காதல்பனி 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கருங்குழலியின் முகத்தை அந்தக் கருவேலங்காட்டில் தூர இருந்து பார்த்து ஒரு நொடி ரசித்தவன் பின் அவளருகில் சென்று அவளின் பின்புறம் நின்று

“ஹாய் பிளாக்பெர்ரி ஃபுரூட்!” என்றழைக்க

அவன் அழைத்த வார்த்தை என்னவென்று தெரியவில்லை என்றாலும் அவன் குரலில் திரும்பியவள் அங்கே ஏ.கே வைப் பார்த்ததும் கண்கள் இடுக்க யோசித்தவள்

“ஓ… நீயா?” என்றவள் அவன் கையிலுள்ள கேமராவைப் பார்த்து விட்டு “என்ன உன் பட பொட்டி உனக்குத் திரும்ப கெடைச்சிடுச்சா? நான் மறுநாள் போய் தேடிப் பார்த்தேன் அங்க இல்ல. ஆனா அது உனக்குக் கெடைச்சிடுச்சி போல” என்று அவள் சொல்ல

அவள் ஏதோ கேட்கிறாள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன என்பது புரியாததால் அவன் என்ன என்பது போல் செய்கையால் கேட்க

“இது அன்னைக்குத் தொலைந்து போன பொட்டி தான?” என்று அவளும் தன் கண்ணில் கட்டை மற்றும் ஆள்காட்டி விரலையும் கோர்த்து வைத்தார் போல் வட்டம் இட்டு காட்டிச் செய்கையால் கேட்கவும், இப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தவனோ

“நோ நோ.. இட்ஸ் நாட் தட்” என்று சொல்ல

“அப்போ இல்லையா? அது கிடைக்கலையா?” என்றவள் அவன் கேட்காமலே “எனக்கு எப்படி நோ தெரியும்னு பார்க்கறியா? எங்க வீரபாண்டி ஐயா தெரியுமா உனக்கு? அவரு எப்போதும் காதுல ஒன்ன வச்சிகிட்டு எஸ் நோனு பேசுவாரு. நான் அப்படினா என்னனு கேட்டனா அப்போ தான் சொன்னாரு எஸ் னா ஆமாவாம் நோ னா இல்லையாம். அப்போ நீ சொன்ன நோவும் அதான?” என்று கேட்க

இப்போதும் அவள் கேட்பது புரியவில்லை என்றாலும் அவளிடம் பேசிக் கொண்டிருப்பதே அலாதி சந்தோஷத்தை அவனுக்குக் கொடுக்க ம்ம்ம்… என்று தலையாட்டினான் அவன்.

“சரி சரி கவலப் படாத.. இங்க தான் எங்கனா இருக்கும். நான் உன் பெட்டிய தேடித் தரேன்” என்றவள் திரும்பி தான் வெட்டும் வேலையைச் செய்ய, அவனோ இமியும் நகராமல் அங்கேயே இருக்க அதை உணர்ந்தவளோ அவனைத் திட்ட நினைத்து அவனிடம் திரும்ப

அதே நேரம் அவன் கைப்பேசியில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசி முடித்தவனோ சற்றுத் தள்ளியிருந்த கல் மேட்டில் அமர்ந்து குழலியை உச்சி முதல் பாதம் வரை ஆராய அவன் வளர்ந்த நாட்டில் இருந்த பெண்களுக்கும் இவளுக்கும் உள்ள வேற்றுமையை ஆராயத் தோன்றியது அவனுக்குள்.

“டேய் ஏ.கே! நீ எங்க இருக்கனு உன் கிட்ட வழி கேட்டா ஒழுங்கா வழி சொல்ல மாட்டியா டா? நாம போகற இடத்துல எல்லாம் ஒரு மார்க் வைப்போமே அதை எல்லாம் பார்த்து வானு சொன்னியே அதுல ஈஸ்ட் இல்ல வெஸ்ட் டைரக்க்ஷனானு சொன்னியா டா? நான் வேற பக்கமா போய்ட்டுத் திரும்ப இந்த பக்கமா வந்தேன். இதெல்லாம் எனக்குத் தேவையா? இருடா ரெண்டு பேரும் ஒன்னா போகலாம்னு நான் சொன்னதக் கேட்காம நீ வந்துட்டு இப்போ என்ன சுத்த விட்டுட்டியேடா? இதுல உனக்குக் கால் பண்ணா இந்தக் காட்டுக்குள்ள டவர் வேற இல்ல காலும் போகல!”

என்று சூர்யா கேட்டு கொண்டே நண்பனிடம் வந்தவன் சுற்றி வந்த அசதியிலும் கடுப்பிலும் அவனைப் பார்த்த உடனே தமிழிலேயே அவனைத் தாளித்து எடுக்க, ஆனால் ஏ.கே விடமோ எந்தச் சலனமும் இல்லை.

நண்பனை நிமிர்ந்து பார்த்தவனோ பின் அவன் பார்வை பதிந்திருக்கும் திசையைப் பார்க்க அங்கு குழிலியைக் கண்டவனோ பின் நண்பனின் முகத்தைப் பார்த்து விட்டு

‘ஐய்யையோ! இந்த ஊரை விட்டுப் போறதுக்குள்ள இவன் நம்ம தோலை ஊர்ல இருக்கவங்க எல்லாம் உறிச்சி உப்புக் கண்டம் போட வச்சிடுவான் போல’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவனோ அதைத் தவிர்த்து

“என்ன டா ஏ கே! ஏதோ புதுவிதமான இடம் தெரிஞ்சிருக்கு. நான் அங்க போய் போட்டோ எடுக்கப்போறனு வந்துட்டு இப்போ இங்க எங்கயோ உட்கார்ந்து இருக்க!” என்று சூர்யா தன் நண்பனைக் கேட்க, அவனிடமோ குழலியை விட்டுவிட்டு நண்பனைப் பார்த்ததுக்கான சிறு சலனம் மட்டுமே.

‘ம்ஊம்.. இவன் நாம நெனைச்சத நடத்திக் காட்டாம விட மாட்டானு நெனைக்கிறேன்’ என்று யோசித்தவன்

“டேய் எழுந்திருடா இங்கயிருந்து. இது என்ன உங்க நாடுனு நெனச்சியா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆங்கிலத்தில் சொன்னவன் கூடவே அவன் கையைப் பிடித்து இழுக்க

அந்த இடத்தை விட்டுப் போக மனமே இல்லாமல் கல்மேடையை விட்டு எழுந்தவனோ நண்பனுடன் ஓர் அடி எடுத்து வைக்க

“ஏ.கே நீ ஒன்னும் கவலப் படாத.. உன் பொட்டிய தேடிக் கண்டுபிச்சி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. வேற யார் னா அந்தப் பொருளை எடுத்திருந்தாலும் அது என் கிட்ட வந்து சேர்ந்திடும். அதனால நீ கவலப் படாம போ ஏ.கே” என்று குழலி சும்மா போறவனை அழைத்துச் சொல்ல

அவள் சொன்னது புரியவில்லை என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை அவள் சொன்ன ஏ.கேவில் குளிர்ந்தவனோ கண்ணில் ஒரு வித மின்னலுடன் அவளைப் பார்த்து நிற்க, அவள் அப்படி அழைத்ததில் அதிர்ச்சிக்கு உள்ளானது என்னமோ சூர்யா தான்!

‘அடப்பாவி! நீ மட்டும் தான் ஏதோ அந்தப் பொண்ணுக்குத் தெரியாம சைட் அடிக்கறனு பார்த்தா அந்தப் பொண்ணு என்னமோ ஏற்கனவே உன்ன தெரிஞ்சவ மாதிரி உன்ன பெயர் சொல்லி என்ன அழகா கூப்பிடுது! இதுல இவன் உள்குத்துப் பார்வ தெரியாம சும்மா போறவனக் கூப்பிட்டு வச்சி சொறிஞ்சி வேற விடுதே! அப்போ நாம நினைச்ச மாதிரி உப்புக் கண்டம் எல்லாம் இல்ல நேரா சங்கு தான் போல!’ என்று நினைத்தவன் அது எதையும் வெளியே சொல்லாமல்

“இருக்கட்டும் இருக்கட்டும்.. அதை நீங்க மெதுவாவே தேடிக் குடுங்க” என்று நண்பனிடம் சொன்னதற்கு இவன் அவளுக்குப் பதில் கொடுத்தவனோ அவனைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துச் சென்றான் சூர்யா.

ஏ.கேவை விட இரண்டு வயது தான் பெரியவனாக இருப்பதால் அன்றிலிருந்து நண்பனின் நடவடிக்கைகளை ஆராயா ஆரம்பித்தான் சூர்யா.

ஏ.கேவோ எப்போதும் போல் அவன் அவனாக இருக்க குழலியைப் பார்க்கும் போது மட்டும் அவன் முகத்தில் தோன்றும் கனிவும் கண்ணில் சுவாரசியம் தவிர வேறு விதமான அத்துமீறும் பார்வையோ பார்வைப் பரிமாற்றங்களோ இல்லை. ஏன்? அவளைப் பார்க்க நேர்ந்தால் அவளிடம் பேசக் கூட அவன் சுவாரசியம் காட்டவில்லை. நண்பனின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்தவன் தாங்கள் அமெரிக்காவுக்கே திரும்பப் போய்விடலாம் என்று நண்பனுக்குத் தெரியாமல் எடுத்த முடிவை மாற்றியிருந்தான் சூர்யா.

அப்படி மட்டும் அவன் முடிவில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தியும் இருந்தால் பிறகு நடக்கவிருக்கும் சம்பவத்தைத் தடுத்து இருக்கலாமோ?! ஆனால் விதி வலியது இல்லையா? என்ன தான் மனிதன் தன் ஏழ்மையின் பயத்தையும் அவமானத்தையும் எதிர்த்து நின்று போராடி விதியை மதியால் வென்று வெற்றி கண்டாலும் அந்த விதி தர இருக்கும் அசிங்க அவமானங்களையும் மனதால் வரக்கூடிய வலியும் வேதனைகளையும் முன்கூட்டியே அறிந்து இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படித்தான் அமெரிக்காவில் பிறந்த ஏ.கே வின் வாழ்விலும் இங்கு காட்டில் பிறந்த கருங்குழிலியின் வாழ்விலும் விதி தன் கடமையைச் செய்ய வருகிறது.

பிறந்து இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தன் பிறந்த நாளைக் குழலி கொண்டாடியதே கிடையாது. அந்த நாள் அவள் தாய் தந்தையர் மரணித்த நாள் என்பதால் அதிக அக்கறை காட்டி அவர்கள் நினைவாக அழுவதோ இல்லை தன் பிறந்த தினத்தில் ஏதாவது தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ மாட்டாள். அன்றைய நாளும் எப்போதும் வரும் மற்றைய நாளைப் போல தான் அவளுக்கு.

ஆனால் இப்போது மாமன் என அவள் வாழ்வில் வந்திருக்கும் செங்கோடன் அப்படி நினைக்கவில்லையே! தன் எதிர்கால மனைவியாய் வரவிருக்கும் குழலிக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சூர்யாவின் உதவியுடன் சற்று அதிக விலை உயர்ந்த நெயில்பாலிஷ், மேக்கப் செட், தலைக்குப் போடும் ஹேர் பேண்ட் கிளிப் என்று வாங்கியவன்

கூடவே அவளுக்கு ஒரு நல்ல பாவாடை தாவணியும் வாங்கி இவை அனைத்தையும் ஒரு மஞ்சள் பையில் வைத்து அடைத்தவன் பிறந்த நாளுக்கு முதல் நாளே அவளிடம் ‘உன் பிறந்த நாள் பரிசு’ என்று சொல்லி அவளிடம் நீட்ட ‘எனக்கு எதுவும் வேணாம்’ என்ற பதிலுடன் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் விலகிச் சென்று விட்டாள் குழலி.

அவள் செயலில் உன்னை விடுவேனா என்று மனதில் நினைத்தவனோ அதை எல்லாம் அவள் பாட்டியிடம் கொடுத்து அவளை இதை அனைத்தையும் போட வைப்பது உன் பொறுப்பு என்று உத்தரவு இட, அவளை எப்படிப் போட வைப்பது என்று தெரியாமல் கலங்கியவர் பின் வீரபாண்டி ஐயாவிடம் கொடுத்து அதை எல்லாம் அவர் வாங்கிக் கொடுப்பது போல் அவளிடம் கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள குழலிக்காக அவரும் அப்படியே செய்தார்.

செங்கோடனின் பிறந்த நாள் பரிசோ இப்போது வீரபாண்டி ஐயா தருகிற பிறந்த நாள் பரிசாக அவள் கையில் வந்து சேர்ந்தே விட்டது. அவள் நினைத்தது எல்லாம் செங்கோடன் ஒதுங்கி விட்டான் என்பதும் தன் பாட்டியும் இப்படி எல்லாம் செய்யக் கூடியவர் அல்ல என்பதும் தான்.

ஏற்கனவே சூர்யா செங்கோடனும் குழலியும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாகவும் ஏ.கே விடம் சொல்ல சற்றே நெற்றி சுருக்கி யோசித்ததை விட அவனிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை.

அதைப் பார்த்தவனோ ‘பயபுள்ள தெளிவாத் தான் இருக்கான். நாம தான் இவனத் தப்பா நெனச்சி பல சோதனைகளை வச்சிப் பார்க்கறோமோ?’ என்று மனதால் கேள்வி கேட்டுக் கொண்டா னே தவிர ஒரு முறை கூட ‘நீ குழலியை விரும்புறியாடா?’ என்ற கேள்வியை ஏ.கே விடம் கேட்கவில்லை சூர்யா.

அப்படி ஓர் எண்ணமே இல்லாதவனை நாம் கேட்டுப் பிறகு நாமே அதை அவன் மனதில் விதைத்ததாய் ஆகக் கூடாது என்று நினைத்தான் அவன்.

குழலியின் பிறந்த நாள் அன்று வீரபாண்டி ஐயா வீட்டுக்கு சூர்யாவும் ஏ.கேவும் வர அன்று செங்கோடன் வாங்கிக் கொடுத்த தாவணியை குழலி அணிந்திருப்பதைப் பார்த்த சூர்யாவோ செங்கோடன் மேல் குழலிக்கும் காதல் இருப்பதாகவே நினைத்தான்.

அன்று தங்களுடன் வந்து செங்கோடன் வாங்கிய ஆடையை இன்று குழலி போட்டிருக்கவும் ஒருவித கேள்வியுடன் ஏ.கே அவளைப் பார்க்க அவன் பார்வையின் கேள்வியை உணர்ந்த சூர்யாவோ

“இன்னைக்குக் குழலிக்குப் பிறந்த நாளாம். அதான் அவன் மாமன் வாங்கிக் கொடுத்ததைப் போட்டுகிட்டு இருக்கா” என்று சூர்யா ஏ.கேவின் காதில் சொல்ல அவளுக்கு அழகான வாழ்த்துச் சொன்னதோடு விடை பெற்றனர் இருவரும்.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மதயானை ஒன்று அவள் பாட்டியைத் தூக்கிப் போட்டு விட அதில் குற்றுயிராய் இருந்தவர் தன் கடைசி நேர வேண்டுகோளாக வீரபாண்டி ஐயாவை அழைத்துத் தனக்குப் பின் தன் பேத்தி வாழ்வில் ஒரு துணை இருக்க வேண்டும் என்றவர் அதற்கு செங்கோடனையே திருமணம் செய்து வைக்கச் சொன்னவர் பிறகு குழலி கையையும் செங்கோடன் கையையும் பிடித்து வீரபாண்டி ஐயாவிடம் சேர்க்க அதே நேரம் அவர் உடலை விட்டு அவர் உயிர் பிரிந்தது.பாட்டி இறந்ததில் ரொம்பவே மாறிப் போனாள் குழலி. அவளுடைய துருதுரு வாயாடித்தனம் எல்லாம் இல்லாமல் போனது. யாரிடமும் அதிகம் பேசுவதையே தவிர்த்தாள். பிறந்ததில் இருந்து தனக்கு தாய் தந்தையர் இல்லாதது கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்போது ஆத்தா என்று அழைக்க பாட்டி இருந்தார்.

இப்போது அவரும் இல்லாமல் போகவும் நிஜமாவே தான் அநாதை ஆகிவிட்டோம் என்பதை உணர்ந்தவளால் எதிலும் ஒரு பற்றுதல் இல்லாமல் போனது அந்த பதினைந்து வயது சிறு குழந்தையான கருங்குழலிக்கு. அவளின் நடவடிக்கைகளை நாளுக்கு நாள் பார்த்து வந்த செங்கோடனோ ஒரு நாள் அவளிடம் வந்து அருகில் அமர்ந்தவன்

“ஏன் புள்ள நீ இப்போ எல்லாம் ஏதோ மாதிரி இருக்க? எனக்கு உன் கிட்ட பிடிச்சதே உன் துருதுருப்பு தான். அதனால தான் நான் அடிக்கடி உன் கிட்ட வம்பு பண்ணுவேன். நீ இப்படி இருக்கறத பார்க்கும் போது உன்ன தனியா விடவும் எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் என் ஆத்தா கிட்ட சொல்லி சீக்கிரமே நம்ம கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லிடறன்.

மரம் வெட்டவோ வேற எந்த வம்பு தும்புக்கும் இனி நான் போக மாட்டேன் புள்ள. நீ சொல்ற மாதிரி எல்லாம் நான் இருக்கேன்” என்றவன் ஒருவித உறுதியுடனேயே அவள் முகம் பார்க்க அவளோ அவன் சொன்னதையெல்லாம் காதில் வாங்கினாலும் அதை விடுத்து கண்ணிமைக்கவும் மறந்து எங்கோ வெறித்த படி இருந்தாள். சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்தவனோ

“நான் இன்னைக்கே வீரபாண்டி ஐயா கிட்ட பேசுறன்” என்ற சொல்லுடன் விலகிச் சென்றவனோ சொன்னபடியே அவரிடம் பேசி இரண்டு தினங்களில் எல்லாம் அவளுக்குப் பரிசம் போடும் அளவுக்கு வந்திருக்க.

அதே போல் அவளிடம் சொன்ன மாதிரியே எந்த வம்பு தும்புக்கும் போவதை நிறுத்தி இருக்க. இனிமேல் தன் வாழ்வுக்குக் குழலி தான் எல்லாம் என்ற முடிவுக்கே வந்திருந்தான் அவன்.

பரிசம் விஷயத்திலும் குழலி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவளுக்கு இன்றும் செங்கோடனை பிடிக்கவில்லை தான். ஆனால் இறக்கும் போது தன் பாட்டி சொன்ன வார்த்தையும் அதன் பிறகு அவனுடைய பேச்சும் என்று இன்று தான் இருக்கும் நிலையை எண்ணி அரை மனதாக ஒத்துக் கொண்டாள். அதேபோல் அவள் இருந்த மனநிலையில் செங்கோடன் ஆத்தா கேட்ட சீர் எல்லாம் அவளிடம் மறைக்கப்பட்டது.

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் முன்பு போல் இல்லை என்றாலும் ஏதோ சகஜ நிலையில் இருந்தாள் குழலி. ஒருநாள் அவள் இனத்தில் ஒரு பெண் பெரிய மனுஷியாகி விட அந்த ஊரில் இருக்கும் மற்ற வயசுப் பெண்கள் எல்லாம் அந்த பெண்ணின் சடங்குக்கு குலவி பாடி ஆட வேண்டும். அதில் அவர்கள் இனம் மாதிரியே ஆடை உடுத்தி பாடி ஆடியவள் பின் ஆட்டம் பாட்டம் முடிந்து காட்டு வழியே வர

“என்ன டி உன் மாமன் அநியாயத்துக்கு நல்லவன் மாதிரி வேஷம் போடுறான்? இத்தனை நாள் மரம் வெட்டினவ தான டி? இப்போ என்னமோ அது அரசாங்கத்துக்கு எதிரானது நான் செய்ய மாட்டனு வீம்பு புடிக்கறான். சும்மா தட்டிக் கொடுத்து நைசா என்னடா ஏதுனு கேட்டா நான் கட்டிக்கப் போற பொண்ணுக்குப் புடிக்காது அதனால நான் செய்ய மாட்டன் எனக்கு இப்போ கல்யாணம் ஆகப் போகுதுனு வேற சொல்றான்.

என்ன டி நீயும் உன் மாமனும் சேர்ந்து என்னோட வருமானத்துக்கு வேட்டு வெக்கிறிங்களா? ஒழுங்கா அவன பழைய மாதிரி வந்து மரம் வெட்டிக் கொடுக்கச் சொல்லு. இல்லனா திருந்தின அவன் மேல பழைய கேசை எதையாவது போட்டு உள்ள தள்ளிடுவேன். என்ன? சொல்லுறது புரிஞ்சிதா? இதையும் போய் சொல்லு டி உன் மாமன் கிட்ட” என்று அந்த வனத்துறை அதிகாரி குழலியை வழிமறித்து மிரட்ட

அவன் பேசியதில் முதலில் அவளுக்குத் தோன்றியது ‘அப்போ மாமா உண்மையாவே திருந்திடுச்சா?’ என்பது தான்

அந்த ஊர் அரசியல் வாதியின் தூண்டுதல் பேரிலும் இதோ இந்த வனத்துறை அதிகாரியின் உதவியோடு தான் செங்கோடன் இப்படி செய்து வந்தான். திடீரென்று செங்கோடன் நிறுத்தவோ இவனுக்கு அரசியல்வாதியிடம் இருந்து வந்த பணவரவு நின்று போகவே தான் இவன் இப்படி குழலியை மிரட்டியது. அவன் வார்த்தைக்கு வார்த்தை டி போட்டுப் பேசியதில் உள்ளுக்குள் கொதித்தாலும் அதை மனதுக்குள்ளே வைத்தவள்

“அது எல்லாம் என் மாமா இனி மரம் வெட்ற வேலைக்கு வராது. மீறி சும்மா சும்மா மறுபடியும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிங்க இவ்வளவு நாள் செய்த தப்புக்குப் பரிகாரமா உங்கள எல்லாம் காட்டிக் கொடுத்துட்டு என் மாமா அப்ரூவலா மாறிடும் சொல்லிட்டேன். அப்படி பண்ணா யாருக்குத் தண்டனை அதிகம்னு உங்களுக்குத் தெரியும் இல்ல?” என்று அவனிடம் சட்டம் பேசியவள் எட்டி ஓர் அடி வைத்து முன்னே நடக்க அவள் கையைப் பிடித்தவனோ

“யார் கிட்ட டி சட்டம் பேசுற ? என்னையே மிரட்டுறியா?” என்றவன் அவளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்ய, அவனின் நோக்கம் புரிந்தவளோ அவன் அசந்த நேரம் பார்த்துக் கையைத் தட்டி விட்டு ஓட ஆரம்பிக்க அவளைத் தன் எண்ணம் நிறைவேறத் துரத்தியவன் இந்தக் காட்டிலே பிறந்து வளர்ந்த அவள் புள்ளி மானாய் சென்று எங்கோ மறையவும் அவளை எங்கு தேடியும் கிடைக்காததால்

அங்கு ஓரிடத்தில் மலைக் குவியலன இருந்த இலைச் சருகையும் காய்ந்த மரப் பட்டைகளையும் பார்த்தவனுக்குத் திடீர் என்று ஒன்று தோன்ற ஓடிச் சென்று தன் ஜீப்பில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்தவன் தனக்கிருந்த ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இயலாமையிலும் தான் என்ன செய்கிறோம் என்பதை ஒரு நொடி கூட யோசிக்காமல் அதிலிருந்த பெட்ரோல் முழுவதையும் அங்கு ஊற்றி நெருப்பைப் பற்ற வைக்க சற்று நேரத்தில் எல்லாம் மளமளவென பக்கத்து மரங்களுக்கும் பிடித்துக் கொண்ட நெருப்பானது காட்டுத் தீயாக உருவெடுத்தது.

இதை அறிந்த கருங்குழலியோ தன்னைச் சுற்றி தீ இருக்க தான் தப்பிச்செல்லும் இடத்தில் அந்த அதிகாரி நிற்கவும் வெளிவர முடியாமல் அமைதி காக்க, மறைந்திருக்கும் இவள் வெளிவரக் காத்திருந்தவனோ பின் வேறு வழியில் அவள் தப்பிச் சென்று விட்டாள் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து சென்று விட அதே நேரம் தான் கட்டியிருந்த புடவையில் தீ பிடித்ததைப் பார்த்துப் பயத்தில் அனிச்சை செயலால் தன் புடவையைக் கழற்றி வீச இப்போது தான் பிறந்த மேனியாய் நிற்பதை உணர்ந்தவளோ அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் குழலி.

‘இப்போது இப்படியே வெளியே தப்பித்துச் செல்லவும் முடியாது. காட்டுத் தீயை அறிந்து யாராவது காப்பாற்ற இங்கு வந்தால் அவர்கள் முன் இப்படியா போய் நிற்பது?’ என்ற எண்ணம் தான் அந்த உயிர் போகும் நேரத்திலும் வந்தது அவளுக்கு.

அதனால் தன் சதைகள் எரிந்து சாம்பலாக, தான் வெறும் எலும்புக் கூடாய் தான் வருகிறவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அங்கே நின்றாள் அவள்.

இப்படி ஒரு கோர மரணத்தை ஏற்றுக் கொள்ள அவள் திடமாக இருந்தாலும் எரியும் தீ ஜுவாலையின் அனலில் தன் சதைகள் மெழுகென உருகப் போவதை உணர்ந்தவளோ ஒருவித படபடப்பில் கண்கள் இருள தான் நின்றிருந்த இடத்திலேயே மயங்கி விழ.

அதே நேரம் தன் மகளின் நிலை அறிந்து தங்கள் கண்ணீரை வானத்தில் தூரலென சிந்தினர் அவள் தாய் தந்தையர். முதலில் தூரலாக விழுந்த மழை பிறகு பெரும் மழையாய் கொட்ட யாருடைய உதவியும் இல்லாமல் இயற்கையாகவே அணைக்கப் பட்டது அந்த காட்டுத் தீ.

தீ அணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு புகைப்படம் எடுப்பதற்காக சுற்றிக் கொண்டிருந்த ஏ.கே வின் கண்ணில் ஆடை இல்லாமல் படுத்திருக்கும் குழலி பட

முதலில் அவளுக்கு உயிர் இல்லையோ என்று பயந்தவன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் கழற்றி அவளுக்குப் போட்டு விட்டவன் அவள் பக்கத்தில் மண்டி இட்டு அமர்ந்து அவளைத் தூக்கித் தன் தோள் சாய்த்து அவள் கண்ணங்களைத் தட்டி எழுப்ப அவளிடம் எந்த அசைவும் இல்லை.

‘சாதாரண மயக்கம் என்றால் ஏன் இந்த பெரு மழை குளிர்ந்த நீரைக் குடம் கொண்டு அவள் முகத்தில் கொட்டியது போல் பெய்தும் அவள் தெளியவில்லை? ஒருவேளை சுற்றி நெருப்பைப் பார்த்த அதிர்ச்சியில் ரொம்பவே பயந்து விட்டாளோ?’ என்று அவளின் நிலையை யூகித்து அவளைத் தன் கையில் தூக்கிச் சென்று தூரமாக ஓர் வளைவில் இருந்த கல்மண்டபத்தை அடைந்தவனோ

அவளைத் தரையில் கிடத்திக் கை கால்களைத் தேய்த்து விட்டவன் பிறகு அவள் இரண்டு கன்னத்திலும் இரண்டு அடிகளைப் பலமாய் கொடுக்க அதிலும் பலன் இல்லை. அவளைப் பார்த்ததில் இருந்து இப்போது தூக்கி வந்து இதுவரை செய்யும் வரையுமே அவன் உதடுகளோ ‘குய்லி குய்லி’ என்று அவள் பெயரைத் தான் உச்சரித்தது.

இறுதியாக ஒரு முடிவுடன் அவள் முகத்தை எடுத்துத் தன் மார்பு மீது வைத்தவனோ ஒரே ஒரு வினாடி தயக்கத்துக்குப் பிறகு அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அவளுக்கு முதல் உதவி செய்ய அதில் கொஞ்சமே தெளிந்தவள் தான் அந்த வன அதிகாரியிடம் மாட்டிக் கொண்டமோ என்ற எண்ணத்தில் அவள் கையைக் காலை உதைத்துத் திமிர

மயக்கத்தில் இருந்து தெளியும் போது ஏற்படும் சாதாரண திமிரல் என்று நினைத்து அவளைச் சட்டென அடக்கியவனோ தன் மார்பில் அவள் முகத்தை அழுத்திப் பிடித்து கூடவே அவள் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைத்தவனோ அவள் காதில் தன் உதட்டை வைத்து

“குய்லி பிளீஸ்! பி காம்.. ரிலாக்ஸ்.. ஐ எம் ஏ.கே” என்று சொல்ல அந்த ஏ.கே என்ற ஒரு வார்த்தையே அவளுக்குப் போதுமானதாய் இருக்க சற்றே அடங்கி அவன் கையிலே தளர்ந்தவளோ பின் தான் மயங்கும் போது இருந்த நிலை ஞாபகம் வர நிமிர்ந்து தன்னை ஆராய்ந்தவள் தான் முழுமையாக இல்லை என்றாலும் அவன் போட்டிருந்த சட்டையைத் தான் அணிந்திருப்பதை உணர்ந்தவளோ எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாத ஒரு நிலை தனக்கு வந்து விட்டதை நினைத்தவளோ அவளையும் மீறி அவள் கண்ணில் கண்ணீர் வரவும் அதைப் பார்த்தவனோ அவளுக்கு உடலில் ஏதோ எங்கேயோ அடிபட்டு வலியோ என்று பதறி

“இஸ் இட் பெய்னிங்?” என்று அவன் கேட்க தன் மாமன் முதல் இன்று பார்த்த அதிகாரி வரை தான் பார்த்த ஆண்களில் இவன் வேறு விதமாய் தன்னிடம் விரசமின்றி இருப்பதை உணர்ந்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை. தன் முகத்தை அவன் நெஞ்சில் அழுந்த அவனை இறுக்கி அணைத்தாள் குழலி.

அவள் இன்னும் அந்த காட்டுத் தீயின் பயத்தால் தான் தன்னை அணைப்பதாக நினைத்தவன் அவள் நினைப்பது போல் தன் மனதில் அவளை அப்படியொரு கோலத்தில் பார்த்ததுக்கானதை கிஞ்சிதமும் நினைக்காமல் அவள் பயத்தைப் போக்க நினைத்தவனோ அவள் முகத்தை நிமிர்த்தி தன் தோள் வளைவில் வைத்தவனோ அதே போல் தன் முகத்தை அவள் தோளில் புதைய தன் பலம் கொண்ட மட்டும் அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான் ஏ.கே.

அதே நேரம் காட்டில் ஏற்பட்ட தீயைப் பார்த்த ஒருசில பேர் அதை அணைக்க ஊரில் இருந்தவர்களைத் திரட்டி அழைத்து வர அவர்கள் அனைவரின் கண்ணில் பட்டது என்னமோ அறைகுறை ஆடையில் கட்டிப் பிடித்த படி முகத்தோட முகம் வைத்த படி இருந்த ஏ.கேவும் குழலியும் தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN