மாயம் 10

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனவு கலைந்து
எழுந்து பார்த்தேன்
கனவாய்
உன் பிம்பம்
நிஜமாய்
உன் விம்பம்...


திருமண நாள் காலை அழகாக விடிந்தது.கிராமத்து முறைப்படி திருமணம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்த படியால் மணப்பெண் வீட்டின் முன் திருமணத்திற்காக பெரிய பந்தல் அமைத்திருந்தனர்... அங்கு ஐயர் திருமணத்திற்கு தேவையான ஒழுங்குகளை செய்தவாறு இருக்க இடையிடையே வீட்டினரை அழைத்து சில பொருட்களை கொண்டு வந்து தருமாறும் பணித்துக்கொண்டிருந்தார்.. இவ்வாறு அந்த இடமே பரபரப்பாக இருந்தது...
அங்கு ஹரியின் வீட்டில் மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்... தனது அறையில் நண்பர்கள் பட்டாளம் சூழ அமர்ந்திருந்த ஹரியை வம்பிழுத்துக்கொண்டிருந்தனர் அவனது நண்பர் பட்டாளம்..

“மச்சி... எப்படி மச்சி உன்னால மட்டும் இப்படி முடியிது.. எல்லாத்தையும் சும்மா தூசியா தட்டிவிட்டுட்டு போற?? எப்படி மச்சி..??” என்று அவனது நண்பன் கார்த்திக் ஆரம்பிக்க

“நீ எதை சொல்லுறடா..???” என்று ஹரி கேட்க

“அதான் டா அந்த போட்டோகிராப்பர் கழுவி ஊத்தாத குறையா உன்னை வச்சி செஞ்சிட்டு போனானே... அதை தான் கேட்கிறேன்...”

“அவன் எல்லாம் ஒரு ஆளாடா?? அவனை தான் நான் கண்டுக்கவே இல்லையே...”

“அதானே இது தான் உனக்கு பழக்கமான விஷயமாச்சே... உனக்கு சூடாவது சுரணையாவது.... என்ன மச்சி..” என்று ஹரியிற்கு கேஷவ் எடுத்துகொடுக்க

“அது சரி தான்டா... இவ்வளவு செஞ்சும் தாங்குறான்னா இவன் பொழச்சிக்குவான்டா....” என்று கார்த்திக் கூற

“எதுலடா பொழச்சுக்குவான்???” என்று கரண் கேட்க கார்த்திக்கோ

“வேற எதுல மச்சி... சம்சாரி வாழ்க்கையில தான்... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவன் தான்டா சம்சாரி வாழ்க்கைக்கு சரிப்படுவான்..”

“என்னடா கார்த்திக் அனுபவம் பேசுதா..?” என்று கேசவ் கேட்க

“எனக்கு மட்டுமா அனுபவம்??? உனக்கு இல்லையா??” என்று தனக்கு வந்த கேள்வியை கார்த்திக் கேசவ்விடம் திருப்ப

“அதெல்லாம் சொல்லப்படாது... “ என்று கேசவ் ஜகா வாங்க கேசவ்வோ

“அதான் சபைக்கு வந்திருச்சே.... இனி என்ன?? உன் உள்ளக்குமுறல்களை எடுத்துவிடுடா நண்பா...” என்று கரண் எடுத்துக் கொடுக்க கார்த்திக் தன் சோகக்கதையை தொடங்கினான்..

“மச்சி கார்த்திக்னு பெயர் வச்சிருக்கது தப்பாடா?? என்னமோ நான் ரோட்டோர ரோமியோ மாதிரி எல்லார்கிட்டேயும் வழியிறேனாம்.. கார்த்திக்னு பெயர் வச்சிருந்தா காதல் மன்னன்னு அர்த்தமாடா??? “

“அப்படி தான் மச்சி சொல்லிக்கிறாய்ங்க..” என்று கரண் கூற

“சொன்னவன் வாயில வசம்பை வச்சி தேய்க்க... இப்படி எவனாவது ஏதாவது சொல்லிட்டு போயிருவானுங்க... இவளுங்க நம்ம உயிரை வாங்குவாளுங்க... உங்களுக்கே தெரியும் நான் காலேஜ் டைமில் கூட ஒரு பிகரை கூட உஷார் பண்ணதில்லை...”

“உஷார் பண்ணலை இல்லடா கார்த்திக்... உஷார் பண்ணத்தெரியலை...” என்று கேசவ் எடுத்துக்கொடுக்க

“ஏதோ ஒன்னு.. இப்படி பட்ட என்னை பார்த்து எத்தனை பொண்ணுங்கள கழட்டி விட்டனு கேக்குறாடா.... யாரையாவது பார்த்து அழகா இருக்காங்கனு சொன்னா உடனே உனக்கு என்ன சச்சின் பட விஜய்னு நினைப்பானு கேக்குறாடா... அழகா இருக்காங்கனு சொன்னது ஒரு தப்பாடா...”

“நீ யாரை பார்த்து அப்படி ஒரு கம்ப்ளீமண்ட் குடுத்த??” என்று கேசவ் கேட்க

“எங்க பக்கத்துவீட்டு பொண்ணு நீரஜாக்கு..”

“ஹாஹா நீ இப்படி சொன்ன பிறகும் உன்னை சிஸ்டர் விட்டு வச்சிருக்காங்கனா சிஸ்டர் கிரேட் டா... இதே என் பொண்டாட்டியா இருந்தா போடா டேய்னு வீட்டை விட்டே துரத்தியிருப்பா...” என்று கேசவ் உரைக்க ரிஷியோ

“என்னடா பலமான அனுபவம் போல... சொல்லுற மாடிலேஷன் அவ்வளவு பேவரபல்லா இல்லையே..” என்று கேட்க

“நீயேன்டா சொல்லமாட்ட..... அப்போ இருந்து இப்போ வரைக்கும் பொண்ணுங்க தான் உன் பின்னுக்கு சுத்தறாங்க... ஆனா நீ சிக்காம இன்னவரை சிங்களாவே இருக்கியே மச்சி... உன்ன மாதிரியே நானும் இருந்திருந்த எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.... நான் தான் அவசரப்பட்டுட்டேன் மச்சி....” என்று கார்த்திக் அங்கலாய்க்க கேசவ்வோ

“நீ கவலை படாத மச்சி... உன் பிரச்சனை எல்லாம் இனி சால்வ் ஆகிரும்..” என்று கூற

“அது எப்படிடா...?”

“அது மச்சி நீ ரொம்ப பீல் பண்ணியா அதான் சிஸ்டருக்கு கோல் பண்ணி ஸ்பீக்கரில் போட்டுட்டேன்... அவங்களும் இங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டாங்க.....” என்று கொளுத்தி போட

“அடேய்... என்னடா பண்ணித்தொலைச்ச.. இப்படி என் வாழ்க்கையில கும்மி அடிச்சிட்டியேடா.... சும்மாவே நம்ப மாட்டா... இப்போ சுத்தம்.. ஏன்டா நான் நல்லா இருக்கது உங்களுக்கு பொறுக்கலையாடா... நான் ஏதோ ஜாலிக்கு பேசிட்டு இருந்தேன்... நீ இப்படி ஆப்படிச்சிட்டியேடா... ஐயோ இப்ப என்ன பண்ணுவேன்... இந்நேரம் குடும்பமா சேர்ந்து என்னை வெட்டிக்கொலி போட ரெடியாகியிருப்பாய்ங்களே...?...” என்று கார்த்திகா புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் கேசவ்வின் போன் ஒலித்தது... அதனை அட்டென்ட் செய்த கேசவ் தொலைபேசியை கார்த்திக்கிடம் நீட்டி அவனது மனைவி பேசுவதாக கூற தன் கதை முடிந்தது என்று நினைத்துக்கொண்டு பேசினான்..பேசி முடிந்ததும் கேசவ்வை.பார்த்து முறைத்தான் கார்த்திக்... அவனது முறைப்பில் கேசவ் சிரிக்கத்தொடங்க மற்றவர்கள் குழம்பி நிற்க ஹரியோ

“ஏன்டா என்னாச்சு?? எதுக்கு அவனை இப்படி முறைக்குற?? எனிதிங் சீரியஸ்...”

“மச்சான் அவன் ப்ராங் பண்ணியிருக்கான் டா... கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா நானே என் வாயை குடுத்து வம்பை விலைபேசி வாங்கிருப்பேன்... என் பொண்டாட்டி இன்னைக்கு ஏதோ நல்ல மூடுல இருந்திருக்கா... அதான் எதுவும் துருவி கேக்கல.. ஏன்டா இப்படி பண்ண??? என்னை அலற வைப்பதில் உனக்கு என்ன அவ்வளவு ஆனந்தம்..?”

“சும்மா தான் மச்சி...ரொம்ப போர் அடிச்சதா... அதான் இப்படி..”

“ஏன்டா அதுக்குனு அடுத்தவன் குடும்பத்திலயா பட்டாசை கொளுத்தி போடுவீங்க...”

“சும்மா மச்சி... நீ எப்படி ரியாக்ட் பண்ணுறனு பார்க்க தான்..”

“நல்லா வருவீங்கடா டேய்....” என்று ஒருவர் மாற்றி ஒருவர் கலாட்டா பண்ணிக்கொண்டு இருந்தனர்...
சிறிது நேரத்தில் பெண்வீட்டார் சகிதம் மாப்பிள்ளை ஹரி ஊர்வலமாக ப்ரீதாவின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டான்.. அந்த மாப்பிள்ளை ஊர்வலத்தில் அவனது நண்பர்களும் சேர்ந்து கொள்ள ஊர்வலம் களை கட்டியது...

பின் ப்ரீதாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்த மணமகனை ஆராத்தி எடுத்து உரிய முறையில் அழைத்து சென்று மணமேடையில் அமரச்செய்ய என்று திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் ஜாம் ஜாமென்று நடைபெற்றது..

மணமக்களை வாழ்த்த அனைவருக்கும் அட்சதையை வழங்குவதற்காக கூட்டத்தில் இருந்து வெளிப்பட்ட ஶ்ரீயை அப்போதுதான் பார்த்தான் ரிஷி...மென்சிவப்பு நிற பட்டு சேலையில் பட்டாம் பூச்சியாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தவளை ரிஷியின் கண்கள் பின் தொடர்ந்த வண்ணமே இருந்தது.. இடுப்பிற்கு ஒட்டியாணம் அணிந்து காலிற்கு கொலுசிட்டு தலை நிறைய மல்லிகைப் தரித்துக்கொண்டு மன்மதனை மயக்கும் ரதியாய் நடமாடியவளின் கால்களில் சரணடைந்தது ரிஷியின் மனம்... அவள் சிரிக்கும் போதும் அவளது பாவனைகள் மாறுபடும் போதும் சந்தத்திற்கேற்ப அசைந்தாடும் தொங்கட்டான்களும் அவளை அரசாளும் மன்னனின் இளவரசியாய் வரிவமைத்தது... பள்ளிப்பருவத்தில் படித்த கதையொன்றில் நட்சத்திர உலக இளவரசி சிரிக்கும் போதெல்லாம் முத்து உதிர்வதாக கூறப்பட்டது... அதனால் முத்தை பெறுவதற்காகவே அனைவரும் அவளை சிரிக்க வைக்க முற்பட்டதாகவும் ஆனால் தன் சோகம் தீரும் வரை அவள் சிரிக்காமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.. ஆனால் தன்னவளவின் புன்னகையின் பெறுமதிக்கு வைர கற்கள் கூட போட்டியிட முடியாது என்று அவளது புன்னகையை தாங்கி நின்ற கன்னக்குழியை கண்ட பொழுதில் உணர்ந்தான் ரிஷி...

அந்த கன்னக்குழிகள் அடிக்கடி குழியாகி எழும்ப இவன் உணர்வுகளோ தத்தளித்துக்கொண்டிருந்தது... அனைவரிடம் நின்று பேசும் ஒவ்வொரு தருணமும் அவள் புன்னகையை பதிலாய் கொடுக்க இவனோ அதை சேமித்து பாதுகாக்க முடியாதா என்று ஏங்கி தவித்தான்... அப்போது அவனது மனசாட்சி

“டேய் ரிஷி... நீ பண்ணுறது ரொம்ப தப்பு.... அவளுக்கு நீ இன்னும் ப்ரபோஸ் கூட பண்ணல... அதுக்குள்ள நீ அவளை இப்படி ரசிக்கிறது தப்பு.... ஒரு வேளை அவ உனக்கு ஓகே சொல்லாட்டி அவ இன்னொருத்தருக்கு மனைவி ஆகிருவா... அப்போ உன்னால நீ இப்போ செய்த வேலையை மன்னிக்கவே முடியாது.... அதுனால உன்னோட லவ்விற்கு பச்சை சிக்னல் வந்த பின்பு நீ பொறுமையா இருந்து ரசித்துக்கோ...இப்போ கொஞ்ச நேரம் கப்பு சுப்புனு இரு...” என்று கண்டிக்க கிளர்ந்தெழுந்த அவனது உணர்வுகள் தொட்டியிலிருந்து வெளியேறிய நீராய் வடிந்துவிட்டது... ஆனால் அவளை சைட் அடிக்கும் வேலையை அவன் நிறுத்த முயலவில்லை... இவ்வாறு அவன் தன் எண்ணங்களிலே உழன்றவாறு இருக்க அவனது சிந்தனையை கலைத்தது ஶ்ரீயின் குரல்..

“சார் எடுத்துக்கோங்க...” என்று அட்சதை தட்டை அவன் புறம் நீட்ட அவளைப் பார்ப்பதை தவிர்த்தவாறு தட்டிலிருந்த அட்சதையை அவன் எடுக்கவும் அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்....

திருமணம் சிறப்பாக முடிய ஹரியை வாழ்த்திவிட்டு கிளம்பத்தயாரானான் ரிஷி.... அவன் செல்வதை பார்த்து அவனருகில் வந்த ஶ்ரீ
“என்ன சார் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க...?”

“ஆமா ஶ்ரீ... இன்னைக்கு நைட் யூ.எஸ். ட்ரிப்... நேற்று போக வேண்டியது... கல்யாணம் இருந்ததால தான் இன்னைக்கு நைட் கிளம்புறேன்..”

“சார் அப்போ சாப்பாடு...”

“போற வழியில ஏதாவது பார்த்துக்குறேன்.... இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும்..”

“சார் ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க...” என்றுவிட்டு ரிஷி அழைக்க அழைக்க ஓடினாள் ஶ்ரீ..
சொன்னதுபோல் இரண்டு நிமிடத்தில் வந்தவள் ஒரு பொதியை அவனிடம் கொடுத்து

“சார் இதில் கொஞ்சம் பழங்களும் ட்ரிங்ஸ்சும் இருக்கு... போகும் போது சாப்பிட்டுக்கோங்க... இப்போ கிளம்புங்க சார்...”

“தாங்கியூ ஶ்ரீ.. நான் கிளம்புறேன் பாய்... நாம திரும்ப நம்ம இடத்துல மீட் பண்ணுவோம்...” என்றுவிட்டு விடை பெற்றான் ரிஷி...
அவனை வழியனுப்பிவிட்டு மீண்டும் தன் பட்டாளத்துடன் இணைந்து கொண்டாள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN