நீயே என் இதய தேவதை 5

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கவிதா காலையில் பேருந்தில் தனது சித்தியுடன் புறப்பட்டாள்.குழந்தையை வைத்துக் கொண்டு பயணம் செய்ய சிரமப்படுவாள் என்று சித்தியும் உடன் வந்திருந்தாள். இதுவரை தனியாக தங்கியதில்லை எங்கும். சிறு வயதில் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள். பிறகு கணவன் பின்பு சித்தி வீட்டில். சுகுணா சித்தி பாதுகாப்பிலாத இடத்தில் தங்க வைக்க மாட்டாள் என்றாலும்
ஏதோ ஓர் பயம் மனதினை ஆக்ரமித்து தான் இருந்தது

புது இடம் புது மனிதர்கள் வேலை வேறு எப்படி இருக்குமோவென்ற சிந்தனையில். இது ஏதும் அறியாமல் மடியிலிருந்த குழந்தை மாயா நன்றாக தூங்கி இருந்தது. என்னவோ பெரிய கடினமான வேலைகளை செய்துவிட்ட களைப்பில் அசந்து உறங்குவது போல இருந்த அதன் முகத்தை பார்த்தவுடன் லோசாக புன்னகைத்தாள். இந்த குழந்தையை தான் நீ கொல்ல நினைத்தாய் என மனசாட்சி கூறுகையில் ஒரு குற்ற உணர்ச்சி.

"இங்கதாண்டி இறங்கணும்" என்ற சித்தியின் குரலை கேட்டு விழித்தாள். "அதுக்குள்ள ஊர் வந்திடுச்சா... ?" என்றபடி கவிதா குழந்தையை தூக்கிக் கொண்டும் சித்தி பயண பொதிகளை எடுத்துக் கொண்டுன் கீழிறங்க பேருந்து நிலையத்தில் சுகுணா காத்திருந்தாள். இவர்களை பார்த்ததும் கையசைத்து வரவேற்றாள்.
நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் அருகில் நின்றிருந்தவள் "இதோ வந்துட்டாங்க கெளம்பிடலாண்ணா வா கவி...... வா அக்கா..... பையைக் கொடு ஆட்டோல உட்காரு"" "என்றபடி அவர்களை அமரச் செய்து தானும் அருகில் அமர்ந்து பயணித்தாள்.
நல்லாயிருக்கியா.... சுகி ?பாத்து ரொம்ப நாளாச்சு.
நல்லா இருக்கேன் கா.மாமா, பசங்களாம் எப்டி இருக்காங்க?

"நல்லா இருக்கிறாங்க. இன்னும் எவ்ளோ தூரம்"

10 நிமிஷம் தான் கா. இதோ வந்திடும்.
நல்லவேளை நீ வந்த. இந்த எடம் ரொம்ப மாறி போய்டுச்சு. நீ இல்லனா உன் வீட்ட கண்டுபிடிக்க கஷ்டம்தான்.
இப்படியாக இவர்கள் உரையாடிக் கொண்டே வர கவி அமைதியாக அமர்ந்திருந்தாள்.ஆட்டோ சுகுணாவின் வீட்டை அடைந்தது.
ஆட்டோவை வி்ட்டு இறங்கிய சுகுணா கவியிடமிருந்த குழந்தையை வாங்கி கொண்டாள். கவி தன் சித்தியிமிருந்த பைகளை வாங்கிக் கொண்டாள்.

"டேய் சுரேஷ் இங்க வாடா. யார் வந்திருக்காங்க பாரேன்.... " என்றவுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சுகுணாவின் 5 வயது மகன் வெளியே ஓடி வந்து பார்த்தான்.

திடீரென விழித்த குழந்தை பசியில் அழத் தொடங்கியது.
"பாப்பா ஏன் அழுறீங்க... பாப்பாவுக்கு பசிக்குதா ......அம்மா பாப்பாக்கு மம்மு கொடும்மா.......என்றான் சிறுவன்".
பார்த்து வெகுநாள் ஆனதால் அவனுக்கு கவியையும் அவனது பெரியம்மாவையும் அடையாளம் தெரியவில்லை.
"சுரேஷ் வளந்துட்டான் ல சித்தி" என்றபடி குழந்தையை வாங்கி சமாதானப்படுத்த முயன்றாள்.

"வெளியவே நிக்கவச்சிருக்கேன் பாரேன் உள்ள வாக்கா ....உள்ள வாடி..... எனவும் அநத பெரிய வீட்டில் நுழைந்தனர்.
பாப்பாக்கு ஏதாவது சாதம் ஊட்டி பழக்கப்படுதிதிருக்கிறியா? கவி. கொஞ்சம் பருப்பு போட்டு தரேன் சாதத்துல பிசைஞ்சு ஊட்றியா ?
பீடிங் பாட்டிலில் பாலை நிரப்பி குழந்தை வாயில் வைத்தவள் "அப்புறம் சாப்பிடட்டும் சித்தி இப்போ பாலை குடிச்சான்னா இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவா"

இயல்பான விரும்தோம்பலுக்குப் பிறகு ரூமை போய் பார்க்கலாம் என அழைத்துச் சென்றாள். நல்லவேளை வீட்டில் அவள் மாமியார் இல்லை. இருந்திருந்தால் நேரடியாக எதையும் கேட்காவிட்டாலும் ஆறுதல் என்ற பெயரில் கவியின் வாழ்வை குத்தலாக பேசி அவளை காயப்படுத்தி இருப்பார்.
ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. சுகுணா வீட்டின் பக்கத்திலேயே மேன்சன் இருந்தது. இவளுக்கான அறை சிறிய சமையலறை முற்றம் கழிவறை என சிக்கனமாக இருந்தது.கவிக்கு இது போதும்தான்.
சித்தி சமையலுக்கு உதவுமென்று கொண்டு வந்த பாத்திரங்களையும் எடுத்து வந்திருந்த துணிமணிகளையும் ஒழுங்குபடுத்தி அடுக்கினாள்.கவி வேண்டாமென மறுக்க மறுக்க கையில்
சில ஆயிரங்களை திணித்தாள். சம்பளம் கிடைக்கும் வரை செலவுக்கு வைத்துக் கொள் என்று.
கிளம்புமுன் கவியை அழைத்து "உன்னை கோவத்துல ஏதேதோ பேசியிருப்பேன் டீ மனசுல வச்சிக்காத. என் நெலம அப்படி. பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ என்றாள்".

எல்லாம் நான் கூட இருந்து பாத்துக்கிறேன்க்கா நீ பயப்படாத என சுகுணா தைரியமூட்ட அன்று மாலையே சித்தி வீட்டுக்கு கிளம்பினாள். இரவு உணவு சுகுணா வீட்டிலிருந்து கொண்டு வந்தாள். கூட ஒரு மண்ணெண்னய் ஸ்டௌவ்வும் கொஞ்சம் மண்ணெண்ணெய்யும் தந்து கேஸ் ஸ்டௌவ் வரவரைக்கும் அட்ஜஸ் பண்ணிக்கோடி. பக்கத்துலயே எல்லாக் கடையும் இருக்கு. என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு. சரியா?

ம்ம்

சரி இன்னைக்கு சீக்கிரம் தூங்கு நாளைக்கு ஒரு 9 மணிக்கு ரெடியா இரு. சரியா?

ம்ம்

புது இடம் என மாயா தூங்க சில நேரம் கூடுதலாக ஆனது. தவிர வேறு பிரச்சனையில்லை. இந்த தனிமை கூட ஒருவகையில் நிம்மதியை தோற்றுவித்தது. வேலையும் சரியாக அமைந்துவிட்டாள் போதும் என நிம்மதியாக உறங்கினாள்.
இதே நிம்மதி நாளைக்கும் தொடராது என அறியாமல்.

@@@@@

அதே நேரம் அன்பு இந்த ஞாயிற்றுக்கிழமையை படு சோம்பேறித்தனத்துடன் கழித்துவிட்டு உறங்கினான்.
அடுத்தநாள் காலையிலிருந்து தலைக்குமேல் வேலை வரப் போகிறதென அறியவில்லை அவன்.

 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN