காதல்பனி 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 5

மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே


சாரா எங்கே என்று கண்களால் தேட அவளோ அங்கில்லை ஆனால் அவள் இங்கு தான் இருக்கிறாள் என்பதை அவன் உள்ளுணர்வு சொல்ல,

அவளை அப்படியே விட்டுப் போக மனசில்லாமல் யாரிடமும் கேட்கவும் முடியாமல் அங்கிருந்த மேக்அப் ரூம் ரெஸ்ட் ரூம் என்று தேட அவன் நினைத்தது போல் ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தாள் சாரா.

அது வரை ஒரு தவிப்போடு இருந்தவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது. அதற்குப் பின் ஒரு முடிவுடன் அவளை நெருங்கியவன்

அவள் கையைப் பற்றித் தர தர என இழுத்துச் செல்ல முதலில் அவன் செயலில் திகைத்தவள் பின் சூழ்நிலை கருதி அவனுடன் சென்றாள். இல்லை இல்லை... ஓடினாள் சாரா!

எப்படியோ தட்டுத் தடுமாறி அவன் அறையில் உள்ள பால்கனிக்கு இழுத்து வந்தவன் அங்கு தரையோடு போடப் பட்டிருந்த சிறு கதவைத் திறந்து அதன் அருகிலேயே இருந்த பட்டனை ஆன் செய்ய பலூன் போல்

கட்டியிருந்த ஒன்று வெடித்துச் சிதற அதிலிருந்த துணி விரிப்பு நீண்டு கீழே விழுந்து வெளி தரையைத் தொட்டது. இது வரை அவள் கையை விடாமல் பிடித்துக்கொண்டு தரையில் மண்டியிட்ட படி இதெல்லாம் செய்தவன் பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து

“ம்… சீக்கிரம் இந்த சின்ன கேப்ல இறங்கு. இது கீழ க்ரௌண்ட் ப்ளோருக்குப் போகும். ஃபயர் எக்ஸிட்காக வச்சது” என்று அவளை அவசரப்படுத்தினான். ஆனால் அந்த அவசரம் எதுவும் இல்லாமல் அந்த நிலைமையிலும்

அவள் ஆச்சரியத்துடன் விழி விரித்து அவனைப் பார்த்திருக்க அதில் கோபம் கொண்டவனோ எழுந்து நின்று அவளைப் பற்றி உலுக்கி

“ஏய்! உங்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்? ம்... சீக்கிரம் இறங்கு” என்று குரலை உயர்த்த அப்போதும் அவள்

“நீ.. நீங்க இப்.. போ தமிழ்ல பேசினிங்க!” என்று திக்கித் திணறி பிரமிப்பு மாறாமல் அவளும் தமிழில் சொல்ல அப்போது தான் அவனே அதை உணர்ந்தான். முகத்தில் எதையும் காட்டாமல் அதை விடுத்து

“இருக்கட்டுமே! நீ தமிழ் தான? அதான் தமிழ்ல சொன்னேன்” என்றவன்

“இருக்குற நேரம் காலம் தெரியாம ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா? நமக்கு டைம் இல்ல. ம்... சீக்கிரம் இறங்கு” என்றவன் அவளை இழுத்து அந்தக் குழிக்கு முன் நிறுத்த

“ஜயோ!” என்ற கத்தலில் அவனின் கையை உதறிக் கொண்டு அங்கிருந்து விலகியவள்

“பதினாலாவது ப்ளோர்ல இருந்து கீழ குதிக்கணுமா?! எனக்கு பயமா இருக்குபா” என்றவள் சொன்னது மட்டுமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல திரும்ப

“நீ நல்ல முறையில சொன்னா கேட்க மாட்டியே!” என்றவன் அவளைப் பிடித்துத் தன் புறம் இழுத்து அணைத்து அவள் கைகள் இரண்டையும் எடுத்து தன் கழுத்தில் மாலையாகப் போட்டவனோ

“கைய ரெண்டையும் இறுக்க கோர்த்துக்க சாரா” முதல் முறையாக அவள் பெயர் சொல்லி அழைத்தவன்

“இதுல ஒருத்தவங்க மட்டும் தான் இறங்க முடியும். அதனால நீ என் மேல பல்லி மாதிரி ஒட்டிகிட்டா தான் நான் இறங்கவே முடியும். கையை காலை அசைக்காத பயப்படாத.

எக்காரணத்தக் கொண்டும் என்ன மட்டும் விட்டுடாத. ஏன்னா நான் உன்னைப் பிடிச்சிக்க முடியாது. நீயே பிடித்துக் கிட்டா தான் உண்டு” என்று அவளிடம் கட கடவென சொன்னவன் பின் ஒரு பெருமூச்சுடன் அவளை அணைத்த படியே அந்தக் குழியில் இறங்க ஆரம்பித்தான்.

அது வெளிப்புறம் தீ பிடிக்க முடியாத அளவுக்கும் உள்ளே பஞ்சு போல மிருதுவான துணி என்பதால் அவன் நீச்சல் போல் கையை காலை உதைத்து அசைத்தால் தான் மெது மெதுவாக இறங்க முடியும். அதன் படியே அவன் செய்து இறங்க பயத்தில் இவளோ கண்களை முடிக் கொண்டாள்.

உடனே அவனோ “ஏய்! ஏன் கண்ண மூடுற? திறந்து பார்” என்று உறும,

அந்தக் குரலுக்குக் கட்டுப் பட்டு விழிகளைத் திறந்தவளோ அவனையே பார்க்க அவனோ அவள் விழிக்குள்ளேயே புகுந்து விடுவது போல் பார்த்துக் கொண்டே இறங்கினான் கென்டிரிக்.

இப்போது தான் அவளை முதல் முறையாகத் தொடுகிறான். இவ்வளவு நாள் அவள் விழிகள் விழிகள் என்று இருந்தவனுக்கு அந்த விழிகளையும் மீறி இன்றையத் தொடுகை

அவனுக்குள் எதையோ உணர்த்த அது என்னவென்று அறிவதற்குள் தவித்துத் தான் போனான் அவன்.

அவர்கள் கீழே இறங்கிய பிறகும் அவன் அவளை விட்டுப் பிரியாமல் அவள் விழிகளையே ஒரு நொடி பார்த்தவனோ பின் ஒரு முடிவுடன் எலும்புகள் நொறுங்க மூச்சுத் திணறும் அளவுக்கு அவளை இறுக்கி அணைத்தவன் பிறகு ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு விலகித் திரும்பியும் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் கென்டிரிக்.

முதல் முறையாக அவள் விழிகளைச் சந்தித்த போது தடுமாற்றம் வந்து பின் அந்த விழிகள் தன்னைக் காதலுடன் பார்க்காதா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்தது.

ஆனால் அவளோ தன்னை மதிக்காமல் பேசிய போது அதற்குப் பழிவாங்க அவளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் வாழ்க்கைத் தரத்தைக் காட்ட நினைத்து, ஆனால் அதையும் செய்ய முடியாமல் முதல் நாளே அவளுக்கு ஒன்று என்றதும் துடித்து அதனாலே அவளைப் பழிவாங்காமல் விட்டது.

இறுதியாக அவள் உயிருக்கு ஆபத்து என்றதும் அவளைக் காப்பாற்ற ஓடியது இப்படியெல்லாம் செய்தது அவள் விழிகளுக்காக என்று நினைத்திருந்தான் கென்டிரிக்.

ஆனால் இறுதியாக அவள் தொடுகையும் அணைப்பும் வேறு ஒன்றை அவனுக்கு உணர்த்த தன் எண்ணம் போகும் போக்கைப் பார்த்தவனோ இத்தனை நாள் தான் இருக்கும் தவ வாழ்வைக் கலைக்க வந்த மோகினிப் பிசாசாக அவளை நினைத்து ஆத்திரப் பட்டவனோ அவளை மேலும் வேறு வழியில் பழிவாங்க நினைத்தான்.

ஒவ்வொரு நாள் இரவும் அவளை மறுநாள் எப்படி எல்லாம் டார்ச்சர் கொடுத்து அழவைக்க வேண்டும் என்று பல திட்டங்களுடன் நினைத்துப் படுப்பான். ஆனால் மறுநாள் அவள் விழிகளைச் சந்தித்தப் பிறகோ அது எதையுமே அவனால் செயல்படுத்த முடியாது.

‘சரி நாம் நேரில் இருந்தால்தானே பிரச்சனை? நாம் இல்லாமலே சிலதைச் செய்யச் சொல்லிக் கஷ்டப்படுத்திப் பார்க்கலாம்’ என்று நினைத்தாலும் ஒரு மனமோ

‘நாம் கொடுக்கும் கஷ்டங்களை நாம் நேரிலிருந்து பார்க்காமல் அப்படி என்ன அவளுக்கு கஷ்டம் வேண்டி இருக்கு?’ என்றும் இன்னோர் மனமோ

‘அவள் மற்றவர் முன்னால் கஷ்டப்பட்டால் உன்னால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்றும் வாதாடியது.

ஆக மொத்தம் அனைத்தையும் அவனால் நினைக்கத் தான் முடிந்ததே தவிர செயல்படுத்த முடியவில்லை.

இப்படித் தன்னையும் மறந்து பல தவிப்புகளுடன் இவன் சுற்றித் திரிய சாராவோ இப்படி ஒருத்தனைப் பாடாய்ப் படுத்தி எடுக்கிறோம் என்று தெரியாமல் அவள் வாழ்க்கையோ தெளிந்த நீரோடையாகச் செல்ல அதை கென்டிரிக் பார்க்காதவரை ஏதோ கொஞ்சம் நிம்மதியாகவாது இருந்தான்.

ஆனால் மீண்டும் ஒரு முறை ஒரு விழாவில் அவளைச் சந்திக்க வேண்டி வர அவளோ கன்னம் குழியத் தன் முத்துப் பற்கள் பளிச்சிட சிரித்த படி அங்கே வளைய வருவதைப் பார்த்தவனின் இதயமோ கோபத்தில் எகிறிக் குதிக்க வயிற்றிலோ அமிலம் சுரக்க ஆரம்பித்தது.

இதில் அவளோ வழக்கம் போல் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்க அது அவன் ஈகோவைத் தட்டி எழுப்ப இன்றே அவளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்

அவன் ஒரு முடிவை எடுத்து அதை அன்றே அவளிடம் சொல்லி செயல்படுத்த நேரம் பார்த்துக் காத்திருந்தான் கென்டிரிக்.

அவனைப் பொறுத்தவரை அவன் எடுத்த முடிவு வேண்டுமானால் தவறாக இருக்கலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று தான். உண்மையில் இப்படி செய்யப் போகும் செயலில் அவனுக்குக் கூட விருப்பம் இல்லை தான்.

ஆனால் தினம் தினம் தவிப்பிலும் தேடலிலும் நாட்களைக் கழிக்க அவனுக்கு விருப்பமில்லை.

அதனாலேயே இன்றே அவளிடம் பேசி அவளுடனான கூடலுக்கு நாள் குறித்து விட முடிவு செய்திருந்தான்.

அவர்கள் கலாச்சாரத்தில் டேட்டிங் எல்லாம் பெரிய விஷயமா என்ன? இங்கே படிக்க வந்ததால் அவளும் அதை சகஜமாக எடுத்து ஒத்துக் கொள்வாள் என்றே நினைத்தான் கென்டிரிக்.

அவள் விழிகளைச் சந்தித்த பிறகே, அவன் இப்படி எல்லாம் பித்துப் பிடித்துத் திரிகிறானே தவிர அதற்கு முன் அவளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் என்பதை அறிய முற்படவே இல்லை.

முதலில் அவள் விழிகளுக்காக என்று இருந்தவன் இப்போது அவளை அடைந்தால் தான் தன் வேட்கை அடங்கும் என்றும் நினைத்தான்.

இப்படி அவனைப் பற்றி மட்டும் நினைத்தானே தவிர அவளைப் பற்றி யோசிக்கவே இல்லை. அன்று அவன் தன்னிடம் நடந்து கொண்டதை வைத்தும் அங்கிருந்தவர்கள் அவனைப் புகழவும் தான் சாரா அப்படி விட்டேந்தியாகப் பேசினாள்.

ஆனால் அடுத்த நொடியே அதை அவள் மறந்தும் போனாள். அவள் அன்று பேசியதைக் கூட தான் அங்கு இருப்பதைத் தெரிந்து தன்னை அவள் பின்னால் சுற்ற வைக்கவே அப்படி பேசியதாக நினைத்திருந்தான் அவன்.

அதன் பிறகு அந்தக் கூட்டத்தில் அவள் எங்கிருந்தாலும் அவளைத் தன் கண் பார்வையிலே வைத்திருந்தான் கென்டிரிக். விழாவோ கடற்கரையை ஒட்டி ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்து கொண்டிருக்க அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வெயிட்டர் சாராவிடம் வந்து எதையோ கேட்க அதற்கு அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.

பிறகு அவன் எதையோ சொல்ல அதற்கும் சரி என்றவள் அவனை அனுப்பிவிட்டு ஏதோ யோசனையுடனே அங்கும் இங்கும் சென்று கூட்டத்தில் யாரையோ தேடியவள் பின் உடனே தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க அது எடுக்கப் படவில்லை என்றவுடன் எதையோ மொபைலில் டைப் செய்ய,

அவள் செய்வதை எல்லாம் ஒரு ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான் கென்டிரிக்.

பின் ஒரு முடிவுடன் சாரா பின் புறத் தோட்டத்திற்குச் சென்று அவ்வழியாக பக்கத்திலிருந்த இன்னொரு கட்டிடத்திற்குள் செல்ல

இதையெல்லாம் பார்த்தவனோ சற்று இடைவேளை விட்டு அவளைத் தொடர நினைக்க அதற்குள் யாரோ ஒருவர் அவனிடம் பேச வந்து விட

அவரிடமிருந்து தப்பித்து வருவதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பின் அவன் அங்கு செல்ல எதற்கும் ஒரு எச்சரிக்கைத் தனத்துடன் சாரா கதவைப் பூட்டாமல் வைத்து இருந்ததால் உள்ளிருந்து

அவள் குரல் கடல் அலையையும் மீறி வெளி வராண்டா வரை கேட்டது.

“டேய் நீ எல்லாம் வாயால சொன்னா கேட்க மாட்ட. என்ன என்ன உங்க ஊர் பொண்ணுங்கனு நினைச்சியா? இது அருவா பிடிச்ச கைடா!” என்று

என்னமோ அவனுக்குத் தமிழ் தெரியும் என்பது போல் இவள் கோபத்தில் தமிழில் கர்ஜித்துக் கொண்டிருக்க அதைக் கேட்ட படியே தன் வேக நடையுடன் உள்ளே நுழைந்தான் கென்டிரிக்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN