காதல்பனி 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 13

ஒரு வாரம் கழித்துத் தான் திரும்ப வருவேன் என்று சொல்லி விட்டுச் சென்றவன் எந்த வித முன் அறிவிப்புமின்றி நான்காவது நாளே வந்து நின்றான் அஷ்வத் வெளி வாசலிலேயே அமர்ந்திருந்த தாத்தாவிடம் பேசி நலம் விசாரித்த பின்பு பொம்மியைத் தேடிப் பார்த்தவன் அவள் எங்கும் இல்லை என்றவுடன் அவள் மொபைலுக்கு அழைக்க முழு அழைப்பும் போனதே தவிர அவள் எடுக்கவேயில்லை. அதில் எரிச்சலுற்றவன் திரும்ப தாத்தாவிடமே வந்து

“எங்க தாத்தா அவ?” என்று கேட்க, சேரில் அமர்ந்தபடியே சற்றுக் கண் அயர்ந்து இருந்தவர் திடீர் என்று அவன் குரலில் கண் விழித்து அவன் என்ன கேட்டான் என்பது புரியாமல் விழிக்க

“அவ தான் தாத்தா! என் பொண்டாட்டி எங்க?” என்று அவன் சற்றுக் குரலை உயர்த்தி மறுபடியும் கேட்கவும்

“பொம்மியா? அந்தப் புள்ள காட்டுப் பக்கம் இல்ல போய் இருக்கு! மருந்தோட தாக்கத்தால நான் தான் உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன்”

“சரி, அப்போ நான் அங்கேயே போய் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவன் அங்கு இருந்து போக எத்தனிக்கவும்

“இப்போ தானே சின்னா வந்த? குளிச்சிட்டு சாப்பிடு. அதற்குள்ள பொம்மி வந்திடுவா”

“அதெல்லாம் என் பொண்டாட்டி வந்த பிறகே செய்துக்கிறேன்” என்று நில்லாமல் அவருக்குப் பதில் கொடுத்த படியே சென்று மறைந்தான் அஷ்வத்.

தாத்தாவுக்கோ சிறு நிம்மதி! ‘வந்த உடனே மனைவியைத் தேடுகிறானே? அப்போ இவர்களுக்குள்ள இருந்த பிரச்சனை தீர்ந்துடிச்சினு தானே அர்த்தம்’ என்று நினைத்தார் அவர்.

சாராவோ அங்கே சமாதி முன் சோகப் பதுமை என நின்றிருக்க அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் பக்கத்தில் போய் இவன் நிற்க.

ஏதோ உந்துதலில் திரும்பிப் பார்த்தவள் கனவில் வந்த அவன் பிம்பமோ என்று நினைத்து எதுவும் பேசாமல் மறுபடியும் திரும்பிக் கொண்டவள் சாமாதியைத் தொட்டு வணங்க அவனும் அதே போல் செய்யவும் அதில் கலைந்தவள்

“மச்சான் வந்துட்டீங்களா?” என்ற கூவலுடன் அவனை அணைத்துக் கொள்ள, வெகு நாள் கழித்து அவள் அழைத்த மச்சான் என்ற அழைப்பில் சிலிர்த்தவன்

“இது கனவு இல்ல நான் நிஜம் தான் டி கண்மணி!” என்றவன் அவளை ஆரத் தழுவிக் கொண்டான் அவள் கணவன்.

“ஆமா உன் போன் எங்க? உனக்கு எத்தனை தடவை நான் கால் பண்றது?”

“எனக்கு யார் போன் பண்ணப் போறாங்க? அதான் மொபைல சைலண்ட்ல போட்டு வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். அதுவும் இல்லாம நீங்க இன்னைக்கு வர்றது எனக்குத் தெரியாதே!” என்று அவள் மழலையாய் மிழல

“ம்ம்ம்… ஐ மிஸ் யூ டி! நீ என்ன மிஸ் பண்ணியா?” என்று அவன் கேட்க

“ம்ம்ம்….” என்றவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனை ஆரத் தழுவவும்

“இவ்வளவு தானா உன் மிஸ் யூ?” என்று கேட்டவன் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணனு இப்போ காட்டுறேன் பாரு” என்றவன் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை இறுக்க அணைத்தவன் இந்த மூணு நாளும் உன்னைப் பார்க்காம நான் தவிச்சிப் போய்ட்டேன் தெரியுமா? உன்னை எப்போ பார்ப்போம்னு இருந்துச்சு. சதா உன் ஞாபகம் தான்! ஆனா நீ என்னை நினைச்சிருக்கவே மாட்ட இல்லடி? என்று அவன் குறைபடவும்

‘நானா நினைக்கலை? நீங்க இந்த மூணு நாள் தான் தவிச்சீங்க. நான் எத்தனை வருஷமா உங்க வருகைக்காகத் தவிச்சிப் போய் காத்துகிட்டு இருக்கேன்னு தெரியுமா?’ என்று மனதுக்குள் நினைத்தவள் ஏக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்கவும், அவள் விழி வீச்சில் தன் வசம் இழந்தவனோ

“இப்படி எல்லாம் பார்க்காத டி. அப்புறம் அன்று மாதிரி உன் உதடு என் கிட்ட படாத பாடுபடும்” என்று அவன் கண் சிமிட்டிக் கெஞ்சவும், வெட்கத்துடன் அவன் மார்பிலேயே தலை சாய்த்தாள் சாரா. இருவருக்குள்ளும் நெருக்கம் இல்லை என்றாலும் ஏதோ பேச்சிலும் சீண்டலிலும் சிரிப்பிலும் நாட்கள் சென்றன.

இதற்கிடையில் புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வைக்க என்று அவர் மாமாவுக்காக முறை செய்ய வேலுச்சாமி தாத்தா சாராவையும் அஷ்வத்தையும் அழைக்க, அஷ்வத்தோ புதிதாக ஓர் உறவு வருகிறதே என்ற எண்ணத்தில் கிளம்ப சாராவோ வேறு வழியில்லாமல் தாத்தாவுக்காக கிளம்பிச் சென்றாள்.

வேலுச்சாமி தாத்தா வீடோ திருச்சி நகருக்குள் ஏதோ ஒரு கிராமம் என்பதால் இருவரும் நான்கு நாட்கள் சற்று நிதானமாகத் தங்கி வர வேண்டும் என்று தாத்தா கட்டளை இட்டு விட அவர் உடலும் சற்றுத் தேறி இருந்ததாலும் அஸ்வத் தாத்தாவுக்காக இந்தியா வந்து இங்கேயே இருந்து சாராவைக் கல்யாணம் செய்ததினால் முன்பு போல் அஸ்வத் மேல் வேலுச்சாமி தாத்தா கோபம் காட்டாததால் இருவரையும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து அதை செயல் படுத்தியும் விட்டார் சக்ரவர்த்தி தாத்தா.

சரியாக வேலுச்சாமி தாத்தா அஸ்வத் சாராவுடன் அவர் வீட்டு வாசலில் வர அதே நேரம் வாசல் முற்றத்தில் சேரில் அமர்ந்திருந்த அவர் மனைவியோ கார் வந்து நின்றதையும் அதிலிருந்த அஸ்வத் சாரா தன் கணவனையும் பார்த்தவர் என்னமோ அவர்கள் யாரையும் பார்க்காத மாதிரி அங்கிருந்த வேலையாட்களிடம்

அடியேய் செல்வி அறிவிருக்குதா டி உனக்கு? நாட்டாம ஊட்டு நாயி சந்தனக்காட்டில் ஏறுதேன்னு வண்ணான் ஊட்டு நாய் வெள்ளாவில ஏறுச்சாம்…. அந்த கதையால இருக்கு..ம்க்கும் பசு மாட்டுத் தொழுவத்துல கட்டிப் போட வேண்டிய கன்னுக் குட்டிய இப்படிக் கட்டிப் போடாம விட்டு வச்சிருக்கியே, பாரு அது என்ன பண்ணுதுன்னு! ரோட்டுல போற நாய் கிட்டேயும் சாக்கடையில உருளுற பன்னிக் குட்டி கிட்டேயும் சிநேகம் வச்சிகிட்டு ஜோடி போட்டுட்டுத் திரியுது! ஏன் நாயேன்னா எட்டி மூக்கை நக்குமாம். அதை அதை வைக்க வேண்டிய இடத்துல வைக்கலனா நம்ம கவுரத மருவாதி தான் போகும். எல்லாம் என் வீட்டு மனுஷன சொல்லணும். பஞ்சம் பிழைக்க வந்ததுங்களுக்கெல்லாம் ஊருக்குள்ள தங்க இடம் தந்தாரு பாரு, அதான் அதுங்க புள்ளைங்கள்ல இருந்து அதுங்க வளர்க்குறவங்க வரை இப்படி சகட்டு மேனிக்குத் திரியுதுங்க.

இந்தா செல்வி, கன்னுக் குட்டிய நான் வீட்டு வழியா புடிச்சிட்டு வந்து பின் பக்கமா தரேன். நீ பின் பக்கமா வந்து என் கிட்ட இருந்து வாங்கிட்டுப் போய் தொழுவத்துல கட்டு. அதுக்கு முன்னாடி இந்த நாய வெளி வாசல்ல கட்டு. அப்படியே அந்தப் பன்னிய அடிச்சித் துரத்தி விடு” என்று தன் பெருத்த உடலை சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறிய படி அவர் கத்திக் கொண்டிருக்கவும்

காரிலிருந்து இறங்கிய அஸ்வத் இதைக் கேட்டுச் சாதாரணமாக இருக்க சாராவுக்கு உடலும் முகமும் கூசி சிவந்து போக, அவர் கணவரோ

“ஏன் டி வள்ளியம்மா! உனக்கு தான் சத்தம் போட்டு பேசினா உடம்புக்கு ஆகாது இல்ல, பிறகு ஏன் டி கத்துற? அந்த மூணும் குழந்தைங்க மாதிரி ஒண்ணா விளையாடிகிட்டு இருக்குங்க. அதுங்களப் பிரிக்கச் சொல்ற! செல்வி, அதெல்லாம் கட்டிப் போட வேணாம். மூணையும் ஓட்டிகிட்டுப் போய் தொழுவத்துல விடு. அதுங்க அங்க விளையாடட்டும்” என்று அதிகார தோரணையில் பேசியவர் “இவளுக்கு இவ உடம்பத் தூக்கிட்டு நடக்கறதே கஷ்டமா, இதுல கன்னுக் குட்டிய இழுத்துகிட்டுப் போறாளாம் போக்கத்தவ!” என்று முணுமுணுத்துவிட்டு

“அதை விட இங்க வந்து பாரு, நம்ம சக்கரவர்த்தி மாமா வீட்டுப் பேரனும் பேத்தியும் வந்து இருக்காங்க” என்று அவர் தன் மனைவியை அழைக்கவும்

“அதான் என் பெருத்த ஒடம்ப வச்சிகிட்டு என்னால நடக்க முடியலன்னு நீங்களே சொல்லிட்டீங்க இல்ல? நான் எழுந்து வந்து வரவேற்காம போனா அஸ்வத் தம்பி ஒன்றும் நெனைச்சுக்காது. வாங்க தம்பி வாங்க! சீமையில இருந்து வந்த தம்பி நீங்க தானா? உன் தாத்தா எப்படி இருக்காரு? உன் கல்யாணத்துக்கு நான் வரல. இதான் நீ கட்டிக்கிட்டவளா? ஏன் தம்பி ராசா கணக்கா இருக்கற நீங்க சீமையில பார்க்காத பொண்ணா? இவள.... “ என்றவர் வார்த்தையை மாற்றி “இந்த ஊர் பொண்ண கட்டிக்கிட்டிங்க” என்று அந்தப் பெண்மணி கேலி பேசவும்

“ஏன் இல்ல? இந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு அழகிகளையும் பார்த்து மட்டும் இல்ல பழகியும் இருக்கேன். ஆனா எனக்கான உலக அழகியும் நான் விரும்பறவளும் என்னையே ஆளப் போற பட்டத்து ராணி இங்க தான இருக்கா!” என்று அவருக்கு அதிகாரமாக பதில் சொன்னதோடு மட்டுமில்லாமல் வலது கையால் தன் மனைவியை இழுத்துத் தன்னோடு அவன் அணைக்கவும், அவன் பேச்சையும் செயலையும் பார்த்த வள்ளியம்மா ‘இவன் கிட்ட அதிரடியா பேசினா சரி வராது கொஞ்சம் குழைந்து தான் போகணும்’ என்று நினைத்தவள்

“ஹி… ஹி…. நான் பொதுவா சொன்னேன் அஷ்வத் தம்பி. உனக்கு ஏத்த ராஜாத்தி நம்ம சாரா தான்னு எனக்குத் தெரியாதா இல்ல நான் தான் மறந்திடுவேனா? நீங்க இரண்டு பேரும் இங்க இருக்குற வரைக்கும் உங்க பட்டத்து ராணிய நான் எப்படி கவனிச்சிக்கிறேனு உன் உலக அழகி மனைவி பொம்மி பார்க்கத் தான போறா”என்று அவனுக்கு கேட்கும் படி சொன்னவர்

‘அரசன் குடுமியையும் அம்பட்டன் புடிப்பான்! உன் பட்டத்து ராணி குடுமியும் இந்த வள்ளியம்மா கையில தான்’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே அவர் தழைந்து போக, கணவனின் பேச்சில் உள்ளம் குளிர அவனிடம் ஒட்டி நின்ற சாரா அந்தப் பாட்டியின் பேச்சில் விதிர் விதிர்த்துப் போய் அவரைப் பார்க்க

“கிராமத்து ஆட்களைப் பற்றி எனக்குத் தெரியாதா பாட்டி? மனசுல எதையும் வச்சிக்காம எதுவா இருந்தாலும் எதார்த்தமா பேசுவிங்க. அதனால நான் பெருசா எடுத்துக்கல. ஆனா நான் எதார்த்தமா சொல்லல. முழு மனசா உணர்ந்து என் பொம்மி எனக்குக் கிடைச்சத வச்சி தான் சொன்னேன்” என்று அவன் விளக்கம் கொடுக்க

“அட என்ன டி நீ? வந்தவங்கள வாசல்லயே நிக்க வெச்சிப் பேசிக்கிட்டு! நீ வா தம்பி உள்ள” என்று வேலுச்சாமி தாத்தா அவர்கள் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து உள்ளே அழைத்துச் சென்று விட அதனுடன் முடிந்தது அவர்கள் உரையாடல்.

வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடமே வேலுச்சாமி தாத்தா சில நிலங்களையும் ஆட்களையும் பார்க்க என்று அஷ்வத்தை வெளியே அழைத்துச் சென்றவர் மதியம் உணவுக்கு தான் அவனை வீட்டிற்கு அழைத்து வர காலையில் இவர்கள் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டதால் மதியம் இவர்களுக்கு விருந்து வீட்டிலேயே தயாராகி இருந்தது.

அவர்கள் இருவரும் உணவுக்கு வந்த நேரம் தாத்தாவைத் தேடி யாரோ ஒருசிலர் வந்து அவரை மட்டும் வெளியே அழைத்துச் சென்று விட இவனை மட்டும் உணவு மேடையில் அமர வைத்த பாட்டி வேலையாள் மூலம் அவனுக்கு உணவு பரிமாற ஏற்பாடு செய்ய. வந்ததிலிருந்து தன் மனைவியைக் கண்ணில் காணாமல் தேடியவன் சரி உணவு பரிமாறவாது அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க அங்கு வேலையாளைப் பார்த்தவன்


“பொம்மி எங்க? நீங்க போய்ட்டு அவள அனுப்புங்க” என்று சொல்ல

“இல்லங்க ஐயா! அவங்க ஏதோ கொஞ்சம் வேலையா வெளியே போய் இருக்காங்க. அதான் பெரியாத்தா என்ன உங்களுக்குப் பரிமாறச் சொன்னாங்க” என்று அவள் இழுக்கவும்

“எங்க போய் இருக்கா? என் கிட்ட சொல்லாம! சரி அவ வரட்டும். அவ வந்த பிறகே நான் சாப்டுக்கறேன்”

‘அச்சோ! பெரியாத்தா இதைக் கேட்டா திட்டுவாங்களே! அந்த பொம்மி பொண்ணு இப்போ எப்படி வரும்? அதைத் தான் வேலை செய்ய மிளகாய் குடோனுக்கு அனுப்பி இருக்காங்களே! இப்போ என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியலையே?’ என்று வேலை செய்யும் அந்தப் பெண் கையைப் பிசைந்து கொண்டு நின்றவள் அஷ்வத் உணவு மேஜையை விட்டு எழுந்திருக்கவும்

“ஐயா… ஐயா… கொஞ்சம் இருங்கையா. அம்மா எங்க போய் இருக்காங்கனு தெரியல. இதோ பெரியாத்தா கிட்ட கேட்டு கையோட கூட்டிட்டு வரேன். அது வரை நீங்க சாப்பிட்டு இருங்க. உங்களுக்குப் பரிமாறின பொறவு நான் போறேன்” என்று அவள் சொல்லவும்

“இல்ல.. எனக்கு எதுவும் வேணாம். முதல்ல அவ வரட்டும் அப்பறம் நான் சாப்பிட்டுக்கிறேன் என்று அவன் கறாராகச் சொல்லவும் உடனே அவள் ஓடிப் போய் பாட்டியிடம் என்ன சொன்னாளோ உடனே அவரோ தன் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனிடம் ஓடி வந்தவர்


“அஷ்வத் தம்பி, உட்காருங்க உட்காருங்க! நான் பரிமாறுறேன். அந்தக் கழுதைக்கு உங்க ஞாபகம் எங்க இருக்கு? புருஷன்காரன் வருவானே நம்ம கையால சாப்பாடு பரிமாறி பக்கத்துலயிருந்து பார்த்துக்கிடலாம்னு இல்லாம இங்க அவ வயசு சினேகிதிங்களப் பார்க்கவும் அரட்டை அடிக்கவும் போய்ட்டா. நாம போய் இப்போ கூப்பிட முடியுமா? அது நல்லா தான் இருக்குமா?

வயசு பொண்ணுங்க நாளு பேரு ஒண்ணு சேர்ந்தா அவ்வளவு சீக்கிரமாவா வருவாளுங்க? அந்தப் பொண்ணு பொழுது சாய்ந்த பிறகு தான் தம்பி வரும். அதனால நீங்க சாப்பிட வாங்க. அந்தக் கழுதைக்காக நீங்க ஏன் பசியா இருக்கீங்க? ஐயர் வர்றவரைக்கும் அமாவாசை காத்திருக்குமா சொல்லுங்க” என்று அவர் நீட்டி முழங்கி அவனுக்குப் பரிந்து பேசுவது போல் சாராவை அவர் மறை முகமாகக் குற்றம் சாட்டவும்


“இருக்கட்டும் பாட்டி, அவ மெதுவாவே வரட்டும். அவங்க சிநேதிகளை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சி இல்ல? அதனால அவ போனதுல என்ன தப்பு இருக்கு? அவ எப்ப வராளோ வரட்டும். அவ வந்த பிறகே எவ்வளவு நேரம் ஆனாலும் நான் சாப்டுக்கிறேன். என் மனைவி கையால பரிமாறி நான் சாப்டா தான் பாட்டி எனக்கு திருப்தியா இருக்கும்” என்று அவன் மனைவிக்குப் பரிந்து பேசியது மட்டுமில்லாமல் அவள் வந்தால் தான் பச்சைத் தண்ணி என்றாலும் குடிப்பேன் என்ற ரீதியில் அவன் பேசிவிட்டு அமர்ந்து விடவும்

அதைப் பார்த்த வள்ளியம்மா பாட்டிக்கு ஒரு பக்கம் கோபமாகவும் இன்னொரு பக்கம் பகீர் என்றும் இருந்தது. கோபம் ஏனென்றால் இவ்வளவு சொல்லியும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் மனைவிக்கு ஜிங்குஜா போடுகிறானே என்றது தான் அது. பயம் எதற்கென்றால் தாத்தாவும் அஷ்வத்தும் வெளியே போன பிறகு சாராவைப் படுத்தி எடுக்க வேண்டும் என்ற முடிவில் அவளை மிளகாய்களை மூட்டைப் பிடிக்க வேலையாட்களில் வேலையாளாக வேலை செய்ய சாராவை அவர் மிளகாய் மண்டிக்கு அனுப்பியிருந்தார்.

அதை இங்கு அஷ்வத்திடமோ இல்லை தன் கணவனிடமோ அவர் சொல்ல முடியுமா? அவள் இங்கில்லை என்பதை மறைக்கத்தான் தன் கணவனை வெளியே அனுப்பினது. அஷ்வத்திடம் ஏதாவது பொய் சொல்லி சமாளித்து விடலாம் என்று அவர் நினைத்தது. ஆனால் அஷ்வத் மனைவி மனைவி என்று உருகோ உருகு என்று உருகி மேலும் இவர் பேச்சு எதையும் காதில் வாங்காமல் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கவும் உள்ளுக்குள் அவனை வசை பாடியவர் இப்போது இவனுக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் தன் கணவனிடம் இன்று முழுக்கத் திட்டு வாங்க வேண்டியிருக்கும் என்று நினைத்தவர் வேண்டா வெறுப்பாக வேலையாளிடம் கண்ணைக் காட்டியவர்

“இந்தா செல்வி! போ போய் அந்த பொம்மி பொண்ணக் கூட்டிகிட்டு வா. அவ புருஷன் சாப்பிடாம உட்கார்ந்து இருக்கானு சொல்லி கூட்டிகிட்டு வா. அப்பவாது அந்த பொண்ணுக்கு புருஷன் ஞாபகம் இருக்கானு பார்ப்போம்” என்று பொடி வைத்துப் பேசி வேலையாளை அனுப்பியவர்

“மணி மூணு ஆகுது. அவ வயிறு முட்ட சாப்டு இருப்பா. இது தெரியாம இந்தப் புள்ள இப்படிப் பசி பட்டினியா அவளுக்காகக் காத்து கிடக்கு” என்று வாய் விட்டுப் புலம்பியவர்

“இதோ வந்திடுவா தம்பி. இங்கையே உட்கார்ந்து இருங்க. சித்த எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு இதோ வரேன்” என்று அவர் சென்று விட.

அவர் சாராவை ஏத்திவிட்டுப் பேசியதில் அஷ்வத்துக்கு சிறிதும் பாட்டி மீது சந்தேகமோ தன் மனைவி மேல் கோபமோ வரவில்லை. தன் மனைவி எங்கே அவளை இப்போதே காண வேண்டும் என்ற ஆசை தான் அவனுக்கு அதிகமானது. அவன் தன் மனைவியையே நினைத்துக் கொண்டு அமர்ந்து இருக்க

“என்னங்க இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க?” என்று அந்த அறையின் வாசலில் சாராவின் குரல் கேட்கவும், நிமிர்ந்து அவளைப் பார்த்த அஷ்வத் அவள் கோலத்தைக் கண்டு அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்தே விட்டவன்

“என்ன டி என்ன ஆச்சி? ஏன் இப்படி இருக்க? என்ன டி கோலம் இது!” என்ற கூவலுடன் அவன் அவளிடம் நெருங்கவும்

“ஐயோ! கிட்ட வராதிங்க.. அங்கேயே நில்லுங்க” என்று அவனுக்கு மேல் கூவியவள் அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் சாரா.

காலையில் பாட்டி அவளை உருட்டி மிரட்டி மிளகாய் மண்டிக்கு அனுப்பி வைக்க அங்கே போனவள் தான் அணிந்திருந்த சாதாரண புடவையின் மேல் ஆண்கள் போடும் முழுக்கை சட்டையை அணிந்து தலையில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு தரம் பிரித்து வந்த காய்ந்த மிளகாய்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுடன் சேர்ந்து சாக்குப் பையில் அடைத்து மூட்டை பிடிக்க ஆரம்பித்தாள் சாரா.

இது ஒன்றும் அவளுக்குத் தெரியாததோ இல்லை செய்யாத வேலையோ இல்லை. அவள் சின்ன வயதில் இருந்தே இதெல்லாம் செய்து தான் இருக்கிறாள். ஆனால் இடையில் இப்போது ஏற்பட்ட சில மாற்றத்தால் அவள் வெளி நாடு போக வேண்டி இருந்ததால் இந்த வேலைகளைச் செய்யாமல் கொஞ்சம் இடைவேளை விட்டு இருந்ததால் இப்போது இந்த வேலைகளைச் செய்ய அவளுக்குச் சிரமமாக இருக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேலை செய்தவள் தன் கணவனின் தகுதியையும் பேரையும் புகழையும் எண்ணி துக்கம் நெஞ்சடைக்க வேலை செய்து கொண்டிருந்தவள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN