காதல்பனி 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 10

காலையில் வழக்கம் போல் கண் விழித்த அஷ்வத்துடைய உடலோ சோர்வில் துவள, அதை விட அவன் எழ முடியாத அளவுக்குத் தன் கைகளாலும் கால்களாலும் அவனை இறுக்கிப் பிடித்திருந்தது மட்டுமில்லாமல் அவன் மார்பிலேயே தன் முகத்தை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் சாரா.

அந்தக் காட்சியில் முதலில் சற்று மிரண்டவன் பின் தெளிந்து ‘நான் இவள விட்டுத் தூர விலகணும்னு நினைக்கிறன். ஆனா அதை அவ்வளவு சுலபமா என்ன செய்ய விட மாட்டா போல இவ!’ என்று மனதுக்குள் சலித்துக் கொண்டவன் அவளுடையத் தூக்கம் கலையாத வண்ணம் மெல்ல அவளை விட்டு விலகியவன் தன் காலைக் கடன்களை முடிக்கத் தனக்கான மாற்று உடையுடன் கெஸ்ட் ரூம் சென்று விட்டான் அஷ்வத்.

தன் கடமைகளை முடித்து அவன் திரும்ப வரும் வரையிலும் சாரா எழவில்லை. குழந்தை போல் கை கால்களை விரித்துக் கொண்டு கட்டிலில் ஒரு கோணத்தில் அவள் தூங்க, அவளையே சிறிது நேரம் பார்த்தவனோ அவளை எழுப்ப மனம் வராமல் விலகியவன் தன் அலுவல் வேலைகள் சிலதை வீட்டில் இருந்த படியே முடித்தவன் அப்படியே தன் அலுவலகத்திற்குப் போன் பண்ணவன் சாராவுக்கு மாற்று உடையை எடுத்து வரச் சொல்லவும் மறக்கவில்லை.

அவன் கேட்ட ஆடையும் வந்து விட அதன் பிறகும் தாமதிப்பது சரியில்லை என்று நினைத்து அவளை எழுப்பச் சென்றவன் அவளிடம் அன்பு கொண்டவன் போல் நடந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையுடன் முதலில் அவள் மேல் நீரை ஊற்றி எழுப்ப நினைத்தவன் பிறகு நேற்று அவள் ஆடை நீரில் நனைந்ததில் அவள் உடல் சில்லிட்டுப் போய் இருந்ததை நினைத்து அந்த எண்ணத்தைக் கை விட்டவனோ வெளியே சென்று காலிங் பெல்லை அலற விட்டான் அஷ்வத்.

கலையாத தன் தூக்கக் கலக்கத்தில் காலிங் பெல் சத்தத்தில் எழுந்து அமர்ந்த சாரா முழுமையாக தெளியாத ஒரு மயக்கத்தில் பேந்த பேந்த விழித்தபடி அவள் முழிக்க , அதே நேரம்

“என்ன குடிகாரி, போதை தெளிஞ்சிதா இல்ல இன்னும் தெளியலையா? ஆனா சும்மா சொல்லக் கூடாது உன்னை. என்னமா அன்னைக்கு பேசின!? நான் அப்படி நான் இப்படி என் பண்பாடு என் கலாச்சாரம் என் சமுகம்! அது கூட வேற என்னமோ சொன்னியே, அது என்ன? ஆங்…. என் சமுக சிந்தனை! அப்பறம் என்ன? நான் டேட்டிங் போக மாட்டேன், நான் குடிக்க மாட்டேன், பிடிவாதம் எல்லாம் பிடிக்க மாட்டேனு அன்னைக்கு என்னமோ மைக் வைத்து கூப்பாடு போடாத குறையா பேசின! ஆனா இன்னைக்கு நீ என்ன பண்ணி இருக்க?” என்று அஷ்வத் அவளை கிண்டலாகக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய

திடீர் சத்தத்தில் எழுந்து அமர்ந்த நேரத்தில் அவன் குரலும் கேட்க ‘இவர் எங்கே தன் அறைக்கு?’ என்று நினைத்தவள் அவன் பட பட என்று பேச ‘இவருக்கு இவ்வளவு பேசத் தெரியுமா?’ என்று முதலில் வியந்தவள் அவன் சொன்ன குடிகாரி கோபம் கொண்டு

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுறிங்க? நான் குடிகாரியா! என் குடும்பத்துக்கு அந்த குடியோட நாற்றம்னாலே என்னனு தெரியாது. என் தாத்தா அதை தொட்டது கூட இல்ல. அப்படி அவரால வளர்க்கப் பட்ட அவர் பேத்தியாகிய என்னைப் போய் குடிகாரினு எப்படி சொல்லலாம்? அதுவும் என் ரூம் மெட்ஸ்ங்க குடிச்சிட்டு வந்தாலே சாட்டைய எடுத்து அவளுங்களை விலாசாத குறையா துரத்தி அடிக்கிற என்னையப் போய்……” அவள் முடிப்பதற்குள்

“ஆமாம் ஆமாம்... சொன்னாங்க இந்த ஊரே சொன்னாங்க! உன் தாத்தா அப்பானு உங்க குடும்பமே குடிக்காதுன்றத சொன்னாங்க. அதை நானும் ஒத்துக்கறன். ஏன்னா அவங்க குடிக்கக் கொஞ்சமாவது இருக்கணும் இல்ல? அதான் அவங்களுக்கு மிச்சமே வெக்காம எல்லாத்தையும் நீயே குடிச்சிட்டியே! அப்புறம் எப்படி அவங்க குடிப்பாங்க?

அம்மாடியோ! இங்கேயே பிறந்து வளர்ந்த எங்க ஊர் பொண்ணுங்களால கூட முடியாதுமா முழுசா ரெண்டு பாட்டில் குடிக்க! நீ என்னமா குடிக்கிற? நான் பிடிங்கி வைக்க வைக்க என் கையிலிருந்து திரும்பவும் பிடிங்கி இல்ல குடிக்கிற நீ? இதுல நேத்து பார்ட்டில என்னமா ஆட்டம் போட்டு கலாட்டா வேற பண்ணிட்ட. உன்னால எனக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா? இனிமே ஜென்மத்துக்கும் உன்னை வெளியே கூட்டிட்டுப் போவேனு மட்டும் நினைக்காத. அது மட்டும் நடக்காது குடிகாரி!”

“திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாதிங்க. நான் குடிச்சிருக்க மாட்டன். சரி நீங்க சொல்றதை போல நான் தான் உங்களை அசிங்கப் படுத்திட்டேன் இல்ல, அப்பறம் எதுக்கு என்னப் பார்க்க என் வீட்டுக்கு வந்தீங்களாம்?” என்று அவள் மிடுக்காக கேட்க

“என்னது உன் வீடா? நேத்து நீ குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து புரண்டு கிடந்த உன்னை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததுக்கு இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ. ஹலோ மேடம்! கொஞ்சம் உங்க குடி மயக்கத்துல இருந்து வெளிய வந்து நல்லா உங்க கண்ணைத் திறந்து வச்சி சுத்திப் பாருங்க. இது என் வீடு. நீ தான் என் வீட்டுல இருக்க” என்று அவன் அவளைக் குத்திக்காட்ட

அப்போது தான் அவள் அந்த இடத்தையே தன் கண்களால் வட்ட மிட, அவன் சொல்வதைப் போலவே அது அவன் அறை என்பதைக் காட்டியது. ‘நேற்று அவன் கூட பார்ட்டிக்குப் போனது வரை நினைவு இருக்கு. அதன் பிறகு தான் எப்படி இங்கு வந்தோம்?’ என்பது என்ன யோசித்தும் நினைவில்லாமல் போக ‘ஒருவேளை இவர் சொல்வது போல் நேத்து குடித்து தான் இருப்பமோ? ஆனா அப்படி நடக்க சாத்தியம் இல்லையே! இது தெரியாம வீராப்புல இவர் கிட்ட எக்குத் தப்பா இல்ல வார்த்தைய விட்டுட்டோம்?’ என்று அவள் பலவாறு யோசித்துக் கொண்டிருக்க

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் முகத்தில் வந்து போன பாவனையை விட அவள் விழியில் வந்து போன பாவனையில் தன் நிலை இழப்பதை உணர்ந்தவனோ உடனே “சீக்கிரம் கிளம்பு, எனக்கு மணி ஆகுது” என்ற கட்டளையுடன் அவன் வெளியே செல்ல

சரி என்ற தலை அசைப்புடன் கிளம்ப நினைத்தவளோ “ஐயோ….” என்று கூப்பாடு போட கதவு வரை சென்றவனோ அவள் குரலில் பதட்டம் எழ “என்ன என்ன? என்ன ஆச்சு சாரா?” என்ற வினாவுடன் அவன் ஓடி வர அவள் இருந்த மனநிலையில் அவன் பதட்டம் மனதில் படாமல் போக தான் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் காட்டியவளோ “இது நான் போட்டுட்டுப் போன டிரஸ் இல்லையே?” என்று பதற

“நேத்து நீ அடிச்ச கூத்துக்கு இன்னும் உன் டிரஸ் அப்படியே இருக்குமா? அந்த டிரஸ் முழுக்க வாந்தி. அதனால தான் இதைப் போட்டேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் என்னவென்று சொல்ல முடியாத ஒரு பாவம் அவள் விழிகளில் வந்து போனதைப் பார்த்தவுடனே “நான் ஒண்ணும் உனக்குப் போட்டு விடல. ஹவுஸ் மேட் லேடி தான் மாத்தி விட்டாங்க” என்று பிசிர் இல்லாமல் அவன் சொல்ல அவளோ தன் விழிகளைத் தாழ்த்திக் கொள்ள.

“சும்மா சும்மா இப்படியே உட்கார்ந்துட்டு இருக்காம சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு கிளம்பற வழியப் பாரு. எனக்கு டைம் இல்ல” என்றவன் “இந்தா நீ குளிச்சிட்டு மாத்திக்கறதுக்கான டிரஸ். இதை கொடுக்கத் தான் வந்தேன். என்ன ஏதேதோ பேச வச்சிட்ட” என்று சொல்லி ஒர் கவரை கட்டிலில் வைத்தவன்

“இங்க பார் வேலை செய்ய வரவங்க என் துணிய மட்டும் தான் துவைப்பாங்க. உன் துணிய எல்லாம் துவைக்க மாட்டாங்க. அதனால ஒழுங்கா உன் துணிய எல்லாம் மெஷின்ல போட்டு துவைச்சி இப்பவே கையோட எடுத்துக்க. அதையும் சீக்கிரமா செய். ஆனா இப்போ நீ போட்டுருக்கிற என் டீ ஷர்ட்ட மட்டும் துவைக்காத. நான் அத வேலையாள் கிட்ட கொடுத்து துவைச்சிக்கறேன்” என்று அவளுக்குக் கட்டளை இட

‘சரி’ என்ற முணுமுணுப்புடன் பாத்ரூம் வாசல் வரை சென்றவளை “ஏய் நில்லு” என்று அவன் குரல் தேங்க வைக்க ‘இப்போ என்ன?’ என்ற கேள்வியுடன் நின்றவளிடம் வந்தவன் ஒரு துவாலையை நீட்டி “இந்தா இத யூஸ் பண்ணிக்க” என்று சொல்ல

முகமெல்லாம் பூரிப்புடன் கண்களில் ஒரு ஒளியுடன் அதைப் பெற்றுக் கொண்டவள் “இது உங்களுதா?” என்று கேட்க

‘இல்லை வேலையாட்கள் உபயோகப் படுத்துவது’ என்று சொல்ல வந்தவன் அதைச் சொல்ல முடியாமல் அவனை ஏதோ தடுக்க “இல்ல கெஸ்ட் யார்னா வந்தா யூஸ் பண்றது” என்று அவன் கத்தரித்தால் போல் சொல்ல, அதைக் கேட்டவளின் முகமோ ஒளி இழக்க அதைப் பார்த்தவனின் மனதிலோ அவனையும் அறியாமல் சிறு வலி எழத் தான் செய்தது.

அவன் சொன்ன படியே அவள் எல்லாம் முடித்து கிளம்பி வர அவசரம் அவசரம் என்று பறந்தவனோ எந்த ஒரு அவசரமும் இல்லாமல் லேப்டாப்பில் மூழ்கி இருக்க, அவள் வந்ததைப் பார்த்தவன் “சரி போகலாமா?” என்று கேட்ட படி அங்கேயே அமர்ந்திருக்க

“ம்….” என்றவள் தயக்கத்துடனே அவன் முகத்தை இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்க்க, அதை உணர்ந்தவனோ அவளை நிமிர்ந்து பார்த்து “என்ன?” என்று கேட்க

நாக்கு வரண்டு போய் இருந்ததில் திக்கித் திணறி “குடிக்கத் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டவள் தன் வலது கையின் கட்டை விரலைக் கொண்டு சென்று அதையே செய்கையாகவும் கேட்க

“அங்க இருக்கு கிச்சன்” என்று அந்த வீட்டின் வலது மூலையைக் காட்டியவன் அவள் அங்கு சென்றதும் வெறுமனே வைத்திருந்த லேப்டாப்பை மூடி வைத்தவன் எழுந்து தன் அறைக்குச் சென்று அழுக்குத் துணிகள் போட்டு வைக்கும் கூடையில் அவள் கழட்டிப் போட்ட அவன் டி ஷர்ட்டை எடுத்து மடித்து கப்போர்டில் தன் நல்ல துணிகளுக்கு நடுவே வைத்துக் கொண்டான் அஷ்வத்.

தண்ணீர் குடிக்கக் கிச்சனுக்குச் சென்ற சாரா அங்கு காலையிலிருந்து சமைத்ததற்கோ இல்லை சாப்பிட்டதற்கோ என்று எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதையும் டைனிங் டேபிளில் வெறும் ஜுஸ் குடிச்சதுக்கான டம்ளர் மட்டும் இருப்பதைப் பார்த்தவள் ‘அப்போ இவரும் எதுவுமே சாப்பிடலையா?’ என்ற கேள்வியுடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க அதே நேரம் அங்கு அஷ்வத் வர

“ஆமா நீங்க காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாம பசியாவா இருக்கிங்க? நான் வேணா உங்களுக்கு எதாவது சமைத்துத் தரவா?” என்று கரிசனத்துடன் கேட்க

அவள் பசியாக இருப்பாள் என்பதற்காகத் தான் அவன் அவளை அவ்வளவு அவசரப் படுத்தியதே. இப்போது அவளே அவன் பசியைப் பற்றி கேட்கவும் உள்ளுக்குள் அவனுக்கு ஏதேதோ முட்டி மோத அதையெல்லாம் விடுத்தவன்

“நான் சாப்பிடலைனு உன் கிட்ட சொன்னனா? இல்ல எதாவது செய்து தரச் சொல்லி உன் கிட்ட கேட்டனா? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. இப்போ கிளம்பறியா? எனக்கு டைம் ஆகுது” என்று முகத்தில் அடித்தது போல் அவன் சொல்லவும் கையில் எடுத்த அந்த பாட்டில் நீரைக் கூட குடிக்காமல் திரும்பவும் அவள் ஃபிரிஜ்ஜிலேயே வைத்து விட, அதைப் பார்த்தவனோ

“நான் என்ன உன்னை தண்ணி கூட குடிக்க கூடாதுனு சொல்ற அளவுக்கு கொடுமைக்காரனா என்ன? ஒழுங்கா எடுத்த அந்த தண்ணிய குடிச்சிட்டு வா” என்றவன் சென்று காரில் அமர்ந்து விட

கண்ணில் நீர் முட்ட அவன் சொன்னதுக்காக வேண்டா வெறுப்புடன் அந்த தண்ணியைக் குடித்தவள் பின் கிளம்பிச் செல்ல மீதமிருந்த அந்த கார் பயணம் முழுவதும் இருவரும் அமைதியாய் பயணித்தனர்.

‘சரியான பில் பில்’ என்று சாரா வாய்க்குள்ளே முணுமுணுக்கவும் என்ன என்று திரும்பிப் பார்த்து கண்களால் அவன் கேட்கவும் ஒன்றும் இல்லை என்பதுபோல் தோள்களைக் குலுக்கி கொண்டாள் அவள்.

இதுவரை இல்லாத ஏதோ ஓர் உணர்வு அவள் இறங்கும் போது அவள் பிரிவை அவனுக்கு உணர்த்த அவள் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் இறங்கிப் போன பிறகும் அவள் திரும்பிப் பார்க்க மாட்டாளா என்ற எண்ணத்தில் ‘திரும்பிப் பார் சாரா! ஒரேயொரு முறை என்னைத் திரும்பிப் பார் சாரா! பாரு டி…” என்று போகும் அவளையே பார்த்த படி அவன் மனதாலேயே கேட்டுக் கொண்டிருக்க, அவனைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்று மறைந்தாள் சாரா.

முதல் முறையாக மனதில் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அஷ்வத்

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க முன்பு போல் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமலிருக்க சாராவின் வாழ்வில் முக்கியமான மற்றும் மறக்க முடியாத நாளும் ஒன்று வர, இத்தனை நாள் எப்படியோ! தன் கணவன் என்று அஷ்வத் தன் வாழ்வில் வந்த பிறகு சாராவுக்குத் தனியாக அந்த நாளைக் கொண்டாட விருப்பமில்லை.

ஆனால் அதை அவனிடம் சொல்லவும் முடியாமல் சொன்னாலும் அவன் தன்னுடன் இருக்கவோ எங்காவது வெளியில் வரவோ மாட்டானே என்று பலவாறு யோசித்தவள் இறுதியில் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் இவ்வளவு நாள் கழித்து அவனுக்கு அழைக்க அவன் போனோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. சற்று நேரம் கழித்து அவள் மறுபடியும் அழைக்க இப்போது நாட் ரீச்சபல் என்று வந்தது. வேண்டாம் என்று விடாமல் இவள் மறுபடியும் அழைக்க இம்முறை ரிங் போனதே தவிர அவன் எடுக்கவேயில்லை.

பெண்ணவளுக்கோ அவன் கூடவே இல்லையென்றாலும் அவன் குரலையோ இல்லை அவன் முகத்தையோ ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று காதல் கொண்ட மனதோ ஏங்க இப்போது அஷ்வத் எங்கே இருப்பான் என்பது தெரியாமல் ஒருவித தவிப்புடனே இருந்தவள் பின் ஸ்டீவ்வுக்கு அழைத்து அஷ்வத் எங்கே ஏது என்று கேட்டு விசாரித்தாள்.

அவன் இருக்குமிடம் சற்று தூரம் என்பதால் போக தாமதமாகும் என்பதை ஸ்டீவ் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவனைப் பார்த்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் அவனை நாடி அவன் இருக்கும் இடத்திற்கே சென்றாள் சாரா.

ஊருக்கு சற்று வெளியே இருந்த அந்த இடத்திற்குச் சென்றவள் வெளி கேட் காவலரிடம் கென்ட்ரிக்கைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர்கள் மறுக்க. அவள் எவ்வளவு சொல்லியும் அந்த காவலர்கள் அவளை உள்ளே விடாமல் தடுக்க. ஏதோ ராணுவ அதிகாரிகள் அவர்கள் ரகசிய கிடங்கைப் பார்க்க விடாமல் ஆயிரத்தி எட்டு விதிகள் போட்டு ஆதாரம் கேட்டு விரட்டுவார்களே அது போல் அவளை நடத்த, அதில் கடுப்பானவள்

“நான் அவர் வருங்கால மனைவியாய் ஆகப் போறவள். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் கென்டிரிக்கையே அழைத்து என்னைப் பற்றி கேளுங்கள். அவர் மறுத்தால் நான் போய் விடுகிறேன்” என்று சொல்ல அப்படி சொல்லும் போதே சாராவுக்கு உள்ளுக்குள் உதைப்பு தான். எங்கே அஷ்வத் தன்னைத் தெரியாது என்று சொல்லி அசிங்கப் படுத்திவிடுவானோ என்று!

உடனே அதற்கு மட்டும் ஒத்துக் கொண்டவர்கள் அவளைத் தன் மொபைலில் போட்டோ எடுத்து அதை அஷ்வத் பி.ஏ வுக்கு அனுப்பிக் கேட்க, உடனே அவனோ பக்கத்திலிருந்த அஷ்வத்திடம் முழு விவரத்தையும் சொல்லி அனுமதி கேட்க ஒரு வினாடி அந்த போனில் சாராவின் புகைப்படத்தைப் பார்த்த அஷ்வத் என்ன நினைத்தானோ மறுக்காமல் அவளை அனுப்பச் சொன்னான்.

பின் இங்கு சாராவிடம் இதுவரை இருந்த அலட்சியம் மாறி ஒரு வித மரியாதையுடன் அவளை அவர்கள் உள்ளே அனுப்ப அங்கே அவளைத் தலை முதல் பாதம் வரை ஸ்கேன் செய்தவர்கள் அவளை அழைத்துப் போக கார் வரும் வரை வி.ஐ.பி க்கான வெயிட்டிங் ரூமில் அமர வைத்து ஜூஸ் கொடுத்து உபசரித்தனர்.

‘இன்னும் உள்ள போக கார் வருமா? அப்படி இது என்ன மாதிரியான இடம், எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் தமிழர் போல் முக அமைப்புடன் ஓர் இளைஞன் அந்த அறையின் உள்ளே நுழைந்து

“வெல்கம் மேடம்! நான் சேரோட பி.ஏ” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவன் “உங்களுக்கெண்டு கார் ரெடியா இருக்கு. போவமா மேடம்?” என்று பவ்வியமாக அவளை அழைக்க அவன் பேசின பிறகு தான் தெரிந்தது அவன் ஓர் இலங்கைத் தமிழன் என்பது அவளுக்கு.

அவன் தன்னைச் சாதாரணமாக அறிமுகப்படுத்தி இருந்தால் யோசித்திருக்க மாட்டாள். அவன் பி.ஏ என்று சொன்னதில் தான் குழம்பினாள். அஷ்வத்தின் பி. ஏ வைத் தான் அவளுக்கு முன்பே தெரியுமே! அதனால் இவன் யார் என்று அவள் கொஞ்சம் தயங்க.

அதை அறிந்தவனோ “மேடம், சேர்க்கு நிறைய பிஸினஸ். அதுக்கெண்டு தனிய தனிய பி.ஏ இருந்தாலும் இங்க அவர் ஆத்மார்த்தமா ஒரு மனநிறைவோட செய்யுற இந்த சேவைக்கு நான் தான் மேடம் அவருக்கு ரைட் ஹான்ட், பி.ஏ எல்லாமே. சோ எந்த தயக்கமும் இல்லாம நீங்க என்ன கூட வாங்கோ” என்று அவன் அழைக்க

இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் கிளம்பியவள் வழி நெடுகிலும் சுற்றி கொஞ்சம் மரங்கள் அடர்ந்திருக்க அங்கங்கே மரங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதியும் பிற்காலத்தில் சுத்தமான மூச்சுக் காற்றுக்காக நாம் படப் போற கஷ்டத்தைப் பற்றியும் அழகான ஒவியமாக பல பலகைகளில் வரைந்திருக்க அதையெல்லாம் பார்த்ததில் சாராவுக்குள் அவ்வளவு சந்தோஷம்.

‘ஒருவேளை இதை எல்லாம் அஷ்வத் மட்டும் எழுதச் சொல்லி இருந்தால்? என்று நினைத்தவள் அப்போ என் கணவர் இயற்கையை நேசிக்கிறவர் தான். அதனால் நான் வந்த வேலை இதுவரை கஷ்டம் இல்லாமல் முடிந்தது போல் இப்பவும் சுலபமாக நல்ல மாதிரியா முடிஞ்சிடும்’ என்று அவள் நினைக்கும் போதே சற்று தூரம் தள்ளி

தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னான். ஆனால் இங்கு ஒரு நாடே (சோமாலியா நாட்டு மக்களின் புகைப்படங்களைப் போட்டு) தண்ணீர் உணவு இல்லாமல் அழிகிறது. அதற்காக நாம் ஜெகத்தினை அழிக்க வேண்டாம் இயற்கையுடன் கூடிய வாழ்வை வாழ வழி செய்வோம் என்றும்

இன்னும் ஓர் இடத்தில் ‘தமிழன் என்று பெருமை கொள்ளும் தமிழா! ஆதி காலத்தில் இருந்து வந்த உன் தமிழனுக்கு ஓர் நாட்டில் இடமில்லை என்று (இலங்கை தமிழர்கள்) துரத்தப் படுகிறார்களே, அவர்களுக்கு ஒரு தமிழனாய் இந்த தேசம் முழுவதும் உன் கால் தடம் பதித்திருக்கும் நீ என்ன செய்தாய்? என்று எழுதியிருக்க

இதுவரை ஒரு அசட்டையுடன் அமர்ந்திருந்தவள் இந்த வாசகத்தைப் பார்த்தவுடன் ‘உண்மை தானே!’ என்ற முணுமுணுப்புடனும் உத்வேகத்துடனும் அவள் நிமிர்ந்து அமர முன் சீட்டில் அமர்ந்து இருந்த படியே அவளின் செயலைப் பார்த்த அந்த பி.ஏ

“இதெல்லாம் இங்கே நடக்கிற ஃபங்ஷன்ல சேர் கதைக்கேக்க சொல்றது மேடம். அவரிண்ட பேர் போட வேண்டாமெண்டு ஸ்டிரிக்டா சொல்லிட்டார். சோ அவரிண்ட பேர் இல்லயெண்டாலும் அவர் சொன்ன வார்த்தைகளாச்சும் போட விட்டாரெண்டு நாங்களும் சம்மதிச்சி இதையெல்லாம் எழுதி வச்சிருக்கிறம். உள்ள வந்து பாருங்கோ மேடம். சேர் பேச்சால மட்டும் இல்ல செயலாலையும் நிறைய செய்திருக்கார். ஆனா அதையெல்லாம் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாம கனக்க (நிறைய) வெளி உலகத்திக்குக் காட்டாம தேவப்பட்டா மட்டும் மற்றவேக்குத் தெரியிற மாதிரி வச்சிருக்கார்” என்று அவன் அஷ்வத் புகழ் பாட

‘அப்படி என்ன தான் செய்து இருக்கார் உங்க ஸார்? அதையும் தான் பார்க்கறனே!’ என்று மனதில் நினைத்துக் கொண்டவளோ வெறுமனே அவனுக்குச் சிரித்த முகமாகத் தலையை ஆட்டினாள் சாரா.

இவள் இப்படியே ஜன்னல் வழியாகப் பார்த்து வர திடீர் என்று ஓர் இடத்தில் கார் நிற்க அந்த பி.ஏ வந்து அவள் பக்கக் கார் கதவைத் திறந்து விட்டவன்

“மேடம் கொஞ்சம் இறங்க முடியுமோ? உள்ளயும் கார் போவும். ஆனா நீங்க இங்க இருந்தே நடந்து வந்திங்கெண்ட உங்களுக்குப் பாக்கவும் பிடிக்கும் பிளஸ் நாங்க ஏன் இப்பிடி எல்லாம் செய்து இருக்கமெண்டு உங்களுக்கு விளங்கும்” என்று அவன் சொல்ல சரி என்று சொல்லி காரை விட்டு இறங்கியவள் அங்கிருந்த ‘கார்த்திகேயன் கனவு இல்லம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர் பலகையின் வளைவைப் பார்த்தவள் உடலில் தீ சுட்டாற் போல் அதிர்ந்து நிற்க, அவளைப் பார்த்தவனோ

“மேடம் இதான் சேரோட அப்பாண்ட பேர். உங்களுக்கு தெரியும் தானே அவரும் உங்கட ஊர் தானே மேடம்” என்று அவன் சொல்ல, அவன் சொன்ன வார்த்தைகளில் தெளிந்தவள் ‘நாம அஷ்வத்த பற்றி முன்பே விசாரிச்சி வச்சிருக்கலாமோ? இப்படி அடிக்கடி ஷாக்காகாம இருந்திருக்கலாம்’ என்று நினைத்தவள் ம்ம்ம்…. என்று சொல்லி அவனுடன் இணைந்து நடக்க வாசலில் வாழை மரம் மற்றும் மா இலைத் தோரணம் கட்டித் தெரு எங்கும் மாக் கோலம் போட்டு அழகான தமிழில் ‘நல்வரவு’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்த சாராவின் மனதுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்! ஏதோ தான் தமிழ் நாட்டுக்கே வந்து விட்ட நிம்மதி அவளுக்கு. ‘இதெல்லாம் யாருக்காக?’ என்று நினைத்தவள்

“எதாவது ஃபங்ஷனா? யாராவது முக்கிய தமிழ் வி.ஐ.பி வந்து இருக்காங்களா?” என்று அந்த பி.ஏ விடம் அவள் கேட்க

“ஓமோம் மேடம் வி.ஐ.பி தான். ஆனா அதுக்கெண்டு ஆரும் வெளில இருந்து வர வேண்டாம். ஏனெண்டா எங்கட சேர விட இங்க ஒருத்தரும் எங்களுக்கு பெரிய வி.ஐ.பி இல்ல மேடம்” என்று அவன் பெருமையோடு சொல்ல

‘ஓ… அப்ப இதெல்லாம் அஷ்வத் மச்சானுக்கா?’ என்று யோசித்தவள் அது ஏன் என்று அவனிடம் கேட்பதற்குள் அவனே

“மேடம் இங்க இருக்கிறவங்க முக்காவாசிப் பேர் இலங்கைத் தமிழர்கள், அகதியளா நாடு, வீடு வாசல், சொந்த பந்தமெண்டு எல்லாத்தையும் இழந்துட்டு வந்தவங்கள் நான் உள்பட. அப்பிடி வந்த எங்கள எந்த நாட்டு அரசும் சுமூகமான முறையில வரவெச்சு அடைக்கலம் குடுக்காது. அப்படியே குடுத்தாலும் எங்களைத் தனித் தன்மையோட வாழ விடாது. அப்பிடி நாங்க வாழணுமெண்டா பல வருசம் நாங்க கால ஊண்டி நின்டா தான் முடியும். அதுவும் எங்கட பிள்ளையள் தான் பிற்காலத்தில வாழ முடியும்.

ஆனா இன்டைக்கு எங்கண்ட அஷ்வத் சேரால நாங்க எங்கட நாட்டில சுதந்திரமா இருக்கிற போல தனித் தன்மையோட சகலவித வசதியளும் பெற்று வீடு வாசலோட இங்க வாழுறம். அதோ அது தானுங்கோ சேர் எங்களுக்குக் கட்டிக் குடுத்த அப்பார்ட்மெண்ட்” என்று சற்று தூரத்தில் இருந்த கட்டிடத்தைக் காட்டியவன் “அது பக்கத்துல இருக்கிறது பிளே கிரவுண்ட். இந்த பக்கம் லைப்ரரி. அங்க முழுக்கத் தமிழ் புக்ஸ் தான் இருக்கு. என்னும் இந்த பக்கம் இருக்கிறது ஆபிஸ் பில்டிங். இங்க வெறும் இலங்கைத் தமிழர் மட்டும் இல்ல சோமாலியாவுல பாதிக்கப் பட்ட பொம்பிளயளும் குழந்தையளும் இங்க இருக்கினம்.


இந்த கம்பஸ்குள்ளயே ஒரு சில பேர் ஸ்கூல் வேணுமெண்டு கேட்டாங்கள். ஆனா சேர் தான் எல்லாரும் எல்லாரோடையும் ஒண்டா பழகணும். அத சின்ன வயசில இருந்தே எங்கட பிள்ளையளுக்கு நாம கத்துக் குடுக்கணுமெண்டா அவங்க வெளிய போய் படிக்கட்டும் இங்க தனியா வேண்டாமெண்டு சொல்லிட்டார். ஆனா தரமான கல்வி கற்க வழி செய்து இருக்கார். அதே மாதிரி இந்த ஆபிஸ்ல தமிழர்கள் மட்டுமில்லாமல் மற்ற நாட்டாரும் வேலை செய்யிறாங்க. பாதிக்கப் பட்ட தமிழருக்காக இப்பிடி ஒரு இடத்த அமைக்கணுமெண்டு சேர் அப்பாண்ட கனவாம். அது கூட இப்பிடி பாதிக்கப்பட்ட பல நாட்டவரையும் சேத்து இந்த ஹோமை சேர் உருவாக்கி இருக்கார்.

இதுக்காக அவர் நிறய கஷ்டங்களையும் பிரச்சினையளையும் சந்திச்சி இருக்கார். இந்த நாட்டு உயர் அதிகாரிகள் முதல்கொண்டு அரசியல்வாதிகள் வர நிறய வி.ஐ.பிகளை தெரிஞ்சி இருந்ததால எல்லாத்தையும் சமாளிச்சி இன்டைக்கு இதை உருவாக்கி இருக்கார். அதை எல்லாம் நேரில இருந்து பார்த்தவன் நான் மட்டும் தான் மேடம். அவர புகழ்ணும்னு என்டதுக்காக நான் இப்படி எல்லாம் சொல்லேல மேடம். உண்மையாவே ஹி இஸ் எ சூப்பர் பேர்சன் மேம்! இன்டைக்கு சேருக்கான நாள். இன்டைய தினத்த சேர் வாழ்க்கையில மறக்க முடியாத நாளா சொல்லுவார்” அப்படி அவன் சொல்லிக் கொண்டு வரும்போதே சாராவோ,

‘மறக்க முடியாத நாளா? அப்போ இவருக்குப் பழசு எல்லாம் இன்னும் ஞாபகம் மட்டும் இருந்தா அப்போ என் நிலைமை?!’ என்று நினைத்தவள் அப்படியே சட்டென நின்று விட.

“என்னங்க மேடம் கால் வலிக்குதோ? இன்னும் கொஞ்சத் தூரம் தான் அங்க வந்திட்டுது” என்று பதட்டப் பட

“ஒண்ணும் இல்லை” என்று சொல்லியவள் அவனுடன் சகஜமாக நடக்கவும்

“அப்பிடி என்ன நாளெண்டு கேட்டதில அவர் தன்னோட கேரியரை ஆரம்பிச்ச நாளெண்டு சொன்னாரு. அந்த நாள் முழுக்க எங்களோட தான் இருப்பார். இந்த வருசம் நீங்களும் எங்களோட இருக்கிங்க. அடுத்த வருசம் கல்யாணம் முடிச்சு உரிமையோட அவர் கூட வாங்க மேடம்” என்று அவன் அவளைப் பேச விடாமல் பேசிக் கொண்டே போக, இதற்கும் சிரித்த முகமாக “ம்ம்ம்…” என்றாள் சாரா.

பிறகு ஓர் கட்டிடத்தின் உள் அவளை அழைத்துச் செல்ல அங்கே அஷ்வத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவன் அணிந்திருந்த பட்டு வேட்டிச் சட்டையைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளானாள் சாரா.

அவளைப் புடவையில் பார்த்தவனோ மெச்சுதலுடன் கூடிய ஒரு பாராட்டுப் பார்வையைப் பார்த்தவன் அது பொய்யோ என்னும் படியாக உடனே குற்றம் சாட்டும் பார்வையைப் பார்க்க ‘இப்போ நான் என்ன தப்பு செய்தனு இவர் இப்படி என்ன முறைக்கறாரு’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளைத் தன்னிடம் வரும் படி அவன் கண்ணாலேயே அழைக்கவும் ‘இது என்ன டா புதுசா இவர் நம்மள கண்ணாலேயே கூப்பிடறாரு!’ என்று குழம்பியவள் பின் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அவனை நெருங்க.

சட்டென தன் வலது கையை அவள் தோள் மேல் போட்டவன் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டவனோ இவள் தான் என்னுடைய வருங்கால மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகப் படுத்த அவன் செய்கையிலும் சொன்ன வார்த்தையிலும் விழி விரித்து அவனையே அவள் பார்த்திருக்கவும் அங்கிருந்த இள வட்டங்கள் சந்தோஷத்தில் வாழ்த்து சொல்ல பெரியவர்கள் ஆசிர்வாதம் பண்ண “சாரா, ஆசிர்வாதம் பண்றாங்க பார்” என்ற அவன் குரலில் கலைந்தவள் பின் அங்கிருந்த அனைவரிடமும் சகஜமாகப் பழக ஆரம்பித்தாள் சாரா.

அங்கிருந்த வரை அவனும் அவள் தோள் அணைத்து இடைத் தழுவி எங்கு சென்றாலும் அவள் கை பற்றிய படியே இருக்க ஏற்கனவே அவன் செய்து வரும் நல்ல காரியங்களால் மனதில் பூரிப்புடன் மெய் மறந்து இருந்தவளோ இப்போது அவன் இப்படி எல்லாம் உரிமையுடன் நடந்து கொள்வும் முழுமையாக அவளே அவன் பால் சாய்வது மட்டுமில்லாமல் அவன் முன்பு செய்தது எல்லாம் மறந்து போக அவளும் அவனுடன் ஒன்றத்தான் ஆரம்பித்தாள்.

அங்கு நடந்த பாட்டு, நடனம், விளையாட்டு என்று அனைத்துப் போட்டிகளையும் அவனுடன் சேர்ந்துப் பார்த்து மகிழ்ந்தவள் பிறகு சாப்பாடு நேரத்தில் அங்கு சமைத்த மசாலா கலந்த காரசாரமானத் தமிழ் உணவுகளை அவன் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் ருசித்துச் சாப்பிடவும்.

பக்கத்தில் அமர்ந்து இருந்தவளோ சாப்பிடுவதை விடுத்து அவனையே ஆ…. என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டுருக்க, அவள் அமைதியில் அவள் புறம் திரும்பியவனோ என்ன என்று புருவம் உயர்த்தி வினவ, அதில் கலைந்தவளோ ஒன்றும் இல்லை என்று கண்ணாலேயே பதில் சொல்லவும் சரி என்று விடுத்தவனோ வெகு இயல்பாக அவள் இலையிலிருந்த உருளைக் கிழங்கை எடுத்துச் சாப்பிட இதையெல்லாம் பார்த்த சாராவுக்கோ மயக்கம் போட்டு விழாத குறை தான்.

இதுவரை அவளைப் பாடாய் படுத்தியது போதாது என்று இறுதியாக கொண்டு வந்து கொடுத்த ஐஸ் க்ரீம் ப்ரூட் சாலட்டை இருவரும் எதிரெதிர் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது அவள் உதட்டோரம் வழிந்த ஐஸ் க்ரீமை எந்த வித லஜ்ஜையும் இன்றி கை நீட்டித் தன் விரலால் துடைக்க, தன்னை ஏதோ பேய் அறைந்தார் போல் அவள் விழித்துக் கொண்டிருக்கும் போதே துடைத்த அந்த விரலைத் தன் நாக்கில் வைத்துச் சுவைத்தவனோ அவளைப் பார்த்துக் குறும்புச் சிரிப்புடன் கண் சிமிட்டி விட்டு அவள் பக்கமிருந்த ஐஸ்கிரீம் ப்ரூட் சாலட்டை எடுத்துக் கொண்டுத் தன் பக்கமிருந்ததை அவள் பக்கம் நகர்த்தி வைக்க.


பெண்ணவளுக்கோ இது இன்பமான அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆமாம்! இன்னைக்கு இவருக்கு என்ன ஆச்சி? எனக்குத் தான் பேய் அறைஞ்ச மாதிரி இருக்குனா இவரு என்னமோ பேயே பிடிச்ச மாதிரி இல்ல நடந்துக்கறாரு!’ என்று யோசிக்க அதையும் மீறி அவன் செயலில் உச்சி முதல் பாதம் வரை அவளுக்குள் சிலிர்க்க, வெட்கத்துடன் தலை தாழ்த்தி அவன் சுவைத்துத் தந்த ஐஸ்கிரீம் ப்ரூட் சாலட்டை சுவைக்க ஆரம்பித்தாள் சாரா.

அதன் பிறகும் அவளிடம் சகஜமாக இருந்தவன் அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டுத் தன் குட்டி விமானம் மூலம் கார் இருக்கும் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தவனோ அவளுடனே காரில் ஏறிக் கிளம்பினான். எப்போது அவள் உதட்டோர ஐஸ்கிரமைச் சுவைத்தானோ அப்போதிருந்தே மற்றவர் முன்னே தன் பார்வையை அவள் மேல் படிய விட்டவனோ இப்போது யாரும் இல்லாமல் தாங்கள் இருவர் மட்டும் பயணிக்கும் இந்த ஏகாந்த இரவு நேர வேளையில் அடிக்கடித் தன்னவளை அவன் உரிமைப் பார்வைப் பார்த்து வர, அந்தப் பார்வையை உணர்ந்த பெண்ணவளோ வெட்கத்தில் சிவந்த படி ஒரு வித தவிப்புடன் நெளிந்தாள்.

“என்ன சாரா குளிருதா? என்று இதுவரை அவள் கேட்டிராத ஒருவித குரலில் அவன் கேட்க

‘குளிரா? முழுக்க மூடி இருக்கிற காருக்குள்ள எப்படி குளிர் வரும் இது குளிரால இல்லை எல்லாம் நீ பார்த்த பார்வையால தானு நான் எப்படி சொல்ல? சரி, இப்போ நான் என்ன சொல்லணும்? ஆமாம் குளிருதுனு சொல்லணுமா இல்லனு சொல்லணுமா?’ என்று யோசித்தவள் ஆமாம் சொல்ல வாய் திறக்கும் நேரம் அவள் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு குரலே எழுப்ப முடியாத அளவுக்குச் சண்டித் தனம் செய்ய. அவள் நிலை அறிந்தவனோ காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு

“குளிருனு தான் நினைக்கிறன்” என்றவன் பின் சீட்டிலிருந்த அவன் ஜெர்கினை எடுத்துக் கொடுக்க

“இல்ல இல்ல… எனக்கு வேணாம். உங்களுக்கும் தான குளிரா இருக்கும்? அதனால நீங்க போட்டுக்கங்க”

“நம்ம ரெண்டு பேருக்குமே குளிரிதுனு சொல்ற. அப்போ நாம இரண்டு பேருமே போட்டுப்போம்” என்று அவன் மிருதுவாக சொல்ல, அவன் குரலில் உள்ள மாறுதல் அவள் மனதில் பட்டாலும் அது எப்படி என்பது போல் அவள் முழிக்க அதை அவள் விழிகளின் வழியே அறிந்தவனோ “இப்படி!” என்று சொல்லி ஜெர்கினை அணிந்து கொண்டவன் பின் அவளைத் தூக்கித் தன் மடிமேல் அமர வைத்தவனோ அந்த ஜெர்கினால் அவளையும் சேர்த்து மூட

அவன் எப்படியோ?! ஆனால் பெண்ணவளோ மிகவும் தடுமாறியே போனாள். ஒரு காதல் பார்வைப் பார்க்க மாட்டானா என்று அவள் காத்திருக்க, அவனோ இன்று அவளைச் சந்தித்ததிலிருந்து செல்லமாய் சீண்டிக் கொண்டிருக்கவும் அதனால் ஒரு வித மயக்கத்தில் அவளோ இந்த பூமியிலே இல்லாமல் வேறு எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் அவன் இப்படி அணைக்கவும் அன்று போதையில் அவளுள் ஏற்படாத பல மாற்றங்கள் இன்று அவளுக்குள் ஏற்பட. இதெல்லாம் விட அவனுக்கே உள்ள வாசம் அவள் சுவாசத்தில் கலந்து அவள் நுரையீரல் வரை சென்று நிரப்ப அந்த வாசம் இன்னும் வேண்டும் என்பது போல் அவனுள் புதைந்தாள் சாரா.

“நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வைத்து ஜெர்கின் ஸிப்ப கிளோஸ் பண்ணுவேன் சாரா. ஆனா உனக்கு மூச்சு முட்டுமேனு தான்….” என்று அவன் குறுநகையோடு இழுக்க

அவன் சொன்ன வார்த்தையிலும் தன் செயலிலும் முகத்தில் செம்மை ஏற அவனைப் பார்க்க முடியாமல் அவன் கழுத்து வளைவிலேயே முகம் புதைத்தவள்

“உங்களுக்கு இப்படி எல்லாம் கூட என் கிட்ட பேச வருமா?” என்று அவள் ஹஸ்கி வாய்சில் கேட்க, அதே ஹஸ்கி வாய்ஸிலேயே கண்ணில் ஓர் ஒளியுடன்

“இது காரா இருக்கு இல்லனா உன்ன…” என்று அவன் முழுமையாக முடிப்பதற்குள் தன் தளிர் விரலால் அவன் வாயை மூடியவள் “போதுமே!” என்று சிணுங்க

அவள் விரலின் மென்மையில் கரைந்தவனோ முதல் முறையாக இதழ் பிரிக்காத ஒரு இதழ் ஒத்தடத்தை அவன் அங்கு பதிக்க, இப்போது கரைவது சாராவின் முறையாயிற்று. அவள் கேட்டது போல் முழுமையாக ஒரு காதலனாய் அவன் அவளிடம் சீண்ட, இதே நிலை நீடித்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்பார்த்த ஐ லவ் யூ என்ற வார்த்தையையும் அவன் சொல்லியிருப்பானோ என்னவோ?! ஆனா சாரா இருந்த மனநிலையில் இதை நீடிக்க வேண்டும் என்று கொஞ்சமும் யோசிக்காமல் “ஆமா இன்னைக்கு உங்க வாழ்வில் ஏதோ முக்கியமான நாளுனு சொல்றாங்களே! அப்படி என்ன நாள்?” என்று அவள் கேட்க


அவள் கேட்ட அடுத்த நொடியே அவன் உடல் விரைப்புற, தாறுமாறாக ரத்த ஓட்டம் எகிற கோபத்தில் கண்ணும் முகமும் சிவந்தது. அதைப் பார்த்தவளோ ‘ஏன், இப்போ அப்படி என்ன கேட்டோம்?’ என்று நினைத்தவள் அவனை விலக நினைத்த நேரம் அவனே அவளை உதறி விட, அதை உணர்ந்தவளோ பக்கத்திலிருந்த சீட்டின் நுனியைப் பிடித்துக் கொண்டு தடுமாறிய படி அமர்ந்து விட்டாள் சாரா. கொலைவெறியுடன் அவளைப் பார்த்தவனோ

“ஏய்… யார் நீ? எதுக்கு என்னச் சுத்தி சுத்தி வர? நான் எங்க போறேன் வரனு வேவு பார்க்கறதே உனக்கு வேலையா?” என்று அவன் கர்ஜிக்க

‘இதுவரை என்னிடம் மென்மையாக குழைந்தவர் இவரா?’ என்று அதிர்ந்தவள் அவன் கேட்டதற்கு இல்லை என்பது போல் தலையசைக்க

“என்ன இல்ல? வேவு பார்க்காமத் தான் நான் இருந்த இடத்த சரியா தெரிஞ்சிகிட்டு அங்க வந்தியா? ஆமா நீ யாரு? சரி, எனக்கு உன்னைப் பற்றி எதுவும் தெரிய வேணாம். உனக்கு இந்த விழி எப்படி கிடைத்ததுனு மட்டும் சொல்லிடு. எனக்கு நிச்சயமா தெரியும் இது உனக்குச் சொந்தமான விழி இல்லனு. இந்த விழி யாருடையதுனும் எனக்கு நல்லா தெரியும். இது இடையில தான் உனக்குக் கிடைச்சிருக்கு. சொல்லு எப்போ எப்படி கிடைச்சிது?” என்று அவன் கேட்க, அவன் என்ன கேட்கிறான் என்பது புரியாதவளாக தெரியாதவளாக இவள் அடிபட்ட குழந்தை என மலங்க மலங்க விழிக்க, அதற்கும் கோபம் கொண்டவன்

“இதோ இந்தப் பார்வை தான்! இந்தப் பார்வை கூட எனக்குப் பிடித்த தெரிந்த விழியில இருந்து பார்க்கிற பாரு, அப்போ தான் அந்த வினாடி தான் நான் என் வசம் இழக்கிறேன். அதிலேயும் இன்று நீ வர்ற வரைக்கும் நான் எப்படி இறுகிப் போய் இருந்தேன் தெரியுமா? ஒரு ஜடமா, உயிருள்ள பொருளா இருந்தேன். ஆனா அதே நீ வந்த பிறகு உன் விழியை நான் பார்த்த பிறகு இதோ இப்போ குழைந்தேன் பார் அப்படி மாறிடுறேன் டி! எங்கிருந்து டி வந்த? என் வாழ்கையையே புரட்டிப் போட்டு என்னை மயக்க வந்த மாய மோகினியா டி நீ?

ம்… இப்போ சொல்லு! உனக்கு எப்போ ஆக்ஸிடென்ட் நடந்தது? அதுல உன் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டதால தான இந்தக் கண்ணு உனக்கு கிடைத்தது? ம்…. சொல்லு” என்று அவன் மீண்டும் மீண்டும் அவளைக் கேட்க

இம்முறை மட்டும் சற்று சிரமப் பட்டு வாயைத் திறந்தவள் “இல்ல… எனக்கு அப்படி எந்த ஆக்ஸிடென்ட்டும் நடக்கல என்று திக்கித் திணறி அவள் சொல்ல

“ச்சூ…. ஆக்ஸிடென்ட் எல்லாம் உனக்குத் தெரிந்து தான் நடக்குமா? உனக்கு தெரியாம கூட நடந்திருக்கலாம் இல்ல? அதில உனக்கு அம்னீஷியா வந்து நீ பழசை எல்லாம் மறந்து கொஞ்ச நாள் சுத்தி இருக்கலாம் இல்ல? இல்லனா சுயநினைவையே இழந்து நீ படுத்த படுக்கையா கூட இருந்தப்ப உனக்கே தெரியாம இந்த விழியை உனக்கு வச்சிருக்கலாம் இல்ல? இதை எல்லாம் நீ சரியான பிறகு உன் வீட்டுல இருக்கறவங்க உன் கிட்ட சொல்லி இருப்பாங்க தான? அப்போ அதை எல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்த்து இப்போ சொல்லு” என்று ஏதோ யாருக்கோ நடந்தது போல் அவன் கதை கதையாகச் சொல்லிக் கேள்வி கேட்க

‘அடப்பாவி! இப்போ இவர் சொல்றதப் பார்த்தா உண்மையாவே எனக்கே தெரியாம என் வாழ்க்கையில் இது போல ஏதாவது நடந்து இருக்குமோனு எனக்கே டவுட் வருதே!’ என்று அந்த நிலையிலும் யோசித்தவள் இல்ல... அப்படி எதுவும் நிஜமாவே நடக்கல என்று சொல்ல வந்தவள் அவள் இல்லை என்று ஆராம்பிக்கும் போதே இடை வெட்டியவன்

“என்னது, இல்லையா? அப்ப குடும்பமே சேர்ந்து என்ன ஏமாத்தணும்னு முடிவு பண்ணி இன்னும் என்னென்ன எல்லாம் மறைக்கப் பார்க்கிறிங்க? எல்லாம் எதுக்கு? என் பணத்துக்குத் தானே உன்னை என் பின்னால சுத்த விட்டு இருக்கு உன் குடும்பம்? இப்போ தெரிஞ்சிக்கோ நீ எப்படி சுத்தினாலும் என் கிட்டயிருந்து ஒரு பைசா கூட நீ வாங்க முடியாது!” என்று ஏளனத்துடன் அவன் அவளை மிரட்ட, அவன் இவ்வளவு தூரம் பேசும் வரை அமைதியாக இருந்தவளோ ‘என்ன நான் குட்ட குட்ட என்னமோ ரொம்ப தான் என்ன கொட்டுறாரு இவரு! என்று சினந்தவள் இரு இதோ வரேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்

“ஆமா, இது என் கண்ணு கிடையாது தான்! இப்போ அதுக்கு என்னன்றிங்க? அதே மாதிரி நீங்க எப்படிக் கேட்டாலும் நான் இது யாருடைய கண்ணுனு சொல்ல மாட்டேன் தான். அதிலேயும் நீங்க சொல்ற மாதிரி உங்க சொத்தையெல்லாம் எழுதி வாங்கற வரைக்கும் நான் தெரிய……” அதுவரை தான் சாராவால் பேச முடிந்து.

அதன் பிறகு அவளால் குரலே எழுப்ப முடியாத ஒரு நிலையில் அவள் இருந்தாள். அதுவும் சாதாரணமான நிலையில் இருக்கவில்லை. அவள் அன்பு காதலன் அவளை மேற்கொண்டு பேச முடியாத அளவுக்கு இல்லை இல்லை மேற்கொண்டு அவள் சுவாசிக்கவே முடியாத அளவுக்குத் தன் இரு வலிய கரங்களால் அவள் குரல் வலையை அழுத்திப் பிடித்திருந்தான் அஷ்வத். அவன் ஏதோ ஆத்திரத்தில் அவள் கழுத்தைப் பிடிக்காமல்

“என்ன டி சொன்ன, என் சொத்தா? அது வேணும்னா எடுத்துக்க டி. அது மட்டும் இல்லாமல் இந்த உலகத்தைக் கூட உனக்கு எழுதி வைக்கிறேன் எடுத்துக்க. ஆனா இந்த விழி உனக்கு எப்படி வந்ததுனு மட்டும் சொல்லிடு” என்று அவன் தன் கைகளில் அழுத்தம் கொடுக்க, முதலில் சாதாரணமாக நினைத்தவள் பின் அவன் கையின் அழுத்தத்தில் மூச்சுக் காற்றுக்காகத் திணறியபடி அவள் தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கவும், அதையும் அவள் சொல்ல மறுப்பதற்கான அறிகுறியாக நினைத்தவன்

“என்னது, சொல்ல மாட்டியா? அப்போ இனி நீ உயிரோடவே இருக்கக் கூடாது. உன் சாவு என் கையில தான் டி! நீ செத்துப் போ…” என்றவன் தன் வலியக் கரங்களை இன்னும் அவள் தொண்டை மேட்டில் வைத்து அழுத்தினான்.

கண்ணில் கண்ணீர் முட்ட தரையில் துள்ளி விழுந்த மீனைப் போல் மூச்சுக் காற்றுக்காகத் தன் உதட்டைத் திறந்து திறந்து மூடியவள் அனிச்சை செயலாகத் தன் கையால் அவன் கையை அவள் விலக்க முயல, அவனோ இரும்பென தன் பிடியில் இருந்தான். யாருக்காக இந்த உயிரை சுமந்து கொண்டு இருந்தாளோ யாருடன் வாழ ஆசைப் பட்டாளோ அந்த உயிர் காதலனின் கையாலேயே இன்று தன் உயிர் போகப் போவதைப் பார்த்தவள்

‘அப்போ இன்றுடன் என் வாழ்வு முடிந்து விட்டதா? இவரிடம் எந்த ரகசியத்தையும் சொல்லாமலே நான் சாகப் போகிறேனா? பிறகு நான் எடுத்துக் கொண்ட லட்சியமும் தாத்தாவுக்குக் கொடுத்த வாக்கும் என்ன ஆவது?’ என்று பலவற்றையும் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் கருவிழிகள் இரண்டும் அசையாமல் அவன் முகத்திலேயே நிலைத்திருக்க கடைசியாக அவன் முகத்தைத் தன் கண்களில் நிரப்பிக் கொண்ட படியே அவள் கண்கள் சொருக உயிர் விடும் நேரத்தில் அவள் தன் கால்களையும் கைகளையும் அடித்துக் கொண்ட நேரம் காரிலிருந்த மியூசிக் பிளேயரைத் தெரியாமல் அவள் கைகளோ ஆன் செய்து விட

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்...”

என்று பாம்பே ஜெயஶ்ரீயின் குரலில் ஒலித்த பாரதியார் பாடலில் தெளிந்து தன்னிலை உணர்ந்து தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தை அறிந்தவனோ சட்டென தீ சுட்டாற் போல் அவள் கழுத்திலிருந்து தன் கைகளை விளக்கியவனோ ஒரு வேக மூச்சுடன் தன் கோபத்தை சமன் செய்தவனோ அவள் படும் கஷ்டத்தைச் சட்டை செய்யாமல் ஏன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் உடனே காரை எடுத்தவன் அவள் வீட்டின் முன் காரை நிறுத்தித் தன் மொபைலிலிருந்து மாயாவை அழைத்தான்.

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN