காதல்பனி 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆனால் சாராவோ அசையக் கூட முடியாமல் சீட்டில் சரிந்திருந்தாள். மாயா வந்ததும் வேறுவழியின்றி தானே அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சாராவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவளைப் பார்த்துக் கொள்ள சொன்னவனோ மேற்கொண்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனே கிளம்பியே விட்டான் அவன்.

சாராவிடம் என்ன ஏது என்று கேட்பதற்குள் அஷ்வத்தின் பர்ஸனல் டாக்டர் மாயாவைத் தொடர்பு கொண்டு பேசியவர் அதன் பிறகு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சாராவுக்கு வேண்டியதைச் செய்தவர் அவளைப் ஃபுல் ரெஸ்ட் எடுக்கும் படி கூறிவிட்டுச் சென்று விட, சாராவின் கழுத்தில் உள்ள காயத்தைப் பார்த்த பிறகு மாயா அவளிடம் எதுவும் கேட்காமல் தனிமை கொடுத்து விலகி விட

‘எவ்வளவு எதிர்பார்ப்புடன் இன்றைய நாள் விடிந்தது? அவரைப் பார்த்த பிறகும் எப்படி எல்லாம் இனிமையாக கழிந்தது. பிறகு கடைசியா ஏன் இப்படி ஆச்சி? இப்படி இவர் எனக்கு மரண பயத்தைக் காட்டவா நான் இவரைத் தேடி வந்தேன்?’ என்று எல்லாம் யோசித்து யோசித்துக் கண்ணீர் விட்டதில் சாராவுக்கு ஜுரமே வந்து விட. அதை விட எதையும் சாப்பிடவோ பேசவோ முடியாமல் பாடாய் பட்டுக்கொண்டிருந்தாள் அவள் .

அவளை விடவும் அஷ்வத்தோ அந்த விழிகளுக்கு மரண பயத்தைக் கொடுத்தோமே என்று நினைத்து நினைத்து அவன் அங்கு பாடாய் பட்டுப் போனான். அவளின் உடல் நிலையை நிமிடத்திற்கு ஒரு முறை அறிந்து கொண்டவனோ மறந்தும் அவளைப் போய் பார்க்கவோ பேசவோ முயற்சிக்கவில்லை. ஆனால் அவள் உடல்நிலை சரியான மறுநாளே இந்தியாவுக்குச் செல்ல இரண்டு பிளைட் டிக்கட்டைப் புக் செய்து அதில் ஒன்றை அவளுக்கு அனுப்பியவன் அன்று மாலையே கிளம்பி இருக்கும் படி ஒரு மெசேஜ்ஜையும் அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அவன் சொன்ன நேரத்திற்கே கிளம்பி ஏர்போர்ட் வந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியே இருக்க அவனோ அவள் கழுத்தையும் முகத்தையும் ஆராய்ந்தவிட்டு ப் பிறகு ஒன்றும் பேசாமலே ஒதுங்கிக் கொண்டான்.

இந்தியாவில் சென்னை வந்தவர்கள் அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தவர்கள் பின் ஹோட்டலில் ரூம் புக் செய்தவன்

“உனக்கு ரொம்ப டயர்டா இருந்தா ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் லன்ச் சாப்டுட்டே கிளம்பலாம் சாரா. அப்படி இல்ல உனக்கு ஓகே னா ஒன் ஹவர் டைம் எடுத்துட்டு பிரஷ் ஆகிக்க. நாம போகுற வழியிலேயே சாப்டுக்கலாம் .உங்க வீட்டுக்குத் தான் போறோம். எப்படிப் போகணும்னு வழி சொன்னீனா வண்டி புக் பண்ணிடுவேன்” என்று அவன் சொல்ல


ம்ம்ம்… என்றவள் தனக்கான ரூம் சாவியைக் கேட்க அவள் இப்படி ஒதுங்கி இருப்பது பிடிக்காமல் அவளை மாற்றும் முயற்சியாக நினைத்து அவனோ

“உனக்குத் தனியா எல்லாம் ரூம் இல்ல. இருவருக்கும் சேர்த்து ஒரே ரூம் தான் புக் பண்ணி இருக்கேன்” என்று அவன் அவளைச் சீண்ட, அந்தச் சீண்டலில் கலந்து கொள்ளாமல் அவள் அவனைப் பார்த்து முறைத்த முறைப்பில் அடுத்த நொடியே அவள் கையில் அவள் ரூமுக்கான சாவி இருந்தது.

தன் ரூமுக்கு வந்ததும் தன்னிடமிருந்த போனின் மூலம் தன் வீட்டிற்கு அழைத்தவள் தாங்கள் இந்தியா வந்து விட்டதாகக் கூறி ஒரு சில வார்த்தைகளைப் பேச அந்தப் பக்கத்திலிருந்து என்ன பதில் வந்ததோ அதற்குப் பதிலாக அவர்களுக்கு சரி என்றவள் உடனே அவனை நாடிச் சென்று ஒரு மணிநேரத்தில் கிளம்பி விடுவதாகக் கூறியவள்

சொன்ன மாதிரியே அவள் கிளம்பி வர ஏதோ சுடிதாரில் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ அழகான பிஸ்தா கலர் காட்டன் புடவையும் அதற்கேற்ற நகைகளுடன் வந்தவள் வழியிலேயே காரை நிறுத்தச் சொல்லி பூவும் கண்ணாடி வளையளும் வாங்கிக் கொண்டவள் வீட்டிலேயே உணவுக்குச் சொல்லி விட்டதால் வெளியில் எதுவும் சாப்பாடு வேண்டாம் என்று மறுத்துவிட அவனும் அவளை மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டவன் ஆனால் அடிக்கடி அவளைக் கண்களால் விழுங்குவதை மட்டும் நிறுத்தவில்லை.

அவள் வீடோ தஞ்சாவூரில் வசந்தக் கோட்டை என்னும் ஊரில் இருக்க நல்ல செழுமையான வளமான வயல் வெளிகளை எல்லாம் தாண்டி கார் ஒரு மச்சு வீட்டின் முன் நிற்க அவனை இறங்கச் சொன்னவள் தானும் இறங்கி அங்கு வெளி வாசலிலேயே நின்றிருந்த கட்டுமஸ்தான உடல் வாகுடன் கம்பீரமாய் இருந்த வயதான பெரியவரின் காலில் விழுந்து “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா” என்று சாரா கூற அவள் விழ அஷ்வத் என்ன நினைத்தானோ திடீர் என்று அவளைப் பின்பற்றி அவனும் அவர் காலில் விழ சாரா எழுவதற்குள் விழுந்ததால் இருவரும் சேர்ந்தே ஆசிர்வாதம் வாங்க அதில் கண்கலங்கிய அந்த பெரியவர் “ரெண்டு பேரும் மனம் ஒத்து சந்தோஷமா அமோகமான வாழ்வு வாழணும்” என்று அவர் வாழ்த்தும் போதே அவர் நா தழுதழுத்து விட அதை உணர்ந்த சாராவோ அவர் கையை ஆறுதலாய் பற்ற அதில் அவர் தெளிந்ததும்

“இவர் தான் என் தாத்தா. மிலிட்டரில கர்னலா இருந்ததால இவரை கர்னல் சக்கரவர்த்தினு கூப்பிடுவாங்க” என்று அவள் அவரை அஷ்வத்துக்கு அறிமுகப் படுத்தியவள் “தாத்தா இவரு..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே “கமான் மை டியர் யங் பாய்” என்றவர் அறிமுகத்திற்காக அவன் நீட்டிய கையை இறுக்கப் பற்றி குலுக்கியவரோ ஒரு வேகத்துடன் அவனை இழுத்து ஆரத்தழுவவும், அதில் அவன் மூச்சுச் திணறிய நேரத்தில் “என்ன யா உடம்பு வச்சிருக்க? ஏதோ மைதா மாவைப் பிசைந்த மாதிரி. பாரு இப்பவே என் உடம்பு சும்மா கின்னுனு கர்லா கட்ட மாதிரி இருக்கு. அப்போ உன் வயசுக்கு எல்லாம் பார்க்க நான் எப்படி இருந்து இருப்பேன் தெரியுமா? சும்மா அய்யனார் கணக்கா இல்ல இருப்பேன்?” என்று தினமும் ஜிம் போய் உடலைக் கட்டுகோப்பாய் வச்சிருக்கும் அவனை அவர் வார

“போதுமே! ஆரம்பிச்சிட்டிங்களா உங்க வேலைய? அவரே இன்னைக்குத் தான் உங்களைப் பார்க்கிறார். பிறகு நீங்க எப்படி இருந்திங்கனு அவருக்கு எப்படித் தெரியும்? பாட்டி இல்லை என்றதால சும்மா கதை அளக்க வேண்டாம். அதுக்கும் மேல நீங்க சொன்ன அய்யனார் எப்படி இருப்பார்னு கூட அவருக்குத் தெரியாது” என்று சாரா தாத்தாவை வார

“ஏன் தெரியாது? கத்தையா மீசை வச்சி நல்ல ஜிம் பாடியா கையில அருவாளோட இந்த ஊர் எல்லையில் ஒரு கால மடக்கி பெரிய பெரிய கண்ணோட உட்கார்ந்து இருக்குமே ஒரு பொம்மை! அது தானே அய்யனார்?” என்று இதுவரை அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தவன் இப்போது சாராவை வார, அவன் சொன்ன பதிலில் அவள் வாய் பிளந்து நிற்க.

“ஹா… ஹா… என்று சிரித்தவர் செர்டன்லி கரெக்ட் மை டியர் யங் பாய்” என்று அவன் தோள் தட்டிப் பெருமைப் பட்டவர் “பார்த்தியா என் பேரனை?” என்று அவர் சாராவிடம் கேட்க, வாய் கொள்ளா சிரிப்புடன் “அதான் பார்க்குறேனே” என்று தலை ஆட்டியவள் “கொஞ்ச நேரம் இருவரும் இங்கேயே இருங்க” என்று சொல்லி உள்ளே சென்றவள் திரும்பி வரும்போது அவள் கையில் ஆரத்தி தட்டு இருக்க அவனுக்கு ஆலம் சுற்றிய பிறகே அவனை உள்ளே போக விட்டாள் சாரா.

உள்ளே வந்தால் அவனுக்கு என்று விருந்தில் எல்லா வகை அசைவ உணவும் இருக்க “வா சின்னா சாப்பிடலாம்” என்றவர் அவனுக்கு இலை வைத்துப் பரிமாறவும், தாத்தா பெயரை மாற்றிச் சொன்னதால்

“என் பெயர் அஷ்வத்!” என்று அவன் சொல்ல, உடனே சாரா

“எங்க ஊர் வழக்கப் படி பேத்திய கல்யாணம் பண்ணிக்கப் போறவங்கள எல்லாம் சின்னானு தான் பெயர் சொல்லி கூப்பிடுவாங்க” என்று அவள் சொல்ல

ஓ... என்றவன் உங்கள் விருப்பம் என்பது போல் அமைதியாகி விட

“நீங்களும் உட் காருங்க தாத்தா. உங்க ரெண்டு பேருக்கும் நான் பரிமாறுறேன்” சாரா அவரைத் தடுக்க

“இல்ல பொம்மி, சின்னாவுக்கு நானே பரிமாறேன்” என்று சொன்னவர் சொன்னது போல் அவரே பரிமாற, அவர் செயலைப் பார்த்த அஷ்வத்துக்குத் தான் சற்று வியப்பாய் போனது. ‘முதன் முதலாய் பார்க்கும் ஒருத்தன் கிட்ட அதுவும் தன் பேத்தி ஜாதி மதம்னு பார்க்காம வேற்று நாட்டான் ஒருத்தனை விரும்பறனு சொல்லி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா இவர் என்ன இப்படி எல்லாம் உபசரிக்கிறார்? ஒருவேளை இது தான் தமிழர் பண்பாடோ?!’ என்று அவன் யோசிக்க

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு பொம்மி” என்று தாத்தா சாராவிடம் சொல்ல அதில் கலைந்தவனோ

“அது என்ன பொம்மி?” என்று அவன் கேட்க

“எனக்கு சாரானு கூப்பிட பிடிக்கல. அதான் என் அம்மா பெயரான பொம்மாயிய என் பேத்திக்கு வைத்து பொம்மினு கூப்பிடுறேன்” என்று தாத்தா விளக்கம் கொடுக்க

“ஓ…” என்றவன் “வா பொம்மி நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்று அஷ்வத் அவளையும் சாப்பிடக் கூப்பிட

‘என் வீட்டுல உட்கார்ந்துகிட்டு என்னையே சாப்பிடச் சொல்றாரா இவரு? அதுவும் என் தாத்தா கூப்பிடற பெயரை வச்சி!’ என்று மனதுக்குள் குமைந்தவள்

“இல்ல வேணாம்… நான் அப்பறம் சாப்பிடுறேன்” என்று சொல்ல, தாத்தாவும் அஷ்வத்தும் ஒரு சேர மறுபடியும் அவளைச் சாப்பிடச் சொல்ல வேறு வழியில்லாமல் தட்டில் சாதம் வைத்து ரசம் ஊற்றிச் சாப்பிட ஆரம்பித்தாள் சாரா.

“என்ன இதை மட்டும் சாப்பிடற?” என்ற கேள்வியுடன் அஷ்வத் அவளைப் பார்க்க, அவள் தாத்தாவோ

“இன்னைக்கு நீ கவிச்சி சாப்பிட மாட்ட இல்ல பொம்மி? நான் தான் உனக்கு வேற சமைக்கச் சொல்ல மறந்துட்டேன். வடிவாச்சி இருந்தா தெரிஞ்சிருக்கும். அது இன்னைக்கு வேலைக்கு வரலனு மூர்த்திதான் சமைச்சான். நானும் வேற சொல்லலையா..” என்று அவர் குற்ற உணர்வில் பேசிக் கொண்டே போக

“விடுங்க தாத்தா. இப்போ என்ன, அதான் ரசம் இருக்கில்ல?” என்றவள் சாப்பிட

“சாயந்திரம் காட்டுப் பக்கம் போனீனா உன் கூட சின்னாவையும் கூட்டிப் போமா” என்று அவர் சொல்ல

“சரி தாத்தா” என்றவள் சாப்பிட்டு முடித்து விட “நீங்க நிதானமா சாப்பிட்டு மெல்ல வாங்க. நான் கொஞ்சம் எனக்கான வேலையைப் பார்க்கிறேன்” என்று அஷ்வத்திடம் சொன்னவள் எழுந்து சென்று விட, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனுக்குப் பரிமாறியவர் பின் அவனை அழைத்துச் சென்று மேலே உள்ள அவன் அறையைக் காட்ட, அதுவோ ஒரு இளவரசர்கள் தங்குவது போல் சகல வசதியுடன் இருந்தது. பாத்ரூமில் உள்ள பாத் டப் முதல் கொண்டு அனைத்து இடத்திலும் ரசனையும் கலைநயமுமாய் இருக்கவும், அதைப் பார்த்தவன்

“இதை எல்லாம் எப்போ யாருக்காக செய்தது தாத்தா?” என்று கேட்க

“இதெல்லாம் எப்பவோ வந்து போற விருந்தாளிகளுக்காக செய்தது சின்னா. எல்லாமே மேல் நாட்டுப் பாணியில இருக்கும். அதனால தான் உன்னை இங்கு தங்கச் சொல்றேன். உனக்கு வேறு மாற்றனும்னாலும் சொல்லு நான் மாற்றிடுறேன். இப்போ ஏதாவது வேணும்னாலும் எதிர் அறையில இருக்குற என்னையோ இல்ல கீழ இருக்கிற பொம்மியோட அறைக்கோ வந்து கேளு” என்றவர் நெகிழ்ச்சியுடன் அவன் தலையை வருடி “ரெஸ்ட் எடுப்பா” என்று கூறி அவனுக்கு ஏசியைப் போட்டு விட்டு விலகி விட, அவரின் பாசத்தில் தலை சுற்றி நின்றவனோ

‘என்னைப் பார்த்தா இவர் ஏன் இவ்வளவு எமோஷ்னல் ஆகறாரு? நாமளும் ஏன் அவரைப் பார்த்தவுடனே சாராவைப் பின் பற்றி கால்ல விழுந்தோம்? நான் இங்கு எதுக்காக வந்தேன் அதை மறந்து எதுக்கு இவர் கிட்ட இவ்வளவு தன்மையா நடந்துக்கிறேன்?!’ என்று பலவாறு யோசித்தவன் உடல் அசதியில் தன்னை மீறி தூங்கியே விட, திரும்ப சாரா வந்து மாலை அவனை எழுப்பும் போது தான் எழுந்தான் அவன். உடனே அவள் கிளம்பச் சொல்ல என்ன ஏது என்று கேட்காமல் அவனும் கிளம்பினான்.

வண்டி வேண்டாம் என்று சொல்லிக் குறுக்கு வழிப் பாதைகளில் அவனை நடத்தியே கூட்டிச் சென்றவள் சற்று ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு இடத்தில் ஒரு சாமாதி கட்டப்பட்டு இருக்க அங்கு அவனை அழைத்துச் சென்றவள் ஏற்கனவே சுத்தமாக இருந்த சாமாதியின் மேல் பகுதியை இவள் கையால் மறுபடியும் துணி கொண்டு சுத்தம் செய்து தான் கொண்டு வந்திருந்த பூவை மாலையாகப் போட்டு அவனையும் போடச் சொன்னவள். அதே மாதிரி அங்கு எரிந்து கொண்டிருந்த அணையா விளக்கில் எண்ணை ஊற்றியவள் அதன்படியே அவனையும் செய்யச் சொல்ல எதற்கும் தட்டாமல் உடனே செய்தவன் அவள் வணங்கி எழுந்ததும் ஓர் இடம் பார்த்து தரையில் அவள் அமர, அவள் எதிரில் அமர்ந்தவனோ

“யாருடைய சமாதி சாரா இது? உன் பாட்டிதா?” என்று கேட்க ஒரு வினாடி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவளோ மறுவிநாடியே

“ஆமாம்” என்று சொல்லி விட

“ஓ…. அப்ப உன் அப்பா அம்மா எங்க?”

“நான் பிறந்தப்பவே இறந்துட்டாங்க”

“அப்ப உன் தாத்தா தான் உன்ன வளர்த்தாரா?”

“ம்ம்ம்… ஆமா”

“அவருக்கு உன் மேல ரொம்ப பாசமோ?”

சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “ஏன் அப்படி கேட்குறிங்க?” என்று கேட்க

“இல்ல.. நேற்று நாம இந்தியா போகப் போறோம் என்றதை பற்றியே நான் உன் கிட்ட சொல்லலை. நீ என்னைக்கோ சொன்னதை வைத்து திடீர்னு தான் பிளைட் புக் பண்ணினேன். அப்படி இருக்கும் போது நீ உன் தாத்தா கிட்ட நாம வர்றத பற்றி எதுவும் சொல்லி இருக்க முடியாது. ஆனா நீ என்ன கூட்டிட்டு வந்தப்ப தாத்தா உன் கிட்ட சண்டை சச்சரவே பண்ணல. ஏன்? உங்க ஊர்ல எல்லாம் வேற்று ஜாதி மதம் இனத்துலயிருந்து கல்யாணம் பண்ணினா கத்தி கடப்பாரையோட இல்ல எதிர்ப்பிங்க? அப்படி கல்யாணம் பண்ணவங்களையும் சேர்த்து இல்ல எதிர்ப்பிங்க? இங்க நாம இன்னும் கல்யாணமே பண்ணல தான். ஆனா அவரு இவ்வளவு அமைதியா இருக்கார்னா அது உன் மேல இருக்குற பாசம் தானே?” என்று அவன் கேட்க,

அவனுக்குப் பதிலாக தன் கண்ணோடு அவன் கண்களை உறவாட விட்டவளோ “என்னை பிடிக்கும் தான். ஆனா என்னைய விட….” என்றவள் சற்று நிறுத்தி நிதனாமாக “முதல் பார்வையிலேயே அவருக்கு உங்களை தான் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று அழுத்திச் சொல்ல.

“ம்ம்ம்…. எனக்கும் அவரைப் பார்த்தா உள்ளுக்குள் ஏதோ பண்ணுது தான்” என்று அவனும் யோசனையில் இழுக்கவும்

“என்ன? என்ன? அப்படி என்ன பண்ணுது?” என்று இவள் ஆர்வத்துடன் கேட்கும் போதே அவன் போனில் அழைப்பு வர அதை அவன் எடுத்துக் கொண்டு சற்று தூர சென்று விட, அவள் கேட்க வந்தது எதுவுமே கேட்க முடியாமல் போய் விட்டது. பேசி விட்டு வந்தவனோ “ஆமா, தாத்தா இப்போ எங்க இருக்கார்?” என்று அவன் கேட்க

“அவரு ஏதோ கோவில் நில விஷயமா கோவில் வரைக்கும் போய் இருக்கார். ஏன் என்ன விஷயம்?”

“இப்போ நான் அவரைப் பார்க்கணும். என்ன கூட்டிட்டுப் போறியா?” என்று அவன் அவசரப் பட

“நானா? நான் அங்க வரல. இப்போ ஏன் இவ்வளவு அவசரம்? ராத்திரிக்குள்ள தாத்தா வீட்டுக்கே வந்துடுவாரே?”

“இல்ல.. நான் இப்பவே பார்க்கணும்” என்று அவன் பிடிவாதம் பிடிக்கவும்

“சரி சரி.. கொஞ்ச தூரம் போன உடனே நம்ம காட்டு வீடு வந்திடும். அங்க யார்னா வேலை செய்றவங்களைக் கூட்டிப் போகச் சொல்கிறேன்” என்றவள் அதே அவசரத்துடன் கிளம்பிச் சென்று அங்கிருந்தவர்களுடன் அவனை அனுப்பி வைத்தாள் சாரா.

இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் தங்கள் அறைக்குச் சென்று விடத் தன் அறைக்குச் சென்ற அஷ்வத்தோ சிறிது நேரத்திற்கு எல்லாம் சாராவைத் தேடி அவள் அறைக்குச் சென்றான். அவள் அறையோ பத்தடிக்குப் பத்தடி என்று சின்னதாக இருந்தது. ஒருபக்க மூலையில் குடிக்க மண்பானை தண்ணீர் குடமும் அதை ஒட்டினாற் போல் டேபிள் சேர் இருக்க அதன் பக்கத்தில் ஒரு சின்ன பீரோ. அதை ஒட்டி பாத்ரூம் கதவு. இன்னோர் பக்க சுவரிலிருந்த ஷெல்ப் முழுக்கப் புத்தகங்கள். ஒருவர் மட்டுமே படுக்கக் கூடிய சின்னக் கட்டில். ஏசி, தேவைக்குப் பயன்படுத்த ஒரு பேன், லைட். இதை எல்லாம் பார்த்தவனோ தன் அறையை ஒப்பிட்டுப் பார்த்து

‘இவள் ஏன் இப்படி ஒரு அறையில் இருக்கிறாள்?’ என்று நினைத்தவன் அவள் அங்கில்லாததால் அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியும் எண்ணத்தில் முதல் முறையாக அவள் நம்பருக்கு அழைக்க அதுவோ அங்கிருந்த டேபிளில் தான் இருப்பதை

‘உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல..’
என்ற பாட்டோடு இசைத்துக் காட்டியது. அவள் தனக்காக வைத்திருக்கும் பாடலைத் திரும்பக் கேட்க நினைத்தவனோ மறுபடியும் அழைக்க, அது இசைந்து கொண்டிருக்கும் போதே பின்புறத் தோட்டத்துக்குச் செல்லும் கதவைத் திறந்து கொண்டு சாரா உள்ளே நுழைந்தவள்.

எதிர்பாராமல் அவனை அங்கு பார்த்ததில் அதிர்ந்து நின்றவள் அங்கு தன் போனிலிருந்து ஒலித்த பாடலைக் கேட்டு ஒருவித சங்கடத்துடன் ஓடிச் சென்று அதை நிறுத்தியவள் பின்

“சொல்லுங்க என்ன விஷயம்?” என்று அவனிடம் கேட்க

“நான் நாளைக்கே ஊருக்குப் போறேன் சாரா”

“என்னது நாளைக்கா?” என்று வாய் விட்டு அதிர்ந்தவள் ‘இவர் எதற்கு வந்தார்? இப்போ உடனே எதுக்குப் போறனு சொல்றார்?’ என்று அவள் யோசிக்க

“நான் மட்டும் போகிறேன் நீ இங்கேயே இரு. உனக்கு தான் லீவு இருக்கில்ல? அதுவரை இருந்துட்டு சரியா லீவு முடியறப்போ வா”

“இல்ல வேணா… நா நாளைக்கு உங்க கூடவே வந்திடுறேன்”

“வர வேணாம். ரொம்ப நாள் கழித்து தாத்தாவைப் பார்க்கிற. அவரும் உன் மேல ரொம்ப பாசமா இருக்கார். அதுவும் இல்லாமல் வீட்டுல யாருமே அவருக்குத் துணையா இல்ல. இப்போ நீயும் கிளம்பிட்டா அவர் மனசு கஷ்டப்படாதா?”

“அப்ப நீங்க போகறது மட்டும் அவர் மனசுக்குக் கஷ்டத்தைக் கொடுக்காதா?”

“நான் யாரோ தானே? அதனால நான் போனா அவருக்குக் கஷ்டம் இருக்காது. ஆனா நீ பேத்தி! நீ போனா இருக்கும். யாரும் இல்லாத அவருக்குப் பேத்தி நீ தானே துணையா இருக்கணும்?” என்றவனிடம் ஏதோ சொல்ல வந்தவளோ பின் வேண்டாம் என்ற முடிவுடன் அமைதி காக்க

“சரி உடம்ப பார்த்துக்கோ. லீவ் முடிஞ்ச உடனே சீக்கிரம் வந்திடு. டேக் கேர்” என்றவனோ ஒரு வித எதிர்பார்ப்புடன் அவளிடம் நெருங்க, பெண்ணவளுக்கும் ஆசை தான் அவன் தோள் சாய்ந்து ஓர் இறுகிய அணைப்பைப் பெற வேண்டும் என்று. ஆனால் அதன் பிறகு அவன் வலியையும் வேதனையையும் இல்ல தருவான் என்ற எண்ணத்தில் கண்களில் பயம் சூழ அவள் அவனைப் பார்க்கவும், அந்த விழிகளில் பயத்தைப் பார்த்தவனோ ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அவளை விட்டு விலகிச் சென்றான் அஷ்வத்.

எப்போது அவள் அவனால் மரணத்தைத் தொட்டு வந்தாளோ அதற்கு முன்பு வரை அவனிடம் காதலை யாசித்தவள் அதன் பிறகு அவனிடமிருந்து மன்னிச்சிடு என்ற ஒற்றை வார்த்தையைத் தான் எதிர்பார்க்கிறாள். அன்றைய சம்பவத்திற்கு விளக்கம் கூட அவளுக்கு வேண்டாம். ஒரு கோபத்திலோ ஏதோ ஒரு வேகத்திலோ மனிதர்கள் இப்படி நடந்து கொள்வது இயல்பு. அதன் பிறகு அந்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் அஷ்வத்தோ அவளிடம் இயல்பாக பேசுகிறான். முன்பை விட அக்கறையாக இருக்கிறான். முன்பை விட இப்போது எல்லாம் அவன் பார்வையும் அதிகமாகவே அவள் மேல் படிந்து மீள்கிறது. இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் தான். ஆனால் மன்னிப்பு மட்டும் அவன் வாயிலிருந்து வரவில்லை. தவறு என்று உணர்ந்தாலும் அதை அவன் சொல்ல ஈகோ பார்க்கிறான் என்பது சாராவின் எண்ணம்.

பாவம் பெண்ணவளுக்குத் தெரியவில்லை ஒருவர் தான் செய்ததைத் தவறு என்று அறிந்து அதை உணர்ந்தால் தான் மன்னிப்பு கேட்பார்கள் என்று. உண்மை தானே இந்த வினாடி வரை அஷ்வத் தான் செய்ததைத் தவறு என்று உணரவேயில்லையே! பிறகு எப்படி கேட்பான்? இதை எல்லாம் விட அவன் செய்ததைச் சரி என்றே உணர்கிறான். இது எங்கே பெண்ணவளுக்குத் தெரியப்போகிறது?

அவன் மன்னிப்புக் கேட்காததனால் அவன் பேச்சும் காட்டும் அக்கறை என்று எல்லாம் போலி வேஷம் என்று தான் தெரிகிறது அவளுக்கு. இப்படியே இருவரும் இரு துருவமாய் இருக்க, இவர்கள் இருவரின் போராட்டத்திற்கு முடிவு மறுநாள் காலையே வந்தது.

மறுநாள் காலை உணவுக்காக அமர்ந்தவன் “தாத்தா! நான் ஊருக்குப் போறேன். அடுத்த முறை வரும்போது கல்யாணத்த சீக்கிரம் வச்சிக்கலாம். உங்க பக்கத்துலயிருந்து யாரை எல்லாம் கூப்பிடனுமோ அவங்கள்ள முக்கியமானவங்கள மட்டும் கூப்பிடுங்க. என் பக்கத்துலயிருந்து யாரும் வர மாட்டாங்க. என் அப்பா தமிழர் தான். ஊரும் தமிழ் நாடுனு தெரியும். பட் எந்த ஊருனு தெரியாது. இப்போ அவரு உயிரோடவும் இல்ல. என் அம்மா…” என்றவனோ ஒரு வினாடி நிறுத்திப் பின் தொண்டையைச் சரி செய்தவன் “அவங்க அமெரிக்கன் இன்னும் இருக்காங்க. ஆனா வேறொரு லைப்ல செட்டில் ஆகி கணவன் குழந்தைகள்னு தனியா இருக்காங்க. சோ அவங்க என் கல்யாணத்துக்கு வர மாட்டாங்க. அதனால நீங்க எல்லா ஏற்பாடும் செய்துடுங்க. கல்யாணம் முடிஞ்ச உடனே நான் சாராவ கையோட கூட்டிட்டுப் போய்டுவேன். அப்பறம் இன்னொன்னு, நீங்க எப்படி எடுத்துப்பிங்கனு தெரியல. நிச்சயம் தப்பா எடுத்துக்காதிங்க.

உங்களுக்கு சாரா மட்டும் தான். அவ என் கூட வந்த பிறகு நீங்க ஏன் இங்க தனியா இருக்கணும்? நீங்களும் எங்க கூடவே வந்திடுங்க” என்று முதலில் சரளமாக ஆரம்பித்தவன் பின் கொஞ்சம் யோசனையுடனே முடித்தான் அஷ்வத்.

இதை எல்லாம் கேட்ட சாரா ‘ஐயோ! இவர் ஏன் இப்பவே இதை எல்லாம் சொல்றார்?’ என்று நினைக்க

“என்னது உன் கூட வரணுமா? என்னை என்ன பத்தோட பதினொன்னா இந்த நாட்டுல வாழுறவன்னு நினைச்சியா? இந்த நாட்டோட மகன் டா! என் தாய் மண்ணுக்காவும் அவள் பிள்ளைகளான என் சகோதர சகோதிரிகளுக்காகவும் என் உயிரையும் துச்சமா மதித்து பல குண்டடிகளை இராணுவத்தில் இருக்கும் போது பட்டவன் டா. இராணுவத்தில இருந்து வந்த பிறகும் நான் இங்க சும்மா உட்கார்ந்து இருக்கனு நினைச்சியா? நமக்கு எல்லாம் உயிர் நாடியான சோறு போடுற விவசாயத்த வளர்த்துட்டு வரன் டா. போய் பாரு தமிழ்நாட்டில் தண்ணி இல்லாம எத்தனை இடம் காய்ந்து இருக்குனு. ஆனா இன்னைக்கு என் ஊர நான் எவ்வளவு பசுமையா வச்சிருக்கேன் தெரியுமா? அதுக்கு நானும் என் ஊர் மக்களும் உழைச்ச உழைப்பு பட்ட கஷ்டம் இழந்த இழப்பு எவ்வளவு தெரியுமா? இதை எல்லாம் விட்டுட்டு நான் உன் கூட வரணுமா? இப்படி தான் முன்னாடி ஒருத்தன் சொன்னான்…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொண்ட சாரா சட்டென அவர் கையைப் பிடித்து அழுத்தவும் அதில் மேற்கொண்டு சொல்ல வந்த வார்த்தையை மென்று முழுங்கியவர்


“இப்போ கேட்டுகோ, உன் ஊர் தொழில் வீடுனு எல்லாத்தையும் நீ விட்டுக் கொடுத்துட்டு வந்தா தான் என் பேத்திய உனக்குக் கட்டித் தருவேன். அதுவும் இங்கே வந்து என் கூட சேர்ந்து விவசாயம் தான் பார்க்கணும். இதுக்குச் சம்மதம்னா என் பேத்திய கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா நீ கிளம்பலாம்” என்று ஏக வசனத்தில் மூச்சிரைக்கப் பேசியவர் உடனே தன் அறைக்குச் செல்லத் திரும்ப, இதுவரை அவர் பேசிய பேச்சில் அமைதி காத்தவனோ

“ஹலோ மிஸ்டர் சக்கரவர்த்தி! என்னை பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் வர்ற நாய் குட்டி, அப்படியே வீட்டோட வாசல்லையே கட்டிப் போட்டுடலாம்னு நினைச்சிங்களோ? என் கிட்ட உங்க பாச்ச பலிக்காது மிஸ்டர். அப்படி எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துத் தான் நான் உங்க பேத்தியக் கட்டணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல. அவளை நீங்களே பார்த்துக்கோங்க. குட் பாய் டு ஆல் ஆஃப் யூ” என்ற சொல்லுடன் தன் அறைக்குச் சென்று துணிகளை எடுக்கவும் அவன் பின்னோடே வந்த சாரா

“ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க? அவர் வயசுல பெரியவர் தானே? ஏதோ கோபத்துல நாளு வார்த்தை பேசுவார் தான். நீங்க கொஞ்சம் பொறுத்துப் போனா என்ன? நேத்து பேசும் போது கூட இப்படி ஒரு பிளான் வச்சிருக்கறதா நீங்க என் கிட்ட சொல்லலையே?”

“நேத்து நைட் உன்னைப் பார்க்கற வரைக்கும் இல்ல தான். அதற்குப் பிறகு தான் தோன்றியது அதான் உடனே செயல்படுத்த நினைச்சேன்” என்றவன் தன் சூட்கேஸை எடுக்க

“நீங்க பாட்டுக்கு உங்க பேத்திய நீங்களே பார்த்துக்கோங்கனு சொல்றிங்களே, உங்க மனைவிய இப்படித் தான் பாதியிலேயே விட்டுட்டுப் போவீங்களா?”

எடுத்த சூட்கேஸைக் கீழே வைத்தவன் “நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல சாரா” என்ற பதிலைக் கொடுக்க

“சரி கல்யாணம் ஆகல. ஆனா நாம இரண்டு பேரும் விரும்பறோம் தானே? அப்போ உங்க காதலுக்கு என்ன மதிப்பு இருக்கு?”

எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தவனோ “காதலா? நான் உன்னக் காதலிக்கிறனு எப்போ சொல்லி இருக்கேன்? நல்லா யோசித்துப் பாரு. ஒரு முறை கூட நான் உன் கிட்ட காதலிக்கிறன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினதே இல்லையே?” என்று அவன் ஆணித்தரமாக சொல்ல, யோசித்ததில் நெஞ்சில் வலியுடன் ஆமாம் என்று அவளுக்குப் பட

“சரி காதலை சொல்லல. கல்யாணம் பண்ணிக்கறனு சொன்னீங்களே இப்போ அதுக்கு என்ன சொல்ல வரிங்க?” என்று கண்களில் வழியத் துடிக்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டு அவள் கேட்க

“இங்கே பார் நான் உன்னை விரும்பல. கடைசி வரைக்கும் உன்னைய விரும்பவும் மாட்டேன். எனக்குத் தேவையான பொருள் உன்கிட்ட இருக்குது. அதுக்காகத் தான் உன்கிட்ட பழகினேன். மற்ற படி வேற எதுவும் இல்ல. என்னை விட்டுட்டு உன் தாத்தா சொல்றவனை கட்டிக்கோ. பாய்..” என்று எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொன்னவன் ஒரு வேகத்துடன் அங்கிருந்து சென்றே விட்டான் அஷ்வத்.

பெண்ணவளோ எந்தவொரு சலனமும் இல்லாமல் தரையில் வேர் ஊன்றியவள் போல் நின்றே விட்டாள். தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் மறந்து யாருக்காக இன்று வரை உயிர் சுமந்து வாழ நினைத்தாளோ யாரைத் தன் உலகமென எண்ணினாளோ எந்தக் காதலை அவனுக்குள் விதைப்பேன் என்று சபதம் கொண்டாளோ அவனோ இன்று காதலே இல்லை அது வரவும் வராது என்று வார்த்தைகளை அமிலமென அவள் மேல் ஊற்றவும் வாழ்வில் தான் தோற்று விட்டதை உணர்ந்தவளோ கண்கள் சொருக நூலருந்த பட்டமென தரையில் மயங்கி விழுந்தாள் சாரா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN