tips 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குறிப்பு: என் எழுத்தாளர் தோழி ஒருவர் கொடுத்து இருந்ததை நான் இங்கு பதிவிடுகிறேன்....


தமிழில் நிறுத்தற் குறிகள் பயன்பாடு…

நாம் தமிழில் நாவல்கள் எழுதும் போது நிறுத்தற் குறிகளை சரியான முறையில் பயன்படுத்துதல் வேண்டும். தவறாக பயன்படுத்தும் போது சில இடங்களில் வரிகளை புரிந்து கொள்ள முடியாமலும் அர்த்தங்கள் மாறியும் போகலாம்.
எனக்குத் தெரிந்த வகையில் நிறுத்தற் குறிகளின் பயன்பாடுகளை கொடுத்திருக்கிறேன். எழுத்தாளர்கள் படித்துப் பயன்பெறுக.

முதலில் கமா (,) எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்…
• பொருட்களை தனித்தனியே குறிப்பிட பயன் படுத்த வேண்டும். (எ. கா.) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு.
இதில் வெற்றிலையும் பாக்கும் என்று உம் விகுதி சேர்த்து வந்தால் கமா போடக்கூடாது.
• தொடர்ச்சியான முடிவு பெறாத செயல்களுக்கு இடையில் கமா போடவேண்டும். (எகா) நான் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, மார்க்கெட்டுக்கு சென்று வந்தேன்.
• ஒருவரை அழைக்கும் பெயர்களின் முன் கமா போட வேண்டும்… (எகா) தந்தையே, நலமா?… வீரா, இங்கேவா… அரசே, நகர்வலம் போகலாமா?
• நேற்கூற்று வாக்கியங்களில் கமா அவசியம் போட வேண்டும்… (எகா) ஆசிரியர் மாணவனைப் பார்த்து, “இங்கு வா” என்றார். (இதில் பார்த்து என்ற சொல்லின் பின் கமா போடப்பட்டுள்ளதை கவனிக்க…) “…” ‘…’ இக்குறிகள் (இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள்) ஆரம்பிக்கும் போது அதற்கு முன் கண்டிப்பாக கமா வரும்.
• ஆனால், அகையால், எனவே, ஆயின், ஆகிய சொற்களுக்குப் பின் கட்டாயம் கமா போட வேண்டும்.

அரைப்புள்ளி… (;)

• ஒருவர் செய்யும் பல முடிவுற்ற செயல்களுக்கு இடையே இந்த குறியீடு வரும்.
• கண்ணகி கோபத்தில் எழுந்தாள்; மதுரை நகர் வந்தாள்; மன்னனைப் பார்த்தாள்; நியாயம் கேட்டுப் போராடினாள்.
• இதில் கண்ணகி என்ற ஒருவர் செய்யும் பல செயல்கள் வினைமுற்றுகளாக தொடர்ந்து வரும் போது இடையே அரைப்புள்ளி பயன்படுத்தலாம்.

முற்றுப் புள்ளி… (.)

• ஒரு சாதாரண வாக்கியம் முடியும் போது இறுதியில் முற்றுப்புள்ளி பயன்படுத்த வேண்டும்.
• சொற் குறுக்கத்தையும் பெயர் குறுக்கத்தையும் எழுதும் போது முற்றுப்புள்ளி பயன்படுத்த வேண்டும். (எகா.) திரு. எ. கா. வா. ஊ. சி. எம். ஜி. ஆர்.
உணர்ச்சிக் குறி !

• மகிழ்ச்சி, வியப்பு, பயம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை உடைய வாக்கியங்களுக்கு இக்குறி பயன்படுத்த வேண்டும்.
அய்யோ! --- பயம்
ஆகா! ---வியப்பு மகிழ்ச்சி
அச்சச்சோ! -- சோகம்.
• உணர்ச்சிக் குறிகளை தேவையான இடங்களில் பயன்படுத்தும் போது நாவலோடு நன்கு ஒன்றி படிக்க முடிகிறது.

வினாக்குறி ?

• வினா வாக்கியங்களுக்கு பிறகு இக்குறியை பயன்படுத்த வேண்டும்.
• (எகா) உனக்கு யார் கூறியது என்று தெரியுமா? என்ன வேண்டும் உனக்கு?

இரட்டை மேற்கோள் குறி… (“…”)

• வாய் விட்டு சொல்லக்கூடிய வசனங்கள் இரட்டை மேற்கோள் குறியில் வரும்.
• (எ. கா.) ரோமியோ ஸ்வீட்ஹார்ட்டைப் பார்த்து, “நீ என் உயிர் அன்பே!” என்றான்.
• பொன்மொழிகளை மேற்கோள் காட்டும் போது இரட்டை மேற்கோள் குறி வரும்
• (எ. கா.) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது வள்ளுவன் வாக்கு.

ஒற்றை மேற்கோள் குறி… (‘…’)

• மனதில் நினைக்கும்படி வரும் வசனங்கள் அனைத்தும் ஒற்றை மேற்கோள் குறிக்குள் வரும்.
• (எ. கா.) மைக்கேலைப் பார்த்த தனத்தின் மனதில், ‘என்னை ஏமாற்றி விட்டாயே’ என்ற வலி இருந்தது.
• ‘உன்னைவிட்டு நீங்க மாட்டேன்’ மனதுக்குள் எண்ணியபடி அவளைப் பார்த்தான் சரண்.
• இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் குறியை பயன்படுத்த வேண்டும் என்று வரும்போது ஒற்றை மேற்கோள் குறி மட்டுமே
இடுதல் வேண்டும்.

பொதுவான சில டிப்ஸ்.

• நிறுத்தற் குறிகளை சரியாக உபயோகப் படுத்துவது நாவலை வாசிக்கும் போது உள்ளார்ந்து வாசிக்க உதவும்.
• (…) தொடர்ச்சியான மூன்று புள்ளி… இந்தக் குறியீடு பத்தி நிறைவு பெறாமல் தொடரும் போது பயன்படுத்துவோம்.
• (…) மூன்று புள்ளிகள்தான் வரும். இரண்டு அல்லது நான்கு ஐந்து என வரிசையாக நம் இஷ்டத்துக்கு வைப்பது தவறு.
• தொடர்ச்சியாக வரும் மூன்று புள்ளிகள் (…) பயன்படுத்துவதை கூடிய மட்டும் தவிர்த்துவிடுதல் நலம்.
• நிறுத்தற் குறிகளை வரிசையாக இரண்டு மூன்று அடுக்கி எழுதுவதை பார்க்கிறேன். அது தவறு. ஒரு குறியைதான் ஒரு இடத்தில் பயன்படுத்தலாம்
• ( எகா) !!!!!!!, !?. !!, ??, ?????? இப்படி எழுதுவது தவறு.
• …! இப்படி மூன்று புள்ளிகளுக்கு அடுத்து ஆச்சர்யக்குறி வினாக்குறி பயன்படுத்துவதையும் பார்க்கிறேன். அது சரியா தவறா தெரியவில்லை. தெரிந்தவர் விளக்கவும்.
• வினாக்குறி, ஆச்சரியக்குறி, முற்றுப்புள்ளி ஆகியவைக்குப் பிறகுதான் இரட்டை மேற்கோள் முடிவுக்குறி வரவேண்டும். (எகா) “நீ இன்று வருவாயா?” , “உன்னை மிகவும் பிடிக்கும்.” , “ஐயோ! எனக்கு பயமாய் இருக்கிறது!”
• வசனங்களோ வாக்கியங்களோ நீளமாக இல்லாமல் சிறு சிறு வாக்கியங்களாக இருத்தல் நலம்.
• சற்று பெரிய அளவிலான வசனமாக இருந்தால் இரண்டு மூன்று முறை வாசித்துப் பார்த்து, சற்று நிறுத்தி படிக்க வேண்டிய இடத்தில் கமா பயன்படுத்தலாம்.
• வட்டார வழக்கு சொற்களோ, கொச்சையான பேச்சு வழக்கு சொற்களோ வசனங்களில் மட்டும் வருவதே நலம்.
• ஆசிரியர் கதையை விளக்கும் பகுதிகள் நல்ல தமிழில் இருத்தல் அவசியம்.
• அடைப்புக் குறிகள் (…) வார்த்தைகளுக்கோ வாக்கியத்துக்கோ விளக்கம் அளிக்கையில் பயன்படுத்த வேண்டும்.
• (எகா) “துட்டு (காசு) செலவு பண்ணும்போது பார்த்து பண்ணு”
• ஆசிரியரின் மைண்ட் வாய்சாக சில வாக்கியங்கள் அடைப்புக் குறிக்குள் காமெடிக்காக எழுதுவதைப் பார்க்கிறேன். ஆனால் அவை புக் பப்ளிஷிங்கில் வரக்கூடாது.
• (எ.கா) (டேய் நீ ஹீரோடா…) (உன்னைப் போய் ஹீரோவா போட்டிருக்கேனே) இது போன்ற வசனங்கள் எழுத்தாளரால் இடைச்செருகப் பட்டிருக்கும். இவை ஆன்லைனில் படிக்கும்போது பிழையாய் தெரிவதில்லை. புக்காக வரும் போது நீக்க வேண்டும்.

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN