காதல்பனி 22

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“இதை எல்லாம் மறந்துட்டு நாம வாழலாம்னு தானே சொல்ல வர? இப்படி சொல்ற உன்னாலயே நிச்சயம் இதை மறந்து என் கூட வாழ முடியாது. தினம் தினம் அக்னியாய் இந்த விஷயம் உன்னை எரிக்கும். ஏன்னா..” என்று சற்றே இழுத்தவன் நடுங்கும் தன் விரல்களால் அவள் கையை எடுத்து தன் சட்டைக் காலரில் வைத்து அதை விலக்க பால் நிறமான அவன் மேனியில் மார்பு மத்தியில் I love கருங்குழலி என்று பச்சை குத்தியிருந்தான் அவன்.

அதைப் பார்த்தவளோ தன் கண்கள் விரிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிய தான் பெற்றெடுத்த குழந்தையை ஒரு தாய் எங்கே குழந்தைக்கு வலிக்குமோ என்ற பயத்தில் பட்டும் படாமல் அதன் மேனியைத் தொட்டுத் தடவுவாளே அப்படி தான் பொம்மி விரலால் அந்த இடத்தை வருடியவள் அதை உச்சிமுகர்ந்து முத்தம் வைத்தவள் பின் “மச்சான்!” என்ற கேவளுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள

தன்னைத் திட்டுவாள் கோபப்படுவாள் வெறுப்பாள் என்று அவன் நினைத்திருக்க அவள் தன்னைக் கட்டிக் கொண்டு அழவும் தான் செய்த துரோகத்தில் வெந்தவன்

“ஐயோ பொம்மி! என்னை அடி திட்டு இப்படி நீ அழாதடி கண்ணம்மா” என்று அவன் அவள் முதுகு வருட

“உங்களுக்கு எவ்வளவு அன்பு பாசம் காதல் என் மேல! உங்க மனசுல என்ன இருக்கனு தெரியாம இவ்வளவு நாள் மக்கு மட்டியா இருந்து இருக்கனே. எல்லாத்தையும் நாம பார்த்த அன்னைக்கே பேசியிருந்தால் இவ்வளவு கஷ்டத்த நாம பட்டிருக்க மாட்டோமே. உங்க மனசுல எனக்கு மனைவிக்கான இடம் இல்லையானு நான் எத்தனை நாள் தவிச்சிருக்கேன்” என்று அவள் அவனைக் கட்டிக்கொண்டு கேவவும், ஸ்தம்பித்து நின்றான் ஏ.கே. அதுவும் ஒரு வினாடி தான். பிறகு அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன்

“இப்போ நீ என்ன சொன்ன பொம்மி? எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு. அதிலும் புரிந்ததை நம்பவோ என்னால் சுத்தமா முடியல” என்று அவன் கேட்க

“நான் தான் உங்க மனைவி குழலி மச்சான்” என்று அவள் சொல்ல

சட்டென தரையில் கால் மடக்கி அமர்ந்து விட்டான் ஏ கே. அவனுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தவள் அவன் கன்னங்களைத் தன் கைகளால் தாங்கியவள்

“நிஜம் தான் மச்சான். நான் தான் உங்க குழலி” என்றவள் இவன் விட்டுச் சென்ற பின் செங்கோடனிடமிருந்து தப்பித்தது முதல் சக்கரவர்த்தி தாத்தாவிடம் வந்து சேர்ந்தது முதல் அனைத்தையும் சொல்லியவள்

“நமக்குத் திருமணம் நடந்த அப்போ எனக்கு உங்களை பிடிக்குமோ இல்ல நான் உங்கள காதலித்தேனானு கேட்டா இல்லனு தான் சொல்லுவேன். என் ஆத்தா ஒரு பொண்ணு எப்போதும் தன்னையும் தன் உடலையும் பாதுகாக்கணும்னு சொல்லும். அதை வச்சி தான் நீங்க என்ன அப்படி பார்த்ததும் செங்கோடன மட்டும் இல்ல வேற யாரையும் கட்ட முடியாதுனு உங்களக் கட்டிக்க சம்மதிச்சேன். அப்பவும் உங்க அழகையும் தகுதியையும் பார்த்து விலகிடணும்னு உறுதியா இருந்தேன்.

நீங்க என்ன விட்டுப் போகும் போது கூட இதை என் கிட்ட இவர் சொல்லிட்டுப் போய் இருக்கலாம்னு தான் தோனுச்சி. சத்தியமா வருத்தமோ கோபமோ வரல. ஆனா அன்னைக்கு முழுக்க நடந்த கெட்ட சம்பவத்தால மன உலைச்சல்ல நான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிட்டேன். சூர்யா அண்ணா தான் உங்க தாத்தா கிட்ட என்ன கொண்டு வந்து சேர்த்தார். தாத்தாவும் என்ன அவர் பேத்தியா ஏத்துகிட்டார்” என்றவள் சூரியாவுக்கு அவன் தாத்தா விஷயம் எப்போது எப்படி தெரிய வந்தது என்று அனைத்தையும் சொன்னாள்.

“உங்கள அண்ணா தேடி கண்டுபிடிக்கறதுக்கு நிறைய முயற்சி எல்லாம் எடுத்தார். ஆனா இடையில அவங்க அம்மாவுக்கு விபத்தாகி அவரைப் பாத்துக்கிற நிலைமை வரவோ உங்க விஷயத்துல முழு வீச்சா ஈடுபட முடியல. சரி இனி நானும் தாத்தாவும் தான் வாழ்க்கையினு எடுத்துகிட்டோம். ஆனாலும் எனக்கு ஏதோ தப்பு செய்துட்ட மாதிரியே இருந்தது.

அதையும் வெளி உலகம் படிப்புனு நான் போகப் போக நமக்குள்ள நடந்தது வெறும் விபத்து தானு புரிஞ்சி கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி வாழ ஆரம்பிச்சேன். தாத்தா எனக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து பெண் பார்க்க மாப்பிள்ள வீட்டார் வரும்போது தான் நான் உணர்ந்தேன். என்னால வேற யாரையும் திருமணம் செய்து உங்க இடத்துல வேற யாரையும் வச்சிப் பார்க்க முடியாதுனு. ஏன்னா நான் அந்த அளவுக்கு உங்கள விரும்புறேன் மச்சான்” என்று கூறி அவன் முகமெங்கும் முத்த மழை பொழிந்தவளோ

“அதற்குப் பிறகு திருமணமே வேணாம்னு மறுத்த என்னை தாத்தாவும் அண்ணாவும் வற்புறுத்தவே ஒருமுறை உங்கள நேர்ல பார்த்துப் பேசின பிறகு வேற திருமணத்திற்கு சம்மதிக்கிறனு சொன்னேன். அதுக்கு பிறகு சூர்யா அண்ணா வேற வழியில தேடி உங்களை கண்டுபிடித்தாங்க. உங்க அளவுக்கு தகுதிய வளர்த்துகிட்டதுக்கு அப்புறம் நானே உங்க கிட்ட வந்து பேசுற வரை அண்ணாவ உங்களை தொடர்பு கொள்ள வேண்டாம்னு சொன்னேன். என்னைப் பார்த்ததும் நீங்க தெரிஞ்ச மாதிரியே நடந்துக்கல. ஒருவேளை நிஜமாவே என்ன உங்களுக்கு அடையாளம் தெரியலனு தான் நினைச்சேன். நான் தான் பெயரிலிருந்து உருவத்துல இருந்து நிறைய மாறி இருந்தேனே?” என்று குழலி படபடத்துப் பேச

“இருக்கலாம்! நீ எவ்வளவு மாறி இருந்தாலும் உன் விழிகளை என்னால மறக்க முடியல குழலி. உன் பிறந்த நாள் அப்போ தான் ஸ்டீவ் மகன் மேத்யூஸ் பிறந்தான். அதனாலேயே நீயே வந்து திரும்ப பிறந்துட்டியோனு எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். கூடவே ஒட்டுதலும் அவன் கிட்ட அதிகமாச்சி. அந்தளவுக்கு உன் நினைவுகள் எனக்குள்ள இருந்தது. ஆனா நீ இறந்துட்டேனு உறுதியா நான் நம்பினதால உனக்கு இந்த விழிகள் இடையில கிடைச்சதுனு நினைச்சிட்டேன். அதனாலேயே நான் திரும்ப சூரியாவை தொடர்பு கொள்ளவில்லை. எங்கேடா குழலினு அவன் கேட்டா நான் எங்க போய் என் முகத்தை வச்சிக சொல்லு ஆமா அந்த போலீஸ் காரன் ஏன் அப்படி சொன்னான்னு தெரியல” என்று இறுகியிருந்த அவன் வாயைத் திறக்க

“அவங்க வேற ஒரு கெஸ்ட் ஹவுஸ்ல இப்படி நடந்ததை சொல்லி இருப்பாங்க. நீங்க என்னனு தப்பா புரிஞ்சி இருப்பீங்க” என்றவள் மறுபடியும் தான் முன்பு விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள்.

“அப்படி மாறி இருந்ததால நானா உங்களுக்கு சொன்னா தான தெரியும்? ஆனா உங்க வாயில இருந்து நான் உன்ன விரும்புறனு நீங்க சொல்ற வரை இதை தெரியப் படுத்தக் கூடாதுனு இருந்தேன். நீங்க கல்யாணத்துக்குக் கேட்டதும் என்னத் தவிர உங்க வாழ்க்கையில் வேறு யாரும் இல்லனு தெரிஞ்சதால மறுபடியும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். பிறகு நீங்க நடந்துகிட்டதை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு என்னைத் தவிர வேற ஏதோ யார் மூலமா நடந்து இருக்கோனு நெனச்சேன். அப்படினா அதை நீங்க சொல்ற வரை என் விஷயத்தை சொல்லக் கூடாதுனு இன்னும் உறுதியா இருந்தேன். அப்பவும் நாம ஹனிமூன் போறதா இருந்தப்ப அங்கே சொல்லிடலாம்னு இருந்தேன். சூர்யா அண்ணாவ நான் தான் நம்ம ரிசப்ஷனுக்கு வரச் சொன்னேன். நீங்க அவர் கிட்ட ஏதாவது பேசுவிங்கனு பார்த்தா நீங்க என் கிட்ட சண்டை போட்டு பிரிவு வரை வந்துட்டிங்க என்றவள் ஓடி சென்று தன் அலமாரியில் வைத்து இருந்த யானை தந்ததால் ஆன அவன் கட்டிய கருகுமணியை எடுத்து வந்து காட்டியவள் கூடவே அப்போது திருமணத்தின் போது சூர்யா எடுத்த புகைப்படத்தையும் காட்ட பழைய ஞாபகத்தில் ஏ கே மூச்சு விடவும் முடியவில்லை பின் லேப்டாப்பை உயிர்பித்து ஸ்கைப் மூலம் சூர்யாவையும் அந்த குடும்பத்தையும் அவனிடம் பேச வைத்து தன் கணவனின் அவநம்பிக்கையையும் போக்கினால் அவன் மனைவி


இப்போ சொல்லுங்க நீங்க கேட்ட கையெழுத்தப் போட்டுத் தரவா? என்று அவள் அவனைச் சீண்டி இலகுவாக்க

“கொன்னே போட்டுடுவேன் டி! உனக்கு என்னைய விட்டுப் போகணும்னு எல்லாம் எண்ணம் இருக்கா?” என்று அவன் அவளை முறைக்க

“என்ன பெரிய முறைப்பு? சீன் படி பார்த்தா நான் தான் உங்களை முறைக்கணும். இல்ல இல்ல.. மொத்தோ மொத்துனு மொத்தனும். எப்படி வசதி? நான் சொன்னதை பண்ணவா?” என்று அவள் கோபப் பட, அவள் விளையாட்டாகச் சொன்னதை விடுத்தவன்

“ஆமா! நான் உன்னை அம்போனு விட்டுப் போனதுக்கு நீ என்ன கொன்னாலும் தப்பு இல்ல….”

“ஐயோ! ஏன் இப்படி பேசறீங்க? உங்க இடத்துல நான் இருந்தாலும் இந்த முடிவுத் தான் எடுத்திருப்பேன். நான் சொல்ல வந்தது செங்கோடன் சொன்னதை அப்படியே நம்புனிங்களேனு தான். அப்படி நான் தப்பு செய்திருந்தா உங்க கையால தாலி வாங்கி இருப்பனா? நான் என்ன அப்படிப் பட்டவளா? சத்தியமா அவன் சொன்ன மாதிரி எங்களு…” அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவனோ சட்டென அவள் வாயைத் தன் விரல்களால் மூடியவனோ

“நீ எதுவும் சொல்ல வேணாம் டி. என் மனைவியப் பற்றி எனக்குத் தெரியும். அந்த குள்ள நரி தான் என் மனசக் கலைக்க ஏதோ சொல்லி இருக்கும்” என்றவன் “என்னை மன்னிச்சிடு டி பொண்டாட்டி” என்றவன் அமர்ந்த வாக்கிலேயே அவன் அவள் பாதத்தைப் பிடிக்க

“என்ன மச்சான் மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. பழசை எல்லாம் மறந்துட்டு நாம இனி நமக்கான வாழ்க்கையை வாழ்வோம்” என்று முற்றுப்புள்ளி வைத்தாள் குழலி.

குழலியோ கணவனின் தோளில் சுகமாய் தூங்கிக் கொண்டிருக்க எங்கோ அவள் கைப்பேசி ஒலிக்க அதற்கான பிரக்ஞை சிறிதும் இல்லாமல் அவள் தூங்க உடனே அடுத்து ஏ.கேவின் கைப்பேசி பக்கத்திலிருந்த டேபிள் மேலிருந்து ஒலிக்க, தூக்கக் கலக்கத்திலே அதை எடுத்து அவன்

“ஹலோ” என்றது தான் தாமதம்

“ஏன் டா தண்டம் சோம்பேறி செவிடா! எத்தனை தடவ டா போன் பண்றது? நேத்து நைட் சாப்பிட கீழ வாங்கனு போன் பண்ணதுக்கு இவ்வளவு நாள் கழித்து நான் என் பொண்டாட்டி குழலி கிட்ட பேசிட்டு இருக்கேன் நாங்க வரோம் போன வைங்கனு சொன்ன. மறுநாள் விடிஞ்சி இதோ இரவு சாப்பாட்டுக்கான நேரமே வந்துடிச்சி. ஒழுங்கா ரெண்டு பேரும் கீழ வந்து சாப்பிட்டு போங்க” என்று சொல்லி தாத்தா அதிகாரத்துடனே போனை வைக்க தாத்தா பேசும் போதே முழிப்பு கலைந்த குழலியோ நேரத்தைப் பார்த்து விட்டு வெட்கத்துடனும் பதட்டத்துடன் கணவனை பார்த்தவள் அவன் முகத்தில் ஒரு நிறைவை கண்டவளோ இவ்வளவு நேரமா தூங்கினோம் என்று எண்ண

இருக்காதா பின்ன? ஒருவர் மேல் ஒருவர் இத்தனை வருடம் கொண்டிருந்த அன்பு பாசத்தை இருவரும் பேசித் தீர்த்தவர்கள் கூடவே தங்கள் துணை மேல் தாங்கள் கொண்டிருந்த காதலையும் வெளிப்படுத்தத் தன் காதல் மனைவி உயிருடன் தன் கையில் இருந்தாலும் இது நிஜம் தானா நிஜம் தானா என்று ஏ.கே அவளை ஆக்கிரமிக்க அவளோ கணவனுக்கும் ஒரு படி மேலே போய் இத்தனை நாள் தான் காத்திருந்த காத்திருப்புக்கு பரிசாக நானே நானே என்று முத்ததால் அவனுக்குத் தெரியபடுத்த இவன் காதலில் அவளும் அவள் காதலில் இவனும் பனி என உருகிக் கொண்டிருக்க இதில் நேரம் போனது எங்கே அவர்களுக்கு தெரியப் போகுது?

பின் ஒரு நாள் அவனுக்கு சொந்தமான தீவுக்கு அழைத்துச் சென்றவன் அங்கு அவளைத் தான் எடுத்த போட்டோவையும் அவள் விழிகளை மட்டும் அவன் நிறைய இடத்தில் வரைந்து வைத்திருக்க, அதில் ஒரு படத்தில் மட்டும்

மருளும் விழிகளோ?!…
அல்லது….
மயக்கும் விழிகளோ?!…
யாருக்குத் தெரியும்?….
இம்மங்கையவளின் மனதைத் தவிர!...

என்று எழுதியிருக்க அதைத் தன் விழி விரித்து அவள் பார்த்திருக்கவும் பின்னால் சென்று அவளை அணைத்தவனோ

“நிச்சயம் மயக்கும் விழி தான் டி கருவாச்சி!” என்று காதல் பொங்க சொல்லி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் ஏ.கே.

தங்களுக்கான ஹனிமூனை கிரீஸ் நாட்டில் உள்ள சான்டோரரைனி தீவில் கொண்டாட ஏ.கே முடிவு செய்தான். அடர்ந்த மரங்களுக்கிடையில் ஒரு சிறு மலைக் குன்றின் மேலிருந்த கிளாஸ் ஹவுஸ் எனப்படும் முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பகலில் உள்ளே இருந்த படியே காட்டை வெளிச்சத்தில் ரசித்தாலும் இரவில் அந்த ரம்மியமான கும்மிருட்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரசித்து விடியா இரவாகவே அங்கிருந்த வரை கழித்தார்கள் இருவரும். ஒரு முறை குழலி

“நீங்க ஹனிமூனுக்கு வேற இடத்துக்குப் போறோம்னு சொன்ன உடனே என் கிராமத்துக்குத் தான் கூட்டிட்டுப் போறீங்களோனு நினைச்சேன்” என்று தன் கிராமத்தை நினைவு படுத்தினாள்.

“கூட்டிட்டுப் போறேன் குழலி. ஆனா இப்போ இல்ல. நீ நினைத்த மாதிரியே விவசாயத்துல எதையாவது செய்து சாதிச்சிடு. அதுக்குப் பிறகு நான் உன்னை அங்கே கூட்டிட்டுப் போறேன். பாருங்கடா என் மனைவி கருங்குழலியனு காட்ட! அதற்கு வேண்டியத எல்லாம் செய்து நான் உன்னைபடிக்க வைக்கிறேன்” என்றவனைத் தன் இறுகிய அணைப்பில் கட்டித் தழுவிக் கொண்டாள் குழலி.

நாட்கள் உருண்டோட குழலி உண்டாகி இருக்க முதல் மாதத்திலிருந்து ஒரு தாயாக இணையத்தில் இருந்து அறிந்தும் சூர்யாவின் மனைவியிடம் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை தாங்கினான் ஏ.கே.

ஒன்பதாம் மாத வளைகாப்புக்கு சூர்யாவும் அவன் குடும்பமும் வர ஏற்கனவே நண்பர்களுக்குள் சுமூகமாக இருந்தாலும் அங்கு ஏ.கேவோ குழலி பக்கத்திலேயே நின்று நேரத்துக்கு அவளுக்கு ஜுஸ் கொடுத்த படி இருந்தான். அவள் அசதியில் லேசாக முகம் சுருங்கினாலும் என்ன ஏது என்று கேட்டவன் இறுதியாக அவளைக் குனிய வைத்து முதுகில் வாழை இலை மேல் சங்கில் பால் இடும் நிகழ்வு வர அதைச் செய்ய விடாமல் இவன் தடுக்க

“அண்ணா இப்படி செய்தா தான் வயிற்றுல இருக்கிற குழந்த ஆணா பெண்ணானு தெரிய வரும். அதனால செய்ய விடுங்க” என்று சூர்யா மனைவி சொல்ல

“அதான் பெண் குழந்தைனு எங்களுக்கு ஸ்கேன்லயே தெரியுமே” என்று ஏ.கே பதில் கொடுக்க

“அடேய் சும்மா அடங்கு டா.. இதெல்லாம் ஒரு சாங்கியம் தான். அதனால பேசாம செய்ய விடு. அதுமட்டுமில்லாம நம்ம முன்னோர்கள் செய்ற சடங்குல ஏதாவது விஷயம் இருக்கும். உன்னால அதை கணிக்க முடியாது டா. ஹூம்… கல்யாணம் ஆனா உடனே காலங்காலத்துல வாழ்ந்திருந்தா இந்நேரம் உனக்கு ஆறு வயசுல பொண்ணு இருந்திருக்கும். என்னமோ இப்போ தான் புதுசா கல்யாணம் ஆனா மாதிரி இவன் அலப்பறை தாங்கலையே!” என்று சூர்யா சொல்ல

அவனுக்குப் பதில் கொடுக்க வாயைத் திறந்த கணவனை
“மச்சான்! நீங்க பேசாம இருங்க. பெரியவங்களுக்குத் தெரியும்” என்று குழலி சொன்னதும் கப்சிப் ஆனான் ஏ.கே.

விழா முடிந்ததும் தங்கள் அறைக்கு வர, மனைவி உடை மாற்ற உதவி செய்தவன் அவள் குளித்து வந்ததும் பால் டம்ளரை நீட்டியவனோ பின் இதமாய் அவள் கால்களைப் பிடித்து விட

“ஏன் மச்சான், அண்ணன் சொன்ன மாதிரி நீங்களும் நானும் பிரியாம இருந்தா இந்நேரம் நமக்கு ஆறு வயசுல குழந்தை இருந்திருக்கும் இல்ல?” என்று குழலி ஆதங்கப்பட

“அடி போடி.. அவன் தான் கூறு கெட்டத் தனமா பேசுறானா நீயுமா? அப்போ உனக்கு வயசு பதினைந்து டி. சின்ன பொண்ணு நீ. அப்போ போய் ஒரு கணவனா நான் உன் கிட்ட நெருங்கி இருப்பேனு நினைக்கிறியா? நீ என் மனசுல வந்த மாதிரி நானும் உன் மனசுல வந்துட்டேனானு பார்ப்பேன். அப்பவும் கொஞ்ச நாள் கழித்து தான் நம்ம வாழ்க்கையையே நான் ஆரம்பித்து
இருப்பேன்” என்று அவன் உறுதி படச் சொல்ல, தன் கணவனின் அன்பிலும் நியாய புத்தியிலும் உருகிப் போய் அவன் தோள் சாய்ந்தாள் குழலி.

இப்போது எல்லாம் தாத்தாவுக்கு அடுத்த படியாக அந்த ஊர் பொறுப்பை முழுமனதாக ஏற்றுக் கொண்டான் ஏ.கே. அதற்காக அவன் உயிராய் நேசிக்கும் தன் தொழிலையும் விடவில்லை. போட்டோஃகிராபி மாடலிங் சினிமா துறை அனிமேஷன் என்று அனைத்தையும் கற்க ஊருக்கு ஒதுக்குப் புறமாக இடம் பார்த்து ஒரு கல்லூரி கட்டி நிர்வகித்தவன் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வோரின் விருப்பத்தை ஸ்டீவின் உதவியுடன் மேற்கொண்டான். அடிக்கடி வெளிநாடு போய் வந்தாலும் அவனுடைய நிரந்தர வாழ்விடம் இந்தியா என்று ஆனது.

ஒருமுறை தஞ்சாவூரையும் அதைச் சுற்றியும் உள்ள விவசாய விளைநிலங்கள் எல்லாம் புயல் மழையில் அடித்து நாசமாக அப்போது தான் அவனுக்கு விவசாயத்தின் அருமையே தெரிந்தது. அதிலும் வீட்டில் உள்ள நகை நட்டை அடகு வைத்துக் கடன் வாங்கி உழைத்து அவர்கள் விதைத்த நெற்பயிர்கள் எல்லாம் முற்றி அறுவடை பண்ண வேண்டிய நேரத்தில் அடித்த சூறைக் காற்றில் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்க தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போல் வளர்த்த ஆடு மாடு கோழி எல்லாம் மடிந்து கிடப்பதைப் பார்த்து அவர்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்தவனால் வாய் திறந்து ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலை. ஆயிரம் சேட்டிலைட்களை உருவாக்கி நாம் விண்ணுக்கு அனுப்பினாலும் இன்னும் இது மாதிரியான இயற்கையின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாகத் தான் வேண்டியிருக்கிறது என்று குமைந்தான்.

அந்த நேரத்தில் குழலியோ அறிவியல் ரீதியாக சாய்ந்த தென்னை மரங்களை எல்லாம் மீண்டும் நடவு செய்து காட்டி மற்றவர்களையும் செய்யச் சொல்லி அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தாள். ஏ.கேவுக்கும் உள்ளம் குளிர்ந்தது.

ஆயிரம் சூறாவளிகள் அடித்தாலும் அரசாங்கம் உதவிக்கு வருவதற்குள் அக்கம் பக்கம் ஊர்களிலும் இருந்தும் அழிந்த கிராமங்களில் இருந்து போய் வெளிநாடு வாழும் இந்தியர்களும் ஒரு நாள் ஒருவர் என அவர்கள் வாழ்ந்த தெருவை ஏற்றுக் கொண்டு அவர்கள் செய்யும் உதவிகளையும் இளைஞர் இளைஞிகள் தன்னார்வத் தொண்டர்களை எல்லாம் பார்க்க அவனுக்குப் பெருமையாகத் தான் இருந்தது.

‘எல்லையில் நாட்டுக்காக சண்டையிடுவது தான் நாட்டுப் பற்றா? பிழைப்புக்காக எங்கோ போய் வாழ்ந்தாலும் தன் நாட்டுக்கும் ஊருக்கும் ஒன்று என்றால் துடிதுடித்துப் போய் ஓடி வந்து தன்னால் முடிந்ததை உதவுறான் பாரு அதுவும் தான் நாட்டுப்பற்று ஊர் பற்று’ என்று ஒருமுறை தாத்தா சொன்னதை இப்போது உணர்ந்தான் ஏ.கே

ஐந்து வருடங்களுக்கு பிறகு …அஸ்வத் தன் நெஞ்சையே மெத்தையாக்கி தூங்கி விட்ட தன் மகளை புரட்டி கீழே படுக்க வைக்க அதே நேரம் தன் ஐந்து மாத கருவைச் சுமந்த படி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் குழலி. அவளை அமரச் சொன்னவன் எழுந்து சென்று கையில் பாலுடன் வந்து அதை குடிக்கச் சொல்ல அதை ஒரு மிடறு குடித்தவளோ

“இதெல்லாம் ரொம்ப அநியாயம் மச்சான்! முதல்ல பொண்ணுனு தெரிஞ்சப்போ கலரா இருக்கணும்னு வெறும் குங்குமப் பூவா கலந்து தந்தீங்க. இப்போ பையன்னு தெரிஞ்ச உடனே குடுக்க மாட்டேங்கறிங்க. இது சரி இல்ல” என்று அவள் குறை பட

குறை படும்போது சிணுங்கிய அவள் உதட்டை வருடியவனோ அவள் மடி சாய்ந்து
“தாத்தா அப்பா மாதிரி நான் இல்லையேனு எனக்கு சிறு குறை வருத்தம் இருக்கு குழலி. எத்தனையோ நாள் எனக்கு ஏன் என் அம்மா மாதிரி உருவம் கொடுத்தேனு கடவுளிடம் கேட்டிருக்கேன். அதுக்காக இந்த உருவம் பிடிக்கலனு இல்ல. இந்த ஊர் மக்கள் மாதிரி பிறந்து இருக்கலாமேனு ஒரு ஆசை ஏக்கம் அவ்வளவு தான்! நாளைக்கு என் பையனும் என்ன மாதிரி பிறந்து ஏங்கக் கூடாது இல்ல? அதே மாதிரி என் ஏக்கத்தையும் அவனைப் பார்த்து பூர்த்தி செய்துக்கலாம்னு தான் தரல” என்று அவன் உருகிய குரலில் சொல்ல

“இது நல்ல கதையா இருக்கே! அப்போ உங்க பொண்ணு மட்டும் உங்கள மாதிரி பிறந்து ஏங்கலாமா?” என்று குழலி மடக்கவும்

அவள் வயிற்றுப் பக்கம் தன் முகத்தைத் திருப்பியவனோ அழகான முத்தம் ஒன்றை அங்கு பதித்து விட்டு

“என் பொண்ணு உன்ன மாதிரி தான் பிறப்பானு எனக்குத் தெரியும் டி. அதனால தான் உன்ன மாதிரி கருவாச்சியா இருக்கக் கூடாதுனு தான் குங்குமப் பூ தந்தேன்” என்று சொல்லி அவன் சிரிக்க, திரும்பித் தூங்கும் தன் மகளைப் பார்த்தவளோ கணவன் சொன்னது போல் மகள் அச்சு அசலாக தன்னைப் போல் இருக்க நிறம் மட்டும் அப்படியே தன் கணவன் என்று நினைத்தவள் தனக்கும் அப்படி ஒரு ஏக்கம் இருக்கத் தானே செய்தது? என்று உணர்ந்தவளோ அவன் தலை கோதி

“நிறத்துல என்னங்க இருக்கு? அதான் குணத்துல உங்க அப்பா தாத்தாவையே நீங்க மிஞ்சிட்டீங்களே!” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதிக்க தன் முகத்தை அவள் மேடிட்ட வயிற்றில் புதைத்துக் கொண்டான் ஏ.கே.

அந்த வருடத்திற்கான சுதந்திர தின விழாவில் ஒவ்வொரு துறையில் சாதித்தவர்களை விருது கொடுத்து கவுரவிக்கும் வகையில் விவசாயத் துறையில் அரபுநாட்டில் மட்டுமே விளையும் பேரீச்சம் பழங்களை நம் நாட்டிலும் விளைவிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதை விளைவித்து வெளிநாட்டுக்கே ஏற்றுமதி செய்து காட்டியதோடு மட்டுமில்லாமல் பல விவசாய உபகரணங்களைக் கண்டுபிடித்ததற்காகவும் செயற்கை முறையில் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் அதிக விளைச்சல் தந்த கருங்குழலியைப் பாராட்டி கவர்னர் கையால் வேளாண் விஞ்ஞானி விருது வழங்க தாத்தா பக்கத்தில் தன் மகளை ஒரு மடியிலும் ஒரு வயது மகனை இன்னோர் மடியிலும் சாய்த்த படி கம்பீரமாய் அமர்ந்திருந்த, கணவன் பார்க்க அந்த விருதை வாங்கிக் கொண்டாள் குழலி.

தனிமையில் தான் நினைத்ததை சாதித்து விட்டதாக அவள் கணவனிடம் சொல்லிப் பெருமைப் பட

“இது மட்டும் இல்ல. இன்னும் நிறைய நீ இந்த துறையில சாதிக்கணும். அதுக்குக் கடைசி வரை நான் உனக்குத் துணையா இருப்பேன் குழலி. இந்த சமுதாயத்தில் நீ எங்கு சென்றாலும் உன் நடை வெற்றி நடையாகத் தான் இருக்கணும்” என்று அவன் பெருமை பொங்க சொல்ல
அவருடைய லட்சியத்தை விட தன்னுடைய லட்சியத்துக்கு பாடுபட துடிக்கும் பார்த்தவள் அன்று
அப்படி ஒரு சம்பவம் நடந்து தனக்கு இப்படி ஒரு கணவனைத் தந்த அந்த மகாகாளிக்கு மனதுக்குள் நன்றி சொன்னவளாய் அவன் தோள் சாய்ந்தாள் குழலி.

ஒரு கணவனாய் அவள் சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவள் ஆசைக்கும் எண்ணங்களுக்கும் அவள் லட்சியத்திற்க்கும் வித்திட்டு அவள் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அவன் இருக்கும் போது வெற்றி நடை என்ன இந்த சமுதாயத்தை நோக்கி வீர நடையே போடுவாள் இந்த ஏ.கே வின் கருங்குழலி!


முற்று

நன்றி
 

UMAMOUNI

Member
உண்மையில் ஒரு எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவள் என்பதை அழகாகவும் அதே சமயத்தில் தன் நெறி முறையை எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தவறாதவள் தான் தமிழச்சி என்பதை மிக அழகான முறையில் கூறியுள்ளீர்கள் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உண்மையில் ஒரு எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவள் என்பதை அழகாகவும் அதே சமயத்தில் தன் நெறி முறையை எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தவறாதவள் தான் தமிழச்சி என்பதை மிக அழகான முறையில் கூறியுள்ளீர்கள் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️
உங்களுக்கு இந்தகதை பிடித்து இருந்ததில்.. மகிழ்ச்சி சிஸ்💖💖💖
உங்கள் பேரன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ப்பா...😍😍😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN