சாதி மல்லிப் பூச்சரமே!!! 25

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 25

கணவன் மனைவியான சந்திரனும் தாமரையும் வேந்தனை தங்கள் வாழ்வுக்கு கிடைத்த பொக்கிஷமாக ஏற்றுக் கொண்டார்களே தவிர அவனைப் பெற்றவர்களான சின்னத்தாய் அன்பழகனைப் பற்றி நினைக்கவில்லை. சுயநலம் தான்! சந்திரன் எப்போதாவது மனைவியிடம் சின்னத்தாய் தம்பதிகளை விசாரிக்கலாமா என்று கேட்பார் தான். ஆனால் அதற்கு தாமரை சம்மதிக்கவில்லை. தங்கள் சொத்தான ஒரே மகனான வேந்தன் எங்கே தங்கள் கையை விட்டுப் போய்விடுவானோ என்ற பயம் அவருக்கு.


எல்லாவற்றையும் சொல்லி முடித்த தாமரை, மகனை கட்டிக் கொண்டு “நீ என் மகன்தேன் யா. இந்த பொறப்புல நான் சாகற வரையில நீ மட்டும்தேன் யா என் மகன். அப்டி இல்லன்னு யார் சொன்னாலும் நான் ஏத்துக்கிட மாட்டேன் யா...” நிதர்சனம் இது தான் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் கதற


அந்த இடமே மயான அமைதி கொண்டது. பெற்ற தாயே என்றாலும் நியாயவாதியான படிப்பறிவே இல்லாத சின்னத்தாய் “ஐயோ தாயி! அவன் உங்க மகன் தான். இல்ல இல்ல... நம்ப மகன் தான். இவன் மேல இம்புட்டு பாசம் வச்சிருக்கீங்களே... பின்ன? வளர்த்தவராச்சே! உங்களுக்கும் எப்படி இருக்கும்? நான் கேட்கல... நான் கேட்கல... என் மவன கண்குளிர பார்த்து ஆசை தீர நான் தொட்டுத் தடவினாலே போதும் தாயி எனக்கு...” முழுமனதாய் சொன்னவர் “இவன் தான் என் மகனா!?” என்று கேட்ட படி கண்ணில் கண்ணீரும் பாசமும் போட்டி போட வேந்தனிடம் சின்னத்தாய் நெருங்க


அடுத்த நிமிடம் “அம்மா!” ஐயாரு கொடுத்த ஒரே அறையில் தூரப் போய் விழுந்து கிடந்தார் சின்னத்தாய். “எம்புட்டு ஏத்தம் இருந்தா அவனை நீ தொடுவ?” கூடவே அவர் கர்ஜிக்க


வேந்தன் கோபத்தில் நுனி காலால் எத்தி வேட்டியை மடித்துக் கட்டியவன், “என்னைய பத்து மாசம் சுமந்து பெத்த அம்மை! என்னைய தொடக் கூடாதுன்னு சொல்ல நீங்க யார்?” இவன் எகிற


“எலேய்! என்ட்டவே நெஞ்ச நிமித்தி காட்டுதியா நீ?” அவரும் பல்லைக் கடிக்க


“என்ன? இவன நாயின்னு சொன்னப்போம் எகுறாதவன் இப்போ எகுறுதானு பாக்கறீயளா?” என்று கேட்டவன் “என்னைய என்ன சொல்லவும் ஒங்களுக்கு உரிமை இருக்கு. ஏன்... இந்த நிமிசமே ஒங்க கையால என்னைய வெட்டிப் போட்டாலும் நான் பேசாமத்தேன் இருப்பேன். ஆனா என் ரெண்டு அம்மைகளுக்கும் ஏதாவது ஒண்ணுனா நான் பாத்துகிட்டு சும்மா நிக்க மாட்டேன். அது நீங்களா இருந்தாலும் சரி...” இவன் எச்சரித்தபடி கையில் போட்டிருந்த காப்பை முறுக்க


“என்னடே, அப்போம் அவளத்தேன் அம்மைனு சொல்லுதியா?” ஐயாரு கூரிய விழிகளுடன் கேட்க


“நான் எப்போம் அப்டி சொன்னேன்? ரெண்டு பேத்தும்தேன் எனக்கு அம்மைனு சொல்லுதேன்...” இவனும் விட்டுக் கொடுக்காமல் பதில் தர


“சரி… அதேன் புள்ள இல்லைன்னு குடுத்துட்டவ இல்ல? இப்போம் ஏன் வந்த?” கூட்டத்தில் ஒருவர் கேட்க


“கோமாவுல இருந்த நான் ரெண்டு வருசம் கழிச்சு தான் தெளிஞ்சேன். அப்பவும் என் புருஷன் இந்த உண்மையச் சொல்லல... கொழந்த செத்துப் போச்சுன்னு தான் சொன்னார். இத்தனை வருஷம் அதைத் தான் நானும் நம்பிட்டு இருந்தேன். இப்போ மூணு மாசத்துக்கு முன்ன என் புருஷனுக்கு விபத்து ஏற்பட்டு பொழைக்க மாட்டார்னு தெரிய வரவோ, என்ன நாதி இல்லாம இந்த உலகத்துல விட்டுட்டுப் போக மனசு இல்லாம இப்படி ஒரு மகன் இருக்கிறத சொல்லிட்டு செத்துட்டார் அவர்...” யாரும் இல்லாத அநாதரவான நிலையில் சின்னத்தாய் தன் நிலையை விளக்க


“அதேன் தாமரையே எல்லாத்தையும் ஒத்துகிட்டு சொல்லிருச்சே... பொறவு என்ன வெளக்கம் வேணும்?”


“என்ன இருந்தாலும் பெத்தவ அல்லோ? பாசம் இருக்கத்தேன செய்யும்?”


“எம்புட்டு வேணுமோ பணத்த குடுத்து அந்த பொம்பளைய அனுப்புத வழியப் பாருங்க”


“ஊருக்கே நாட்டாம சொல்லுத குடும்பத்துக்கே இப்டி...”


“என்னத்த சொல்ல? சாதி... சாதின்னு நெஞ்ச நிமித்திகிட்டு திரிவான் சிவகுரு! இப்போம் என்ன செய்யப் போறானோ?”


இப்படியான பல குரல்கள் அங்கு சூழ இருந்து எழ, “அது எப்டி எங்க சாதி சனத்து கூட என்ன சாதினே தெரியாத இவன வெச்சிக்கிட முடியும்?” கவியரசன் சென்பகவல்லியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு அழகாய் காய் நகர்த்த


“அதுக்காண்டி நம்ப புள்ள வேந்தன தொரத்தவாலே முடியும்?” ஒருவர் கேட்க


“ஐயாரு மானம் உள்ள மனுசன். எத்தனை பேத்தோட சாதி மாத்து கல்யாணத்த நிறுத்தி இருக்காக... எத்தனை வேத்து சாதி பையனுவள ஓட ஓட வெரட்டி இருப்பாக... இன்னிக்கு அவுக குடும்பத்துல இப்டி ஒருத்தன் சேத்துக்கிட்டா அவுக மொகத்துக்கு நேரா நாக்கு மேல பல்லு போட்டு கை நீட்டி எவனா பேச மாட்டானுவ? அதுவுங்கூடி வேத்து சாதி ஆளுங்க இவுகள என்ன மதிப்பாய்ங்க… இதெல்லாம் யோசிச்சு பார்த்து அவுகளே முடிவு எடுப்பாக. ரோசக்கார மனுசரல்லோ...” செண்பகவல்லி அழகாய் பூடகமாய் பற்ற வைக்க


உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உதிரத்திற்குப் பதில் சாதி எனும் சாக்கடையில் ஊறி இருக்கும் ஐயாரு, “ஒன்னையப் பெத்தவள கூட்டிகிட்டு இந்த எடத்த விட்டே வெளியே போடே!” என்று வேந்தனை பார்த்து முழங்க


இப்போது வேந்தன் எதிர்பார்ப்புடன் மனைவியைப் பார்க்க, அவளோ ஒரு அந்நியப் பார்வையுடன் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.


“என்னது? யார்ட்ட? எடு அந்த அருவாள... யார் இந்த எடத்த விட்டு வெளியே போவணும்... அதெல்லாம் அவன் போவ மாட்டான். அவன் என் தங்கச்சி மவன். இங்கனதேன் இருப்பான்...” முதல் முறையாக கந்தமாறன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எகிறினார்


“எலேய் மாறா! வேத்து சாதி ஆளுக்கு ஒன் பொண்ண கெட்டி குடுத்துருக்கலே. பொறவு நம்ப சாதில எவனும் ஒன்னைய மதிக்க மாட்டான்லே....” கூட்டத்தில் ஒருவர் சொல்ல


“அதனால என்னவே? கல்யாணதேன் முடிஞ்சிருக்கு... ரெண்டு பேத்தையும் அறுத்து விட்டுட்டு பொண்ணுக்கு வேறு கல்யாணம் செஞ்சிட்டா போவுது… இதெல்லாம் நம்ப வழக்கதேனே... அதுக்காண்டி வேத்து சாதி ஆள நம்ப வம்முசத்துல சேத்துக்கிட முடியுமா? என்ன இருந்தாலும் சாதிதாம்ல முக்கியம்! ஐயாரு, நீ சரியாதேன் முடிவு எடுத்துருக்குத...” திருமணத்திற்கு வந்து வாழ்த்திய அதே பெரிய மனிதர்களே இப்போது சாதி என்பதை வைத்துக் கொண்டு தங்கள் ஈன புத்தியைக் காட்டி கூட்டத்தில் கொக்கரிக்க


இப்போதும் வேந்தன் மனைவியைப் பார்க்க, இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் பழைய படியே நின்றிருந்தாள் தென்றல். உடனே இவன், “எலேய்....” என்ற கர்ஜனையுடன் பேசியவர்களை துவைக்க நினைக்க


அதே நேரம் “சாதியாவது ம....ராவது என்னைக்கும் இவன்தேன்லே என் மருமவன். இந்த சென்மத்துல என் மவளுக்கு புருசன் என் மாப்ள மதிவேந்தன்தாம்ல.... யாருக்கு வேணும்லே ஒங்க சாதி?” என்ற படி கந்தமாறன் வேந்தன் தோளில் கை போட்டு தன் மீசையை முறுக்கி கொண்டார்


“என்னடே மாறா வாய் நீளுது? நான் சொல்றத எல்லாம் கேட்டு என் பின்னாடி கை கெட்டி நிக்குறவன்டே நீ...” ஐயாரு கோபத்தில் சொல்லிக் காட்ட


“நான் மட்டுமா நின்னேன்? அப்படி நின்னு உசுரையே குடுத்த எங்களத்தேன் சாணிலே செருப்ப முக்கி எடுத்து அடிச்சிட்டீயளே! பொறவு என்ன?” கந்தமாறனுக்கு மீசை துடித்தது


“போடே... அப்போம்... நீயும் போடே... அவனை பெத்தவ என்ன சாதின்னு தெரியல, அவனும் என்ன சாதின்னு தெரியல. ஆனா என்னைய விட அவனதேன் ஒனக்கு வேணும் இல்ல?” என்று கேட்டவர் “என் சாதி சனத்துக்கு முன்ன மீசைய முறுக்கிட்டு திரிஞ்சவன்டே நானு... அவிங்க முன்ன கூனிக் குறுகி என்னைய நிக்கச் சொல்லுதியா? அதுக்கு இந்த ஐயாரு செத்தாலும் சாவானே தவிர... என்னைக்கும் இவன என் வம்முசத்துல நான் சேத்துக்கிட மாட்டேன்டே...” ஐயாரு தன் பிடிவாத்திலேயே நிற்க


“ஒங்கள்ட்ட யார் எங்கள சேத்துக்கிட சொன்னவ? மொதல்ல நீங்க யார் எங்கள சேத்துக்கிட? இந்த ராஜேந்திரன் வம்முசத்துல எங்கள போல நீங்களும் ஒரு பொறப்பு அம்புட்டுதேன்... சும்மா அதிகாரம் பண்ணாதீய… எனக்கு என் மாப்ளதேன் முக்கியம். அதனால நானும் என் பொண்ணும் இந்த வீட்டை விட்டு வெளியே போறோம்....” மாறன் தன் மாப்பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் சபையில் பேச


“போகணும்னா நீங்க போங்க. என்னை ஏன் வரச் சொல்றீங்க? இப்போ நான் உங்க பொண்ணு இல்ல... மதிவேந்தன் மனைவி. அவரையும் வேணாம்னு தட்டிக் கழிக்க எனக்கு உரிமை இருக்கு” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தென்றல் வார்த்தைகளை ஈட்டியாய் எறிய


“அப்டி சொல்லுலே... என்ன இருந்தாலும் நீ ஐயாரு வம்முசம் ஆச்சே! விட்டுக் குடுத்துருவியா நம்ப சாதிய?” ஐயாரு மீசையை முறுக்கிய படி கொக்கரிக்க


“அட ச்ச! வாய மூடுங்க. சாதி சாதின்னு எந்த நேரமும் அதையே பிணாத்திகிட்டு! எனக்கு நீங்களும் வேண்டாம் உங்க சாதியும் வேண்டாம். ஏன்… என் மாமனும் எனக்கு வேண்டாம். உங்ககிட்ட எல்லாம் சிக்கி மூச்சு முட்டி நான் சாகறத விட தனி ஆளா சுதந்திரமா இந்த உலகத்தில் வாழப் போறேன். என்னைக் கட்டுப்படுத்த உங்க யாருக்கும் உரிமை இல்லை” என்றவள் தன் பெட்டியுடன் கிளம்ப


வேந்தனுக்கு இன்று நடந்த விஷயங்களால் அதிர்ச்சி தான். அதனால் தான் அவன் மனது அவனையும் மீறி மனைவியைத் தேடியது. யார் இல்லை என்றாலும் தன் மனைவி தனக்குத் துணை இருப்பாள் என்று இவன் நினைத்திருக்க, அவளோ விஷத்தைக் கக்கினாள்! அதுவும் நிரந்தரமான பிரிவு என்ற முடிவில். அப்போதும் மனம் கேட்காமல் இவன் மனைவியின் கையைப் பிடித்து “பாப்பு குட்டி...” என்ற அழைப்புடன் அவளைத் தடுக்க


“இப்படி ஒரு வேற்று சாதியில இருந்து வந்த நீ எனக்கு வேண்டாம் மாமா...” பொய்யாய் சொன்னவள் எங்கோ பார்த்தபடி “நான் இந்த விஷயத்துல உறுதியா இருக்கேன். மீறி என்னை கட்டாயப்படுத்தினா நான் கழுத்துல கயிற்றைக் கட்டிட்டு உத்திரத்துலே தொங்கிடுவேன்...” என்று இவள் தாழ்ந்த குரலில் கணவனுக்கு மட்டும் உறுதியுடன் பறைசாற்ற, தன் மனதிற்குள் ஏதோ ஒன்று எரிந்து சாம்பலாக... அதன் துடிப்பில் மனைவியின் கையை விட்டான் வேந்தன். பின் தன் பிடிவாதத்தோடு யாரும் தடுக்காமலே வீட்டை விட்டு ஏன் அந்த ஊரை விட்டே கிளம்பிச் சென்றாள் பூந்தென்றல்.


“இன்னும் எதுக்குலே நிக்க? அதேன் ஒன் பொஞ்சாதியே ஒன்னைய வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டாளே... பொறவு என்ன? நீயும் கெளம்பு...” செண்பகவல்லி எள்ளி நகையாட


“அப்போம் நானும் என் மகனோட கெளம்புதேன்...” தாமரை கூற


“நீ போவக் கூடாது தாமரை...” அவரை தடுத்து நிறுத்த பார்த்தது ஐயாருவின் அதிகார குரல்


“என்னைய அதிகாரம் செய்ய நீங்க யார்? இம்புட்டு நாள் ஒங்களுக்கு நாங்க அடங்கிப் போனது ஒங்க மேல வெச்சிருந்த பாசமும் நீங்க என்னைய வளர்த்த நன்றிக் கடனுக்காண்டிதேன். நிச்சயம் ஒங்க சாதி அதிகாரத்தால் அடங்கிப் போவல. என் புருசன் மேல வச்ச காதலுக்காண்டி வீட்ட எதுத்துப் போனவ நான். இப்போம் சொல்லுதேன், இந்த பெறவிக்கு வேந்தன்தேன் என் மகன். அவன் என்ன சாதிங்கிறது எனக்கு தேவையில்ல. ஒங்க சாதி வேணாம், நீங்க வேணாம், செல்வாக்கு வேணாம், ஐயாரு குடும்பங்கிற அடையாளம் வேணாம். எனக்கு என் புள்ள மட்டும் போதும். சாகுதவரைக்கும் அவன் ஒருத்தன் எனக்கு போதும்...” இறுதியாய் உறுதியாய் தாமரை சபையில் சொல்ல


அந்த ஊரே வாய் மேல் கை வைத்த படி தாமரையையும் மாறனையும் தான் ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.


கிளம்புவதற்கு முன் ஐயாருவிடம் வந்த வேந்தன் “நான் ஒங்க குடும்பம் இல்ல… அதனால் நீங்க எனக்கு செஞ்சது சரி. ஆனா இது என் குடும்பம்தேன். இந்த வீட்ல இருக்கறவய்ங்களுக்கோ இல்ல ஒங்களுக்கோ ஏதாவது ஒண்ணுனா... மொத ஆளா வெச்சவன் கைய நான்தேன் ஒடைப்பேன். அதே போல இன்னொன்னும் கேக்குதேன்... இன்னும் எத்தனை நாளைக்கு ஒங்க சாதிய புடிச்சிகிட்டு அது கீழ வாழப் போறீய? அத விட்டு வெளிய வாங்க... இல்லனா அதுவே ஒங்கள பாரம் தாங்காம மண்ணுகுள்ளாற அழுத்திரும். அப்போம் ஒங்களச் சுத்தி எந்த நல்ல ஒறவுகளும் இருக்காது....” என்றவன் தன் தாயை அழைத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க


“இம்புட்டு பேசிட்டு போறவன் எதுக்கு எங்க வீட்டு அடையாளத்தோட போகுத? அதை எல்லாம் கெழட்டி குடுத்துட்டு போ” அதாவது அவன் அணிந்திருக்கும் காப்பிலிருந்து, கை புஜத்தில் உள்ள தாயத்து வரை ஐயாரு கழற்றச் சொல்லி கேட்க


வேந்தனுக்கு முன் முந்திக் கொண்டு தாமரை, “நான் இந்த வீட்டு பொண்ணுதேன். என் ரத்தத்தையே பாலாக்கி அவனுக்கு குடுத்திருக்குதேன். அதனால அவனும் இந்த வீட்டு புள்ளதேன். எங்க… என்ன இந்த வீட்டுப் பொண்ணு இல்லைன்னு சொல்லுங்க பாப்போம்...” அவர் நேரிடையாக ஐயாருக்கு சவால் விட, முகத்தைத் திருப்பிக் கொண்டார் ஐயாரு.


நடந்த கலோபரத்தை பார்த்த சின்னத்தாய், “ராசா! வேணாம் யா. என்னாலே இங்க பிரச்சனை வேணாம். என் புள்ள நீ குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும். நான் அநாதைப் பொணமா போகக் கூடாதுன்னு தான் உன் அப்பா இந்த குடும்பத்தை பத்தி சொல்லி இங்க என்னை அனுப்பினார். உன்னை பிரிக்க நான் வரல ராசா. நான் அநாதைப் பொணமாவே...” அவரின் வாய் மூடி தன் தோள் சாய்த்து அணைத்துக் கொண்டவன்


“ஒங்க மகன் நான் உசுரோட இருக்குத வரைக்கும் நீங்க எப்டி மா அனாதையா போவிய...” என்று வேந்தன் தன்னைப் பெற்றவளுக்கு பதில் சொன்னவன், “ஏன் மாமா, ஒலகத்துல ஒருத்தனுக்கு ரெண்டு அம்மை இருக்கக் கூடாதா என்ன?” இவன் தன் இரண்டு தாயையும் விட்டுக் கொடுக்காமல் தாய் மாமனிடம் வினாவ


“யார் மாப்ள அப்டி சொல்றது? அந்த ஆயர் பாடி கண்ணனுக்கே பெத்த அம்மை வளத்த அம்மைனு ரெண்டு அம்மைதேன்யா? ஏன்... ஒன் அம்மைக்கும் எனக்குமே ரெண்டு அம்மைதேன்யா. இதெல்லாம் நம்ம வம்முசத்து வழிதேன்யா...” என்றவர் அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார் அந்த பாசக்கார தாய் மாமன்.

ஒரே நாளில் அந்த பெரிய வீட்டு குடும்பத்தில் என்னென்வோ.. நடந்து விட்டது… தாமரை தன் வாய் மொழியாக உண்மையை ஒப்பு கொள்ளாமல் இருந்திருந்தால்… யாருமே சின்னத்தாய் சொன்னதை நம்பி இருக்க மாட்டார்கள்… என்ன செய்ய… எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது தானே நடக்கும்.


போகும் அவர்களைத் தன் சுயநலத்தின் உச்சத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஐயாரு. வழக்கம் போல அங்கேயும், மூர்த்தியும் பேசா மடந்தைகளாக மாறி விட, செண்பகவல்லிக்கும், கவியரசனுக்கும் தான் தாங்கள் சாதித்ததை நினைத்து கொண்டாட்டமாக இருந்தது.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 25
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijayalakshmi 15

New member
வளர்த்த பாசத்தை விட ஜாதி வெறி தான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களை என்ன செய்வது? நன்றி சகோதரி :) :) :)
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வளர்த்த பாசத்தை விட ஜாதி வெறி தான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களை என்ன செய்வது? நன்றி சகோதரி :) :) :)

நன்றிங்க சிஸ்💞
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN