உன்னாலே உனதானேன் 2

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“அண்ணா” என்று அழைத்தவாறு வினய் மற்றும் ரேஷ்மி இருந்த இடத்திற்கு வந்தாள் க்ருத்திகா...

“வாம்மா க்ருத்திகா... வந்ததில் இருந்து உன்னை தான் தேடுறேன்... எங்க ஆளே காணாம போயிட்ட??” என்று வினய் கேட்க

“லேட்டா வந்துட்டு என்னை காணலனு சொல்லுறீங்களா??

“என்னமா ஆளாளுக்கு லேட்டா வந்தேன்... லேட்டா வந்தேன்னு சொல்லுறீங்க.... உங்க பெரியம்மா தான் முகூர்த்த நேரம் தொடங்குற நேரத்துக்கு வந்தா போதும்னு எங்க ரெண்டு பேரையும் கழட்டிவிட்டுட்டு வந்துட்டாங்க... இப்போ லேட்டுனு கேட்டா நாங்க என்ன பண்ணுறதாம்??”

“அதுக்கு ஏன் அண்ணா இவ்வளவு டென்ஷான் ஆகுறீங்க?? பாருங்க அண்ணி அழ ரெடியாகிட்டாங்க....”

“யாரு உங்க அண்ணி அழப்போறாளா?? அவ உங்க பெரியம்மாவை பார்த்தா மட்டும் பம்முவா... மற்றபடி அழுவது என்பது அவளது டிக்ஸனரியிலேயே இல்லாத விஷயம்... ஆனா நம்மை அழ வைக்கிற வேலையை சிறப்பா செய்வா..” என்ற வினயின் கூற்றில் கடுப்பான ரேஷ்மி அவனை முறைத்துக்கொண்டே

“ஆமா இவரு பால்குடிக்கிற பாப்பா... நாங்க கிள்ளிவிட்டதும் அப்படியே அழுதுருவாரு... க்ருதி... இவரை நம்பாத... இப்படியே பேசி பேசியே ஊரை ஏமாத்திருவாறு...”

“அடப்பாவமே... என்னை பார்த்தா அப்படியா இருக்கு...??? நான் பாட்டுக்கு செவனேனு இருக்கேன்... என்னைப்பற்றி இவ்வாறு அவதூறு பேசுகின்றதே இந்த உலகம்... நல்லவர்களுக்கு உள்ள மதிப்பு அவ்வளவு தானா.?? வெட்கம் வேதனை அவமானம்..ஹா..”

“இப்போ புரியிது அண்ணா....”

“என்னம்மா புரிந்தது உனக்கு??”

“ என் நண்பன் பேசத்தொடங்குனா பிளேடை போட்டே சுத்தி உள்ளவங்களை சாகடிச்சிருவானு... நவீன் அண்ணா சொல்லுவாங்க... அது சரி தான் போல ...”

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற க்ருதி..??”

“அதை தான் சொல்லிட்டேனே அண்ணா..”

“ஏன் மா உனக்கு இந்த கொலைவெறி..?? அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணாட்டியும் பரவாயில்லை.... இப்படியா அண்ணனை டேமேஜ் பண்ணுறது..??”

“அவ சொன்னதுல என்ன தப்பு வினய்??? அவ சரியா தானே சொல்லியிருக்கா...” என்று ரேஷ்மி எடுத்து கொடுக்க

“கூட்டு சேர்ந்துட்டாயங்க... இனி நம்ம தலையை உருட்டி புட்பால் விளையாடப்போகுதுங்க...”

“அவ்வளத்துக்கு உங்க தலை வர்த் இல்லை வினய்..” என்ற ரேஷ்மியின் பதிலில் வினய் அவளை திரும்பிப்பார்க்க

“அண்ணா மைண்ட் வாய்ஸ்னு நினைத்து நீங்க வெளியில சொல்லிட்டீங்க...” என்று க்ருத்திகா சிரித்தாள்...

மணமகன் மணப்பெண்ணிற்கு மங்கள நாண் பூட்டியதும் வினய் மற்றும் ரேஷ்மி, க்ருதிகாவுடன் மணமேடைக்கு சென்று
மணமக்களை வாழ்த்திவிட்டு பந்திக்கு சென்றனர்...
அன்று வேலை நாள் என்பதால் வினய் உணவருந்திவிட்டு அலுவலகம் புறப்பட ரேஷ்மி மண்டபத்திலேயே இருந்து விட்டாள்...
அவளை அனைத்து உறவினர்களுக்கும் வீரலட்சுமி அறிமுகம் செய்ய க்ருதிகாவோ தன் இளசுகள் பட்டாளத்திற்கு அறிமுகம் செய்துவிட்டு ரேஷ்மியை அதில் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தாள்...
இவ்வாறு திருமணம் சிறப்பாக முடிவடைய மறுவீடு அழைப்பு என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டே வினயின் குடும்பத்தார் வீடு திரும்பினர்...

ஒரு வாரத்திற்கு பின் ரேஷ்மியின் அன்னை கனகா அவளை அழைத்திருந்தார்..

“ஹலோ ரேஷ்மி நல்லா இருக்கியாமா?? மாப்பிள்ளை அப்புறம் அங்க வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களாமா??”

“எல்லாரும் நல்லா இருக்காங்க அம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க... அப்பா எப்படி இருக்காரு??”

“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம்மா.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்...”

“சொல்லுங்க அம்மா..”

“நானும் அப்பாவும் நம்ம ஊருக்கு போயிட்டு வரலாம்னு இருக்கோம்.. உங்க கல்யாணம் முடிஞ்சதும் போகலாம்னு தான் இருந்தோம்... அதுக்குள்ள வேறு வேலை வந்திருச்சி....அதான் இப்போ போயிட்டு வரலாம்னு...”

“ஏன்மா இப்போ கட்டாயம் போகனுமா??”

“ஏன்மா அப்படி கேக்குற??”

“இல்லை எனக்கும் ஊருக்கு போகனும் போல இருக்கு... வினய்கிட்ட கூட சொன்னேன்... அவரும் லீவ் கிடைக்கும் போது போயிட்டு வரலாம்னு சொன்னாரு...”

“அதுக்கு என்னமா... நீங்க ரெண்டு பேரும் ஜோரா போயிட்டு வாங்க... நாங்க இப்போ போறது நம்ம குலதெய்வத்திற்கு வைத்த வேண்டுதலை நிறைவேற்ற... இப்போ எங்ககூட வந்தீங்கனா கோயில் குளம்னு தான் சுத்தனும்... அதுனால நீங்க ரெண்டு பேரும் இன்னொரு நாள் சாவகாசமா போயிட்டு வாங்க...”

“சரி மா... எப்போ புறப்படுறீங்க???”

“நாளைக்கு காலையில மா... போயிட்டு ஒரு கிழமை தங்கிட்டு வர்ற மாதிரி தான் அப்பா சொன்னாங்க... பார்ப்போம்..”

“சரிமா.. பத்திரமா போயிட்டு வாங்க... கிளம்புவதற்கு முதல் கோல் பண்ணுங்க...”

“சரி ரேஷ்மி... இப்போ நான் வைக்கிறேன்.. நீ மாப்பிள்ளை கிட்ட சொல்லிரு..”

“சரிமா... நான் சொல்லிர்றேன்..” என்று அழைப்பை ரேஷ்மி துண்டிக்க அவளுக்கு எதிரே கட்டிலில் அமர்ந்து தன் மொபலை நோண்டிக்கொண்டிருந்த வினய்

“என்ன ஷிமி என்னோட பெயரெல்லாம் அடிபடுது... என்ன சொல்லுறாங்க என் அத்தை??” என்று கேட்க அவர்கூறியதை சுருக்கமாக கூறினாள்...

“ஷிமி நீயும் ஊருக்கு போகனும்னு சொன்ன தானே... இப்போ அவங்களோட போயிட்டு வரலாமே...??”

“இல்லைங்க... அது சரி வராது... கல்யாணம் முடிந்து முதல்முறை ஊருக்கு போகும் போது ஜோடியா தான் போகனும்... தனித்தனியா போறது சரிப்படாது...”

“ஊருக்கு மட்டுமா... இல்லை எங்க போனாலுமா...??” என்று ஒருவித மந்தகாசன பார்வையுடன் வினய் கேட்க ரேஷ்மி அதை கவனியாது

“எங்க போனாலும் ஜோடியா தான் போகனும்... ஆனா...”என்றவள் வினயின் மாற்றம் உணர்ந்து அவனை கண்ணோடு கண் நோக்க அவனோ

“ஆனா...” என்று அவள் முடிக்காமல் விட்டதை எடுத்து கொடுக்க ரேஷ்மி அவனினது விழிகள் வீசிய கயிற்றில் கட்டுண்டதால் அவளது மனதில் தோன்றிய வார்த்தைகள் வாய் வழியாக வெளி வர மறுத்துவிட்டது.. இதே நிலை தொடர இருவருக்குமே தன் பார்வைகளை விலக்கிக் கொள்ள தோன்றாதிருக்க சட்டென அறையின் விளக்குகள் அணைந்தது.....

அணைந்த விளக்குகள் அவர்கள் இருவரையும் மறைக்க ரேஷ்மிக்கோ பயம் பிடித்துக்கொண்டது... ரேஷ்மிக்கு சிறு வயதில் இருந்தே இருட்டு என்றால் ஒரு வித பயம்... அதை பயமென்று சொல்வதை விட ஒரு விதமான பாதுகாப்பில்லாத உணர்வை அவளுள் உண்டு பண்ணும்.. திருமணத்திற்கு முன் இவ்வாறு நடந்தால் தன் அன்னையை கட்டிக்கொள்வாள்...
ஆனால் இன்று அன்னை இல்லாத காரணத்தால் ஒருவாறு கைகளால் துழாவி சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த வினயின் கைகளை பிடித்தவள் அவனை இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்...

அவளது பயம் அவனுடனான இடைவெளியை குறைக்க அவளது அணைப்பு இறுகிக்கொண்டே சென்றது...... அங்கு வினயின் பாடோ திண்டாட்டாட்டமாகியது... அவளது ஒற்றை பார்வையிலேயே கிளர்ந்து எழும் அவனது உணர்வுகள் இன்று அவளது இறுகிய அணைப்பினால் எரிமலைக்குழம்பாய் கொதித்தெழுத்தொடங்கியது.... அதை அடக்கும் வழியறியாது அவன் அவளை விலக்க அவளோ

“ப்ளீஸ் வினய்... பயமா இருக்கு..” என்றுவிட அவனால் ஒன்றும் செய்யமுடியால் போனது... இதனிடையே அவளது வியர்வைத்துளிகள் அவனது சட்டையை நனைத்திருக்க அவன் நிலை இன்னும் மோசமாகியது.... இதை தொடரவிட்டால் இப்போது இருக்கும் சுமூக உறவிற்கும் பங்கம் வந்துவிடும் என்று நினைத்து வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து தன்னவளை பிரித்தவன்

“சாரி ஷிமி.... ஐ காண்ட் கன்ட்ரோல் மை செல்ப்... ட்ரை டு அன்டஸ்டான்ட் மீ... ப்ளீஸ்...”

“ஏன் வினய் கோபப்படுறீங்க..எனக்கு இருட்டுனா பயம்... அதான்...”

“எனக்கு புரியிது ஷிமி பட்...கொஞ்சம் இப்படியே இரு போனை எடுத்து டாச் டைல்டை ஆன் பண்ணுறேன்..”என்றுவிட்டு கட்டிலில் கிடந்த தன் மொபலை தடவி தேடி எடுத்தவன் டாச் லைட்டை ஆன் செய்தான்...

வெளிச்சத்தை கண்டதும் ஆசுவாசமடைந்தவள் அப்போது தான் அவள் தன் கணவனை கட்டியணைத்தது நினைவு வந்தது.... அதனாலேயே அவன் தன்னை வலுக்கட்டாயமாக விலக்கினான் என்றும் உணர்ந்தாள்.... தன் மேல் தவறிருந்த போதும் தன்னிலையை புரிந்து கொண்டு அவன் நடந்து கொண்ட விதம் அவளை கவர்ந்தது...

அவனை அணைத்திருந்த போது கிடைத்த பாதுகாப்புணர்வு தன் தந்தையிடம் எப்போதும் கிடைக்கும் அரவணைப்பை அவளுக்கு உணர்த்தியது.... என்னவன் என்று அவள் உடல், பொருள், ஆவி அனைத்தும் உணர்ந்த போதும் அவளால் அவளது தயக்கத்தை மட்டும் உடைத்தெறிய முடியவில்லை.. எதனால் இந்த தயக்கம் என்றும் அவளால் சரியாக அறியமுடியவில்லை...இவ்வாறு இருவேறு மனநிலைகளில் அவள் இருக்க மீண்டும் விளக்குகள் அனைத்தும் ஒளிபெற்றன....

மின்சாரம் வந்த அடுத்த நொடி வினய் தன் மொபலை எடுத்துக்கொண்டு ரேஷ்மியை திரும்பியும் பார்க்காது பால்கனிக்கு சென்றுவிட்டான்...
அவளோ குழப்பத்தில் கட்டிலில் படுத்து உறங்கத்தொடங்கிவிட்டாள்...

அரை மணித்தியாலத்திற்கு பின் வந்த வினய் மஞ்சத்தில் குழந்தையாய் சுருண்டு படுத்திருக்கும் தன் மனைவியை பார்த்தவனுக்கு அப்போது சிரிப்பு தான் வந்தது... அவள் உறங்கும் போது எப்போதும் அவள் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு வீற்றிருக்கும்.... திருமணமான புதிதில் அது தன் கற்பனை என்று நினைத்திருந்தவன் தொடர்ந்த கவனித்த பின்பே அது அவளது நிஜப்புன்னகை என்று தெரிந்து கொண்டான்...
அந்த புன்னகை வழமை போல் இன்றும் அவனை வா என்று அழைக்க அருகில் சென்றவன் அவள் தூக்கம் கலையாதவாறு அவளது முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு போர்வையை எடுத்து போர்த்தி விட்டவன் விளக்கை அணைத்துவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டான்....

இரண்டு நாட்களுக்கு பின் வினய் ஆபிஸ் போக தயாராகிக் கொண்டிருந்தான்... அவனுக்கு ரேஷ்மி உணவு தயார் செய்துக்கொண்டிருந்த போது அவளது மொபைல் இரு முறை அழைத்து ஓய்ந்தது....

“ரேஷ்மி உன்னோட போன் இரண்டு தரம் ரிங் ஆகி கட்டாகிருச்சு... வந்து யாருனு பாரு...”

“நான் வேலையா இருக்கேங்க... யாரு மிஸ்ட் கால்னு பாருங்க.” என்று ரேஷ்மி கூற வினய் அவளது மொபைலை ஆராயத்தொடங்கினான்...

“ஷமி அத்தை தான் கால் பண்ணி இருக்காங்க...”

“அம்மாவா...?? இருக்கட்டும் நான் வேலையை முடிச்சிட்டு வந்து அவங்க கூட பேசிக்கிறேன்...”

“ஷமி மறுபடியும் ரிங் ஆகுது...”

“எடுத்து பேசுங்க பா...”

“எதுக்கு... அத்தை ஐயோ மாப்பிள்ளைனு பதறுவதற்கா??? நீயே வந்து பேசு...” என்று அவளது அழைபேசியை அவளிடம் எடுத்து சென்றவன் அவளிடம் கொடுத்துவிட்டு சமையலறையில் இருந்து வெளியேறினான்...

அலுவலகம் செல்ல தயாரான வினய் ரேஷ்மியை தேடிக்கொண்டு சமையலறைக்கு வர அங்கு அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது... ஒருகணம் அவனது மூளை நிறுத்தம் செய்ய அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை...

அடுப்பில் இருந்து வந்த கருகும் வாசனை அவனுக்கு செய்ய வேண்டியதை உரைத்த அடுத்த கணம் விரைந்து சென்று அடுப்பை அணைத்தவன் அடுப்பில் இருந்த பாத்திரத்தை இறக்கி வைத்தான்...

பின் கீழே மயங்கி கிடந்த ரேஷ்மியை தன் மடியில் ஏந்தியவன் அவளை எழுப்ப முயல அவளிடம் எந்தவித அசைவும் இல்லை... அவளை கைகளில் ஏந்தியவன் தங்களது அறைக்கு தூக்கி வந்தான்... அவன் சமையலறையில் இருந்து வெளிய வந்த வேளையில் கோயிலுக்கு சென்றிருந்த வீரலட்சுமியும் வீடு திரும்பியிருந்தார்... ரேஷ்மியை கையில் ஏந்தியவாறு நின்றிருந்த வினயிடம் என்னவென்று விசாரித்தவர் அவனை அவனுடைய அறைக்கு செல்ல விரைவு படுத்தினார்.. அவனை பின்தொடர்ந்து அவர்களது அறைக்குள் சென்றவர் வினய் ரேஷ்மியை கட்டிலில் கிடத்தியதும் மின்விசிறியை உயிர்பிக்கச் சொன்னார்.. வினய்

அங்கிருந்து நகன்றதும் அவளது உடைகளை தளர்த்திவிட்டவர் அருகிலிருந்த மேசையில் இருந்த தண்ணீர் குவளையில் இருந்த தண்ணீரை ரேஷ்மியின் முகத்தில் தெளிக்க அவளிடம் சிறு அசைவு தெரிந்தது... அதற்குள் வினய் அவளருகில் அமர்ந்து மெதுவாக அவளது தலையை வருடிக்கொடுக்க வீரலட்சுமியோ அவளை எழுப்ப முயல மெதுவாக கண்விழித்தாள் ரேஷ்மி...

“ரேஷ்மி இந்தா இந்த தண்ணியை கொஞ்சம் குடி..”என்று வீரலட்சுமி கூற பலவீனமாக உணர்ந்தவளை எழும்பி அமர உதவி செய்தான் வினய்..
வீரலட்சுமி தண்ணீர் புகட்ட மெதுவாக நீரை அருந்தியவள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்

“ஷிமி திடீர்னு என்னாச்சு?? உடம்புக்கு ஏதும் முடியலையா???” என்று வினய் கேட்க அதுவரை நேரம் அவளது மூளை மறந்திருந்த விடயம் மீண்டும் அவளது நியாபகத்திற்கு ஐயோ என்று கதறத்தொடங்கிவிட்டாள்....

அவளது இந்த திடீர் அழுகையில் பதறிவிட்டனர் வினயும் வீரலட்சுமியும்... விரைந்து அவளை அணைத்துக்கொண்ட வீரலட்சுமி

“ரேஷ்மி இங்க பாரு என்ன நடந்தது??? எதுக்கு அழுகுற??? சொல்லுமா???” என்று வீரலட்சுமி கேட்டுவிட்டு வினயை பார்க்க

“ஷிமி என்னாச்சுமா??? அத்தை கூட தானே போனில் பேசிட்டு இருந்த??? அவங்க என்ன சொன்னாங்க???” என்று அவன் கேட்க ரேஷ்மி அம்மா அப்பா என்று அரற்ற தொடங்கிவிட்டாள்...
அவர்கள் இருவரின் பேச்சும் காதில் விழாதது போல் அவள் தொடர்ந்து அரற்ற அவளை உலுக்கினார் வீரலட்சுமி... அப்போதும் இதே நிலை தொடர அவளை ஓங்கி அறைந்தே விட்டார் வீரலட்சுமி... வீரலட்சுமி அவளை அறைந்ததும் அம்மா என்று கூவிவிட்டான் வினய்... ஆனால் அந்த அடி அவளது அரற்றலை நிறுத்திவிட்டு அவளது கண்ணீர் கடலை வரவழைத்தது... இவளது நடவடிக்கையில் பயந்து போன வினய் சிறுபிள்ளையாய்

“அம்மா ஷிமிக்கு என்னாச்சுமா??? எதுக்கு இப்படி நடந்துக்கிறா???எனக்கு ரொம்ப பயமா இருக்குமா... ஆஸ்பிடல் கூட்டிட்டு போவோமா???”

“கொஞ்சம் பொறுடா...நீ போய் அவ போனை எடுத்துட்டு வா...” வினயை அனுப்பி ரேஷ்மியின் மொபலை எடுத்து வர சொன்னவர் ரேஷ்மியின் அருகில் அமர்ந்துக்கொண்டார்.
திரும்பி வந்த வினயிடம் ரேஷ்மியின் அன்னைக்கு அழைத்து விசாரிக்க சொன்னார் வீரலட்சுமி....

அதன்படி அவனும் அழைத்து விசாரிக்க அவனுக்கு அதிர்ச்சியான செய்தியொன்று பதிலாக கிடைத்தது... அவனது முகமாறுதலையும் உரையாடலையும் அவதானித்த வீரலட்சுமிக்கு ஏதோ சரியில்லை என்று புரிய வினய் பேசி முடிக்கும் வரை பொறுமையாக கருந்தார்..

“கவின் என்னாச்சு?? ரேஷ்மி அம்மா என்ன சொன்னாங்க???” என்று வீரலட்சுமி கேட்க அமைதி காத்தான் வினய்...

“கவின் எதுக்கு நீ அமைதியா இருக்க?? என்ன நடந்திச்சு??? சொல்லுடா...” என்று கேட்க

“அம்மா அத்தைக்கும் மாமாவுக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சி...”

“என்னடா சொல்லுற??”

“ ஆக்சிடன்ட் ஆன இடத்துலயே அத்தையும் மாமாவும் தவறிட்டாங்க...” என்று வினய் கூற

“டேய் என்னடா சொல்லுற...? நீ சொல்லுறது உண்மையா??? உனக்கு யாரு சொன்னா??”

“அத்தையோட போனில் என்கூட பேசுன பொலிஸ் ஆபிசர் தான் சொன்னாரு... கார் வருகின்ற வழியில் ஆக்சிடன் ஆகினதாகவும் ரெண்டு பேரும் ஆக்சிடன் ஆகுன இடத்துலயே இறந்துட்டதா சொன்னாரு... பாடியை கலெக்ட் பண்ண வர சொல்லிருக்காங்க...” என்று சொல்ல திடீரென்று ரேஷ்மி கத்தத்தொடங்கினாள்..

“நோ... அவங்க பொய் சொல்லுறாங்க....அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதுவும் நடந்திருக்காது... அது நம்ம காரா இருக்காது.. வேறு யாராவதா இருக்கும்.. அது அம்மா அப்பா இல்லை... அவங்க இப்படி என்னை விட்டுட்டு போகமாட்டாங்க.. அவங்க அபொய் சொல்லுறாங்க.. “ என்று நிறுத்தாமல் கதறியவளை என்ன செய்வதென்று புரியாது இருவரும் முழித்தனர்...

வினய் ரேஷ்மியை அணைத்து அமைதிப்படுத்த முயல அவளோ உருப்போட்டது போல் சொன்னதையே மறுபடியும் சொல்லிக்கொண்டிருந்தாள்... அறையிலிருந்து வெளியேறிய வீரலட்சுமி தன் அறையில் இருந்த இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்து சென்று ஜூஸ் தயாரித்து அதில் அந்த இரண்டு மாத்திரைகளையும் கலந்து எடுத்து வந்தார்...

வினயின் பிடியில் இருந்து ரேஷ்மியை விடுவித்தவர் வற்புறுத்தி அந்த ஜூசை பருகச்செய்தான்...
குடித்ததும் தெம்படைந்தவள் மீண்டும அரற்ற தொடங்க வினய்க்கு அவளது நிலையைக் கண்டு இதயத்தில் இரத்தம் கசிந்தது.. நேரம் ஆக ஆக அவளது வேகம் குறைய சட்டென்று மடிந்து சரிந்தவள் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டாள்... அவள் திடீரென மயக்கமடையவும் பதறிய வினயிடம் விஷயத்தை கூறியவர் டாக்டரை அழைத்து வருமாறு கூறினார்... உடனே சென்று டாக்டரை அழைத்து வந்தான் வினய்..
அவளை பரிசோதித்த மருத்துவர் அவளது நிலைமையை விசாரிக்க நடந்த அனைத்தையும் கூறினான் வினய்..

“மிஸ்டர் கவினயன் அவங்க ஏதோ அதிர்ச்சியில தான் அப்படி பிஹேவ் பண்ணியிருக்காங்க.. முதல்ல வந்த மயக்கத்திற்கு கூட அதான் காரணம்... அவங்க தூங்கி எழுந்த பிறகு குடிக்க ஏதாவது குடுங்க... அப்புறம் நார்மல் ஆகிருவாங்க... ஆனா அவங்க இந்த இழப்பில் இருந்து மீள வரைக்கும் யாராவது அவங்க பக்கத்துலயே இருங்க... அவங்க மனநிலை எப்படினு நமக்கு இன்னும் சரியாக தெரியலை.. அதுனால அவங்களோட நடவடிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் கவனிச்சிட்டே இருங்க.... ஏதும் வித்தியாசமா தெரிஞ்சா அவங்களை கவுன்சிலிங் அனுப்பலாம்.... எதுவும் இல்லைனா ஒரு பிரச்சனையும் இல்லை... இப்போதைக்கு ஒரு டாப்லேட் எழுதித் தரேன்.. அதை மட்டும் அவங்க சாப்பிட்ட பிறகு குடுங்க...”என்றுவிட்டு மருந்தெழுதிக்கொடுத்துவிட்டு விடை பெற்றார் மருத்துவர்...

அவர் சென்றதும் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டுவிட்டு வெளியே வந்த வினயிடம்

“கவின் நீ ஆபிசிற்கு லீவ் சொல்லிட்டு கிளம்பு... அங்கே போய் பார்த்துட்டு எனக்கு கால் பண்ணு.. நான் ரேஷ்மி சித்தப்பா கூட பேசி மற்ற விஷயங்களை கவனிக்கிறேன்...”

“சரி மா... ரேஷ்மி....”

“அவ எழும்ப குறைஞ்சது ஐந்து மணிநேரமாவது ஆகும்... நீ முதல்ல கிளம்பு..” என்று வினயை கிளப்பியவர் பின் மற்றையதை கவனிக்க தொடங்கினார் வீரலட்சுமி...


உன்னாலே உனதானேன் 1


உன்னாலே உனதானேன் 3
 
Last edited:

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN