சாதி மல்லிப் பூச்சரமே!!! 23

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 23

மறுநாள் காலை வீட்டு வாசலில் வேலைக்கார பெண்மணி முறைவாசல் செய்து கொண்டிருக்க, சில பங்காளிகள் இன்னும் ஊருக்குச் செல்லாததால் வீட்டு வெளிமுற்றத்தில் அமர்ந்து அங்கிருந்த உறவுக்கார பெரிய தலைக்கட்டுகளுடன் ஐயாரு பேசிக் கொண்டிருக்க, அந்நேரம் அந்த ஊரில் வசிக்கும் ஒருவர் தன்னுடன் ஒரு பெண்மணியை அழைத்து வந்தவர், “ஐயா! இவுக ஒங்க வீட்டைக் கேட்டுதேன் ஊர் எல்லையில நின்னுட்டு இருந்தாக... அதேன் கூப்ட்டு வந்தேன்...” என்று தகவல் சொல்ல


வந்த பெண்மணியோ, “ஐயா வணக்கங்க... நீங்க தான் சிவகுரு ஐயாருங்களா?” சாதாரண நூல் சேலையில் முகத்தில் படிப்பறிவுக்கான ஜீவனே இல்லாமல், தலையில் எண்ணை இல்லாமல், வெள்ளேந்தி குரலோடு, கையில் துணி மூட்டையோடு அவர் முன் வந்து நின்ற ஐம்பத்தைந்து வயது மதிக்கத் தக்க பெண்மணி கேட்க


அவரை ஒரே பார்வையில் எடை போட்டவர், “என்ன பஞ்சம் பொழைக்க இந்த ஊர் வந்தீயா... எங்கனயாவது குடிசை போட்டு ஒக்காந்துக்க கேக்க வந்தியோ?” ஐயாரு மீசையை முறுக்கியபடி கேட்க


“இல்லைங்க ஐயா… என் புள்ளைய கேட்டு வந்தேன்” அதே வெள்ளேந்திதனயாய் வந்த பெண்மணி குரலில்.


“புள்ளையவா? எந்த வயசுல தொலைச்சவ இப்போம் வந்து தேடுத!” என்றவர் “சரி சொல்லு... பேரென்ன? ஆம்பள புள்ளையா இல்ல பொட்டப்புள்ளையா? சாட்சிக்கு ஏதாவது இருக்கா?” ஊர் தலைவர் என்ற முறையில் எடுத்ததும் இவர் விசாரணையில் இறங்க


“தொலைக்கலைங்க....” என்றபடி ஒரு நிமிடம் முந்தானையால் வாயைப் பொத்தி விசும்பியவர், “என் மவன தத்துக் கொடுத்துட்டேனுங்க...” வந்தவர் அடக்க மாட்டாமல் அழுதபடி சொல்லிவிட


“தத்து குடுத்தியா? சரிதேன்... சுய அறிவோட செஞ்சிட்டு இன்னிக்கு திரும்ப வந்து கேட்டா என்ன விசயம்? பெத்த புள்ளைய பார்த்தா போதும்னு நெனச்சிட்டியோ! எல்லாத்துக்கும் மேல நீ யாரு... நீ சொல்றத நாங்க எப்டி நம்பறது?” ஐயாரு தான்.


“ஐயா! என் பேரு சின்னத்தாய்ங்க. என் புருஷன் பேரு அழகப்பனுங்க. எங்களுக்கு பூர்வீகம் குமரிங்க. நாங்க ரெண்டு பேரும் சாதி மாத்தி கல்யாணம் கட்டிக்கிட்டோமுங்க. எங்க ஊர்ல அத ஏத்துக்கலங்க. அதான் மதுர பக்கம் தஞ்சம் போய்ட்டோமுங்க. அப்போ எங்களுக்குப் பொறந்த கொழந்தையத் தான் என் புருஷன் தத்து குடுத்துட்டாருங்க. கொழந்த பேர் கூட.....”


“இந்தாம்மா! செத்த நிறுத்து... நிறுத்து... நிறுத்து... என்னது சாதி மாத்துக் கல்யாணமா? அத செஞ்சதும் இல்லாம இங்கன வந்து ஐயாருட்ட அதையும் சொல்லுதியா? நீ மொதல்ல இங்கனயிருந்து கெளம்பு” கூட்டத்திலிருந்த ஒரு பங்காளி வந்த பெண்மணியை மிரட்ட


வயதில் பெரியவரான வேறு ஒருவரோ “இருலே! அவுக என்ன சொல்றாகனு பாப்போம்” என்றவர் “நீ என்ன சொல்லுத சிவகுரு...” என்று ஐயாருவிடம் கேட்க, அவரோ சம்மதமாய் தலை அசைக்க


அந்த பெரியவரே “இங்கன பாருமா! நீ என்ன சொன்னாலும் கேட்டுட்டு போற ஆளு எங்க சிவகுரு இல்ல. நாங்க தீர விசாரித்துதேன் எதுவா இருந்தாலும் செய்வோம். எங்கன இருந்தோ வந்து திடீர்னு ஒன் புள்ளைனா எப்டி? சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோனு சொல்லாம நெசத்த சொல்லு... பொறவு பாத்துக்கிடலாம்...”


அதற்குள் அங்கிருந்த கவியரசன், “அதேன் தத்து குடுத்துட்டீய இல்ல… பொறவு எதுக்கு பிள்ளைய தேடுறீய?” அவர் தன் பங்குக்கு கேட்க


“நான் சீக்கு வந்து படுத்திருந்தப்போ என் புருஷன் எனக்கு தெரியாம கொழந்தைய தத்து குடுத்துட்டாருங்க. அப்புறம் எங்களுக்கு வேற கொழந்தயும் இல்லைங்க. நானும் ஒடம்பு தேறி வந்தேனுங்க. அதுக்கப்புறம் நல்லா தான் போச்சுங்க எங்க வாழ்க்கை. திடீர்ன்னு ஒரு நாள் ஆட்டோ ஓட்டிகிட்டு இருந்த என் புருஷனுக்கு விபத்தாகி ஆஸ்பத்திரியில் சாகக் கெடக்கும்போது தான் கொழந்தைய தத்து கொடுத்த விஷயத்தையே அவர் சொன்னாருங்க. அது கூட...” மேற்கொண்டு சொல்ல முடியாமல் சற்றே ஒரு கேவலுடன் அழுதவர் “அவருக்கு அப்புறம் எனக்கு யாரும் நாதி இல்லன்னு என் புள்ள கூட போய் இருக்கச் சொல்லி என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுப் போன மாசம் தான் செத்துப் போய்ட்டார்ங்க...” சின்னத்தாய் இன்னும் விசும்ப


அப்போது அங்கிருந்த அனைவருக்கும் காப்பி கொடுக்க வந்த செண்பகவல்லி இதை எல்லாம் கேட்டவர் சுவாரசியத்தில் அங்கேயே நின்று விட


“சரிதேன்… ஒன் கதை சோகம்தேன் போல! சரி… புள்ள பேர் தெரிஞ்சா அதையும் அப்டியே நீ யாருக்கு தத்து குடுத்தியோ அவுக பேரையும் சொல்லு. கூப்ட்டு விசாரிக்குதேன்....” ஐயாரு கேட்க


“என் புள்ள பேரு மதிவேந்தனுங்க... இந்த ஊர் ஐயாரு குடும்பத்துக்கு தாங்க தத்து குடுத்தோம்”


“என்னது! என்ன பேரு சொன்ன? எங்க மறுக்கா சொல்லு...” ஐயாருவுக்கு தரையே நழுவுவது போலிருந்தது. ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க, அதிர்ச்சியுடன் நம்பாமல் கர்ஜிக்க


அவர் குரலில் சின்னத்தாய்க்கு தன்னை மீறி உடல் தூக்கி வாரிப் போட்டது. அதில் அவர் ஓர் அடி பின்னே நகர, அவருக்கு மட்டுமா? அங்கிருந்த பலருக்குமே இதயம் ஒரு வினாடி நின்று தான் துடித்தது.


“ஏதோ பார்க்க பரிதாபமா இருக்கறவ… வேற நாதி இல்லேன்னு சொல்லுதியேனு பரிதாபப்பட்டு ஒனக்கு ஏதாவது நல்லது செய்யலாம்னு பார்த்தா… கடைசியில் யாரோ சொல்லி வேசம் கட்டி வந்த பொம்பளையா நீ?” ஐயாரு கேட்க


“இல்லைங்க...”


சின்னத்தாய் ஆரம்பிப்பதற்குள் “இந்தாம்மா! வாய நார மட்ட கிழிக்கிற போல கிழிச்சிருவேன். இப்டி போய் சொல்லி ஐயாரு குடும்பத்தை அசிங்கப்படுத்துன்னு எவனாச்சும் சொல்லி அனுப்புனானா?” முதலில் பேசிய பெரியவர் எகிற


“இது ஏதோ கள்ளச்சாராயத்தை குடிச்சிட்டு வந்து ஒளர்றுதா. இந்த பொம்பளய அடித்து தொரத்துங்க பெரியப்பா” ஒரு பங்காளி மவன் எடுத்துக் கொடுக்க


இது உண்மையோ பொய்யோ இத்தனை பேர் முன்னால் தன் குடும்ப விஷயத்தை அலச விரும்பாத ஐயாரு, “இந்தா காசு எவ்ளோ வேணுமோ கேளு தருதேன் வாங்கிகிட்டு ஓடிப்போயிரு. ஆனா திரும்ப இப்டி ஒரு பொய்யோட இந்த ஊர் பக்கம் வந்து நின்னுராத. பொறவு ஒடம்புல உசுரு இருக்காது” ஐயாரு மிரட்ட


அவரின் காலைப் பிடித்த சின்னத்தாய், “நான் சொல்றது எல்லாம் சத்தியம் ஐயா! என் புள்ளைய கண்ணுலயாவது காட்டுங்க, அது போதும் எனக்கு” அவர் விடாமல் கெஞ்ச


“ச்சீ! நீ எல்லாம் என்ன சாதியோ? என்னைய போய் தொடுத...” ஐயாரு எட்டி உதைத்துத் தள்ளி விட


கருக்கலிலேயே கழனிக் காட்டுக்கு சென்று விட்டு அந்நேரம் வீடு திரும்பிய வேந்தனின் காலில் போய் விழுந்தார் சின்னத்தாய். அவன் குனிந்து அவரைத் தூக்க, “தம்பி நீயாவது சொல்லுப்பா... என் புள்ளைய காட்டச் சொல்லி” அந்த தாய் கேட்க அவன் யார் என்றே தெரியாமல், தனக்கு ஒரு நியாயம் கேட்டு அவர் அழுதபடி கை எடுத்துக் கும்பிட்டு கெஞ்ச


“என்ன தாத்தா இதெல்லாம்?” வேந்தன் ஐயாருவை முறைத்த படி கேட்க


“எலேய் ராசு! இது வேற விசயம்லே... நீ உள்ள போ, இத நாங்க பாத்துக்கிடுறோம். அது செத்த புத்தி சுவாதீனம் இல்லாத பொம்பளைடே” ஐயாரு பொய்யாய் விளக்கம் கொடுக்க


“அதுக்காண்டி இப்டி எல்லாம் அவுகள நடத்துறீய! ஏதோ கேக்குறாக பாருங்க அதச் சரி செஞ்சு அனுப்புக” இவன் ஒரு உறுமலோடு உள்ளே செல்ல நினைக்க,


“அவ ஒன்னையத்தேன் தான் பெத்த புள்ளைன்னு சொல்லுதா....” செண்பகவல்லி இதான் சமயம் என்று போட்டு உடைத்தார்


“செண்பகவல்லி!” ஐயாரு அதட்ட, மறு அடி எடுத்து வைக்காமல் நின்றே விட்டான் வேந்தன். அவனுக்கு அவரின் அதட்டல் ஏதோ புரிவதும் புரியாததுமாக இருந்தது. இருந்தாலும் செண்பகவல்லி வார்த்தையில் நம்பிக்கையில்லாததால் இவன் ஐயாருவைப் பார்க்க,


“ராசு! நீ போ... அதெல்லாம் அப்டி எதுவும் இல்லடே. ஏதோ ஒளறுதா இந்த பொம்பள... ”


“என்ன இல்ல? இவன் அப்பாவுக்கு பூர்வீகம் மதுரதேன். ஏன்? ஒங்க வீட்டுப் பொண்ணும் புருசனோட அங்கனதேனே கொஞ்ச நாள் இருந்தாக... தாமரையக் கூப்ட்டு விசாரிச்சா தெரிஞ்சிரப் போகுது” செண்பகவல்லி விடாப்பிடியில் நிற்க


“என்னது! தாமரையை கூப்ட்டு கேக்கவா? எனக்கு புத்தி சொல்லாம ஒழுங்கா நீ உள்ள போ... ” ஐயாரு மறுபடியும் கோபப்பட


ஐயாருவுக்கும், அங்கு இருப்பவர்களுக்கும் சின்னத்தாய் சொல்வதில் நம்பிக்கை இல்லை. ஆனால் நூற்றில் ஒரு பங்கு உண்மை இருந்தால் அதனால் செண்பகவல்லி விடுவதாய் இல்லை.


சிலர் அவருக்கு ஆதரவாய் பேச, இன்னும் சில பேர் வேண்டம் என்று சொல்ல, இறுதியில் கவியரசன் பேசி இந்த பிரச்னையை தீர்க்க ஒரே வழி தாமரையைக் கூப்பிட்டு கேட்பது என்று முடிவானது.


வேறு வழியில்லாமல் சிவந்த விழிகளுடன் ஐயாரு தாமரையை அழைத்த அழைப்பில் மொத்த குடும்பமும் அவர் முன் இருந்தது, தாமரையைப் பார்த்ததும் சின்னத்தாய், “இவங்க தான் இவங்களே தான்! உங்க பேர் கூட எனக்கு மறந்துடுச்சிங்க. என் புருஷன் ஆட்டோவில் தானே நீங்க ஆஸ்பத்திரிக்கு போவீங்க? உங்க கிட்ட தான் என் பையன கொடுத்தாறாம்...” இவர் அலைபுற


இங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட தாமரை, “யார் நீங்க? இங்கன வந்து ஏன் என்னெனமோ சொல்லுதீய...” ஒரு அன்னிய பார்வையுடன் சின்னத்தாயைக் கேள்வி கேட்டு விலக நினைக்க


“இல்லங்க என் புருஷன் பொய் சொல்லலீங்க. நீங்க தான்...” உடனே தாமரையின் அக்கினி பார்வையில் தன் பேச்சை நிறுத்தியவர் “என் புள்ளைய நான் கேக்க மாட்டேனுங்க. இங்க இருக்கிறதுல என் புள்ள யாருனாவது சொல்லுங்க. கடைசியா அவன பார்த்துட்டு போயிடரேனுங்க. பெத்த புள்ள கூட யாருன்னு தெரியாத பாவியா ஆகிட்டனே நான்!” சின்னத்தாய் தன் கண்களைச் சுழல விட்டு கெஞ்சிக் கேட்க


இதுவரை பேசாமல் இருந்த கந்தமாறன், “நீ முதல்ல இங்கன இருந்து கெளம்பு” என்று வந்தவரை அனுப்ப முயற்சிக்க


“மாமா! அவுக இருக்கட்டும்” என்று அதட்டும் குரலில் தடுத்த வேந்தன் “அம்மா! ஒங்க புள்ள பேரு என்னம்மா?” என்று இவன் சின்னத்தாயை விசாரிக்க


“எலேய்... முதல்ல நீ உள்ளார போடே...” தாமரை இடைமறித்து மகனை அதட்ட


வேந்தன் என்ன நினைத்தானோ சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் தாயிடம் வந்தவன், அவரின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து, “அவுக சொல்றது எதுவுமே நெசம் இல்லன்னு என் தலையில அடித்து சத்தியம் பண்ணிச் சொல்லுங்கமா...” வேந்தன் தீவிர குரலில் தாமரையிடம் கேட்க


அந்த இடத்தில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. யாருக்கும் என்ன சொல்வது என்ன கேட்பது என்று எதுவும் புரியவில்லை. ஐயாருக்கோ தான் கட்டிக் காத்த குடும்ப கௌரவக் கோட்டை இடிந்து விடுமோ என்ற கவலை ஆட்கொள்ள ஆரம்பித்தது. இந்த விஷயம் இவ்வளவு தூரம் வந்து எல்லோருக்கும் தெரிந்த பின் எப்படி சமாளிப்பது என்றும் தெரியாமல் அவர் தடுமாறினார். இருந்தாலும், “நீ எதுவும் சொல்ல வேண்டியது இல்லை தாமரை. மொதல்ல ஒன் வேந்தன கூட்டிட்டு நீ உள்ளார போ....” அவர் கட்டளை இட


“இல்ல.... இந்த விசயத்துக்கு இப்போம் இங்கனயே ஒரு முடிவு தெரிஞ்சிரணும். சொல்லுங்கம்மா... இத நான் ஒங்கள நம்பாம கேக்கல. இங்கன இருக்கவிங்களுக்கு என் பொறப்போட சந்தேகம் போகணும்னு நெனைக்குதேன்மா...” சென்பகவல்லியைப் பார்த்த படி வேந்தன் மறுபடியும் தாமரையிடம் கேட்க, அடக்க முடியாத அழுகையுடன் அவனின் கையைத் தட்டி விட்டு மகனின் மார்பில் முகம் புதைத்த தாமரை,


“அவுக சொல்றது எல்லாம் நெசந்தேன்யா! நீ அவுக புள்ளதேன்... நான் ஒன்னைய பெத்த அம்மா இல்லைய்யா...” கதறலுடன் சொல்ல, இங்கு நடந்த சகலத்தையும் உள்ளேயிருந்து தாமரை கேட்டுக்கொண்டு தான் இருந்தார் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது, உடல் அதிர தாயை இறுக்க அணைத்துக் கொண்டவனின் பார்வை தன்னிச்சையாய் மனைவியைப் பார்க்க


இதுவரை ஒரு வித அதிர்ச்சியுடன் அங்கு நடப்பதை அனைவரையும் போல் பார்த்துக் கொண்டிருந்த தென்றல், கணவனின் பார்வையை சந்தித்த அடுத்த நொடி... ஒரு வித அசூசையுடன் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.


நடக்கும் அதிர்ச்சியில் மனைவியின் வெறுப்பில் நான்கு நாட்களாக காதல் என்னும் சொர்க்கத்தில் இருந்த வேந்தனின் வாழ்வு, இப்போது நரகத்தின் வாசலை எட்டியிருந்தது.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 23
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijayalakshmi 15

New member
ஜாதி வெறி பிடித்த ஐயா. வேந்தன் அவர்களுடைய ஜாதி இல்லை இப்ப என்ன செய்வர் ஐயா!😳😳😳
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜாதி வெறி பிடித்த ஐயா. வேந்தன் அவர்களுடைய ஜாதி இல்லை இப்ப என்ன செய்வர் ஐயா!😳😳😳

நன்றிங்க சிஸ் 💖
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN