காதல்பனி 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 11

சாரா மட்டும் இல்லை, பாசத்துக்கு அடி பணியாமல் இதுவரை திடகாத்திரமாக இருந்து வந்த தாத்தா கூட அங்கு அவர் அறைக்குச் சென்றவர் நெஞ்சு வலியில் மயங்கி சரிந்து விட இங்கு சாராவும் நினைவு தப்பி விழுந்து விட இதற்கெல்லாம் காரணமான அஷ்வத்தோ இதை எதையும் அறியாமல் அறிந்து கொள்ளவும் விரும்பாமல் ஃபிரான்சை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான்.

முதலில் வேலையாட்கள் தான் தாத்தாவின் நிலைமையைப் பார்த்து விட்டு சாராவைத் தேடிச் சொல்லச் செல்ல, அங்கு அவளிருந்த நிலையைப் பார்த்தவர்கள் அவள் மயக்கத்தைத் தெளிய வைத்தப் பிறகு அவர்கள் குடும்ப டாக்டருக்குத் தகவல் சொன்னவர்கள் பின் தாத்தாவுக்கு உறவான அவர் மனைவியின் சகோதரனான வேலுச்சாமி ஐயாவை அழைத்து விவரம் சொன்னார்கள்.

அதன் பிறகு டாக்டர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைத்துத் தாத்தாவை ஆஸ்பிடலில் சேர்த்துப் பரிசோதித்ததில் தாத்தா அபாய நிலையைத் தாண்ட அவருக்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்குக் கெடு வைக்க சாராவுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் அவள் அஷ்வத்தை மறந்தே போனாள்.

அதே நேரம் ஆஸ்பிடல் வந்த வேலுச்சாமி
“சாரா மாமாவுக்கு என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்கார்?” என்று கேட்க, இதுவரை தனக்குத் துணைக்கு யாருமே இல்லையே என்று இருந்தவள் அவரைப் பார்த்ததும் அவர் மேல் சாய்ந்து “தாத்தா!” என்று கதறி அழ, “எல்லாம் அந்த கடன்காரனால வந்தது. அவன் வந்துட்டுப் போனதால தான் இப்படி எல்லாம் நடக்குது. உன்ன யாரு அவனக் கூட்டிட்டு வரச் சொன்னா? வரேனு என் கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாம் இல்ல வந்த பிறகு நான் வர்ற வரைக்குமாவது அவனப் பிடித்து வச்சிருந்திருக்கலாம். மாமாவ அவன் கிட்டப் பேச விட்டுட்டு இப்போ இந்த நிலைக்கு அவரைக் கொண்டு வந்து வச்சிருக்க. சரி நடந்த வரைக்கும் விட்டுடுவோம். மாமாவை நான் என்ன சொல்லியாவது சமாளிச்சிக்கிறேன். நீ அவனை மறந்துட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிற வழியப் பாரு” என்று அது ஆஸ்பிடல் என்பதையும் மறந்து தன் மெல்லிய உடல் வாகையும் மீறி அவர் சத்தம் போட

அவளோ தன் வழக்கமான பல்லவியான முடியாது என்பதாகவே தலையை ஆட்ட

“அதானே! மாறிடுவியா நீ?..” என்றவர் ஏதோ மேற் கொண்டு சொல்ல வரும் நேரம் தாத்தாவின் அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் இன்னும் அவர் அபாய நிலையைத் தாண்டவில்லை என்றும் நாளை காலை வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற வார்த்தையையே அவர் மறுபடியும் சொல்லி விட்டுச் சென்று விட.

அதன் பிறகு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது யார் வந்தார்கள் யார் போனார்கள் என்ன பேசினார்கள் கேட்டார்கள் அதற்கு நாம் என்ன பதில் தந்தோம் என்ன சாப்பிட்டோம் என்று எதுவும் தெரியாமல் ஒரு வித இறுகிய மனநிலையிலேயே இருந்தாள் சாரா.

இருபத்தி நான்கு மணி நேர கெடுவுக்குப் பிறகு மறுநாள் தாத்தா அபாயத்தைத் தாண்டி விட அதை அங்கிருந்தவர்களிடம் கூறிய டாக்டர் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே இருந்த படியே தாத்தாவைப் பார்த்துச் செல்லச் சொல்ல அவர் கண் விழிக்கும் வரை போக மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் சாரா அங்கேயே இருந்தாள்.

மாலை கண் விழித்த தாத்தா சாராவிடம் பேச வேண்டும் என்று கூப்பிடச் சொல்ல, அவர் எதிரில் அழக் கூடாது என்ற திடத்துடன் உள்ளே சென்றாள் சாரா.

“தாத்தா உங்களுக்கு ஒண்ணும் இல்ல. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவிங்க. நான் இங்க தனியா இல்ல தாத்தா எனக்குத் துணையா வேலுச்சாமி தாத்தா இருக்கார்” என்று அவர் தனக்காகக் கவலைப் படுவார் என்ற எண்ணத்தில் சாரா தைரியம் சொல்ல

“அப்போ சி..ன்..னா..? அவன் சொன்ன மாதிரியே வீட்டை விட்டுப் போய்ட்டானா பொம்மி? அப்ப அவனுக்கு இந்த தாத்தா வேணாமா?” என்று அவர் கேட்கும் போதே குரல் உடைந்து கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடியது.

இதுவரை மனதிலிருந்த திடம் பறந்து போக அந்த கண்ணீரில் துடிதுடித்துப் போனவள்

“தாத்தா மச்சானப் பத்தி இப்போ எதுவும் பேச வேணாம். நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க….”

“நான் வீட்டுக்கு வந்தா மட்டும் அங்க சின்னா இருப்பானா? மாட்டானே… நான் அவன் பிறந்ததில் இருந்து இதுவரை அவனைப் பார்க்காத வரை அவனைத் தொட்டு அணைக்காத வரை எனக்கே தெரியாமல் எனக்குள்ள இருந்த பாசம் இன்று அவனைப் பார்த்துக் கையால் அரவணைச்சப் பிறகு வந்துடுச்சே பொம்மி! அவன் இல்லாத அந்த வீட்டுல நான் எப்படி இருப்பேன் பொம்மி?”

“தாத்தா.. அவர் வந்துடுவார் தாத்தா. ஏதோ கோபம் அவ்வளவு தான்! அது கூட உங்க மேல இல்ல என் மேல தான். அதான் இந்தளவுக்குப் பேசிட்டார். பாருங்க, உங்க மேல அவருக்கு இருக்கிற பாசமே திரும்ப அவர உங்க கிட்ட கூட்டிட்டுத் தான் வரப் போகுது. வந்து இப்போ உங்ககிட்ட அவர் பேசினதுக்கு எல்லாம் மன்னிப்புக் கேட்கத் தான் போறார். நம்புங்க தாத்தா..”

“உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை பொம்மி? அவன் ஏன் ஏதேதோ கேட்கிறான்? அன்று….” என்று ஏதோ அவர் சொல்ல வரும் நேரம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட

“தாத்தா இப்போ எதுவும் நீங்க சொல்ல வேணாம். எல்லாம் என் மேல தான் தப்பு. அவர் ஊருக்குக் கிளம்புனு சொன்ன உடனே ஏன் எதுக்குனு கேட்காம உங்களைப் பற்றி சொல்லாமலும் தப்பு பண்ணிட்டேன். பிறந்ததில் இருந்து நீங்க பார்க்காத உங்க பேரனை பார்க்கப் போறீங்களேன்ற ஆர்வத்துல நான் அவரக் கூட்டிட்டு வந்தது என் தப்பு தான்” என்று சாரா அவர் நெஞ்சை நீவி விட்ட படியே மறுக

“அவன் இப்படி எதுவும் கேட்கல பொம்மி. அவன் என்கிட்ட கேட்டது உன் கண்ணைப் பற்றி தான் மா! அன்னைக்குக் கோவில் நில விஷயமா நான் போயிருந்தப்ப என்னைப் பார்க்க வந்தவன் இதைத் தான் கேட்டான். உனக்கு எப்போ எப்படி ஆக்ஸிடென்ட் நடந்தது, எப்படி யாரால் உனக்கு இந்த கண் கிடைத்தது என்று எல்லாம்..” என்று விட்டு விட்டுப் பேசிய படி அவர் மூச்சுத் திணறவும், அதைக் கேட்டு சாரா மனதுக்குள் அதிர்ச்சியுடன் கூடிய பெரும் வலியில் ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியது.

‘அப்போ அவர் அவ்வளவு அவசரமா கிளம்பினது என் கிட்ட கேட்டுக் கிடைக்காத இந்த விழிகள் சம்பந்தப் பட்டத என் உறவினர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தான்! அதுக்குத்தான் அவர் வந்தாரா?..’ என்று சாரா உள்ளுக்குள் கேள்வி கேட்டுக் கரைந்து கொண்டிருந்த நேரம்


“என்ன மா ஏதோ கொஞ்ச நேரம் பேசிட்டுப் போய்டுவேனு பார்த்தா இவ்வளவு நேரம் பேசிட்டுருக்க? அதிலும் பெரியவருக்கு மூச்சித் திணறுது. உடனே என்னக் கூப்பிடாம நீ பாட்டுக்கு அவர் முகத்தையே பார்த்துட்டு இருக்க!” என்று அதட்டிய படி நர்ஸ் உள்ளே வந்து அவருக்கு மாஸ்கைப் போட்டு விட, வெளியே வந்த சாராவுக்கு சர்வமும் அடங்கிப் போனது.

அதன் பிறகு தாத்தாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக அவர் சின்னா பெயரையே பிதற்றிய படி இருக்க, டாக்டரோ அந்த சின்னாவை அழைத்து வந்தால் தான் தாத்தாவின் இறுதிக் காலமாவது நிறைவாய் போகும் என்று சொல்லி விட அதைக் கேட்டு சாரா தான் மரணத்தின் வாயிலுக்கே சென்று விட்டாள். மறுபடியும் மயங்கி விழுந்த அவளை டாக்டர்ஸ் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

மயக்கம் தெளிந்தவள் யாரிடமும் பேசாமல் எங்கோ வெறித்த படி ஏதோ யோசனையிலேயே இருந்தவள்

‘எப்போதோ சிறு வயதில் அவர் மேல் கொண்ட காதலால் அறியா வயதில் அவனையே மனதால் கணவனாக நினைத்ததால் இன்று என் கொள்கை லட்சியம் எல்லாம் விட்டு வெளிநாடு சென்று எனக்குப் பிடிக்காத மாடலிங் தொழிலைச் செய்தது எதனால்? எல்லாம் அவர் மேல் வைத்த காதலால் தானே!

அவருக்கு இணையாக இந்தத் துறையில் சாதித்து ஜெயித்து அவர் மனசுல இடம் பிடிக்கணும் என்ற காரணத்தால தானே நான் அவர் இருக்கும் இடம் தேடிப் போனேன்?

முதன் முதலில் அவர் என்னைப் பார்த்து நீ தான் என் மனைவினு சொன்ன போது நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத போதே அவருக்குத் தெரிய வேண்டாமா அவர் மீதான என் காதல் எவ்வளவு ஆழமானது என்று?

அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறையும் என்னை வார்த்தையால் சிடுசிடுத்தப் போதும் நான் அவர் மேலுள்ள பாசத்தால தானே பொறுத்துப் போனேன்?

அன்று அவர் கையாலயே என்னை மரணம் வரை அழைத்துச் சென்றாரே, அந்த வினாடிக்குப் பிறகு கூட நான் அவரை வெறுக்கவில்லையே?! அதுவரை அவர் மேல் நான் காதலுடன் இருந்தது உண்மை தானே?

எப்போது அவர் இந்தியா கிளம்பச் சொன்னாரோ அப்போதே தாத்தாவை மனதில் நிறுத்தித் தானே நானும் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே கிளம்பி வந்தேன்?

ஆனா அவரோ என் விழியைப் பற்றிக் கேட்ட எந்த கேள்விக்கும் என்னிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் என் உறவுகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தானே அவ்வளவு அவசரமா இந்தியா வந்து இருக்கார்!

அதனால தான் அன்று தனியா தாத்தாவைப் பார்க்கப் போயிருக்கார். அவரிடமிருந்து அவருக்கு வேண்டிய பதில் கிடைக்கலனு தெரிஞ்சவுடனே ஊருக்குக் கிளம்ப நினைத்த நேரத்துல தான் இவ்வளவு பிரச்சனை நடந்து வார்த்தை தடித்து இன்று தாத்தாவோட உயிருக்கே ஆபத்தா வந்து முடிஞ்சிடுச்சே!

முன்பு என் தன்மானத்தையும் கவுரவத்தையும் விட்டு என் காதலுக்காக அவர் முன்னாடி நின்றேன். ஆனா எப்போ அவர் என் மேல காதலே இல்லனு சொல்லிட்டாரோ இதுக்குப் பிறகும் நான் போய் நின்னா அது கேவலமாச்சே! ஆனா இப்போ தாத்தா இருக்கிற நிலைமைக்கு அவர் இங்க இருந்தாகனுமே! நிச்சயம் என்னைத் தவிர வேலுச்சாமி தாத்தாவோ இல்லை வேறு யாரோ அவரிடம் பேச முடியாது. ஆனால் காதலே இல்லனு சொல்றவர் கிட்ட நான் எப்படிப் போய் நிற்பேன்?’

நினைக்கும் போதே நெஞ்சில் ஈட்டி ஒன்று பாய்ந்தது போல் வலிக்க அதை விடக் கண்ணில் உதிரமே கண்ணீராகக் கொட்டியது சாராவுக்கு. இப்படியாக யோசித்தவளுக்கு திடீர் என்று ஒன்று தோன்ற

‘ஆமாம், நான் ஏன் ஓர் காதலியா அவர் மனைவியா என் காதலைச் சொல்லி தாத்தா உயிரைக் காப்பாற்றச் சொல்லி அவரிடம் யாசித்து நிற்கணும்? அதான் அவர் போகும் போது ஒண்ணு சொன்னாரே, அவருக்கு வேண்டிய பொருள் என் கிட்ட இருக்குனு. அப்போ அது என்னவா இருக்கும்? தாத்தா கிட்ட கூட என் விழியைப் பற்றி விசாரித்து இருக்கார்.

அன்று எனக்கு மரணத்தைக் காட்டிய போது கூட இந்த விழிகள்னு தானே பேசினார்? அப்போ அவருக்கு வேண்டியது எல்லாம் என்னிடமிருக்கும் இந்த விழிகள் தானே? இது போதுமே எனக்கு! இதையே வைத்து தாத்தா உயிரைக் காப்பாற்ற அவரை வழிக்குக் கொண்டு வர வைக்க’

என்று முடிவெடுத்தவள் அதன் பிறகு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தாத்தாவைச் சென்று பார்த்தவள் அஷ்வத்தை அழைத்து வருவதாக அவருக்கு வாக்களித்து விட்டு வேலுச்சாமி தாத்தா எவ்வளவு தடுத்தும் கேட்காமல் பாரீஸ் பறந்து சென்றாள் சாரா.


அங்கு இந்தியாவை விட்டு பாரீஸ் வந்த அஷ்வத்துக்கோ இருப்புக் கொள்ளவில்லை. ‘அவ கிட்ட அவ்வளவு கடுமையா பேசிட்டு வந்தோமே! அவ எப்படி இருக்கா என்ன செய்றா?’ என்று பரிதவித்துத் தான் போனான் அவன்.

அந்த பரிதவிப்பே யாரிடமும் அவனை நெருங்க விடாமல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் ஒருவித இறுகிய தன்மையுடனேயே அவனை இருக்க வைத்தது.

‘ஏன், பொறந்ததுல இருந்து அவ என் கூட தான் இருந்தாளா? இத்தனை வருஷமா அவ இல்லாம நான் வாழல? அதே மாதிரி இப்பவும் வாழ வேண்டியது தான்! அவ இல்லனா என்னால வாழ முடியாதா என்ன?’

என்று இந்தக் கேள்விகளை எல்லாம் வாய் விட்டுத் தன்னை தானே பல முறை அவன் கேட்டுக் கொள்ள அதற்கான பதிலோ இல்லை அவளை மறக்க முடியும் என்ற திடகாத்திரமும் அவனுக்கு வரவேயில்லை. அவளை வேண்டாம் என்று சொன்னவன் தான் இப்போது அவளை நினைத்து கசந்து போகிறான்.

இப்போது அவன் எண்ணம் எல்லாம் அவனுக்கு அவள் வேண்டும்! அதற்காக அவள் மேல் காதல் எல்லாம் இல்லை. ஆனால் அவன் பக்கத்திலேயே அவள் இருக்க வேண்டும். அதுவும் வாழ் நாள் முழுவதும்.

இப்படி ஒரு எண்ணம் அவனுக்கு ஒருபுறம் வந்து போக அவளை வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் ஒரு நிலை இல்லாத தன்மையில் குழம்பியவன் தன் மேலேயே கோபமும் ஆத்திரமும் வர அதனால் தன்னைத் தானே வெறுத்தவன் இது இப்படியே நீடித்தால் எங்கே தனக்குப் பித்துப் பிடித்து விடுமோ என்று பயந்தவன் தன் ஈகோ பிடிவாதம் எல்லாம் விடுத்து சாராவைத் திரும்ப சந்தித்தால் என்ன என்று நினைத்தவன்.

பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டவனோ கடைசியாக அவளிடம் பேசி அவள் குரலையாவது கேட்க வேண்டும் என்ற ஆவலில் தன் கைப்பேசியிலிருந்து அவன் இந்தியாவுக்கு அழைக்கவிருந்த நேரம் அவன் ஆபிஸ் அறையிலிருந்த கார்ட்லெஸ் போன் அலற வேண்டா வெறுப்புடன் அதை எடுத்து என்ன என்று இவன் கேட்க இந்தியாவிலிருந்து சாரா என்பவர் அவனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லவும்

இதுவரை நெருப்பு வளையத்துக்குள் இருந்த படி தன்னைத் தானே பொசுக்கிக் கொண்டிருந்தவனோ சாரா வந்து விட்டாள் என்று அவள் பெயரைக் கேட்டதும் வெண் பஞ்சு மேகக் கூட்டத்திலிருந்து உதிரும் பனி மழை அனைத்தும் அவன் தேகத்தைக் குளிர்வித்தது போல் மனதாலும் உடலாலும் குளிர்ந்தவன் தன்னை மீறிக் கண் கலங்கத் தொண்டை அடைக்க அவளை உள்ளே அனுப்பச் சொன்னவன் தன் உணர்ச்சிகளை ஒருநிலைப் படுத்தித் தன் டேபிள் மேலிருந்த பொருட்களை ஒழுங்கு படுத்தி ஒதுக்கி வைத்தவனோ பிறகு ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்து தன்னை சமன் செய்து கொண்டவன் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவள் வரவுக்காக இவன் காத்திருக்க

வந்தாள் அந்த மங்கை எந்த வித சலனமும் இல்லாமல் உணர்ச்சித் துடைத்த முகத்துடன்! அவனைப் பார்க்கும் போது எல்லாம் அவள் விழிகளோ அவளையும் மீறி அவன் மேல் கொண்ட காதலை எப்போதும் பிரதிபலிக்கும். ஆனால் இன்றோ அவள் நுழையும் போதே அவன் பார்த்ததோ அந்த காதல் இல்லாத அவள் விழிகளைத் தான்!

அது மட்டும் இல்லாமல் அந்த விழிகளோ ஒரு வித நிமிர்வுடனும் பிடிவாதத்துடனும் ஜொலிப்பதைப் பார்த்தவன் கூடவே அவள் பார்வையில் தான் அன்னியப் பட்டு நிற்பதை உணர்ந்தவனின் மனதுக்குள் எதிர்பார்ப்பு என்னும் கோட்டை உடைய அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்

“வா பொம்மி!” என்று வெகு இயல்பாக அழைத்தவன் எழுந்து வந்து ஸோஃபாவில் அமர்ந்து அவளையும் அமரச் சொல்ல, அவன் வா என்று அவளை அழைக்கும் போது தன் இயல்பாய் இருந்தவள் இறுதியில் பொம்மி என்று அவன் அழைத்ததில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடம் மாற,

உடனே இப்போது உள்ள தன் இயல்பைத் தொலைக்க இருந்தவள் கண்ணை மூடி அன்று அவன் சொன்ன வார்த்தைகளைத் தன் மனக் கண் முன் ஒரு வினாடி கொண்டு வந்தவள் சிரமப்பட்டுத் தன்னை ஒருநிலைப் படுத்தியபடி அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் சாரா.

“உங்களால் எனக்கு ஒரு உதவி வேணும்” என்று எந்தவொரு முகஸ்துதியோ விளக்கமும் இல்லாமல் அவள் ஆரம்பிக்கவும் அவனோ எந்த வித சலனமும் இன்றி அவள் முகத்தைப் பார்த்தவனோ அப்படியே பார்த்த படியே இருக்க சற்று நேரம் பொறுத்தவள் ‘இவரா என்ன ஏதுனு கேட்கமாட்டார்’ என்று உணர்ந்தவள் மறுபடியும் அவளாகவே

“தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக்! ரொம்ப சிவியர்னு டாக்டர் சொல்றார். அவர்…. அவர்….” என்று திக்கியவள் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிய.

அதைக் கேட்டு உள்ளுக்குள் அவனுக்குப் பதறினாலும் அது எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவன் எப்போதும் போல் வாய் திறக்காமல் இருக்கவும் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்

“தாத்தா இறுதி நாட்கள்ல இருக்கிறார். அதனால அவர் விருப்பபட்டதைச் செய்து அவரை நிம்மதியா வழி அனுப்புங்கனு டாக்டர் சொல்றார்” என்று திடத்தை வர வழைத்துக் கொண்டு ஓர் கசந்து போன குரலில் சொன்னவள்

பின் தன் தொண்டையைச் செறுமி சரி செய்து “அவருடைய விருப்பம் ஆசை எல்லாம் நீங்க அவர் பக்கத்துல இருக்கணும் என்றது தான்” என்றவள் சற்றுத் தயங்கி “அதனால நீங்க கொஞ்ச நாள் இந்தியாவுக்கு வந்து அவர் கூட தங்கி இருக்க முடியுமா? இதை எனக்கு நீங்க ஒரு உதவியா செய்யுங்களேன் ப்ளீஸ்!” என்று தன்னை மீறி அவள் குரல் தழைந்து போய் கெஞ்ச.

‘ச்சீ… காதலே இல்ல நீ எனக்கு எந்த வகையிலும் தேவை இல்லனு சொல்றவர் கிட்ட போய் இப்படி கெஞ்சிட்டு இருக்கோமே?’ என்று நினைத்து அவன் முன்னால் கூனிக் குறுகியவள் ‘எல்லாம் என்னை ஆதரித்து வளர்த்த என் தாத்தாவுக்காகத் தானே?’ என்று மறு நொடி நினைத்தவள் நிமிர்ந்து அவனை திடமாகவே பார்க்க

தாத்தாவின் நிலையைக் கேட்டு அஷ்வத்துக்கும் உள்ளுக்குள் கஷ்டம் தான். ஆனால் அதை எல்லாம் விடுத்தவன் ‘அப்ப இவ தாத்தாவுக்காகத் தான் இங்க வந்தாளா? என்னைக் கெஞ்சி சம்மதிக்க வைத்து திரும்ப என்னை இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் பார்க்கறா. இதெல்லாம் தாத்தாவுக்காக மட்டும் தானா? அப்ப இவளுக்கு நான் வேணாம்! உரிமையா நான் இங்க தான் இருப்பேன் எனக்கு நீங்களும் வேணும் தாத்தாவும் வேணும். அதனால தாத்தாவ எப்படியோ பேசி சம்மதிக்க வச்சி இங்க கூட்டிட்டு வந்துடறேனு சொல்லத் தான் இவ வந்து இருக்கானு பார்த்தா, தாத்தாவுக்கு உடம்பு சரியில்ல அதனால நீங்க இந்தியா வாங்கனு இல்ல கூப்பிடறா!

அதுவும் எப்படி? யாரோ மூணாவது மனிதனிடம் வந்து கெஞ்சி உதவி கேட்பது போல் இல்ல இவ கேட்கறா!’ என்று உள்ளுக்குள் அவள் மேல் ஆத்திரம் பொங்கியது அவனுக்கு. ஆனால் அன்று, நீ எனக்கு யாரோ தான் என்று அவளிடம் அவன் சொல்லி விட்டு வந்தது மட்டும் நினைவில் இல்லாமல் போனது ஏனோ என்று தான் தெரியவில்லை.

“உன் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லனா அதுக்கு எதுக்கு நான் இந்தியா வரணும்? நாளைக்கு உன்னை கட்டிக்கப் போறவனைக் கூட்டிட்டுப் போய் நிறுத்த வேண்டியது தானே உன் தாத்தா முன்னாடி” என்று அவன் எகத்தாளமாகப் பேச

“இல்ல இல்ல.. என்ன கட்டிக்கப் போறவறா நான் உங்களக் கூப்பிடல. யாரோ உங்களுக்குத் தெரிஞ்ச பெரியவர் என்ற மனிதாபிமானத்தால கூட நீங்க வரலாம் இல்ல?” என்று அவள் கேட்கவும்

“அப்போ உன்னை கட்டிக்கப் போறவன் என்ற எண்ணத்துல நீ வந்து என்ன கூப்பிடல?” என்று கூர்மையாக அவன் பதிலுக்குக் கேட்க

‘அதான் நமக்குள்ள எதுவும் இல்லனு சொல்லிட்டிங்களே அப்புறம் என்ன?’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள் அவசரமாக இல்லை என்று தலை அசைக்கவும், அவள் சொன்ன பதிலில் தன் வலது கை விரல்களை மடக்கி ஸோஃபாவில் ஒரு குத்து விட்டவன்

“நீ வந்து கூப்பிட்டதும் நான் வந்துடுவேனு எந்த நம்பிக்கையில இங்கே வந்த?”

“எல்லாம் உங்களுக்குச் சொந்தமான பொருள் ஒண்ணு என் கிட்ட இருக்கு என்ற நம்பிக்கையில தான்! எல்லாம் இந்த விழியால தான்!” என்று அவள் தன் விழியைச் சுட்டிக் காட்டவும் அதுவரை அவள் மேல் இனம் புரியாத ஒரு வித கோபத்தில் அமர்ந்து இருந்தவனோ தன் முகத்தில் யாரோ குளிர் நீரைக் கொட்டியது போல் விதிர்விதிர்த்து எழுந்து நின்றான் அஷ்வத்.

உண்மையில் அவன் ஊரிலிருந்து கிளம்பியது முதல் இப்போது அவளைப் பார்க்கும் இந்த வினாடி வரை அவனுக்கு அந்த விழிகளைப் பற்றி சிந்தனையோ நினைப்போ துளி கூட இல்லை. அவளை விட்டு வந்தோமே எப்படி இருக்காளோ என்ன செய்கிறாளோ என்று முழுக்க முழுக்க அவளைப் பற்றியே அவன் நினைத்திருக்க, அவள் அந்த விழியை ஞாபகப் படுத்தவும் அதை இப்படி மறந்து போனோமே என்று தன் மேலேயே கோபம் கொண்டவன் உடனே

“ஓ…. எனக்கு வேண்டிய பொருள் உன் கிட்ட இருந்தா நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேனு நினைத்தீயா இல்ல உன்ன விட்டு வந்ததால அதை மறந்து போய்ட்டேனு நினைத்தீயாயா? முன்பு வேணா உன்னைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனா இப்ப உன் வீடு வாசல் எல்லாம் எனக்குத் தெரியும் என்னும் போது பிறகு பொறுமையா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.

அப்படியே நீ கண் காணாம என்னை விட்டு எங்கே போனா கூட உன்னைத் தேடி கண்டு பிடித்து எனக்கான பொருளைப் பாதுகாக்காம விட மாட்டேன். அதனால இந்த விழிகளை வைத்து உன் இஷ்டத்துக்கு என்ன ஆட்டிப் படைக்கலாம்னு மட்டும் நினைக்காதே. அதெல்லாம் உன் கனவிலும் நடக்காது தெரிஞ்சிக்கோ!” என்று அவன் உறும

எந்த விழிகளைப் பிடிமானமாக வைத்து இவனை இந்தியா வரவழைத்துத் தாத்தாவின் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்று நினைத்திருந்தாளோ அதையே அவன் ஒன்றும் இல்லாமல் செய்து விடவும் அவளுக்குக் கோபம் கொப்பளித்தது. இதுவரை அவனிடம் தான் கட்டிக் காத்து வந்த பொறுமை எல்லாம் பறந்து போக புயலென அந்த இடத்தை விட்டு எழுந்தவள் அவன் டேபிளிலிருந்த பென் ஸ்டான்டில் இருந்து பேனா ஒன்றை எடுத்தவள் அதன் கூர் முனையைத் தன் கண்ணெதிரே வைத்து


“உங்களுக்கு எப்போதுமே உங்க சுயநலம் தான் முக்கியம் இல்ல? நீங்க எங்க இருந்தாலும் உங்க பொருளைப் பாதுகாப்பிங்க அப்படி தானே? உங்களுக்கு நான் வேணாம் ஏன் உங்க சொந்தபந்தம் கூட யாரும் வேணாம். ஆனா என் கிட்ட இருக்கிற இந்த விழிகள் மட்டும் உங்களுக்கு வேணும். இப்போ உங்க பொருள் என் கிட்ட இருக்கு. அப்போ இதை நான் என்ன வேணா செய்யலாம் இல்ல? இந்த வினாடியே இதை யாருக்கும் இல்லாமல் என்று அவள் முழுமையாக முடிக்கக் கூட இல்லை.

“சாராராராஆஆஆஆஆஆஆ……!” என்று அந்த இடமே நடுங்கும் படி கர்ஜித்தவன் அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பதை அறிந்து மின்னல் என விரைந்து சென்று அவள் பேனாவைப் பிடித்திருந்த வலது கையைப் பிடித்துத் தடுத்தவன் “என்ன டி திமிரா? உன் இஷ்டத்துக்கு என்னமோ செய்யப் பார்க்கற?” என்று அவன் மறுபடியும் உறும
நல்ல வேளை அந்த இடம் கண்ணாடியால் சூழ்ந்திருந்தது. இல்லையென்றால் இவன் போட்ட சத்தத்திற்கு அலுவலக ஊழியர்கள் உள்ளே ஓடி வந்திருப்பார்கள்.

“ஏன் நான் செய்யக் கூடாது? இப்படி தான் செய்வேன்” என்று அவளும் பதிலுக்கு உறும அவனோ ஆத்திரத்தில் பிடித்திருந்த அவள் மணிக்கட்டை சற்று அழுத்திப் பிடித்தான். வலி இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் அப்படியே நிற்கவும் அதில் கோபம் அதிகமாக அவன் இன்னும் அழுத்திப் பிடிக்கவும் எங்கே எலும்பு நொருங்கி விடுமோ என்று பயந்தவள் வலியில் கண்களில் நீர் கோர்க்க

“எனக்கு ரொம்ப வலிக்குது ஏ.கே! ப்ளீஸ் கையை விடுங்க” என்று அவள் கெஞ்ச, அவ்வளவு தான். அவனிடமிருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் பாலைவனத்தில் ஊற்றிய நீராய் அந்த நிமிடமே மறைந்து போக அவளை இழுத்து அணைத்தவன்

“ஏன் டி ஏன் டி இப்படி எல்லாம் செய்யற? ஒரு நிமிஷத்துல என் மரணத்த எனக்கே காட்டிட்டியே டி! வேணா சாரா, இனிமே வார்த்தையால கூட இப்படி எல்லாம் பேசாத சாரா!” என்று குமுறியவன் கண்ணில் இருந்து அவனையும் மீறி கண்ணீர் வழிய, அதைத் தன் நெற்றியில் வழிந்தோட உணர்ந்தவளோ தான் இருக்கும் நிலை அறிந்து அவனிடமிருந்து விலகப் பார்க்க, அவனோ அவள் விட்டு விலகாத அளவுக்கு இன்னும் அவளை இறுக்கி அணைத்தான்.

“அஷ்வத் விடுங்க” என்று அவள் சொல்ல

“ம்உம்…. நான் உனக்கு எப்பவும் ஏ.கே தான்” என்றவன் இன்னும் அவளை இறுக்கி அணைக்க, அவன் அணைப்பில் மூச்சுத் திணற ‘இவர் ஏ.கே சொல்லாமல் விட மாட்டார் போல’ என்று நினைத்தவள்

“ஏ.கே என்ன விடுங்க. நாம இரண்டு பேரும் இப்போ சண்டை போட்டுக்கிட்டு இருந்தோம். அதை மனசுல வச்சி கிட்டு நடந்துக்கங்க” என்று அவள் அவனுக்குப் பழசை ஞாபகப் படுத்தவும்

“அந்த சண்டையையும் கோபத்தையும் தான் உன் ஏ.கே என்ற அழைப்பு என்னை ஒண்ணும் இல்லாம பண்ணிடுச்சே!” என்று அவன் சொல்ல

“உங்களுக்குக் கோபம் போய்டுச்சி. எனக்குப் போகலையே! கை எப்படி வலிக்குது தெரியுமா?” என்று அவள் சிணுங்க

சட்டென தன் பிடியிலிருந்து அவளை விடுவித்தவன் அவள் கையை எடுத்துப் பார்க்க அவன் பிடித்த இடமோ கன்றிப் போயிருந்தது. அந்த இடத்தைத் தன் விரலால் வருடியவன் “சாரி கண்ணம்மா” என்ற சொல்லுடன் அந்த இடத்திலேயே அவன் தன் இதழ் பதிக்க, அவன் மீசையின் குறுகுறுப்பு அவளுக்குள் ஏதேதோ செய்தாலும் சட்டென தன் கையை உறுவிக் கொண்டவளோ

“நான் தாத்தா விஷயமா உங்க கிட்டப் பேச வந்தேன்” என்று அவள் எடுத்துச் சொல்லவும்

“ம்ம்ம்….” என்றவன் டேபிள் மீதிருந்த கைப்பேசியை எடுத்து தன் பி.ஏ வை அழைத்தவன் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து இந்தியாவுக்குச் செல்லும் எந்த பிளைட்டாக இருந்தாலும் அதில் மூன்று டிக்கெட்களை புக் செய்யச் சொன்னவன் கூடவே டாக்டர் வில்லியம்சும் தங்கள் உடன் வருவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யச் சொன்னான்.

இன்னும் சாரா நம்பாத பார்வையுடன் அவனையே பார்த்திருக்கவும் அவளிடம் வந்தவன் “இப்போ நம்ம கூட வரப் போறவர் பெரிய ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். அவர் பையன் ஆட் கம்பெனி ஆரம்பிக்க நான் தான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கேன். சோ அந்த தைரியத்துல தான் அவர கேட்காமலே டிக்கெட் போடச் சொல்லிட்டேன். கண்டிப்பா அவரும் வருவார். அதனால பயப்படாத தாத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது”

என்று அவளுக்குத் தைரியம் சொன்னவன் மறைமுகமாக தான் வருவதற்கும் சம்மதம் தெரிவித்து அவள் சாப்பிட்டாளா என்று கேட்டு அவள் சாப்பிட்ட பின் அவளை ரெஸ்ட் எடுக்க வைத்தவன் பின் தன் வேலைகளை முடித்துக் கொண்டு குறித்த நேரத்தில் அவளுடனே இந்தியா கிளம்பினான் அஷ்வத்.இந்தியா வந்து அவன் அழைத்து வந்திருந்த டாக்டர் மூலம் தாத்தாவின் நிலைமை என்னவென்று பார்க்க அவர் கொஞ்சம் சீரியஸான கண்டிஷனில் இருப்பது உண்மை தான் என்றாலும் அது உடலால் என்பதை விட அவர் மனதால் பலவீனப் பட்டு இருப்பது தெரியவர, அவர் இப்போதும் இடைவிடாமல் முணு முணுக்கும் சின்னா என்ற பெயருக்கு உரிமைக்காரனான அஷ்வத்தையே பேசச் சொன்னார் அந்த டாக்டர்.

முதலில் அவரைப் பார்த்ததும் கண் கலங்கிய அஷ்வத் பின் மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு அவரை நெருங்கியவன்

“தாத்தா நான் உங்க சின்னா வந்திருக்கேன். என்னைக் கொஞ்சம் கண்ணத் திறந்து பாருங்க. இனிமே நான் உங்களை விட்டுப் போக மாட்டேன் தாத்தா. நான் அப்படி எல்லாம் பேசினது தப்பு தான். என்னைப் பாருங்க தாத்தா, நான் உங்க சின்னா வந்திருக்கேன்” என்று அவர் காதருகில் ஏதோ பொய்யாக இல்லாமல் அவனையும் மீறி குரல் தழைந்து போய் அவன் சொல்ல

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு ஒரு வினாடி அவர் முகத்தில் மின்னல் போல் ஓர் ஒளி வந்து போனாலும் அடுத்த வினாடியே அவர் முகம் இது பொய்யோ என்ற நினைப்பில் நம்பிக்கை இல்லாமல் வேதனையைப் பிரதிபலிக்க, இமைகளை அவர் திறக்க நினைத்தாலும் திறக்க முடியாத அளவுக்கு இமைகள் மூடியே இருக்க, ஆனால் அவர் கரு விழிகளோ மூடிய இமைகளுக்குள் ஒரு வித பரிதவிப்புடன் இங்கும் அங்கும் ஓடி மறைய, அதைப் பக்கத்திலிருந்து பார்த்த சாராவோ உடனே அஷ்வத்தின் கையைப் பற்றி அவர் நெற்றி புருவம் கன்னம் என்று வருடியவள்


“தாத்தா உண்மையாவே உங்க பேரன் சின்னா தான் வந்து இருக்கார். அதுவும் நான் சொன்ன மாதிரியே உங்க கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்கார். கொஞ்சம் கண்ணைத் திறந்து அவரைப் பாருங்க தாத்தா” என்று சாரா சொல்லும் போதே அவள் குரல் உடைவதைப் பார்த்தவனோ அவள் கையைப் பற்றி அவளுக்குத் தைரியம் அளித்தவன் பின் ஒரு குழந்தைக்குச் செய்வது போல் தாத்தாவின் தலை முடியைக் கோதி விட்டு தலையை வருடியவன்

“என் செல்ல தாத்தா தானே நீங்க? சின்ன வயசுல இருந்து நான் தனியாவே வளர்ந்துட்டேன் தாத்தா. எனக்குனு யாருமே இல்ல. அம்மா அப்பா தாத்தா பாட்டி கூடப் பிறந்தவங்கனு இப்படி யாருமே இல்ல. நான் தனியா அனாதையா தான் வளர்ந்தேன். சாரா மூலமா நீங்க எனக்குக் கிடைத்து இருக்கீங்க.

நான் அப்போ எல்லார் கிட்டையும் இழந்த அன்பு பாசம் எல்லாம் உங்க கிட்டயிருந்து எனக்குத் திரும்பக் கிடைக்கும்னு நினைச்சேன். நீங்க என்னனா மறுபடியும் என்ன அனாதையா விட்டுட்டு போகப் பார்க்கறீங்க. உண்மையாவே நீங்க என்னை உங்க பேரனா நினைக்கிறது நிஜம்னா எழுந்து வந்து நான் இழந்த அன்பு பாசத்தை எனக்குக் கொடுங்க. இல்லனா அப்புறம் உங்க இஷ்டம்…”

என்று சொல்லும்போதே அவனுக்குத் தொண்டை அடைக்க அதே நேரம் மூடிய தாத்தாவின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்ததும் அவசரமாக அவர் கண்ணீரைத் துடைத்தவன்

“எனக்குத் தெரியும் தாத்தா நீங்க வந்துடுவீங்கனு” என்று சொல்லி அவர் நெற்றியில் இதழ் பதித்து விட்டு விலகினான் அஷ்வத். அதன் பிறகு தாத்தாவுடைய உடலில் முன்னேற்றம் இல்லை என்றாலும் பின்னடைவு இல்லை.

நான்கே நாட்களில் வீட்டுக்கு வந்த அவரை மேலே தங்க வேண்டாம் என்று கீழேயே தனி அறையில் தங்க வைத்து சாராவும் அஷ்வத்தும் அவருக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அஷ்வத் வந்தது வேலுச்சாமி தாத்தாவுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் தன் மாமாவின் உடல் நிலைக் கருதி அவரும் ஒதுங்கி விட தாத்தாவிடம் இன்னும் சற்று முன்னேற்றமே ஏற்பட்டது.

இதற்கிடையில் ஒரு நாள் அஷ்வத் பாரீஸ் சென்று தனக்கான ஒரு வேலையை முடித்துவிட்டு வருவதாக தாத்தா விடம் சொல்ல, அவனை நம்பாத தன்மையுடன் அவர் அவனைப் பார்க்கவும் அவசரமாக அவர் அமர்ந்திருந்த சேரை நெருங்கி அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவனோ

“அன்னைக்கு நான் சொன்ன வார்த்தை எதுவுமே தற்காலிகமா உங்க உயிரைக் காப்பாற்றணும் என்பதற்காக நான் சொன்ன பொய்யான வார்த்தைகள் இல்ல தாத்தா. நிச்சயம் நான் திரும்பி வருவேன் என்ன நம்புங்க” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவன் உறுதி அளிக்கவும்

“அப்போ நீ திரும்பி வரும் போது உனக்கும் பொம்மிக்கும் நான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் சின்னா. உனக்கு இதுல சம்மதம் தானே

“இதை நீங்க என் கிட்ட கேட்கணுமா? தாராளமா ஏற்பாடு பண்ணுங்க தாத்தா” என்று அஷ்வத் முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கவும் நெகிழ்ச்சியுடன் அவனை உச்சி முகர்ந்தவர் அவன் உச்சியில் தன் இதழ் பதித்தார் சின்னாவின் தாத்தா.

சாராவிடம் அவர் திருமணத்தைப் பற்றிப் பேசவும் எப்படி இந்த திருமணத்தைத் தடுப்பது என்று குழம்பியவள் அவர் உடல் நிலைக் கருதி சரி என்று அவருக்குத் தலையை ஆட்டி விட்டு நேரே அஷ்வத்தைத் தேடி அவன் அறைக்குச் செல்ல அங்கே அவன் லேப்டாப் முன் ஏதோ வீடியோ காலில் பிஸியாக இருக்கவும் வந்த வழியே அவள் திரும்பச் செல்ல நினைத்த நேரம் “வா பொம்மி!” என்று அவன் அழைக்கவும்

அவள் அவன் கட்டிலின் ஓரம் வந்து நிற்கவும் வெகு இயல்பாக அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் பக்கத்தில் அமர வைத்தவனோ அவள் தோள் மேல் கை போட்டுத் தன்னுடன் அவளை அணைத்துக் கொண்டவன் “ஸ்டீவ் கிட்ட தான் பேசுறேன். நீயும் ரெண்டு வார்த்தை பேசு அவன் கிட்ட” என்று சொல்லவும் இவளும் இரண்டொரு வார்த்தை பேசி முடிக்கும் வரை தன் கை அணைப்பிலேயே அவளை வைத்திருந்தவன் மேத்தியூஸ்க்கு என்னைப் பார்க்காம இருக்க முடியலையாம். குட்டி பாய் என்னை ரொம்பத் தேடுறானாம்” என்று அவளிடம் சொல்லிய படியே லேப்பை ஷட் டவுன் பண்ணி வைத்தவன் “சொல்லு பொம்மி என்ன விஷயம்?” என்று கேட்க

“அது வந்து..” என்று தயங்கியவள் கட்டிலில் இருந்து எழப் பார்க்க, மறுபடியும் அவள் தோள் மேல் கை போட்டு தன்னுடனேயே அமர வைத்தவன் “என்னிடம் என்ன தயக்கம் பொம்மி?” என்று அவன் இயல்பாகக் கேட்கவும்

“இல்ல.. தாத்தா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாரு..” என்று அவள் தயங்கத்துடனே சொல்லவும்

“பண்ணட்டுமே!”

“அவர் நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் நடத்த நாள் பார்க்கிறாரு” என்று அவள் அழுத்தி எடுத்துச் சொல்லவும்

“அதான் எனக்குத் தெரியுமே! என் கிட்ட தாத்தா சொல்லிட்டாரே”

‘என்னது சொல்லிட்டாரா? நான் இவருக்குத் தெரியாதுனு இல்ல நினைச்சேன்?’ என்று மனதுக்குள் யோசித்தவள்

“அப்போ அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?” என்று அவள் திணறிய படி கேட்கவும்

“நீ என்ன சொன்ன பொம்மி?” என்று அவன் அவள் கண்களைப் பார்த்துக் கேட்க

“நான் வேணாம்னு சொல்ல தான் இருந்தேன். ஆனா தாத்தா உடல் நிலையைக் கருதி தான் சரினு சொல்லிட்டேன்” என்று அவள் மெல்லிய குரலில் தன் சம்மதத்தைச் சொல்லி முடிக்கவும், அதைக் கேட்டு அவன் மனதுக்குள் ஒரு வெறுமை படர்ந்தாலும் அதை விடுத்தவன்

“நானும் அவருக்காகத் தான் பொம்மி சரினு சொன்னேன். விடு நம்ம இரண்டு பேருக்கும் விருப்பம் இல்லைனாலும் தாத்தாவுக்காகப் பண்ணிப்போம். அதனால அவர் உயிர் காப்பாற்றப்படும்னா அதைச் செய்யறதுல தப்பும் இல்ல” என்று சொல்லியவன் கட்டிலில் கால் நீட்டி கண்கள் மூடிப் படுத்து விட

‘உன் மேல எனக்குக் காதலே இல்ல அது எனக்கு வரவே வராதுனு சொன்னவர் இப்போ கடமைக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாரா? கடைசியில எனக்குக் கிடைச்சது கடமைக்கான வாழ்வு தானா?’ என்று மனதில் நினைத்து நொந்தவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் வைக்காமல் எழுந்து சென்றாள் சாரா.

பாரீஸ் சென்றவன் தனக்கான வேலைகளை முடித்துக் கொண்டு தாத்தாவிடம் சொன்ன மாதிரியே கல்யாணத்திற்கு முதல் நாள் இந்தியா திரும்பினான் அஷ்வத்.

திருமண நாள் அன்று வரையுமே சாராவின் மனமோ ஒரு பக்கம் பனிமலையாய் குளிர்ந்தும் மற்றொரு பக்கம் எரிமலையாய் குமுறிக் கொண்டும் இருந்தது.

‘எந்த அஷ்வத்தோடு திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாளோ அந்தத் திருமணம் சிறிது நேரத்தில் நடக்கப் போகிறது. ஆனால் மனம் ஒத்துக் காதலோடு இல்லை! தாத்தாவுக்காகக் கூட அஷ்வத் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. அவருக்கு வேண்டியது எல்லாம் என்னிடம் இருக்கும் இந்தக் கண்கள் தான்!’ என்று யோசித்து அறிந்து கொண்டவள் மனதால் கஷ்டப்பட்டு அழுது கரைந்தாள் சாரா.

இங்கே இவள் இப்படி இருக்க அங்கே அவனோ எந்த வித மனப் போராட்டமும் இல்லாமல் சர்வசாதாரணமாக மாப்பிள்ளை கோலத்தில் கிளம்பி இருந்தான் அஷ்வத்.

தாத்தாவின் குலதெய்வக் கோவிலில் காலை எட்டு மணிக்கு முகூர்த்தம் என்பதால் எல்லோரும் நிதானமாகக் கிளம்பி கோவில் சென்று எந்த வித ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் இல்லாமல் சுற்றத்தார் சொந்தபந்தம் என்று கொஞ்ச பேர் முன்னிலையில் சாராவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் அஷ்வத்.

தாலியைக் கட்டும் போது மட்டும் ஒரு வினாடி அவன் தயங்கினானோ என்ற சந்தேகம் சாராவுக்கு. ஏனெனில் அவனுள் தடுமாற்றத்தை அவள் கண்டுகொண்டாள். இருவரும் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவர் கண்ணே கலங்கி விட்டது. பிறகு அனைவரும் கிளம்பி வீட்டுக்குச் செல்ல.

ஒரு வயதான பெண்மணி கையால் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்து அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து முடித்துப் பின் வந்த சொந்தங்கள் அனைவரும் சென்று விட எப்போதும் போல் அன்றாடம் தங்கள் வேலையைப் பார்க்க அவர் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

தாத்தாவின் உடல் நிலைக் கருதி இரவு எந்த வித சாங்கிய சம்பிரதாயமோ பூ அலங்காரமோ வேண்டாம் என்று உறுதியாக அஷ்வத் சொல்லி விட பெரியவர்களும் இருவரும் சேர்ந்தே முடிவு எடுத்தப் பிறகு நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் விலகி விட்டனர்.

இரவு உணவு முடித்துத் தன் அறைக்கு வந்த அஷ்வத் சாரா தன் அறைக்கு வந்ததும் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் அவளிடம் கூறித் தன் மனமாற்றம் குறித்தும் இனி நம் வாழ்வு எப்படி இருக்கப் போகிறது என்றும் பேச நினைத்து அவள் வருகைக்காக அவன் காத்திருக்க

ஐயோ பரிதாபம்! சாராவோ எப்போது அவன் மனைவியாக அவன் தாலியைத் தன் கழுத்தில் வாங்கினாளோ அந்த வினாடியிலிருந்து இந்த வினாடி வரை அவன் கண்ணில் அவள் படவே இல்லை. இப்போதுமே மேலே வந்தவள் அவன் அறைக்குப் போகாமல் முன்பு தாத்தா பயன்படுத்திய அறைக்குள் சென்று அடங்கி விட்டாள் சாரா.

தாத்தாவோ வேலையாட்களோ மேல வர வழியில்லாத காரணத்தாலும் அஷ்வத் தன்னை எதிர்பார்க்க மாட்டார் என்ற எண்ணத்தாலும் அவள் இப்படி ஒரு முடிவை எடுக்க ஆனால் அதை அவள் அஷ்வத்திடம் சொல்லாமல் விட்டது தான் தப்பானது. அவள் அவனைப் பார்த்துப் பேசி இருந்தாலோ இல்லை அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கேட்டு இருந்தாலோ இருவருக்குள்ளும் இதுவரை நடந்ததற்கும் இனி நடக்கவிருக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வையாவது கண்டிருக்கலாம். என்ன செய்வது? விதி யாரை விட்டது?

அவளுக்காகக் காத்திருந்த அஷ்வத் தன்னை மீறித் தூங்கியவன் காலையில் எழுந்து அறையில் அவளைத் தேடியவன் அவளைக் காணாது அறையிலிருந்து வெளியே வர, அதே நேரம் அவனுக்கு எதிர்திசையில் இருந்த தாத்தாவின் அறையிலிருந்து வெளியே வந்தாள் சாரா. குளித்து முடித்து வெளியே வந்த அவளைப் பார்த்ததே போதும் என்ற நிம்மதியுடன் வேறு எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்க்க விலகிப் போனான் அஷ்வத்.

அதன் பிறகு நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க சாராவும் அவனிடம் பேசவில்லை அவனும் அவளிடம் பேச முயற்சிக்கவும் இல்லை. சாராவும் எப்போதும் போல் தாத்தா அறையைத் தான் பயன்படுத்தி வந்தாள்.

திருமணம் நடந்த மூன்றாம் நாள் அஷ்வத் பாரீஸ் சென்று சில வேலைகளை முடிக்க வேண்டி இருந்ததால் தான் நாளைக்குக் கிளம்புவதாகத் தாத்தாவிடம் சொல்லி விட்டு சாராவைத் தேடி மேலேயிருந்த இப்போது அவள் பயன்படுத்தும் அறைக்கு வந்தவன் அவள் டேபிள் முன் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்

“என்ன பொம்மி எழுதற? என்ற கேள்வியுடன் அவன் அவள் அறைக்குள் திடீர் என நுழையவும், சாரா அவன் குரலில் விதிர்விதிர்த்து எழுந்து நின்றே விட அதைப் பார்த்தவன் மனதில் குறித்துக் கொண்டாலும் அதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவளிடம் வந்தவன்

“எனக்கு முக்கியமான ஒரு அசைன்மெண்ட் கிடைச்சிருக்கு. அதை முடிக்க நான் நாளைக்குப் பாரீஸ் போறேன் பொம்மி” என்று சொல்ல

“திரும்ப எப்போ வருவீங்க?” அவளையும் மீறி அவள் கேட்டு விட

‘ஆமா நான் இங்கே இருந்தா மட்டும் என் கூடவே ஒட்டிகிட்டு திரிஞ்ச பாரு! கல்யாணம் அன்னைக்கு என் முகத்தைப் பார்த்த. அதோட இன்று தான் என் முகத்தை பார்க்கற. ஆனா கேள்வி மட்டும் எப்போ வருவீங்கனு!’ என்று மனதுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவன்

“எப்படியும் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் பொம்மி”

“அவ்வளவு நாளா?” என்று வாய் விட்டுச் சொன்னவள் அவளையும் மீறி கண்கள் கலங்கி விட, அஷ்வத்துக்கும் கஷ்டம் தான். இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை பேசவில்லை என்றாலும் ஒரே வீட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதியாவது அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போது அதுவும் பறிபோகப் போகிறது என்றால் அவனுக்கும் அது வேதனையாகத் தான் இருந்தது.

“தாத்தா தான் இப்போ நல்லா இருக்கிறாறே நீ ஏன் அங்க வந்து படிப்பைத் தொடரக் கூடாது பொம்மி?” என்று அஷ்வத் கேட்க

தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதில் இருந்து படிப்பும் வேண்டாம் வெளிநாடும் வேண்டாம் என்று சாரா உறுதியாகச் சொல்லி மறுத்து விட்டு அவள் இங்கேயே இருந்து விட அதைத் தான் இப்போது அஷ்வத் ஞாபகப் படுத்தி அவளைத் திரும்ப படிப்பைத் தொடரச் சொல்லித் தன்னுடன் வரும்படி அழைத்தது.

“இல்ல.. நான் வரல. இங்கேயே நான் ஏதாவது படிச்சிக்கிறேன். தாத்தாவ விட்டு நான் எங்கேயும் போக விரும்பல” என்று சாரா பதிலளிக்கவும்

“ம்ம்ம்..” என்றவன் அவளை மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டு விட

“நீங்க திரும்ப வந்துடுவீங்க தானே? என்று அவளே மீண்டும் கேட்க

“ம்ம்ம்…. என்ன தான் என் வேலையை எல்லாம் ஸ்டீவ் கிட்ட கொடுத்துட்டு வந்தாலும் நானும் அடிக்கடி போய் பார்க்கணும் தான டா?” என்று அஷ்வத் கனிவாய் கூற

“ம்ம்ம்…” என்று அவள் அமைதியாய் நிற்கவும்

‘அப்ப நான் போய்ட்டு வரட்டுமா?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் அவன் கேட்க, வாயைத் திறந்து அவனுக்குப் பதில் சொல்லாமல் ஏதோ தன் கழுத்து தான் சுளுக்கி கொண்டதோ என்பது போல் மிக மெல்லியதாகத் தலையை ஆட்டினாள் சாரா.

அதில் திருப்தி இல்லாமல் அன்று போல் இன்றும் அவளை அணைத்து விடை பெற நினைத்தவன் ஆசையுடன் அவள் முன் ஓர் எட்டு எடுத்து வைக்க சாராவும் அன்று போல் கண்ணில் மிரட்சியுடன் பின்னே ஓர் அடி எடுத்து வைத்தாள்.

அதில் சற்றுத் தயங்கி அவள் முகம் பார்த்தவன் அவள் விழிகளில் பயத்தையும் மீறி ஏக்கத்தைப் பார்த்தவனோ ஒரே எட்டில் அவளை நெருங்கி இறுக்கி அணைத்தவன் தன் மீசைமுடியும் மூச்சுக்காற்றும் அவள் செவிமடல்களைத் தீண்ட அவள் முகத்தைத் தன் மார்பில் அழுத்தப் புதைத்தவனோ

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வரப் பார்க்கிறேன் டி கண்ணம்மா!” என்று அவள் காதுக்குள் ரகசியம் பேசியவன் அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் தன் இதழ் பதித்து “சரி உன் இஷ்டப் படி நீ இங்கேயே இரு. ஆனா அங்க என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் நம்ம கல்யாணத்தைத் தெரியப்படுத்த ஒரு ரிசப்ஷன் அரேன்ஜ் பண்ணியிருக்கேன். அப்போ எந்த மறுப்பும் சொல்லாம நீ என் கூட வந்து தான் ஆகணும்” என்று அவன் சொல்ல

“எதுக்கு? இப்போ இதெல்லாம் தேவையா? வேணாமே..” என்று அவள் மறுப்புத் தெரிவிக்கவும்

“ஏன், நீ என் மனைவி தானே? தாத்தாவுக்காகவே இருந்தாலும் நமக்கு நடந்தது கல்யாணம் தானே? அப்போ நான் அதைத் தெரியப் படுத்துறதுல என்ன இருக்கு?” என்று அவன் சற்று கோபமாகக் கேட்கவும்

‘ஆமா.. கல்யாணம் என்னமோ நிஜம் தான், நானும் உங்க மனைவி தான்! அதனால இப்போ பெருசா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையிலும் அப்படி என்ன மாற்றம் வந்துடிச்சி?’ என்று மனதுக்குள் நினைத்தவள் அமைதிகாக்கவும், அவள் வாய் வார்த்தையாக சொல்லவில்லை என்றாலும் அவள் முகத்திலிருந்தே அதை அறிந்தவன்

‘இந்தக் கஷ்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் பொம்மி. உன் கிட்ட என் மனசுல இருக்கிறத எதையும் பகிர்ந்துக்காம என்னால் உன்னை விட்டு விலகியிருக்க முடியாத ஓரே காரணத்திற்காக அவசரமாக இந்தக் கல்யாணாத்திற்கு சம்மதிச்சேன் டி’ என்று மனதுக்குள் நினைத்தவன் அந்த உண்மையைச் சொல்லாமல் “தாத்தாவுக்காக உன்னைத் திருமணம் செய்துகிட்டேன் தான். ஆனா எல்லாம் சீக்கிரமே நல்ல மாதிரியா முடியும்” என்று உணர்ந்து சொன்னவன் அவளை ஆரத் தழுவவும் எல்லாம் மறந்து அவளும் அவனை ஆரத் தழுவினாள் சாரா.

“அப்ப நான் போய்ட்டு வரட்டுமா?” என்று பிரியவே மனமில்லாமல் அவன் கேட்க

“ம்ம்ம்.. சீக்கிரமே வந்துடுங்க” என்றவள் தான் முகம் புதைத்திருக்கும் அவன் மார்பிலேயே தன் இதழ் பதித்து விடை கொடுக்கவும்

“ஏன், அந்த முத்தத்தை இங்க கொடுத்தா தான் என்ன?” என்று அவன் கேட்க

“எங்கே?’ என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவன் அவனுடைய இதழைச் சுட்டிக் காட்டவும் வெட்கத்தில் தலை குனிந்தவள் பிறகு சற்று நேரம் கடந்தும் அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே மறுபடியும் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அதில் அவன் கண்ணில் ஒரு வித எதிர்பார்ப்பைப் பார்த்தவள் உடனே தன் நுனிக் காலால் எக்கி அவன் கழுத்தை வளைத்தவள் அவன் நெற்றியில் அழுத்தத்துடன் கூடிய ஓர் அழகிய முத்தத்தை வைக்க

“என்ன டி, நீ கொடுத்த பில்டப்ப பார்த்து நானே ஒரு நிமிஷம் அசந்து போய்ட்டேன். ஆனா கடைசியில இங்க கொடுக்கத் தானா?” என்று அவன் அவளைச் சீண்ட, அவன் சீண்டலில் வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகப் பார்த்தவளைப் பிடித்து நிறுத்தியவன்

“நீ கொடுக்கலனா என்ன? நான் தரேன்” என்றவன் அவள் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் இதழை மென்மையாகச் சிறை செய்தவனோ பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முத்தத்திலேயே அவன் அழுத்தத்தைக் கூட்டவும் பெண்ணவளுக்கோ முதல் முறையாக அவனிடமிருந்து இப்படிப் பட்ட முத்தத்தைப் பெற்றவளோ முதலில் சிலிர்த்தவள் பின் அவன் வேகத்தில் உடலில் ஓர் நடுக்கம் ஓட, அதை உணர்ந்து அவளை விட்டு விலகி நின்றவனோ

“சாரி டா கண்மணி” என்று சொல்ல

“இல்ல இல்ல.. எனக்கு ஒண்ணும் இல்ல” என்று அவசரமாக அவள் சொன்ன பதிலில் உங்கள் முத்தம் இன்னும் வேண்டும் என்பதை அறிந்தவனோ

“ஹா… ஹா….” என்று வாய்விட்டுச் சிரித்தவனோ “என்னை ரொம்பவே மாத்திட்டு வர டி பொம்மி” என்றவன் அவளைத் தூக்கி ஓர் சுற்று சுற்றிப் பின் அணைத்துக் கொண்டவன் சில சில்மிஷங்களிலும் பேச்சிலும் அவளைச் சிவக்கவும் சிரிக்கவும் வைத்தவன் அதே மனநிலையுடன் விலகிச் சென்றான் அஷ்வத்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN