காதல்பனி 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அஷ்வத்திடம் என்ன தான் கோபம் கொண்டு வீம்பாக பேசி விட்டு வந்தாலும் பொம்மியின் மனமோ கணவனைத் தான் சுற்றிச் சுற்றி வந்தது.

இந்தியா வந்து சேர்வதற்குள் அவள் யோசித்துக் கண்டது எல்லாம் கணவன் எதையோ மறைக்கிறான் என்பதைத் தான். ‘அப்படி நான் எதைத் தெரிஞ்சிக்கக் கூடாதுனு நினைக்கிறார்? நேற்று நடந்துகிட்டதைப் பார்த்தா அவருக்கு ஏதோ பெரிய வியாதி இருக்குற மாதிரியும் அதை நான் தெரிஞ்சிக்கக் கூடாதுனு மறைக்கிற மாதிரியும் இருந்தது. நிச்சயம் நேற்று அவர் பேசிய பேச்சு எதிலும் சுயம் இல்லை.

காலில் எண்ணை கொட்டிய போது எனக்காக துடித்தது, ஒரு நாள் இரவு முழுக்கத் தன் கொஞ்சலாலும் முத்தத்தாலும் என்னைச் சிவக்க வைத்தது இது தான் என் கணவன். இதெல்லாம் விட அவர் வாய் திறந்து தன் காதலைச் சொல்லவில்லை என்றாலும் என்னைப் பார்க்கும் போது எல்லாம் அவரிடம் தோன்றும் கனிவையும் கண்ணில் தோன்றும் காதலையும் நான் பார்த்துத் தானே இருந்தேன்! ஏதோ ஒரு விஷயத்தை அவர் மனசுக்குள்ளே போட்டு வைத்து அதை எனக்குத் தெரியக் கூடாதுனு நினைக்கிறார். அது என்னவாக இருக்கும்?..’ என்றெல்லாம் சிந்தித்தவள் திடீர் என்று உடலில் ஒரு சிலிர்ப்பும் நடுக்கமும் ஓட

‘ஒருவேளை அந்த விஷயமாக இருக்குமோ?’ என்று நினைத்தவள் ‘ச்சே ச்சே.. கண்டிப்பா அது இருக்காது. எப்போதும் என்னிடம் இருக்கும் விழியைப் பற்றி தானே அடிக்கடி கேட்கிறார். அதனால் ஏதாவது ஒரு பெண் விஷயமா இருக்குமோ? அதுவும் காதல் தோல்வி மாதிரி!’ என்று யோசிக்கும் போதே நெருஞ்சி முள்ளாய் மனதை ஏதோ ஒன்று குத்த ‘அப்படியே இருந்தாலும் அதை அவர் என் கிட்ட சொல்லலாமே? இது தான் விஷயம்னா ஒரு மனைவியா இதிலிருந்து நிச்சயம் நான் அவரை வெளிக் கொண்டு வந்தே தீருவேன்!’ என்று மனதில் உறுதியேற்றாள் சாரா.

வீடு வந்தவள் தாத்தாவிடம் தங்களுக்குள் நடந்த பிரச்னையைச் சொல்லாமல் அஷ்வத்துக்கு ஏதோ வேலை இருப்பதாக மட்டும் சொல்லி வைக்க, மறுநாளே வந்த அஷ்வத்தும் தாத்தாவிடம் எதுவும் சொல்லாமல் தன் மனைவியைத் தேடி மேலே வர, கணவனைப் தங்கள் அறையில் பார்த்தவள் எதுவும் நடக்காத மாதிரியே அவனை வாங்க என்று வரவேற்றவள் பின் தான் செய்து கொண்டிருந்த வேலையான கட்டிலின் விரிப்பை மாற்றிக் கொண்டிருக்க. மனைவியின் நிதானமான வரவேற்பிலும் செய்கையிலும் கொதித்தவனோ

“என்ன டி திமிரா? வரவே மாட்டேனு சொன்னவன் திரும்ப வந்துட்டானேனு அலட்சியமா? நான் ஒன்னும் உன்னைத் தேடி நீ வேணும்னு வரலை!” என்று மிதப்பாகச் சொல்ல, அப்போதும் அவள் எந்த வித பதிலும் சொல்லாமல் அமைதியாகத் தன் வேலைகளைப் பார்க்க அதில் இன்னும் கொதித்தவன்

“உன்னை நான் பார்த்ததிலிருந்து என் சந்தோஷம் போயிடுச்சி. என்னைக்கு நீ என் வாழ்க்கையில் வந்தியோ அன்னைக்கே என் நிம்மதியும் போயிடுச்சி. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். இழந்த என் சந்தோஷமும் நிம்மதியும் திரும்ப எனக்கு வேணும்னா உன்னை விட்டு நான் நிரந்தரமா விலகுறது தான்!” என்றவன் அவள் முன் தங்கள் விடுதலைப் பத்திரத்தை நீட்ட எந்த வித சலனமும் இல்லாமல் அதை வாங்கியவள் நிதானமாக படித்து முடிக்கவும் அவனோ தன்னிடமிருந்த பேனாவை அவள் முன் நீட்ட அவனை ஆராயும் பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டே வாங்கியவள் பின் அங்கிருந்த டேபிளில் வைத்து கையெழுத்து இட்டவள்

“ம்… நீங்க கேட்ட மாதிரியே நான் உங்க வாழ்க்கைய விட்டு விலகுறதுக்கு சம்மதம் என்று கையெழுத்துப் போட்டுட்டேன். வந்து எடுத்துக்கங்க” என்றவள் அந்த பத்திரத்தை டேபிளில் வைத்து விட்டு அவளோ சற்று விலகி நின்று விட, அஷ்வத்துக்குத் தான் அவள் செயலைப் பார்த்து மனதில் எண்ணில் அடங்காத கோபம் எழுந்தது.

‘நான் கேட்ட உடனே கையெழுத்துப் போட்டுடுவியா டி ? அப்போ நான் உனக்கு வேணாமா? உனக்குள்ள நான் எந்த சலனமும் ஏற்படுத்தவே இல்லையா?’ என்று அவளைப் பார்த்து தன் மனதுக்குள் அவன் கேள்வி கேட்ட படி நிற்கவும்

“நீங்க விரும்பின மாதிரியே இனி உங்க வாழ்க்கைய நீங்க சந்தோஷமா வாழுங்க. அதுக்கு நான் இடைஞ்சலா இல்லாம உங்களை விட்டு விலகிடுறேன். அதுக்கு சம்மதம் சொல்லித் தான் கையெழுத்துப் போட்டிருக்கேன் வந்து எடுத்துக்கங்க” என்று டேபிளின் மேலிருந்த பேப்பரைக் காட்டி அவள் அழுத்தமாகச் சொல்ல

‘இவள் நம் விருப்பப் படி கையெழுத்துப் போடுவாளா இல்லை போட மாட்டேன் என்று முரண்டால் என்ன சொல்லி மிரட்டி இவளைச் சம்மதிக்க வைப்பது?’ என்றெல்லாம் அவன் யோசித்து வர, ஆனால் எந்த சிரமமும் இல்லாமல் அவன் எதிர்பார்த்தது கிடைத்தும் அவனால் சந்தோஷப் பட முடியாமல் ஏன் நான்கு அடியே தூரமிருந்த அந்த டேபிளைக் கூட நெருங்க முடியாமல் கால்கள் இரும்பு குண்டாய் கனக்க கைகள் உதற கண்கள் சொருக அதை விட அவன் நெஞ்சுக் கூடோ தலை அறுபட்ட புறாவாய் துடிக்க தனக்கு இந்த நிமிடமே மரணம் வந்து விட்டால் கூட எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவனோ

இதை எதையும் அவளிடம் காட்டாமல் கண்ணை மூடித் தன்னை நிலைப்படுத்தியவனோ பின் தன் நிமிர் நடையுடன் சென்று அந்த பேப்பரைக் கையில் எடுத்து அவள் கையெழுத்து இட்ட இடத்தைப் பார்க்க அதில் ‘உங்களுக்கு என்னிடம் இருந்து விடுதலை வேண்டும் என்றால் அதை என் மரணத்தால் மட்டுமே கொடுப்பாள் இந்த சின்னாவின் பொம்மி!’ என்று எழுதி இருந்தாள் சாரா. அதைப் பார்த்ததும் அவனையும் மீறி அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைத்தவன் அடைத்த தொண்டையைச் சரி செய்த படி

“ஏய்! நான் உன்னைக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கொடுத்தா நீ என்ன டி பண்ணி வெச்சிருக்க?” என்று கோபத்தில் அவன் கர்ஜிக்க நினைக்க அந்தோ பரிதாபம்.. அவன் குரலோ மழையில் நனைந்த கோழி என வெடவெடக்கத் தான் செய்தது.
இங்கு வந்ததில் இருந்து கணவனின் முகத்தையும் செயலையும் பார்த்தவளோ இப்போது அவன் குரலையும் அறிந்து கொண்டவளோ நிமிர்வுடன்

“ஏன் நான் என்ன செய்தேன்? நீங்க கேட்ட விடுதலையைத் தானே கொடுத்தேன்?” என்று இவள் கேட்க

“நான் கேட்டது கையெழுத்து. இது கையெழுத்தா? நீ படிச்சவ தானே? என்ன எழுதறோம்னு யோசிக்காமலேயே எழுதுவியா?”

“நான் எதையும் யோசிக்காம எழுதல. நல்லா யோசித்துத் தான் எழுதினேன்” அவனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயமும் சந்தோஷமும் போட்டி போட ‘ஏன் டி என் மேல இவ்வளவு காதலை வெச்சிருக்க?!’ என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவனோ வெளியில்

“மண்ணாங்கட்டி! என்ன டி சும்மா இறப்பு அது இதுனு என்னை பயமுறுத்திறியா? நீ என்ன சொன்னாலும் செய்தாலும் நாம பிரியப்போறது போறது தான். நீ இப்போ இதுக்கு சம்மதிக்கலைனா நான் தாத்தா கிட்ட வேற மாதிரி நடந்துக்க வேண்டி வரும்” என்று அவன் கத்தவும் அவனை நெருங்கி அவன் கையிலிருந்த பத்திரத்தைப் பிடிங்கியவள் அதை சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிய அவள் செயலில் “ஏய்!” என்று கத்தி ருத்திரமூர்த்தியாக நின்றவனை அவனின் கோபத்தால் சிறிதும் அசராமல் தன்னவனின் கையைப் பற்றி இழுத்துச் சென்று ஷோபாவில் அமர வைத்தவளோ தானும் அவன் பக்கத்தில் அமர்ந்து


“என்னை விட்டுட்டு உங்களால ஒரு நாள் கூட முழுசா இருக்க முடியல. கிளம்பி இதோ இப்போ என் முன்னாடி வந்து நிற்கறீங்க. நீங்க என்னை விட்டுட்டு ஆயுசுக்கும் இருப்பீங்களா? அன்னைக்கு நீங்க சொன்னதைத் தான் இப்போ நான் சொல்றேன். என் தாத்தாவா இருக்கும் போதே நீங்க அவரை விட்டது இல்ல. இப்போ உங்க தாத்தாவுக்கு ஏதாவது நடக்கவா விட்டு விடுவீங்க? ஏன் இப்படி நடிக்கறீங்க? என் மேல உங்களுக்கு அன்பு பாசம் ஏன் காதல் கூட இருக்கு. அதை எல்லாம் நிமிஷத்துக்கு நிமிஷம் மறைத்து மறந்து ஏன் பிரிவு விடுதலை வரை போறீங்க? அப்படி உங்க மனசுல என்ன தான் இருக்கு? எது உங்களை இப்படி மாற்றுது? அது என்னனு சொல்லுங்க நாம அதுக்கு ஏதாவது வழி இருக்கானு பார்ப்போம். பிறகு நானும் உங்க கிட்ட ஒன்று சொல்லனும்” என்றவள் ஒரு மனைவியாய் கணவனின் கஷ்டதைப் போக்க அவள் வழி செய்ய, மனைவி தன் மனநிலையை உணர்ந்து இருக்கிறாள் என்பதை அறிந்தவனோ வீம்புக்கென்று

“எனக்கு ஒன்னும் இல்லை. நான் எதையும் மனசுல போட்டு இருக்கலை. நீ எதையாவது சொல்லி என்னைத் திசை திருப்பாதே. எனக்கு வேண்டியது டிவோர்ஸ். அதை மட்டும் கொடு’’ என்று இவன் அதே பிடிவாதத்திலே இருக்க, அவன் முகத்தை ஒரு வினாடி தீர்க்கமாகப் பார்த்தவளோ

“அப்ப என் முடிவும் மாறாது. என் மரணத்தால் மட்டும் தான் அது நடக்கும். அந்த மரணத்தையும் இப்பவே ஏற்று உங்களுக்கு விடுதலை தர நான் தயார்” என்றவள் அங்கிருந்து எழப் போக, அவள் யூகம் தெரிந்து அவளை நகர விடாமல் இறுக்கிப் பிடித்தவனோ

“நீ சாக வேணாம் டி.. என்னுடைய பிரச்சனைக்கு நான் தான் டி சாகணும்” என்று முதல் முறையாக அவன் உடைய

“நீங்க முதல்ல என்ன பிரச்சனைனு சொல்லுங்க. அதற்குப் பிறகு நீங்க சாகலாமா இல்ல நான் சாகலாமானு நான் சொல்றேன்” என்று அவள் சொல்லவும், அவள் மடி சாய்ந்தவனோ முன்பு தன் வாழ்வில் நடந்தது அனைத்தையும் இதுவரை யாரிடமும் பகிராத தன் பாவச் செயலை சொல்ல ஆரம்பித்தான் அஷ்வத் இல்லை இல்லை ஏ.கே.!

தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே இருக்கும் மலைப்பிரதேசம் தான் மகாதேவிபுரம் (இவ்வூர் என் கற்பனையே). இவ்வூர் முழுக்க முழுக்க மலைகளையும் காடுகளையும் அந்த காடுகளுக்கே ஏற்ற குளுமை, இருள் மற்றும் கொடிய விலங்குகள் என்றிருக்க நூறு வீடுகளே ஆன சிறிய கிராமம் அது. அந்த ஊரைச் சுற்றி காடுகளும் மலைகளும் இருந்ததால் அந்த ஊரைத் தள்ளி காட்டில் மலைவாழ் மக்களும் வாழ்ந்து வந்தனர்.

தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் தன் கேரியரை வளர்த்துக் கொள்ளத் தன் இந்திய வாழ் நண்பனான சூரியாவின் உதவியுடன் அவனின் ஆலோசனைப் படி மகாதேவிபுரத்தில் இருக்கும் மலைகளையும் காடுகளையும் விலங்குகளையும் படம் எடுக்க ஒரு போட்டோகிராப்பராகத் தன் நண்பன் சூரியாவுடன் அந்த மலைப் பிரதேசத்துக்கு வந்தவன் தான் ஏ.கே.

தன் கணவனின் ஆசைப் படி எப்போதோ கணவன் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் இரு நாட்டு பெயரையும் சேர்த்து அஷ்வத் கென்டிரிக் வைக்க இருந்ததை ஞாபகம் வைத்து கரோலின் தன் மகனுக்கு அஷ்வத் கென்டிரிக் என்றே பெயர் வைக்க என்ன தான் கணவனுக்காக வைத்தாலும் கரோலின் மகனை ஏ.கே என்றே அழைத்து வர தன் தந்தை தமிழர் என்று தெரிந்தாலும் தன் தாயிடம் மேற்கொண்டு எதையும் அவன் கேட்காமல் விட்டு விட அதனால் அவனைச் சுற்றி இருப்பவர்களும் அவனை ஏ.கே என்றே அழைத்து வந்தனர்.

ஏ .கேவும் சூர்யாவும் அந்த ஊர் தலைவரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போக அங்கு அவர் இல்லாததால் அவர் மனைவி அவர் வீட்டில் வேலை செய்யும் செங்கோடனிடம் அவர் இருக்கும் இடத்திற்கு இருவரையும் அழைத்துச் செல்லச் சொல்ல, அழைத்துச் சென்றவன் எங்கு சென்றும் அவரைக் காணாமல் தேடியவன் கண்ணில் வேறொன்று தென்பட்டது.

ஓர் இடத்தில் குளக்கரையில் வண்டி மாட்டை இரட்டை ஜடை பின்னல் போட்டு முடியின் நுனியில் ரிப்பன் கட்டி ஆண்கள் அணியும் மேல் சட்டையைப் போட்டிருந்தவளோ கணுக்கால் வரை அணிந்திருந்த பாவாடையைத் தண்ணீரில் நின்றிருந்ததால் இன்னும் தூக்கி முட்டி தெரிய சொறுகி இருக்க தன் வலது புற தோளில் தவழ்ந்த ஜடையை வலது கையால் பின்னுக்குத் தூக்கிப் போட்டவள் அதே கையில் பிடித்திருந்த வைக்கோலைக் குனிந்து ஆற்று நீரில் நனைத்து வண்டி மாட்டின் முதுகைத் தேய்க்க அவள் குனிந்து நிமிர்ந்து மாட்டைத் தேய்த்துக் கழுவும் அழகையும் கூடவே அவள் முன்னழகையும் பின்னழகையும் அடிக்கு ஒரு முறை முட்டிக்கு மேலும் கீழும் ஏறி இறங்கும் அவள் பாவாடையையும் கணுக்காலையும் செங்கோடன் வாய் திறந்து அவளை ஒரு வித விரசப் பார்வையுடன் ரசிக்க

“என்ன செங்கோடா.. இவங்க ரெண்டு பேரும் யாரு?” என்று யாரோ கேட்ட கேள்வியில் தெளிந்தவன் அவருக்குப் பதிலைத் தந்து விட்டு அங்கு மாடு தேய்ப்பவளைச் சீண்டி பார்க்கும் எண்ணம் எழ அவளிடம்

“ஏலே கருப்பி! நம்ம வீரபாண்டி ஐயா எங்கவே இருக்காரு?” என்று அவன் கத்திக் கேட்க, அவளோ மவுனமாக இருக்கவும் அதில் கோபமுற்றவன்

“அடி ஏய் கரி உருண்ட.. உன்னைத் தான் டி கேட்கேறேன்” என்று இவன் மறுபடியும் ஏலம் இடும் குரலில் கேட்க அவளிடம் மறுபடியும் மவுனம் மட்டுமே. தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவனின் முகத்தில் கோபம் ஏற அவன் மறுபடியும் வாயைத் திறக்கும் நேரம் அந்தக் குளக்கரையிலே சற்றுத் தூரமாக இருந்த அந்த ஊர் பெண்ணொருத்தி

“ஏலே கருங்குழலி! உன் மாமன் எவ்வளவு நேரமா உன் கிட்ட பெரிய ஐயா எங்கனு கேட்டுட்டு இருக்கான்.. நீ என்ன பதிலே சொல்லாம இருக்க?” என்று கேட்க

“இப்போ நீங்க என்னை என்னனு க்கா கூப்பிட்டீங்க?” என்று கேட்டவள் மாட்டைத் தேய்க்கும் வேலையில் மும்முரமாய் இருக்க

“இதென்ன கேள்வி? கருங்குழலி தான்!” என்று அவள் பதில் சொல்லவும்

“அப்ப என் பெயர் கருங்குழலி தானே? யாரோ ஒரு கருப்பி கிட்ட கேட்டா நான் எப்படி க்கா பதில் சொல்வேன்?” என்றவள் அவனுக்கு இப்போதும் பதில் சொல்லாமல் அவள் தன் வேலையைப் பார்க்க

“அவ கிடக்கறா விடுங்க க்கா. நம்ம ஊர் ரோட்டுக்குத் தாரே வேணாம். இவ கிட்ட இருக்கிற கருப்பச் சுரண்டி எடுத்தாலே போதும் ரோட்டுக்குத் தார் ஊத்திடலாம். கூடவே இவளை வெச்சி ரோடு மேலே ரெண்டு உருட்டு உருட்டினா போதும் நம்ம ஊரு ரோட்டுல இருக்கிற மேடு பள்ளம் எல்லாம் சரியாகிடும். அப்படிப் பட்ட இவ பேசுற பேச்சையும் அடிக்கிற வாயையும் பாருங்க” என்று அவளைச் சீண்டல் என்ற பெயரில் கேவலப் படுத்தியவன் “எல்லாத்துக்கும் மேலே இந்த கரி உருண்டையோட மாமன்காரனான நான் வம்பிழுக்காம வேற யார் வம்பு இழுப்பாங்களாம்?” என்று உள்ளே புகைந்தாலும் வெளியே சிரித்துக் கொண்டே அவன் பதில் தர

“ஆமா.. இவருக்கு வெள்ளை வெளுனு மின்னுர வெளுத்தத் தோளு பாரு.. என்ன சொல்ல வந்துடாரு! ஆப்ப சட்டியக் கவுத்துப் போட்ட நிறமா இது இருந்துட்டுப் பேச்சப் பாரு” என்று அவனுக்குக் கேட்கும்படியே வாய் விட்டுக் குழலி முனுங்க, அதே நேரம் ஆற்றில் இலை தழையுடன் கூடிய கொடி ஒன்று வர அதை அவள் கழுவும் வண்டி மாடு எக்கித் தின்பதற்காக முன்னே ஓர் எட்டு வைத்து நகரப் பார்க்கவும் அதன் மூக்கணாங் கயிற்றை இறுக்கிப் பிடித்தவளோ

“அடி செருப்பால.. இந்த எடுபட்ட காளைக்குத் திமிரப் பாரு. இவ பசு மாட்ட மேய்க்கிறவ தானே ஆனா நாம காளை மாடு தானே என்ற அடங்காத் தனத்த நீ அடிக்கடி என் கிட்ட காட்டுற. நான் ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன். என்னைக்கு உன் கால் ரெண்டையும் உடைத்து உன்னை உட்கார வைக்கப் போறேனு தெரியல” என்று மாட்டைச் சாடுவது போல் அவள் தன் மாமனைச் சாட, அவள் தன்னைத் தான் சாடுகிறாள் என்பதை அறிந்தவனோ பல்லைக் கடித்த படி விலக

இவ்வளவு நேரம் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தன் வேளையில் இருந்தவள் இப்போது அவன் முகம் போகும் போக்கைப் பார்க்க எண்ணி மாட்டின் முகத்தருகே வந்து நிமிர்ந்து பார்க்க முகம் முழுக்க மறைய அவள் விழிகள் மட்டும் கொம்பு வழியே தெரிய அவள் பார்க்கவும் அதே நேரம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாமலே எதேச்சையாக ஏ.கே அவள் இருந்த இடத்தைப் பார்க்க அவனுக்குத் தெரிந்தது அவள் விழிகள் மட்டுமே தான். ஆனால் அவளோ கூட இருந்தவர்களைப் பார்க்காமல் தன் மாமனை மட்டும் தான் பார்த்தாள்.

பின் தன் வேலைகளை முடித்துக் கொண்டு தலையில் புல்லுக்கட்டுடன் மாலை நான்கு மணிக்குத் தன் குடிசைக்கு வந்தவள் அங்கு தன் பாட்டி கூன் விழுந்த முதுகுடன் புழக்கடையைப் பெருக்குவதைப் பார்த்தவள் தன் தலையில் இருந்ததை ஒரு ஓரமாக கீழே போட்டுவிட்டு

“ஏன் ஆத்தா உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? நீ எந்த வேலையும் செய்யாத நான் வந்து எல்லா வேலையையும் பார்த்துக்கிறேனு. போ போய் ஒரு இடமா உட்காரு. நான் இதை சுத்தம் செய்றேன்” என்றவள் அவரிடமிருந்து துடைப்பத்தை வாங்கித் தோட்டத்தைக் கூட்டியவள் பின் மாட்டைத் தொழுவத்திலும் ஆடுகளைப் பட்டியிலும் கட்டியவள் கோழிகளை அதன் கூட்டில் அடைத்து விட்டு மலைக் குவியல் என இருந்த சாணக் குவியலில் இருந்து இரண்டு கை சாணத்தை எடுத்து அந்த நேரத்திலும் வரட்டி தட்டியவள்

பின் தலை ஒதுக்கி முன்பு மாதிரியே இரட்டை ஜடை பின்னலில் ரிப்பன் கட்டியவள் கைகால் முகம் கழுவி பொட்டிட்டு மழைக்கு நனையாமல் இருக்க தார் பாய்க்குள் அடைத்து வைத்திருந்த காய்ந்த வரட்டி இரண்டை எடுத்து அடுப்பு மூட்டி களி கிண்டி அதற்குத் தோதாக மொச்சைக் கொட்டை காய் போட்டு குழம்பு வைத்தவள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு திண்ணையில் இருக்கும் தன் பாட்டியிடம் வர, அவரோ தன் பேத்தி வந்ததில் இருந்து அவளைத் தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க

“என்ன ஆத்தா இன்னைக்கு என்னைய புதுசா பார்க்கற மாதிரியே பார்க்கற?” என்று கேட்க ஒன்றும் இல்லை என்பது போல் அவரிடம் இருந்து சிறு தலை அசைப்பு மட்டுமே பதிலாக வந்தது.

“சரி சரி.. நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன். நீ எதுவும் செய்யாத. அதே மாதிரி புழக்கடை பக்கம் நீ போறதா இருந்தா சிமிழ் விளக்க எடுத்துப் போ ஆத்தா. நீ பாட்டுக்கு போயிடாதே” என்றவள் “நான் இப்போ போனா தான் வேலை முடிச்சி வீரபாண்டி ஐயா வீட்டுல இருந்து திரும்ப வர முடியும். அதனால நான் கிளம்புறேன் ஆத்தா” என்று அவள் ஓர் எட்டு வைக்கவும்

“நீ இனி வேலைக்குப் போக வேணா தாயி!” என்று அவர் வாய் திறந்து தடுக்கவும்

“எனக்கு மட்டும் இஷ்டமா ஆத்தா? அந்த மச்சி வீட்டு அம்மா பேசுற பேச்சு எதுவும் எனக்கும் தான் பிடிக்கல. என்ன செய்ய? குழந்தை இல்லாத நம்ம வீரபாண்டி ஐயா என்னைய அவர் சொந்தப் பொண்ணா பார்த்துப் பாசத்தைக் காட்டும் போது நான் எப்படி வேலைக்குப் போகாம இருக்க சொல்லு? ஆமாம்.. நீ ஏன் போக வேணானு சொல்லுற?” என்று கருங்குழலி கேட்க

“உன்னைய பகல்ல வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லல. இப்படி அந்தி சாய்ந்த நேரத்துல வேலைக்குப் போய் இருட்டின பிறகு காட்டு வழியா நீ திரும்ப குடிசைக்கு வர்றதுக்குள்ள நான் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டுல்ல இருக்கேன்?” என்று அவர் பதில் தர

“என்ன ஆத்தா நீ.. வர்ற வழில இருக்க காட்டு மிருகங்களுக்கா நீ பயப்படுற? சின்ன வயசுல இருந்து இங்கே வளர்ந்த எனக்கு எது எங்க எப்படி வரும்னு தெரியாதா? அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பயப்படாத” என்று தைரியம் சொல்ல

“நான் காட்டு மிருகத்துக்கா பயப்படறேன்? எல்லாம் இந்த மனுச மிருகங்களுக்குத் தான் பயப்படறேன்” என்று அவர் கலக்கமாகச் சொல்லவும், அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவள்

“யாரு அந்த செங்கோடனச் சொல்றியா? நீ பயப்படற அளவுக்கு அவனெல்லாம் ஒரு ஆளா?” என்று பயமின்றி இவள் கேட்கவும்

“வாய் மேலே ரெண்டு போடுவேன். அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணுனு உன்னைய உன் இஷ்டத்துக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு. கொஞ்சம் கூட மட்டு மருவாதை இல்லாம உன்னைய விட பதினஞ்சி வயசுப் பெரியவன அவன் இவன்னா சொல்லுறது? இதில்லாம அவன் உன் மாமன்! நாளைக்கு உன்னைய கட்டிக்கப் போறவன். பார்த்துப் பவிசா நடந்துக்க. அவன் ஆத்தா கேட்டா உன்னை ஆய்ஞ்சிபுடுவா ஆய்ஞ்சி சொல்லிட்டேன்..

நீ ஏதோ வாய் துடுக்கா அவன் கிட்ட வம்பு பண்றேனு இத்தனை நாள் நான் நினைச்சிட்டு இருந்தா இன்னைக்கு என்னமோ அவனைக் கேவலமா பேசுனியாமே? அவன் இங்குட்டு வந்து உன் பேத்திய அடங்கி இருக்க சொல்லு பிறகு கோபம் வந்து நான் ஏதாவது செய்திடப் போறேனு மிரட்டிட்டுப் போறான். பத்தாததுக்கு இப்படி எல்லாம் இவ இருந்தா என் ஆத்தா இவள மருமகளா ஏத்துக்காதுனு வேற சொல்லிட்டுப் போறான். இந்த பேச்சு எல்லாம் நமக்குத் தேவையா சொல்லு?

“யாரு?.. அரசாங்கத்துக்கு எதிரா மரத்த வெட்டி திருட்டுத்தனம் பண்ற இந்த காடு வெட்டி கருவாயன, ஊர்ல இருக்கற பொண்ணுங்கள எல்லாம் பொண்டாட்டியா நெனச்சிப் படுக்கைக்குக் கூப்பிடற இந்தப் பொம்பளப் பொறுக்கிய நான் கட்டிக்கணுமா? இதுக்கு அவன் ஆத்தா வேற சம்மதிக்காதாமா? அதுக்கு வேற ஆள பார்க்கச் சொல்லு அந்த கிழவிகிட்ட.

உனக்கு நான் முன்னமே சொல்லிட்டேன் ஆத்தா. இப்பவும் சொல்லுறேன், அந்த செங்கோடனை நான் கட்டிக்க மாட்டேன்! கட்டிக்க மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறியவள் “சீக்கிரம் விரசா வந்திடுறேன்” என்ற சொல்லுடன் முன்னே நடக்க ஆரம்பித்தாள் கருங்குழலி.

அழகான வட்ட முகம். ஆனால் சற்றே கருத்த நிறம் தான்! அது கூட காடு மேடு எல்லாம் வெயிலில் சுற்றியதில் இன்னும் அடர்ந்த கருப்பாக அவர் பேத்தியைக் காட்டியது. பதினாலு வயதுக் குழந்தை இவள். ஆனால் அப்படி ஒரு குழந்தைத் தனம் துளியும் முகத்திலும் அவள் பேச்சிலும் இருக்காது. இதை எல்லாம் விட அவள் வயதையும் மீறி பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண் என்று காட்டும் இவளுடைய உடல்வாகு. சற்றே பூசினாற் போல் இருப்பதால் செங்கோடனை விட குள்ளமாகத் தெரிவதால் தான் அவனுக்கு இவளைப் பிடித்து விட்டதோ?

“ஏற்கனவே கல்யாணம் வேணாம் என்பவள் இன்னும் செங்கோடனின் தாய் கேட்கும் சீர்வரிசைகளைச் சொன்னால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாளே இவள்!

செங்கோடன் என்னமோ சமூகவிரோதமா நடந்துக்கறான் குடிக்கறான் கூத்தடிக்கறானு இவ சொல்றாளே, இவ தாத்தாவுக்கு நான் எத்தனையாவது பொண்டாட்டினு இவளுக்குத் தெரியுமா இல்ல அந்த ஆள் அடிக்காத கூத்தா?

வாய் பேசத் தெரியாத இவ அம்மா எங்களுக்கு மகளா பொறந்ததுக்கு ஊமச்சி போய் நமக்கு மகளா பொறந்திடுச்சேனு அந்த ஆள் எனக்கும் அந்த பொண்ணுக்கும் எவ்வளவு கஷ்டம் குடுத்தான்?

அவ வாழ்க்கையிலும் ஒரு நல்லவன் வந்தான்! அந்த வாழ்வாது உன் அம்மாவுக்கு கடைசி வரை நெலச்சிதா? வயித்துல இவ இருந்தப்போ குறைப் பிரசவத்திலே இவ பிறக்கும் போது அவ உயிரையே விட்டுட்டா. அதே நேரம் காட்டுல எரியுற தீயில மத்தவங்கள காப்பாத்தப் போய் அன்னைக்கே இவ அப்பனும் போய் சேர்ந்துட்டான்.

இப்படி பொறந்ததுல இருந்து யாரும் இல்லாம இருக்குறாளேனு இவளுக்குச் செல்லம் காட்டி இவ ஆத்தா பேசாத பேச்சை எல்லாம் இவ பேசறாளேனு நெனச்சி அன்னைக்கு உச்சி குளிர்ந்து சந்தோஷப்பட்டது தப்பா போச்சி. இன்னைக்கு இந்த வாய் தான் இவ வாழ்க்கைக்கு எதிராப் போகுமோ தெரியல?!

வாய் மட்டுமா? கூடவே பிடிவாதம் இல்ல நெறஞ்சிருக்கு? நம்ம இனம் மாதிரி ரவிக்கை இல்லாம மேலாக்கா ஒரு துணிய மட்டும் இறுக்கி கட்டுடினா எங்க கேட்குறா? அது எல்லாம் முடியாது ஆம்பள புள்ள சட்டை தான் வேணும்னு சந்தையில இருந்து வாங்கி வந்து போட்டுகிட்டுத் திரியறா. அது மட்டுமா? என்ன மாதிரி காதுக்கும் மூக்குக்கும் வளையம் போடுடினா அதும் வேணானு சொல்றா.

அவ ஒத்துகிட்ட ஒரே விஷயம் காலுக்கு தண்டம் போடுறது தான். இப்படி எல்லா விஷயத்துக்கும் சம்மதிச்சி விட்டு கொடுத்த செங்கோடையனின் அம்மா அவ படிக்கட்டும்னு சொன்னதுக்கு மட்டும் விடவே இல்லையே! அதனால நானும் இவள படிக்க வேணாமுன்னு சொல்ல, ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இந்த புள்ள அழுத அழுகை கொஞ்சமா நஞ்சமா?

ஆனா அப்படி இருந்தும் மறுநாள் காலை விடிஞ்சதும் அவ என் கிட்ட வந்து சொன்னது இன்னும் நெனவுல இருக்கு. இப்ப என்ன ஆத்தா? படிப்பு தான் வாழ்க்கையா? படிச்சா தான் சாதிக்க முடியுமா? நான் விவசாயத்தக் கத்துகிட்டு அதுல ஏதாவது புதுசா கண்டு பிடிக்குறன். அதே மாதிரி இந்த காட்டை எல்லாம் ஆராய்ச்சி பண்ணுவாங்களாமே அதேபோல நானும் நம்ம காட்டையே ஆராய்ச்சி பண்ணிட்டுப் போறனு எவ்ளோ மிடுக்கா சொன்னா என் பேத்தி?! அவ தன்னம்பிக்கையைப் பார்த்து நானே வாயடச்சி இல்ல போய்ட்டேன்!

இதெல்லாம் அந்த வீரபாண்டி ஐயா கொடுக்கிற இடம். இப்படி இருக்கிற இவளுக்கு அந்த மகாதேவி தான் நல்ல புத்தியக் கொடுத்து நல்லது செய்யணும்” என்ற பிரார்த்தனையுடன் தன் வேலையைப் பார்க்கப் போனார் அவர். ஐயா வீட்டுக்குத் தாமதமாகப் போன கருங்குழலி தன் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப

“ஏன் டி எடுபட்டவளே! உனக்கு வேலைக்கு வர இவ்வளவு நேரமா? உன் ஆத்தாவுக்கு தான் தினமும் எங்க வீட்டு சோறு வேணுமே? அதை வேலை முடிச்சிப் பொழுதோட வந்து எடுத்துப் போகணும்னு தெரியாது? நீ வர தாமசம் ஆச்சினு இப்போ தான் தொழுவத்துல இருக்குற கழனிப் பானையில போய் கொட்டுனன். அதுலயிருந்து மேலாக்கா எடுத்துகிட்டுப் போய் உன் ஆத்தாளுக்குக் குடு” என்று ஐயா மனைவி அவளை விரட்ட

அது எதற்கும் பதில் சொல்லாதவளாக உன் சோறு எனக்கு வேண்டாம் என்ற ரீதியில் அந்த இடத்தை விட்டு அகன்று இருந்தாள் குழலி.

அவள் போவதைப் பார்த்து “இவ்ளோ திமிர் ஆகாது டி உனக்கு. இதுக்கெல்லாம் நீ பின்னாடி பெரிசா படுவ டி” என்று ஐயா மனைவி சாபமிட, அதைக் காதில் வாங்கினாலும் சற்றும் நிற்காமல் நடந்தாள் குழலி.

இப்படியே நாட்கள் செல்ல இரண்டு நாட்கள் கழித்துக் குழலி ஒரு மாலை வேலையில் காட்டில் ஒரு மரத்தில் ஒரு கிளை மட்டும் சரிந்து போய் அதில் நிறைய தேன் அடைகள் இருக்க அதில் தேனை எடுக்கக் கீழே மண்ணில் நெருப்பு மூட்டியவள் ஒரு கணமான சாக்கை உடலில் சுற்றி கையிலும் தன் விழியைத் தவிர முகத்திலும் சற்று கணமான துணியை சுற்றியவள் கையில் தீ பந்தத்துடன் சற்று தூரவே இருந்து அந்தத் தேன் கூட்டைப் பார்த்து இருக்க

அதே நேரம் ஏ.கே வோ கையில் கேமராவுடன் அவள் எதிர் திசையில் இருந்து தெரியாமல் தேன் கூட்டை நெருங்க, அவனைப் பார்த்தவளோ தன் கையிலிருந்த தீ பந்தத்தைத் தூக்கிக் காட்டி அவனைத் தூரப் போ என்று தன் வலது கையால் சமிக்ஞை செய்ய

சட்டென அந்த தீ பந்தம் வெளிச்சம் வரும் திசையைப் பார்த்தவனோ அவள் செய்கையால் என்ன சொல்கிறாள் என்பதை மறந்து போனவனாக அந்த தீ ஜுவாலையின் வெளிச்சத்தில் அவள் கண்ணில் மின்னி மறையும் ஒளியைப் பார்த்தவனோ இவள் என்ன வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த தேவதையோ என அவன் அவள் விழிகளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்துப் போய் அவன் இருக்க

அவன் எங்கும் நகராமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளோ வேறு எங்காவது ஓடிப் போ என்று இதுவரை தன் செய்கையால் சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றி இங்கே என்னிடம் வா என்று அவள் அழைத்துத் தன் கையிலிருந்த தீ பந்தத்தை அவள் சற்று வேகமாக ஆட்டவும் அதில் தன் நிலை கலைந்தவனோ அவள் தன்னிடம் இங்கே வா என்று சைகையால் அழைப்பதை மட்டும் உணர்ந்து “ஹூ இஸ் திஸ் ஏஞ்சல்?” என்று வாய் விட்டு கேட்ட படி அவளிடம் அவன் நெருங்க

தன் முகத்திலிருந்த துணியின் வாய் பகுதியை மட்டும் ஒதுக்கி

“ஏய் ஏய்.. கொஞ்சம் விரசா வா” என்று கத்தியவளோ அவன் நெருங்கியதும் “என்ன மனுஷன் யா நீ? நல்லா மெத்த படிச்சிட்டு வெளிநாட்டுல இருந்து நீ வந்திருக்கறதால எங்க மொழி புரியாதுனு தான செய்கையிலேயே தூர போனு சொல்லுறன்? நீ என்னனா அப்பவும் மரம் மாதிரி நிக்கற!” என்றவள் அவள் மூட்டிய தீயால் தேனீக்கள் பறக்க ஆரம்பிக்கவும்

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காடு மேடு எல்லாம் ஓடியவளோ அவனுக்கு ஒரு இடத்தில் மரக்கிளை தட்டி விட அதில் கீழே விழுந்தவனோ கூடவே சேர்ந்து அவளையும் இழுத்துக் கொண்டு உருள, பிறகு யானையைப் பிடிப்பதற்காக வெட்டி வைத்த அகழியில் தான் இருவரும் சேர்ந்து போய் விழுந்தனர். விழுந்தும் அவள் கையை அவன் விடாமல் பிடித்திருக்கவும் தன் கையை அவன் பிடியிலிருந்து உதறியவளோ

“ஓஹோனானா.. நீ நான் வளர்க்குற செவ்வந்தி (பசு மாடு) கணக்கா நல்லா வெள்ளையா இருக்கியே எங்க அந்த தேனீக்கள் போடுற ஓட்டையில உன் உடம்புக்கு ஏதாவது வந்து நீ கஷ்டப் படப் போறனு இழுத்துட்டு வந்தா என் கையையா புடிக்கற?” என்று எழுந்து நின்று இவள் எகிறவும் இதுவரை அவளை ஒரு தேவதை என நினைத்து இருந்தவனோ இப்போது அவள் குரலில் இவள் தான் முதல் நாள் அன்று மாட்டுக் கொம்புகளுக்கு இடையில் பார்த்த விழிகளுக்குச் சொந்தக்காரி என்று உணர்ந்தவனோ அவள் முகத்தை முழுசாக பார்க்கும் ஆவலில் அவள் முகத்தையே மறுபடியும் மெய்மறந்து பார்த்திருக்க

“என்னையா உன் கிட்ட இதே ரோதனையா போகுது! எப்போ பாரு இப்படியே பார்த்து நிக்கற?” என்றவள் “ஆமா.. உன் கையிலிருந்த பொட்டி எங்க?” என்று கேட்டவள் “சரி சரி.. இங்க தான் எங்கனா காட்டுல இருக்கும். நான் நாளைக்குத் தேடித் தரேன்” என்று பதிலும் அவளே சொல்ல, ஆனால் அதையெல்லாம் அவன் உணரும் தருவாயிலோ இல்லை தன் காமராவைக் காணோம் என்று தேடும் தருவாயிலோ தான் அவன் இல்லையே!

பிறகு மேல எப்படி ஏறுவது என்று பல வழிகளைத் தேடிப் பார்த்தவள் எதுவும் கிடைக்காமல் போக அந்த பள்ளத்தின் விளிம்பில் ஒட்டினார் போல் ஒரு தடித்த மரக்கிளை ஒன்று தாழ்ந்து போய் இருக்க பள்ளத்திலிருந்து எகிறி இரண்டு மூன்று முறை அதைத் தொட நினைத்தவள் அது முடியாமல் போகவும் சோர்ந்து போய் அவனிடம் திரும்பியவள்

“என்னால எகிற முடியல. நீ எட்டி அந்த கிளையைக் கொஞ்சம் இழுத்தா நாம அதையே புடிச்சி சுலபமா ஏறி மேலே போய்டலாம்” என்று இவள் சொல்ல அவனுக்கே ஆச்சரியம் தான். பிறந்ததில் இருந்து தமிழ் மொழியே அறியாதவன் இப்போது தான் இரண்டு மூன்று வருடங்களாக சூர்யாவிடம் பழகி அவன் பேசும் தமிழைத் தான் அதிலும் செய்கையில் சொல்லிக் காட்டும் தமிழைத் தான் என்னவென்று உணர்ந்து இருக்கிறான். இன்று இவளும் அவனைப் போல் செய்கையால் சொல்வதைப் பார்த்து அவளை மெச்சியவனோ அவள் சொன்னபடி எட்டியும் அவன் உயரத்துக்குமே அந்த கிளையைப் பற்ற முடியவில்லை.

பிறகு சுற்றும் முற்றும் பார்த்தவனோ எதுவும் கிடைக்காமல் போக உடனே ஒரு யோசனை தோன்ற தன் வலது கால் முட்டி மண்ணில் பட மடித்து வைத்தவனோ பின் தன் இடது கால் பாதமோ மண்ணில் புதைய அமர்ந்தவனோ அவளை தன் தொடை மீது ஏறி நின்று அந்த கிளையைப் பற்றச் சொல்லி செய்கையால் அவளிடம் சொல்ல

அவன் சொன்னதை உணர்ந்தவளோ தன் விழிகளை அகல விரித்துப் பேய் முழி முழிக்க அகழி போல் விரியும் அவள் விழிகளில் விழுந்தவனோ தன் கண்ணாலேயே ஏறு என்று சொல்ல, இவன் சொன்னதை வேறு யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் அடித்து உதைத்து துவம்சம் பண்ணி இருப்பாள் குழலி. சொன்னது ஏ. கே என்பதாலும் அவனின் நோக்கம் வேறு என்பதாலும் இருட்டி விட்டதால் இங்கிருந்து தப்பிப் போனால் போதும் என்று நினைத்தவள் அவன் சொன்ன மாதிரியே அவன் தொடையில் கால் வைத்து ஏற அப்போதும் அந்த குள்ளச்சிக்கு அந்த கிளை எட்டவில்லை.

அதை கீழிருந்து அறிந்தவனோ அவளின் அனுமதி கேட்காமலே சற்றென அவளை இறுக்கிப் பிடித்த படி எழுந்தவனோ அவளைத் தன் நெஞ்சுக்கு மேலே தூக்கி இருக்க அதில் விதிர்விதிர்த்தவளோ மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த கிளையைப் பற்றி ஏறியவள் பின் தன் கால்களை அந்தரத்தில் தொங்க விட்ட படி அவள் சரிய இருக்கவும் உடனே அவளிடம் நெருங்கி அவள் வலது பாதத்தை எடுத்து தன் தோளில் வைத்தவனோ ம் மேலே ஏறு என்று சைகை செய்ய சட்டன ஏறி மேலே வந்தாள் குழலி.

ஏறியவள் ஓடிச் சென்று ஒரு கோவில் மரத்தில் கட்டியிருந்த இரண்டு புடவைகளை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்து வந்தவள் அதில் ஒரு முனையை மரத்தில் கட்டி விட்டு மற்றொரு முனையை அவனுக்குக் கீழே போட அதை அவன் பற்றி ஏறி வரவும் அவன் வலு ஏறிய கைகளையே பார்த்தவள்

“பார்க்க தான் யா நீ மண் புழு கனக்கா இருக்க. ஆனா உள்ள என்னமோ சும்மா எங்க ஊர் ஐயனார் கனக்கா இருக்கையா!” என்று அவள் வியக்க

“ஐயனார்!” என்று அவன் புருவம் உயர்த்த

“அது.. பெரிய கண்ணு, கையில அருவா, பெரிய மீசை” என்று செய்கையில் செய்தவள் அந்த மீசை என்னும் போது மட்டும் அவன் உதட்டின் மேலே தொட்டுக் காட்டி தன் விரல்களால் அவனுக்கு மீசை போல் வரைந்து காட்ட அவனுக்கு அப்போதும் புரியவில்லை

“சரி வா” என்றவள் ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டுத் தன் குடிசைக்கு வந்தாள் குழலி. இதுவரையுமே அவள் தன் தலையிலும் முகத்திலும் கட்டியிருந்த துணியை விலக்கவே இல்லை.

தன் இருப்பிடம் வந்த ஏ.கே பிறகு தன் நண்பனைத் தூங்க விடாமல் ஐயனார் யார் என்று கேட்டு கூகுளில் தேடித் தெரிந்து கொண்டது வேறு விஷயம்.

அதே மாதிரி இன்னோர் முறை பகலில் அவன் கேமரா லென்ஸ் மூலம் இயற்கையைப் பார்த்து ரசித்து கருவேலங்காட்டின் வழியாக வர, அப்போது குழலியோ அங்கிருந்த சீமக் கருவேல மரத்தை வெட்டிக் கொண்டிருக்க அதைப் பின்புறமாக இருந்து தன் கேமராவில் பார்த்தவனோ யாரோ என்று அசட்டையாக கேமராவை விளக்கும் நேரம் கருங்குழலியோ முகத்தைத் திருப்ப அப்போது அவன் கேமராவில் விழுந்தது அவள் விழிகளே! அதைக் குளோசப்பில் பார்த்தவனோ பின் முழுமையாக அவள் முகத்தை சூம் செய்து இவன் பார்க்க அவனுக்குக் கிடைத்ததோ கிரகண நேரத்தில் அவன் பார்த்து ரசித்த கருப்புச் சூரியனை ஒத்த வட்ட முகம்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN