காதல்பனி 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் தன் மனைவி தன்னிடம் எதுவும் பேசாததால் அவள் முகத்தை அடிக்கடி பார்த்தவன் பின் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி

“ஏன் பொம்மி உனக்கு விருப்பம் இல்லாமல் தாத்தாவுக்காகவும் கடமைக்காகவும் தான் என்னைக் கல்யாணம் பண்ணியா? அப்போ உன் மனசுல காதலனா கணவனா நீ அடிக்கடி சொல்ற உன் மச்சானா நான் எப்போதும் இருந்ததே இல்லையா? சரி இதெல்லாம் கூட வேண்டாம், ஒரு நண்பனாகக் கூடவா நீ என்னை நினைக்கல? அந்த வீட்டுக்கு நீ போனாலே உன்னை என்னவெல்லாம் பாடு படுத்துவாங்க என்று தெரிந்திருந்தும் ஏன் டி என் கிட்ட எதுவும் சொல்லாம கிளம்பி வந்த?

அங்க போய் அவ்வளவு அடி வாங்கினதைக் கூட என் கிட்ட சொல்லாம மறைச்சிட்டியே டி! நீ தூக்கத்துல உளறி உன் காலை நான் பார்த்த பிறகு நான் எவ்வளவு துடித்துப் போனேன் தெரியுமா டி? அதை விட நீ சொல்லாம மறைச்சது தான் என்னை அதிகமாகவே உடைய வைச்சிடுச்சு. நிஜமாகவே மனசு ரொம்ப ரணமாகிடுச்சி டி பொம்மி எனக்கு!” என்று கணவன் முகம் கசந்து போய் கண்கள் கலங்க சொல்லவும் அவளுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.

‘சொல்லு சொல்லுனா நான் என்னனு சொல்ல? எனக்கு ஏதாவது ஒன்னு என்றால் துடித்துப் போறாரு அன்பா பார்த்துக்கிறார் சரி. ஆனால் இன்று வரை உன்னை விரும்புகிறேனு சொல்லவே இல்லையே?! அன்று கூட எனக்கு உன் மேல காதலே வராதுனு இல்ல சொல்லிட்டுப் போனாரு! பிறகு எப்படி நான் இவர் கிட்ட என் சுக துக்கத்தைப் பகிர்ந்துக்க முடியும்?’ என்று பலவற்றை நினைத்து மனதால் நொந்தவள் திடீர் என்று ஞாபகம் வர

‘ஆமா, இவர் தான் சக்கரவர்த்தி தாத்தாவோட உண்மையான பேரன் என்கிற உண்மையை அந்தப் பாட்டி போட்டு உடைச்சிடுச்சே! பிறகு ஏன் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இவர் கேட்கல? ஏன் அவர் முகத்துல கூட எந்த வித மாறுதலையுமே இவர் காட்டல? ஏன் இதை என்கிட்ட மறைச்சனு திட்ட கூட இல்லையே! ஏன்?’ என்று நினைத்துக் கொண்டு அவள் கணவன் முகம் பார்க்க அவனோ இறுகிய முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

தாத்தா வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கி சாராவை தூக்கிக் கொண்டு உள்ளே நுழையவும், வெளி வாசலிலேயே நின்றிருந்த தாத்தா பதட்டத்துடன் வியர்க்க விறுவிறுக்க அவனிடம் ஓடி வந்தவர்

“என்ன சின்னா என்ன ஆச்சி?” என்று கேட்க, உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் பதட்டப்படுவதைப் பார்த்தவன்

“ஒன்றும் இல்ல நீங்க ஒரு இடமா பேசாம உட்காருங்க” என்று அஷ்வத் அவரிடம் எரிந்து விழ, அதில் அவர் முகமோ குழந்தை என சுருங்கிவிட்டது. சாராவைத் தன் அறைக்குக் கொண்டு வந்து அவளைக் கட்டிலில் படுக்க வைக்க

“ஏன் தாத்தா கிட்ட இப்படி கோபமா பேசுறிங்க?” என்று சாரா கேட்க

“….. “ அவனோ மவுனமாக அவளுக்கு வேண்டியதைச் செய்ய

“உங்களைத் தான் கேட்கிறேன். நீங்க அப்படிப் பேசினதும் சின்னக் குழந்தை மாதிரி அவர் முகம் எப்படி சுருங்கிப் போய்டுச்சு தெரியுமா?”

அப்போதும் அவன் மவுனமாகவே அவள் காலுக்குக் கீழே தலையணைகளைக் கொடுத்து அவள் சற்று சாய்ந்து அமர உதவி செய்ய, அவன் கையை இறுக்கிப் பற்றியவள்

“என் மேல என்ன கோபம் இருந்தாலும் அதை என்கிட்ட காட்டுங்க. பிளீஸ் தாத்தாகிட்ட எதுவும் வேண்டாம். அப்புறம் அவருக்கு ஏதாவது உடம்புக்கு ஒன்னு கிடக்க ஒன்னு வந்துடப் போகுது” என்று அவள் கெஞ்ச

“பேசாம உன் வேலையைப் பார்த்துகிட்டு போடி. அவர் உனக்கு தாத்தாவா இருக்கும் போதே நான் அவருக்குக் கஷ்டம் கொடுத்தது இல்ல. இப்போ என் தாத்தானு தெரிஞ்ச பிறகா அவருக்குக் கஷ்டத்தைக் கொடுப்பேன்?” என்று அவன் அவளுக்குப் பதிலடி கொடுக்க, இப்போது சாரா மவுனம் காத்தாள். அவள் தலை குனிந்து அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன்

“என்ன கோபம் இருந்தாலும் நான் மட்டும் உரிமையா உன்கிட்ட காட்டணும். ஆனா நீ மட்டும் உரிமையா உன் கஷ்டங்களை என் கிட்ட சொல்லாத!” என அவன் வார்த்தைகள் சீறிப் பாய, இப்போதும் சாரா அமைதியையே தத்து எடுக்க

“இப்படியே மவுனமாகவே இருந்து என்னை விட்டு விலகி விலகிப் போ. ஒரு நாள் நீ எல்லாத்தையும் என் கிட்ட சொல்லணும்னு நினைக்கும் போது நான் உன் பக்கத்துலேயே இருக்க மாட்டேன். உன்ன விட்டு ரொம்ப தூரம் போய் இருப்….” வார்த்தைகளை அவன் முடிக்கக் கூட இல்லை

“மச்சான்!” என்ற கதறலுடன் அவன் தோள் சாய்ந்த சாரா “உங்க கிட்ட சொல்லாம விட்டது தப்பு தான். உங்க கிட்ட மட்டும் இல்ல தாத்தா கிட்ட கூட அவங்க செய்ததை சொல்லாமப் போனதுக்குக் காரணம் எந்தப் பிரச்சினையும் என்னால வேணாம்னு தான். உங்களுக்குத் தெரியாது மச்சான் நான் எந்த மாதிரி சூழ்நிலையில என்ன மாதிரி மனநிலையில இந்த வீட்டுக்கு வந்தேன்னு.

நான் இங்க வரும்போது எனக்கு வயசு பதினைந்து. அது கொஞ்சம் தெளிவான வயசு தான். ஆனா அந்த வயசிலேயும் என்னை நானே சரியா பார்த்துக்க முடியாத அளவுக்கு ஒரு மனநோயாளியா தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஒரு சின்ன சத்தமோ சண்டையோ யாராவது அதட்டியோ திட்டியோ பேசினா உடனே அழுவேனே தவிர ஏன் எதுக்குனு எதுவும் கேட்க மாட்டேன். அப்படி ஒரு நிலையில இருந்தப்ப தான் இந்தப் பாட்டி என்னைப் பாடாய்ப் படுத்தி எடுத்துச்சி. அப்போதெல்லாம் என் துன்பத்துல இருந்த நான் அடப் போனு விட்டுட்டேன். அதுக்குப் பிறகு தாத்தாவுக்காவும் இப்போ உங்களுக்காகவும் தான் யார் கிட்டையும் எதுவும் சொல்லாம பொறுத்துப் போறேன்.

“எல்லாத்துக்கும் மேல…” இதைச் சொல்லும்போதே விசும்பியவள் “அன்னைக்கு நீங்க தான உன்மேல எனக்கு காதல் இல்ல. அது வரவும் வராதுனு சொன்னிங்க. அப்படிப் பட்ட நான் இன்னைக்கு உங்க மனைவியான பிறகும் இதுவரை நீங்க உங்க மனசைத் திறந்து எதுவும் சொல்லாத போது நான் மட்டும் மனைவியா என் உரிமைய எடுத்துகிட்டு உங்க கிட்ட எல்லாத்தையும் எப்படிச் சொல்ல முடியும்? என்று கதறலுடன் அவள் தன் மனக் குமுறலைச் சொல்ல, அவனுக்குமே அவள் வார்த்தையிலும் குமுறலிலும் கண் கலங்கி விட்டது. அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்

“நான் வாய் திறந்து சொல்லலைனாலும் என் செயல்களே உனக்கு உணர்த்தலையா பொம்மி? அப்பவும் நமக்கு திருமணம் ஆன அன்று இரவு நான் உன்கிட்ட பேச தான் இருந்தேன்” என்று இவனும் கண்ணில் நீர்த் துளிகளுடன் அவள் தலையை வருடிக் கூறிக் கொண்டிருக்கும் போதே பொம்மியை மேல் அறையில் விட்டுவிட்டு கீழே அஷ்வத் வருவான் என்று அவன் தாத்தா காத்திருக்க, அவன் வரவே இல்லை என்றவுடன் மேலே வந்தவர் அவன் அறை வாசலிலே நின்று கொண்டு

“ஏம்பா சின்னா! பொம்மிக்கு பெருசா ஒன்றும் இல்லை இல்ல பா?” என்று இவர் உள்ளே போக தயங்கிக் கொண்டு சற்று உரக்கக் கேட்க, அதில் கணவனும் மனைவியும் தங்களுடைய பேச்சிலிருந்து தெளிய, அஷ்வத்தோ

“தாத்தா உள்ளே வாங்க” என்றவன் சாராவுக்கு அங்கு என்ன நடந்தது என்பது முதல் அனைத்தும் சொல்ல, அவரால் வள்ளியம்மை செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.

“என் பேத்திய யாரும் இல்லாத அநாதைனு சொல்ல அந்தப் பொம்பள யாரு டா? நீ வா உண்டு இல்லைனு நல்லா நாளு வார்த்தை நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு வரலாம்” என்று அவர் தன் உடல் நிலையையும் மீறிப் பாய

“ஐயோ போதும் நில்லுங்க! இப்படி நீங்க எதாவது செய்து எங்க உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் எந்த உறவும் இல்லாம போய்டுமோனு தான் இத்தனை நாள் நான் எதையும் உங்ககிட்ட சொல்லல. இப்பவும் சொல்லி இருக்க மாட்டேன். எல்லாம் இவரால தான் வந்தது” என்று சாரா பதைபதைக்க

“ஏய் அப்ப நான் கேட்டது தான் தப்புனு சொல்றியா?” என்று அஷ்வத் ஒரு வித இறுகிய தன்மையுடன் கேட்க

“இல்லையா பின்ன? இத்தனை நாள் உங்க கண்ணுக்குத் தெரியாத மனைவி இன்று தான் நான் உங்க கண்ணுக்கு மனைவியா தெரிஞ்சேனா? ஏதோ புதுசா என் மேல அக்கறை மாதிரி அங்கே தாம் தூம்னு குதித்து எல்லாத்தையும் கெடுத்திடிங்க” என்று சாரா அஷ்வத்தைச் சாட

“வேணா பொம்மி என் மனநிலையை இப்போ நான் உன் கிட்ட சொல்லியும் நீ திரும்பத் திரும்ப இப்படியே சொல்லாத விட்டுடு”

“ஏன் சொன்னா என்ன? நான் சொல்வேன் தான்! இத்தனை நாள் இல்லாமல் இப்போ என்ன என் மேல புதுசா அக்கறை பாசம் எல்…”

“போதும் வாயை மூடு டி!” என்ற கர்ஜனையுடன் கையை ஓங்கி இருந்தான் அஷ்வத்.


தாத்தா அப்படிச் சொல்லவும் எங்கே இவர் அங்கே எதாவது கேட்கப் போய் பிரச்சனை அதிகம் ஆகிவிடுமோ என்று பயந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டே போன சாரா கணவனின் கர்ஜனையிலும் கை ஓங்களிலும் தான் நிகழ்வுக்கு வந்தாள். அந்த நிலையிலும் அடுத்து தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து அச்சத்தில் முகம் வெளிற கண்களை அவள் மூடிக் கொள்ளவும், தான் செய்ய இருந்த காரியத்தில் இருந்து சுய நினைவைப் பெற்றான் அஷ்வத்.

“உன் மேல் நான் வைத்து இருக்கிற பாசத்தைப் பற்றி உனக்கு என்ன டி தெரியும்? எதையும் புரிஞ்சிக்க முடியாத முட்டாளா நீ இருந்துட்டு இப்ப என்னைக் குறை சொல்றியா? இவளும் அங்கே எதுவும் கேட்க மாட்டாளாம் என்னையும் கேட்க விட மாட்டாளாம். மீறிக் கேட்டா என்ன இது புதுசா அக்கறைனு என்னையே கேள்வி கேட்பாளாம். உனக்கு எல்லாம் நீ முதல் முதல்ல பார்த்த அஷ்வத்தா நான் இருந்தா தான் டி சரி!” என்றவன் தன் மனவலியைத் தன் குரலில் காட்டி அங்கிருந்து விலகிச் சென்றான் அஷ்வத்.

இதையெல்லாம் பார்த்த தாத்தா யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் இருந்தவர் இந்த சூழ்நிலையில் அவனுடன் சேர்ந்து நாமும் சண்டை வளர்த்தால் சரி வராது என்று நினைத்து

“ஏன் பொம்மி இப்படி அவனுக்கு கோபம் வர்ற மாதிரி பேசுற? நீ பேசுனதக் கேட்டு எனக்கே கோபம் வரும்போது அவனுக்கு வராதா? இனிமேல் அவன் கிட்ட இது மாதிரி எல்லாம் பேசாத” என்று சற்று வருந்தும் குரலில் சொன்னவர் “சரி நீ ஓய்வு எடும்மா. நான் பிறகு வந்து உன்னைப் பார்க்கிறேன்” என்று சொல்லி அவரும் விலகி விட, கணவனின் மனம் நோக பேசிவிட்டோமே என்ற எண்ணத்தில் சாராவுக்குத் தான் கண்களில் நீர் கோர்த்து விட்டது.

அதன் பின் மருத்துவரை வரவழைத்துத் தாத்தாவின் உடல் நிலையைப் பரிசோதனை செய்யச் சொன்னவன் அவர் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதைத் தெரிந்த பிறகே அவரிடம் தன் தந்தையைப் பற்றி பேச ஆரம்பித்தான் அஷ்வத்.

அவரை நேருக்கு நேர் பார்த்து அவன் கேட்ட முதல் கேள்வியே என் அப்பா கார்த்திகேயன் தான் உங்க மகனா? அப்போ நான் உங்க சொந்தப் பேரனா என்பது தான்!

மனைவி அடித்த கூத்தில் மாமாவிடம் எங்கே பேசுவது என்ற குற்ற உணர்ச்சியில் அஷ்வத்துக்கு ரகசியம் தெரியும் என்பதை சாரா தாத்தாவிடம் சொல்லிக் கொள்வாள் என்று வேலுச்சாமி தாத்தா இருந்து விட, சாராவோ இங்கு வந்த பிறகு நடந்த பிரச்சனையில் தாத்தாவிடம் அதை தெரியப் படுத்தாமல் விட்டு விட, அதனால் அஷ்வத் இப்படிக் கேட்டதும் இவனுக்கு எப்படித் தெரியும் என்ற அதிர்ச்சியில் அவர் மவுனமாக நிற்கவும்

“சொல்லுங்க தாத்தா உங்களைத் தான் கேட்டேன்” என்று அஷ்வத் மீண்டும் அழுத்திக் கேட்கவும், அவர் ‘ஆமாம்’ என்று தலை அசைக்க.

“ஏன் தாத்தா எல்லாத்தையும் மறைத்து இப்படி பண்ணீங்க? அந்த அளவுக்கா நான் உங்களுக்கு வேண்டாத பேரனா ஆகிட்டேன்?” என்று தொண்டை அடைக்க அவனையும் மீறி கண்கள் கலங்க அவன் கேட்க, துடித்துப் போனார் பெரியவர்.

“இப்படி ஒரு வார்த்தைய நீ சொல்லி நான் கேட்கக் கூடாதுனு தான் உன் கண்ணு முன்னாடியே நான் வராம இத்தனை வருஷம் உன்னைப் பார்க்காம இருந்தேன். ஆனா நான் உன் மேல வச்ச பாசம் என்னைக் கடைசி வரை அப்படி இருக்க விடல டா சின்னா!” என்று நா தழுதழுக்க அவர் சொன்னதைக் காதில் வாங்காமல்

“எதுக்கு தாத்தா என்னை வெறுத்து ஒதுக்கினீங்க? என் கிட்ட இருக்கிற எது உங்களை என்னை வெறுத்து ஒதுக்க வச்சிது? என் உருவமா? உங்க நாட்டுப் படி உங்க வம்சப் படி இன்னும் சொல்லப் போனா உங்கள மாதிரி என் உருவம் இல்லனா அதுக்கு நான் என்ன தாத்தா செய்ய முடியும்? உங்களை மாதிரியோ இல்லை என் தந்தை மாதிரியோ உருவத்தில் நான் இல்லாதததுக்கு நான் எப்படி காரணமாக முடியும்? நான் என் தாய் மாதிரி அவங்க உருவத்துல பிறந்தது என் குத்தமா?

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் பிறந்ததில் இருந்து என் தந்தையை அதான் உங்க மகன இந்த வினாடி வரை போட்டோவுல கூட பார்த்தது இல்லை. திரும்பவும் நான் கேட்கிறேன் இதில் என் தவறு என்ன இருக்கு தாத்தா? ஒருவேளை நீங்க என்னை வெறுக்க அது தான் காரணம்னா அதுக்கு நீங்க அப்பவே என்ன கொன்னுப் போட்டு இருக்கலாமே!” என்று தன் தாத்தா தன்னை வெறுக்க தன் உருவம் தான் காரணம் என்பதில் உறுதியாக இருந்தவன் அதையே கேள்வியாக திரும்பத் திரும்ப உயிரே பிரியும் குரலில் கேட்டது மட்டும் இல்லாமல் அவரை வார்த்தையால் சாட்டை கொண்டு அடிக்கவும்

“ஐயோ… சின்னா இப்படி எல்லாம் பேசாதடா நான் உன்ன வெறுத்ததே இல்ல டா இப்படி ஒரு வார்த்தையை நீ சொல்லி கேட்கவா நான் இவ்வளவு நாள் உயிரோட இருந்தேன்?!” என்று துடித்தவர் அப்படியே சரிந்து விழ அவரை ஒரே தாவில் இறுக்கிப் பிடித்து ஸோஃபாவில் அமர வைத்தவன் வியர்வையால் நனைந்த அவர் முகத்தைத் துண்டால் துடைத்து விட்டு

“என்ன தாத்தா பண்ணுது உங்களுக்கு? எதாவது குடிக்க வேணுமா தாத்தா?” என்று அவர் முகம் வருடி அவன் துடிதுடித்துப் போய் கேட்கவும், இந்த நிலையிலும் தனக்காகத் துடிக்கும் தன் பேரனின் அன்பில் அனைத்தையும் கொட்டிக் கதறி விட்டார் தாத்தா.

“இல்ல டா இல்ல.. நான் உன்னை என்றும் வெறுத்ததும் இல்லை இனிமேலும் வெறுக்க முடியாது! அன்று எனக்கு இருந்த வீம்பும் எனக்கான கடமையும் தான் என்னை உன்னிடமிருந்து விலகி இருக்க வைத்ததே தவிர நீ சொல்ற காரணப் படி உன் உருவம் இல்ல டா. நீ உருவத்தால் உன் தாயைப் போலும் வெளிநாட்டுக் கலாச்சாரப் படி நீ வளர்ந்து இருந்தாலும் உன் உடம்புல ஓடுறது என் ரத்தம் டா. இன்னும் சொல்லப் போனா உன் அப்பன விட என்னை விட மேம்பட்ட குணம் உன் கிட்ட தான் டா இருக்கு.

அதை எல்லாம் என் கண்ணெதிரில் பார்த்து நான் எவ்வளவு பூரித்துப் போகுறேன் தெரியுமா? இப்படிப் பட்ட உன்னை சிறு வயதுல இருந்தே பார்த்து மகிழாம விட்டுட்டேனேனு நான் தினம் தினம் என் மனசுக்குள்ள எவ்வளவு துடி துடித்துப் போறேனு உனக்குத் தெரியுமா டா சின்னா?” என்று அவன் கையில் முகம் புதைத்து அவர் கதறவும், இதை எல்லாம் பார்த்த அஷ்வத்தின் மனமோ இளகி விட்டது. அதிலும் தன் கையில் அவரின் சூடானக் கண்ணீரை உணரவும் தன் கோபத்தை விட்டான் அஷ்வத்.

“தாத்தா உங்க உடல் நிலை தெரியாம நான் தான் ஏதேதோ பேசிட்டேன். தாத்தானு நீங்க எல்லாம் இருந்தும் நான் அநாதையா வளர்ந்தேனு கோபம். இதை எல்லாம் விட இப்போ பொம்மி என் வாழ்க்கையில் வரலனா கடைசி வரைக்கும் நீங்க என்னைத் தேடி வந்திருக்க மாட்டிங்களேனு ஆதங்கம். அதான் உங்க மனசு கஷ்டப் படுற மாதிரி பேசிட்டேன். இதை இன்றோட விடுங்க தாத்தா. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும். எனக்கு எந்த விளக்கமும் வேணாம். நான் எதைப் பற்றியும் தெரிஞ்சிக்க விரும்பலை” என்று வாழ்க்கையே வெறுத்துப் போய் கசந்த குரலில் சொல்லியவன்

“எனக்கு நீங்க கடைசி வரை வேணும். அதுக்கு உங்க உடம்பு நல்லா இருக்கனும். அதனால இந்தப் பேச்சை இதோட மறந்திடுவோம். என்னைக்கும் நான் உங்க பேரன் தான்! அந்த அன்பும் பாசமும் என்னைக்கும் எனக்கு மாறாது” என்று இறுதியாக அவன் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க

”இல்ல சின்னா இல்ல.. நான் எல்லாத்தையும் சொன்னா தான் எனக்கு நிம்மதி என் மனபாரமும் குறையும். இப்பவும் நான் என் மேலே தப்பு இல்லனு சொல்ல மாட்டேன். நான் செய்தது தப்பு தான். உனக்கு அன்பு பாசத்தக் காட்டாம உன்னை விட்டு ஒதுங்கி இருந்து துரோகம் செய்திட்டேன். அதுக்காக எல்லாம் இந்த தாத்தாவ வெறுத்துடாத டா சின்னா. அதே மாதிரி நான் உன்னைப் பேரனா ஏத்துக்காம வெறுத்துப் போய் தான் ஒதுக்கினேன் என்று நினைக்காத டா” என்று நா தழுதழுக்க அவனிடம் கேட்டுக் கொண்டவர் தன் வாழ்வில் நடந்ததையும் எதனால் தன் பேரனைப் பிரிய நேரிட்டது என்பதையும் கூற ஆரம்பித்தார் அவர்.

இன்று கர்னல் சக்கரவர்த்தியாய் இருக்கும் இவர் தான் ஒருகாலத்தில் தாய் தந்தையர் குலம் கோத்திரம் என்று எதுவும் தெரியாமல் ஏன் தன் பெயர் என்ன என்பது கூடத் தெரியாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு ரோட்டோரம் படுத்து ஏழு வயது வரை தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து தன் வாழ்நாளை ஓட்டி வந்தவர்.

அவருடைய ஏழாவது வயதில் தெய்வம் என வந்தவர் தான் தெய்வ சிகாமணி ஐயா! அவருடைய இளவயதில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வையும் சொத்தையும் ஓர் அநாதை இல்லம் கட்டி அவர் சேவை செய்து வர அப்போது அவர் கண்ணில் இவர் பட தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று இவருக்கு அவர் வைத்த பெயர் தான் சக்கரவர்த்தி என்பது.

அன்றிலிருந்து தனிப்பட்ட முறையில் இவரை மட்டும் கண்காணித்தவர் இவர் பண்பிலும் குணத்திலும் கவரப்பட்டு அவரைத் தன் சொந்த மகனாக வளர்க்க மட்டும் இல்லாமல் கூடவே நாட்டுப் பற்றையும் அவருக்கு ஊட்டி வளர்க்க, சக்கரவர்த்தியோ ஒரு படி மேலே போய் இந்த நாட்டிற்காகத் தான் எதையும் இழக்கவும் தயார் என்ற மனநிலையில் வளர்ந்தார்.

நாட்டிற்காக எல்லைப் பணியில் இருந்த சக்கரவர்த்தி ஒருமுறை அந்த வருடத்திற்கான லீவில் வீட்டிற்கு வர அவருக்குப் பெண் எல்லாம் பார்த்து நாளைக்குத் திருமணம் என்று சொல்ல முதலில் தன் பிறப்பைப் பற்றி தாய் தந்தையர் உடன்பிறப்பு என்று குடும்பமாக இருந்த அந்த பெண்ணிடம் சொன்ன பிறகு தான் தனக்குத் திருமணம் என்று இவர் நினைத்து சிகாமணி ஐயா பார்த்த பெண்ணான குணவதியிடம் சொல்ல பெயருக்கு ஏற்றபடி நல்ல குணமான அந்தப் பெண் இதை எல்லாம் தெரிந்த பிறகு தான் இந்த திருமணத்திற்குச் சம்மதித்ததாகக் கூற பின் அவர்கள் திருமணம் இனிதே முடிந்தது வாழ்க்கையும் நல்லபடியாகவே சென்று கொண்டிருக்க. அவர்களுடைய மூன்றாவது திருமண ஆண்டில் கார்த்திகேயன் பிறந்து விட இன்னும் மகிழ்ச்சியாக சென்றது குடும்ப வாழ்க்கை.


கார்த்திகேயனின் ஐந்தாவது வயதில் தெய்வ சிகாமணி ஐயா இறந்து விட, இப்போது நாட்டை விட ஐயா விட்டுச் சென்ற பணிகள் முழுவதையும் பார்ப்பது என சக்கரவர்த்தியிடம் வந்து சேர்ந்தது. அதுவும் நல்ல முறையில் போய் கொண்டிருக்க கார்த்திகேயனின் பதினேழாவது வயதில் தாய் குணவதியும் இறந்து விட தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பிணைப்பு இன்னும் இறுகியது.

தன்னைப் போல் மகனை ராணுவத்தில் சேரச் சொல்ல மகனோ தனக்கு ராணுவத்தை விட விவசாயத்தில் தான் விருப்பம் என்றும் அந்தத் துறையின் மூலம் நாட்டிற்கும் தான் பிறந்த இந்த ஊர் மக்களுக்காகவும் நல்லது செய்ய நினைப்பதாகக் கூற அதைக் கேட்டு அகமகிழ்ந்த தந்தை அதற்கான வழி வகைகளைச் செய்ய அதன்படி நல்ல முறையில் விவசாய சம்பந்தப்பட்ட படிப்பை கார்த்திகேயன் படித்து முடித்தவர் அதே துறையில் மேல்படிப்பை வெளிநாட்டில் படிக்க ஆசைப் பட அதற்கும் வழி வகை செய்தார் சக்கரவர்த்தி.

வெளிநாடு சென்றும் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றிருந்த கார்த்திகேயன் மீது அந்த நாட்டுப் பெண்ணான கரோலினுக்குக் காதல் வர அதை அவரிடமே சொல்ல முதலில் அதை மறுத்தவர் பின் அவள் பிடிவாதத்திலும் காதலிலும் அவள் காதலை ஏற்றுக் கொண்டவர் தங்கள் இருவரின் காதலையும் தன் தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தில் படிப்பு முடியும் போது யாருக்கும் தெரியாமல் அங்கேயே மோதிரம் மாற்றித் திருமணம் முடித்து கரோலினாவை தன் மனைவியாகவே இந்தியாவுக்கு அழைத்து வந்து விட்டார் கார்த்திகேயன்.

கரோலினிக்கு எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாத ஒரு அண்ணனைத் தவிர தாய் தந்தையர் என்று யாரும் இல்லாததால் அவள் வீட்டுப் பக்கம் இந்த திருமணத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை.

மகன் இப்படி வந்து நிற்கவும் முதலில் கோபப்பட்ட சக்ரவர்த்தி அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பர் குடும்பத்தின் துணையோடும் அவரின் கண்காணிப்பிலும் தான் தன் மகனை அமெரிக்கா அனுப்பியவர் இன்று அவர்களுக்கே தெரியாமல் தன் மகன் காதலில் உறுதியாக இருந்து இப்படி ஒரு காரியத்தைச் செய்யவும் சரி என்று தன் மகனுடைய சந்தோஷத்துக்காக இரு கரம் நீட்டி அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டார் அவர்.

என்ன தான் மகன் காதலித்தாலும் வெளி நாட்டிலேயே நான் வாழ விரும்புகிறேன்அதனால் உங்களுக்குத் தகவல் மட்டும் தான் சொல்ல வந்தேன் என்று சொல்லாமல் என் நாடும் நான் பிறந்த ஊரும் தான் எனக்கு முக்கியம் என்று என் உயிர் என் மண்ணில் தான் போக வேண்டும் என்று சொல்லி பிடிவாதத்துடன் தன் மனைவியையும் இங்கு அழைத்து வந்து தன் ஆசிர்வாதத்திற்காக வந்து நிற்கும் தன் மகனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார் அவர்.

இது உண்மையும் கூடத் தான்! என்ன தான் கரோலினைக் காதலித்தாலும் என்னுடன் என் நாட்டிற்கு தான் நீ வந்து வாழ வேண்டும் என்று அவளிடம் இவர் சொல்லி விட கருத்த தேகமும் பேசும் விழிகளும் அலை அலையாய் கேசமும் அதை விட முறுக்கு மீசை என ஒரு கிரேக்க வீரன் போல் தெரிந்த கார்த்திகேயனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் கரோலினும் சரி என்று வந்து விட்டாள்.

அவர்களுக்கு இந்திய முறைப் படி திருமணம் செய்து மருமகளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து அவள் பயன்படுத்த மேல்நாட்டு பாணியில் அனைத்தும் செய்தார் சக்கரவர்த்தி.

என்ன தான் வீட்டில் அவளுக்கு ஏற்ற வசதிகள் கிடைத்தாலும் வெளி இடத்தில் பீச் பார்க் ஓட்டல் கிளப் நைட் பார்ட்டி டின்னர் பப் என்று எதுவும் இல்லாததால் எண்ணி முப்பது நாட்களில் எல்லாம் இந்த இடமே வேண்டாம் என்று கணவனையும் மாமனாரையும் தன் நாட்டிற்கே அவள் கூப்பிட அதற்கு இருவரும் ஒத்துக் கொள்ளாததால் என்ன டா வாழ்க்கை என்று நொந்து போய் ஒரு சில நாட்களிளேயே இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கும் அளவுக்கு கரோலினின் மனநிலை மாறியது.

இந்த நேரத்தில் அவர்களுக்குத் திருமணம் நடந்து முப்பதைந்தாவது நாள் காலையில் வயலுக்குச் சென்ற கார்த்திகேயனைப் பாம்பு கடித்து விட வெறும் சடலமாகத் தான் தூக்கி வந்தார்கள். தனக்குப் பிறகு தன் மகன் தான் அனைத்திற்கும் என்றிருந்த நேரத்தில் வாழ வேண்டிய வயதில் தன் மகன் போய் விட முதலில் துவண்டாலும் பின் நடக்க வேண்டியது அனைத்தையும் ஒரு தந்தையாக இருந்து செய்தார் சக்கரவர்த்தி.

கார்த்திகேயனின் உடலைப் புதைத்த மறுநாளே இளவயதான மருமகளையும் அவள் பிற்கால வாழ்க்கையையும் எண்ணி அவளுக்கு எந்த சடங்கும் செய்யாமல் வெறுமனே கார்த்திகேயன் கட்டிய தாலியைக் கழற்றித் தன் மகன் படத்தின் முன்னே வைக்கச் சொல்லி விட அதன் படியே செய்த கரோலின் அன்றே தான் தன் நாட்டிற்கே போவதாகச் சொல்லி பிடிவாதமாக நிற்கவும் எந்த கணவனை நம்பி வந்தாளோ அவனே இன்று உயிருடன் இல்லை எனும் போது இனி யாருக்காக இந்த பெண் இங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவரும் போகச் சொல்லி விட்டார்.

தன் தாய்நாடு சென்ற கரோலின் ஐம்பத்தைந்து நாள் கருவைச் சுமந்து இருப்பதாக உறுதி ஆகி விட, இந்தச் செய்தியைக் கேட்ட சக்கரவர்த்தி தன் வம்சத்துக்கு ஒரு வாரிசு வரப் போகிற எண்ணத்தில் தன் மகனை கூட போய் பார்க்காதவர் முதல் முறையாக மருமகளை அமெரிக்கா சென்று பார்க்க, தன் வீட்டில் மாமனாரைப் பார்த்தவள் உள்ளே எழுந்த கலவரத்தை மறைத்து

“வாங்க எப்படி இருக்கீங்க?” என்று பட்டும் படாமல் அவரை வரவேற்க


“நான் நல்லா இருக்கேன் மா. நீ உண்டாகி இருக்கிறதா கேள்விப் பட்டேன். அதான் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று இவரு எடுத்தவுடனே கூப்பிட

“வீட்டுக்கா?! யார் வீட்டுக்கு? நான் எதற்கு வரனும்?”

“என்னமா இப்படிக் கேட்குற? உன் வயிற்றில் வளர்வது என் குலசாமி மா! அது பேரனோ பேத்தியோ எதுவா இருந்தாலும் அது என் வம்சம் மா!”

“சரி நீங்க சொல்ற மாதிரி இது உங்க வம்சமாவே இருக்கட்டும். அதுக்காக எல்லாம் என்னால அங்கே வர முடியாது”

“ஏன் முடியாது? அது உன் வீடு”

“இல்ல.. என்னிக்கு உங்க புள்ள இறந்தாரோ அப்பவே அந்த உறவு எல்லாம் முறிஞ்சி போச்சு”

“இருக்கலாம்.. ஆனா இப்போ உன் வயிற்றுல வளர்ற எங்க குழந்தையால ஏன் திரும்ப உறவப் புதுப்பிக்கக் கூடாது?”

“இல்ல.. எந்த புது உறவும் எனக்கு வேணாம். எனக்கு உங்க ஊர் பழக்க வழக்கம் இடம்னு எதுவுமே பிடிக்கல. அதனால நான் வரலை”


“வேணும்னா நீங்க இங்க வந்து என் கூட இருங்க. நான் அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன்”

இவ்வளவு நேரம் பொறுமையா க இருந்தவர் இந்த வார்த்தையில் ஓர் கர்ஜனையுடன்

“என்ன சொன்ன?” என்று எழுந்து நின்றவர் “நான் யாருனு தெரியுமா? என் பிறப்பு பற்றி தெரியுமா? எனக்கான கடமையும் பொறுப்பும் பற்றி உனக்குத் தெரியுமா? இதை எல்லாம் விட என் ஐயாவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி என்னை நன்றி கெட்டவனா மாற்ற பார்க்கிறீயா? முடியாது! என் உயிரே போகும் நிலை வந்தாலும் நான் அதை மட்டும் செய்யவே மாட்டேன்” என்று அவர் தன் நிலையிலையே இருக்க

“அப்ப உங்களுக்கு பேரன் என்ற கடமையோ பொறுப்போ இல்லையா?”

இந்த கேள்வியில் அவர் ஒருநிமிடம் தயங்கி நிற்கவும்


“நீங்க எப்படி உங்க கடமையில் இருந்து விட்டு வர மாட்டிங்களோ அதே மாதிரி நான் என் வாழ்வுக் கொள்கையில் இருந்து வெளி வரமாட்டேன். என்ன ஆனாலும் என் வாழ்வு இங்கே தான். நான் உங்க வீட்டுக்கோ ஏன் அந்த நாட்டுக்கு கூட வரமாட்டேன். நீங்க போகலாம்”

“நீ என்ன வரமாட்டேனு சொல்றது? உன் வயிற்றில் வளர்வது என் வம்சம்! எப்படியாவது என் குலக்கொழுந்த நான் என் வீட்டுக்குக் கூட்டிட்டே போவேன். கோர்ட்டில் கேஸ் போட்டாவது இதை நான் செய்தே தீருவன்!”

“இன்னைக்கு சொல்றேன் நீ எழுதியே வச்சிக்கோ. என் உயிர் பிரியறதுக்குள்ள என் பேரனோ பேத்தியோ என்னைத் தேடி வந்து என் கூட என் வீட்டுல இருக்காங்களா இல்லையானு! இதை நடத்தியே காட்டுவான் இந்த சக்கரவர்த்தி!” என்று அவர் சவால் இடவும்

எங்கே தன் பிள்ளையை வைத்துத் திரும்ப அந்தப் பட்டிக்காட்டு வாழ்க்கைக்குத் தன்னை இழுத்து விடுவாரோ என்று பயந்த கரோலின்

“ஓ…. அப்படியா? என் பிள்ளைய பிரித்துக் கூட்டிட்டுப் போவேனு நீங்க என் கிட்டயே சவால் விடுறீங்களா? இப்போ நான் சொல்றேன் நீங்க கேட்டுக்கங்க. இந்தக் கரு என் வயிற்றுல இருக்கிறதால தான நீங்க சொந்தம் கொண்டாடி இவ்வளவு பேசுறீங்க? இந்த வினாடி இந்த நிமிடமே இந்தக் கரு எனக்கு வேணாம்னு நான் அழிச்சிட்டா நீங்க சொன்னது எல்லாம் நடக்குமா?” என்று அவள் பதில் கேள்வி கொடுக்கவும், அவள் வார்த்தையில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்ட அவரைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்புடன்

“என்ன, நான் இப்படி செய்ய மாட்டேனு நினைக்கிறீங்களா? செய்வேன் நிச்சயம் செய்வேன். நீங்க ஒன்னும் இருபத்தி நாளு மணி நேரமும் என்னைக் கண்காணித்து காவல் காக்க முடியாது. அதே மாதிரி நான் இப்படிச் செய்தா ஏன் இப்படி செய்தேனு நீங்க கேள்வி கேட்க முடியாது. அதை கேட்கும் உரிமை என் கணவனுக்கு மட்டும் தான் உள்ளது. அதனால என் பிள்ளைய நான் என்ன வேணா செய்யலாம். இப்ப சொல்லுங்க நான் என்ன செய்ய?”

“அப்படி எதுவும் செய்திடாதமா” என்று அவர் பதறவும்

“இங்கே இருந்தாவது உங்க வம்சம் வளரும். என்னைக் கூப்பிட்டா இது தான் நடக்கும். இன்னோனு.. இப்போ சரினு சொல்லிட்டு நாளைக்குக் குழந்தை பிறந்த பிறகு உங்க வம்சத்தை மட்டும் அழைத்துக் கொள்ளலாம்னு எண்ணம் எதுவும் வைச்சிகாதீங்க அப்படி எதாவது செய்திங்கனா இப்போ நான் எதுவும் சொல்ல மாட்டேன். அப்போ என்ன செய்றனு மட்டும் பாருங்க!” என்று அவள் சூளுரைக்கவும்

“அப்படி எதுவும் செய்திடாத மா” என்று அவர் மறுபடியும் மன்றாட தான் முடிந்தது

“அப்போ வெறும் வாய் வார்த்தையா இல்லாம எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தாங்க. என்னையோ என் பிள்ளையையோ சொந்தம் கொண்டாடிகிட்டு தேடி வரமாட்டேனு” என்று அவள் அவரை சூழ்நிலைக் கைதியாய் நிற்க வைக்கவும்,

அவரால் என்ன தான் செய்ய முடியும்? மகனும் இல்லை யாருடைய ஆதரவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இது அவரது வம்சத்து உயிர் பிரச்சனை. அதனால் அவள் கேட்ட சத்தியத்தை வேறு வழியேயில்லாமல் அவர் செய்து கொடுக்க

“இந்த சத்தியத்தைக் கடைசிவரை காப்பாற்றுவீங்கனு நினைக்கிறேன். இப்படி ஒரு உறவு இருக்கிறதே என் பிள்ளைக்குத் தெரியவேணாம். நானும் அப்படித் தான் வளர்ப்பேன்” என்று அவள் முடித்து விட, பிறந்த போது தான் அநாதையானோமே என்பதை விட இப்போது நாம் அநாதையானோமே என்ற மனக்குமுறலுடன் வீடு திரும்பினார் அவர்.

அதன் பிறகு கரோலின் அந்த வினாடியே யாருக்கும் சொல்லாமல் ஜெர்மன் போனவள் குழந்தை பிறந்து அஷ்வத்துக்கு நான்கு வயது இருக்கும் போது தான் அமெரிக்கா வந்தாள்.

அதற்கு முன்பே சக்கரவர்த்தியின் நண்பர் குடும்பம் மகனின் தொழில் விஷயமாக லண்டன் சென்று விடவும் கரோலின் அமெரிக்கா வந்ததையோ அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததோ சக்கரவர்த்திக்குத் தெரியாமல் போக கொஞ்ச நாளிலே நண்பரும் இறந்து விட என்ன குழந்தை அது எப்படி இருக்கும் என்ற ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் இருந்தாலும் சும்மா சும்மா நண்பன் குடும்பத்தைத் தொந்தரவு பண்ண வேணாம் என்று நினைத்து விதி இருந்தால் அவனே என்னை தேடி வரட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு ஒதுங்கி விட்டார் சக்கரவர்த்தி.

“ஆனால் மனதிற்குள் அன்பு பாசம் பரிதவிப்பு தேடல் வெறுமை என்று உன்னைக் காணும் வரை ஒரு நடைப் பிணமாகத் தான் வாழ்ந்து வந்தேன். இப்ப சொல்லுடா சின்னா, அந்த நேரத்துல நான் வேற என்ன பண்ண?” என்று ஒரு வித பரிதவிப்புடன் கேட்டு அவர் அவன் முகம் பார்க்கவும்

‘தாத்தா நான் தான் சொன்னேன் இல்ல? என்ன நடந்து இருந்தாலும் நான் உங்களை வெறுக்கவோ இல்லை உங்களை விட்டுப் போகவோ மாட்டேனு. இப்போனு இல்ல எப்பவும் நான் உங்க மேல வைச்ச பாசம் என்னைக்கும் குறையாது. இப்போ எதுக்கு நீங்க சொல்வதை இதை எல்லாம் கேட்டேனா உங்க மனபாரம் குறையட்டுமேனு தான்” என்று அவருக்கு ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு விலகினான் அவன்.

ஆயிரம் தான் அவருக்காகப் போலியாக சமாதானம் சொன்னாலும் தன் தாயும் தாத்தாவும் தனக்குப் பெரிய அநியாயம் செய்ததாகவே அவனுக்குப் பட்டது. அதிலும் தன் தாத்தா செய்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘அப்போ நான் பிறந்ததில் இருந்து நான் எப்படி இருப்பேனு கூட இவரு என்னைப் பார்த்ததே இல்லையா?’ இந்த எண்ணம் அவனைப் பாடாய் படுத்தக் கண்ணில் அவனையும் மீறி கண்ணீர் தான் வந்தது.

இதற்கு இடையில் மனைவியின் முகம் பார்க்காமல் அவளுக்கு உணவு கொடுத்து மருந்து மாத்திரைகள் கொடுக்கவும் அவன் தவறவில்லை.

இரவு படுக்கத் தன் அறைக்கு வந்தவன் மனைவியின் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு

“பிளாஸ்டிக் சர்ஜரி செய்றதுல எக்ஸ்பெர்ட்டான என் பிரண்ட் ஒருத்தன் லண்டன்ல இருக்கான். அவன் நாளைக்கு வரான் உன் கால செக்கப் பண்ண. அப்படி எதாவது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தான் ஆகணும்னா செய்துக்கோ” என்று அவன் பட்டும் படாமல் சொல்ல

கணவனின் முகம் திருப்பலை உள்ளுக்குள் ரசித்தவள் அவன் சொன்ன செய்தியில் சிரிப்பு வர

“ஐயோ மச்சான்! உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லையா? ஏதோ கொஞ்சம் சூடான எண்ணெய் கால்ல கொட்டிடுச்சி. அதனால ஏதோ மேல் தோல் வழுக்கிடுச்சி அவ்வளவுதான். இதுக்கு எல்லாம் யாராவது பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா?” என்று அவள் சிரிப்புடன் கேட்கவும் கோபத்துடன் அவளிடம் வந்தவன்

“உன்னை மதியமே நாளு அறை விட்டு இருக்கணும். செய்யாம விட்டது தப்பா போச்சி. இரு அதுக்கும் சேர்த்து வச்சி இப்போ கொடுக்கிறேன்” என்று சொல்லியவன் அவளை அடிக்க கையை ஓங்க, அவன் கையால் விழும் அடிக்குப் பயந்து வழக்கம் போல் அவள் விழிகளை மூடிக் கொள்ளவும் மனைவியை அடிக்கும் எண்ணத்தை விட்டு விட்டு விலகி வந்து, அவள் பக்கத்தில் கட்டிலில் அவளுக்கு முதுகு காட்டி படுத்தவன்

“யாரு தான் நான் சொல்லுறதைக் கேட்பீங்க? இல்ல யாருக்கு தான் நான் வேணும்? என் அம்மாவுக்கு என்னை விட அவங்க வாழ்க்கை தான் முக்கியம். என் தாத்தாவுக்கு அவர் ஊர் முக்கியம். உனக்கு உன் பிடிவாதம் தான் முக்கியம். ஆக மொத்தம் யாருக்கும் நான் தேவை இல்லை அப்படி தான போங்க போங்க எல்லா..”

அனைத்து ரகசியமும் தெரிந்து தன் கணவன் மனவேதனையில் பரிதவிப்பதை பார்த்தவள் அதை போக்க நினைத்து அவனை மேற்கொண்டு பேச விடாமல் கட்டிலில் உருண்டு போய் அவனைத் தன் புறமாக திருப்பியவள் சற்றும் யோசிக்காமல் அவன் இதழ்களைத் தன் இதழ்களால் மூட தன் மனைவியிடம் இருந்து தனக்குக் கிடைத்த முதல் இதழ் முத்தத்தின் மயக்கத்தில் கண்மூடி இருந்தவனோ அவள் இதழின் குளிர்ச்சியில் தன் உள்ளத்தின் தகிப்பு குறைவதை உணர்ந்தவனோ பின் தன் கண்களைத் திறந்து நீயா கொடுத்த என்று அவன் அவளைப் பார்க்க கணவனின் கண்ணில் கேட்ட செய்தியை உணர்ந்தவளோ சிறு வெட்கத்துடன் “சாரி” என்ற சொல்லுடன் அவன் மார்பில் அவள் முகம் புதைக்கவும்

“ஓ…. சாரிக்கு தான இது? நல்ல ஆள் தான் டி நீ! இப்படி முத்தம் கொடுத்தா உன் சாரிய நான் ஏத்துக்குவேனா?அதெல்லாம் முடியாது..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் முகம் நிமிர்த்தி மறுபடியும் அவன் இதழைச் சிறை செய்தவள் தன் இதழாலேயே இனி இந்தப் பேச்சு வேணாமே என்பது போல் அவள் கண்டனம் தெரிவிக்கவும் காலையில் அவள் பேசிய பேச்சுக்கான தண்டனையை அவன் தன் இதழாலே அவள் இதழுக்கு கொடுக்கவும் அன்றைய இரவு இருவருக்கும் கூடல் இல்லாத ஊடலுடனேயான இரவாக இனிமையாக கழிந்தது..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN