சாதி மல்லிப் பூச்சரமே!!! 26

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 26

விதி வலியது என்பது இது தானோ? அதிலும் தாமரை வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே வேண்டாம். காதலித்து திருமணம் செய்து கணவனுடன் அவர் வாழ்ந்த வாழ்வும் நிலைக்கவில்லை. பத்து மாதம் சுமந்த மகனின் முகத்தையும் பார்க்க முடியவில்லை.


பிறகு கானல்நீராய் இருந்த தன் வாழ்விற்கு இனி தானாக வந்து சேர்ந்த மதிவேந்தன் தான் ஆகாய கங்கை என்று அவர் நினைத்திருக்க, இல்லை அவன் எனக்கும் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாட மேக மங்கையாய் சின்னத்தாய் வந்து நிற்க, இதை எதிர்பார்க்கவில்லை தாமரை. இப்படி யாரும் வேந்தனைத் தேடி வரக் கூடாது என்ற எண்ணத்தால் தான் இங்கு மகனுடன் தாமரை பிறந்தவீட்டில் அடைக்கலமானதோ?


எல்லாம் முன்பே தெரிந்த அவருக்கே இன்று நடந்த விஷயம் அதிர்ச்சி எனும்போது தனக்குப் பிறகு தங்கள் சாதிசனத்தை வழி நடத்தப் போகிறவன் வேந்தன் தான் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்த ஐயாருவுக்கு எப்படி இருக்கும்? முதலில் இது ஊர் விஷயம் என்று விசாரிக்க ஆரம்பித்தவருக்கு தாமரை உண்மையை ஒற்றுக் கொள்ளவும், பந்த பாசத்தை விட ஏன் வளர்த்தப் பாசத்தை விட தான் ஊரார் முன் கவுரமாக வாழ, தன் சாதியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஐயாரு வேந்தன் செய்த எல்லாவற்றையும் மறந்து அவனை வெளியே போகச் சொன்னது தான் விந்தையிலும் விந்தையாக இருந்தது.


வேந்தனின் நிலையோ அவன் தாய் அதிர்ச்சியைக் கொடுக்க, ஐயாரு அவனை வெளியே விரட்டி அவமானத்தைக் கொடுக்க, எல்லாவற்றையும் எதிர்கொண்டு தாங்கி நின்றவனால் மனைவி தன்னைப் புறக்கணித்து அசிங்க அவமானத்தைத் தந்து என் மனதில் நீ இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏற்றுக் கொண்டவன் மனது மரண வலியைத் தான் அனுபவித்தது. இப்படி ஒரு உண்மையை அறிந்ததும் அவன் மனது மனைவியின் ‘நான் உங்களுக்கு இருக்கிறேன்...’ என்று அவள் கண்ணசைவால் கூறும் ஆறுதல் மொழியை அவன் காதல் கொண்ட மனது எதிர்பார்த்தது.


அதனால் தான் அவனின் பார்வை நொடிக்கொரு முறை மனைவியின் முகத்தை நோக்கியது. இதற்கு முன் வேந்தன் இப்படி இல்லை. திருமணத்திற்குப் பின் தன் சுக துக்கங்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளவே அவன் மனது துடிக்க, சராசரி ஆண் மகனாய் மனைவியின் ஆறுதலான வருடலுக்கும் அன்பான பார்வைக்கும் தைரியமிக்க சொற்களுக்கு எல்லாம் அவன் ஏங்கத் தான் செய்தான்.


அப்படிப் பட்ட அவன் மனதைத் தான் இன்று பல ஆயிரம் சிதறல்களாய் உடைத்து விட்டாள் அவன் மனைவி. அதுவும் எப்படிப் பட்ட வார்த்தைகள் அவை! ‘வேற்று சாதியான உன்னுடன் வாழ மாட்டேன்’ என்ற வார்த்தைகளால் அவன் மனதில் அமிலத்தை அல்லவா ஊற்றி விட்டாள்!


‘முதலில் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் பிறகு நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு மனைவி தன்னுடன் வாழ வந்தது என்ன? அன்று தந்தை அடிக்குப் பயந்து ‘மதி மாமா!’ என்று தன்னைக் கட்டி கொண்டது என்ன? யாரும் அவளிடம் பேசாமல் தவிர்த்த போது, ‘மதிமாமா... நீ மட்டும் இல்லனா நான் செத்துப் போயிருப்பேன் மாமா!’ என்று என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறியது என்ன?


அதை எல்லாம் விட இந்த நான்கு நாட்களில் ஒரு கணவனாய் அவளிடம் நான் நெருங்கி அந்நியோன்யத்தைக் காட்ட, எந்த எதிர்வினையும் காட்டாமல் தன்னிடம் மயங்கி சரிந்து துவண்டது என்ன? இப்படி எத்தனையோ என்ன நிஜங்களாய் இருக்க, அது நிஜமா இல்லை இன்று மனைவி கொட்டிய வார்த்தைகள் நிஜமா?’ என்று நாளும் தெரிந்த அந்த ஆண் மகனால் அறிந்து கொள்ளத் தான் முடியவில்லை.


‘இப்போது சொன்ன வார்த்தைகள் எல்லாம் வேஷம் என்று கூட அவள் சொல்லட்டும். ஆனால் தன்னிடம் மயங்கியதை வேஷம் என்று மட்டும் அவள் சொல்லி விட்டால்? ஒருவேளை அது அப்படி தானோ…’ ஒரு ஆண் மகனாய் அடுத்ததை அவனால் நினைக்கக் கூட முடியவில்லை. எதுவாக இருந்தாலும் மனைவியின் சுயநல பிம்பம் உடைபட, அவன் தடுத்தும் மீறிச் செல்லும் மகளை மாறன் தடுக்க முயற்சிக்க, மாமனை தடுத்து நிறுத்தினான் வேந்தன்.


மருமகனின் கண்ணசைவிலேயே புரிந்து கொண்டவர் தன் மொத்த கோபத்துடன் மகளிடம் திரும்பி, “நான் செத்தாலும் என் மொகத்துல முழிச்சுராத!” என்று இவர் தன் மகளுக்குச் சாபமிட, அந்த சாபத்தை வாங்கிக் கொண்டு கல்லென இறுகிய முகத்துடன் மனதுடன் விலகிச் சென்றிருந்தாள் தென்றல்.


ஒரே நாளில் தன் பலம் கொண்ட உறவுகளை இழந்து அதை நினைத்து துளியும் வருத்தம் இல்லாமல் தன் மீசையை முறுக்கியபடி ஐயாரு உள்ளே வர, வீட்டில் நடந்த வாக்குவாதத்தால் அதிர்ச்சியில் மயங்கி சரிந்திருந்தார் அந்த வீட்டின் மூத்த தலைமுறையான ராஜாத்தி பாட்டி.


பின் அவரை மருத்துவமனையில் சேர்த்து என்ன ஏது என்று ஐயாரு பார்க்க, அதிர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம் என்றார்கள். பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவர் அதன் பிறகு மகனிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ‘தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளே இப்போது எல்லாம் கேட்க மாட்டார்கள் என்னும்போது வயது முதிர்ந்த நிலையிலிருக்கும் இவனா கேட்பான்?’ என்று மகனை நினைத்து கசந்து தான் போனார் ராஜாத்தி பாட்டி.


அவருக்கு அனைத்து உறவுகளும் வேணும்… அதிலும் வேந்தனை அவர் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை… ஆனால் அவர் பேச்சை மட்டும் இல்லை இவ்விஷயமாக யார் பேச்சையும் கேட்க அவர் மகன் தான் தயாராக இல்லையே…


பண்ணை வீடு மாறனின் பெயரில் இருந்ததால் அங்கே வந்து விட்டார்கள் வேந்தனின் குடும்பத்தார். ஐயாரு முகத்துக்கு நேராக அங்கு தைரியமாகப் பேசி விட்டு இங்கு யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்பது புரியாமல் அனைவரும் இருக்க… தங்கள் மன ஆறுதலுக்காக மகனின் மடியில் இரு பக்கமும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார்கள் தாமரையும், சின்னத்தாயும்.


இந்த நிலையிலும் தன் இரண்டு தாயையும் பாரபட்சம் பார்க்காமல் அணைத்துக் கொண்ட மருமகனை நினைத்துப் பெருமையாக இருந்தாலும், கூடவே இப்படிப் பட்ட வைரத்துடன் வாழ தன் மகளுக்குத் துப்பு இல்லையே என்று மாறனின் மனம் நினைத்து வருந்தத் தான் செய்தது.


இரண்டு தினங்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் சகஜமாக இருப்பது போல் நடந்து கொண்டாலும் யாவரின் முகத்திலும் ஜீவனே இல்லாமல் பொய்யாகத் தான் அவர்கள் அனைவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எல்லாம் தன் தாயையும் மாமனையும் சில நேரம் தேற்றும் வேந்தன், பல நேரம் தன்னைத் தேற்றிக் கொள்ள வழி தெரியாமல் தனிமையில் எங்கோ வெறித்த படி தான் இருப்பான்.


இதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வேந்தன் நினைத்திருக்க, மாமனோ மருமகனைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அதிலும் இரவில் அவன் தூங்காமல் தோட்டத்தில் உலவும் போது, வளர்த்த அவரின் உள்ளம் பதறத் தான் செய்தது. அதன் விளைவு, பெற்ற மகளே என்றாலும் தென்றலை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக விலகி விட்டுத் தன் வளர்ப்பு மகனுக்கு ஒரு நல்லது செய்ய நினைத்தது அந்த அன்பு உள்ளம்.


பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்ததும், தன் தாயையும் மாமனையும் அழைத்துக் கொண்டு போய் அவரைப் பார்த்து விட்டுத் தான் வந்தான் வேந்தன்.


“வீட்டை வுட்டுத் தான் என்னைய போகச் சொன்னீக.. போய்ட்டேன். ஆனா எனக்கான ஒறவுகளப் பார்க்க வேணாம்னு நீங்க என்னைய கட்டுப்படுத்த முடியாது. மீறி அதச் செஞ்சாலும் அதுக்கெல்லாம் கட்டுப்படறவன் நான் இல்ல!” என்பதை ஐயாருவிடம் நேருக்கு நேர் சொல்லி விட்டுத் தான் வந்தான் வேந்தன். தன் ரத்தம் இல்லை என்றாலும் அவன் ஆளுமையில் திணறித்தான் போனார் அவர்.


மூன்று நாள் சென்று ஒரு நாள் தாமரை, “சின்னத்தாய்! வேந்தன் அப்பாவுக்கு காரியம் செய்தியளா?” என்று திடீரென கேட்க


“இல்லைங்க… அவர் மகன் கையால செய்ய நினைத்தேன். நீங்க அனுமதிப்பீங்களா?” சின்னத்தாய் நான் தான் இவனைப் பெற்றவள் என்ற ரீதியில் அதிகாரம் செய்யாமல் எதிர்பார்ப்பில் கேட்க


“என்ன இப்டி கேக்குறீக? யாருக்கு யார் அனுமதி தரணும்? நம்ப ரெண்டு பேத்துக்குமே இவன்தேன் மகன். எய்யா வேந்தா! நாள் பார்த்து ஒன் அப்பாவுக்கு அதுக்கான சோலியப் பாருயா” சமாதானத்தில் ஆரம்பித்து மகனிடம் கட்டளையில் முடித்தார் தாமரை.


என்ன இருந்தாலும் சின்னத்தாய்க்கும் அன்பழகனுக்கும் தாம் துரோகம் செய்ததாக நினைத்தவர் குற்ற உணர்ச்சியில் திணறித் தான் போனார் தாமரை. அதிலும் அன்பழகன் தன் கடைசி நேரத்தில் கூட தான் பெற்ற மகனைப் பார்க்காமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அவர் சென்றது தாமரைக்கு அவர் மேல் நன்மதிப்பைத் தர தன்னுடைய செயலை நினைத்து உறுத்தலாகத் தான் இருந்தது அவருக்கு. அதனால் தான் காரியத்திற்கானதைக் கேட்டு மகனைச் செய்ய வைத்தார் அவர்.


தாமரை இப்படி என்றால் மாறன் சின்னத்தாயை முழுவதுமாகவே தன் தங்கையாகவே ஏற்றுக் கொண்டார். தாமரை பள்ளிக்கும், மருமகன் பாக்டரிக்கும் போய் விட, வெகுளியான சின்னத்தாய்க்கு மாறனே பாதுகாப்பாளராகவும் ஆசானாகவும் இருந்தார்.


சில நேரங்களில் ஐயாருவை வெளியே பார்த்து விட்டு வந்தால் இவருக்குக் கோபம் தலைக்கு ஏறும். அதைப் போக்க கோபத்துடன் அன்றைய முழு சமையலையும் தானே ஏற்றுக் கொள்வார் அவர். அப்போதெல்லாம் சாப்பாடு நேரத்தில் “எலேய் மாப்ள! இன்னிக்கு எனக்கிருக்குத கோபத்துக்கு காரஞ்சாரமா சமைச்சிருக்கேன்டே. வாங்க எல்லாரும் சாப்புடுவோம்… கண்ணு மூக்குல தண்ணி கொட்டுதாப்ல சமைச்சிருக்குதேன்” என்று மாறன் அழைக்க, உணர்ந்து கொண்டவர்கள் தங்களின் வாழ்வை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தயாரானார்கள் அங்கிருந்த அனைவரும்.


நடந்த விஷயம் கேள்விப் பட்டு ஊரிலிருந்து வந்த நவீனும் நரேனும் அவர்கள் தாயை நாலு வார்த்தை நன்றாகக் கேட்டு விட்டு வேந்தனுடன் வந்து அதே மாறாத அன்புடன் அவன் தோள் சாய்ந்து கொள்ள, இன்றைய தலைமுறைகளான அவர்களைப் பார்த்துக் கண்ணில் நீர் கோர்த்தது தாமரைக்கும் மாறனுக்கும்.


இப்படியே அவரவர்களின் வாழ்வு சென்றிருக்கலாம். ஆனால் விதி… ஒரு நாள் ஊருக்கு வந்திருந்த நிலவழகிக்கு வீட்டில் என்ன நடந்ததோ? இவள் மட்டும் தனியாக அவர்கள் தோட்டம் பக்கம் சென்றவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ள பூச்சி மருந்தைக் கையில் எடுக்க, அதைக் கண்ட வேந்தன் அவளைத் தடுப்பதற்குள் அங்கு விஷயம் கை மீறிப் போயிருந்தது.


இங்கு இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்க, கணவனை வேண்டாம் என்று உதறி விட்டு வீட்டை விட்டுச் சென்ற பூந்தென்றலின் வாழ்வு பெங்களூருவில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா? இதோ...


எந்த வெளிநாட்டு படிப்புக்காக ஹம்ஷானந்திடம் சிக்கி சீரழிய இருந்தாளோ அதே வெளிநாட்டு மோகம் தான் இன்று கணவன் மேல் காதல் இருந்தும் அவனிடமிருந்து தென்றலைப் பிரிய வைத்தது. ஆம்! அவளுக்கு அவன் மேல் காதல் தான். ஆனால் அதை அவள் உணரவில்லை. அப்படி உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு முகத்தில் கட்டிய லாடமாக அவளின் லட்சியமும் சுயநலமும் மூளையை நிரப்ப, மனமோ காதலை மறைத்தது. அதனால் தான் அத்தனை பேர் முன்பும் தன்னை உயிராய் நேசித்தவனை சொல்லக் கூடாத வார்த்தைகளைச் சொல்லி உறவை அறுத்து எறிந்து விட்டு வந்தாள்.


தங்களின் திருமணத்திற்குப் பிறகு இவள் ஒவ்வொரு முறையும் கணவனிடம், தான் மேல் படிப்பு படிக்க விரும்பியதைப் பற்றி இவள் கோடிட, அவனோ அதற்கு மறுப்பு தெரிவிக்க, அதில் உதித்தது தான் எப்படியாவது கணவனை விட்டுப் பிரிந்தாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம். அது நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போனது.


அதற்கான நேரத்தைப் பார்த்து இருந்தவளுக்கு வேந்தன் வேற்று சாதியில் பிறந்தவன் என்பது தெரியவந்து வீட்டில் நடந்த கலவரத்தைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கணவனின் வாழ்வில் இருந்து விலகி வந்து விட்டாள் இவள். கணவனுடன் இருந்தே தன் லட்சியத்திற்காக போர்க்கொடி தூக்கி தன் பிடிவாதத்தைக் காட்டியிருக்கலாம் தென்றல். எல்லாவற்றிலும் அவசர முடிவை எடுப்பது போல இதிலும் அவசர முடிவை எடுத்தாள் அவள். அதன் விளைவு…?


அப்படி வந்தவளால் அந்த லட்சியத்தையோ மன நிம்மதியையோ அடைய முடிந்ததா என்று கேட்டால் அது தான் இல்லை. கணவனுக்கு ரணத்தைக் கொடுத்து விட்டு இன்று இவள் என்னவென்று அறியாமலே அதற்கான வலியையும் வேதனையும் அனுபவித்தாள். இப்போதும் தன் மனதில் தன் மாமன் மேல் உள்ள காதலை உணரவில்லை அவள்.


‘இப்படி செய்திட்டியே! ஏன் செய்த?’ என்று மலர் மகளை அடித்து உதைத்துக் கேட்க, அவளின் பதில் தான் வெளிநாடு போக வேண்டும் என்பதான பதிலாகத் தான் இருந்தது.


எல்லாவற்றிற்கும் அடிப்படை சுயநலம் தான்! தன்னுடைய நன்மையை மட்டுமே யோசித்து இப்படி ஒன்றைச் செய்த பூந்தென்றல் ஒரு சுயநலவாதி தான்.


இந்த தகவலை மலர் வேந்தனிடம் கைப்பேசியில் சொல்ல, ஒரு நொடி கண்ணை மூடி அதை உள்வாங்கியவன், “அவ விருப்பப் படியே விட்ருங்க. பொறவு, அவள செத்த சாக்கிரதையா பாத்துக்கிடுங்க” என்ற கரிசன வார்த்தைகள் தான் மனைவிக்காக இவனுடைய பதிலாக வந்தது.


ஒரு மாதம் சென்ற பிறகு பூந்தென்றல் வீட்டில்…


“வாங்க மாப்பிள! உள்ள வாங்க” மலர் வரவேற்க


“என்னங்க அத்தே புதுசா மாப்ளன்னு எல்லாம் கூப்ட்டுக்கிட்டு? எப்போம் போல வேந்தன்னே கூப்டுக” இவன் மறுக்க


“எங்க வீட்டுக் கழுத உங்க கூட வாழலனா நீங்க எங்க மாப்பிள்ளை இல்லன்னு ஆகிடுமா? உங்களுக்கு என்ன குடிக்க தர? காபி இல்லனா டீ? ஊர்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?” வந்தவனை அவர் உபசரிக்க


“எல்லாம் சவுக்கியம்…. மோர் குடுங்க. எங்க மாமாவ காங்கலயே?”


“எங்க? ஞாயிற்றுக் கிழமை கூட வேலையப் பார்க்க மனுஷன் ஓடறார். என்னால அப்படி போக முடியுதா? இந்த பஜாரி கத்தற கத்தலை தினம் தினம் கேட்கத் தான் எனக்கு விதிச்சிருக்கு” குறை பட்ட படி அவன் முன் மோர் டம்ளரை அவர் நீட்ட, வாங்கிப் பருகியவன்“நான் தென்றல் கிட்ட செத்த பேசணும். நீங்க...”


“உங்க பொண்டாட்டி கிட்ட நீங்க பேச என் கிட்ட எதுக்கு மாப்ள கேட்குறீங்க? போங்க… அந்த பஜாரி மேல தான் இருக்கா. எங்கேயும் போகறது இல்ல, யார்கிட்டையும் பேசறது இல்ல. மீறிப் பேசினா கத்த வேண்டியது. ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டு எந்த நேரமும் அறைக்குள்ளவே முடங்கி இருக்கா.


இவளுக்காகவே நான் வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்கேன். அப்பவும் மாறல… எந்த பிசாசு உங்க பொண்டாட்டியப் பிடிச்சு ஆட்டுதோ தெரியல. கத்துவா! உங்களுக்கு சொல்ல வேணாம்... பார்த்துக்கங்க…” ரொம்ப நாள் கழித்து வேந்தனைப் பார்க்கவும் தன் கவலையை எல்லாம் அவனிடம் கொட்டினார் மலர்.


இவன் மனைவி அறை முன் வந்து கதவைத் தட்ட, உள்ளே இருந்து எந்த வித சத்தமும் இல்லை… இவன் விடாமல் தட்ட “அம்மா! எனக்கு பசிக்கலைனு சொல்லிட்டேன் இல்ல? சும்மா சும்மா தொந்தரவு செய்யாத. ஏதோ உயிர் வாழ மூணு வேளை சாப்பிடணும்னு இல்ல, ஒரு வேளையே போதும்” இப்படியாக உள்ளிருந்து தென்றல் பதில் தர இல்லை இல்லை கத்த,


இவனோ இம்முறை வேகமாக தட்ட, “ஏன் மா என் உயிர வாங்குற? நான் ஒண்ணும் செத்துட மாட்டேன்” என்றபடி வந்து கதவைத் திறந்தவளின் பார்வை அங்கு கணவனைக் காணவும், அதிர்ச்சியிலும் வியப்பிலும் விழிகள் நிலை குத்தி நின்றது. அந்த நிலையிலும் இவ்வளவு நேரம் கத்திக் கொண்டிருந்தவளின் உதடுகளோ அவளையும் மீறி தன்மையாக “மதிமாமா!” என்று முணுமுணுத்தது.


ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவள் கணவன் அங்கு இல்லை. அவன் பார்வை முழுக்க தன்னவளின் மேனியையும் முகத்தையும் தான் வட்டமிட்டது. எப்படி இருக்கிறாள் என்ற ஆராய்ச்சி பார்வை. அதற்கேற்ப அவன் மனைவியோ முன்பை விட மெலிந்து போய் கழுத்து எலும்பு துருக்க நின்றிருந்தாள். புடவை கட்டியிருந்தாலும் அதையும் ஏனோ தானோ என்று அவள் உடுத்தியிருப்பது புரிந்தது. முகம் சோர்ந்து போய் கண்ணுக்குக் கீழே கருவளையத்தோடு, அதை விட கண்ணில் உயிர்ப்பே இல்லாமால் நின்றிருந்தாள் அவனின் அவள்.


தன்னவளைப் பார்த்து விட்டு ஒரு வினாடி கண்ணை மூடித் திறந்தவனின் விழியில் ஒரு அந்நியத் தன்மை வந்து குடியேற, தன்னவள் முன் ஒரு காகிதத்தை நீட்டியவன், “வெவாகரத்துப் பத்திரம்! என்னையப் புடிக்கலன்னு சொல்லுத. எனக்கும் அது நியாயமாத் தான் பட்டுது. அதேன் இந்த முடிவு. பொறவு… ரெண்டு நாள் கழிச்சு வாரேன் கையெழுத்து போட்டு வை” அதான்… அவ்வளவு தான்... தான் வந்த வேலை முடிந்தது போல் மனைவியின் முகத்தைக் கூட பார்க்காமல் அங்கிருந்து விலகியிருந்தான் அவளின் மதிமாமா!
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 26
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijayalakshmi 15

New member
தென்றல் வேந்தனை மறுத்தது வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று தானே! பிறகு அவள் வாழ்வில் என்ன தான் நடந்தது? அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:unsure::unsure::unsure:
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தென்றல் வேந்தனை மறுத்தது வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று தானே! பிறகு அவள் வாழ்வில் என்ன தான் நடந்தது? அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:unsure::unsure::unsure:
நன்றிங்க சிஸ்💖
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN