"அக்கா அக்கா" என்று தன்னை நோக்கி ஓடி வந்த தன் அருமை தம்பியை தூக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் "என்ன வேணும் என் அழகு செல்லத்துக்கு" என்று கேட்க

"அங்கே அந்த பெரிய வீட்டுல இருக்க பையன் ஏதோ குடிச்சுட்டு இருந்தான்...

நான் அதையே பார்த்துட்டு இருந்தேன்

அப்போ அவன் வேணுமானு கேட்டு இங்கே வானு கூப்பிட்டான் நான் போனேன்...என் கைல கொடுக்கிற மாதிரி வந்து கொடுக்கல கா

எனக்கும் அது வேணும் " என்று உதட்டை பிதுக்கி அழத் தொடங்கியவனை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அவள் கண்களும் கலங்கின....

அவனை கீழே இறக்கி விட்டவள்

கண்களைத் துடைக்கப் போக அதைத் தடுத்தவன் அவன் அது வேணும்னு அழுது அடம்பிடிச்சானாம் கா...அவங்க அம்மா செஞ்சு கொடுத்துட்டாங்க....

நீ தானே சொல்லுவ நம்ம அம்மா சாமிக்கிட்ட இருக்காங்க...அம்மா வர வரைக்கும் நான் தான் உனக்கு அம்மானு....நான் அழுகிறேன்ல கா நீயும் செஞ்சு கொடுக்கா என்று அழுபவனைக் கண்டவள் மனம் வெதும்ப

" ஏன் அம்மா, அப்பா என்னை விட்டுட்டு போனீங்க....இவனுக்குப் பிடிச்சதைக் கூட செஞ்சுத் தர என்கிட்ட காசு இல்லையே...இப்போ இந்த ஊரடங்கு போட்டதுனால் என்னால வேலைக்கும் போக முடியல....." என மனதினில் புலம்பியவள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவன் கண்களைத் துடைக்கப் போக

"நீ எனக்கு செஞ்சு தர வரை நான் கண்ணைத் துடைக்க மாட்டேன் " எனக் கூறிய தன் தம்பியைக் கண்டு புன்னகைத்தவள்

இனி எத்தனை நாள் இந்த ஊரடங்கு நீட்டிக்குமோ எனத் தெரியாமல் கடுகு டப்பாவில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைத் தேட அதுவோ நேற்றே நீ செலவலித்துவிட்டாய் என்பது போல் அவளைப் பார்த்து சிரித்தது...

இனி என்ன செய்வது எனத் தெரியாமல் தன் தம்பியிடம் " அவன் என்ன டா செல்லம் சாப்பிட்டான் " எனக் கேட்க

"அதுக்கா அதுக்கா " என்று தலையைச் சொரிந்தவன் "டல்கோனா வோ டால்கோனாவா ஏதோ காபி கா" எனக் கூற

"அவ்ளோதான டா செல்லம் வா செஞ்சு தரேன் " எனக் கூற

அவளுடனே சென்றவன் குட்டி நாற்காலி ஒன்றைப் போட்டு அவளருகில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்துக் கொண்டான்....

அங்கு இருந்த ஒரு டம்ளர் பாலை வைத்து தான் இரவு தன் உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவள் தன் தம்பியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைக் காட்டிலும் தன் பசி பெரிதல்ல என நினைத்து நுரை பொங்க காபி போட்டு கொடுக்க அதைக் குடித்தவன் என்னக்கா கசக்குது எனக் கேட்க

சர்க்கரை இல்லை என்றா அவனிடம் கூற முடியும்...."டால்கோனா காபி அப்படிதான் இருக்கும் " என்று புன்னகைத்தவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் தன் காபியை எடுத்துக் கொண்டு பெரிய வீட்டை நோக்கி ஓடினான் எதையோ சாதித்தவனைப் போல்....

பாவம் தினசரி கூலி வேலைக்காரர்களின் நிலை கொரானாவிற்குத் தெரியவில்லை போல.....

வறுமை என்னும் கொடிய நோய் ஏற்கனவே இங்கு இவர்களை ஆட்டி படைக்கிறது என்று...

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.