சாதி மல்லிப் பூச்சரமே!!! 22

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 22

வேந்தன் தென்றலை சிறு வயதிலருந்தே ஒரு தோழியாய், மாமன் மகளாய், தன் தேவதையாய் பார்த்தவனுக்கு இன்று தன்னில் சரி பாதியாய், உரிமை உள்ள மனைவியாய் பக்கத்தில் பார்க்கவும் அவளை அணு அணுவாய் ரசித்தான் அவன்.


மனைவி மேல் விண்ணை முட்டும் அளவு காதல் இருக்க, அதைத் தன் பார்வையாலும், பேச்சாலும், சீண்டலாலும் அவளிடம் வெளிப்படுத்தினான் அவன். அதேபோல் அவளிடமும் காதல் இருக்கிறதா என்றால் அது கேள்விக் குறி தான். இருபத்தியோர் வயதான பெண்ணவளுக்கு முதலில் மனதில் தோன்றியது, தான் எப்படிப் பட்ட சிக்கலில் மாட்ட இருந்தோம் என்பது தான். அதிலிருந்து வேந்தன் அவளை மீட்டது மட்டும் இல்லாமல் முதல் ஆளாய் மன்னிக்கவும், அவனிடம் ஒரு ஈர்ப்பு வந்தது.


திருமணமும் நடந்து விட, இவனுடனான திருமணம் வேண்டம் என்று மறுத்து போர்க்கொடி தூக்க பாட்டி இல்லாததால், இது தான் தனக்கு விதிக்க பட்ட வாழ்வு என்பதை ஏற்றுக் கொண்டாள் அவள். மேற்கொண்டு அப்பத்தாவும் அவளுக்கு கொடுத்த புத்திமதியை ஏற்றவள் அதையே பின்பற்றவும் சித்தமானாள். அதனால் வழக்கம் போல் புதுமண தம்பதிகளுக்கே உரிய பேச்சு, சிரிப்பு, சீண்டல் விளையாட்டு என்று கணவனுடன் கூடி மகிழ்ந்து தான் போனாள் அவள்.


ஆனால் இதற்கும் விதி விலக்காய் அவர்களுக்குள் ஒரு விஷயத்தில் பிரச்சனை வரத் தான் செய்தது.


ஒரு நாள் தன் தொழில் வேலையாய் அது சம்பந்தமான அரசாங்கத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பார்க்கச் சென்றவனுக்கு அந்த புது அதிகாரி இடக்காய் பேச, இவன் எகிற, பின் சிறிய கை கலப்புக்குப் பிறகு வீட்டுக்கு வந்தவனுக்கு மனைவியின் அருகாமையை எதிர்பார்க்க வைத்தது.


இவன் மனைவியின் அறைக்கு வந்த நேரம், கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ வேலையாய் இருந்தாள் தென்றல். வந்தவன் லேப்டாப்பை சற்றே நகர்த்தி வைத்து விட்டு அவள் மடியில் தலை சாய்த்து வயிற்றில் முகம் புதைக்க, அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அதேசமயம் கணவனை அரவணைக்கவும் இல்லை அவள்.


சற்று நேரம் பொறுத்தவன், “பாப்பு குட்டி... இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா?” இவனாகவே ஆரம்பிக்க


தன் வேலையில் கவனமாய் இருந்தவளுக்கு அது கேட்காமல் போக, இரண்டு முறை அவன் திரும்ப கேட்ட பிறகே “ஹாங்... என்ன மாமா?” என்று மனைவி கேட்க


“அப்டி என்னட்டி அதுல பாக்குத? ஒன் மாமன் என்னைய பாருட்டி..” என்று கொஞ்சியவன் ஒரு கணவனாய் மாறி சில சில்மிஷங்களைச் செய்ய


“ப்ச்.... சும்மா இரு மாமா.... ஆன்சைட் படிப்புக்காக சில பேப்பர் ஃபில் அப் செய்துட்டு இருக்கேன். இப்போ போய்....” என்று சலித்தவள் தன் வேலையிலேயே கவனமாக இருக்க


ஏற்கனவே கோபத்தில் வந்தவனுக்கு இப்போது மனைவி தன் பேச்சைக் கேட்காமல் தன் தொடுகையை ரசிக்காமல் இருக்கவும், சராசரி ஆண்களுக்கே உள்ள மனநிலைப் படி இன்னும் கோபம் ஏற, “படிக்கவா? அதெல்லாம் வேணாம்னு முந்தியே சொன்னம்ல... ஒழுங்கா என் வீட்டுக்காரியா வீட்ல இரு…” என்று கோபத்தில் கத்தியவன் வாய் வார்த்தையோடு இல்லாமல், அவள் முன்னிருந்த லேப்டாப்பைக் கீழே தள்ளி விட, அது தன் உயிர்ப்பை இழந்திருந்தது.


தன் கனவே உடைந்ததாக நினைத்து இவளும் கோபத்தில் தலையை சிலுப்பியவள், “எதுக்கு? எப்போதும் இந்த தேவைக்கா?” ‘இந்த’ என்ற வார்த்தையில் இவள் அழுத்தம் கொடுத்து கணவன் சற்று முன் செய்த சில்மிஷத்தை அவள் குறிப்பிட்டுச் சொல்ல


அவமானத்தில் கையை ஓங்கி விட்டான் வேந்தன். அந்த கோபத்திலும் அவனால் தன்னவளை நோக்கி கையை மட்டும் தான் ஓங்க முடிந்தது. “நாக்க இழுத்து வெச்சு அறுத்துருவேன் பாத்துக்க. என்ன பேச்சு பேசுத நீ? இதுக்கு முந்தி இப்டி தேன் என்னைய படிக்காத முட்டாள் காட்டான்னு சொல்லி சொல்லி நோகடிச்ச! அப்டி சொன்னதுக்கு அப்பவே உன்னைய பொலந்துருக்கணும். என் மாமன் பொண்ணு எனக்கு பொஞ்சாதியா வரப்போறவனு உன்னைய விட்டேனல்லோ?


அதேன் அன்னைக்கி படிக்காத முட்டாள், இன்னிக்கு பொறுக்கி கணக்கா என்னைய அசிங்கமா பேசுத! ச்சை... மனுசன சாகடிக்கவே எப்போம் பாரு படிப்பு படிப்புன்னு உசுர வாங்குத. இப்போம் கேட்டுக்கிருடி... நம்ம கல்யாணத்த எப்டி புடிவாதமா நடத்தினேனோ அதே போல ஒன் வெளிநாட்டு படிப்புக்கும் முழுக்கு போட வெக்குதனா இல்லையானு பாரு....” என்று அதீத கோபத்தில் குரலை உயர்த்தாமல் கணவன் உறுமி விட்டுப் போக, சுத்தமாக நொறுங்கிப் போனாள் தென்றல்.


இப்படி கணவன் மனைவிக்கு மத்தியில் முன்பு கொஞ்சலும் பின்பு ஊடலுமாய் இருந்த நேரத்தில் தான் குலதெய்வ கோவிலுக்குப் பொங்கல் வைத்து இவர்கள் வீட்டு முறைப் படி சொந்தங்களுக்கு கறி சோறு போட்டு வேண்டியவர்களுக்கு ஆடை கொடுக்கும் நாளும் வர


அதற்காக குடும்பத்தில் அனைவரும் கிளம்ப, கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் எல்லாம் வேறு வேறு வண்டியில் கிளம்ப, தனக்கு இருக்கும் கோபத்தைக் காட்ட தென்றல் காரின் முன்புறம் அமராமல் பின் பக்கம் அமர, அப்போதும் மனைவியின் கோபத்தை ரசித்தவன், ஒரு கள்ளச் சிரிப்புடன் வண்டியை கிளப்பினான் வேந்தன்.


சற்று தூரம் தான் சென்று இருப்பான். மனைவியைச் சீண்டாமல் வருவது அவன் வழமை இல்லையே! அதனால் மனைவியைக் கண்ணாடியில் பார்த்த படி பென்டிரைவில் உள்ள பாடலை அவன் ஒலிக்க விட,
அதுவோ
ஆ: யாரோ சொன்னாங்க

பெ: என்னன்னு
ஆ: (சிரிப்பு) யாரோ சொன்னாங்க
பெ: என்னன்னு
ஆ: ஒரு வண்ணக்கிளி இந்த வழி வந்ததுனு

நிஜமா... அது நிஜமா....

என்று காரில் பாடிய அந்த பாடல் வரிகளை இவன் ஹம் செய்த படி மனைவியைப் பார்த்து புருவத்தை உயர்த்த

அவளோ கணவனை முறைக்க, அப்போது மறுபடியும் பாடல் தொடர்ந்தது....

பெ: ஊரே சொன்னாங்க

ஆ: என்னன்னு
பெ: ஊரே சொன்னாங்க
ஆ: என்னன்னு

பெ: ஒரு ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுமுன்னு

“முதல்ல அந்த பாட்ட நிறுத்து மாமா!” இவள் சீற்றத்துடன் சொல்ல


வாய் விட்டுச் சிரித்தவன் “ஒனக்கு வேணாம்னா நீயே வந்து நிறுத்திக்கோ டி” என்றவன் ஒற்றைக் கண் சிமிட்ட


“போடா...” என்ற முணுப்புடன் இவள் வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொள்ள, மறுபடியும் விட்ட இடத்திலிருந்து பாடல் தொடர்ந்தது...

பெ: நிஜந்தான் அது நிஜந்தான், நிஜந்தான்... அது நிஜந்தான்.....


பெ: நான் பூசும் மஞ்சள் எல்லாம் நீ.... ஒருத்தன் மயங்கிடத்தா....


“அப்டியா?” பாட்டுக்கு எசப் பாட்டாய் இவன் கேள்வி கேட்டு வண்டி ஸ்டியரிங்கில் தாளமிட,
மறுபடியும் பாட்டு தொடர்ந்தது....

ஆ: நான் பாடும் சிந்து எல்லாம்...

நீ.... ஒருத்தி நெருங்கிடத்தான்....


“யோவ் மாமா! போதும்யா உன் பாட்டும் கச்சேரியும். கார நிறுத்து நான் முன்னாடி சீட்டுக்கே வரேன்” மனைவி போட்ட அதட்டலில் இவன் வண்டியை நிறுத்த


முன்புறம் வந்து அமர்ந்தவள், ஓடிக் கொண்டிருந்த பாட்டை நிறுத்தி விட்டு, “இதோ பார்... எப்போதும் போல கோவம் போச்சான்னு கேட்டுகிட்டு என்கிட்ட நீ வரவே கூடாது”. அவன் கொடுக்கும் முத்ததை அறிந்தவள் ஆச்சே! “மீறி வந்த... கோவிலுக்குப் போனதும் ஒரு குடம் தண்ணிய மேல ஊத்திட்டு வீடு வர்ற வரை நாள் முழுக்க அதே ஈரத்தோட இருப்பேன். பிறகு என் உடம்புக்கு ஏதாவது ஆனா அதுக்கு நீ தான் பொறுப்பு!” மனைவி கறாராய் சொல்ல


“ஹா... ஹா... ஹா...” வாய் விட்டு சிரித்தவன் “நீ மதிவேந்தன் பொஞ்சாதி இல்ல? இம்புட்டு உசாரு கூட இல்லனா... பொறவு எப்டி?” என்று சிரிப்பினூடே நக்கல் செய்த படி காரை எடுத்தான் வேந்தன்.


கோவிலில் புதுப் பானையில் தென்றல் கையால் பொங்கல் வைக்கச் சொன்னார்கள். ஆனால் உலை கொதித்ததும் அரிசியின் முதல் பிடியைக் கணவன் மனைவி இருவர் கையால் சேர்ந்து போடச் சொன்னார் பாட்டி. அதன்படியே செய்து பொங்கல் வைத்துப் பூஜை முடித்து, தர வேண்டியவர்களுக்கு இருவரும் ஆடை தர, பின் கடா விருந்து ஆரம்பமானது. கடா வெட்டிய நேரம் கண்ணை இருக்க மூடி கணவனின் கையை இருக்கப் பற்றிக் கொண்டாள் தென்றல்.


ஒரு புறம் கடா விருந்து நடக்க, மறுபுறம் ஒரு பந்தல் கீழ் தண்ணி விருந்தும் நடந்து கொண்டிருந்தது. சரக்கு உள்ளே போகப் போக, சில உறவுகளும் பங்காளிகளும் தென்றல் கடத்தப் பட்டதை ஆராய ஆரம்பிக்க, “ஒங்க ஒறவு வேணும்னு நெனைக்குதேன். இப்போம் அவ என் பொஞ்சாதி. அதனால இனி எதுவும் பேசமாட்டியனு நெனைக்குதேன்” என்று வேந்தன் ஒரு போடு போட, புரளி பேச நினைத்த அனைத்து உறவும் வாயும் மூடிக் கொண்டது


இங்கு கணவன் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருக்க, அங்கு மனைவி அவனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு செண்பகவல்லியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.


“ஐயோ! பெருசாதேன் எகுறிகிட்ட வார்ற! நான் மட்டுமா? ஒன் புருசன் கூடத்தேன் படிக்காதவன் காட்டான்னு சொல்லுதேன். ஏன்? நீயும்தேன் சொல்லி இருக்கறவ!” மோவாயைத் தோள் புறம் இடித்த படி செண்பகவல்லி கேட்க


“ஆமா... சொன்னேன், இப்பவும் சொல்லுவேன். எனக்கு என் மாமனைச் சொல்ல எல்லா உரிமையும் இருக்கு. ஆனா நீங்க யார் சொல்ல? மறுமுறை சொல்லித் தான் பாருங்க… அப்புறம் அந்த நாக்கு என்ன ஆகுதுன்னு காட்றேன்” தென்றல் சளைக்காமல் எகிற


“அம்மாடியோ அம்மா! என்ன பேச்சு பேசுதா இந்தக் குட்டி! வேற வழி இல்லாம பொறந்த வீடு புகுந்த வீடுன்னு ஒரே வீட்ல வாழ வந்த ஒனக்கு இம்புட்டு பேச்சாடி? ஆத்தி!” செண்பகவல்லி விடாமல் இவளைச் சீண்ட


“நான் மட்டும் தான் பொறந்த வீட்டிலே வாழப் போறனா? ஏன்… உங்க பொண்ணப் பெத்து நீங்க எங்க தூக்கிட்டுப் போனீங்க? உங்க அம்மா வீடு தானே? இப்போ உங்க பொண்ணு எங்க வாழப் போறா? வேறு வழி இல்லாம அவ பிறந்த வீட்டில் தானே? உங்க வாய் ஜாலம் இங்க பலிக்கலன்னு கூடவே கொசுறா வீட்டோட மாமியாரா நீங்களும் உங்க பிறந்த வீட்டுக்குப் போகத் தானே போறீங்க?”


“தென்றல்!” கணவனின் அதட்டலில் இவள் பேச்ச பாதிலேயே நின்றது.


“அத்த! அவ என்ன சொல்லி இருந்தாலும் நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதிய....”


“என்னமோ வேந்தா! நீ வந்து சொல்லுதியேனு போகுதேன்...” குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற படி அவர் விலக


“மாமா... அவங்க ஜாடை பேச்சால.. உன்னை என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா?” இவள் கணவனிடம் எகிற


“எல்லாம் எனக்குத் தெரியும். மூர்த்தி மாமாவுக்காண்டி இனி நீயும் பேசாமத்தேன் போகணும்....” என்று ஆணித்தரமாய் சொல்லியவன், “சரி இதுக்கு மேல இங்கன ஒண்ணும் ஒனக்கு வேல இல்ல. அம்மைய ஆச்சிய எல்லாம் கூட்டிகிட்டு நீயும் கெளம்பு. நான் வார்றதுக்கு நேரமாகும். ராவுலதேன் வருவேன்” என்றவன் அதற்கான ஏற்பாட்டைச் செய்ய பொருமிக் கொண்டே கிளம்பினாள் அவன் மனைவி.


சொன்னது போல் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை இரவு வந்து பார்த்தவன், “என்ட்ட ஆயிரம் கோவம் இருந்தேலும்.... என்னைய விட்டுக் குடுத்துற மாட்டா என் பாப்பு குட்டி” என்று மனைவியைச் சிலாகித்த படி மனைவியின் மனதில் இருக்கும் திட்டம் தெரியாமல் தன்னவளின் நெற்றியில் முத்தமிட்ட படி விலகிச் சென்றான் வேந்தன்.


மறுநாள் பவுர்ணமி என்பதால் இரவு, ஊரே ஆற்றங்கரை ஓரம் நிலாச் சோறுக்கு ஒன்று கூடினார்கள். வேந்தன் மற்றும் தென்றலுடன் நவீன், நரேன் அமர்ந்திருக்க, பேச்சும் சிரிப்புமாய் ஒருவர் காலை மற்றொருவர் வாரிக் கொண்டிருக்க, தென்றலோ, “இங்க பார்... உங்களுக்கு எல்லாம் இரவுல தான் நிலவு தெரியும். நான் பகல்லையும் பார்த்து இருக்கேன். அதுவும் முன்னூத்தி அறுபத்தைந்து நாளும்... எப்படினு சொல்லுங்க?” இவள் சீரியசாய் கேட்க



வேந்தன் முதற்கொண்டு அவர்களோ உதட்டைப் பிதுக்க, “பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கருப்பு நிலா....” என்று பாடியவள் தன் இரு கையையும் விரித்துக் கணவனைக் கை காட்டி அழகாய் சிரிக்க


“ஓ..... ஓஹ்...” போட்டார்கள் நவீனும் நரேனும். வேந்தனோ அவளைக் காதல் பார்வை பார்க்க முகம் சிவந்து போனாள் தென்றல்.


நரேன், “அண்ணே! அண்ணி உங்களை நெனச்சு ஒரு பாட்டு படிச்ச போல நீங்க ஒரு பாட்டு படிங்க” கேட்க


தன் இரு கையையும் தலைக்குக் கீழே கொடுத்து மணலில் படுத்து விண்ணில் தவழும் நிலவைப் பார்த்தவன், அடுத்த நொடியே எந்த தயக்கமும் இல்லாமல் அவன் உதடுகளோ இந்தப் பாடலை உதிர்த்தது...


“கண்ணுக்கொரு வண்ணக்கிளி

காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சிக்கொரு வஞ்சிகொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என் காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்தும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்...”
தன் காதலை தன் உணர்வை வேந்தன் தன் குரலில் காட்ட, கண் கலங்கினாள் தென்றல்.


“வாவ் சூப்பர்ணே! செமையா இருந்துச்சு பாட்டு!” என்ற நவீன் குரலில் நிகழ்வுக்கு வந்தான் வேந்தன்.


இரவு வீட்டு முன் காரை நிறுத்தியவன், மனைவி இறங்கும் நேரம், “நாளைய ராத்திரி நமக்கான நாளு... சாய்ங்காலமே கெளம்பி இரு. பண்ணை வீட்டுக்குப் போயிருவோம்...” வேந்தன் ஒரு வித மென்மையில் சொல்ல


தென்றலுக்கு உள்ளுக்குள் ரசாயன மாற்றமே நடந்தது. அது காதல் மற்றும் வெட்கத்தால் வந்தது இல்லை. தன் முடிவை எப்படியோ நடத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்தது. அதை அவள் நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக விதியும் அவளுடன் கை கோர்த்து, விளையாடத் தயாரானது.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 22
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijayalakshmi 15

New member
மிகவும் அருமையாக இருக்கிறது. சூப்பராக செல்கிறது கதை நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள்awsome
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிகவும் அருமையாக இருக்கிறது. சூப்பராக செல்கிறது கதை நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள்awsome
நன்றிங்க சிஸ்💓
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN