ததும் உனக்கு சொல்லனும்னுதா வாசலயே பாத்துட்டு இருந்தேன் ஆனா நீ நா பாக்காத நேரமா வந்துட்டே.
அவகிட்ட கோப படாதே பா, இவ்வளவு வருஷம் கழிச்சு அந்த புள்ள இங்க வந்திருக்கு. அது போற வரைக்கும் இங்க சந்தோசமா இருந்துட்டு போகட்டும்" என்றார் சோகமாக.
"சரி மா, நீங்க வருத்தப்படாதீங்க. நா எதும் சொல்லல" என்று கூறி குளியல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் வெளியில் வந்ததும் சாப்பிட அழைத்து அவனுக்கு பரிமாறினார் வள்ளி. "அத்த, நானும் மாமா கூடவே சாப்பிடுறேன்" என்று கூறி மீனாவும் சேர்ந்துகொள்ள. "சாப்பிடு டா கண்ணு" என்று கூறி அவளுக்கும் சேர்த்து பரிமாறினார்.

"குட்டிமா, நீ ரெடியா இரு, நா கொஞ்ச நேரத்துல வந்துடுறேன். நாம ஊர் சுத்திபாக்க போலாம். சரியா?" என்றான் மகிழ்ச்சியாக. "சூப்பர் மாமா, நா எப்பவும் ரெடி. நீங்க சீக்கிரம் வாங்க" என்று உற்சாகமாக கூறினாள்.
"ஓகே டா மா" என்று கூறி விடைப் பெற்றான்.

"ஒரு பொண்ணு குட்டி தேவதை மாதிரி இன்னொன்னு ராட்சசி மாதிரி. எப்படி ரெண்டு பேரும் சேர்ந்து பிறந்தாங்களோ?!" என்று எண்ணிக் கொண்டு வெளியில் கிளம்பினான்.
சிறு வயது முதலே மீனா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தான் மாறன். அவள் பிறந்த பொழுது இவனுக்கு ஒன்பது வயது. அழகிய புன்னகையுடன் அவளை தன் கையில் ஏந்திய நாள் முதல் அவளை தன் குழந்தையாகவே பார்த்தான். அவளும் அவனை தன் தந்தைக்கு நிகராகவே பார்த்தாள்.
.
.

"மாயா, நாம ஊர் சுத்தி பாக்க போலாமா?" மீனா ஆர்வமாக கேட்க, "சூப்பர், நானும் அதான் நெனச்சேன். எப்போ போலாம்?" என்றாள் குஷியாக.
"மாமா வருவாங்க, நீ ரெடியா இரு, நாம மூணு பேரும் போலாம்" என்று கூற, "என்ன மாமா வா, அதுவும் வருமா!?" என்றாள் முகம் சுருங்க.

"என்ன மாமாவ அது இதுன்னு சொல்லுறே. மாயா, இது தப்பு" என்றாள் சிறு கோபத்துடன். "சரி சரி. நீயே உன் மாமா கூட போய்ட்டு வா, நா வரல" மாயா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"நீயும் வா மாயா, அப்போதான் நல்லா இருக்கும். நாளைக்கு நம்ம மத்த சொந்தக்காரங்களும் வந்திருவாங்க. அப்போ எல்லாரும் சேர்ந்து போலாம் இன்னிக்கு நாம மூணு பேரும் போலாம். சரியா?"மீனா புன்னகையுடன் கேட்க,
"நாளைக்கு எல்லாரும் வந்திருவாங்களா?? ஜாலி!!!! சரி நானும் வரேன் வேற என்ன பண்ணுறது? இங்க போர் அடிக்குது" என்றாள்.

மாறன் வந்து அவர்கள் இருவரையும் அழைத்து சென்றான்.

"மாமா, ஊர் சூப்பரா இருக்கு!! இதெல்லாம் நா சினிமாலதான் பாத்திருக்கேன். இப்போதான் நேர்ல பாக்குறேன்" என்றாள் வியப்புடன்.
"ஆமா மா, இங்க எந்த ஒரு கழிவு, மாசு, தூசி எதுவும் இல்ல. சுத்தமான காத்து, தண்ணி, வளம் இதுதான். செல் போன் டவரும் இல்ல அதனால இங்க பறவைகளும் அதிகமா இருக்கும். இந்தியாவுல இந்த மாதிரி ஒரு சில கிராமம்தான் இருக்கு" என்றான் புன்னகையுடன்.

"ஆமா, இவருதான் இந்த மண்ணின் மைந்தர், பெருசா பேச வந்துட்டாரு!!" மாயா ரகசியமாக அவள் காதில் கிசுகிசுத்தாள். "ஷு!" என்று வாயில் விரல் வைத்தாள் மீனா. மாயா சிரித்துக்கொண்டு அவளுக்கு பிடித்த இடங்களை படம் பிடித்தாள்.

அவன் அவர்களை தோட்டத்துக்கு அழைத்து சென்றான். வயல் மிகவும் அழகாக இருந்தது, மனதை கவர்ந்தது. சுற்றிலும் பசுமை சூழ, நெற்பயிர்கள், அழகாக காட்சி அளித்தன.

"மீனு இந்தா இளநீர், நம்ம தோப்புல காய்ச்சது" என்று அவளிடம் இளநீரை கொடுத்தான். அவளும் ஆர்வமாக வாங்கி அதை பருகினாள். "டேஸ்ட்டா இருக்கு மாமா" என்றாள் சுவைத்து.
"எனக்கு ஒரு வாய் தண்ணி ஆச்சும் கொடுத்தானா பாரு? இறக்கம் இல்லாதவன்" என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கும்போதே, "அம்மா இந்தாங்க இளநீர்" என்று அங்கு வேலை செய்யும் வேலையாள் கொண்டு வந்து கொடுக்க, அதை ஆசையாக பெற்றுக் கொண்டாள் மாயா.

"தேங்க்ஸ் அண்ணா" என்று கூறி அதை சுவைத்து குடித்தாள்.
"ஐயா, இளநீர் குடுத்துட்டேங்க" என்று பணிவுடன் மாறனிடம் அந்த வேலையால் கூற, "சரி ராமு, நீ போய் மத்த வேலைகளை கவனி" என்று அவனை அனுப்பிவிட்டு அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான்.

"சரி, அடுத்து கோவிலுக்கு போகலாம். அங்க இன்னைக்கு இருந்து ஏழு நாளும் நாடகம் இருக்கு. உனக்கு நாடகம் பாக்க பிடிக்குமா குட்டிமா?" என்றான் புன்னகையுடன்.

"பிடிக்கும் மாமா, நா படிச்சிருக்கேன் ஆனா பாத்தது இல்ல. போகலாம்" என்றாள் உற்சாகமாக. "மாயா, நீயும் வரதான?" என்றாள். "இந்த நாடகமெல்லாம் போர், வீட்டுக்கு போகலாம்" என்றாள் முகம் சுழித்து.
"சரி, அப்போ இவள வீட்டுல விட்டுட்டு நாம போகலாம் மாமா" என்று மீனா கூற. "அப்போ நீ கண்டிப்பா போக போறியா?" என்றாள் மாயா.

"ஆமா, எனக்கு நாடகம் பாக்கணும்" என்றாள் அவள் பிடிவாதமாக.
"சரி நானும் வரேன்" மாயா வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டாள் "என் செல்லம்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அழைத்து சென்றாள் மீனா.
.
.

Hi friends,
4 ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.
 

Author: Arthi
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN