சாதி மல்லிப் பூச்சரமே!!! 21

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 21

மறுநாள் விடியற்காலையே தன் மனைவியின் அறைக்கு வந்து நின்றான் வேந்தன். பாட்டி எழுந்து சென்று விட, தென்றல் மட்டும் படுக்கையில் சயனத்தில் இருக்க


மனைவியை நெருங்கி அவள் இருபுறமும் கை ஊன்றி பட்டும் படாமலும் அவள் மேல் படர்ந்தவன், தன்னவளின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்திரை பதித்து “பாப்பு குட்டி... எழுந்துரு டா.... இன்னிக்கு வெளியே போகணும்” என்று கொஞ்ச


சோம்பலாக கண் விழித்தவளின் எதிரில் கணவனின் முகத்தைப் பார்த்தவள்,“என்ன மாமா இது? ஜெயம் படத்துல வர்ற ஹீரோ மாதிரி அழகா தொங்கிட்டு இருக்க!” மனைவி கேட்க


“பார்லா... இப்போம்லா என் பொஞ்சாதி கண்ணுக்கு நான் ஹீரோவா தெரியுதேன் போல...” என்றவன் இப்போது அவள் கண்கள் இரண்டிலும் முத்தமிட்டு “சீக்கிரம் எழுந்துரு டா... போகணும்...” என்க


“என் மாமா எப்போதுமே எனக்கு ஹீரோ தான்! எழுந்துரு எழுந்துருனு சொல்ற, தள்ளிப் போகாம எப்படி? தள்ளிப் போ மாமா” இவள் சிணுங்க


“நான் தள்ளிப் போவணுமா? சரி… அப்போ ஒரு முத்தம் குடு. நான் ஒனக்கு எம்புட்டு தந்தேன்?” இவன் நேரம் பார்த்துப் பேரம் பேச


“ஆத்தி! கருக்கல்லயே எழுந்து பல்லைத் தேச்சிட்டு கழனி காடு பாக்கப் போவாகளா... இல்ல இப்டி பொஞ்சாதிட்ட வம்பு செய்வாகளா?” நானும் திருநெல்வேலிக்காரி தான் என்பதை பேச்சில் காட்டியவள் “தள்ளி போ மாமா... நான் எழுந்திருக்கணும்” இவள் மறுபடியும் சிணுங்க


“முடியாது… நீ முத்தம் குடுத்தாதேன்..” இவன் பிடிவாதம் பிடிக்க


“முடியாது… என்ன டா செய்வ?” இவளும் தான் பிடிவாதத்தில் சளைத்தவள் இல்லை என்பதைக் காட்ட


“நீயா குடுத்திருந்தா நெத்தியில வாங்கிட்டு போயிருப்பேன். இப்போ நானா குடுக்கறதால நேரடியா ஒதடுதேன்...” என்றவன் தன் கையை விலக்கி மனைவி மேல் படர இருந்த நேரம்... கணவனின் நோக்கம் புரிந்து இவள் புரண்டு குப்புற படுக்க, அவனின் இதழ்களோ மனைவியின் தலை முடியில் பதிந்தது. “அடிப் பாவி சண்டாளி! வட போச்சேனு பொலம்புத நெலமைக்கு என்ன ஆளாக்கிட்டியே டி!” இவன் புலம்ப, வாய் விட்டே சிரித்தாள் அவன் மனையாள்.


இப்படியே சிரிப்பும் சந்தோஷமாக இருவரும் கிளம்பி வெளியே சென்றார்கள். மனைவி தன் தொழிலில் சட்டப்பூர்வமாய் சில விஷயங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக வக்கீலான தன் நண்பனிடம் மனைவியை அழைத்து வந்திருந்தான் வேந்தன்.


தென்றல் லேசில் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதைப்போல் அவனும் லேசில் மனைவியை விலக விடவில்லை. அவளிடம் பிடிவாதமாகப் பேசி பேப்பரில் கையெழுத்து வாங்கின பிறகு தான் அங்கிருந்து நகர்ந்தான் அவன்.


பின் மனைவியைத் தன் தொழில் இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கும் சில தாள்களில் கையெழுத்து வாங்கியவன், அங்கு வேலை செய்யும் முக்கியமானவர்கள் சிலரிடம் மனைவியை அறிமுகப்படுத்தி விட்டு இருவரும் கிளம்ப, கணவனிடம் எதுவும் பேசாமல் உம்... என்ற முகத்துடன் வந்தாள் தென்றல்.


“ஹாய் செல்லம்...” பிரகாஷ்ராஜ் போல் இவன் மனைவியை அழைக்க, அவளோ கணவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.


“பாப்பு குட்டி! என்னட்டி கோவம்?” இவனும் விடாமல் கேட்க, அவளிடம் இப்போதும் பதில் இல்லை.


திடீரென்று இவன் காரை நிறுத்த, “எதுக்கு மாமா வண்டிய நிறுத்தின?”இவள் கேட்க, இப்போது மவுனத்தை தத்தெடுத்தது இவன் முறையானது.


“வண்டிய எடு மாமா...” இவள் மீண்டும் சொல்ல


“மாமா மேல கோவம் இல்லனு சொல்லு எடுக்குதேன்” இவன் வழக்கம் போல பேரம் பேச


“செய்யறத எல்லாம் செய்துட்டு, பிறகு கோபம் இருக்கக் கூடாதுனா எப்படி மாமா? அதெல்லாம் கோபம் அப்படியே தான் இருக்கு” இவள் வீம்பு பிடிக்க


“அத எப்டி போக வெக்கணும்னு எனக்குத் தெரியுமே” என்றவன் மனைவியை இழுத்துத் தன் தோள் சாய்த்து அவள் உதட்டில் முத்தமிட… அவள் திமிர, அப்போதும் அவளை அடக்கி தன் கைக்குள் கொண்டு வந்தவன் முத்தமிட்டு நிமிர்ந்து “இப்போம் கோவம் இல்லதேன?” இவன் குறும்பாய் கேட்க, அவள் முகத்தைத் திருப்ப


“நான் படிக்காதவன்தேன்… என்னைய ஏமாத்த இங்கன நெறைய பேர் காத்துகிட்டு நிக்காவ... அதேன்... படிச்ச பொஞ்சாதி என் கூட இருக்குதானு அவிங்களுக்கு காமிக்கத்தேன் இப்டி செஞ்சேன். அதுக்குப் போய் கோவிச்சுக்குறவ....” இவன் விளக்க


கணவன் சொல்வது பொய்யே என்று உணர்ந்திருந்தாலும் “எனக்குப் பிடிக்காததை எல்லாம் கட்டாயப் படுத்தி செய்ய வைக்கிற மாமா நீ...”


“அப்டி தெரியலையே… நம்ம முத்தம் புடிச்சிதேன இருந்துச்சு ரெண்டு பேத்துக்கும்” இவன் இடக்காய் சொல்ல, முகம் சிவக்க அவள் தன்னவனைப் பொய்யாய் அடிக்க, இவன் அவளை அணைக்க, பிறகு தான் கிளம்பினார்கள்.


நேரே வீட்டுக்குப் போகாமல் தங்கள் பண்ணை வீட்டுக்கு மனைவியை அழைத்து வந்தான் வேந்தன். இவள் கேள்வியாய் கணவனைப் பார்க்க, ஒரு கவரை மனைவியிடம் நீட்டியவன் அதில் உள்ள ஆடையைப் போட்டுக் கொண்டு பம்ப் செட்டுக்கு வரச் சொல்ல, அதைப் பிரித்துப் பார்த்தவளின் கையில் தவழ்ந்தது அவளுக்கான அளவில் ஒரு நீச்சல் உடை. கண்கள் விரிய, “இதையா!” என்றவள் “யாராவது வரப் போறாங்க மாமா...” என்று கூச்சப் பட


மனைவியின் வெட்கத்தை ரசித்தபடி அவளை நெருங்கியவன், “இங்கன ஒரு ஈ காக்கா கூட வராது. ஒன் மாமன் என்னைய தவிர... ஆனா இதுக்கே இப்டி மொகம் செவக்குறியே டி... வீட்ல நாள் குறிச்சிறட்டும்... அன்னைக்கு... மோட்டார் ரூமுக்கு மேலே வெட்ட வெளியில் வானத்து நெலவு வெளிச்சத்துல சம்பங்கி பூ வாசத்துக்கு நடுவுல ஒன்னைய அப்டியே...” இன்னும் முகம் சிவக்க மேற்கொண்டு கணவனைக் கூற விடாமல் அவன் வாயைத் தன் கையால் பொத்தி இருந்தாள் தென்றல்.


இருவரும் தங்களுக்கான உலகத்தில் இருந்து விட்டு வீட்டுக்கு வர, மனைவியை மட்டும் விட்டுட்டு ஒரு வேலையாக வெளியே சென்று விட்டான் வேந்தன்.


பின் இவன் திரும்பி வர, “எய்யா, சோறு எடுத்து வெக்குதேன். வந்து சாப்டு போ” தாய் தாமரை அழைக்க


“நீங்க சோறு போடவா நான் பொஞ்சாதியக் கெட்டிட்டு வந்தேன்? எல்லாம் என் பொஞ்சாதி பாத்துக்கிடுவா... நீங்க போங்க” இவன் பதில் தர, ஒரு சிரிப்புடன் விலகிச் சென்றார் தாமரை.


“கெழவி! என் பொஞ்சாதி எங்கன இருக்கறவ?’’ இவன் பாட்டியிடம் கேட்க


“சீக்கு வந்த கோழி கணக்கா சுத்திகிட்டு கெடந்தா. அவ அப்பனும் பேசறது இல்ல. ஒன் அம்மையும் அவட்ட பேசறது இல்ல. அதேன் பொறத்தால புளி உளுக்கி அத செத்த பிள்ளைகளோட சேர்ந்து உரிக்கச் சொன்னேன். அங்கனதேன் இருக்குதா. போய் பாருலே”


ஆமாம்! இன்னும் மாறன், தாமரை, ஐயாரு என்று யாரும் அவளிடம் பேசவில்லை. மலரும் சுந்தரமும் தான் ஏதாவது பேசுவார்கள். அதனால் அவளுக்கு ஒரே ஆறுதல் கணவன் வேந்தன் தான்.


பின்கட்டுக்கு வந்தவன், தூரத்தில் நின்ற படி “பாப்பு! இங்கன வா” என்று மனைவியை அழைக்க


“மாமா! நான் முக்கியமான வேலையில் இருக்கேன். நீ போ மாமா… நான் பிறகு வரேன்” இவள் அங்கு இருப்போருடன் பேசிக் கொண்டு வேலை செய்யும் சந்தோஷத்தை இழக்க மனம் வராமல் பதில் தர


“இப்போம் நீ இங்கன வரல... அங்கன வந்து ஒன்னைய நான் தூக்கிட்டு வந்துருவேன்” இவன் மிரட்ட


அவளுடன் கூடியிருந்த மற்ற பெண்கள் வாய் பொத்தி சிரிக்க, கோபத்தாலும் வெட்கத்தாலும் முகம் சிவந்தவள், எழுந்து வந்து கணவன் முன் நிற்க


அவனோ தான் எதற்கு அழைத்தோம் என்பதை மறந்து மனைவியை வேறு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். கெண்டைக் கால் தெரிய, தூக்கி இடுப்பில் சொருகிய சேலை, அதிலும் இடுப்பு பிரதேசமோ வியர்வையில் அழகான வெண்ணைக் கட்டியாய் மிளிர்ந்தது. முகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முடிகள் பறந்தது. முகமோ மென்மையாய் இப்போது தான் மலர்ந்த மலர் என இருந்தது. இதை எல்லாம் விட இரண்டு கையில் பதிந்த புளியின் பிசு பிசுப்பால் தன் முகத்துக்கு நேரே அவள் இரண்டு கைகளையும் தூக்கிப் பிடித்திருக்க, இதை எல்லாம் பார்த்து ஒரு கணவனாய் மனைவியை ரசிக்க ஆரம்பித்தான் வேந்தன்.


“என்ன மாமா... நான் கேட்க கேட்க பேசாம இருக்க... எதுக்கு கூப்பிட்ட?” இவள் கொஞ்சம் அதட்டி கேட்க


“பசிக்குது புள்ள… சோறு எடுத்து வை” அவன் உதடு தான் அசைந்ததே தவிர பார்வை எல்லாம் மனைவியை ரசித்துக் கொண்டு தான் இருந்தது.


கணவனுக்கு பசி என்றதும் “என்னது இன்னும் நீ சாப்பிடலியா? இதை முன்னவே சொல்ல மாட்டியா மாமா?” என்று கோபப் பட்டவள் கை அலம்ப கிணற்றுப்பக்கம் செல்ல


அவ்வளவு தான்... அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தாங்கள் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் என்பதை உறுதி செய்தவன் மனைவியை அலேக்காய் தூக்கிக் கொண்டு மாடி படி சரிவில் தஞ்சம் புக, முதலில் அதிர்ந்தவள் “மாமா! கை எல்லாம் புளி பிசு பிசுப்பு மாமா” இவள் சிணுங்க


அந்த சிணுங்களே அவனுக்குள் அழைப்பை விடுக்க, மனைவியைக் கட்டித் தழுவியவன் அவள் முகம் எங்கும் முத்தமிட... பெண்ணவளோ தன் திணறலை சமாளித்து “மாமா! பசிக்கிதுன்னு சொன்ன” கணவனுக்கு திக்கித் திணறி நினைவு படுத்த, அவனோ அடுத்த நொடி பேசிய அவள் இதழையே தன் இதழால் மூடி இருந்தான். பெண்ணவளும் கணவனுடன் உருக, தன்னிலை மறந்தவள் கணவன் முதுகில் தன் கையால் புளிக் கோலம் இட்டுக் கொண்டிருந்தால் தென்றல்.


“ஐயோ சாரி!” திடீரென ஒலித்த நிலவழகியின் குரலில் தான் கணவன் மனைவி இருவரும் தங்கள் உலகிலிருந்து பிரிந்தார்கள்.


“அது வந்து… நான் மாடியில் பொருள் எடுக்கத்தேன் வந்தேன்...” அழகி திக்கித் திணற, தென்றலோ வெட்கப்பட்டு அங்கிருந்து ஓடியே விட,


வேந்தன் சற்றே அசடு வழிந்தவன், “அது வந்து… சும்மாதேன் அழகி பேசிட்டு இருந்தோம்...” என்று பம்மியவன் அங்கிருந்து விலக நினைக்க


“சரி சரி… அதுதேன்னு நான் ஒத்துக்கிடுதேன். இப்டியே வெளிய போயிராத மச்சான். என் தங்கச்சி ஒன் முதுகு முச்சூடும் அவ கையாள புளிப் பத்து போட்டு இருக்குதா...” வெள்ளந்தியாய் இவள் சிரித்தபடி சொல்ல


“ஹி... ஹி... ஹி....” என்று அசடு வழிய விலகிச் சென்றான் வேந்தன்.


வேந்தன் இவளை வேண்டாம் என்று சொன்னாலும் அழகி, மனதில் வன்மத்தை எல்லாம் வளர்த்துக் கொள்ளவில்லை. அவளுக்கு விதித்ததை நினைத்து ஏற்றுக் கொண்டாள், அதிலும் வேந்தன் தன் காதலில் ஜெயித்து தென்றலைத் திருமணம் செய்ய, அவன் காதல் ஜெயித்த சந்தோஷத்தில் அவன் வாழ்வு சிறக்க வேண்டும் என்று ஆசை கொண்டது இந்த பெண் மனம். அதனால் தான் இன்று இருவரின் அந்நியோன்யத்தைப் பார்த்து பொறாமைப் படாமல் வெள்ளேந்தியாய் அவனைக் கேலி செய்ய வைத்தது.


இப்படிப் பட்ட நல்ல மனம் கொண்ட அழகிக்கு விதி அவள் எதிர்காலத்தில் என்ன வைத்து இருக்கிறதோ?
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 21
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN