காதல்பனி 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 9

ஸ்டீவ்விடம் மட்டும் சில வார்த்தைகளைச் சொன்னவன் யாருக்கும் எந்த உறுத்தலும் இல்லாமல் அவளை வெளியே அழைத்து வர.

அதுவரை பேசாமல் இருந்தவன் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தவுடன்

“குடிகாரி, நீ எல்லாம் ஒரு தமிழ்ப் பொண்ணா?” என்று கேட்க

இவ்வளவு நேரம் அவனையே பிடிமானமாகக் கொண்டிருந்தவளோ இப்போது அவன் அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்திக் கேள்வி கேட்கவும், எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் தடுமாற அவளை ஒரு கையால் பிடித்து நிறுத்தியவனோ மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க

“யார் சொன்னா நான் தமிழ் பொண்ணுன்னு? நான் ஒண்ணும் தமிழ் பொண்ணு இல்ல! என் அப்பா பேரு ஒண்ணும் தமிழ் இல்ல!” என்று சற்று தள்ளாடிய படியே பதில் சொன்னவளோ பிறகு கண்ணைச் சுருக்கிக் கொண்டு தன் வலது கையின் ஆள் காட்டி விரலால் மோவாயைத் தட்டிய படி யோசித்தவள் பின் கண்களைத் திறந்து உதட்டைப் பிதுக்கி

“என்ன பேருன்னு மறந்து போச்சே!” என்று அவள் சொல்ல

“ஆமாம்… பின்ன? இந்த குடி குடிச்சா எல்லாம் மறந்து தான் போகும்” என்று கென்டிரிக் கடுப்பாக

“ஹாங்.... குடியா? நானா? அது என் குடும்பத்துக்கே இல்லையே! பிறகு நான் மட்டும் எப்படி குடிப்பேன்?” என்று அவள் அதிகாரத் தோரணையுடன் கேள்வி கேட்கவும் அதைக் கேட்டு அவன் முறைக்க

“ஹி... ஹி... ஹி... நெசமா தான் நான் குடிக்கலங்க. வேணும்னா நான் ஊதறேன் நீங்களே பாருங்களேன்” என்றவள் அதைச் சொன்னது மட்டுமில்லாமல் ஓர் தள்ளாட்டளுடனே அவனை நெருங்கி முகத்தில் ஊதவும்

“ஏய்…” என்று அவளை உலுக்கியவன்

“என்ன இப்படி செய்ற? நான் யார் தெரியுமா?” என்று கேட்டவன் பின் “வா…” என்று அவளைப் பிடித்து இழுக்கவும்

அவன் இழுப்புக்குச் செல்லாமல் அதே இடத்திலேயே நின்றவள் மறுபடியும் ஏதோ யோசிப்பது போல் விரலால் தன் நெற்றிப் பொட்டைத் தட்டிக் கொண்டவள் திடீர் என்று

“ஆஆஆ…ங் ஞாபகம் வந்துடுச்சி” என்க.

“என்னது?”

“நீங்க கேட்டதுக்குப் பதில்”

“அது தான் என்னனு கேட்டன்?” என்று அவன் பல்லைக் கடிக்கவும்

“அத தான சொல்ல வரேன் இருங்க… இருங்க...” என்றவள்

“நீங்க யாருனு எனக்குத் தெரியாது. என் அப்பா பெயர் மறந்து போச்சு. ஆனா நான் யார் தெரியுமா? தி வேர்ல்ட் ஃபேமஸ் போட்டோகிராஃபர் அஸ்வத் கென்டிரிக்கோட மனைவி!” அவளால் நிற்கக் கூட முடியாமல் தடுமாறியவள் அப்போதும் அன்று அவன் சொன்னது போலவே இன்று இவள் ஸ்டைலாக நின்று கொண்டு தன் இடது கையின் ஆள்காட்டி விரலை அவன் செய்தது போல் தன் நெஞ்சில் வைத்துச் சொன்னவள் பேலன்ஸ் தவறி கீழே விழப் போக,

“ஏய்..” என்ற கூவலுடன் கென்டிரிக் பிடிக்க வர அதற்குள் தொப்பென தரையில் அமர்ந்தே விட்டாள் சாரா.

“இதுவரை உன்னை வெளியே கூட்டிட்டு வந்தது இல்லையேன்ற ஒரே காரணத்திற்காக இன்று கூட்டிட்டு வந்ததுக்காகத் தான் நீ என்ன இந்த பாடுபடுத்துறியா?” என்று கென்டிரிக் கடிந்து கொள்ள

அதற்கு அவள் ‘ம்ம்ம்...’ என்றும் ‘ம்கும்’ என்று இரண்டு விதமாகவும் தலையை ஆட்டவும்

“இப்போ எதுக்கு இரண்டு பக்கமும் தலைய ஆட்டற?”

“இது நீங்க என்ன முதல் முறையா கூட்டிட்டு வரேனு சொன்னதுக்கு” என்று மேலும் கீழுமாக தலை அசைத்துச் சொன்னவள்

“இது நான் ஒன்னும் உங்களைப் பாடுபடுத்தலை” என்பதற்கு என்றவள் மறுபடியும் நிதானம் இல்லாமல் தொங்கிப் போயிருந்த தன் தலையை இட வலமாக ஆட்டிச் சொல்லவும்

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனோ அசைந்த படியே இருந்த அவள் தலையைத் தன் இரு கைகளால் தாங்கிப் பிடித்து நிறுத்திய படி

“சரி சரி இப்போ கிளம்பு” என்று அவள் கையைப் பிடித்து தூக்கவும் உடனே அவன் கையைத் தட்டி விட்டவளோ மறுபடியும் தலையை இட வலமாக அசைத்து அவன் முகம் பார்த்து மறுக்கவும்

“ஏன் இப்போ என்ன ஆச்சு?”

“என்ன தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வைங்க” என்று குழைவாகச் சொன்னவள் அவன் முன் சிறு குழந்தையாகத் தன் கைகள் இரண்டையும் தூக்கிக் காட்டவும்

அவள் செயலில் ஒரு வினாடி திகைத்தவனோ மறுநொடியே

“என்னால முடியாது! இப்போ எழுந்து வராம இதே மாதிரி உளறிட்டு இருந்தா உன்னை இங்கேயே விட்டுட்டு போய்டுவன்” என்று அவன் மிரட்ட

“போங்க, எனக்கென்ன? நான் இங்கேயே படுத்துக்கறேன். பாதுகாப்புக்குத் தான் ஸ்டீவ் அண்ணா இருக்காரே” என்றவள் சொன்னது போல் தரையிலேயே தலை சாய்த்துப் படுத்து விட

“ஏய்.. ஏய்.. என்ன பண்ற லூசே?” என்று கேட்ட படி தூக்கி உட்கார வைத்து அவளை உலுக்கியவன்

“என்னது ஸ்டீவ் அண்ணணா?” என்று வியந்தவன்

“என்ன விளையாடறியா? நான் எப்படி உன்னைத் தூக்க முடியும்? இந்த ஊருக்கு வேணா அது சரிப்பட்டு வரலாம். ஆனா உங்க ஊர் படி தப்பு. சோ வம்பு பண்ணாம கிளம்பு” என்றவன் இன்னும் அவளை சற்று நெருங்கி அமர்ந்தவனோ அவளை மேலே எழுப்ப நினைக்க

அவன் சொன்ன பதிலில் அந்த நிதானம் இல்லாத நேரத்திலும் அவனைப் பார்த்து தன் கண்களைப் பட பட என கொட்டியவளோ

“ஹய்.. யார் என்ன சொல்றதுக்கு இருக்கு? மனைவியை கணவன் தூக்காம வேற யார் தூக்குவாங்களாம்?” என்றவள் தன் வலது கையின் ஆள் காட்டி விரலை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தியவள்

“நீங்க என் புருஷன் நான் உங்க பொண்டாட்டி” என்று ஒரு வித போதையுடன் உளறியவள் உடனே அதே கையால் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தவளோ அவன் நெஞ்சிலேயே தன் கன்னத்தை வைத்து அழுத்தியவள்

“ப்ளீஸ் மச்சான்..” என்று அவள் கெஞ்சலுடன் கொஞ்சவும் அவன் உடலில் திடீர் என்று ஓர் அதிர்வு! அதில் அவன் சிலையென அமர்ந்து விட அவளோ மறுபடியும்

“மச்சான் தூக்குங்க” என்றவள் பூனைக் குட்டியாய் தன் கன்னத்தை அவன் மார்பின் மேலுள்ள சட்டையில் உரச

அவளின் கெஞ்சலோ உரசலோ அவள் அழைத்த மச்சான் என்ற அழைப்போ எதுவோ அவனை அவளைத் தூக்கச் சொல்லி உந்த எந்த வித மறு பேச்சும் இல்லாமல் அவளைக் குழந்தை என தன் கைகளில் ஏந்தினான் அஷ்வத்.

அதில் குஷியானவளோ தன் இடது கையால் அவன் அணிந்திருந்த காலர் இல்லாத டி ஷர்ட்டின் கழுத்துப் பகுதியை சற்றென பற்றி தன் முகத்தை அவன் கழுத்து வளைவில் புதைக்க, அவள் செயலில் ஒரு வினாடி விதிர் விதிர்த்து நின்றவனோ பின் அந்த இடத்திலிருந்து கார் வரை உள்ள ஐந்து அடியையும் மிக மிக நிதானமாகக் கடந்தான் அவன்.

அவளைக் காரில் அமரவைத்த பிறகும் விலக முடியாமல் அவளை அணைத்த படி சற்று நேரம் இருந்தவனோ பின் ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி வந்து காரை எடுத்தாவன்.

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தி

“இறங்கு சாரா” என்று சொல்ல

அவளோ அவன் அணைத்த மயக்கத்திலே இறங்காமல் அப்படியே அமர்ந்திருக்க

“என்ன சாரா, இடம் வந்துடிச்சி பாரு இறங்கு” என்று அவன் சற்று குரலை உயர்த்தவும்

அதில் விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள் இப்போதும் முன்பு போல் முடியாது என்பதாக தலை அசைக்கவும், அவளின் எண்ணத்தை அறிந்தவனோ நமட்டு சிரிப்பில் உதட்டோரம் சுழிய

“என்ன இங்கயிருந்து உன்னை தூக்கிட்டு போய் உள்ளே விடணுமா?” என்று அவன் இலகுவாகக் கேட்க


“அதெல்லாம் இல்லை எனக்கு வேற ஒண்ணு வேணும்” என்றவள் இமைகளைத் தாழ்த்தி தன் கை விரல்களைப் பார்த்துக் கொண்டே

“எனக்கு ஐ லவ் யு னு சொல்லனும்! அதுவும் சாதாரணமா இல்ல இறுக்கி அணைத்து ஒரு உம்மாவோட சொல்லனும்” என்றாள் காதல் வழியும் குரலில்.

அவள் மறுபடியும் தூக்கச் சொல்வாள் என்று அவன் நினைத்திருந்தான். அதனால் இது வரை ஒரு இலகுத் தன்மையுடன் இருந்தவனோ அவள் ஏதோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டது போல் கோபத்தில் முகம் கடினமுற, தன் முகத்தை அவளிடமிருந்து திருப்பி நேர் கொண்ட பார்வை பார்த்தவனோ

“அதெல்லாம் என்னால சொல்ல முடியாது” என்றான் குரலில் சற்று கடுமையைக் காட்டி ஓர் அலட்சியத்துடன்.

அவன் முகத்தைப் பார்க்காமலே எப்போதும் போல் அவன் குரலில் உள்ள கடுமையை அலட்சியம் செய்தவளிடம் விளையாட்டுத் தனம் மேலும் தலை தூக்க. இப்போது வரை அவள் இழுத்த இழுப்பிற்குத் தான் அவன் அசைகிறான் என்பதை அந்த மயக்க நிலையிலும் உணர்ந்து கொண்டவள். இப்போது தான் பிடித்த பிடிவாதம் தான் ஜெயிக்கிறது என்று தெளிவுற்றவள்

“இப்போ நான் சொன்னதை செய்யலனா நான் காரை விட்டு இறங்கவே மாட்டேன் இப்படியே தான் உட்கார்ந்து இருப்பேன்” என்றவள் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட

இதைக் கேட்டு ஏற்கனவே இருந்த கோபம் அவனுக்கு தலைக்கு ஏற முகம் ரத்தமென சிவக்க

“ஓ... அப்படியா? அப்ப எனக்கும் என்ன செய்யணும்னு தெரியும்! சரி, நானும் இந்த இடத்த விட்டுப் போகல. அதுவும் நைட் மட்டும் தான். விடிஞ்சதும் டிரைவர வேற ஒரு கார் எடுத்து வரச் சொல்லி நான் போய்க்கிறேன். இந்த கார் இங்கேயே தான் இருக்கும். நீ எவ்வளவு நேரம் வேணாலும் இருந்துக்கோ. இப்போ நான் தூங்கப் போறேன். சோ டிஸ்டர்ப் பண்ணாத” என்றவன் சீட்டின் லிவரைப் பின் புறமாக இழுத்து விட்டு கைகளைக் கட்டியபடி அதில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள.

அவன் செயலைப் பார்த்தவள் ‘ஓ… உர்ராங்குட்டான்! உனக்கு இவ்வளவு வீம்பா? அதையும் தான் பார்க்கறேன்’ என்று நினைத்தவள்

‘போகணும்னா சார் இப்பவே காரை வரவைத்து போக வேண்டியது தானே? அது என்ன காலையில? ஏன்னா நைட் முழுக்க சார் எனக்கு பாதுகாப்புக்கு இருக்குறாராம்! உர்ராங்குட்டான்... இப்பவும் வாயத் திறந்து காதலை சொல்ல மாட்டாராம், ஆனா பாதுகாப்பா மட்டும் இருப்பாராம்! உங்க கிட்டயிருந்து இந்த அன்பு பாதுகாப்பை விட உங்க காதல் தானே எனக்கு வேணும்!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் உடனே தன் சீட் பெல்டைக் கழட்டிய படி

“ம்ம்ம்… நீங்க இங்கே தூங்கறதால எனக்கு ஒண்ணும் இந்த கார் வேண்டாம்” என்றவள் டோர் லாக்கில் கை வைக்கும் நேரம் கண் விழித்து அவளைப் பார்த்தவன்

“ம்ம்ம்… இப்ப தான் குட் கேர்ள்! அப்ப வீட்டுக்குள்ள போய் சமத்தா படுத்து தூங்கு” என்று அவன் சொல்ல

கதவைத் திறந்து இடது காலைக் கீழே வைத்தவள் திரும்பி அவனைப் பார்த்து

“எனக்கு காரும் வேண்டாம் வீடும் வேண்டாம் ரோடே போதும்! க்கும்…” என்று தன் உதட்டை ஒரு பக்கம் வளைத்து அவனுக்குப் பழிப்புக் காட்டியவள் தலை சிலுப்பலுடன் காரை விட்டு இறங்க

‘அடிப்பாவி... இவ்வளவு நேரம் நிதானமே இல்லாம மச்சான் மச்சான்னு என் மேல அப்படி சாய்ந்தா. இப்போ என்னனா எனக்கே பழிப்பு காட்டிட்டு தலைய வேற சிலுப்பிட்டு இறங்கறா! அப்ப இவ்வளவு நேரம் நடிச்சாளா இல்லனா நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுர அன்னியனா இவ?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே

ஒரு தள்ளாடலுடன் காரை விட்டு இறங்கியவள் கார் கதவில் சாய்ந்த படியே தன் தடுமாற்றத்தைச் சமன் செய்தவள் தான் சொன்னது போலவே தன் வேக நடையுடன் காரின் எதிர் திசையில் நடக்க ஆரம்பிக்க

“அவள் வேகத்தைப் பார்த்தவனோ நிச்சயம் இவ கிட்ட அன்னியன் தான் இருக்கான்!” என்று வாய் விட்டுச் சொல்லியவனோ காரை விட்டு இறங்கி அதை லாக் செய்து விட்டு அவள் பின்னாலேயே போனவன்

“ஏய்… ஏய்….” என்று இவன் கூப்பிட அப்போதும் அவள் திரும்பிப் பார்க்காமல் போய் கொண்டிருக்க, அதில் கடுப்பானவன்

“பிசாசே! நடு ராத்திரியில நல்லா பிசாசு மாதிரியே டிரஸ் பண்ணிகிட்டு உலாவரா பாரு!” என்று வாய் விட்டு புலம்பியவனோ அவள் நடக்கும் போது அவளிடமிருந்து நழுவி கீழே விழுந்து கிடந்த துப்பட்டாவைக் குனிந்து எடுத்தவனோ கடுப்பில் நிமிர்ந்து

“நில்லுடி…. சாரா” என்று சொல்ல வந்தவனோ அந்த டி என்ற வார்த்தையை மென்று முழுங்கிய படி

“ஏய்…. சாரா!” என்று ஒரு அதட்டல் போட

அந்த குரலுக்குக் கட்டுப் பட்டு அதே இடத்திலேயே நின்றாளே தவிர அப்போதும் சாரா திரும்பி அவனைப் பார்க்கவில்லை.

தன் வேக நடையுடன் இரண்டே எட்டில் அவளை நெருங்கியவனோ

“ஏய் நடு ரோட்டுல இப்படி குடிச்சிட்டு திரிந்தா போலீஸ்காரன் பிடித்து உள்ளே வச்சிடுவான். ஒழுங்கா வீட்டுக்கு வா சாரா” என்று அவன் அவள் கையைப் பிடிக்க அவன் கையைத் தட்டி விட்டவளோ அவனை உறுத்து விழித்த படி

“என்ன எப்போ பாரு என்னய ஏய்… ஏய் னு கூப்பிட்டு இருக்க? அதே மாதிரி என் பெயர் சொல்லியும் கூப்பிடுறிங்க!” என்று அவள் அவனை அதட்ட

‘வேற எப்படி மா நான் உன்னை கூப்பிட?’ என்று அவன் தன் புருவம் உயர்த்தி கண்ணாலேயே வினவ, அவ்வளவு தான்! இவ்வளவு நேரம் அவளிடமிருந்த எஃகுத் தன்மை விலகி மறுபடியும் பூனைக் குட்டியாக அவன் மார்பில் சுருண்டவள் அவன் கண்ணாலேயே கேட்ட கேள்விக்குப் பதிலாக

“அம்மு சொல்லுங்க, செல்லம் சொல்லுங்க, பட்டுமா சொல்லுங்க, குட்டிமா சொல்லுங்க, கண்ணம்மா சொல்லுங்க, ராஜாத்தி இல்லனா ராசாத்தி சொல்லுங்க. முக்கியமா டி போட்டு கூப்பிடுங்க. இப்படி எவ்வளவோ செல்லப் பெயர் இருக்கே!” என்று குழைந்தவள்

“அப்படி இல்லனா உங்க ஊர் வழக்கப் படி டார்லிங் டியர்னு கூப்பிடுங்க” என்று அவள் கெஞ்ச

இவ்வளவு நேரம் விரைப்புடன் இருந்தவள் இப்போது மறுபடியும் தடுமாற்றத்துடன் அவன் தோளில் சாயவும் அவளை ஒரு கையால் அவளை அணைத்துப் பிடித்தவனோ

“ம்ம்.. கூப்பிடலாம் கூப்பிடலாம் பிறகு ஒரு நாள் நீ சொல்ற மாதிரி கூப்பிடலாம். இப்போ வா போகலாம்” என்றழைக்க

அவன் மார்பில் இருந்த படியே முகத்தை முடியாது என்பது போல் இட வலமாக ஆட்டியவள்

“ஒரு உம்மா இல்ல, ஐ லவ் யூ இல்ல, நான் கேட்ட செல்லப் பெயரும் இல்ல. பிறகு நான் எதுக்கு வரணும்? ஏன் மச்சான் நான் உங்க மனைவி தானே? அதுவும் காதல் மனைவி தானே? பிறகு ஏன்…” என்றவள் பாதியிலேயே தூக்கத்துக்கான கொட்டாவியை விட

“நீ இப்படி கேட்கும் போதே உனக்கு பதில் தெரியலையா? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு! அதுவும் இல்லாம இது ரோடு. இங்க வச்சி நீ இப்படி எல்லாம் வம்பு பண்ற” என்று அவன் நயமாக எடுத்துச் சொல்ல

“யோவ்… ரோஸ் மில்க்! இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல? நான் எங்கயா நடு ரோட்டுல கேட்டேன்? அழகா சமர்த்தா காருக்குள்ள இல்ல கேட்டேன். அதுவும் இல்லாமல் நீங்க தான நான் உங்க மனைவி நீங்க என் கணவன்னு எல்லாம் அன்னைக்கு டயலாக் அடிச்சிங்க” என்றவள் பொறுமை இழந்த ஓர் வேகமூச்சுடன் நிமிர்ந்து அவன் சட்டையை உலுக்க, உடனே அவள் கையைப் இறுக்கப் பற்றியவன்

“சரி சரி நான் தான் மறந்துட்டேன். இப்போ வா போகலாம்” என்றவன் அவளை இழுத்துச் செல்ல

“ஏய்.. ஏய்.. ரோஸ் மில்க் என் கையை விடு நான் வரல. ப்ச்ச் உஉம்.. நான் வரல” என்றவளை எதுக்கும் அசராமல் அவன் இழுத்துச் செல்லவும்

“ஐயோ மச்சான்! என்ன எங்க கூட்டிப் போறிங்க?” என்று உதடு பிதுக்கிக் கேட்கவும் அவள் வீட்டு வாசல் வரவும் சரியாக இருக்க, இடது கையால் அவளை அணைத்தவனோ தன் வலது கையால் காலிங் பெல்லை அழுத்த நினைத்து அவன் கையை உயர்த்தும் நேரம் சட்டென அவன் கையை மடக்கிப் பிடித்தவளோ அவனையும் இழுத்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட.

“நான் உள்ள போகல ரோஸ் மில்க். நீங்க வேற குடிச்சது மட்டுமில்லாமல் உங்க மேல எல்லாம் ஊத்திக்கிட்டீங்களா அதோட என்ன கட்டிப் பிடிச்சதால நான் தான் ஏதோ குடிச்ச மாதிரி என் மேல எல்லாம் ஒரே நாத்தம்.

இப்போ நான் உள்ள போனா என் ரூம்மெட்ஸ்ங்க ஏதோ நான் குடிச்சிட்டு வந்ததா நினைப்பாளுங்க. என்ன அசிங்கமா பார்ப்பாளுங்க. ஏன்னா அவளுங்க குடிச்சிட்டு வந்தா நான் அசிங்கமா திட்டுவேன். அதான் வேண்டாம்னு சொல்றேன்.

சோ நான் வெளில இங்கேயே உங்க மடில தலை வச்சிப் படுத்துக்கிறேன். நான் தூங்கின பிறகு என்னை இங்கேயே விட்டுட்டு நீங்க வேணா போங்க மச்சான்” என்றவள் அழகாக கையை காலை நீட்டி அவன் மடியில் தலை வைத்துப் படுத்து விட

முதலில் அவள் சொன்ன பொய்யில் திகைத்தவன் பின் அவள் கெஞ்சலுடன் மடியில் தலை சாய்க்கவும் அவனுக்கு அப்படியே உருகி விட

“சாரா வெளில படுக்காத குளிரும். எழுந்திரு என் வீட்டுக்குப் போகலாம். எழுந்திரு சாரா” என்றவன் அவள் தோளில் கை வைத்து உலுக்க, கண்களை மூடியிருந்த நிலையிலே அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்தவளோ

“இன்னும் என்ன மச்சான் சாரா போரான்னிட்டு” என்றவள் அவன் கையைத் தன் கழுத்துக்குக் கீழே வைத்துக் கொண்டு தூங்கி விட

“நீ எல்லாம் சொன்னா கேட்க மாட்ட. என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்” என்றவன்

“ரெண்டு கிளாஸ் குடிச்சதுக்கே என்னை இந்த பாடு படுத்துறியே? நீ மட்டும் ஒரு பாட்டில் குடிச்சி இருந்தா ஒரு வழி பண்ணி இருப்ப!” என்று வாய் விட்டு சலித்தவனோ அவளைத் தூக்கித் தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவன் நடக்க. அதில் தெளிந்தவளோ

“ஏய்.. ஏய்.. ரோஸ் மில்க்! என்னை எங்க கூட்டிட்டுப் போற?” என்று அவள் பழைய பல்லவியையே திரும்ப பாடிய படி அவன் முதுகைப் பூனைக் குட்டியாய் பிராண்ட.

அதற்குள் காரிடம் வந்தவனோ கார் கதவைத் திறந்து சீட்டில் அவளை அமர வைத்து

“பேசாம வா. என் வீட்டுக்குத் தான் கூட்டிட்டுப் போறேன்” என்று அவன் சொல்ல

“ஓ….. நம்ம வீட்டுக்கா?” என்றவள் அவன் சொன்ன படியே பேசாமல் அமைதியாகி விட, அவளுக்கு சீட் பெல்டைப் போட்டுவிட்டு மறுபுறம் வந்து காரை ஸ்டார்ட் செய்யும் நேரம் அவன் போட்டிருந்த பெல்டை அவள் கழட்டவும் அதைப் பார்த்தவனோ

“இப்போ ஏன் கழட்டற?” என்று உறும


“எனக்கு சீட் பெல்ட் எல்லாம் வேணாம் மச்சான். நான் உங்க கூட பக்கத்துல நெருங்கி உட்கார்றதுக்கு அது இடைஞ்சலா இருக்கும்” என்றவள் அவள் அமர்ந்திருந்த சீட்டின் நுனியில் சற்று தள்ளி வந்து அவனை ஒட்டினாற் போல அமர்ந்து அவன் இடது கையை எடுத்துத் தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு அவன் மார்பிலேயே தன் தலையை சாய்த்துக் கொள்ளவும்.

“இப்படி இருந்தா நான் எப்படி வண்டிய ஓட்டுறதாம்?”

“நீங்க ஒரு கையால வண்டிய ஓட்டுங்க மச்சான்” என்றவளோ இன்னும் அழுத்தமாக அவன் மீது ஒட்டிக் கொண்டாள்.

அவள் பிடிவாதத்தில் சிறிதே கோபம் எட்டிப் பார்த்தாலும் அதை விடுத்து ஒரு பெருமூச்சுடன் அவள் சொன்ன படியே செய்ய நினைத்து அவன் காரை ஸ்டார்ட் செய்யும் நேரம்

“ஆங்…. நிறுத்துங்க நிறுத்துங்க” என்று சாரா கூப்பாடு போட

“இப்போ என்ன?” என்றான் அஸ்வத் பல்லைக் கடித்துக் கொண்டு

“அது.. நான் கேட்டதை சொன்னதை எதையுமே நீங்க செய்யலையா, அது என் மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு மச்சான். அதான் உங்களுக்கு பதில் நானே…” என்று அவள் இழுக்கவும்

“நீயே…” என்று இவன் ஒரு மாதிரி குரலில் எடுத்துக் கொடுக்கவும்

“ஹி… ஹி… ஹி.. அதனால நான் என்ன சொல்லப் போறனா என்று அசடு வழிய ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ!” என்றவள் அவள் சொன்ன ஒவ்வொரு ஐ லவ் யூ க்கும் அவன் மார்பில் சாய்ந்து இருந்த படியே தன் இடது கையின் விரல்களை அவன் நெஞ்சில் வைத்து ஒவ்வொரு விரலாகப் பிரித்தெடுத்து தலையை ஆட்டிய படியே சொல்லி வந்தவள் கடைசியாக நான்காவது விரலைப் பிரிக்கும் போது மட்டும்

“ஐ லவ் அஸ்வத் மச்சான்” என்று அழுத்திச் சொன்னவள் ஐந்தாவது விரலைப் பிரித்து

“je t'aime” (ஐ லவ் யூ க்கு ஃபிரென்ச் வார்த்தை) என்று சொல்ல

இன்னேரம் வேறு ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் இப்படி ஒரு பெண் தன் உள்ளார்ந்த அன்புடன் தன் காதலைச் சொல்லிக் கேட்டிருந்தால் சந்தோஷத்தில் இறுக்கி அணைத்து அவளுக்கு முத்த மழை பொழிந்திருப்பான். ஆனால் இவனோ எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருக்க.

தான் அவனை அணைத்த படி இப்படி ஒரு வார்த்தையை சொன்னதில் கோபமுற்று அவன் எதுவும் பேசாததில் சற்றே தைரியம் வரப் பெற்றவள் அவன் மார்பிலிருந்து தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி

“அதேபோல நீங்க உம்மா கொடுக்கலைனா என்ன? நான் கொடுக்கறேன்” என்றவள் உதட்டைக் குவித்த படி அவன் கன்னத்தைக் குறி வைக்க அதை உணர்ந்தவனோ அவள் முத்தத்தைத் தவிர்க்க நினைத்து உடலில் ஒரு நடுக்கத்துடன் பட்டென அவன் தன் முகத்தை வலது புறமாகத் திருப்பிக் கொள்ளவும் அதே நேரம் அவன் காது மடலை ஒட்டினாற் போல்

“ப்பச்சக்” என்ற சத்தத்துடன் அவள் இதழ் அங்கு பதியவும் சரியாக இருக்க, உடல் விரைக்க முதல் முதலில் காதலோடு ஒரு பெண் தரும் முத்தத்தின் சுகத்தை அவன் கண்கள் மூடி அனுபவிக்க, அந்த நிலையில் அவனுக்கு வேர்வை கசிய அவள் இதழ் பதித்த இடத்தில் நீரின் பளபளப்பைப் பார்த்தவளோ அதை தன் எச்சில் என்று தவறாக யூகித்து

“ஐயோ! உம்மா கொடுக்கும் போது எச்சி பட்டுடிச்சா? அப்ப இருங்க துடைத்து விடுறேன்” என்றவள் அப்போது தான் தன் கைகள் எங்கே என்று தேட அவள் வலது கையோ அவனை அணைத்த படி நெருங்கி அமர்ந்ததில் அவன் முதுகுக்கும் சீட்டுக்கும் இடையில் சிக்கிக்கிக் கொண்டிருக்க, இடது கையோ அவள் ஒன்று இரண்டு ஐந்து என்று சொல்லி முடிக்கும் போதே அவன் தன் கையால் அதை சிறை பிடிக்கப் பட்டிருக்க அவைகளைப் பார்த்தவளோ

‘இப்போது இரண்டு கையும் இல்லாமல் எப்படி துடைப்பது?’ என்று யோசித்தவள் ‘சரி கை இல்லனா என்ன? நான் எப்படியாவது துடைத்தே தீருவேன்’ என்ற முடிவுக்கு வந்தவளோ சற்றே எம்பி தன் கன்னத்தையே துணியாக்கி அவள் எச்சில் பட்ட இடத்தைத் துடைக்க

அவள் துடைக்கிறேன் என்ற பெயரில் முகத்தை இப்படி அப்படி என்று அசைக்கவும் அவனுக்குள் நீருபூத்த நெருப்பாய் இருந்த உணர்ச்சிகளில் தன் வசம் இழந்தவனோ சட்டேன அவளை இறுக்க அணைத்து முகம் நிமிர்த்தி அவள் இதழ்களைச் சிறை செய்ய நினைத்து அவன் குனிய,

அவன் மீசையின் நுனி கூட அவள் மேல் உதட்டின் வரி வடிவத்தை தொட்டு விட அதே நேரம் அவளோ தன் காதலனின் முதல் முத்தத்தை அனுபவிக்க நினைத்து மயக்கத்துடனே தன் கண்களை அகல விரித்து வைத்த படி அவள் அவனையே பார்த்திருக்க,

அந்த விழி வீச்சில் தன் நிலை பெற்றவனோ ஒரு வேக மூச்சுடன் அவள் முகத்தைத் தன் மார்பில் வைத்து அழுத்தி தன் உதடுகள் இரண்டையும் அவள் உச்சந்தலையில் வைத்துப் புதைக்க முத்தம் இல்லாமல் இப்படி புதைத்ததே அவன் மனதுக்கு ஒரு வித அமைதியை தந்திருந்தது.

அவன் முத்தம் தராமல் தவிர்த்தது மட்டுமில்லாமல் மவுனமாய் அமர்ந்து இருக்கவும்

“நீங்க இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கிறதால தானே மச்சான் உம்மா கொடுக்கல? சரி சரி.. நாளைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடாம இருக்கும் போது உம்மா கொடுங்க” என்று அவள் குழந்தையாய் சொல்ல, அதைக் கேட்டவனின் உதட்டில் அவனையும் மீறி ஒரு மென் நகை படற

‘இவ சாப்பிட்டு என்ன சொல்றா பாரேன்’ என்று நினைத்தவன் சிறு குழந்தை என அவள் தலை முடியைக் கலைத்து விட்டவனோ என்னவென்று சொல்ல முடியாத ஒருவித மனநிலையுடன் அவளை அணைத்த படியே காரை ஓட்டி வந்து தன் வீட்டின் முன் நிறுத்தியவனோ அவளிடம் ஒரு கார்டை கொடுத்து

“இந்த கார்டை ஸ்வைப் பண்ணி இந்த ** நாலு டிஜிட் நம்பர பிரஸ் பண்ணா டோர் ஓப்பன் ஆகும். நீ உள்ள போ நான் காரை ஷெட்ல விட்டுட்டு வரேன்” என்று அவன் சொல்ல

“சரி” என்று சொல்லி அந்த கார்டை வாங்கியவளோ அவன் சொன்ன நம்பரை மனப்பாடம் செய்து கொண்டே இறங்கினாள் சாரா.

காரை ஒரு வட்டமடித்து பக்கவாட்டில் இருந்த ஷெட்டில் நிறுத்தி விட்டு அவன் வர, சாராவோ அவன் சொன்னதைச் செய்யாமல் வெளி வாசல் கதவருகிலேயே உட்கார்ந்த வாக்கிலே கதவில் சாய்ந்த படியே தூங்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்தவனோ அவளை நெருங்கி

“கார்டு எங்க சாரா? உன்னை உள்ளே தானே போகச் சொன்னேன் இங்க ஏன் தூங்கற?” என்று அவன் கேட்க

கார்ட் தன் கைப்பையில் பத்திரமாக இருப்பதாகக் காட்டியவள்

“நாம உள்ள போக வேணாம் மச்சான். ரெண்டு பேரும் இங்க வெளியவே தூங்குவோம்” என்றவள் அவனும் உட்கார்ந்து தூங்க சற்றுத் தள்ளி அமர்ந்து இடம் கொடுக்க

“ஆரம்பிச்சிட்டியா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரோட்டுல என்னமோ போருக்கு நடந்து போற மாதிரி நடந்து போன! இப்ப நீயா உள்ளே நடந்து வர்றதுக்கு என்ன?”

“நான் வர மாட்டேனு சொல்லல, வரேன். ஆனா முதல் முறையா உங்க மனைவி உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன். நாள் கிழமை நட்சத்திரம்னு இப்படி எதுவும் பார்க்கலைனாலும் பரவாயில்லை. இப்படி நடுராத்திரியிலா வருவாங்க?

அதிலும் நான் இப்போ என் வலது கால வச்சி உள்ள போகணும். நீங்க வேற குடிச்சிட்டு என்ன கட்டிப் பிடிச்சதால என் மேல எல்லாம் ஒரே நாற்றம். அதனால நான் வரலை இங்கேயே படுத்துக்கிறேன். உங்களுக்கு குளிருதுனா நீங்க வேணா உள்ள போங்க” என்றவள் அந்த கார்டை அவனிடம் கொடுக்க

அவள் நீங்க தான் குடிச்சிருக்கிங்க என்று சொன்னதில் மறுபடியும் கடுப்பானவனோ

“நீ அடங்கவே மாட்டியா டி….” என்று சொல்ல வந்தவன் அதை விழுங்கிய படி அந்த கார்டை வெடுக்கென்று பிடுங்கியவனோ எழுந்து சென்று கதவைத் திறந்து விட்டு திரும்ப அவளிடம் வந்து


“இங்க பாரு சாரா, இப்பவே குளிர்ல உனக்கு உடம்பு நடுங்குது. இன்னும் போகப் போக உன்னால தாங்க முடியாது. அதனால ஒழுங்கா என் கூட உள்ள வந்துடு” என்று அவன் பொறுமை இழந்த குரலில் சொல்ல

அப்போதும் அவள் வரமாட்டேன் என்பது போல் மறுப்பாக தலை அசைக்கவும்

“நீ சொன்னா கேட்க மாட்டியே” என்றவன் குனிந்து குழந்தை போல் அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள

“ஏய்.. ம்கும்... ம்கும்... நான்... வரல....” என்று அவள் அவனிடமிருந்து திமிறி விடு பட நினைக்க, ஆனால் அவனோ உடும்புப் பிடியாக பிடித்திருக்கவும் சற்றே தன் திமிறலை விடுத்தவள் மூச்சு வாங்க

“பிளீஸ் மச்சான் அட்லீஸ்ட் நீங்களாவது உங்க வலது கால எடுத்து வச்சி உள்ள போங்களேன். இப்போ நீங்க என்ன தூக்கி இருக்கறதால நாம இரண்டு பேருமே அப்படி போறதுக்கு சமம் தான் அது” என்று அவள் கெஞ்சவும்

“இந்த விஷயத்துல மட்டும் தெளிவா இரு” என்று சொல்லி தன் நெற்றியோடு அவள் நெற்றியை ஒரு முட்டு முட்டியவனோ தான் அணிந்திருந்த ஷுவை வெளி வாசலிலேயே கழட்டி விட்ட பிறகே அவள் சொன்னது போல் வலது கால் வைத்தே உள்ளே போனான் அஷ்வத்.

தன் அறையிலுள்ள படுக்கையில் அவளைத் தன் மார்புமேல் சாய்த்த படியே அமரவைத்து அவள் முடிகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி அவள் தலையில் போட்டிருந்த கிளட்சிலே அதை அடக்கியவன்
பின் ஜெர்கின் மற்றும் காது, கழுத்து, கை என்று அவள் அணிந்திருந்த அனைத்தையும் கழட்டிப் பிறகு படுக்கையில் அவளை சாய்த்தவன் பின் அவள் பாதத்தை எடுத்துத் தன் மடியில் வைத்து அவள் அணிந்திருந்த ஹீல் செருப்பையும் கழட்டி அவளைச் சரியான வாக்கில் படுக்க வைத்துப் போர்வையால் போர்த்தியவன் அறையின் கதகதப்பை அதிகப் படுத்திவிட்டுத் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு அவன் விருந்தினர் அறைக்குச் செல்ல எத்தனிக்க.

அதேசமயம் படுக்கையில் நிலையில்லாமல் புரண்ட படி இருந்தவளைப் பார்த்ததும் கையிலிருந்த ஆடைகளை அங்கிருந்த சோஃபாவில் வீசிவிட்டு அவளை நெருங்கி

“என்ன சாரா உனக்கு என்னடாமா பண்ணுது?” என்று முதல் முறையாக கரிசனத்துடன் அவன் கேட்க

“எனக்கு வயிறு எல்லாம் வலிக்குது மச்சான். அப்புறம் இங்கே” என்றவள் தன் நெஞ்சின் மேல் கைவைத்து

“இங்கு ஒரே எரிச்சலா இருக்கு” என்றவள் அதே மாதிரி தொண்டைக் குழியைக் காட்டி

“இங்கே எனக்குப் பிடிக்காதது ஏதோ இருக்கு. ஆனா அது என்னனு தான் தெரியல” என்று சொல்ல
‘ஒருவேளை வெறும் வயிற்றோடு ட்ரிங்க்ஸ் குடிச்சதனால இப்படி இருக்குமோ?’ என்று நினைத்தவன் எழுந்து சென்று சிறிது நேரத்தில் கையில் எலுமிச்சை சாருடன் கொஞ்சம் அதிகப் படியாவே உப்பு நீர் கலந்த டம்ளருடன் வந்தவன்

ஒரு கையால் அவளைத் தூக்கி நிறுத்தி தன்னுடன் அணைத்த படி பாத்ரூம் வாசல் வரை வந்தவன் பின் குழந்தைக்குப் புகட்டுவது போல் அந்நீரை அவளுக்குப் புகட்ட அதன் சுவை பிடிக்காமல் அவள் மறுக்க

“வயித்துல ஒன்னுமே இல்லடமா. பசியினால தான்மா வயிறு வலிக்குது. இப்போ இதை நீ குடிச்சிட்டா உனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பேனாம். அதனால சமர்த்தா இத குடிச்சிடு” என்று அவன் சிறு குழந்தைக்குச் சொல்வது போல் அவளுக்கு எடுத்து சொல்ல

சாரா எதற்கு அசைந்தாலோ இல்லையோ சாப்பாடு என்ற வார்த்தைக்கு உடனே கட்டுப் பட்டு ஒரே மூச்சாக அனைத்து நீரைக் குடிக்கவும் உடனே அவள் வயிற்றிலிருந்த அனைத்தும் வாந்தியாக வெளிவரத் துடிக்க, அவள் உமட்டும் போதே அவன் கதவைத் திறந்து வாஷ்பேஷன் அருகில் அழைத்துச் செல்வதற்குள்

அவன் ஆடை, அவள் மேல், பாத்ரூம் தரை என்று அவள் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தியாக எடுத்திருக்க எந்தவொரு தயக்கமோ அருவருப்பும் இல்லாமல் இதமாக அவள் தலை பிடித்துத் தாங்கியவன் பிறகு அவள் உடையையும் தன் உடையையும் நீரால் சுத்தம் செய்த பிறகே அவளைத் தூக்கி வந்து சோஃபாவில் அமரவைத்தான்.

பிறகு தன் டி ஷர்ட் ஒன்றை எடுத்து வந்து எந்தவொரு தயக்கமும் இல்லாமல் ஈரம் பட்டிருந்த அவள் மேலாடையைக் களைய முற்பட,

“வேணாம் மச்சான், நீங்க போங்க. நானே மாத்திக்கிறேன்” என்று அந்த நிலையிலும் அவள் தடுக்க

“நீ இப்ப இருக்கற நிலைமைல உன்னால முடியாது. பரவாயில்லை நானே மாத்தி விடறேன். நீ எதுவும் ஃபீல் பண்ணாத” என்று அவன் சமாதானப் படுத்திய பிறகே அனுமதித்தாள்.

பிறகு அவளை ஒரு குழந்தை என பாவித்துத் தன் ஆடையை அவளுக்கு அணிவித்து சோஃபாவிலேயே படுக்க வைத்தவன்.

பின் பாத்ருமைச் சுத்தம் செய்து தானும் குளித்து இரவு உடைக்கு மாறிய பின் ப்ரூட் மில்க் ஷேக் போட்டு எடுத்து வந்து அவளை எழுப்பித் தன் கைவளைவில் அவளை வைத்த படியே புகட்ட முதலில் கொஞ்சம் குடித்தவள் பிறகு ஞாபகம் வந்தவளாக

“அப்ப உங்களுக்கு?” என்று கேட்க

“நான் சாப்பிட்டேன் நீ சாப்பிடு” என்று அவன் இதமாகச் சொல்ல, அவன் அப்படி சொல்லியும் தனியே குடிக்க மனம் வராமல் அந்த டம்ளரை அவன் உதட்டருகே நகர்த்திச் சென்றவள் கண்ணாலேயே அவனைக் குடிக்கச் சொல்ல எந்தவொரு மறுப்பும் இல்லாமல் ஒரு மிடறு குடித்தவன் பின் அவளுக்குக் கொடுக்க அதை முழுவதுமாக குடித்து முடித்தவள்

“அச்சு குட்டி யு ஆர் சோ ஸ்வீட் டா செல்லம்” என்று கொஞ்சியவள் எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அவன் மார்பிலேயே தலை சாய்த்துக் கொள்ள

சிறிது நேரம் அவனும் அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்தவன் பின் அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு விலக அவன் இரவு உடையைக் கொத்தாகப் பிடித்தவள்

“எங்க போற அச்சு?” என்று விழி திறக்காமல் கேட்க

“நீ இங்க தூங்கு நான் கெஸ்ட் ரூம் போறேன்”

“அதெல்லாம் வேணாம் அச்சு. என்ன தனியா விட்டுப் போகாத. என் கூட இங்கேயே இரு” என்று கெஞ்சவும்

எதுவும் சொல்லாமல் அவள் பிடித்திருந்த விரல்களை அவன் தளர்த்தவும், தன் பிடியை இன்னும் அழுத்திப் பற்றியவள்

“ப்ளீஸ் மச்சான் போகாதிங்க. என்ன வேணா உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஐ நோ யு டோன்ட் லவ் மீ. பட் ஐ லவ் யு. ஏன் மச்சான் நான் கருப்பா இருக்கேனு தான் என்னை உங்களுக்குப் பிடிக்கலையா? நான் உங்க வாழ்க்கை முறைக்கு ஒத்து வர மாட்டேனு எனக்குத் தெரியும் மச்சான்.

ஆனா என்ன பண்ண? உங்களை என்னால எந்த காரணத்துக்காவும் விட்டுக் கொடுக்க முடியாதே! நீங்க என்ன திட்டினாலும் சண்டை போட்டாலும் எனக்கு நீங்க தான் வேணும். பிகாஸ் ஐ லவ் யு” என்று மூச்சு விடாமல் இப்படி எல்லாம் பிதற்றியவள் அவனைக் கட்டிக் கொண்டே தூங்கியும் விட்டாள் சாரா.

அவளை விட்டு விலகத் தோன்றாமல் அணைத்தபடி இருந்தவனோ அவள் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு

‘இது என்ன மாதிரியான அன்பு? அன்பு பாசம் எல்லாம் தாண்டினதா இல்ல இருக்கு இவ காதல்? இது வரை வாய் வார்த்தையாக என் காதலைக் கூட நான் சொல்லலையே! பிறகு ஏன் இவ இப்படி இருக்கா?

நான் இவ கிட்ட பேசப் பழகக் காரணம் வேற ஆச்சே! அது நாளைக்கு தெரிய வரும்போது என்னை பண்ணுவா? அப்பவும் இதே காதலோட இருப்பாளா? இருக்கக் கூடாதே! நீ என்ன விட்டு விலகித் தான் இருக்கனும் சாரா. அதுக்கு நான் இப்போதிருந்தே உன்னை விட்டு விலகனும்’ என்று நினைக்கும் போதே அவனுக்கு அவனையும் மீறி கண் கலங்கி விட்டது.

‘இதுவரை எத்தனையோ பெண்கள் காதலைச் சொல்லியிருந்தாலும் இவ காதல் உண்மையானதா இருக்கே! இவ நடிக்கிறானு கூட சொல்ல முடியாது. ஏன்னா குடிச்சா மனசுல இருக்கிற உண்மை மட்டும் தானே வெளிய வரும் பொய் வராது.

அப்ப இது நிஜம் தான். ஆனா இதை வளர விடக் கூடாது. இது வேண்டானுதானே இத்தனை வருஷமா நான் ஓடி ஒளிஞ்சேன்? ஆனா விதி இப்படி பட்ட சூழல்ல மாட்டி விட்டுடிச்சே! இதை நான் எப்படி சமாளிக்கப் போறேனோ?!’ என்று பலவாறு யோசித்தவன் தன்னையும் மீறி அங்கேயே அவளுடனே உறங்கிப் போனான் அஸ்வத்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN