நீயே என் இதய தேவதை -2

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அலுவலகம் விட்டு வீடு வந்தவன் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கடைக்குச் சென்றான். எளிமையாக ஏதோ சமைக்க வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அம்மா இறந்ததிலிருந்து இப்படித்தான். அவனுக்கு அவ்வளவாக சமைக்க வராது.கற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை. காலை மதிய வேளை உணவு அலுவலகத்தில். இரவு தனக்கு தெரிந்த உணவினை செய்து சாப்பிடுவது வழக்கம்.

பின்னிரவு தாண்டியும் தூக்கம் மட்டும் வருவேனா என்று அடம்பிடித்தது."ச்சைக் எப்டியோ போட்டும்... " என அதன் போக்கில் விட்டுவிட்டு படுத்திருந்தான். எப்பொழுது தூங்கினான் என்று தெரியாது. காலையில் எழுந்து பார்த்தால் மணி 7. 30 எனக் காட்டியது. அவரச அவசரமாக குளித்துவிட்டு கிளம்பி அலுவலகம் சென்ற போது மணி 8. 30 ஆகி இருந்தது.

@@@@@@@@@@@@

அம்மா என்ற விளிப்பைக் கேட்டவுடன் கையிலிருந்த விஷத்தை தவறவிட்டு கதறி அழுதாள்.பாவி எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் இந்த அழைப்பிற்காக அப்போதெல்லாம் விட்டுவிட்டு....

ஆம் அந்த குழந்தை முதல் முறையாக அம்மா என்றழைத்திருந்தது. அத்தை, ஆயா, அக்கா என்பதெல்லாம் பிறர் சொல்ல அப்படியே திருப்பிச் சொல்லும் குழந்தை 11 மாதங்கள் ஆகியும் அம்மா என்று மட்டும் கூறவே இல்லை.ஆச்சர்யம் என்னவென்றால் அப்பா என்பதைக் கூட யாரும் சொல்லிக் கொடுக்கமாலே கூறியிருந்தது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான் போலும்.அந்த ஒரு வார்த்தையினால் தான் அம்மழலையின் உயிர் தப்பித்தது.

கவிதா வயது 21. சந்தன நிறம் களையான முகம்.அதிக அலட்டல்கள் இல்லாத இயற்கையான அழகி.சிறு வயதிலேயே தாயை இழந்தவள்.கூட பிறந்தவர்கள் ஒரு அண்ணன் ஒரு தங்கை.12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். இப்போது இருப்பது சித்தி (அம்மாவின் தங்கை) வீட்டில்.

வீ்ட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் சரியாண தருணம் என்று இப்பாவச் செயல் செய்ய துணிந்தாள். இப்போதும் அதுவும் வீணாய் போனது. மரண தேவனும் தன்னை ஏற்க மறுக்கிறான் போலும் என எண்ணிக் கொண்டாள்.

யாருக்கும் பாரம் இல்லாமல் போய்விடலாம் என்றெண்ணம். இத்தனைக்கும் யோசித்து பார்த்தால் சித்தி ஒன்றும் கொடியவள் இல்லை. சிறு வயதில் அக்கா குழந்தைகள் மூன்று பேரையும் தனதாய் எண்ணி வளர்த்தவள்.
சித்தி திருமணமாகி வேறு ஊர் சென்றாலும் கோடை விடுமுறையில் அவர்களை வீட்டுக்கு கூட்டிச் சென்று நன்றாக பார்த்து கொண்ட நினைவுகள்.
அவளின் தயவாலே அசைவ உணவுகள் எல்லாம் சாப்பிட முடிந்தது. நல்ல உடைகளை அணிய முடிந்தது.சித்தியின் கணவரும் அப்படியே. தாயில்லாக் குழந்தைகள் என்பதால் அவர்க்கும் பாசம் இருந்தது இவர்கள் மேல்.

12 ஆவது முடித்தவுடன் திருமணம் பேச்சை தந்தை தொடங்கும் போது சிறு பெண்ணிற்கு திருமணத்திற்கு என்ன அவசரம் என தந்தையுடன் சண்டையிட்டவள் சித்தி

அவள் பேச்சைக் கேட்காமால் திருமணம் நிச்சயம் செய்தாலும் தாயாய் உடனிருந்து திருமண விழாவை நல்ல படியாக முடித்துக் கொடுத்தவள்.

இவளின் பிரசவ வலி வந்த நேரம் செய்தி அறிந்து பதறி மருத்துவமனைக்கு வந்தவள் ஐயோ சின்னப் பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டாம்னா கேட்டாரா இந்த மனுசன் என அக்கா கணவரை திட்டிக் கொண்டே கவிதாவிற்கு உதவியவள்.

ரோஜா மலர் போன்றிருந்த அந்த குழந்தையை வாங்கியவளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம்.

இப்போதும் புகுந்தவீட்டில் பிரச்சனை என்றதும் தந்தை கூட கல்யாணம் செய்து வைத்தவுடன் என் கடமை முடிந்தது நீதான் அந்த வீட்ல இருக்க பிரச்சனையை பாத்துக்கணும் என்று கைகழுவி விட தன் வீட்டில் அடைக்கலம் தந்தவள் சித்தி.

அப்படிப்பட்ட சித்தி இன்று வசவுசளை கொட்டுகிறாள் என்றால் அவளின் நிலை அப்படி. அவளெக்கென்று பதின்ம வயதில் இரு குழந்தைகள். வயதான மாமியார், மாமனார். தற்போது உடல் நிலை கோளாறு வேறு. இத்தனை இடையில் ஆறு மாதம் தன்னைப்பார்த்துக் கொண்டதே அதிகம்.

இப்படியெல்லாம் கவிதா யோசித்துக் கொண்டிருந்த போது மொபைல் அழைத்தது. ஒரு சிறு நற்செய்தி ஒன்றினை தாங்கிய படி.

தொடரும்.
 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN