காதல்பனி 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 8

“இல்ல இல்ல... வேணாம்! உண்மையாவே இப்போ இருக்கறவரு மாயாவக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா? அதனால அவ சம்பந்தப் பட்டது அவருக்குத் தெரியவே வேண்டாம்” என்றவள் பிறகு குரலைத் தாழ்த்திய படி கண்களில் கெஞ்சலுடன்

“அதனால நீங்களே பாருங்க” என்று அவள் சொல்லவும்

அந்த குரலில் திரும்பி அவள் முகம் பார்த்தவனோ அவள் விழிகளில் கெஞ்சலைப் பார்க்கவும் ஓர் பெருமூச்சுடன் காரைக் கிளப்பிச் சென்றான் கென்டிரிக்.

அவள் தங்கியிருக்கும் இடம் வந்தவுடன் காரை நிறுத்தியவன் அவள் இறங்கி விடுவாள் என்று நினைத்து அமைதி காக்க அவளோ வண்டி நின்றது கூடத் தெரியாமல் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்கவும் அவளைத் திரும்பிப் பார்த்தவனோ

“ம்.. இறங்கு” என்று சொல்லவும்

அங்கு திடீர் என்று அவன் குரல் ஒலித்ததில் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தவளோ அப்போது தான் தன் வீட்டு முன்னாடி வண்டி நிற்பதையே உணர்ந்தவள்

‘நாம அட்ரெஸ் சொல்லலையே?! பிறகு எப்படி சரியா வந்து நிறுத்தினான்?’ என்று நினைத்த படியே வண்டியை விட்டு இறங்கியவள் ஏதோ அன்ன நடை என்பார்களே அது போல் அடி மேல் அடி வைத்து மெல்ல நடந்து சென்று தன்னிடமுள்ள சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் திரும்ப கதவை சாத்தும் வரை கென்டிரிக் அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. அதன் பிறகே அவன் கிளம்பிச் செல்ல, அதைக் கதவிடம் இருந்த படி கார் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவளோ

அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையை இனி மேல் கட்டுப்படுத்தவே முடியாது என்பது போல் அது பீறிட, வலது கையால் தன் வாய் பொத்தி அழுதவளோ தன் அறைக்கு வந்தவுடன் மாயா அங்கே இல்லை என்பதால் தன் நெஞ்சே வெடித்து விடும் போல் அழுது கரைந்தாள் சாரா.

“இப்படித் தான் காதலர்கள் எல்லோரும் இருப்பாங்களா?! கட்டிப் பிடித்து நெத்தியில ஒரு முத்தம் கொடுத்து ஐ லவ் யு னு சொல்லலை! இது என் நம்பர், இனி இப்படித் தனியா போய் எதுவும் செய்யாதடினு உருகல! கடைசியா இறங்கும் போது கூட நான் இருக்கேன்னு என் கைய அழுத்தி ஆறுதல் படுத்தல!

இதெல்லாம் விட நான் இறங்கின பிறகாவது என்ன கூப்பிட்டு குட் நைட் சொல்லுவாருனு நான் எதிர் பார்த்து நடந்தா அப்படி எதையும் சொல்லாம போய்ட்டாரு…” என்று வாய் விட்டுக் கதறியவளோ கடைசியாக

“அப்போ என் மேல உண்மையாவே காதல் இல்லையா?” என்றவள் கட்டிலில் குப்புறப் படுத்துத் தலையணையில் தன் முகம் புதைத்தவள் தன் உள்ளக் குமுறலில் வலது கையால் படுக்கையைக் குத்திக் கொண்டாள் சாரா.

அவ்வளவு சீக்கிரம் அவளால் இன்று நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. என்ன செய்வது அந்தளவுக்கு கென்டிரிக்கை விரும்ப ஆரம்பித்திருந்தாள் அவள்!

ஒரு வழியாக அழுது ஓய்ந்தவள் நிதானமாக யோசித்ததில். அவள் மனமோ,

‘நீ சொன்னதற்காகத் தானே அந்த வீடியோ சம்பந்தப் பட்டதை அவங்க எடுத்தாங்க? அப்போ அது காதல் இல்லையா?’ என்று எடுத்துச் சொல்லவும்

‘ஆமாம் செய்தார் தான். ஆனாலும் நான் சொன்ன மாதிரி எல்லாம் அவர் செய்யலையே? இப்படி எல்லாம் தான சினிமாவுல காட்டறாங்க?’ என்று மறுபடியும் வாதிட்டது அவள் இன்னோர் மனது.

அவனை உயிராக விரும்புவதால் அவன் செயல்களுக்கு ஆதரவாக ஒரு மனமோ பரிந்து பேசியது. ஆசை கொண்ட இன்னோர் மனமோ தன் ஏக்கங்களை எல்லாம் சொல்லி அவனைத் திட்டித் தீர்த்தது.
இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் அந்த இரவு முழுக்கத் தூங்காமல் அவள் தவித்துக் கொண்டிருக்க, அங்கே அவனோ அவளிடம் திருமணத்திற்குக் கேட்டு விட்ட நிம்மதியில் இத்தனை நாள் இருந்த தவிப்புகள் விலகித் தூங்கிப் போனான் கென்டிரிக்.

அவனுக்காவது அவள் விழிகளைப் பார்த்து ஒரு மயக்கம், இப்போதோ அவள் மேல் வேட்கை. அதனால் காதலைச் சொல்லாமல் கல்யாணத்தைக் கேட்டான்.

ஆனால் அவள் எப்படி அவன் கேட்ட உடனே சம்மதித்தாள்? இது தான் கண்டதும் காதல் என்பதா?!

மறுநாள் காலை தாமதமாக எழுந்தவள் ஷூட்டிங் போகாமல் ரூமிலேயே அடைந்திருக்க, அன்று மாலை தான் வந்தாள் மாயா. வந்தவள், வந்ததும் வராததுமாக கட்டிலில் அமர்ந்து புக் படித்துக் கொண்டிருந்த சாராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்

“ஹேய்… இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் ஷாப்பிங் பண்ண மால் போயிருந்தப்ப, திடீர்னு ரோஹித் என் முன்னாடி வந்து நின்னான். நான் கூட பயந்துட்டேன். எங்க தனியா இருக்கறதைப் பார்த்துட்டு வம்பு பண்ணத்தான் வந்தானோனு நினைத்தேன். கடைசியில எவ்வளவு பம்மு பம்மி என்னமா தழைந்து போய் என் முன்னாடி நடுங்கிய படி

‘மன்னிச்சிடுங்க! இனிமே நான் உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன். இன்னும் சொல்லப் போனா உங்க பக்கமே வரமாட்டேன். இந்தாங்க உங்க வீடியோ. என்கிட்ட வேற எந்த காப்பியும் இல்லனு’ சொன்னவன்

என் முகத்தைப் கூடப் பார்க்காம என் கிட்ட ஒரு சிப்பக் கொடுத்துட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போய்ட்டான். அவனைப் பார்த்தா நல்லா அடி வாங்கி இருக்கான்னு தெரியுது. அவன் நடையில கூட சிறு தடுமாற்றம் தெரியுமா?

அப்பாடா... எப்படியோ அவன் என் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லாம விலகினானே, அதுவே போதும்! இதெல்லாம் என் பாய் ஃபிரெண்ட் என் மேலுள்ள லவ்ல தான் அவனை அந்த பாடுபடுத்தி இவ்வளவு தூரம் அந்த வீடியோவைக் கொடுக்க வைத்து இருக்காங்க” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

ஆனால் சாராவுக்குத் தெரியுமே இதை கென்டிரிக் அவளுக்காகத் தான் செய்தான் என்று! அவன் செய்வான் என்று தெரியும். ஆனால் இன்றே செய்தது தான் சாராவுக்குப் பிடிபடவில்லை. இவ்வளவு நேரம் கென்டிரிக் மீதிருந்த சுணக்கங்கள் விலகி மறுபடியும் மனதுக்குள் சந்தோஷம் குடி கொள்ள ஆரம்பித்தது.

சாரா கேட்டுக் கொண்டதற்காக மாயாவின் பிரச்சினையைத் தீர்த்த கென்டிரிக், அதை அவளிடம் சொல்லுவான் என்று ஒவ்வொரு நொடியும் அவன் அழைப்புக்காக எதிர் பார்த்துக் காத்திருக்க, அவனோ அவளை அழைக்கவேயில்லை.

‘ஏன், எல்லாத்தையும் முடிச்சிட்டேன் இனி அவனால எந்த தொந்தரவும் இருக்காதுன்னு சார் ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டாராம்மா?!’ என்று மனதுக்குள் பொருமியவள் பின் அவனுக்கு நேரம் இருக்காது என்று அவளே சமாதானம் ஆகிப் போனாள்.

இரவு வரை தான் அந்த சமாதானம் கூட நீடித்தது. இரவு பத்து வரை பொறுத்துப் பார்த்து கோபத்தில் அவளே அவனை அழைத்து சண்டை இட நினைத்தவள் அப்படி சண்டையிட்டால் எங்கே அவன் கோபித்துக் கொண்டு இருக்கிற சுமூகமான உறவும் கெட்டுவிடுமோ என்று யோசித்தவள் அவனுக்கு வாட்ஸப்பில் வெறும் தாங்க்ஸ் என்று இவள் மெசேஜ் மட்டும் அனுப்ப, ஆனால் அவனோ ஆன்லைனில் இல்லை.

அவன் எப்போது ஆன்லைனுக்கு வருவான் என்று இவள் எதிர்பார்த்துக் காத்திருக்க பதின்னொன்றரை மணிக்கு வந்தவனோ அவள் மெசேஜ்ஜைப் பார்த்து விட்டு வெறுமனே கேள்விக் குறி போட்டனுப்ப, அதைப் பார்த்தவள்

‘ஏன் சார்க்கு எதுக்குன்னு கூட கேட்க முடியாதாமா? அது என்ன கேள்விக் குறி?’ என்று கடுப்பானவள் அவனுக்குத் திரும்ப பதில் கொடுக்காமல் இருந்தாள்.

அப்படி இருப்பதை பார்த்து ‘அவனே கால் பண்ணுவான் இல்லனா அட்லீஸ்ட் மெசேஜ்லயாவது என்னன்னு கேட்பான்’ என்ற முடிவுடன் இவள் அமைதி காக்க அவனோ அரைமணிநேரம் ஆன்லைனில் இருந்து விட்டு எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் ஆப் லைனுக்குச் சென்று விட அதை பார்த்தவளின் மனதிற்குள் இருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் விலகி வெறுமை மட்டுமே வர அதனால் அவளையும் மீறி அவளுக்கு கண் கலங்கியது.

பின் எந்த ஒரு எதிர்பார்ப்பும் வேண்டாம் என்று நினைத்தவள் உடனே ‘மாயா விஷயமா முடிச்சதுக்கு. அவன் அந்த மெம்மரி சிப்ப எடுத்துட்டு வந்து கொடுத்துட்டான். அதுக்குத் தான் தாங்க்ஸ்’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பியவள் பிறகு தூங்கி விட
மறுநாள் இரவு ஆன்லைனில் வந்தவனோ அவள் அனுப்பியதைப் பார்த்து விட்டு ம்ம்ம்... என்ற பதில் மெசேஜ்ஜை அனுப்ப அதை பார்த்தவளோ இது என்ன பதில் என்று குழம்பித் தான் போனாள். அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

‘அவனே தானே வந்து கல்யாணம் பண்ணிக்கிறனு கேட்டான்? பிறகு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்?’ என்று யோசித்துத் தவித்துத் தான் போனாள் சாரா.

இப்படியே இருவருக்குள்ளும் எந்த சம்பந்தமும் இல்லாமல் சென்று மறைய திடீரென்று ஒரு நாள் இரவு கென்டிரிக்கிடமிருந்து வாட்ஸப்பில் அவளுக்கு மெசேஜ் வந்தது. ஒருவாரம் கழித்து அவனிடமிருந்து வரும் மெசேஜ் என்பதால் இவளோ ஆசையுடனும் பரபரப்புடன் ஓபன் செய்து பார்க்க,

‘வரும் சண்டே மாலை ஆறு மணிக்கு வெளியே போகணும். ரெடியா இரு உங்க ஊர் பொண்ணா இரு’ அவ்வளவு தான் அந்த மெசேஜ்ஜில் இருந்தது.

அதைப் படித்தவள் ‘பெரிய ஆபிசர்! தன் கீழே வேலை செய்றவங்களுக்கு ஆர்டர் போடுறாரு!’ என்று நினைத்தவள் ‘அது என்ன எங்க ஊர் பொண்ணு மாதிரினு?’ இவள் மெசேஜ் அனுப்ப

அதற்கு உடனே அவனிடமிருந்து வந்ததோ ஒரு பிக்சர் மெசேஜ். ‘நான் கேட்ட கேள்விக்கும் இந்த சல்வார் பிக்சருக்கும் என்ன சம்பந்தம்?’ என்று அவள் யோசித்து அந்த படத்தை மறுபடியும் பார்க்கவும் தான் தெரிந்தது,

‘இப்படி ஒரு சல்வார் போட்டுட்டு வா என்பதைத் தான் சார் சிம்பாலிக்கா சொல்றாரு என்று. அடப் பாவி உர்ராங்குட்டான்! இதைக் கூட நேரடியா சொல்ல மாட்டியா? இப்படி நீ ஒவ்வொரு முறையும் ஸ்டிக்கரும் பிக்சரும் போட்டு அனுப்பறத நான் புரிந்து நடந்துக்கிறதுக்குள்ள என் ஆயுசு முடிஞ்சிடும் போல இருக்கே!’ என்று நினைத்தவள் பதிலுக்கு அவனுக்கு ‘சரி’ என்று பதில் மெசேஜ் அனுப்ப ஜயோ பரிதாபம் அவனோ அதற்குள் ஆப் லைன் போய் இருந்தான்.

எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் அவன் சொன்ன நாளும் வர, மிதமான ஆரஞ்சு கலரில் வெள்ளை நிறக் கற்கள் பதித்து வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சல்வாரை அணிந்தவள் காதுக்கும் கழுத்துக்கும் அதற்கு மேட்ச்சாக அதே வெள்ளை நிறக் கற்கள் பதித்த அணிகலன்களும் வலது கை முழுக்க வெள்ளை நிற மெட்டல் வளையல்களும் போட்டுக்கொண்டாள்.

லூஸ் ஹேர் சின்ன ஸ்டிக்கர் பொட்டு அதற்கு மேல் ஒரு மெல்லிய சந்தனக் கீற்று. துப்பட்டாவைப் பின் பண்ணாமல் ஒரு பக்கத் தோளில் தவழ விட்ட படித் தன் அலங்காரத்தை முடித்தவள் கண்ணாடியில் பார்க்க, அவன் எதிர்பார்த்த படி ஒரு பக்கா தமிழ் பெண்ணாக இருப்பதில் திருப்தியுற்றவள் அவன் வரவுக்காக வெளியிலேயே வாசலில் அவள் காத்துக் கொண்டிருக்க

அவன் சொன்ன மாதிரியே ஆறு மணிக்கு வந்து தன் காரை அவள் முன் அவன் நிறுத்த அதில் ஏறி அமர்ந்தவள், தான் இப்போது எங்கே போகப் போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை.

‘வாய் திறந்து தன்னை அவன் பாராட்டவில்லை என்றாலும் கண்ணாலாவது ஒரு மெச்சுதல் பார்வை பார்க்க மாட்டானா?’ என்று நினைத்து இவள் அடிக்கடி தன் விழிகளால் அவனை ஓரப் பார்வை பார்த்து வர அவனோ அவளை முழுதாகப் பார்த்தானா என்பதே சந்தேகம் தான். வழி முழுக்க எந்தவொரு பேச்சுவார்த்தையின்றிப் போனது.

ஓர் அப்பார்ட்மெண்ட் முன்பு காரை நிறுத்தி விட்டு அவளை இறங்கச் சொல்லியவன் காரை பார்க் செய்துவிட்டு வரும் போது அவன் கையில் ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருக்க, அதைப் பார்த்தவள்

‘ஓ.. ஏதோ பங்ஷன் போல! அப்பாடா... அப்ப இவர் சொல்லாமலே கொஞ்சமாவது நல்லாவே டிரஸ் பண்ணோம்!’ என்று நினைத்தவள் அவனுடன் இணைந்தே நடந்தாள். அந்த பிளாட்டில் பதிமூன்றாவது மாடியில் நடுத்தரக் குடும்பங்கள் பல இருக்க, அதில் ஒரு வீட்டின் முன் நின்று அவன் தன் காலணிகளைக் கழட்டவும் இவளும் சென்று கழட்டும் நேரம் அவளுடைய துப்பட்டா கிரில் கேட்டில் மாட்டிக்கொள்ள, அதைக் கிழியாத அளவுக்குப் பார்த்து எடுத்தவள் திரும்பிப் பக்கத்தில் அவனைப் பார்க்க, பார்த்தவள் அப்படியே விக்கித்து நின்றுவிட்டாள் சாரா.

ஏனெனில் பக்கத்தில் நின்றிருந்த கென்டிரிக் அங்கில்லை. வாசலில் இருந்த படியே அவள் விழிகளைச் சுழற்றி அவன் எங்கே என்று அந்த வீட்டினுள் அவனைத் தேட, அவனோ ஸோஃபாவில் அமர்ந்த படி அங்கிருந்த இரண்டு பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.

‘ரொம்பவும் தெரிந்தவர்கள் போல, அதான் இவ்வளவு உரிமையா போய் பேசிட்டு இருக்கான்! சரி, இருக்கட்டும் ஆனால் என்னைப் பத்தி ஏன் அவன் யோசிக்கவே இல்ல?’ என்று வாசலில் இருந்த படியே அவள் மனதால் நொந்து கொண்டிருக்கவும்

“வாங்க சாரா! ஏன் வெளியவே நிக்கிறிங்க?” என்று இவளைக் கேட்ட படி கையில் சில பைகளுடன் வெளியிலிருந்து இவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஸ்டீவ். அவனைப் பார்த்தவள் தன்னுடைய சீப் என்ற முறையில் அப்போதும் அவள் தயங்கி நிற்கவும்,
“என் வீடு தாங்க! அதனால தயங்காம உள்ள வாங்க. என் மூன்றாவது மகன் மேத்தியூஸ்க்கு இன்று முதல் வருட பிறந்த நாள். அதான் கென்டிரிக் உங்கள இங்க கூட்டிட்டி வந்திருக்கான். அதனால தயங்காம உள்ளே வாங்க”

என்று அவளை அழைத்தவன் வீட்டின் உள்ளே சென்று

“என்ன டா, சாரா கிட்ட எதுவும் சொல்லலையா? அப்ப கூட இருந்து கூட்டிட்டி இல்ல வந்திருக்கணும்? அவங்களை விட்டுட்டு நீ பாட்டுக்கு வேக வேகமா இங்க வந்து உட்கார்ந்துட்டியா?” என்று அங்கு அமர்ந்திருந்த கென்டிரிக்கை அவன் கடிக்கவும்

“உன்னை கூட்டிட்டு வந்த நான் இங்க உள்ள வந்து உட்கார்ந்து இருக்கனா அப்ப நீயும் என் கூடவே வந்திருக்கணும் இல்ல? எதுக்கு இப்போ நீ இந்த சீன் போடற?” என்று கென்டிரிக் அங்கு இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் அவளைத் தமிழில் சாட

‘கூட்டிட்டு வந்த இவருக்கு நான் வந்தனானு பார்க்கத் தெரியாதாம், ஆனா நான் பார்க்கணுமாம்! பேசாம இப்படியே உள்ள போகாம நம்ம வீட்டுக்குப் போய்டுவோமா?’ என்று நினைத்தவள் பின் என்ன நினைத்தாளோ உள்ளே சென்று விட்டாள் சாரா.

அதற்குள் உள்ளிருந்து தன் மனைவியை அழைத்து வந்த ஸ்டீவ்
“இவ ஜோஸ்லின், என் மனைவி! இந்த குட்டி பாய்க்கு தான் இன்று பர்த் டே” என்றவன் தன் கையிலிருந்த மேத்தியூசை அவளிடம் கொடுக்க

குழந்தையை வாங்கியவள் ‘இவங்க எல்லார் கிட்டயும் கென்டிரிக் என்ன சொல்லி வச்சிருக்காருனு தெரியலையே?!’ என்று அவள் தயக்கத்துடனே தான் இருந்தாள்.

ஆனால் பாப் கட்டிங்கோடு ஸ்கர்ட் டாப் என்று அந்த நாட்டு பாணியிலிருந்த ஜோஸ்லின் அவளிடம் எந்த தயக்கமும் இல்லமல் பழக, பின் சாராவும் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தாள்.

அதன் பிறகு சற்று நேரத்திற்கெல்லாம் ஜோஸ்லினின் அண்ணா தங்கை தம்பி என்று அவர்கள் குடும்பமும் ஸ்டீவ்வின் நண்பர்கள் என்று ஒரு சிலரும் வந்து விட, அன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சி ஆரம்பமானது.

அங்கங்கே ஆண் பெண் என்று தனக்குத் தெரிந்தவர்கள் ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் ஒரு பக்கம் ஆட்டம் போட சாரா மட்டும் தனித்திருந்தாள்.

அவளை அழைத்து வந்த கென்டிரிக்கை அங்கு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அனைவருடனும் பட்டும் படாமலும் பேசியவன் ஸ்டீவ்வின் தாய் தந்தையருடன் மரியாதையாக நடந்து கொண்டவன் இறுதியில் அன்றைய விழாவின் நாயகனான மேத்தியூஸ்ஸிடம் மட்டும் அதிக அன்பு பாசத்துடன் இருந்தான்.

கென்டிரிக் மட்டும் இல்லை. அந்த குழந்தையும் அப்படித் தான்! அவனைப் பார்க்காத வரை சமர்த்தாக எல்லோரிடமும் சுற்றி வந்தவனோ அவனைப் பார்த்த பிறகு கென்டிரிக்கிடம் தாவியவன் பின் அவனை விட்டு இறங்கவே இல்லை.

அவன் தலை முடியையும் மீசையையும் தன் கரத்தால் பிடித்து இழுப்பதும் தன் பால் பற்களால் அவன் மூக்கையும் கன்னத்தையும் எச்சில் பட கடிப்பதும் பேச்சு முழுமையாக வராததால் அவனிடம் ஆ... ஊ... என்று கதை பேசுவதுமாக இருந்தான் மேத்தியூஸ்.

அவன் செய்த சேட்டைகளைப் பார்த்து அவனைத் தூக்க வந்த அவன் தாயிடம் கூட போகாமல் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணவும் அதை பார்த்து கென்டிரிக்கே தூக்க வேண்டாம் என்று அவர்களைத் தடுத்து விட அதனால் அவனிடமிருந்து கொண்டே கேக்கை வெட்டினான் மேத்தியூஸ்.

அதற்கு ஸ்டீவ்வோ அவன் மனைவியோ எந்த ஒரு எதிர்ப்பும் முகச்சுளிப்பும் காட்டவில்லை. எங்கள் எல்லோரையும் விட கென்டிரிக்குக்குத் தான் முழு உரிமை என்பது போல் அவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள்.

அங்கிருந்தவர்களும் அப்படியே இருக்க அதில் குஷியான மேத்தியூஸ் இன்னும் கென்டிரிக்கிடம் சலுகையுடன் ஆர்ப்பாட்டம் பண்ண அதில் தன் நிலை மறந்து வாய் விட்டுச் சிரித்து குழந்தையுடன் ஐக்கியமானான் கென்டிரிக்.

அவன் அந்த குழந்தையிடம் பழகுவதையும் இப்படி சிரித்த முகமாக இருப்பதையும் பார்த்த சாராவுக்கோ உள்ளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் ஏற்படவும் எங்கே தன்னை மீறி எதையாவது வெளிப்படுத்தி விடுவோமோ என்று பயந்தவள் அந்தக் கூட்டதை விட்டு சற்று விலகி நின்று கொண்டாள் சாரா.

அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்ததா இல்லை அந்த குழந்தையிடம் மட்டும் அப்படி என்ன ஒட்டுதல் என்ற எண்ணமா, காரிலும் சரி இங்கு அழைத்து வந்ததிலிருந்து தன்னிடம் பேசாததா இல்லை இது அனைத்துமே அவளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா எதுவோ ஒன்று அவளைக் குழப்ப

அங்கு விழாவில் வைத்திருந்த டிரிங்க்ஸ்யை கூல் டிரிங்ஸ் என்று நினைத்து ஒன்றுக்கு இரண்டு கிளாஸாகக் குடித்தவள் குடித்து பழக்கம் இல்லாததால் நிதானம் இல்லாமல் தடுமாற அதை அங்கிருந்தவர்கள் யாரும் அறிவதற்கு முன்பே அவளை அறிந்து கொண்டான் கென்டிரிக்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN