ஒரு நாள் மூன்று வேளை

Salmasasikumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் எழுந்ததும் இளம்சிவந்த நீரில் கருமை கலந்த நிறம் கொண்டு பார்க்கவே கண்களை கவர்ந்து நறுமணத்தால் சர்க்கரை தூக்கல் என்ற எண்ணத்தில் நிறைந்து சுட சுட தொண்டையில் இறங்கும் பாலில்லா தேனீரின் சுவையுடன் புதினாவும் எலும்பிச்சை சாற்றின் சுவையுடனும் துவங்கும் அந்த நாள் .....

சுட சுட உப்பி எழுந்த மெல்லிய மேல் அடுக்கும் அதற்கு போட்டியாய் கீழ் அடுக்குடன் முருவலாக அதே சமயம் சற்று மிருதுவாக இருந்த பூரிக்கு , இளம்மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் பாதி கிழங்குகளுடன் பச்சை மிளகாயும் மிதமான எண்ணை மிதக்க இருக்கும் மசால் ஆஹா அதன் சுவைக்கு ஈடில்லை ...

வெண்ணிற மல்லிகை பூக்கள் உதிர் உதிரியாய் கொட்டினாற் போல வாழை இலையின் மத்தியில் குட்டி மலை போல் குவிந்திருந்த பாஸ்பதி சாதம் ,
மாங்காய் பூசனி வாழைக்காய் கொண்ட சாம்பார் தேனாய் சுவைக்க உடன் முருவலாய் பொறித்த கிழங்கு அதனுடன் எலுமிச்சை ஊருகாய் அதற்கு மேல் அப்பளத்துடன் அமிர்தமாய் நாவில் ருசி கொண்டு தொண்டை வழி வயிற்றை சென்றடைய இன்பம் பேரின்பமாய் தெரியும் ....

கம்பு, சோளம், சோயா, குதிரைவாலி, ராகி, கேள்வரகு, சாமை, போன்ற திணை வகைகள் கொண்டு மெல்லியதாய் பக்குவமாய் பதம் பார்த்து அறைத்து இதமான நீரில் சிறிது உப்பு அதிகமாய் சர்க்கரை சேர்த்து கலக்கி கொதிக்கவிட்டு பின் சிறியதே சிறிது பால் சேர்த்து நன்றாய் கொதிக்க வைத்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாய் சிப் சிப்பாக ரசித்து குடித்தால் ஆஹா என்ன ருசி என்ன ருசி ...
கைகால் நரம்புகளில் புது சக்தி பிறந்ததை போல இருக்கும் சுவையும் நாக்கிலே நிற்கும் ...

கொதிக்கும் தண்ணீர் ஆவியின் உதவியுடன் இரு அடுக்கில் குழியான தட்டில் வேக வைத்த பஞ்சை விட மென்மையான இட்லி அதன் பிரியா தோழியான கடுகு கருவேப்பிலை உளுத்தம் பருப்பு எண்ணை கொண்டு தாளித்த நிலக்கடலை சட்னி ஆஹா என்ன சுவை என்ன சுவை !!!..

அந்த சுவை நாக்கில் நின்று முழுவதும் சென்றபின் விழித்த அந்த இளைஞன் அன்றைய கனவில் மனம் மட்டுமல்ல வயிறுமே நிறைந்து போனான் ...
கனவில் கண்ட ஒரு நாள் விருந்தில் உள்ளம் நிறைந்தவனின் ஒரே எண்ணம் இந்த புது நாளில் ஒரு வேளையாவது வயிறு நிறைய சாப்பாடு கிடைக்குமா என்பதே ...

தன் ஒருவனின் சம்பளத்தில் ஓடும் அந்த ஏழு பேர் கொண்ட ஏழ்மை குடும்பத்தில் உள்ளவர்களின் பசியை போக்க நாள்தோறும் தன் வயிற்றிற்கு சமாதானம் கூறும் தண்ணீர் என்ற புவியாளனுக்கு நன்றிகள் கூறும் பட்டதாரி இளைஞன் ...

பசி என்பவன் அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நாளுக்கு இரு வேளை என்றால் அந்த இளைஞனுக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு வேளை என்று இருந்தது ...

வறுமையில் படித்து சிறந்த வேலையை விட ஒரு வேலையும் கிடைக்காமல் கிடைத்த வேலையை பார்த்துக்கொண்டு கிடைக்கும் பத்து ரூபாயில் தனக்காக ஒரு ரூபாய் எடுக்காம குடும்பத்தில் இருப்பவருக்கு கொடுக்கும் இளைஞன் ...

பால் கொண்ட தேனீர் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இன்னும் விளம்பரத்தில் மட்டுமே காட்சியளித்தது .

சமையல் எண்ணெய் அளவிற்கு மீறி ஒரு தேக்கரண்டியம் உபயோகிக்க மாட்டார்கள் , ஏழு பேர் குடும்பத்தில் பூரி கிழங்கு அத்தனை சுலபமான ஒன்றல்ல .மதியம் வைத்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் காலையில் கூழ் போல் செய்து மனக்குளிர்ச்சியுடன் உண்பார்கள் ...

மதியம் ஒரு வேளை மட்டுமே அவ்வீட்டில் சாதம் சமைக்கப்படும், பாஸ்மதி அரிசியை பார்த்தால் 'குட்டி சேமியா போல அவ்வளவு நன்றாக இருக்காது ' என்று சமாளிக்கும் நிலைமை , பொன்னி அரிசி வாங்கி சமைக்க மாட்டார்கள் , ரேஷனில் வாங்கப்படும் அரிசியும் பருப்புமே மாதம் முழுக்க அவர்களின் விருந்து , மாங்காய் ஒன்று வாங்கினால் ஏழு பேரும் பங்கிட்டு உண்பர் , ஒரு அப்பளம் நாளாக துண்டாக்கப்பட்டு ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொள்வர் , இவை வாங்குவதும் ஒரு சத்தேகத்திற்குள் அடங்கி விடும் ...

மாலை சிற்றுண்டி என்று ஒன்றை அவர்கள் உருவாக்கி கொண்டதே இல்லை, பசிக்கிறதோ இல்லையோ மதியம் வைத்த சாதம் இரவு வரை தாங்கிக்கொள்ளும் சில நாட்கள் காலை வரை கூட தாங்கிக்கொள்ளும் ...

இட்லியும் சட்னியும் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக செய்வர் ஒன்று தீபாவளி மற்றொன்று அந்த வீட்டு தலைவனின் நினைவு நாளன்று ..

பிள்ளைகளுக்காக தாயும் , தாய்காக பிள்ளைகளும் பசியை பொருத்துக்கொண்டு காசை சேமித்து அடுத்த நாளைக்கு ஒரு வேளைக்காக உதவிக்கொள்ளும் ...

இன்றும் இது போன்ற ஏழ்மையான குடும்பத்தினர் வறுமையின் பிடியால் உண்ண உணவில்லாமல் இறப்பிற்கு முன்னதாகவே தயாராகிக் கொண்டிருக்கின்றனர்...
இறப்பினும் கொடியது வறுமை மட்டுமே ...

வேர்வை துளிகள் சிந்த மாத கணக்கில் மெய் வருத்தி உற்பத்தி செய்யும் உணவு பொருட்கள் அந்த விவசாயிகளுக்கு சென்றடைவதில்லை ...
விவசாயம் விடுத்து வேறு தொழில் செய்ய வைக்கும் கொடிய நோயாய் வறுமை மாறி வருகின்றது ...

பசியில் வாடுபவர்களுக்கு தான் தெரியும் ஒரு நாள் என்பது மூன்று வேளை என்று ...

ஒரு பருக்கை சாப்பாட்டை விரையம் செய்யும் பொழுதும் நினைவில் வைக்க வேண்டியது ..
உணவை கண்ணில் காட்ட போராடும் விவசாயிகளும்...
உணவை கண்ணில் பார்க்க துடிக்கும் ஏழ்மையானவர்களும்...
படும் பாடு .......

நன்றி
சல்மாசசிகுமார் ...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN