பூச்சரம் 18

வேந்தன் சரிவதைக் கண்ட ஐயாரு, “ராசா... என்னைய பெத்தவனே!” என்று துடிக்க “மாப்ள....” என்ற அரைக்கூவலுடன் வேந்தனை மடிதாங்கினார்கள் அவன் மாமன்கள். ஆமாம்! வேந்தன் தான் ஐயாருக்குப் பதில் அந்த கத்திக் குத்தை வாங்கியவன். அவன் மயக்கத்தில் சரியும் அந்த நேரத்திலும் அவன் மனக் கண்ணில் பூந்தென்றல் வர, அவள் பெயரை உச்சரித்த படியே தான் தன் மாமன்கள் கையில் சரிந்தான் அவன்.

அதற்குள் நவீனும் நரேனும் போலீசை அழைத்து வர, கத்தியால் குத்தியவனை அவர்கள் பிடித்துச் சென்றார்கள், மாமன்கள் மடியில் விழுந்து கிடந்தவனின் உடலிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்த தன் வேட்டியைக் கழற்றி அவன் உடலில் சுற்றினார் ஐயாரு.

“ஐயோ மாப்ள!” என்ற மாமனின் கூக்குரல் “ஐயா என் குலசாமி!” என்ற ஐயாருவின் அழைப்பு என்று எதுவும் வேந்தனை எட்டவில்லை. மயக்கத்தில் கிடந்தவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள் அனைவரும்.

வேந்தனுக்கு, முன்பே அந்த கட்சி பினாமி ஆட்களைப் பற்றி ஒரு சில விஷயங்கள் தெரிய வந்ததால் அவர்களை சும்மா விடக் கூடாது என்ற முடிவில் இருந்தவன் மாமன் கந்தமாறனிடம் மட்டும் தன் திட்டத்தைச் சொல்ல, அவரும் சம்மதித்து தான் இது செயல்பட்டது. முன்பே இது நடக்கப் போவது பற்றி ஐயாருக்குத் தெரிந்தால் ஏதோ கேசில் டிரைவரை போலீசில் மாட்டி விடுவது மட்டும் இல்லாமல் அந்த அரசியல்வாதியையே இவர் மிட்டுவார் என்பதால் ஐயாருக்கு தெரியாமல் அவர்களைப் போலீசில் பிடித்துக் கொடுக்க வேந்தன் அவர்கள் வழியே போக இருந்தது தான் இவன் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராதது அவன் கத்திக் குத்து பட்டுக் கிடப்பது.

விலாவில் என்றாலும் கத்திக் குத்து கொஞ்சம் ஆழமாகத் தான் இருக்கிறது என்றார்கள் மருத்துவர்கள். ரத்தம் தேவைப் பட, ஐயாரு தான் ரத்தம் கொடுத்தார். கண் விழித்தவனை, “என் உசுரக் காப்பாத்திக் குடுத்த சாமிலே நீ....” என்று கண்ணீருடன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்ல அந்த இடமே பாசத்தால் கட்டுண்டு இருந்தது. தன் சொந்த பந்தங்களை உண்ணாமல் உறங்காமல் குலை நடுங்க வைத்த வேந்தன் வீடு வந்து சேர இரண்டு மாதம் ஆனது. அப்போழுதும் டாக்டர் கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி அறிவுரை சொல்ல, வீட்டில் உள்ள அனைவருமே அவனைத் தங்கள் உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டனர்.

இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது எதுவுமே தென்றலுக்குத் தெரியாது. அவளுக்குத் தகவல் சொல்ல வேண்டாம் என்று மறுத்து விட்டான் வேந்தன். அன்று கோபத்தில் போனவள் தான் தென்றல். அதன் பிறகு அவளின் தந்தையிடம் கூட அவள் பேசவில்லை.

அன்றிருந்த மனநிலையில் மாறனும் மகளிடம் பேச முயற்சிக்கவில்லை. நடுவில் மலர் இரண்டு முறை மகள் தனியே வந்ததை குறித்து என்ன நடந்தது என்று மாறனைக் கேட்க, அவர் நேரில் சொல்வதாகச் சொல்லி தள்ளிப் போட்டார். அவர் தென்றலிடம் கேட்டால் அவளிடமும் பதில் இல்லை.

பொறுத்துப் பார்த்த மலர் கிளம்பி வந்து மாறனிடம் கேட்க நினைப்பதற்குள், தந்தையே தன்னைத் தேடி வருகிற மாதிரி ஒரு காரியத்தைச் செய்தாள் தென்றல்.

இவள் வெளிநாட்டு படிப்புகளுக்கான ஏற்பாடுகளைத் தன்னிச்சையாக செய்ய, அதற்கு மலர் பிடிவாதத்துடன் முட்டுக்கட்டு போட, தன் பிடிவாத்தத்தில் ஜெயிக்க நினைத்தவள், தேர்வுக்காக விடப்படும் விடுமுறையில் வீட்டில் இருந்தவள், உண்ணாமல் ஏன் தன் அறையை விட்டு கூட வெளியே வராமல், யாரிடமும் பேசாமல், அறைக்குள்ளேயே அடைந்து தூங்க... படிக்க... குளிக்க... என்று தென்றல் சத்தியாகிரகம் செய்ய....

முதல் நாள் மகளை விட்டுப் பிடிக்க நினைத்த மலர், மறுநாளும் மகள் இதையே தொடரவும் துடித்துப் போனவர், இது சம்பந்தமான முடிவைப் பெற்ற தந்தை தான் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாறனை அழைக்க

சற்றே தற்போது தான் தேறி வரும் வேந்தனை நினைத்து அவர் அசைவதாக இல்லை. அவளையே பெற்றவர் இல்லையா? தென்றலின் பிடிவாதமே அவரிடம் இருந்து தானே வந்தது. ஆனால் வேந்தன் தான் விடாமல் அவரை விடாப் பிடியாய் ஊருக்கு அனுப்பிவைத்தான்.

அங்கே... தென்றல் அறை வாசலில் “தென்றல் நான் அப்பா வந்திருக்குதேன்... கதவத் தொற...” மாறன் கோபத்தில் மகளை கதவைத் திறக்கச் சொல்ல

..... அவளிடம் எந்த வித எதிர்வினையும் இல்லை.

“இப்போம் நீயா கதவத் தொறந்துட்டா நல்லது... பொறவு நான் கதவ ஒடச்சி உள்ளாற வந்தேன்... இப்போம் படிக்குத இந்த படிப்பு கூட வேணாம்னு ஒன்னைய கூட்டிட்டு போயிருவேன்” இவர் மிரட்ட,

அந்த மிரட்டலில், கதவைத் திறந்தாள் தென்றல். மகளை அடிக்க கை ஓங்கியவ்ர், அவளின் பஞ்சடைந்த கண்களையும், பூஞ்சையான முகத்தையும் பார்த்தவரோ தன்னை அடக்கிக் கொண்டு, “அங்கன ஒருத்தன் கத்திக் குத்து வாங்கி உசுரு பொழச்சி வந்திருக்குதான்.... இங்கன ஒனக்கு ஒன் புடிவாதம்தேன் முக்கியமா?” அவர் எடுத்த எடுப்பில் போட்டு உடைக்க… தந்தை சொன்ன வார்த்தையில் அதிர்ந்தவள்

சோர்ந்திருந்த அந்த நிலையிலும், “யாருக்கு என்னப்பா ஆச்சு....” இவள் பதற

“எல்லாம் என் மாப்ளைக்குதேன்.... நீயே பேசு... அப்டி என்ன வீம்பு புடிச்சு திரியுத?” என்றவர் வெளியே சென்று விட

உண்மையாகவே வீம்பில் இத்தனை நாள் இவளும் வேந்தனை அழைக்கவில்லை. அவனும் இவளிடம் பேசவில்லை.

இப்போது இவள் அழைத்ததும் முதல் அழைப்பிலேயே எடுத்தவன், “மொதல்ல நீ சாப்ட்டு வந்து என்ட்ட பேசு பாப்பு.” இவன் கட்டளை இட

“மாமா....” இவள் திக்க

“போ... பாப்பு... போய் சாப்ட்டு வா. பொறவு எல்லாம் சொல்லுதேன்” பின் சற்றே தயங்கியவன் தன் தொண்டையைச் செருமி சரி செய்தவனோ, “ஒன்னைய வெளிநாடு அனுப்பி வெக்கறது என் பொறுப்பு.. நம்பி போய் சாப்டு பாப்பு” என்று உறுதி அளித்தவன் இறுதியாக, “நான் பத்து நிமிசம் கழித்து மறுக்கா கூப்டுதேன். நீ என் பேச்சக் கேட்டு சாப்ட்டு இருந்தா எடுத்துப் பேசு... இல்லனா எடுக்கவே எடுக்காத”மனதில் கோபம் இருந்தாலும் குரலில் அதைக் காட்டாமல் இவன் ஒரு வித அழுத்தத்தோடு சொல்லி அழைப்பை துண்டித்து விட

அந்த நிலையிலும் பாசத்தில் அவள் கண்கள் கலங்கியது, இவள் அறையை விட்டு வெளியே வர எத்தனிக்க, அதே நேரம் மகள் முன்னே உணவுத் தட்டுடன் நின்றார் மாறன். மகளுக்கு ஊட்ட உணவைப் பிசைந்தவர் “ஒனக்கு என்ன பிடிவாதம் வீம்பு இருந்தாலும் அதை நீ சோத்துல தான் காட்டுவியா? இத நீங்க சோறா திங்க, எத்தன மாசம் எம்புட்டு ஒழப்ப நாங்க ஒழச்சிருப்போம் தெரியுமா?” ஒரு விவசாயியாய் மகளை அதட்டினாலும், அவர் கை என்னமோ மகளுக்கு உணவை தருவிக் கொண்டு தான் இருந்தது.

இப்படி பட்ட தந்தைக்கும்… அப்படி பட்ட மாமானுக்குமா பாசம் இல்லை என்று சொல்லி வந்தேன்… என்று குற்ற உணர்வில் மனது தவித்தது தென்றலுக்கு.

உணவை உண்டு முடிய, சொன்னபடியே அழைத்தான் வேந்தன். இவள் எடுத்தவுடனே “மாமா...” என்க “இனி என்ன கோவம் இருந்தாலும் சோத்துல காட்டாத பாப்பு...” அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு ஏதும் பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது.

அதை மறைத்தவள், “உனக்கு என்ன ஆச்சு மாமா...” இவள் பதற, நடந்த அனைத்தையும் அவன் சொல்ல “என்ன ஊரு மாமா அது... மனித தன்மையே இல்லாத மிருகங்க... நம்ப வீட்டு ஆட்கள் மட்டும் என்ன சளைச்சவங்களா? சரி அத விடு… என் அப்பா இங்க என்ன பார்க்க வந்துட்டார். உன் அம்மாக்கு வேலை தான் உலகம் என்பது போல் இப்பவும் வேலைக்கு போயிட்டு இருப்பாங்க. பிறகு இப்போ யார் உன்னை பார்த்துப்பா? பேசாம இங்க வந்துடு மாமா நான் பாத்துக்கிறேன்...” தன்னை மீறி இவள் அக்கறையால் வார்த்தைகளைச் சிதற விட, அங்கே மறுபக்கம் ஒரு வினாடி அவனிடம் மவுனம் நிலவியது

“என் கையால் ஒன் கழுத்துக்கு தாலி வாங்கி, உரிமையா என் பொஞ்சாதியா... இங்கன வந்து என்னைய பாத்துக்க” இவன் மெல்லிய குரலில் உறுதியாய் சொல்ல

இப்போது இவளிடம் மவுனம். “மாமா.. வெளிநாடு....” என்று இவள் இழுத்து அவன் வாக்கை நினைவுபடுத்த

“நான் என்ன சொன்னாலும் அப்டி எல்லாம் மாமா ஒன்னைய தனியா வெளிநாடு அனுப்பி வெக்க மாட்டாக. நம்ப குடும்ப பழக்கம் அது இதுன்னு பேச்சி வளரும். அதாம்ல… நீ காதலிக்குதனு சொன்ன இல்ல… அவனை கூட்டிட்டு வா. பேசி கல்யாணம் செஞ்சி வெச்சு அவங்கூடவே அனுப்பி வெக்குதோம். இதுக்குனா மாமா சம்மதிப்பாக” இவன் இது தான் நான் கண்ட வழி என்று சொல்ல

அதிர்ந்தவள் அதை மறைத்து “என்ன விளையாடறியா? அவர் இப்போ எங்க இருக்காரோ... அதாவது... வெளிநாடு வெளிநாடா சுத்தறவரு மாமா அவர்...” முதலில் கோபப் பட்டவள் பின் சமாதான குரலில் இவள் இழுக்க

“ஆகாசத்துல பறந்துகிட்டே இருந்தாலும் காதலிக்காக காதலன் தரை எறங்கித்தேன் ஆகணும். நீ பேசி வரச் சொல்லு நான் மாமா கிட்ட பேசுதேன். இல்லனா நீ எம்புட்டு பிடிவாதம் புடிச்சாலும் ஒண்ணும் நடக்காது” என்று இவன் கறாராகப் பேசி வைத்து விட

சிறிது நேரம் தன் பழக்கம் போல் முடியைச் சுருட்டியவள், பின் ஒரு முடிவுடன் தன் காதலனை அழைத்துப் பேசி முழுத் தகவலையும் சொல்ல, அடுத்த மாதமே கிளம்பி வருவதாகச் சொன்னான் அவள் காதலன்.

மூன்று மாதம் சென்ற பிறகு...

“என்ன அம்சானந்து! நீங்க மட்டும் வந்துருக்கீய? பொண்ணு கேக்க வரணும்னா... நாளு பெரிய மனுசங்களோட வரணும்னு தெரியாதா? என்ன கொலம்வே நீ...” ஐயாரு ஆனந்தைப் பார்த்ததும் தன் வழமையை ஆரம்பிக்க

தென்றல் பல்லைக் கடிக்க, ஆனால் பெண் கேட்டு ஐயாரு வீட்டுக்கு வந்த ஆனந்தோ அலட்டிக்கொள்ள வில்லை, “ஹி.... ஹி... எனக்கு பெத்தவங்க இல்ல, நான் ஒரே பையன். பெரியம்மா பெரியப்பா பிரான்ஸ்ல இருக்காங்க. அவங்களால கல்யாணத்துக்கு கூட வர முடியாத சுழ்நிலை. ஹி... ஹி....” இப்படி மாப்பிளையாய் வரவிருக்கும் ஹம்ஷானந்த் சொல்ல, அட இவன் தாங்க தென்றல் காதலன்… அந்த வெளிநாடு.. வெளிநாடா சுற்றும் ஆளு இவன் தான்… அவனின் பதிலில் ஐயாரு மாறனை ஒரு பார்வை பார்க்க, அவரோ மவுனமாய் நின்றார்.

“கெரடி கத்துகிட்டவன் எடறி விழுந்தா அதுவும் ஒரு வித்தைனு சொல்லுவானாம். கோட்டு சூட்டு போட்டுருந்தா, இம்புட்டு பெரிய விசயத்தைக் கூட பல்லைக் காட்டிகிட்டேதேன் சொல்லுவியோ? வந்ததுல இருந்து பல்லைக் காட்டிகிட்டேதேன் கெடக்கு இந்த மொகர....” பாட்டி வந்த மாப்பிளையை அருமையாய் கவனிக்க, அப்போது தான் திறந்திருந்த தன் வாயை மூடினான் ஆனந்த் அதாவது தென்றலின் காதலன்.

ஹம்ஷானந்த் ஒரு பெரிய மாடலிங் நிறுவனத்தில் போட்டோகிராபராக இருக்கிறான். தாய் தந்தையர் உயிரோடு இல்லை. அவனுடைய தந்தை வழி பாட்டி தான் அவனை வளர்த்தது. ரேமண்டஸ் சூட்க்கு வரும் மாடல் போல் தோற்றத்தில் இருப்பவன். இவன் துறையைச் சார்ந்தவர்களுடன் வழிந்து பேசிப் பழக்கம் என்பதால் எப்போதும்.... சிரிப்புக்குப் பதில் அவன் வாய் ஹி.... ஹி.... ஹி... என்றே இளிக்கும்.

ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் ஒரு வருடத்திற்கு முன்பு தென்றலைச் சந்தித்தவன் அதன் பின் அவளிடம் காதலைச் சொல்ல, இதோ இப்போது இருவரின் திருமண பேச்சு வரை வந்து நிற்கிறது இவர்களின் சந்திப்பு.

ஐயாரு சிலதைக் கேட்க, அவனும் தயங்காமல் அனைத்தையும் சொல்ல, அரைமனதாக அந்த இடத்தை விட்டு எழுந்தவர், “சரி நாங்க எல்லாம் கலந்து பேசி எங்க முடிவச் சொல்லுதோம்” என்று கெத்தாய் மீசையை நீவியபடி அவர் அவனிடம் சொல்லவும், வாடிய முகத்துடன் கேள்வியாய் தென்றலைப் பார்த்தவன், “அப்ப… நான் கிளம்புறேன் சார். சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுங்க” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர

மாறனைத் தனியே அழைத்த ஐயாரு, “எலேய் மாறா! அவன் சாதி, குலம், கோத்ரம் எந்த வெவரமும் தெரியல. எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட மாட்டேன்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட தென்றல்

“உங்களுக்கு விருப்பம் இல்லனா என்ன? நீங்க என்னைக்கு இதுக்கெல்லாம் சம்மதம் சொல்லி இருக்கீங்க? என் அப்பா சொல்லட்டும்..” என துடுக்குத் தனமாகப் பேசவும்

“தென்றல்! என்ன ஐயாவ எதுத்துப் பேசுத? நாங்க தேன் பேசிட்டிருக்கோம்ல?” என மாறன் கடிந்து கொள்ள

“அவருக்கு என்ன கொறச்சல் பா… நல்லா படிச்சிருக்கார், என் துறைக்கு சம்பந்தப்பட்ட வேலையில் தான் இருக்கார். அதனாலே எதிர்காலத்தில் நாங்க சேர்ந்து வேலை செய்ய முடியும் என் கனவும் நிறைவேறும். ப்ளீஸ் பா!” இவ கெஞ்ச

“ஒன் கனவுதேன் ஒனக்கு முக்கியம். அதே போல இந்த குடும்ப கவுரவம், மானம், மருவாத எல்லாம் எங்களுக்கு முக்கியம். ஒனக்காண்டி அதையெல்லாம் எங்களால… என்னால வுட்டுக் குடுக்க முடியாது. சாதி மாத்துக் கல்யாணத்த ஊர்க்கார பயலுகளுக்கே நடத்த வுட மாட்டான் இந்த ஐயாரு! அதே என் வீட்லனா நான் என்ன வேடிக்க பாப்பம்னு நெனக்குதியா? சாதிக்காக என் உசுரையே குடுப்பவன் நான்!” என்று மீசையை முறுக்கியவர், “வேற சாதிக்காரப் பயல இந்த வீட்டு மருமவனா என்னைக்கும் நான் ஏத்துக்கிட மாட்டேன். அப்டி அவன் இந்த வீட்டுக்குள்ளாற வர்றதுக்கு முந்தி என் பொணம்தேன் கெடக்கும்வே மாறா!” என்று உணர்ச்சி பொங்க மாறனிடம் முடிக்க,

“ஐயா! என்ன வார்த்த சொல்லிட்டீய… உங்கள மீறி இந்த கல்யாணம் நடந்திருமாய்யா?” என்று மாறன் பதற, தென்றலோ வெலவலத்துப் போனாள்.

சடுதியில் மீண்டவள், “இப்ப மட்டும் அவர் நம்ம சாதி இல்லைனு யார் சொன்னது?” என்று நிதானமாக ஐயாருவைப் பார்த்துச் கேட்க,

“என்ன தென்றல் சொல்லுத?” என்று மாறன் வினவ

அவளைக் கூர்ந்து நோக்கிய ஐயாருவோ, “நான் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலனு பொய் சொல்லுதியா புள்ள?” என்க

“சத்தியமா இல்ல… அவரோட அப்பத்தாவுக்கு பூர்வீகம் நம்ம திருநெல்வேலி தான். நானே இங்க வந்த பிறகு தான் ஆனந்தோட சேர்ந்து அவங்க சொந்தக்காரங்கள கண்டுபிடிக்கலாம்னு இருந்தேன்”

“ஆனா இத எதையும் அந்தப் பய சொல்லலயே.. நீயும் தேன் ஒரு வார்த்த கூடச் சொல்லல. இப்போம்தேன் சொல்லுத” என்று மாறன் மடக்க

“அவர் தான் முதலில் உங்க எல்லாரையும் பார்த்துப் பேசணும்னு சொன்னார். ஏன்னா அவரைப் பார்த்தா ஒருவேளை நீங்க ஒத்துக்குவீங்கனு நினைச்சார். உங்க சாதி வெறி எல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனா உங்களைப் பார்த்ததுல பயந்து போய் எதுவும் சொல்லாம போய்ட்டார். இன்னும் ரெண்டு நாளில் அவங்க சொந்தக்காரங்களை தேடிக் கண்டுபிடிச்சு கூட்டிகிட்டு வரேன். அதுக்கப்புறம் உங்க முடிவை சொல்லுங்க” என்று தென்றல் தீர்க்கமாய் சொல்ல

“சரி.. ரெண்டு நாள்தேன் உனக்கு அவகாசம். அதுக்குள்ளாற கூட்டியார்லனா, அதோட நீ அவனை மறந்துறு” என்று ஐயாரு முடிவாய் சொல்ல

“சரி” என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே அதற்கான வேலையில் இறங்கினாள் தென்றல். இரண்டு நாட்களாக சரியாக ஊண் உறக்கமின்றி அவனை அழைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தவள் இறுதியில் கண்டும் பிடித்தாள். அதன்பிறகே நிம்மதியாக உறக்கம் தழுவியது அவளுக்கு. வேந்தனுக்கு இவர்கள் வந்ததோ… இப்படி ஒரு பேச்சு நடந்ததோ எதுவமே அவனுக்கு தெரியாது

மறுநாள் காலை நான்கைந்து பேர் வீட்டிற்கு வர, ஓடிப்போய் ஆர்வமுடன் வரவேற்றாள் தென்றல். அவர்களை ஐயாருக்கும், மாறனுக்கும் அறிமுகப் படுத்திய பின் அவர்களும் கலந்துரையாடிய பின்னரே அவர்களும் ஐயாருக்கு நாலாம் பங்காளி முறை என்பது தெரியவந்தது.

பின் அங்கிருந்து எழுந்து தனியாக வந்த ஐயாரு, மாறனையும் அழைத்தவர், “டேய் மாறா... இவிங்க நம்ப ஆளுங்கதேன். என்ன… நம்ப அளவுக்கு வசதி வாய்ப்பு பேரு எல்லாம் இல்ல. அந்தப் பய பாக்க கொஞ்சம் வெள்ளையும் சொல்லையுமா... முக்கியமா அவ படிக்கிற படிப்புக்கு தோதா வேல செய்யவோ நம்ப வீட்டுப் புள்ளைக்கு புடிச்சிருச்சி போல. இப்பவும் எனக்கு முழுமனசா இதுல விருப்பம் இல்ல. வேந்தனாலதேன்... அவன் வந்தா பேசி மேக்கொண்டு ஆகறத பாரு...” என்று சில விஷயங்களைச் சொன்னவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார் அவர். இறுதியாக வேந்தனிடம் ஏன் இந்த விஷயம் வந்து நிற்கிறது என்றால்…. ஆரம்பத்தில் இருந்து தென்றலின் காதலுக்கு… சம்மதித்து… அவள் விருப்பத்திற்கு விடச் சொல்லி இருப்பவன் அவன் தான்..

அவர் சொல்வது உண்மை தான். ஆனந்தை முழு மனதாக இந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. வேந்தன் தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து எல்லோரையும் சம்மதிக்க வைத்தான். இந்த செயலால் மாறன் இன்று வரை வேந்தனிடம் பேசுவது இல்லை.

வெளியே புல்லட் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும், தென்றல் சமிக்ஞையால் ஆனந்தனிடம் ஏதோ சொல்ல, ஒரு வித முடிவுடன் எழுந்து நின்ற ஆனந்த், “வாங்க வாங்க மதிவேந்தன்! எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஏதோ அடி பட்டதா லிஸ்மிதா சொன்னா...” இவன் தான் அந்த வீட்டுக்கு உடையவன் போல் வேந்தனை வரவேற்று கை குலுக்க தன் கையை நீட்ட

நீட்டிய அவன் கையைப் பற்றியவன் கூடவே ஆனந்தை ஒரு முறை முறைத்தவன், “ஒங்க ரெண்டு பேத்துக்கும் இன்னும் கல்யாணம் ஆகல ஆனந்த். தென்றல் இப்பவும் எங்க வீட்டுப் பொண்ணுதேன். இந்த வாடி போடின்ற பேச்சி எல்லாம் இனி வேணாம். ஏன் சொல்லுதனா... நாங்க எல்லாம் ஊர்க்காரங்க பாருங்க. அதிலும் கோவக்காரங்க... எங்க ஊர்ல எடுத்ததும் கைக்கு பதிலா வீச்சருவாலும் வேல்கம்பும் தான் பேசும்.... சொல்லுதேன்....” என்று எச்சரித்தவன் பிடித்திருந்தவன் கையில் ஒரு அழுத்தம் கொடுக்க, வலியில் தன்னைச் சமாளித்தான் அந்த மைதா மாவு பொம்மை!

அதே நேரம் “எலேய்... அம்முசா...” பாட்டி குரல் கொடுக்க

வேந்தனிடம் இருந்து தப்பிக்க “அம்முசா இல்ல பாட்டி... ஹம்சா! சொல்லுங்க பாட்டி...” என்று அவர் புறம் திரும்பி தட்டுத் தடுமாறியபடி பவ்வியமாய் புது மாப்பிளை ஆனந்த் எடுத்து கொடுக்க

“வெருவாக்கெட்ட மூதி… “ என வாய்க்குள் முனகியவர், என் வீட்டு கொல்லையில வேல செய்யறவ பேரு அம்சவேணி! அவளத்தேன் நான் கூப்டேன். ஒன்னைய நான் ஏன் கூப்டுதேன்?” என்றவர் “பொட்டப் புள்ளைக்கு வெக்குத பேர வெச்சிகிட்டு வந்து நிக்கான்... நல்ல ஆடு திருடுன முழிய வெச்சிகிட்டு...” பாட்டி சற்று உரக்கவே முணுமுணுக்க

அதில் வேந்தன் தென்றலை ஒரு ஆழ்ந்த பார்வை பார்க்க, அவளோ சற்றே தடுமாறி, “எப்... படி... மாமா... இருக்கீங்க? உடம்பு... சரியாகிடுச்சா?” என்று அவனை விசாரிக்க

“ம்ம்ம்.... நல்லா இருக்குதேன்... மூணு மாசத்துக்கு முந்தியே வர்றேனு சொன்னவ இப்போம்தேன் வர்றவ?” இவன் விசாரிக்க

“அது… கொஞ்சம் வேலை. அதான் முடிச்சிட்டு இப்போ வரேன்...”

“ம்ம்ம்... அப்புறம்... எப்போம் கல்யாணத்தை வெச்சிக்கிடலாம்?”

வேந்தன் கேள்வியில் கண்ணை விரித்தாள் தென்றல். “மாமா! அப்போ இவரை உனக்குப் பிடிச்சிருக்கா?” அவள் கேட்க

“ஏன்? ஒனக்கே புடிச்சிருக்குதப்போ எனக்கு மட்டும் புடிக்காமலா இருக்கும்? அப்டி என்ன கொறை இவுகளுக்கு?” இவன் கேள்வியில் “ஹி... ஹி... ஹி...” ஆனந்த் வழக்கம் போல் சற்றே அசடு வழிய பின் அனைத்து பேச்சும் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவானது. திருமணம் இதே ஊரில் என்பதால், தென்றல் இங்கேயே தங்கி விட, ஆனந்த் மற்றும் வெளியூரில் இருக்கும் அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் குறித்த தேதிக்கு ஒரு வாரத்திக்கு முன்பு இங்கு வருவது என்று முடிவானது.

எல்லாம் நல்ல படியாக நடக்க, திருமணத்திற்கு முந்தைய நாள் கோவில் பூஜை என்று குடும்பத்தார் அனைவருமே விடியற்காலையே கிளம்ப, ஆனந்த் உடன் தனி காரில் சென்று கொண்டிருந்த தென்றலை யாரோ கடத்தி விட, அவ்வளவு தான்… அந்த ஊரே கலவரம் ஆனது. வேந்தன் முதற்கொண்டு அந்த வீட்டு ஆண்கள் வரை தென்றலைத் தேடிச் செல்ல

இங்கு பாட்டியோ வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டார். “ஊரு முச்சூடும் பகைய வளத்து வெச்சிருக்கானுவ... இதுல எவன் என் பேத்தியை கெடத்திட்டு போனான்னு தெரியலையே... மாரியாத்தா! ஏன் தேன் எங்க குடும்பத்துக்கு மட்டும் இம்புட்டு பிரச்சன வருதோ புரியலயே….” அவரின் இந்த கூப்பாடு ஊர் முழுக்க அந்த விடியற்காலை நேரத்தில் இதே பேச்சாகிப் போனது.

பாட்டியின் வார்த்தை பலித்தது போல மூன்று மணி நேரத்திற்கு எல்லாம் கழுத்தில் யாரோ கட்டின தாலியுடன் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றாள் பூந்தென்றல்.

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.