காதல்பனி 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 1

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா


வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டைப் போல் தானும் வாழ்ந்து வந்தோரையும் வாழவைத்து இன்று பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழும் பிரான்சின் தலைநகரான பாரீஸ்…

அன்று மேகத்தாரகையோ பூமிக் காதலனுக்குத் தன் வெண்பஞ்சு முத்தங்களைத் தொடர்ந்து பரிசாக அனுப்ப அதுவோ சரம்சரமாய் பாரீஸ் எங்கும் பனிக் காடாய்ப் பரவியிருந்தது.

அவ்வூரின் மையப் பகுதியிலிருந்த தன் காட்டேஜில் காலை ஒன்பது மணிக்கு அறையில் பரவியிருந்த கதகதப்பையும் மீறித் தன்னுள் ஊடுருவியக் குளிரை விரட்டப் போர்வையால் தலை முதல் கால் வரை இழுத்து மூடியபடி உறக்கத்திலிருந்தான் கென்டிரிக்.5

இரண்டு நாட்களாக அவனுக்குச் சரியானத் தூக்கமில்லை. வேலை சம்பந்தமாக இரவுப்பகலாகப் பக்கத்து மாகாணத்தில் ஷூட்டிங்கை முடித்து விட்டு அவனே காரையும் ஓட்டியபடி காலை ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தவன் அலுப்பில் இப்போது தான் உறங்க ஆரம்பிக்க,

அவனை மேலும் சோதிப்பது போல் அவன் கைப்பேசி அழைக்க, அதை உணராமல் அவன் தூங்கவும்அதுவும் விடுவேனா என்று விடாமல் அழைக்கமுகத்திலிருந்த போர்வையை மட்டும் விலக்கி படுக்கையைத் துழாவி அங்கிருந்த தன் கைப்பேசியை எடுத்து நெருப்பென எரிந்து கொண்டிருந்த தன் இமைகளைப் பிரித்து யார் எனப் பார்க்க ஸ்டீவ் என்று காட்டியது. உடனேஅழைப்பைஏற்று காதில் வைத்தவன் (அவர்கள் உரையாடல் ஆங்கிலத்தில் இருப்பதால் உங்களுக்காக தமிழில்)

“ஹலோ”என்றான்

“டேய் எழுந்துட்டியா?குழந்தைக்கு உடம்பு சரியில்லடா. அதனால நான் இன்னைக்கு முடித்துதரேன்னு சொன்ன அசைன்மெண்ட முடித்துக் கொடுக்க முடியல. பிளீஸ் நீ போடா. இன்னைக்குத் தான் லாஸ்ட் டேட்டா.சோ மறக்காம போடா”

“டேய் அந்த இடத்துக்கு நான் இப்போ கிளம்பினாலும் மதியம் தான்டா போய்ச் சேர்வேன்”

“சோ வாட்? நீ கார்ல போகாத டிரெயின்ல போ. மதியம் தான்டா ஷூட்டிங். நான் குழந்தைய ஹாஸ்பிடல் கூட்டிப் போறேன்பை” என்றவன் இவன் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

தன்னைப் பேசவே விடாமல் அழைப்பைத் துண்டித்த நண்பனின் மேலுள்ள கோபத்தில் தன் போனைச் சுவற்றில் விசிறியடித்து உடைத்தவன்

“போடா என்னால போக முடியாது” என்று சொல்லிப் போர்வையைப் போர்த்திக்கொண்டுத் தூக்கத்தைத் தொடர நினைக்க, தூக்கம் தான் வரவில்லை.

‘முன்பொருகாலத்தில் நாமும் இப்படித்தானே தவித்தோம்?அப்போது நமக்கு உதவிக்கு யாரு இருந்தா?இன்னைக்குத் தான் லாஸ்ட் டேட்னு சொன்னான். பாவம்! அப்பா அம்மா தங்கச்சி மூணு குழந்தைங்கனு கஷ்டப்படறான்.இதெல்லாம் விட முன்னேறணும்னு துடிக்கிறான். இப்போ போய் நாம இப்படி பண்ணா எப்படி?...’என்று நண்பனுக்காக யோசித்தவன் போக நினைத்துப் படுக்கையை விட்டு எழுந்து அமர,

அப்போதும் போகப் பிடிக்காமல்இன்னொரு மனசு முரண்டுபிடிக்க வலது கையால் படுக்கையைக்குத்தியவன் போர்வையை விலக்கிக்கட்டிலை விட்டு இறங்கி காலில் சிலிப்பரைப் போட்டுக் கீழே கிடந்த போனின் உடைந்த பாகத்தைக் கோபத்தில் எட்டி உதைத்தவன் பின் ரிமோட்டால் அங்கிருந்த ஸ்டீரியோவை உயிர்ப்பிக்க, அவன் எப்போதும் கேட்டு ரசிக்கும் பாடல் இப்போதும் ஒலித்தது…

A Different Place,


A Different Fate,

I Got Used To It,

Never Freer Than Today,

With Other Eyes,

A Whole New Sight,


எப்போதும் போல் இப்போதும் அந்தப் பாடல் அவனைக் கொஞ்சமே கொஞ்சம் திசை திருப்ப,கிளம்ப ஆரம்பித்தான் கென்டிரிக்.

அவன் கோபத்திற்கு முதல் காரணம் ‘ஒரு காலத்தில் தனக்கு வாய்ப்புக்கொடுக்காமல் எள்ளிநகையாடிய நிறுவனத்திற்கே தன்னைப் போகச் சொன்னது.இரண்டாவது, பெரிய பெரிய ஹாலிவுட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களுக்கு ஆஸ்தான போட்டோகிராஃபராய் இருக்கும் தன்னை ஒரு கத்துக்குட்டிக்குப் போட்டோ ஷூட் பண்ணச் சொல்லிட்டானே!’ என்பது.

பிரெட்டை டோஸ்ட் மேக்கரில் போட்டுகாஃபி மேக்கரை ஆன் செய்துவிட்டு இரண்டு நாள் வளர்ந்திருந்த தாடியை மழித்தவன் ஷேவிங் மெஷின் தன் மீசையைத் தொடும் நிலை வரும்போது மட்டும் ஒரு விநாடித் தயங்கியவன் பின் இடது கையின் ஆள் காட்டி விரலாலும் கட்டை விரலாலும் தன் மீசையை நீவி விட்டவனோஅதே கையால் தன் சிகையைக்கோதியபடி கண்களை மூடித் தன் மனக்கண் முன்னே எதையோ நிலை நிறுத்திப் பார்க்க,

அந்தக் காட்சியைப் பார்த்துப் பயந்தவன் போல் பட்டென கண்ணைத் திறந்து தன் முகத்தையே ஒரு விநாடி கண்ணாடியில் வெறித்தவனின் முகத்தில் அப்படி ஒரு வலி!

‘வலியா?!எனக்கா?! திமிர் பிடித்தவன் ஆணவக்காரன் யாருக்கும் அடி பணியாதவன் என்றெல்லாம் பெயரெடுத்த தனக்கா?!’ என்று யோசித்தவன் பின் தலையை உலுக்கித் தன் சிந்தனையிலிருந்து வெளி வந்தபடியே குளித்து உண்டு முடித்து அங்குஒலித்தப் பாடலை ஹம் செய்தபடியே கிளம்பி வெளியே வந்து அவசரமாக டிரெயினில் ஏறி அமர அவன் கண்களோ ‘கொஞ்சம் தூங்கேன்…’ என்று கெஞ்ச மீதித் தூக்கத்தை அங்கேயேதொடர்ந்தான் கென்டிரிக்.

அதற்குள் அவனைப் பற்றிய சிறு முன்னோட்டம்…

கென்டிரிக் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில். தாய் தந்தையர் சொந்தம் பந்தம் என்று இப்போது யாருமில்லை. தன்னுடைய வேலைக்காக பிரான்ஸ் வந்தவன் பல நிறுவனங்களில் எண்ணற்ற மாடல்களைத் தன் திறமையால் புகைப்படம் எடுத்துக்குறுகிய காலத்திலேயே அதில் வெற்றிக்கொடி நாட்டி இன்று புகழ்பெற்ற உலக புகைப்படக்கலைஞர்களில் அவனும் ஒருவன். எந்த ஒரு பின் புலனும் இல்லாமல் இருந்தவன்இன்று பலமில்லியன்டாலர்களுக்குச்சொந்தக்காரன்.

இப்படிப் பேர் புகழ் சொத்து என்று பெற்றிருந்தாலும்அவனுள் குடிகொண்டிருப்பது வெறுமையே! அந்த வெறுமையே மற்றவர்களிடம் இருந்து அவனைத் தூர நிறுத்தியது.

ஆறடி உயரமும் 27 வயதுக்கே உள்ள கட்டுமஸ்தான உடல்வாகு.தலை முடியோ பழுப்பும்கருப்பும் கலந்தகலவை.மேனியோ பால் வண்ணமும் இளஞ்சிவப்பும் கலந்திருக்க (அதாங்க சுண்டுனா ரத்தம் வருமே! அப்படி ஒரு கலர்ங்க…) அவன் கண்களோ என் மனதில் இருப்பதை உங்களால் வாங்கி விடதான் முடியுமா என்று எதிரில் இருப்பவர்களுக்குச் சவால் விடும்! சிரிக்காத உதடுகள், எப்போதும் ஒரு இறுக்கத்துடனும் பிடிவாதத்துடனே இருக்கும் முகம்! இதையெல்லாம் விடுத்து அவனை முதன் முதலில்பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஹாலிவுட் ஹீரோ என்றே நினைப்பார்கள்.

இவன் டிரெயினை விட்டு இறங்க, அதற்கு முன்னரே அவனை அழைத்துப் போக காத்திருந்தகாரைப் பார்த்தவனோ பழைய நினைவில் உதட்டோரம் சுழிய மனதிற்குள் சிரித்த படியேஅதில் ஏறி அமர அவன் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்தவுடன் வாசலிலேயே அவனைக் கட்டித் தழுவி அழைத்துச் சென்றான் அந்த நிறுவனத்தின் அதிகாரி.பின் அவன் ஷூட்டிங் இடத்திற்குப் போக, அதுவோ வெட்ட வெளிப் பனிப் பிரதேசமாக இருந்தது.

அப்போது அந்த வேலைக்கானடீம் லீடர் சற்றுத் தயங்கியபடி அவன் முன் வந்து நிற்க, அவனிடம்

“எல்லாம் தயாரா?” என்று இவன் கேட்க அவனோ தலை குனிய

“எனிதிங் ப்ராப்ளம்?” என்று கண்கள் இடுக்க புருவம் நெரிய குரலை உயர்த்தாமல் கோபத்தையோ கடுமையையோ காட்டாமல் அவன் கேட்ட விதமே அந்த டீம் லீடருக்கோ உதறல் எடுக்க

“அது வந்து சார்! மாடலிங் செய்ற பொண்ணு இன்னும்...”அவன் முடிப்பதற்குள்

“வாட்? இன்னும் வரலையா?...” என்று சீறிப் பாய்ந்தது இவன் குரல்.

“இல்ல இல்ல...சார்! வந்துட்டாங்க.ஸ்டீவன் சாருக்குப் பதில் நீங்க வரவோ பயந்து தயங்கறாங்க. அவங்களும் இந்த ஃபீல்டுக்குக் கொஞ்சம் புதுசு. அதான் சார்!” என்று என்று அவன் தயங்கித் தயங்கிச்சொல்ல

“ஏன், இந்த ஃபீல்டப் பத்தித் தெரியாதா? இதுல புதுசு என்ன பழசு என்ன? எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் போல்டா நிற்கணும். இதுக்கு நானோ ஸ்டீவோ முக்கியம் இல்ல.இதெல்லாம் தெரிந்து தானே இந்த ஃபீல்ட சூஸ் பண்ணாங்க?! சோ கோ அஹெட். அவங்கள வரச் சொல்லுங்க”என்றவன் இதோடு அவர்கள் உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்க.

“சார் இப்போ அவங்கள இங்க வந்து உங்களப் பார்க்கச் சொல்லவா?”

“நோ நோ… அவங்க ரெடியா இருந்தா ஸ்பாட்டுக்கு வரச் சொல்லிடுங்க. ஜ யம் ரெடி வித் மை கேமரா”

அப்போதும் அவன் தயங்கியபடி

“சார் எதுக்கும் நான் இன்னைக்கு என்ன சீன்னு சொல்லிடவா?” என்று கேட்க

“இல்ல வேண்டாம். ஸ்டீவ் ஏற்கனவே எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்கான்” என்று முடித்துவிட்டான்,

இது தான் கென்டிரிக்!அவசியப் பட்டால் மட்டுமே இரண்டொரு வார்த்தை பேசுவான்.தன்னை மீறி சில விஷயங்களை அவன் செய்கிறான் என்றால் அது தனிமையில் இருக்கும் போது தான்.அப்பொழுது மட்டுமே தன் உணர்ச்சிகளை முழுமையாகக் கொட்டித்தீர்ப்பான். ஆனால் மற்றவர்களிடத்தில் கோபமோ சந்தோஷமோ எதையும் மிகமிகக் குறைந்த அளவே வெளிப்படுத்துவான்.அதற்காகத் தேவையில்லாமல் யாரிடமும் தழைந்து போகவும் மாட்டான்.

அதன் பின் அந்த இடத்தில்இருந்த அனைவரும் பரபரப்பாய் இயங்க அதே நேரம் மிதமான வேகத்தில் ஒரு ஹெலிகாப்டர் அந்தப் பனிப் பிரதேசத்தில் இறங்கியது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN