மாயம் 9

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நொடிக்கு நொடி
தத்தளிக்கும்
என் மனம்
அணையுடைக்கும் நாள்
எப்போது???

ரிஷியும் ஶ்ரீயும் ஹரி மற்றும் ப்ரீதா இருக்கும் இடம் நோக்கி செல்லும் வழியில் ஶ்ரீ திடீரென்று

“ஐயோ மாட்டுனோம்...”

“என்னாச்சு ஶ்ரீ...??”

“அங்க பாருங்க....” என்று தூரத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு மத்திய வயது ஆணை காட்டினாள் ஶ்ரீ...

“யாரு ஶ்ரீ அது??? உங்க ரிலேட்டிவ்வா???”

“அது ஆறுசாமி மாமா... அவரை நாங்க வம்புச்சாமி மாமானு தான் கூப்பிடுவோம்... ஏதாவது வம்பை இழுத்துவிட்டுட்டு அதில் குளிர் காய்கின்ற ரகம்...இப்போ அக்காவும் மாமாவும் சந்திப்பது தெரிந்தது... அதை ஒரு பிரச்சனையா கிளம்பி ஏதாவது வம்பை இழுத்துவிட்டுருவாரு.... இவரை இங்க இருந்து கிளப்பியாகனுமே.... என்ன செய்றது....???”

“ஓ... இப்ப இவரை என்ன பண்ணுறது??? எனக்கு அவரை தெரிந்திருந்தால் நானே போய் பேசி அவரை அனுப்பிருப்பேன்....”

“ஆ.... ஐடியா... சார் நீங்க தான் அவரை அழைச்சிட்டு போகப்போறீங்க...”

“நானா?? எனக்கு தான் அவரை தெரியாதே...எதை சொல்லி அழைச்சுட்டுப்போக???”

“ஊருக்கு புதுசு.... இப்படி சுத்திப்பார்க்க வந்த இடத்துல இடம் மாறிட்டேன்... அப்படினு சொல்லுங்க... அப்புறம் சார்.... கொஞ்சம் குதர்க்கமா கேள்வி கேட்பாரு.. பார்த்து சூதானமா பதில் சொல்லுங்க... இல்லை மனிஷன் கண்டு பிடிச்சிருவான்... நான் அக்காவை அழைச்சிட்டு வீட்டுக்கு கிளம்புறேன்...” என்று விட்டு ஶ்ரீ ஓட ரிஷி ஆறுசாமியை நோக்கி நகர்ந்தான்....

“ஐயா..” என்று அழைத்தான் ரிஷி..

“யாரு தம்பி நீங்க.. ஊருக்கு புதுசா??”

“ஆமா ஐயா... எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க??”

“இது என்ன சிதம்பர ரகசியமா தம்பி??? எங்க ஊரு காரப்பயலுங்க எல்லாம் என்னை முறை வைத்து தான் கூப்பிடுவாய்ங்க... நீங்க ஐயானு கூப்பிட்டோன பட்டணத்து பையன்னு புரிஞ்சிருச்சி... அது சரி யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க....??”

“என்னோட நண்பன் ஹரி கல்யாணத்துக்கு வந்தேன் ஐயா.... ஊர் சுத்தி பார்க்க வந்தோம்... வந்த இடத்துல நான் வழி தவறிட்டேன்... அதான் எப்படி திரும்பி வீட்டுக்கு போறதுனு தெரியல்லை... யாராவது வர்றாங்களானு பார்த்துட்டு இருந்தேன்...சரியா நீங்க இந்த வழியாக வந்துட்டீங்க...”

“யாரு தம்பி அந்த புள்ள??? கல்யாணம்னு சொல்லுறீங்க...இந்த கிழமைல மொத்தம் மூனு கல்யாணம் இருக்கே... நீங்க எந்த கல்யாணத்துக்கு வந்திருக்கீங்கனு சரியா தெரியலையே?? சரி எப்போ கல்யாணம்?? யாரு பொண்ணு???”

“கல்யாணம் இன்னும் ரெண்டு நாள்ல ஐயா... பொண்ணு பேரு.... சரியா தெரியல....” என்று ப்ரீதாவின் பெயர் தெரிந்தும் கூறாமல் விட்டான் ரிஷி... அவன் அவ்வாறு கூறாமல் இருந்தமைக்கு காரணம் ஶ்ரீயின் எச்சரிக்கையே...

“அப்படினா நம்ம ரமா அக்கா வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளை வெளிநாட்டுல இருந்து வந்திருக்காராம்... அவரோட கூட்டாளிப்பசங்க இன்னைக்கு ஊருக்கு வர்றதா காமாட்சி அக்கா சொல்லிச்சு.... நீங்க மட்டுமா தம்பி வந்தீங்க... ??”

“இப்போதைக்கு நான் மட்டும் தான் வந்தேன் ஐயா... மற்றவர்கள் இரவு தான் வருவாங்க....”

“ஓ அப்படியா தம்பி... நல்லது... கேட்கிறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... மாப்பிள்ளை தம்பி எப்படி...?? நல்ல புள்ளையா?? பாரின்ல இருந்து வந்திருக்காருனு சொல்லுறாங்களே.....அப்படி இப்படினு ஏதாவது?? ஏன் கேட்குறேனா இது எங்க புள்ள வாழ்க்கை... நாங்க தான் அந்த பையனை பற்றி நல்லா விசாரிச்சி தெரிஞ்சிக்கனும்.. அதான் நீங்க அந்த தம்பியோட கூட்டாளிப்புள்ளையாச்சே.. உங்களுக்கு அந்த தம்பியை பற்றி நல்லா தெரிஞ்சிருக்கும்... அதான் கேட்குறேன்...”

“நீங்க பயப்படவே தேவையில்லை ஐயா... பையன் ரொம்ப தங்கமானவன்.... எந்த கெட்ட பழக்கமும் இல்லை.... வெளிநாட்டுல இருந்தாலும் நம்ம பண்பாடு கலாச்சாரம் தெரிந்து நடந்துப்பான்... அதோட கை நிறைய சம்பாதிக்கிறான்... சொந்தமா வீடு வாகனம் எல்லாம் இருக்கு... உங்க பொண்ணை சந்தோஷமா வைச்சிக்குவான்...”

“தம்பி நீங்க சொல்லுறத பார்த்தா பையன் ரொம்ப வசதியான இடமாயில்ல இருக்கு... அப்போ வரதட்சணை ரொம்ப கேட்டுருப்பாங்களே... அந்த சங்கதி உங்களுக்கு ஏதாவது தெரியுமா??” என்று தன் பீ.பி.சி வேலையை அவர் தொடர நினைக்க ரிஷிக்கோ இவர் நிறுத்தமாட்டரா என்று இருந்தது....ஒவ்வொரு வார்த்தைக்கும் கேள்வி கேட்கும் இவரைப்பற்றி ஶ்ரீ கூறியது சரியென்று இப்பொழுது உணர்ந்தான்... ஒருபுறம் இவரிடம் போய் தன்னை மாட்டிவிட்டுட்டாளே என்று இருந்தாலும் அவரது வம்பு துழாவும் ஆளுமை அவனை ஆச்சரியப்படுத்தவே செய்தது... பல தொழில் தொடர்பான மீட்டங்கை வெற்றிகரமாக முடித்தோடல்லாமல் கிளையன்ஸ்சின் மனவோட்டத்தை அறிந்து அவர்களுக்கு ஏற்ற முறையில் சலுகைகளை பெற்று கொடுத்து தொழிலில் ஸ்திரமாக காலூன்றி நிற்கும் தன்னை ஒருவர் தன் கேள்விகளால் மட்டுமே திணறடிக்கின்றார் என்று அறிய நேர்ந்தது அவனிடம் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது...

“என்ன தம்பி நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன்... நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க...??” என்ற குரலில் கலைந்தவன்

“ஐயா நேரமாச்சு... நாம நடந்துக்கிட்டே பேசலாமா??”

“பார்த்தீங்களா பேச்சு ஸ்வாரஸ்யத்தில் எல்லாத்தையும் மறந்துட்டேன்.. வாங்க கூட்டிட்டு போறேன்...” என்று ரிஷியை அழைத்து சென்றார்.. செல்லும் வழியில் அவனிடம் கேட்க முயன்ற அனைத்து கேள்விகளையும் கேட்டபின்னரே ரிஷியை வீட்டினுள் செல்ல அனுமதித்தார்... ரிஷி வீட்டை அடைந்த நேரம் சரியாக ஹரியும் வர ஹரியை அவருக்கு அறிமுகப்படுத்தினான் ரிஷி..

“இதுவா நம்ம மாப்பிள்ளை தம்பி...ராஜாவாட்டம் இருக்காரே... நம்ம ரமா அக்கா பொண்ணுக்கு ஏத்த சோடி தான்.... என்ன தம்பி நல்லா ஊரை சுற்றி பார்த்தீங்க... பார்க்குற சோக்குல கூட்டாளி புள்ளையை தவறவிட்டுட்டீங்களே... பாவம் அது வழிதெரியாம மாந்தோப்பு பக்கத்துல நின்னுகிட்டு இருந்துச்சு... நான் தான் அதை விசாரிச்சு இங்காக்க கூட்டிட்டு வந்தேன்.... அதை உள்ளாக்க கூட்டிட்டு போங்க... நான் கிளம்புறேன் தம்பி...” என்று விட்டு ஆறுசாமி நடையை கட்ட ஹரியும் ரிஷியும் வீட்டிற்கு சென்று ஹரியின் அறையில் அடைந்து கொண்டனர்.

“ஹப்பாடா... தப்பிச்சோம்டா ரிஷி.... கொஞ்சம் இருந்தா வசமா மாட்டிருப்போம்....ஶ்ரீ வந்து ப்ரீதாவை கூட்டிக்கிட்டு இப்படி உன்னை ஒருத்தர்கிட்ட மாட்டிவிட்டுட்டு வந்திருக்கேன்... நீங்க அவங்க வீட்டுக்கு போறதுக்கு முதல்ல போய் வீட்டுக்கிட்ட இருங்க மாமா... அவரு ஏதாவது கேட்டா ஊரு சுத்த போனாம் வழி தவறிரிச்சி... அப்டினு சொல்ல சொன்னா... அவர்கிட்ட ரொம்ப பேச்சு வைச்சுக்காதீங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டா..... நானும் நீங்க வர்றதுக்கு முதல்லயே வீட்டுக்கு வந்துட்டேன்... சரியா நீ அவரோடு வீட்டு என்ரன்சுக்கு வர்றதை பார்த்துட்டு உங்ககிட்ட வந்துட்டேன்... கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகி இருந்தாலும் அவ்வளவு தான்...”

“ நல்ல டைமிங் தான் போ... அந்தாளு ரொம்ப டேன்ஜர்... இந்த ஊரு பீ.பி.சி போல... மத்தவங்க வீட்டு விஷயங்களை தேடுறதுல ரொம்ப மும்முரமாக இருக்காரு.....ஒரு பத்து நிமிஷத்துல எத்தனை கேள்வி தெரியுமா?? நான் எதையோ மீன் பண்ணி சொல்ல அவரு இப்படியா இருக்குமோனு வேறொரு ஆங்கிலில் இருந்து கேக்குறாரு.... என்கிட்ட எதையோ கண்டுபிடிக்க ரொம்ப தடுமாறுனாரு... என்கிட்டயேவானு அவருக்கு டிமிக்கி காட்டிட்டேன்...”

“புரியிதுடா.... வாசலில் கூட ஏதோ எடக்கு மொடக்கா கேட்டுட்டு போனாரு... எனக்கு செம்ம கடுப்பாகிருச்சி...”

“அவரோட பேச்சு ரொம்ப வில்லங்கமானது.... நாம கொஞ்சம் கவனமா தான் இருக்கனும்... நல்ல வேளை ஶ்ரீ அவரை பற்றி வார்ன் பண்ணிட்டு போனா... இல்லனா என்னால அவரை சமாளிச்சிருக்க முடியாதுடா...”

“ரொம்ப தாங்ஸ் டா... இன்னைக்கு நீ மட்டும் இல்லாட்டி நாங்க எல்லாரும் வசமா மாட்டிருப்போம்... இதை வைத்தே ஒரு சீன் கிரியேட் பண்ணி இருப்பாங்க...”

“இதுல என்னடா இருக்கு...?? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறவங்க... இதுல என்ன தப்பு இருக்குடா??”

“நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் டா.. பட் இது கிராமம்டா... இங்க இதெல்லாம் செய்யத்தகாதவை அப்படீங்கிறது இங்கு எழுதப்படாத சட்டம்... இது நமக்கு சாதாரண விஷயம்... ஆனா அவங்களை பொருத்த வரைக்கும் இதெல்லாம் ரொம்ப சென்சிட்டிவ்வான விஷயம்.... அம்மா வரும் போதே இங்குள்ள நடைமுறைகளெல்லாம் என்கிட்ட சொன்னாங்க... அதான் நானும் ப்ரீதாவை மீட் பண்ண ட்ரை பண்ணலை... ஆனா ஶ்ரீ கூப்புட்டோன ஏதோ ஆசையில போயிட்டேன்... அதுக்குள்ள எவ்வளவு சிக்கல்... ஹப்பப்பா...”

“சரி விடு அதான் மீட் பண்ணிட்டு வந்துட்டியே... அப்புறம் என்ன?? இதெல்லாம் வித்தியாசமான அனுபவம் டா... அதை என்ஜாய் பண்ணு அதைவிட்டுட்டு இப்படி பீல் பண்ணிட்டு இருக்க??”

“அதுவும் உண்மை தான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை வீட்டுல உள்ளவங்களுக்கு தெரியாம போய் பார்க்குறது ஒரு வித்தியாசமான பீல் தான்.... இதுக்கு நான் ஶ்ரீக்கு தான் நன்றி சொல்லனும்... அவளால தான் இன்னைக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தது.. கொஞ்சம் கலாட்டா பேர்வழியா இருந்தாலும் இந்த மாதிரி
விஷயத்தில் எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கா... ஒவ்வொரு வீட்டுக்கும் இப்படி ஒருத்தர் இருந்தா சூப்பரா இருக்கும்..”

“அதாவது மாமா வேலை பார்க்க ஒரு ஆள் வேணும்னு சொல்லுற?? இது மட்டும் அவளுக்கு தெரிந்தது அவ உன்னை ஒரு வழி பண்ணிருவா...”

“ஐயோ ஆமாடா... எது நடக்குதோ இல்லையோ அது கட்டாயம் நடக்கும்.... சரி பிரஷ் ஆகிட்டு வா... டீ சாப்பிடலாம்..” என்றுவிட்டு இருவரும் தத்தமது வேலைகளை கவனிக்க தொடங்கினர்...
அங்கு ஶ்ரீயோ ப்ரீதாவை குறுக்கு வழியில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தாள்..
வந்தவர்களை குடும்பமே குறுக்கு விசாரணை செய்தது...

“ஶ்ரீ டெயிலர் ஷாப் போறோம்னு சொன்னியே??? எங்க தைத்த உடையை வாங்கிட்டு வரலையா???” என்று அவளது பெரியம்மா வினவ அப்போது தான் அவள் உரைத்துவிட்டு சென்ற பொய் அவளுக்கு நியாபகம் வந்தது..அவள் ப்ரீதாவை திரும்பி பார்க்க அவள் எதுவும் சொல்லாது திருதிருவென முழுத்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு பதிலளிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டாள் ஶ்ரீ..

“அது வந்து பெரியம்மா... நாங்க டெயிலர் ஷாப் போனோமா???...” என்றுவிட்டு அமைதியாய் இருக்க ரமாவோ

“என்ன சொல்ல வந்துட்டு பாதியில நிறுத்திட்ட??”

“நீங்க ஆமா சொல்லாம நான் எப்படி பெரியம்மா கண்டினுயூ பண்ணுறது... நான் சொல்லப்போறது ரொம்ப சிக்கலான கதை அதுனால நான் கமா போடும் இடத்தில் நீங்க ஆமா போட்டா தான் என்னால கதை சொல்லமுடியும்..” என்று ஶ்ரீ தன் நிபந்தனையை கூற அவளது செயலின் அர்த்தம் உணர்ந்த ஶ்ரீயின் தந்தையும் அனுவும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்க ராதா அவளது கள்ளத்தனத்தை கண்டுபிடிக்கும் உத்வேகத்துடன்

“ஶ்ரீ இப்படி ஏதாவது செய்து கதையை மாற்றலாம்னு நினைக்காத ஒழுங்கா பெரியம்மா கேட்குறதுக்கு பதில் சொல்லு...”

“என் தாய்க்குலமே... நான் அதை தான் செய்திட்டு இருக்கேன்... நீங்க எதுக்கு இப்போ சிவப்பு கொடி தூக்குறீங்க... அதான் நானும் பெரியம்மாவும் பேசி டீல் பண்ணுப்போமே.. பெரியம்மா அப்படி தானே...” என்று அவரையும் ஏற்றி விட ரமாவோ

“ராதா நீ கொஞ்சம் பேசாம இரு ... நான் பேசிக்கிறேன்...” என்று விட ஶ்ரீ வந்த சிரிப்பை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டாள்.... அவளது பாவனை ராதாவிற்து கோபத்தை கிளப்ப அவளை முறைத்தவாறு நின்றிருந்தார்...

“இப்போ சொல்லு ஶ்ரீ.. நீங்க போன வேலை என்னாச்சு??”

“சொல்றேன் பெரியம்மா.... நாங்க டெயிலர் ஷாபிற்கு போனோமா...அங்கு கடையை மூடி இருந்திச்சி...”

“சரி... அப்போ நேரா வீட்டுக்கு வர வேண்டியது தானே...”

“அதை தான் நானும் சொன்னேன் பெரியம்மா... ஆனா ப்ரீதா அக்கா தான் கட்டாயம் வாங்கிட்டு போகனும்னு ஒற்றைக்காலில் நின்று அடம் புடிச்சாங்க.... இல்லையா அக்கா..?” என்று ப்ரீதாவின் புறம் திரும்பி ஒரு வினாவை கிளப்ப அவள் தலையை அனைத்துபுறமும் ஆட்டினாள்...

“சரி அப்புறம் எங்க போனீங்க...”

“அப்புறம் நாங்க அங்க வெயிட் பண்ணும் போது அந்த வழியா போன ஒரு பாட்டி..... அவங்க பேரு கூட மறந்துட்டேன்... அக்கா அந்த பாட்டி பேரென்ன??” என்று கேள்வியை ப்ரீதாவின் புறம் திருப்ப அவளுக்கு பயத்தில் வியர்க்க தொடங்கிவிட்டது... தனது மைன்ட் வாயிசில் ஶ்ரீயை திட்டத்தொடங்கினாள் ப்ரீதா...

“இவளா ஒரு கதையை உருவாக்கி சொல்லிட்டு இருக்கா... இதுல இடையில என்கிட்ட கேட்ட எனக்கு எப்படி தெரியும்??? அவ என்ன கதை சொல்ல போறானு அவளுக்கே சரியா தெரியாதப்போ அதை பற்றி என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்?? இவ என்னை காப்பாற்றுகிறேன் பேர்வழினு என்னை நல்லா மாட்டிவிடப்போறா...ப்ரீதா இன்னைக்கு உனக்கு சங்கு தான்டி....” என்று அவளுள் பேசிய வண்ணம் இருக்க அவள் எண்ணவோட்டம் புரிந்த ஶ்ரீ தனக்குள் சிரித்துக்கொண்டு கதையை தொடர்ந்தாள்..

“ஆஹான்... நியாபகம் வந்திருச்சி... நம்ம குலத்தாயி சித்தி அம்மா மீனாட்சி பாட்டி தான் அந்த வழியா வந்தாங்க... அவங்க தான் டெயிலர் ஷாப் குமுதினி அக்கா அவங்க வீடு வரைக்கும் போயிருக்கதா சொன்னாங்க... சரி நாங்களும் அங்க போய் பார்ப்போம்னு அவங்க வீட்டுக்கு போனோம்... இல்லையா அக்கா..” என்று மறுபடியும் ப்ரீதாவிடம் உறுதிமொழி கேட்க அவளும் ஆமாம் போட்டாள்..

“சரி கடைசியா என்ன தான் நடந்துச்சு... அதை சுருக்கமா சொல்லு ஶ்ரீ....இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போற....”

“பெரியம்மா நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே... இது கொஞ்சம் பெரிய கதை நீங்க கொஞ்சம் பொறுமையா தான் கேட்கனும்...”

“ஶ்ரீ எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு.. நீங்க உடையை வாங்குனீங்களா இல்லையா??”

“அதுதான் பெரியம்மா சொல்ல வர்றேன்... நாங்க அவங்க வீட்டுக்கு போனோமா...” என்று அவள் மீண்டும் இழுக்க கடுப்பான ரமாவோ

“போதும் உன்னோட கதை... இப்போ ரெண்டு பேரும் உங்க அறைக்கு போயிட்டு ப்ரஸ் ஆகிட்டு வாங்க... டீ சாப்பிடலாம்...” என்றுவிட்டு ராதாவை அழைத்துக்கொண்டு ரமா சமயலறையிற்குள் செல்ல ப்ரீதா ஶ்ரீயிற்கு கண்களாலேயே நன்றி சொன்னாள்...
அவர்களது பார்வை பரிமாற்றங்களை கவனித்த அனு அதை தந்தையிடம் காட்டி சிரித்தாள்..

“அப்பா.... சிவாஜி நடித்து பார்த்திருக்கேன், எம்ஜியார் நடித்து பாரத்திருக்கேன், நம்ம விஜய் சேதுபதி கதை சொல்லி கூட பார்த்திருக்கேன்... ஆனா இதெல்லாத்தையும் மிஞ்சிற ஒரு நடிப்பை இன்னைக்கு தான் பா பார்த்தேன்... என்னவொரு ஆக்டிங்... கட்டாயம் இதுக்கு நாட்டிய சிகாமணி பட்டம் குடுத்தே ஆகனும்..”

“அனு இங்க யாரும் டான்ஸ் ஆடலையே... அப்புறம் யாருக்கு இந்த பட்டம்...” என்று ஶ்ரீ வினவ

“ஆடுனாதான் பட்டம் குடுப்பாங்கனு யாரு சொன்னா... சுற்றி உள்ளவங்களை ஒரு ஆட்டு ஆட்டுவித்தா கூட எங்க ஊருல அந்த பட்டம் குடுப்போம்..”

“அப்படிங்கிற???”

“ஆமாங்குறேன்...” என்றுவிட்டு அவர்கள் இருவரும் சிரிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராஜேஷ்குமாரும் ப்ரீதாவும் அதில் இணைந்தனர்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN