காதல்பனி 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஊரே சூர்யா சொன்ன வார்த்தையில் பயந்து ஸ்தம்பித்து அமைதியாக இருக்க முதலில் தெளிந்த வீரபாண்டி ஐயாவோ

“உங்க மிரட்டலுக்கு எல்லாம் இங்க யாரும் பயப்படுல. அப்படி எல்லாம் குழலியை மட்டும் இல்ல வேற யார்க்கும் செய்யவும் நான் விடமாட்டேன். ஆனா நிச்சயம் ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருப்பேன். ஆனா அதையும் என்னால செய்ய முடியாத அளவுக்குக் குழலிப் பாட்டி இவளுக்குக் கல்யாணம் பண்ணி வெக்கச் சொல்லி சத்தியம் வாங்கிட்டாங்க. அதனால நீங்க சொல்ற படியே அந்த தம்பிக்குக் கல்யாணம் பண்ணி இந்தப் பொண்ண கூட்டிட்டுப் போய்டுங்க. இதான் என் முடிவு. இதுக்கு இங்க எல்லாருமே கட்டுப்படுவாங்க. ஆனா இவ்வளவு நடந்தும் உங்க நண்பர் எதையும் ஒத்துகிட்டு சரினு சொல்லலையே?” என்று அவர் சந்தேகத்துடன் கேட்க

உண்மை தான்! தன்னை வைத்துத் தான் பிரச்சனையே என்பது தெரியாமல் ஒரு பார்வையாளனாய் நின்றிருந்தான் ஏ.கே. அவனுக்குப் புரிந்தது தெரிந்தது எல்லாம் குழலிக்கு ஏதோ ஆபத்து பிரச்சனை. அவள் ஏதோ செய்யக் கூடாத தப்பைச் செய்து விட்டாள் என்பது மட்டும் தான்.
குழலி ஏன் அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் என்பதை அவளிடம் கேட்டே தீர வேண்டும் என்ற ஆதங்கத்தில் முதல்ல நான் கொஞ்சம் குழலி கிட்ட பேசனும்னு சொல்லி வீரபாண்டி ஐயாவிடம் அனுமதி வாங்கி அவளிடம் வந்தவன்.

“ஏன் குழலி அப்படி ஒரு பொய்யச் சொன்ன? உன் மனசுல என்ன திட்டம் வெச்சிருக்க? உங்களுக்குள்ள எதுவும் நடக்கலனு ஏ.கே என்கிட்ட சொல்லிட்டான். ஆனா நீ ஏன் இப்படி பண்ண? எனக்கு பதில் சொல்லு?” என்று கோபமாகக் கேட்கவும்

ஒரு ஆண் முன்னால் தான் ஆடையில்லாமல் நின்றதையோ அதனால் செங்கோடனை திருமணம் செய்ய முடியாது என்பதை மறுக்கவே தான் இப்படி ஒரு பொய்யை சொன்னது என்பதை வேற்று ஆண்மகனான சூரியாவிடம் சொல்ல தயங்கியவளோ தன்னுடைய லட்சியத்தை மனதில் வைத்து
“ஐயோ சார்! என் மனசுல தப்பான எந்த திட்டமும் இல்ல சார். நான் என் இனத்து பொண்ணுங்க மாதிரி வாழ விரும்பல சார். எனக்கு இந்த ஊர் இந்த ஜனங்களோட அடிமைக் கட்டுப்பாடு எதுவும் வேணா சார். நான் படிச்சு விவசாயத்துல பெருசா சாதிக்கணும்னு ஆசப்படுறேன் சார். அதுக்கு இந்த செங்கோடனும் ஊரும் விடாது. இங்கிருந்து நான் தப்பிக்க ஒரே வழி இந்தக் கல்யாணம் தான் சார். என் முன்னேற்றத்துக்கு ஒரு வாய்ப்பா தான் இத நான் நெனைக்கிறேன். ஏ.கே வோட சொத்து பணம் வெளிநாட்டு வாழ்க்க இது எதுக்கும் நான் ஆசப்படல. என்னோட லட்சியத்துக்கு நீங்க தான் சார் உதவி செய்யணும்.

எப்படியாவது இங்க இருந்து தப்பிக்க இப்போ இந்த கல்யாணம் நடந்தா போதும்னு தோனுது சார். சத்தியமா நான் அவரோட பொண்டாட்டினு உரிமை கொண்டாட மாட்டேன். நேரங்காலம் வரும்போது நான் அவரவிட்டு விலகிடுவேன். ஆனா இப்ப அவர்கிட்ட நீங்க எதுவும் சொல்ல வேணாம். நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன். தயவுசெஞ்சி என் கனவுக் கோட்டய இடிச்சிடாதீங்க சார். எனக்கு உதவி பண்ணுங்க” என்று அவள் உணர்ச்சி பொங்க கண்ணீரோடு கேட்கவும் திகைத்துப் போனான் சூர்யா.

‘இந்த கூட்டத்துல இப்படி ஒரு பொண்ணா? ஆச்சரியம் தான்! இவள பத்தி எனக்கு ரொம்ப தெரியாது தான். ஆனா நான் பார்த்த வரையில வீண் வம்பு பேசறவளோ இல்ல பகட்டு வாழ்க்கைக்கு ஆசப் படறவோ இல்ல தான். அப்ப இவ சொல்றது உண்மை தான். இவளோட உயர்ந்த லட்சியத்துக்கு நானும் ஏ.கேவும் உதவி செய்யறது தப்பில்லை தான் இதுக்கு எல்லாத்துக்கும் மேல ஒரு பெண்ணோட மானம் தான் இப்போ முக்கியம் என்று தனக்குள் முடிவெடுத்தவன்

“சரி குழலி. உன் லட்சியத்துக்கு நான் உதவி செய்றேன். ஏ.கேகிட்ட நான் பேசி சம்மதிக்க வெக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் உன்னால அவன் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது” என்று உறுதிபடக் கூறியவன் பின் ஏ.கேவிடம் சென்றான்.

ஆனால் ஏ.கேவின் சம்மதத்தைப் பெறவோ அவன் தலை கீழாக நிற்காத குறைதான். தானும் அவளும் சிறுபிள்ளை என்பதையும் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அறவே மறுத்தான். தனக்கு எதிர்கால லட்சியம் இருப்பதாகவும் அதுவரையில் தான் திருமணம் பற்றி யோசிக்கக் கூட முடியாது என்றான். ஆனாலும் சூர்யாதான் விடாப்பிடியாக நின்று குழலிக்கு ஊர்ப் பஞ்சாயத்தினால் நேரப்போகும் விபரீதத்தை எடுத்துரைத்து அதைத் தடுக்க அவளுக்கு உதவுமாறு மன்றாடியவன் கூடவே இவனுக்கும் குழலிக்கும் தப்பு நடந்து விட்டதாக ஊர் முன் குழலி சொன்னதை சொல்லியவன் அவங்க வழக்க படி இப்போ நீ தான் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றவன்.

முதலில் அவளைத் திருமணம் செய்து இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறும் பிறகு தான் ஊருக்கு வந்ததும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசிக்கலாம் என்றான். தான் வரும்வரை குழலியை அவன் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டான். கடைசி வரை குழலி அவன் பொறுப்பு இல்லை என்றும் நேரங்காலம் வரும்போது அவனை விட்டு விலகி விடுவாள் என்றும் உறுதி கூறினான்.

கடைசியாக ஊர் கட்டுப்பாட்டால் தன் உயிருக்கே ஆபத்து என்றும் அவனையும் ஊர் எல்லையைத் தாண்ட விடமாட்டார்கள் என்றும் பயம் காட்டினான். இவ்வளவு வார்த்தைகளில் அவள் சொன்ன பொய்கே இந்த திருமணம் நடக்க ஏ கே வுக்கு விரும்பம் இல்லை தான் ஆனால் அவளுடைய மானாத்தை காக்கவே வேறு வழியில்லாமல் பிறகு ஏ.கேவும் ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்தது என்பதை விட குழலியின் லட்சியத்திற்கு தான் ஒரு சிறு உதவி செய்ததில் பெரும் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் வந்து நின்றான் சூர்யா

அதன் பிறகு வீரபாண்டி ஐயா கேட்ட படி தன் சம்மதத்தை சொன்னான் ஏ கே
பின் காற்றின் வேகத்தில் அன்றே திருமணத்திற்கான நேரம் குறிக்கப் பட்டு அந்த மலை அடிவாரத்தில் இருவருக்கும் அவர்கள் வழக்கப் படி சில சடங்குகள் செய்யப் பட்டு ஏ.கேவை யானையிலும் குழலியை மூங்கில் கூடையையே பல்லாக்காக மாற்றி அதில் அவளை அமரவைத்து அழைத்து வந்தனர். மாப்பிள்ளையை யானையில் இருந்து இறங்க மச்சான் தன் தோள் கொடுத்து இறக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷத்துடன் தன் தோள் கொடுத்து ஏ.கேவை இறக்கினான் சூர்யா.

பின் பல்லாக்கில் இருந்த குழலி இறங்க அவள் பாதங்களை ஒரு அண்ணணாய் தன் இரு கைகளிலும் சூர்யா தாங்க ஏ.கேவோ அவள் பாதங்களுக்குப் பன்னீர் தெளித்து வலது காலில் உள்ள பெருவிரலுக்கு மட்டும் அவர்கள் வழக்கப் படி செப்பால் ஆன வளையத்தை மெட்டியாகப் போட்டவன் இதுவரை உன் தங்கையாய் நீ சுமந்தவளை இனி என்னுடன் என் இல்லற வாழ்வில் அவளை வாழ்நாள் முழுவதும் ஒரு சுகமாய் நான் சுமப்பேன் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் அவன் தன் கையில் அவள் பாதங்களை வாங்கிக் கொள்ள

பின் அந்த மகாகாளியின் முன் இருவீட்டாரும் உப்பு சர்க்கரையை மாற்றிக் கொள்ளும் போதும் சரி சூர்யா ஒரு அண்ணனாய் குழலி பக்கம் இருக்க வீரபாண்டி ஐயாவோ ஏ.கே பக்கம் இருந்து வாங்கிக் கொண்டார். பின் சடங்குகள் முடிந்து மூங்கில் நரம்பில் கருமணி கோர்க்க நடுவில் யானைத் தந்தத்தில் இருவருடைய பெயரும் பொறித்த பதக்கம் வைத்த மாலையைக் குழலிக்குப் போட்டு அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் ஏ.கே.

திருமணம் அன்று தான் தன் தந்தை மூலம் ஏ.கே வின் பூர்வீகம் பற்றியும் அவன் தாத்தாவைப் பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டான் சூர்யா.

முன்பு தன் பால்ய நண்பரின் குடும்பம் மூலம் தன் பேரன் பற்றிய தகவல்களை விசாரித்துத் தரச் சொன்ன குடும்பம் தான் சூர்யா குடும்பம். இது தெரியாமல் குழலியோடு இவர்கள் அன்றே எங்கு செல்வது என்று தெரியாமல் திணறினர். கூடவே குழலியின் விசாவுக்காக ஏ.கே ஊருக்குச் சென்று அதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்றால் குழலி அதுவரை இங்கு இந்தியாவில் இருக்க வேண்டும். இந்த ஊரிலேயே இருக்க கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் யாரும் அனுமதிக்க வில்லை.

பிறகு வீரபாண்டி ஐயாவுக்குத் தெரிந்தவர்கள் மூலம் தங்க ஏற்பாடு பண்ண முடியுமா என்று கேட்கயிருந்த நேரம் வேலுச்சாமி தாத்தாவைப் பற்றி சூர்யாவுக்கு அவன் தந்தை தகவல் தர அவரிடம் அன்றே பேசியவன் அவர் உதவியால் மூணாறில் அவருக்குத் தெரிந்த நண்பர் கெஸ்ட் ஹவுஸில் அவர்களைத் தங்கச் சொன்னவர் சக்கரவர்த்தி தாத்தாவிடம் ஏ.கே தான் அவர் பேரன் என்பதை அனைத்தையும் பேசி குழலி அவர் வீட்டில் இருக்க வழி செய்வதாகக் கூற இதற்கு சரி என்று சம்மதித்தவன் தாத்தா சம்மதித்து ஏ.கே வை ஏற்றுக் கொள்ளும் வரை தன் நண்பனிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்தான் சூர்யா.

வீரபாண்டி ஐயாவின் காரோ அந்த கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கிப் போக முன்புறம் அமர்ந்திருந்த சூர்யாவோ அடிக்கடி பின்புறம் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க கணவன் மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு கதவு பக்கம் அமர்ந்து கண்ணாடி வழியாக மலைகளையும் காடுகளையும் பார்த்து வர மறந்தும் ஒருவர் முகத்தை ஒருவரும் பார்க்கவில்லை. எப்போதும் ஏ.கேவிடம் குறும்பாகவும் துடுக்காகவும் பேசும் குழலியால் இப்போது தன் கணவனிடம் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தான் ஏ.கேவும். எப்போதும் அவள் முகத்தில் தவழும் சிறுபிள்ளைத் தனமும் அவள் கெண்டை மீன் விழிகளையும் ரசித்து அவள் அக்கறை பேச்சில் உருகி நிற்பவனால் இப்போது அவளை நிமிர்ந்தும் பார்க்க முடியாதவனாக போக ஏதோ அவனை தடுத்தது.

குழலிக்குத் தண்ணீர் வேண்டும் என்றாலும் அவள் சூர்யாவையே கேட்க ஏ.கேவிடம் எந்தச் சலனமும் இல்லை. அப்போது தான் சூர்யா மனதால் அந்த முடிவை எடுத்தான் இது குழ்நிலையால் நடந்த திருமணமாக இருந்தாலும் இறுதியில் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று கடைசி வரை வாழ வேண்டும் என்பது தான் அது
.இரவு பத்துமணிக்கு கெஸ்ட் ஹவுஸ் வந்தவர்கள் பின் ஆளுக்கு ஓர் அறையில் முடங்க அந்த நேரத்தில் சூர்யாவை அழைத்த வேலுச்சாமி தன் பேரன் கிடைத்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் சக்கரவர்த்தி பேச்சி மூச்சில்லாமல் போய் விட இவ்வளவு நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்தவரால் மேற்கொண்டு இதற்கு வழியாக ஏ.கேவையே இங்கு அழைத்து வரச் சொல்ல குழலியைத் தனியாகவும் விட்டுச் செல்ல முடியாது அதிலும் ஏ.கே இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயம் வேறு.

சரி குழலியை அழைத்துப் போகலாம் என்றாலும் இந்தத் திருமணத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிறகு அவர் உயிருக்கே ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் பலவாறு யோசித்தவன் இறுதியாக தான் மட்டுமே சென்று அவரைப் பார்த்து அனைத்தையும் எடுத்துக் கூறி அவருக்குப் புரியவைப்பது என்ற முடிவுடன் ஏ.கேவை எழுப்பித் தனக்கு வேலை இருப்பதால் ஓர் இடத்திற்குப் போய் வருவதாகக் கூறியவன்

“நம்ம பிளான் படி நீ குழலிய இங்கேயே விட்டுட்டு போ டா. காலையில உனக்கு ஏழுமணிக்கு தான பிளைட்? அதுக்குள்ள நான் வரப் பார்க்கறேன். இல்லனாலும் அவ இங்க இருக்கட்டும். பக்கத்து கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் தாத்தாவோட மனைவிய குழலிக்குத் துணைக்கு இருக்கச் சொல்லு. அதுக்குள்ள நான் வந்துடுறேன்” என்றவன்

பின் குழலியை எழுப்பி “நான் இப்போ அவசர விஷயமா ஊருக்குப் போறேன் டா. காலையில ஏ.கேவும் கிளம்பிடுவான். சீக்கிரமே அவன் வெளிநாடு போய் உன் விசாக்கான வேலைகளை அவன் பார்த்தா தான் நீயும் எங்களோட வர முடியும். அதுவரை உனக்குத் துணையா நான் இங்க தான் இருப்பேன். ஆனா இப்போ நான் வெளிய போய்ட்டு வரேன். நான் சீக்கிரமே வரப் பார்க்கிறேன். ஒருவேளை தாமதம் ஆனா பக்கத்து கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் தாத்தா மனைவிய துணைக்கு வச்சிக்கோ” என்றவன் அவள் எதுவும் சொல்லாமல் ஒருவித பயத்துடன் இருப்பதைப் பார்த்ததும்

“என்ன குழலி எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்று இவன் ஊக்க


“எப்… போ… வரு…வீங்க சார்?” என்று அவள் திக்கித் திணறவும்

“அண்ணானு சொல்லிக் கூப்பிடு” என்று அவன் அவளைத் திருத்த

“எப்போண்ணா வருவீங்க? அவரும் இல்லாம நீங்களும் இல்லாம இந்த புது எடத்துல இருக்க எனக்குக் கொஞ்சம் பயமா கூட இருக்கு” என குழலி மிரளவும் அவளுக்கு இன்னும் சில தைரியங்கள் சொல்லிச் சென்றான் சூர்யா.

காலையில் கிளம்பத் தயாராக இருந்த ஏ.கே இன்னும் குழலி எழுந்திருக்காததை அறிந்தவன் அவளை எழுப்பிச் சொல்லி விட்டுப் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க, அதே நேரம் அந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நுழைந்தான் செங்கோடன்.

நேற்று இரவே ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் வெளியே வந்தவன் குழலிக்குத் திருமணம் நடந்ததையும் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததையும் அறிந்தவன் வீரபாண்டி ஐயாவின் டிரைவர் மூலம் அவள் இருக்குமிடம் தெரிய வர காலை வரை பல்லைக் கடித்துப் பொறுமை காத்தவன் பின் அவன் உதவியுடன் தனக்குத் தெரிந்த ஒரு கத்துக்குட்டி வக்கீல் நண்பருடன் அவள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தான் அவன்.

தன் தாயோ இல்லை ஊராரோ குழலியைப் பற்றி எதைச் சொல்லியுமே அவன் நம்பவில்லை. ஏன் குழலியே சொன்னதைக் கூட பொய் என்று தான் நினைத்தான். தான் திரும்பவும் தப்பான வழிக்குப் போய் ஜெயிலில் மாட்டிக் கொண்டதில் தன்னை முழுமையாக வெறுத்துத் தன்னை வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அவள் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக யோசித்தவன் அவளுக்கு விருப்பமே இல்லாமல் தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து கஷ்டப்படுவதாக உருவகப் படுத்திக் கொண்டவன் அவளுக்குத் தன் நிலையைப் புரிய வைத்துத் திரும்பத் தன்னுடன் அழைத்து வந்துவிடலாம் என்ற முடிவுடன் ஏ.கே விடம் பேசத் துணைக்கு ஒரு ஜுனியர் வழக்கறிஞரை அழைத்துச் சென்றான்.

ஏ.கேவைப் பார்த்ததும் அவன் காலில் விழுந்தவன் “என்னையும் என் மனைவியையும் பிரிச்சிடாதிங்க சாமி! எனக்கு அவ தான் உலகம் அவளுக்கு நான் தான் உலகம். சின்ன வயசுல இருந்து நாங்க விரும்பறோம். இன்னும் சொல்லப் போனா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்ற எண்ணத்துல சேர்ந்தே வாழ்ந்துட்டோம். அவளும் விரும்பி தான் அதுக்கு சம்மதிச்சா. இன்னமும் என்ன தான் அவ விரும்பறா. ஊர்க்காரங்க எல்லாம் என்ன சொல்லி அவள மிரட்டினாங்களோ தெரியல இப்போ உங்க தாலிய ஏத்துகிட்டா. ஆனா உங்கள கட்டிக்க அவளுக்குக் கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. அது எனக்குத் தெரியும். அதனால அவள என் கிட்ட திரும்ப அனுப்பிடுங்க. நாங்க எங்காவது போய் வாழ்ந்துக்குறோம். திரும்ப அந்த ஊருக்குக் கூட நாங்க போக மாட்டோம்” என்றெல்லாம் அவன் இல்லாததை இருப்பதாகப் பொய் சொல்லி அவன் நடிக்க அவனை விட அவன் கூட வந்தவன் ஒன்றுக்கு இரண்டாய் ஏற்றிச் சொல்ல என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் ஏ.கே.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN