மாயம் 7

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் பேச்சுக்கள்
என்னை வசியப்படுத்துகின்ற
விந்தை
உன் கண்கள்
என்னை சிறைப்பிடிக்கும்
புதுமை
உன் சிரிப்பு
என்னை சிதறடிக்கும்
அதிசயம்
உன் மனம்
அறிந்ததா
பெண்ணே.....????


அன்று தன் தங்கை மற்றும் அம்மாவுடன் ஷாபிங்கிற்காக மாலிற்கு வந்திருந்தாள் ஶ்ரீ... ராதாவை தனியே விட்டுவிட்டு ஶ்ரீயும் அனுவும் அந்த மோலை சுற்றிக்கொண்டிருந்தனர்... அந்த மாலினுள் இருந்த அனைத்து கடைகளிலும் புகுந்து சிறு சேட்டைகள் செய்து கலைத்தவர்கள் ராதாவிடம் சொல்லிக்கொண்டு கடைசியாக புட் கோட்டிற்கு வந்தனர்... அனுவை மில்க் ஷேக் வாங்கி வரச்சொல்லி பணித்தவள் அவர்கள் அமருவதற்கு ஒரு இடம் தேட அங்கு ஒரு மேசையில் யாருடனோ அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ரித்வியை கண்டவள் அவனிடம் சென்றாள்...

“ஹலோ அண்ணா... நீங்க எங்க இங்க??” என்று ஶ்ரீயின் கேள்வியில் தலையை திருப்பியவன்

“ஹேய் ஶ்ரீ நீ எங்க இங்க??” என்று அவனும் அதே கேள்வியை கேட்க அதில் ஶ்ரீ அவனை முறைக்க

“முறைக்காத மா.... நீ எதுக்கு வந்தியோ நானும் அதுக்கு தான் வந்தேன்...”

“நான் எதுக்கு வந்தேனு உங்களுக்கு தெரியுமா அண்ணா??”

“ஷாப்பிங் பண்ண வந்திருப்ப..”

“அதுதான் இல்ல..நான் மில்க்ஷேக் சாப்பிட வந்தேன்..”

“உன்கிட்ட கேள்வி கேட்டது தப்புதான் ஶ்ரீ... மன்னிச்சுக்கோ... நான் அண்ணாவோட ஷாப்பிங் பண்ண வந்தேன்..” என்று கூற அப்போது தான் ரித்வியின் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ரிஷியை பார்த்தாள் ஶ்ரீ...

அதுவரை நேரம் ஶ்ரீயை சைட் அடித்துக்கொண்டிருந்த ரிஷி அவள் தன் புறம் திரும்புவதை உணர்ந்து சட்டென தன் பார்வையை மாற்றிக்கொண்டான்..
அவனை பார்த்த ஶ்ரீ உடனடியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்...

“ஹலோ ஐயம் ஶ்ரீதான்யா... ரித்வி அண்ணாவோட சிஸ்டர்... நீங்க தான் என்னோட பிரதர் ரித்வி அண்ணாவோட பிரதரா???” அவளது கேள்வி சிறுபிள்ளையின் பாவனையுடன் இருந்ததால் ரிஷி அவனறியால் சிரித்துவிட்டான்... அவனது சிரிப்பில் காண்டான ஶ்ரீ

“ரித்வி அண்ணா உங்க பிரதருக்கு என்னை பார்த்தா ஜோக்கர் மாதிரி இருக்கா?? இப்போ எதுக்கு என்னை பார்த்து சிரிக்கிறாரு??” என்று ஶ்ரீ எகிற ரித்வியோ

“ஒரு கலர் ஹெயார் விக்கும் முகத்துக்கு கொஞ்சம் பவுடரும் அடிச்சா அப்படி தான் இருப்ப ஶ்ரீ” என்று ரித்வியும் அவன் பங்கிற்கு வார

“உண்மையாவா அண்ணா??? எனக்கு இந்த கிளவுன் ரோல் செட்டாகுமா?? இந்த ஹேமா எனக்கு சிம்பன்சி ரோல் தான் செட்டாகும்னு சொன்னா... அப்போ நெக்ஸ்ட் டைம் இதையும் ட்ரை பண்ணிற வேண்டியதுதான்” என்ற அவளது பதிலில் ரிஷி மற்றும் ரித்வி ஒருவர் முகத்தை மற்றொருவர் குழப்பத்துடன் பார்க்க ஶ்ரீயோ

“ஹாஹா கன்பியூஸ் ஆகிட்டீங்களா??? என்கிட்ட வாய் குடுத்தா இப்படி தான் கன்பியூஸ் பண்ணுவேனு இப்போ சரி புரிந்ததா??? இனிமே என்னை கலாய்ப்பீங்க ரெண்டு பேரும்??”

“அண்ணா நீ பைத்தியத்தை பார்த்திருப்ப பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிறவனை பார்த்திருப்ப.. ஆனா பைத்தியம் பிடிக்கவைப்பனை பார்த்திருக்கியா?? இல்லைனா இப்போ நேரடியா பார்த்துக்கோ... ஏன்மா ஶ்ரீ நீ மட்டும் தான் இப்படியா இல்ல உன்னோட சேர்ந்ததுங்க எல்லாம் இப்படியா??” என்று தன் எதிர்காலம் குறித்த பயத்தில் கேட்க அவளோ

“அங்க பாருங்க.. என் உடன் பிறப்பு வருது... அதை பார்த்தா உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிரும்....” என்று ஶ்ரீயை தேடியபடி வந்த அனுவை காட்டினாள் ஶ்ரீ. ஶ்ரீ இருக்குமிடம் வந்தவள் ஶ்ரீயிடம் ரிஷி மற்றும் ரித்வி பற்றி விசாரிக்க அவள் ரித்வியை அறிமுகப்படுத்தினாள்... ஏற்கனவே ரித்வி மற்றும் ஹேமாவின் காதல் பற்றி அனுவிடம் ஶ்ரீ சொல்லியிருந்தமையால் ஶ்ரீயின் வாய் வார்த்தைகளால் ரித்வி பற்றி அறிந்திருந்தவள் எவ்வித தயக்கமும் இன்றி அவர்களது உரையாடலில் பங்கெடுத்தாள்...

“ஏன் அனு இரண்டு மில்க்ஷேக் வாங்க இவ்வளவு நேரமா??” என்று மில்க்ஷேக்கை வாங்கியவாறு ஶ்ரீ அனுவிடம் கேட்க

“ஏன் கேட்க மாட்ட?? நீ என்னை வாங்க சொல்லிட்டு இங்கு வந்து அரட்டை அடிக்க தொடங்கிட்ட... அங்கு எவ்வளவு கூட்டம் பாரு... அதை தாண்டி போய் வாங்கிட்டு வர்றதுனா அவ்வளவு ஈசியா??”

“அப்போ இப்ப எப்படி வாங்கிட்டு வந்த??”

“நமக்கு தான் எங்க போனாலும் ஒரு இளிச்சவாய் மாட்டிர்றானே... என்னோட காலேஜ் சீனியர்... ரொம்ப நாளா என்னை பாலோ பண்ணிட்டு இருந்தான்... அவன் ஐஸ்கிரீம் வாங்க வந்தான்... நான் நிற்பதை பார்த்துட்டு என்னை இம்பிரஸ் பண்ணுறதா நினைத்து பயபுள்ள கூட்டத்துல புகுந்து ரெண்டு மில்க்ஷேக் வாங்கிட்டு வந்து குடுத்தான்.. நானும் தாங்கியூ அண்ணானு சொல்லிட்டு வந்துட்டேன்.” என்று அனு கூற ரிஷியும் ரித்வியும் சிரிக்கத்தொடங்கினர். ஶ்ரீ அவர்களை பார்த்து

“இப்போ உங்க டவுட்டு கிளியர் ஆகிச்சா அண்ணா??” அப்போது ரிஷி

“ரித்வி உன் தங்கச்சிங்க ரொம்ப தெளிவா தான் இருக்குதுங்க..”

“இப்போ சரி தெரிந்துக்கோங்க சார்... சரி நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே நீங்க ரெண்டு பேரும்??” என்ற ஶ்ரீயின் கேள்விக்கு பதில் அளித்தான் ரிஷி.

“அம்மா அப்பாவோட வெடிங் அனிவசரி.. அதான் ஏதாவது பர்சர்ஸ் பண்ணலாம்னு வந்தோம்...”

“வாவ் ஆண்டி அங்கிளோட வெடிங் அனிவசரியா?? நீங்க எனக்கு சொல்லவே இல்லையே அண்ணா??”

“நீ கேட்கலையே ஶ்ரீ..”

“ஓஹோ கேட்டா தான் சொல்லுவீங்களோ...?? சரி நான் பேச வேண்டியவங்க கிட்ட பேசிக்கிறேன்... எனக்காக ஒரு பிப்டீன் மினிட்ஸ் வெயிட் பண்ணுவீங்களா அண்ணா??? போயிட்டு சீக்கிரம் வந்துர்ரேன்...”

“அண்ணாவிற்கு லேட்டாகுதே மா...” என்று ரித்வி ரிஷியின் முகத்தை பார்க்க அவனோ

“எனக்கு லேட்டாகலை ஶ்ரீ... நீங்க போயிட்டு வாங்க... அவசரம் இல்லைனு சொன்னதுக்காக இரண்டு மணித்தியாலம் கழிச்சு வந்துராதீங்க...” என்று ரிஷி அவளை சீண்ட

“ஆஹான்... அப்படீங்கிறீங்க.. சரி நான் நீங்க சொன்ன மாதிரி இரண்டு மணித்தியாலம் கழிச்சி வர்றேன்.. நீங்க அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க...” என்று ஶ்ரீயும் சளைக்காமல் சொல்ல

“ஐயோ அண்ணா... இவளை நம்ப முடியாது.. இவ நம்மை சுத்தல்ல விடுறதுக்கு அதுமாதிரி செஞ்சாலும் செய்வா... ரொம்ப அவசரம்னா நீங்க கிளம்புங்க.. நான் வெயிட் பண்ணி என்னான்னு பார்த்துட்டு வர்றேன்.” என்ற ரித்வியின் கூற்றிற்கு ஶ்ரீ

“அந்த பயம் இருக்கட்டும்...இன்னைக்கு உங்களை அலைக்களிக்க எனக்கு மூடில்லை.. சோ ஒரு பிப்டீன் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க நாங்க வந்துர்றோம்” என்றுவிட்டு தாங்கள் குடுத்த மில்க்ஷேக் கிளாசை அவர்கள் அமர்ந்திருந்த மேசையின் மீது வைத்து விட்டு அனுவை தன்னோடு இழுத்துச் சென்றாள் ஶ்ரீ. அவள் நகர்ந்ததும் ஶ்ரீயை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான் ரிஷி...

அவளை முதல்முறை பார்த்ததுமே அவளிடம் தோன்றிய ஈர்ப்புக்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டான் ரிஷி... அவளது சிறு பிள்ளை போன்ற செயல்களும், எதிரிலிருப்பவரை கதிகலங்க வைக்கும் அவளது பேச்சும், ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் அலைபாய்ந்து கதை பேசும் கண்களும், எந்தவொரு பயமோ தயக்கமோ இன்றி தெரிந்தவர் தெரியாதவர் என்று அனைவருடனும் வரையறை அறிந்து நட்பு பாராட்டுவதும் இப்படி அவளது ஒவ்வொரு செயலுமே அவனை கவர்ந்தது... அதை விட முக்கியமாக அவனை கவர்ந்தது தான் இருக்குமிடத்தை கலகலப்பாக மாற்றும் அவளது திறன்....இவை எல்லாவற்றையும் விட அவனை ஆறுதல் படுத்தியது அவள் இவனை அண்ணா என்று அழைக்காதது... எங்கு ரித்வியை அழைப்பது போல் தன்னையும் அழைத்துவிடுவாளோ என்று அவன் பயத்தில் இருக்க அவளோ சார் என்ற வார்த்தையில் அவனை காப்பாற்றி விட்டாள்..

இவ்வாறு அவள் பற்றிய யோசனையில் அவன் இருக்க ஶ்ரீயோ கையில் ஒரு பொதியுடன் வந்தாள்.. அதனை ரித்வியிடம் கொடுத்து

“அண்ணா நான் கொடுத்ததா சொல்லி அங்கிள் ஆண்டி கிட்ட கொடுங்க.. அப்புறம் எங்களோட விஷ்ஷசையும் கன்வே பண்ணிருங்க...” என்ற ஶ்ரீயை ரிஷி விசித்திரமாக பார்க்க அவனது பார்வை உணர்ந்து ஶ்ரீயே அவனது பெற்றோர் அறிமுகமான சம்பவத்தை கூறினாள்.. பின் ரிஷி, ஶ்ரீ மற்றும் அனுவை உணருந்த அழைக்க அவர்களிடம் நாகரீகமான முறையில் மறுத்துவிட்டு தன் தாய் இருக்குமிடம் நோக்கி சென்றனர்...

அங்கே ஒரு நவீன ஆடை கடைத்தொகுதியின் முன் கை நிறைய பைகளுடன் நின்றிருந்தார் ராதா...இதோ மில்க்ஷேக் சாப்பிட்டு விட்டு வந்துவிடுகிறோம் என்று சென்ற ஶ்ரீயும் அனுவும் ஒரு மணி நேரமாக வராமல் இருக்க கடுப்பாகிய ராதா அவர்களை தொடர்புகொள்ள முயல அவரது இரு கைகளிலும் இருந்த பைகள் அதற்கு உத்தரவளிக்கவில்லை...இவ்வாறு ராதா திண்டாடியபடி இருக்க அனுவும் ஶ்ரீயும் ஆடி அசைந்தபடி வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் அருகில் வந்ததும் காய்ச்சி எடுக்கத்தொடங்கினார் ராதா...

“எவ்வளவு நேரம்டி ரெண்டு பேரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவீங்க??? ஐஸ்கிரீம் சாப்பிட போனீங்களா??? இல்லை ஐஸ்கிரீமை செய்ய போனீங்களா?? இங்க ஒருத்தி தனியா பர்சஸ் பண்ணிட்டு இருக்கேனே... கொஞ்சம் சரி உதவி பண்ணணும்னு தோணிச்சா ரெண்டு பேருக்கும்?? அது கூட வேணாம்... அம்மா எப்படி இவ்வளவு பொருளையும் தனி ஆளா தூக்கிட்டு வருவாங்கனு கொஞ்சம் சரி யோசிச்சிங்களா?? எதை பற்றியும் கவலை படாம போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு வருதுங்க..” என்று இருவரையும் ராதா காய்ச்சி எடுக்க ஶ்ரீயோ

“அம்மா நாங்க ஐஸ்கிரீம் சாப்பிடபோகல... மில்க்ஷேக் தான் சாப்பிட போனோம்...நீ ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?? உங்களை விட்டுட்டு மில்க்ஷேக் சாப்பிட்டு வந்தோம்னு கோபமா??? உங்ககிட்ட கேட்டோம்... நீங்க தானே வேணாம்னு சொன்னீங்க.. அதான் நாங்க ரெண்டு பேரும் போய் சாப்பிட்டு வந்தோம்..” என்று அவள் கூலாக கூற

“நீ என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல?? என்னை பார்த்தா எப்படி தெரியிது உனக்கு?? உங்களுக்கு தேவையானதை நீங்க பர்ச்சஸ் பண்ணிக்க மாட்டீங்க.. பண்ணுறவங்களுக்கு ஹெல்ப் பண்ணவும் மாட்டீங்க... எனக்கு என்ன விதியா இப்படி உங்க ரெண்டு பேர்கூடவும் மல்லுகட்டிக்கிட்டு இருக்க??” என்று ராதா இருவரையும் வசைபாட அனுவோ

“எங்களை ஏன்மா திட்டுறீங்க??? நாங்க எது வாங்கினாலும் அது சரியில்லை. இது சரியில்லைனு சொல்லுறீங்க... அதான் நீங்களே வாங்கிக்கோனு விட்டுட்டோம்... இப்ப எங்களை திட்டுறீங்க.... இருங்க அப்பாகிட்ட சொல்லுறேன்..”

“போய் சொல்லு.. போ... உங்களை மட்டும் இல்லை... உங்க அப்பாவையும் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கிறேன்.. வரவர உங்க கொட்டம் அதிகரிச்சிட்டே போகுது... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை... எல்லா விஷயத்திலேயும் விளையாட்டு தான்... இப்படியே இருந்தீங்கனா நாளைக்கு புருஷன் வீட்டுல என்னை தான் திட்டுவாங்க...” என ராதா புலம்ப ஶ்ரீயோ

“அம்மா எனக்கு ஒரு டவுட்டு... நாங்க தப்பு பண்ணா உங்களை ஏன்மா திட்டப்போறாங்க?? நாங்க என்ன கிண்டர்கார்டன் பசங்களா?? தப்பு பண்ணா உங்கிட்ட வந்து கம்ப்ளெயின் பண்ணுறதுக்கு??” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை கேட்க ராதா ஶ்ரீயை தன் கண்களாலேயே பஸ்மமாக்க முயன்று கொண்டிருந்தார்... அவரது கோபத்தை பொருட்படுத்தாத போதும் அவரை சமாதானப்படுத்துவதின் முக்கியத்துவத்தை அறிந்த ஶ்ரீ

“தாய்க்குலமே ஒரு டவுட்டு தானே கேட்டேன்.. அதுக்கு ஏன் இந்த பார்வை??? சரி வாங்க கிளம்பலாம்... டாக்சி பாக்கிங் ஏரியாவில் நமக்காக வெயிட்டிங்... இதுக்கு மேல லேட்டான அவன் போன் பண்ணி திட்ட ஆரம்பிச்சிருவான்.” என்று கூறியவாறு ராதா கையில் இருந்த சில பைகளை ஶ்ரீ வாங்கிக் கொள்ள மீதி இருந்த சிலதை அனு வாங்கிக் கொண்டாள்...

ராதா மற்றும் அனுவை அழைத்துக்கொண்டு டாக்சி இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள் ஶ்ரீ.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN