எபிலாக்

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நான்கு வருடங்களுக்கு பின்....

தன் அறையில் தயாராகிக்கொண்டிருந்த ஷாகர் கட்டிலில் ஒரு கண்ணையும் வாசலில் ஒரு கண்ணையும் வைத்தபடியே தலையை சீவியபடியிருந்தான்...
அப்போது அறைக்கதவை யாரே திறப்பதை கண்டவன் விரைந்து சென்று கதவை பிடித்துக்கொள்ள அங்கே அவனது மூன்று வயது மகன் விஷ்ணு... எப்போதும் போல் தன் மகன் கதவை உடைத்துக்கொண்டு வருவான் என்று உணர்ந்தே அறைக்கதவை சற்று திறந்து வைத்தபடியே ஷாகர் வாசலை கவனித்துக்கொண்டிருந்தான்.. அவன் நினைத்தபடியே அவன் பெற்ற சீமந்த புத்திரனும் வர கதவு அடிபடாது தடுத்தவன் தன் மகனை தூக்கிக்கொண்டு கட்டிலில் உறங்கிக்கொண்டிருக்கும் அவன் அன்னை ஆதிராவை காட்டினான்..

குழந்தையும்
“அப்பா அம்மா இன்னும் எழும்பலையா அப்பா?? நான் அம்மாவை எழுப்பவா??”

“அம்மா பாவம் விணு... நைட்டு தூங்க லேட்டாகிடுச்சு... இன்னும் கொஞ்சநேரம் தூங்கட்டும்..”

“ஆஷி அத்து சீக்கிரம் வர சொன்னாங்களே...”

“நீங்க பாட்டி தாத்தா கூட போங்க.. நான் அம்மாவை கூட்டிட்டு வர்றேன்...”

“இல்லை நானும் உங்க கூட தான் வருவேன்..”

“லேட்டா போனா ஆஷி அத்து கோச்சுப்பாங்களே...”

“அச்சோ ஆமா.. ஆஷி அத்து என்கூட டூ போட்டுடுவாங்க.. இப்போ என்ன பண்ணுறது??”

“நீங்க பாட்டி தாத்தா கூட போயிட்டு அம்மாவும் அப்பாவும் வர்றாங்கனு சொல்லுங்க.. அப்போ ஆஷி அத்து டூ போட மாட்டாங்க...”

“ஓகே அப்பா..பாய்..” என்றுவிட்டு தன் தந்தையின் கன்னமிரண்டிலும் தன் பிஞ்சு இதழ்களால் முத்தமிட்ட குழந்தை அங்கிருந்து விரைந்து ஓடினான்...
அவன் சென்றதும் அறைக்கதவை மெதுவாக அடைத்துவிட்டு வெளியே வந்த ஷாகர் தன் பெற்றோரின் அறைக்கு சென்றான்..
அங்கு விஷ்ணு தன் தந்தை கூறியதை தன் தாத்தா பாட்டியிடம் கூறியபடியிருக்க அப்போது அங்கு வந்த ஷாகர்

“அம்மா நீங்க அப்பா கூட முதல்ல கிளம்புங்க.... விணுவையும் கூட்டிட்டு கிளம்புங்க.. ஆதிரா இன்னும் எழும்பவில்லை... அவளோடு நான் வர்றேன்..”

“ஏன் ஷாகர்.. என்னாச்சு... ஆதிராவுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா??”

“அதெல்லாம் எதுவும் இல்லைமா... நைட்டெல்லாம் அவ தூங்கவே இல்லை... உங்க பேரப்பிள்ளை வயிற்றுக்குள்ள புட்பால் விளையாடுனா போல... காலையில தான் தூங்கினா... அவளுக்கு ப்ரஷர் வேற இருக்கு.. சரியான தூக்கம் இருக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க.. கொஞ்சநேரம் அவ தூங்கி எழுந்ததும் அவளை நானே கூட்டிட்டு வர்றேன்..”

“சரி ஷாகர்.. பார்த்துக்கோ.. அவளுக்கு சாப்பாடும் குடிக்க ஜூஸும் கொடுத்து கூட்டிட்டு வா.. எந்த அவசரமும் இல்லை.. உன் அத்தைகள் கேட்டா நான் சமாளிச்சுக்கிறேன்... கவனம்டா... ஏதும்னா கால் பண்ணு...”

“நான் பார்த்துக்கிறேன் மா..நீங்க கிளம்புங்க....அப்பா அம்மாவை கூட்டிட்டு கிளம்புங்க... விஷ்ணுவையும் உங்க கூட கூட்டிட்டு போங்க..”

“சரிடா.. ரொம்ப லேட் பண்ணிடாத... உன் அத்தைமாரை கூட சமாளிச்சிடலாம்.. என் மருமகள்களை சமாளிக்கிறது தான் கஷ்டம்..”

“சரிப்பா... நீங்க கிளம்புங்க..” என்று கூற ஷாகரின் அன்னையும் தந்தையும் அவனின் மைந்தனை அழைத்துக்கொண்டு கிளம்பினர்..

அன்று ஷாகரின் அத்தை மகள் ஆஷிகாவிற்கு நிச்சயதார்த்தம்.... நிச்சயத்திற்கு இன்னும் நேரம் இருந்த போதிலும் பெண்ணின் தாய்மாமன் என்ற முறையில் ஷாகரின் குடும்பம் முன்னே நிற்க வேண்டும் என்பதற்காக ஷாகரின் பெற்றோர் ஆஷிகாவின் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்..
தன் அறைக்கு வந்த ஷாகர் லாப்டொப்போடு பால்கனியில் அமர்ந்து தன் வேலைகளை கவனிக்கத்தொடங்கினான்..
ஒன்பது மணியளவில் கண்விழித்த ஆதிரா கடிகாரத்தை தேட அதை காணவில்லை.. தன் மொபைலை தேட அதுவும் அங்கிருக்கவில்லை... மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்தவள் ஷாகர் என்றழைக்க

“ஆது எழுந்துட்டியா??? குடிக்க ஏதும் எடுத்துட்டா வரவா??”

“இல்லை... ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன்.. இங்கேயிருந்த க்ளாக் எங்க??என்னோட போனையும் காணோம்..?? இப்போ எத்தனை மணி..??”

“நீ முதல்ல போய் ப்ரஸ் ஆகிட்டு வா..”

“ஷாகர் இன்னைக்கு ஆஷியோட என்கேஜ்மண்ட் பங்ஷன்... ஓமைகாட்.. டைம் என்ன ஷாகர்..”

“அதுக்கு டைம் இருக்கு..நீ போய் ப்ரஸ்ஸப் ஆகிட்டு வா... நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..”

“என்னோட போனை கண்டீங்களா??”

“ஆதுமா.. எதுக்கு எழுந்ததும் அதை தேடுற?? முதல்ல நான் சொன்னதை செய்...” என்று அதட்டி அவளை அவளை பாத்ரூமிற்கு அனுப்பியவன் அவளுக்கு குடிக்க பால் எடுத்து வந்தான்...

ஆதிராவும் அதற்குள் குளித்து முடித்து வந்திருக்க தண்ணீர் சொட்ட நின்றிருந்தவளை கண்டவன் அவளை அமரவைத்து தலைமுடியில் ஈரம் போகும் மட்டும் தலையை துவட்டிவிட்டான்.. அது போதாதென்று ஹெயார் ட்ரையரையும் பயன்படுத்தினான்.. அவன் செய்வதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தவளிடம் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க அவளும் சிரித்தபடி ஒன்றுமில்லையென கூறினாள்.. அவளுக்கு குடிக்க எடுத்து வந்த பாலையும் பிஸ்கட்டையும் கொடுத்தவன் அவள் அதை அருந்தி முடித்ததும் அவளிடம் புடவையொன்றை நீட்ட அதை வாங்கியவள்

“ஷாகர்...இங்கேயிருந்த க்ளாக் எங்க?? என்னோட போன் எங்க???”

“அதெல்லாம் என்கிட்டதான் இருக்கு..நீ எழுந்து டைம்மை பார்த்து பதட்டப்படுவனு தான் உன் கண்ணுல படாத மாதிரி வச்சிட்டேன்...”

“சரி இப்போ டைம் என்ன ??”

“9.30..”

“என்னது 9.30 ஆ... என்ன ஷாகர் நீங்க?? கொஞ்ச ஹேர்லியா என்னை எழுப்பியிருக்க கூடாதா??? ரொம்ப லேட்டாச்சு ஷாகர்..விலகுங்க.. நான் போய் சீக்கிரம் ரெடியாகுறேன்..” என்றவள் அவன் கொடுத்த புடவையை எடுத்துக்கொண்டு உடைமாற்ற செல்ல விரைய அவளை தடுத்தவன்

“ஆது... லேட் ஆகவில்லை... இன்னும் டைம் இருக்கு... நீ பதட்டபடாமல் நிதானமாக ரெடியாகு.. அம்மாவும் அப்பாவும் விஷ்ணுவும் ஆல்ரெடி போயிட்டாங்க . சோ நாம மெதுவாக போகலாம்.. நீ டென்ஷனாகாத...” என்று சொல்ல அவனை திரும்பி நின்று முறைத்தவள்

“சொல்லுவீங்க.. ஏன் சொல்லமாட்டீங்க... உங்களுக்கு என்ன ஒரு வேட்டியும் சட்டையும் தான்.. எனக்கு அப்படியா?? இந்த புடவை வயிற்றிலேயே நிற்காது... அங்கேயிங்க பின்னை சொருகி உடுத்தி முடிப்பதற்குள் எனக்கு வேணாமென்று போயிடும்..”

“ஹாஹா..நீ தான் சொடக்கு போடுற நேரத்துல சேலை கட்டிடுவியே...??”

“அது அப்போ... உங்க செல்ல பொண்ணு வருவதற்கு முதல்ல...”என்று மேடிட்டிருந்த தன் வயிற்றினை ஆதிரா தடவிக்காட்ட அதை கண்டு சிரித்தவன்

“அவ்வளவு கஷ்டம்னா உனக்கு எது கம்பர்டபளா இருக்கோ அதை போட்டுக்கோ...”

“அது எப்படி...நம்ம வீட்டு பங்ஷனுக்கு நல்ல உடுத்தவேண்டாமா???”

“அப்போ நான் எதுவும் பண்ணுறதுக்கு இல்லை....”

“எதுவும் பண்ணவேண்டாம்... நான் ரெடியாக வந்து ஹெல்ப் பண்ணுங்க...” என்று கூற சிரித்தபடியே ஆதிராவை பின் தொடர்ந்தான் ஷாகர்.. அவள் சேலை கட்டுவதற்கான

அனைத்து உதவியும் செய்தவன் இறுதியாக அவள் கொசுவத்தை சரி செய்தபடியே

“ஆது என்னோட பப்ளி குட்டி ரொம்ப சேட்டை பண்ணுறாளா??”

“உங்களை மாதிரியே சேட்டை.. நைட்டெல்லாம்.. எனக்கு ஒரு சொட்டு தூக்கம் இல்லை....”

“நம்ம விணும் இவ்வளவு சேட்டை பண்ணலையே ஆது??”

“இல்லைபா... அவன் ரொம்ப சமத்து... எந்த சேட்டையும் இருக்காது... ஆனா இப்போ அதுக்கெல்லாம் சேர்த்து வச்சி இந்த குட்டி பண்ணுறா ... விணு என்னை எழுப்ப வரலையா??”

“அது எப்படி வராம இருப்பான்??? வழமைபோல கதவை உடைச்சிக்கிட்டு தான் சார் வந்தாரு..நான் தான் அவரை ஆப் பண்ணி அனுப்பிட்டேன்...”

“ஹாஹா..ரொம்ப ஸ்மார்ட்பா அவன்.. அப்படியே உங்களை மாதிரியே...”

“இல்லையே அவன் உன்னை மாதிரியே கேடியாச்சே..”

“ஆமா இவரு நல்லவரு.. நாங்க கேடி.. போதும்... எழுந்திரிங்க...”

“இரு ஆது...” என்றவன் அவன் மேடிட்ட வயிற்றளவுக்கு முழந்தாளிட்டு அமர்ந்து அவள் வயிற்றின் மேல் முத்தமிட்டவன் கையினை வைத்தபடி

“அச்சுமா.. அப்பா பேசுறேன்டா.. நைட் அப்பா வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு... அதான் அச்சுகுட்டிக்கிட்ட பேசலை.. சாரி..” என்று கூற கையில் குழந்தையின் அசைவை உணர்ந்தான் ஷாகர்.. எப்போதும் அவன் பேசும் போது குழந்தையின் அசைவை உணருபவனுக்கு அந்த நொடி வாழ்வில் மொத்த உவகையையும் அனுபவத்த உணர்வு தரும்.. அதுவும் முதன் முதலாக அவன் குரலை இனம் கண்டு குழந்தையின் அசைவை ஆதிரா ஷாகரிற்கு காட்டியபோது அவன் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை.... இரண்டாவது குழந்தை என்றபோதிலும் குழந்தையின் அசைவை உணரும் வேளை ஒவ்வொரு முறையும் புதியதொரு அனுபவமாகவே உணர்ந்தான் ஷாகர்..
ஆதிராவும் கூட அவன் ஆனந்தத்தை கண்டு மகிழ்வாள்....

விஷ்ணுவை அவள் கருவில் சுமந்திருந்த வேளையில் ஷாகர் அளவுக்கதிகமான பயத்துடனேயே இருந்தான்.... முதல் குழந்தை போல் ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஆதிராவை தன் கண்காணிப்பிலேயே வைத்திருத்தான்.. அவள் லேசாக இருமினால் கூட ஆர்ப்பாட்டம் செய்து விடுவான் ஷாகர்.. அவ்வாறு ஒருமுறை ஆதிராவின் கால்களிரண்டும் வீங்கியிருக்க அதை கண்டு பதறியவன் தன் அன்னையை உண்டுயில்லையென்று ஆக்கிவிட்டான்...

இவனது ஆர்ப்பாட்டத்தை தாங்கமுடியாது வசுமதி

“ஷாகர் போதும்.... இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழமையாக வருகிற வீக்கம் தான்... சும்மா நை நைனு இருந்த அப்புறம் ஆதிராவை நான் என் கூட நம்ம ஊரிற்கு கூட்டிட்டு போயிடுவேன் .. பிரசவம் முடியும் வரை அவளை உன் கண்ணுல காட்டமாட்டேன் பார்த்துக்கோ” என்று மிரட்டும் தான் அமைதியானவர் ஷாகர்...
அவன் அலப்பறையை கண்டு அவன். அத்தை மகள்களும் கேலி பண்ண தவறவில்லை....

ஆதிராவிற்கும் அவன் ஆர்பாட்டங்கள் சற்று அதிகப்படியாக தோன்றிய போதிலும் அவன் தனக்காகவே இத்தனை தூரம் வருந்துகின்றான் என்ற உண்மை அவனின் காதலை அவளுக்கு உணர்த்தியது.... அவனது காதல் அவளை எப்போதுமே திக்குமுக்காடச்செய்யும்... அதிலும் அவள் கர்ப்பம் தரித்த நாள் முதல் அது இன்னும் இரட்டிப்பாகிட அது அவளை மேலும் புலகாகிதம் அடையச் செய்தது...

அவளது பிரசவ நேரத்தில் அவளுக்கான ஷாகரின் தவிப்பு அந்த நேரத்திலும் அவள் மனதை வருடியது..... விஷ்ணுவின் பிறப்பிற்கு பிறகு ஆதிராவை ஷாகர் தாங்கிக்கொண்டு விதம் விஷ்ணுவை கவனித்துக்கொண்டது என்று இன்று வரை அவையனைத்தும் அவள் மனதை வருடும் நினைவுகள்...

இன்றும் தம் இரண்டாவது வாரிசினை சுமக்கும் தன்னை அவன் சுமப்பது அவளை பொறுத்தவரை அது ஒரு வரமே...
ஷாகர் வயிற்றிலிருந்த குழந்தையுடன் பேசிமுடித்து எழுந்தவன் அவள் ஒப்பனையை முடித்துவிட்டு வருமாறு கூறிட ஆதிராவும் தன் ஒப்பனையை முடித்ததும் ஷாகரை அழைத்தாள்...

அவளருகே ஒரு கவரோடு வந்தவன் அதிலிருந்து மல்லிகைப்பூ மரத்தினை எடுத்து அவள் கூந்தலில் சூடிவிட்டு அவளை பின்னாலிருந்து அனைத்து அவள் தோளில் முகம் புதைத்தேன்

“ஆதுமா... இன்னைக்கு நீ ரொம்ப அழகாக இருக்க??”

“அப்படியா மினியன்....”

“ஹேய் அப்படி கூப்பிடாதனு எத்தனை தடவை சொல்லுறது??”

“எனக்கு என் வீட்டுக்காரரை அப்படி கூப்பிடுறது பிடிச்சிருக்கு.... நான் என்ன பண்ணட்டும்??”

“வரவர உனக்கு வாய் ரொம்ப நீளுது....”

“அப்படியா?? அப்போ அதை ஆப் பண்ணிடுங்க....”

“இப்போ பண்ணமாட்டேங்கிற தைரியத்துல தானே சொல்லுற??”

“நான் அப்படி லாம் ஒன்னும் நினைக்கலப்பா..” என்று ஆதிரா கேலியாய் சொல்ல ஷாகரோ அவள் கழுத்து வளைவில் முத்தம் பதித்திட ஆதிராவின் முகமோ செம்மை பூசிக்கொண்டது.....

ஆதிராவை இன்னும் இறுக அணைத்துக்கொண்டவன் அவள் செவியில்

“இன்னைக்கு அவ்வளவு அழகாக இருக்கடி... அப்படியே உன்னை முழுசா கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு... நம்ம குட்டி வெளியில வரட்டும்.... அப்போ ஆஃப் பண்ணுறேன் அந்த நீளமான வாயை... இப்போ இதை மட்டும் பனிஷ்மண்ட்டா தரேன்...” என்றவன் அவள் ஒரு கன்னத்தில் முத்தமிட ஆதிராவோ இன்னும் மூடிய தன் இமைகளை திறக்காது தன் காதல் கணவனின் அணைப்பினை இரசித்தபடியிருந்தாள்...

அப்போது அவர்களின் மோனநிலையை கலைக்கவென்று ஒலித்தது ஷாகரின் அழைபேசி....
மெதுவாக தன் அணைப்பை தளர்த்தியவன் அழைப்பை எடுத்து பேசிவிட்டு வந்தான்...

“ஆது கிளம்புவோமா??? அம்மா தான் கால் பண்ணாங்க...”

“கிளம்புவோம் ஷாகர்.. ஆல்ரெடி நாம் லேட்...” என்று தன் வாலட்டை எடுத்துக்கொண்டு ஷாகரோடு கிளம்பினாள் ஆதிரா...

இப்போது ஆதிரா விற்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருப்பதால் அவளை கவனமாய் பார்த்துக்கொண்டான் ஷாகர்... அவள் வெளியே செல்வதை தவிர்ப்பதற்காக ஏழாம் மாதம் தொடக்கத்திலேயே வசுமதியை வற்புறுத்தி வளைகாப்பை நடாத்தியிருந்தான் ஷாகர்... இன்றும் முக்கியமான நிகழ்வு என்பதாலேயே ஆதிராவை அழைத்து செல்கின்றான்... இல்லையேல் அவள் வருகையை தவிர்த்திருப்பான்...

கை நிறையை வளையல்களோடு பட்டுசேலை தழதழக்க தன் கணவனோடு வந்திறங்கிய ஆதிராவையே அங்கிருந்தவர்களின் கண்கள் மேய்ந்தது...
பிறப்பிலேயே பிரம்மன் அவளை அழகியாய் படைத்திருக்க கணவனின் காதல், தாய்மையின் பூரிப்பு என்று அவளது அழகு இரட்டிப்பாகியது...
தன் அத்தை வீட்டிற்கு வந்ததும் கூட ஷாகரின் கவனம் முழுதும் ஆதிரா மீதே இருந்தது.... அவனது அத்தை பெண்கள் இதை வைத்து அவனை கிண்டல் செய்த போதிலும் அவன் அதனை கண்டுகொண்டவில்லை... ஆனால் ஆதிராவோ இது எதையும் கவனிக்காது ஷாகரின் அத்தை பெண்களின் கூட்டணியோடு ஐக்கியமாகிவிட்டாள்...

அதுவும் மற்றவர்களோடு சேர்ந்து அவளும் ஆஷியை கிண்டல் பண்ண ஆஷியும் வெட்கத்தில் சிணுங்கியபடி
“அக்கா நீங்களுமா??”

“இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை தான் வரும் ஆஷி... அதை அனுபவிக்கனும்..” என்று ஆதிரா கூற ஆத்விகா

“அப்படி சொல்லுங்க அக்கா.... நல்லா கேட்டுக்கோ ஆஷி...”என்று கூற அவளை கேலியாய் பார்த்த க்ருத்தி

“மேடம் உங்களுக்கும் சேர்த்து தான் அக்கா சொல்லுறாங்க... அடுத்த மாதம் இதே நேரம் நீங்களும் இப்படி தான் இருப்பீங்க...” என்று கூற சட்டென ஆத்விகாவின் முகம் வெட்கத்தை பூசிக்கொள்ள அதை பார்த்த ரித்திகா

“ஆ ஊனா வெட்கப்படுறேன்னு நம்மல பதறடிக்கிறாப்பா... ப்ளீஸ் ஆது இப்படி வெட்கப்படுறேன்னு சுத்தியிருக்கவங்களை பயத்துல அலறடிக்காத... நமக்கே இந்த நிலைமைனா பாவம் அந்த மனுஷன்...” என்று ரித்திகா ஆத்விகாவின் வருங்கால கணவருக்காக கவலைப்பட அங்கு மீண்டுமொரு செல்ல மோதல் உருவானது...

ஷாகரின் அத்தை பெண்களான ஆஷாகாவிற்கும் ஆத்விகாவிற்கும் அடுத்தடுத்த மாதங்களில் நிச்சயம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது....
ஆஷிகாவும் ஆத்விகாவும் தம் மாஸ்டர்ஸை முடிக்க ஆறுமாத காலம் இருந்ததால் இப்போதைக்கு நிச்சயத்தை வைத்துக்கொள்ளலாமென்றும் அவர்கள் படிப்பு முடிந்ததும் திருமணத்தை நடத்தலாமென பெரியோர்களால் முடிவு செய்யப்பட இன்று ஆஷிகாவின் நிச்சயதார்த்தத்திற்காகவே அனைவரும் கூடியிருந்தனர்...
அனைவரும் நிறைந்திருந்த சபையில் நிச்சயதாம்பூலம் மாற்றப்பட மணமகன் தேஸ்வந்த்தும் மணமகள் ஆஷிகாவும் அனைவர் முன்னும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்... அதன் பின் உணவு ஆட்டம் பாட்டமென்று அந்த இடமே அமர்க்களப்பட்டது.... அத்தனை அமர்க்களத்தின் மத்தியிலும் ஷாகர் தன் மனையாளை கவனிக்கத்தவறவில்லை.... இடையிடையே யார்மூலமாவது அவளை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்...

மதிய உணவு முடிந்ததும் ஷாகர் ஆதிராவை கிளம்பச்சொல்ல அவளோ மாலை செல்லலாமென மறுக்க அவனது அத்தை பெண்களும் அதையே கூறிட ஷாகரும் சரியென்று விட்டுவிட்டான்.... விருந்தினர்கள் அனைவரும் சென்றதும் ஷாகரின் குடும்பத்தார் மட்டுமே அங்கு இருந்தனர்...

பகல் முழுதும் நெடுநேரம் நிற்க நேர்ந்ததால் ஆதிராவிற்கு இடுப்பு வலி வந்திட அமரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்..

அவள் அசௌகரியப்படுவதை கண்டதும் ஷாகரிற்கு அவள் வலியால் அவதிப்படுவது புரிந்திட ஆஷியின் அன்னையான தன் அத்தையிடம் கூறி ஆதிரா தங்குவதற்கு ஒரு அறையை கேட்டிட அவரும் விருந்தினர் அறையை ஒழுங்கு செய்து கொடுத்தார். ஆதிரா மறுக்க மறுக்க அவளை கையில் ஏந்தியவன் அவளை அறைக்கு தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான்...

அவளை கட்டிலில் கிடத்தியதும் அறையிலிருந்து வெளியே சென்றவன் மீண்டும் வரும்போது ஒரு பையோடு வந்தான் ... உள்ளே பையினுள் அவள் உடைகள் இருக்க அதை எடுத்து கொடுத்தவன்

“ஆது ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு படுத்துக்கோ பேபி... இல்லைனா உனக்கு அன் ஈசியாக இருக்கும்...” என்றவன் அவள் உடைமாற்ற தன்னாலான உதவி செய்தான்.
அவள் உடை மாற்றி முடிந்ததும் கதவு தட்டும் சத்தம் கேட்டிட சென்று கதவை திறந்த ஷாகர் வரும்போது ஒரு கையில் பக்கெட்டோடும் மறு கையில் ஒரு டவலோடும் வந்தான்...

அதை கண்ட ஆதிரா
“இது எதுக்குங்க...”

“மேடமிற்கு தான் இடுப்பு வலி பென்டை நிமித்துதே... அதான் ஒத்தடம் கொடுக்கலாம்னு கொண்டு வரச்சொன்னேன்...” என்று கூறியபடி ஷாகர் ஆதிராவை முறைக்கு அவளோ அகப்பட்டுக்கொண்ட கள்வன் போல் முழித்தாள்...

அவள் படுக்க உதவியவன் மெதுவாய் அவள் இடுப்புக்கு ஒத்தடம் கொடுத்ததோடு அவள் கால்களுக்கும் ஒத்தடம் கொடுத்திட அது அவளுக்கு இதமாயிருந்தது...
இத்தனை நேரமிருந்த வலி காணமல் போயிட சற்று சுகமாயுணர்ந்தாள் ஆதிரா...

ஒத்தடம் கொடுத்து முடித்ததும் பொருட்களை சுத்தப்படுத்தியவன் மறுபுறம் வந்து அவளருகே அமர்ந்து கொண்டவன் அவள் தலையை கோதியபடி
“இப்போ வலி எப்படி இருக்கு ஆதுமா????”

“இப்போ பரவாயில்லை ஷாகர்..”

“சரி நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு... ரொம்ப டயர்டா இருக்க நீ...”

“லவ் யூ ஷாகர்...” என்று ஆதிரா அவன் கண்களை பார்த்து கூற அதில் மெலிதாய் நினைத்தவன்

“லவ் யூ டூ டி பொண்டாட்டி...” என்று கூறி அவள் முன்னெச்சியில் முத்தமிட்டான் ஷாகர்...

எப்போதும் போல் அவன் முத்தத்தில் சிலிர்த்தவள்
“ஏன் ஷாகர் உங்களுக்கு இது பேபியை ரொம்ப பிடிக்கும்...”

“அவ எனக்கும் மட்டும் தான் ஆது பேபி அதான் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்...”

“இது என் கேள்விக்கான பதிலில்லையே ...”

“அப்போ வேறு எது உன் கேள்விக்கான பதில்??”

“அது எப்பவும் நீங்க சொல்லுறது தான்...”

“ஏன் பேபி உனக்கு அந்த ஒரே பதிலை திரும்பத்திரும்ப கேட்டு போரடிக்கலையா??”

“ஏன் போரடிக்கனும்...என் ஹபி எனக்காக சொல்லுற பதில்..அதை கேட்டு எனக்கு எப்பவும் போரடிக்காது....”

“சரி தான் போ.... ஆனா சொல்லி சொல்லி எனக்கு போரடிச்சுப்போச்சு பேபி...”

“பரவாயில்லை... கேட்கப்போறது நான் தானே... நீங்க சொல்லுங்க...”

“சரி சொல்லுறேன்.. நீ தான் என்னோட பஸ்ட் சைட், பஸ்ட் க்ரஸ்,பஸ்ட் லவ், லாஸ்ட் லவ் எல்லாமே... சோ உன்னை மட்டும் தான் எனக்கு பிடிக்கும்... என் மனசு காதலெனும் வார்த்தைக்கு அர்த்தம் உணர்ந்தது உன்னை பார்த்த. அந்த நொடி தான்.... உன் கை பிடித்த அந்த நொடி நீ எனக்கான பந்தம்னு நான் உணர்ந்தேன்...உன் கண்களை நேரடியாக சந்தித்தபோது இது தான் என்னை ஆட்டிப்படைக்கப் போகும் மந்திரக்கோல்னு சொன்னது... உன் துக்கமோ மகிழ்ச்சியோ உன்னை விட என்னை தான் பாதித்தது.... இதெல்லால் சேர்ந்து என்னோட உயிர்ப்பே நீ தான்னு சொன்னது....அந்த உயிர்பை என்னோட காதலால் சந்தோஷப்படுத்தனும்னு நினைச்சேன்... அதான் உன்னை ரொம்ப பிடிக்கும்...” எப்போதும் அவன் எடுத்துரைக்கும் அந்த சுயநலக்காதல் அவளை இப்போதும் கவர்ந்தது.....

வார்த்தைகள் சுயநலமாய் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தை அவள் மட்டுமே அறிவாள்... அது அவளுக்கான காதல் வர்த்தைகள் என்று அவள் மனம் அறியும்... அதுவே தினம் தினம் ஷாகரின் காதலில் அவளை திக்குமுக்காடச்செய்கிறது... இப்போது மட்டும் அல்ல அவர்களிருவரின் வாழ் நாள் முழுதும் இது தொடரவேண்டுமென நாமும் வேண்டிக்கொள்வோம்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN