காதல்பனி 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“ஐய்யோ! ஐயோ! அங்க என் புள்ளைய போலீஸ் புடிச்சிட்டுகிட்டுப் போய் அவன் ஜெயில்ல இருக்கான். ஒரு பக்கம் இங்க காடே பத்தி எரியுது. ஆனா இந்த கேடுகெட்ட சிறுக்கி மட்டும் இப்படி எவனோடவோ உல்லாசமா இருக்கா!” என்று கூடியிருந்த கூட்டத்தில் செங்கோடனின் தாய் குரல் ஆங்காரமாய் ஒலிக்க ஏ.கேவும் குழலியும் யார் என்ன ஏது என்று உணரும் முன்னே குழலியை நெருங்கித் தன் வலது காலைத் தூக்கி அவள் முதுகில் அவர் ஓர் உதை விட அதில் துடிதுடித்துப் போனவளை ஏ.கே அதிர்ச்சியுடன் பார்க்கும் போதே

“எத்தன நாளா இந்த கூத்து நடக்குது? எவ்ளோ நாள இவன் கூட பழக்கம் டி உனக்கு? நீ கெட்ட கேட்டுக்கு என் மகன விட இந்த வெள்ளைத் தோல்காரன் தான் உனக்கு வேணுமா? உன் ராங்கித்தனத்தால தான் நான் உன்ன வேணாம்னு சொன்னேன். என் மவன் கேட்டா தான? நீ தான் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னான். இதெல்லாம் பார்க்கவா அவன் உன்ன வேணும்னு கேட்டான்?” என்று மறுபடியும் நீட்டி முழங்கியவரோ அவள் கூந்தலைக் கொத்தெனப் பிடித்து இழுக்க

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த ஏ.கேவோ இப்போது இன்னும் இந்த செயலைப் பார்த்து சற்றும் யோசிக்காமல் செங்கோடனின் தாயின் கையைத் தட்டி விட, இவ்வளவு பேர் முன்னால் தான் தொடைக்குக் கீழே ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை அறிந்த குழலியோ தன் நிலையை மறைக்க ஏ.கே வின் பின்னால் ஒளிய முயல

“என்ன டி என்ன? உன்ன கையும் களவுமா புடிச்ச உடனே உன் தப்ப மறைக்க இப்ப அசிங்கப்பட்டு இவன் பின்னாடி ஓடி ஒளியிறியா இல்ல இவன் தான் வேணும்னு அவன் கூட ஒட்டிக்கிட்டு நிக்கிறியா? என் புள்ளைய விட இந்த வெள்ளத்தோல்காரன் தான் உனக்கு ஒசத்தியோ? இவன் வேற என் கையை தட்டிவிடறான். டேய் டேய்.. நீ யாருடா என் கையத் தட்டிவிட? அவ என் வீட்டு மருமக டா! என் புள்ளைக்கும் அவளுக்கும் பரிசம் போட்டாச்சு. பரிசம் போட்ட அன்னிலிருந்து இவ அவனோட பொண்டாட்டி ஆகிட்டா. நீ என்னடான்னா இவ கூட கூத்து அடிச்சிகிட்டு இருக்க. எத்தன நாளா உங்களுக்குள்ள இந்த பழக்கம்? நீ பண்ண காரியத்துக்கு இன்னைக்கு உன் சாவு என் கையில தான் டி!” என்றவர் அவள் கையைப் பிடித்து இழுக்கப் போகும் நேரம்

“என்ன ஆச்சி குழலி?” என்ற கேள்வியுடன் வந்து நின்றார் வீரபாண்டியும் அவர் மனைவியும். தான் இருக்கும் நிலை உணர்ந்து அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவளோ இன்னுமே ஏ.கேவின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கவும் அதைப் பார்த்தவரோ சற்றும் யோசிக்காமல் தான் கட்டியிருந்த வேட்டியைக் கழற்றி அவளிடம் நீட்டி

“இதைக் கட்டிக்கோ தாயி” என்று சொல்ல கண்ணில் கண்ணீருடன் வாங்கிக் கட்டிக் கொண்டாள் குழலி. பிறகு அங்கிருந்த அனைவரும் அவரவருக்குத் தோன்றிய கற்பனையைப் பார்த்தது போலவே எடுத்துச் சொல்ல செங்கோடனின் தாயோ ஒரு படி மேலே போய்

“இவ இவனோட பழகி இப்ப குழந்தையை வயித்துல வாங்கிட்டு அதை என் புள்ள தலையில கட்ட தான் இவ்வளவு நாள் வேணாம்னு சொன்ன கல்யாணத்துக்குச் சம்மதிச்சா போல!” என்று அவருடைய பங்குக்கு அவள் மேல் அசிங்கத்தை பூச , குழலியோ வாய் திறந்து ஒரு வார்த்தை கூட மறுப்புச் சொல்லவுமில்லை ஏன் குனிந்த தலையை நிமிர்த்தவும் இல்லை.

ஏ.கேவும் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாவிட்டாலும் தான் பிடித்த அவள் கையை விடவேயில்லை. குழலியும் அவன் கையை விலக நினைக்காமல் அவன் கைப் பிடியில் தான் இருந்தாள். இங்கு செங்கோடன் மட்டும் இருந்திருந்தால் ஏ.கே உயிருடனே இருந்திருக்க மாட்டானோ என்னவோ? ஆனால் ஊர்க்காரர்கள் வீரபாண்டி ஐயா சொல்லுக்குக் கட்டுபட்டு அமைதி காத்தனர். குழலியைப் பற்றியும் தெரியும் என்பதால் வீரபாண்டி ஐயா ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் நேரம்

“என்னமோ பெருசா என் பொண்ணு என் பொண்ணுனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவீங்களே? இப்போ உங்க வளர்ப்புப் பொண்ணு செஞ்சிருக்கிற காரியத்தப் பாருங்க! நான் எதச் சொன்னாலும் கேட்கறது இல்ல! இவள எல்லாம் வீட்டுக்குள்ள சேர்த்ததே அதிகம். இதுல உங்க பொண்ணா நெனச்சி செங்கோடன் அம்மா கேட்ட சீர்சனத்துக்கு ஒத்து கிட்டு நஞ்சை வாய்க்கா வரப்புனு எழுதி வெக்க இருந்திங்க இல்ல? அதுக்குத் தான் உங்களுக்கு இவ நல்ல மரியாதை செய்துட்டா.

ஒருவேளை இவ கேடுகெட்டத் தனத்தை மறைக்கத் தான் சீர்வரிசை வாங்கற பழக்கமே இல்லாத செங்கோடன் அம்மா கூட சீர்சனம் கேட்டா போல!” என்று அவர் மனைவி தன் பங்குக்கு குத்திக் காட்ட, செங்கோடனின் தாய் முகமோ அவமானத்தில் தொங்கி விட்டது. ஆனால் குழலிக்குத் தான் இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

அந்த நேரம் அங்கு வந்த சூர்யா என்ன நடந்தது என்று ஏ.கே விடம் ரகசியமாக கேட்க அங்கு நடந்ததை அவன் சொல்லவும் அதை அந்த ஊரார் முன் அவன் விளக்க நினைத்த நேரம்,

பிள்ளை இல்லாத தங்கள் சொத்துக்கு வாரிசாக தன் அண்ணன் அல்லது அக்கா பிள்ளைகளைத் தத்து எடுத்து அவர்களுக்கு சகலத்தையும் செய்வார் என்று மனக்கோட்டை கட்டியிருந்த வீரபாண்டி மனைவியின் எண்ணத்துக்கு எதிராக எங்கோயிருந்த மலைஜாதிப் பெண்ணான குழலிக்கு எல்லாம் செய்ய நினைக்கிறார் என்று இத்தனை நாள் மனதில் கருவிக் கொண்டிருந்தவரோ இன்னும் உன்னை விடுவேனா என்ற ஆத்திரத்தில்

“அதான் கையும் களவுமா புடிச்சாச்சி.. அவளும் வாயத் தொறக்காம இருக்கா.. அப்பறம் என்ன? உங்க சாதில நீங்க வழக்கமா குடுக்கிற தண்டனையான கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவள எந்த ஒட்டுறவும் இல்லாம ஊரை விட்டு ஒதுக்கி வைங்க” என்று வீரபாண்டி ஐயாவிடமிருந்து அவளைப் பிரிப்பதிலேயே அவர் மனைவி குறியாக இருக்க அதையும் அங்கிருந்த ஊர் மக்கள் வழி மொழியவும்


சூர்யாவுக்குத் தான் திக் என்று ஆனது. ஆனால் இப்போதும் குழலியோ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆளாளுக்குப் பேசவும் “இப்படி ஏதேதோ பேசினா எப்படி? இங்க என்ன நடந்ததுனு கண்ணால பார்த்தவங்கனு யாரும் இல்ல. ரெண்டு பேரும் ஒன்னா இருக்கறத வெச்சி வெறும் யூகத்துல தான் பேசுறிங்க. சம்மந்தப்பட்டவங்களும் வாயத் தொறக்கல. இந்த சூழ்நிலையில் நம்ம ஊர் வழக்கப் படி நம்ம முன்னோர்கள் செஞ்சதையே நானும் இங்க செய்றேன்” என்று வீரபாண்டி ஐயா முற்றுப்புள்ளி வைக்க இந்த வார்த்தையை அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.

சூர்யாவுக்கு அது என்னவென்று தெரியவில்லை என்றாலும் ஊருக்குக் கட்டுப்பட்டு அவனுமே அமைதி காத்தான். பிறகு குழலி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வந்து அவளைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அப்போதும் அவள் கையை விடாமல் இறுக்கப் பிடித்திருந்தான் ஏ.கே.

அவனுக்கு இங்கு நடந்த வாக்கு வாதங்கள் என்னவென்று தெரியவில்லை என்றாலும் இந்தக் காடு நெருப்புப் பற்ற குழலி தான் காரணம் என்பதால் தான் இந்த ஊர் மக்களும் அந்தப் பெண்மணியும் அவளைத் திட்டி அடிப்பதாக நினைத்தவன் அவளை அவர்களிடமிருந்து காப்பதாக நினைத்து அவள் கையை அவன் பிடித்திருக்க, குழலிக்குத் தான் இப்போது என்ன நடக்கப்போகிறது என்பது தெரியுமே! அதனால் அவனை ஏறிட்டவள் அவன் பிடியிலிருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுக்க விலகிச் செல்ல மனமே இல்லாமல் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சூர்யா இழுத்த இழுப்புக்கு விலகிச் சென்றான் ஏ.கே.

அந்த ஊர் காவல் தெய்வமான மலை மேல் கோவில் கொண்டிருக்கும் வனதேவதையான தன் தலையை ஒரு பக்கம் சாய்த்து நாக்கைத் துருத்திய படி உக்கிரப் பார்வையுடன் பல கைகளுடன் ஒரு காலை அரக்கன் மீது வைத்து அவனை வதம் செய்வது போல் ஏதோ உயிரோட்டமாக நேரிலே காட்சி தருவது போல் இருந்த மகாகாளி அம்மன் முன் எல்லோரும் கூடியிருக்க ஒரு ஓரமாக சூர்யாவும் ஏ.கேவும் இங்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

அந்தத் தாயின் முன்பிருந்த தீ குழியில் தீ கனன்று கொண்டிருக்க குழலிக்கு மேனி முழுக்க நீர் ஊற்றி அந்த நீர் சொட்டச் சொட்ட அந்த பூ குழியில் நிற்கச் சொல்ல எந்த வித தயக்கமும் இல்லாமல் நின்ற அவள் கையில் அந்த மகாகாளியின் ஒரு கையில் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் தீ சட்டியை குழலியின் கையில் கொடுத்து என்ன நடந்தது என்று அவள் பக்க நியாயத்தைச் சொல்லச் சொன்னார்கள்.

இது அந்த ஊர் வழக்கம் தான். கண்ணால் பார்க்காத எந்த ஓர் உண்மை தெரிய வேண்டும் என்றாலும் இப்படித் தான் செய்வார்கள். அப்படி யாரேனும் பொய் கூறினால் அவர்கள் கட்டியிருக்கும் ஈர ஆடையையும் மீறி உடலில் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதேபோல் அந்தத் தாயிடம் இருந்து தீ சட்டியைப் பொய் சொல்பவர்களாலும் தப்பு செய்பவர்களாலும் வாங்கவே முடியாது. வாழை மரப் பட்டையையே தாங்கள் ஆடையாகக் கட்டி வந்து அந்த பூ குழியில் நின்றாலும் பொய் சொல்பவர்கள் அந்தத் தாயின் தண்டனையில் இருந்து மீள முடியாது என்பது அவர்களின் நம்பிக்கை.

இப்போது குழிலியை அங்கு நிற்க வைத்து இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லாத அவளைச் சொல்லச் சொல்ல அவளிடமிருந்து உடனே வந்த பதில்

“இந்தத் தாய் மீது ஆணையாக எங்களுக்குள் தப்பு நடந்தது உண்மை தான்!” என்ற வார்த்தை தான். அவள் சொன்னது ஆணித்தரமாக அந்த மலை முகடு எங்கும் கேட்கும் படி ஓங்கி ஒலிக்கவும் வீரபாண்டி ஐயாவே ஒரு வினாடி ஸ்தம்பித்துத் தான் போனார்.

முதலில் இது என்ன மாதிரி பழக்க வழக்கம் என்று சூர்யா கோபப்பட்டாலும் பிறகு அவர்கள் வழக்கம் என்று விட்டு விட்டவன் இப்போது குழலி சொன்ன இப்படி ஒரு பொய்யில் மிகவும் ஆடித் தான் போனான் அவன்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லாமலே வெறும் பார்வையாளனாக நிற்க வைக்கப் பட்டிருந்தான் ஏ.கே. குழலி சொன்ன வார்த்தையில் முதலில் கலைந்தது வீரபாண்டி ஐயா மனைவி தான்.

“நான் தான் அப்பவே சொன்னனே! இவ வாய்க்கும் திமிருக்கும் இவ இப்படி எல்லாம் செய்றவ தானு.. நீங்க எங்க கேட்டிங்க? அது என்ன இப்போ தப்பு நடந்திடுச்சினு மழுப்புற? நாங்க கையும் களவுமா புடிச்சதால ஆச்சி.. இல்லனா இந்த உண்மைய மறைச்சி செங்கோடன தான கட்டியிருப்ப?” என்று இப்போது அவர் குழலியே ஒத்துக்கொண்டாள் என்பதால் எகத்தாளமாகப் பேச.

குழலி பூ குழியிலிருந்து இறங்கிய மறு நிமிடம் அவளை இழுத்து நாலு அரை அறைய சுருண்டு போய் கீழே விழுந்தவளைத் தன் பலம் கொண்ட மட்டும் அவள் நெஞ்சிலும் மார்பிலும் வயிற்றிலும் உதைத்த செங்கோடனின் தாய்

“உனக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா இத்தன நாள் இப்படி ஒரு கேடுகெட்டத்தனத்த செய்துட்டு என் புள்ளைக்கு பொண்டாட்டி ஆகப் பார்ப்ப?” என்று ருத்ர தாண்டவம் ஆட வலியில் துடிதுடித்துப் போனாள் குழலி.

“எவ்ளோ திமிர் இருந்தா இவ்வளவு நேரத்துக்கு வாயத் தொறக்காம இருந்திருப்பா? ஏதோ இன்னைக்கு மட்டும் தான் தப்பு நடந்துடுச்சினு சொல்றா!”

“இன்னைக்கு ஒரு நாள் மட்டுமா இல்ல எத்தன நாள் பழக்கமோ? இவளை எல்லாம் மொட்டை அடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தணும்”

“அதோட விடக்கூடாது. செருப்பு மாலை போட்டு கழுத மேல ஏத்தி ஊரை விட்டே தொரத்தணும்”


“அதெல்லாம் விட பெருசா ஒட்டுத் துணி இல்லாம நிக்க வெச்சி எல்லாரையும் இவ மூஞ்சில காறித் துப்ப வெச்சி ஓட ஓட இவள சவுக்கால அடிச்சே ஊர் எல்லையில கொண்டு போய் விடணும்”

இப்படி ஊர்மக்கள் ஆளாளுக்கு அவளுக்குக் தங்கள் மாற்றி வேறு இனத்தில் தப்பு செய்தவளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையைப் பற்றிப் பேசி அவளைக் கேவலப் படுத்த, பேச வேண்டிய வீரபாண்டி ஐயாவோ தன் வளர்ப்பு மகள் இப்படி செய்துவிட்டாளே என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க

“சும்மா ஆளாளுக்குப் பேசறத நிறுத்துங்க” என்ற அதட்டலுடன் கீழே விழுந்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் குழலியைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டான் சூர்யா. மேலே ஏதோ பேச வந்த வீரபாண்டி மனைவியைக் கை நீட்டித் தடுத்தவன்

“இந்த வினாடியிலிருந்து இவ என் தங்கச்சி. இனி இவ மேல யார்னா கை வச்சிங்கனா நடக்கறதே வேற!” என்றவன் “ஏதோ ரெண்டு பேரும் காதலிச்சித் தப்புப் பண்ணிட்டாங்க. உங்க சாதி பொண்ண வெளிநாட்டுல இருந்து வந்து ஒருத்தன் காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய கொலைக் குத்தமா இல்ல மகாபாவமா? தப்பு செஞ்சத ஒத்துகின பிறகு ரெண்டு பேருக்கும் கல்யாணத்தப் பண்ணி வச்சி உங்க வழக்கப் படி ஊரை விட்டே அவங்க ரெண்டு பேரையும் ஒதுக்கி வச்சிட்டுப் போக வேண்டியது தான?

அப்படி இல்லனா இப்பவே ஒதுக்கி வச்சிடுங்க. நான் கூட்டிகிட்டுப் போய் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன். அதை விட்டுட்டு குழலிய அடிக்கவோ இல்லை தண்டனைங்கிற பேர்ல அவள மானபங்கப் படுத்தவோ நெனச்சிங்க.. நான் மனித உரிமை ஆணையத்தின் மூலமா நடவடிக்கை எடுத்து போலீஸ கூட்டிகிட்டு வந்து உங்க எல்லாரையும் அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும் சொல்லிட்டேன்!” என்று தன் அதிகாரத் தோரணையைப் பேச்சில் காட்டி நின்றிருந்தான் சூர்யா.

அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது ஏ.கேவின் மூலம் தெரியும் என்பதால் இந்தப் பெண் ஏன் இப்படி பொய் சொல்கிறாள் என்று குழம்பியவன் குழலிக்குக் கொடுக்கப்பட போகும் தண்டனைகளைக் காதில் வாங்கிய பிறகு நண்பனிடம் கூட கேட்காமல் இப்படி ஓர் தடாலடியான முடிவை எடுத்து அதை அனைவரிடமும் சொல்லியே விட்டான் அவன்.

சூர்யா சொல்லியதில் குழலிக்குத் தான் அதிர்ச்சி. எப்போது தன்னை ஒருவன் ஆடை இல்லாமல் பார்த்தானோ அப்போதே தான் வேறு ஒருவனைத் திருமணம் செய்ய தகுதி இல்லாதவள் என்று நினைத்தது அந்தப் பதினைந்து வயது சிறு பெண்ணான குழலியின் மனது. அதனால் தான் அவள் இப்படி ஒரு பொய்யைச் சொன்னது.

ஆனால் இப்படி எங்கோ பிறந்து வளர்ந்த ஒரு வெள்ளைக்காரனுடன் தன் வாழ்வு இணையும் என்றோ இல்லை இணைத்துத் தான் தீர வேண்டும் என்றோ அவள் துளியும் நினைக்கவில்லை. அவளுக்குத் தெரிந்த ஏ.கே உருவத்தில் வெள்ளைக்காரனே தவிர அவனுடைய பிறப்போ இல்லை பூர்விகமோ பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இன்னும் சொல்லப் போனால் ஏ.கேவுக்கே தெரியாது எனும் போது குழலிக்கு அது சாத்தியமில்லை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN