முன்னாள் காதலி

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் லாப்டாப்பில் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாகயிருந்த கார்த்திக்கின் எதிரே அமர்ந்தான் நவீன்...

“டேய் மச்சான் அப்படி என்னடா அந்த லாப்டாப்புக்குள்ள ரொம்ப நேரமா தேடுற???”

“டேய் பிசியா இருக்கேன்டா... ஜோக்குங்குற பேருல மொக்க போட்டு வண்டை வண்டையா வாங்கிக்கட்டிக்காத சொல்லிட்டேன்...”

“ஏன் மச்சான் ஒரு கேள்வி கேட்டது தப்பா???”

“நேரங்கெட்ட நேரத்துல வந்து எக்கு தப்பா கேள்வி கேட்குறது தப்பு தான்...” என்றான் தன் வேலையை தொடர்ந்தபடி கார்த்திக்..

“மன்னிச்சுக்கோடா... தெரியாமல் கேட்டுட்டேன்.. சரி... எனக்கு அந்த கீர்த்தியோட நம்பர் வேணும்டா..”

“உனக்கு எதுக்குடா அவ நம்பர்..”

“மச்சி உன்னளவுக்கு எனக்கு விவரம் பத்தாதுடா.. நம்பி தாடா.. அவகிட்ட ராமோட பென்டிரைவ் இருக்காம்.. அதை கொண்டு வர சொல்ல தான் நம்பர் கேட்குறேன்..”

“ஓ.. உனக்கு எதுக்கு ராமோட பென்ரைவ்... அப்படியே வேணும்னா ராம்கிட்ட சொல்லி கீர்த்திக்கு சொல்ல வேண்டியது தானே... நீ எதுக்கு அவ நம்பர் கேட்டு என்கிட்ட வந்து நிற்கிற???”

“டேய் நம்பர் கேட்டது ஒரு குத்தமாடா.. இத்தனை கேள்வி கேட்குற?? அவ பாய்பிரண்ட் கிட்ட கேட்டிருந்தா கூட இத்தனை கேள்வி கேட்டிருக்க மாட்டான்.. நீ ஏன்டா இத்தனை கேள்வி கேட்குற??”

“சரி சரி.. என்னோட போன்ல எடுத்து பாரு..”என்று கார்த்திக் சொல்ல நவீனும் கார்த்திக்கினது S9 இனை எடுத்து கீர்த்தியின் நம்பரை தேடத்தொடங்கினான்..

சில கணங்களின் பின் நவீன்
“டேய் எங்கடா கீர்த்தி நம்பரை காணல??”

“டேய் இருக்கும்டா.. நல்லா பாரு.. அதுசரி நீ எப்படிடா தேடுன??”

“வேற எப்படி?? கீர்த்தினு தான்..”

“Ex னு தேடுடா... “

“ஓ... மேடம் உன்னோட ex ல???” என்ற நவீன் ex என்று டைப் செய்ய அதில் பல ex கள் இருக்க அதில் பதறிய நவீன்

“டேய் என்னடா இது?? இத்தனை ex இருக்கு... ஒன்னு... இரண்டு... மூன்று...என்னடா ஒரு லிஸ்டே இருக்குது???? உனக்கும் மட்டும் எப்படிடா இப்படி அமையிது.. நானெல்லாம் ட்ரை பண்ணி ஓய்ந்து போனது தான் மிச்சம்... ஒன்னு கூட இது வரைக்கும் செட்டாகல.. எப்படி மச்சி உனக்கு மட்டும் எல்லாம் தேடி வருது...??”

“இப்ப உனக்கு என்ன தான்டா பிரச்சனை..??வந்த வேலையை பார்த்துட்டு கிளம்பாம எதுக்கு இப்படி புலம்பிட்டு இருக்க??”

“சரி சரி டென்ஷனாகாத.. கீர்த்தி நம்பர் எப்படி சேவ் பண்ணியிருக்கனு சொல்லு..”

“Ex k னு சேவ் பண்ணியிருக்கேன்.. “ என்று கூற அதை தேடி எடுத்தவன்

“கார்த்திக் எல்லா ex க்கு பிறகும் ஒரு லெட்டர் போட்டுருக்க... ஆனா ஒரு ex ல மட்டும் எதுக்கு இப்படி இமோஜி போட்டு சேவ் பண்ணியிருக்க??” என்று நவீன் கேட்க கார்த்திக்கின் இதழ்களில் தானாய் வந்து புன்னகை ஒட்டிக்கொண்டது....

“என்னடா சிரிக்கிற??? எனிதிங் ஸ்பெஷல்?? உன்னையே ஒரு பொண்ணு இம்ப்ரெஸ் பண்ணியிருக்கா போலயே...” என்று நவீன் விவரம் விசாரிக்க முயல கார்த்திக்கோ தன் லாப்டொப்பினை மூடி வைத்துவிட்டு

“ஆமாடா... அவ ஸ்பெஷல் தான்.... எல்லாரையும் விட ரொம்ப ஸ்பெஷல்.. எல்லாரையும் நான் இம்ப்ரெஸ் பண்ணுவேன்... ஆனா இவ ஒருத்தி தான் என்னை இம்ப்ரெஸ் பண்ணா... எதுவுமே பண்ணலை.. ஆனா அவளை ஏனோ எனக்கு ரொம்ப பிடிக்கும்...”

“லவ் பண்ணுறியா மச்சி??”

“லவ் பண்ணேன்டா.... இப்போ ப்ரேக் அப் பண்ணிட்டேன்டா...”

“ஏது நீ ப்ரேக் அப் பண்ணிட்டியா???..”

“ஆமா.. சரி வா.. காண்டீன் போகலாம்.. செம்மைக்கு பசிக்குது...”

“டேய் கதையை முடிச்சிட்டு போடா.. இல்லைனா எனக்கு மண்டையே வெடிச்சிடும்..”

“இப்போ காண்டீன் போகாட்டி என் வயிறு வெடிச்சிடும்.. உன் மண்டையை விட எனக்கு என் வயிறு தான் முக்கியம்..” என்று கூறி நவீனை காண்டீனுக்கு இழுத்து சென்றான் கார்த்திக்..

காண்டீனில் காபியும் பன்னையும் வாங்கியவர்கள் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் எதிரெதிரே அமர்ந்தனர்..

“டேய் இப்ப சொல்லுடா.. ஏன்டா ப்ரேக் அப் பண்ண?? வழமையா அவங்க தான் ப்ரேக் அப் பண்ணுவாங்க.. இந்த பொண்ணை நீ எதுக்கு டா ப்ரேக் அப் பண்ண??”

“அவ குழந்தை மாதிரி டா.. மத்தவங்க மாதிரி இல்லை.. எதையும் உண்மைனு நம்புற ரகம்... ரொம்ப இனசன்ட்...அவளோட பேச்சுல ஒரு குழந்தைத்தனம் இருக்கும்... அவ குரலை கேட்குறதுக்காகவே தினமும் குறைந்தது மூன்று தடவையாவது கால் பண்ணுவேன்... அவளும் எந்த வர்க் இருந்தாலும் என்னோட காலை அட்டெண்ட் பண்ணாமல் இருந்ததில்லை. நான் கூட சில நேரம் அவ கால் பண்ணா அட்டென்ட் பண்ணாமல் இருந்திருக்கேன்.. ஆனா அவ அப்படி இல்லை.. என்னோட சிட்டுவேஷனை புரிஞ்சிக்கிட்டு கோபப்படாமல் ரொம்ப கேரிங்கா பேசுவா.. அப்போ எல்லாம் ஏதோ தப்பு பண்ண மாதிரி ஒரு கில்டி பீல் இருக்கும்... அவளோட பீலிங்சோட விளையாடுறோமோனு தோண ஆரம்பிச்சிடுச்சு.. அதான் அவகிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டு ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு அவ நம்பரை பிளாக் பண்ணிட்டேன்... ஆனா அந்த செகெண்டுல இருந்து அவளை ரொம்ப மிஸ் பண்ணேன்... எதுக்குனு தெரியலை.... ஆனா இப்போ வரைக்கும் அவளை மிஸ் பண்ணுறேன்.. அவ இரண்டு மூன்று தடவை வேற நம்பருல இருந்து கால் பண்ணா.. நான் அவளை அவாய்ட் பண்ணிட்டேன்.. ஆனா அவ நேர்ல என் கூட பேச வந்தா.... ஆனா நான் இனிமேல் அவ லைப்பில் இருக்கக்கூடாது அப்படீங்கிறத மட்டும் மைண்ட்டுல வச்சிட்டு அவகிட்ட ரொம்ப ஹார்ஷா பேசிட்டான்... அவ அன்னைக்கு அழுதுக்கிட்டே போனது இன்னும் வரை என் கண்முன்னாடி இருக்கு.... நைட்டுல சில நாட்கள் அவ அழுதுட்டே போனது நியாபகம் வந்து என்னை தூங்கவிடாது...” என்று இறங்கிய குரலில் கார்த்திக் கூற அவனது இந்த பரிமாணம் நவீனிற்கு புதிது...

கார்த்திக் என்றாலே அனைவரும் கேட்பது ப்ளேபாய் கார்த்திக்கா என்று தான்.... அவனுக்கு காலேஜ் பருவத்திலும் சரி வேலையிடத்திலும் சரி கேள்ப்ரெண்ஸ்சுகள் ஏராளம்.. என்னதான் ப்ளே பாய் என்று அடைமொழி கொண்டு அழைக்கப்பட்டாலும் ஒழுக்கம் தவறாதவன்... அனைவரோடும் ஒரு எல்லை வகுத்தே பழகுவான்... அதானாலேயே பெண்களுக்கு அவனை பிடிக்கும்... அவனை பொருத்தவரை லவ் என்பது நேரத்தை கடத்துவதற்கான ஒரு பொழுதபோக்கு... அதை தாண்டி அவன் வேறெதுவும் எண்ணியதில்லை... ஆனால் அவன் மனதை காதலால் சிறையெடுத்த அந்த மங்கை யாரென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நவீனிடம் எழுந்தது...

“மச்சி... உனக்கு லவ்வா??? சத்தியமா நம்ப முடியலைடா.. யார்டா அந்த பொண்ணு?? உன்னையே லவ் ல விழ வச்சிருக்கானா நிச்சயம் அவ நல்ல பொண்ணா தான் இருப்பா... யார்டா அவ??”

“பவானி...” என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காது அழகாய் அவளது பெயரை உச்சரித்தான் கார்த்திக்...

“யாரா நம்ம ஆர் என் டி டிபார்ட்மென்ட் பவானியா???”

“ஆமாடா.. அவ தான்..”

“செம்ம செலெக்ஷன் மச்சி... ஆனா அவள எப்படி டா உனக்கு ஓகே சொன்னா??”

“ஏன்டா அப்படி கேட்குற??”

“அவளுக்கு நம்ம ஆபிஸில் ரூட் போடதா ஆட்களே இல்ல... ஆனா அந்த பொண்ணு யாரையும் கண்டுக்கல... ஆனா உனக்கு எப்படி ஓகே சொன்னானு தெரியல...”

“என்னடா சொல்லுற?? நீ சொல்லுறது உண்மையா??”

“அட ஆமாண்டா.. நீ வேணும்னா தினேஷ் கிட்ட கேட்டு பாரு... அவன் நோஸ் கட்டாகி வந்த கதையை சொல்லுவான்.. “ என்று நவீன் கூற யோசனையில் ஆழ்ந்தான் கார்த்திக்.. அவனுக்கு முன்னிலும் விட இப்போது அதிக குற்றவுணர்ச்சி எழுந்தது....

நவீன் கூறிய தினேஷ் மிகவும் நல்லவன்.. அதிலும் பெண்கள் விஷயத்தில் சொக்கத்தங்கம்... அவனையே அவள் மறுத்துவிட்டு தன்னை காதலித்தாள் என்பது அவளுக்கு தான் பெரும் துரோகம் இழைத்துவிட்டோம் என்றவொரு குற்றவுணர்ச்சியை உருவாக்கியது.. ஆனால் காலம் கடந்து எதையும் யோசிப்பதில் பலனில்லை என்றுணர்ந்தவன் நவீனிடம் சொல்லாது அங்கிருந்து எழுந்து சென்றான்..

தன் இருக்கைக்கு வந்தமர்ந்த கார்த்திக்கிற்கு வேலையில் கவனம் செல்லவில்லை... அவனது நியாபகம் முழுதும் பவானியை பற்றியதாகவே இருந்தது.. அவளை பற்றிய நியாபகங்கள் ஒரு புறம் மகிழ்ச்சியையும் மறுபுறம் வேதனையையும் அளிக்க மனமோ குழம்பித்தவித்து அதன் விளைவாக தலை வலி உண்டாக வலி வகுத்தது....

அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்றவன் உடையை கூட மாற்றாது கட்டிலில் விழுந்தான்...
தன் மொபைலை எடுத்தவன் காலரியில் இருந்த screen shots ஐ எடுத்தவன் அதில் பவானியுடன் தான் பேசிய வாட்சப் சேட்டினை எடுத்து பார்த்தபடியே தன்னையறியாமல் உறங்கிவிட்டான்..

மாலை எட்டு மணியளவில் அவனது தொலைபேசி ஒலியில் எழுந்தவன் கோலை அட்டென்ட் செய்ய அதிலோ

“சார் ஊபர் ஈட்சில் இருந்து வந்திருக்கேன்.. எத்தனையாவது ப்ளோர்...”

“நான் எதுவும் ஆடர் பண்ணலையே...”

“சார் நீங்க தானே கார்த்திக்..”

“ஆமா.. உங்களுக்கு தான் சார் ஆடர்...” என்று கூற சற்று யோசித்தவன் தன் அட்ரசை கூற உணவு வந்தது...

அவன் பில் பே பண்ண தயாராக உணவு கொண்டு வந்தவனோ ஆன்லைனில் பே பண்ணியிருக்கீங்க சார்...” என்று கூறிவிட்டு கிளம்பினார்...

கார்த்திக்கோ யாராக இருக்கும் என்று யோசித்தபடி உணவை பிரிக்க அதில் அவன் விரும்பி சாப்பிடும் காளான் ப்ரைட் ரைஸ் இருந்தது....

பகலும் சரியாக சாப்பிடாததால் கொலை பசியில் இருந்தவன் உணவை ஒரு கட்டு கட்டிவிட்டு தான் எழுந்தான்...

கைகழுவிவிட்டு வந்தவன் நவீனிடம் அழைத்து விசாரிக்க அவனோ தான் ஆடர் செய்யவில்லை என்று கூறினான்..
யாராக இருக்கும் என்று யோசித்தபடி மொபைலில் வாட்சப்பினை ஆன் செய்தவன் அதிலிருந்த முதல் சாட்டை கண்டு இன்பமாக அதிர்ந்தான்...

அவனது அதிர்ச்சிக்கு காரணம் அவனது ex தான் மெசேஜ் செய்திருந்தாள்.. விரைந்து மேசேஜை திறந்தவன் அதில் கண்டது

“சாப்பாடு வந்திடுச்சா??” என்ற மேசேஜை தான்...

அந்த கேள்வியே அவனுக்கு பதிலை தந்து விட அவனும்
“ஆமா “ என்று ரிப்ளை செய்தான்...

“எப்படி இருக்க??” என்று மறுபடியும் மேசேஜ் வர

“ம்ம்... நல்லா இருக்கேன்..”

“டேய்... டேய்.... இப்போ கூட உண்மையை சொல்ல மாட்டியா???”

“என்ன உண்மை??”

“ஏன்டா இப்படி பண்ண??”

“நீங்க சொல்லுறது எனக்கு எதுவும் புரியலை...”

“உனக்கு நான் அவ்வளவு தூரமா போயிட்டேன்ல??”

“என்னடி பிரச்சனை உனக்கு??”

“வேணாம்னு போனவன் அப்படியே போக வேண்டியது தானேடா... எதுக்கு என்னையை மிஸ் பண்ணுறதா உன் ப்ரெண்டுகிட்ட புலம்புன???”

“அது... அது.. உனக்கு எப்படி??”

“நானும் காண்டீன்ல தான் இருந்தேன்...”

“சாரிமா...”

“பேசாத.. உனக்கு தான் நான் வேணாமே... பிறகு என்ன??”

“ஐயோ அப்படி இல்ல பவி மா... உனக்கு நான் செட்டாக மாட்டேன்னு...” என்று மேசேஜ் அனுப்ப மறுநொடி அவளிடம் இருந்து அழைப்பு வர சிரிப்புடன் அதை எடுத்து காதில் வைக்க அவளோ

“அதை நீ சொல்லாத.. எனக்கு யாரு செட்டாவாங்க.. யாரு செட்டாக மாட்டாங்கனு நான் தான் சொல்லனும்.. “

“சாரிடி பொம்மு குட்டி... உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்... உன்னை ஹர்ட் பண்ணது உன்னை விட எனக்கு தான் ரொம்பவே வலிச்சிது...”

“சும்மா கதை விடாத... நீ அந்த ரம்யா கிட்ட ஜொள்ளு விட்டுட்டு அலைஞ்சத நான் பார்த்தேன்...”

“ஹாஹா.. அது சும்மா பொம்மு குட்டி.. எத்தனையோ பொண்ணுங்களை லவ் பண்ணுறேன்னு சொல்லி ப்ரபோஸ் பண்ணியிருக்கேன்.. ஆனா என் மனசு உன்னை மட்டும் தான் காதலிங்கிற ஸ்தானத்துக்கு ஏத்துக்கிடுச்சு.. உன்னோட சிரிப்பு அழுகை சந்தோஷம் துக்கம் எல்லாமே என்னை ரொம்ப பாதிச்சிச்சு.. அன்னைக்கு நீ அழுதப்போ எனக்குள்ள சுருக்குனு ஒரு வலி... அது என் அம்மா இறந்தப்போ மட்டும் தான் உணர்ந்திருக்கேன்... நீ என்னோட லைப்புக்கு எவ்வளவு முக்கியம்னு இந்த கொஞ்ச நாள்ல புரிஞ்சிக்கிட்டேன்டி... ஐ லவ் யூ ப்ரொம் மை பாட்டம் ஆப்தி ஹார்ட்...” என்றவன் ஒரு நீண்ட முத்தத்தை அழைப்பினூடாக பரிமாற அந்தப்புறம் அதில் முகம் சிவந்து நின்றாள் பவானி..

“லவ்யூ டூ டா... எனக்கு இது போதும் டா... இது மட்டும் போதும்...நீ மட்டும் போதும்...” என்று கூறியவளின் குரல் அழுகையில் வெடிக்க அதில் பதறியவன்

“ஹே பொம்முமா.. என்னாச்சு... எதுக்கு அழுற??”

“ரொம்ப பயந்துட்டேன்டா.. கடைசி வரைக்கும் என்னோட காதலை ஏத்துக்க மாட்டியோனு ரொம்ப பயந்துட்டேன்.... உன்னோட குணத்துக்காக தான் நான் உன்னை லவ் பண்ணேன்.. ஆனா அதை காரணம் காட்டி நீ விலகிப்போறதா சொன்னது தான் எனக்கு ரொம்ப கஷ்டமாக போயிடுச்சு... நீ உன்னோட கேள்ப்ரெண்டுனு சொன்ன பொண்ணுங்க எல்லாருகிட்டயுமே ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டதை நான் என் கண்ணால பார்த்திருக்கேன்.. உன்னோட பார்வை கூட அவ்வளவு கண்ணியமாக இருக்கும்... அது தான் உன்மேல எனக்கு லவ் வரவச்சிச்சிச்சு..”

“பார்டா.. என்பெண்டாட்டி டிடெக்டிவ் வேலையெல்லாம் பார்த்திருக்கா...”

“ஹாஹா.. என்ன பண்ணுறது புருஷன் கண்ணுக்கு லட்சணமா கலகலனு இருந்தா பொண்டாட்டி டிடெக்டிவ் வேலை பார்த்து தானே ஆகனும்...” என்றபடி அவர்களது உரையாடல் தொடர்ந்தது...

முன்னாள் காதலியென்று கார்த்திக் கூறினாலும் அந்நாளிலும் இந்நாளிலும் எந்நாளிலும் அவள் மட்டுமே காதலி என்று அவனுக்கு உணர்ந்தியது பவானியின் எதிர்ப்பார்ப்பில்லாத காதல்...
 

Author: Anu Chandran
Article Title: முன்னாள் காதலி
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN