சாதி மல்லிப் பூச்சரமே !!! 27

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 27

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு இன்று தான் கணவனை நேருக்கு நேர் பார்க்கிறாள் தென்றல். அதிலும் தன் வீட்டில் தன் அறை வாயிலில். கணவனைப் போலவே தன்னவனையும் இவள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்ததில், இவள் உணர்ந்தது கணவனிடம் பழைய கம்பீரம் இருந்தாலும் இவளைப் போலவே அவன் முகத்தில் ஜீவனே இல்லை என்பது தான்! மனது வலிக்க, அது தன்னால் தான் என்று உணர்ந்தவளுக்கு அதை எப்படி சரி செய்ய என்று தான் புரியவில்லை…


தான் செய்து விட்டு வந்ததை மறந்தவள் அந்த நிலையிலும் ‘எப்படி இருக்க பாப்பு குட்டி?’ என்று தன்னவன் கேட்க மாட்டானா என்று இவள் மனம் எதிர்பார்க்கத் தான் செய்தது. இப்போதும் அவன் மேல் உள்ள காதலை உணரவில்லை அவள்.



‘என்னைத் தேடி பார்க்க வந்துட்டியா மாமா? என்ன மன்னிச்சிட்டியா மாமா? எனக்குத் தெரியும் உனக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்னு! எனக்குத் தெரியும் மாமா’ முதலில் இப்படி எல்லாம் அவன் மார்பில் சாய்ந்து கதற நினைத்தவள், அதையே தன் மாமனிடன் சொல்ல செய்ய அவள் வாயைத் திறக்க எத்தனித்த நேரம், விவாகரத்துப் பத்திரத்தை மனைவி முன் நீட்டினான் வேந்தன்.


ஒன்றும் புரியாமல் முதலில் விழித்தவளுக்கு, கணவனின் வாய் மொழியாகவே ‘இரண்டு நாளில் திரும்ப வரேன், கையெழுத்து போட்டு வை’ என்ற வார்த்தைகள் அவளை நிலை குலையச் செய்தது. உணர்ந்ததும் பித்து கொண்டவள் போல் ‘நான் செய்தது தப்பு தான்! அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அப்போ என் மேல் உங்களுக்கு காதல் இல்லையா மாமா? ம்ஹும்... முடியாது... நான் விவாகரத்து தர மாட்டேன்’ மனதால் சொல்லிக் கொண்டவள் அதற்கு எதிர்மறையாய் தன்னுடைய எண்ணத்தை செயலாக்க மறுபடியும் தவறான வழியையே கையில் எடுத்தாள் தென்றல்.


இவள் “எதற்கு கையெழுத்து?” என்று தெனாவட்டாய் கேட்க


மனைவியை ஆழ்ந்து பார்த்தவன் “வெவாகரத்து எதுக்கு கேப்பாக... வேற கல்யாணம் செய்யத் தான்!” இவனும் அசராமல் பதில் தர


‘வேற திருமணமா!?’ உயிர் துறக்கும் சிறு பறவையின் ஒலியாய் மனதிற்குள் எதுவோ ஓலமிட, கண்ணீல் நீர் கோர்த்தது இவளுக்கு. அதை உள்ளிழுத்தவள், தன்னவனிடம் நெஞ்சை நிமிர்த்தியபடி பொய்யாய் ஒரு பிம்பத்தைக் காட்டியவள்


“நான் உயிரோட இருக்கிற வரை உங்களுக்கு விவாகரத்து தர முடியாது” இவளும் நான் உன் மனைவி என்ற மிதப்பில் அசராமல் பதில் தர


ஒற்றைப் புருவம் உயர்த்தி மனைவியை ஆழ்ந்து நோக்கியவன் “அதாம்ல ஏன்னு கேக்குதேன்?” இவன் விடாமல் கேட்க


“ஏன்னா... ஏன்னா.... ஹான்! உங்களுக்கு விவாரத்து தந்துட்டா நான் டைவேர்ஸ்டு பர்சன். அது என் ப்ரோஃபஷன்ல பின்னாளில் பிரச்சனையும் பாதுகாப்பு இன்மையும் கொடுக்கும். அதனால் வெளிநாடு போய் நான் செட்டில் ஆன பிறகு உங்களுக்கு விவாகரத்து தரேன். அதாவது எனக்கா உங்களுக்கு எப்போ தரணும்னு விருப்பம் வருதோ அப்போ தரேன் மிஸ்டர் மதிவேந்தன்!” இவள் எக்களிப்பாய் பதில் தர


“அம்மா!” அடுத்த நொடி மனைவியின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது வேந்தனின் விரல்கள். நுனி காலால் தன் வேட்டியை மடித்துக் கட்டியவன் “நான் ஒனக்கு மிஸ்டர் மதிவேந்தனாடி?” என்று கர்ஜித்த படி மனைவியின் பக்கம் இவன் இன்னும் நெருங்க, அந்நேரம் சத்தம் கேட்டு மேலே ஓடி வந்த மாமியாரைப் பார்த்ததும் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திய படி விலகி நின்றான் வேந்தன்.


“மாப்பிள்ளை! இவ தினந்தினம் செய்யும் அட்டூழியத்துக்கு நானும் அடிக்கத் தான் நினைப்பேன். ஆனா இவ சரியா சாப்பிடாம இருக்கிற கோலத்தைப் பார்த்து எங்க அடிச்சா பொட்டுன்னு போய்டுவாளோனு....” நடந்திருப்பதை யூகித்தவராய் மேற்கொண்டு சொல்ல முடியாமல் மகளுக்காய் ஒரு தாயாய் தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அவர் தயங்க


“நான் கெளம்புதேன் அத்தே. ரெண்டு நாள் கழிச்சு வருதேன்” இவன் உணர்ச்சி துடைத்த குரலில் சொல்ல,


“என்ன மாப்பிளை? உடனே கிளம்புறேனு சொல்றிங்க! அப்போ இங்கே தங்கலையா நீங்க?”


“எந்த உரிமையில நான் இங்கன தங்குதேன் அத்தே? என் தொழில் சம்மந்தமா ஒரு சேக்காலி இருக்காக. அவர் கூடச் சேர்ந்து தங்குத முடிவுலதேன் நான் வந்தேன். சரி அத்தே… அப்போம் நான் கெளம்புதேன்”


கணவன் அடித்ததை விட இப்போது அவன் யாரோ அந்நியன் போல் சொன்ன வார்த்தைகள் தான் தென்றலுக்கு இன்னும் வலித்தது. அதில் அன்று தான் அவனை அந்நியனாய் நிறுத்தி விட்டு வந்ததை மறந்து போனாள் பெண்ணவள். கூடவே கணவன் இங்கு தங்க மாட்டானா என்று மனம் ஏங்கினாலும் ஈகோ தலை தூக்க அதை மறைத்து நின்றிருந்தாள் தென்றல்.


அவனின் பதிலில் “என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டிங்க! உங்களுக்கு இங்கே தங்க எப்போதும் உரிமை இருக்கு. எல்லாம் போறாத நேரம். சரி சாப்பிட வாங்க”


“எதுவும் வேணாம் அத்தே. நான் கெளம்புதேன்...” இவன் கிளம்புவதிலேயே குறியாக இருக்க



அதிர்ந்தவர், “என்ன மாப்பிளை ஒரு டம்ளர் மோர் மட்டும் குடிச்சிட்டு கிளம்பரீங்க?”


“அதையே உங்களுக்காண்டி மாமாவுக்காண்டிதேன் அத்தே குடிச்சேன். நேரமாயிருச்சு... வாரேன் அத்தே” இவன் நடைய எட்டிப் போட


‘சாப்பிட்டுப் போ மாமா!’ என்று சொல்ல தென்றலுக்கு உதடு துடித்தது. ஆனால் தன் முகத்தைத் திரும்பியும் பார்க்காமல் செல்லும் கணவனிடம் சொல்ல தயங்கி நின்றாள் அவள்.


அவனை வழி அனுப்ப கூடவே வெளியே வந்த மலரிடம் “ரொம்ப மெலிஞ்சு சீக்கு வந்தவ கணக்கா கெடக்கா. மெரட்டியாவது அவளைச் சாப்ட வெக்கப் பாருங்க அத்தே” மருமகனின் கரிசனத்தில் ஒரு பெருமூச்சுடன் தலை அசைத்தார் அவர்.


உள்ளே வந்தவர் டீபாயில் கணவன் வைத்து விட்டுப் போன பத்திரத்தையே வெறித்த படி இருந்த மகளைச் சாப்பிட அழைக்க, “அம்மா! மாமா விவாகரத்து கேட்கிறார்” என்று இவள் இவ்வளவு நாள் இல்லாமல் இன்று தானாகவே வாய் திறந்து கணவன் மேல் புகார் பட்டியல் வாசிக்க


“எனக்கு ஒரு மகன் இருந்தா அவன் வாழ்வு நல்லா இருக்கணும்னு ஒரு தாயா இதைத் தான் நினைப்பேன்… தாமரை தன் மகன் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைக்கிறது தப்பில்லையே… மாப்பிள அவர் அம்மா பேச்சைக் கேட்டு நடக்கட்டும். அதான் எல்லோருக்கும் சரி” என்றவர் “எப்படியோ கையெழுத்து போடப் போற… வந்து சாப்பிட்டு தெம்பா கையெழுத்து போடு வா...” என்று மேலும் அவர் அழைக்க


“என்னமா சாப்பிடவானு கூப்பிட்டே நச்சரிக்கற? வந்தவருக்கு பிடிவாதமா சாப்பாடு கொடுக்க தெரியல... நாலு வார்த்தை பேசி அவரைத் தங்க சொல்ல முடியல என் கிட்ட மட்டும் நச்சரிக்கிற” இவள் கணவன் சாப்பிடவில்லையே என்ற கோபத்தில் பட படக்க


“வந்தவரை சாப்பிடுங்கனு தான் என்னால் சொல்ல முடியும். உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா தட்டுல சாதத்தைப் போட்டு உன் புருஷனுக்கு ஊட்ட வேண்டியது தானே? யாரு தடுக்கப் போறா? பெருசா பேச வந்துட்டா!” போகிற போக்கில் அவர் கத்திவிட்டுப் போக


‘நானா மாட்டேன்னு சொல்றேன்? உன் மாப்பிள்ளை தான் என்னை வேணாம்னு சொல்றார்’ என்று எண்ணியவளின் எண்ணம் எல்லாம் கணவன் விவாகரத்து கேட்டதிலே வந்து நின்றது.


இதே எண்ணத்தில் இருந்ததால் இவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, வீட்டிற்கே வந்து பார்த்த மருத்துவர் வெறும் அதிர்ச்சி தான், சரியாக சாப்பிடாததால் வந்த மயக்கம் என்றவர் அவளுக்கு குளுக்கோஸ் ஏற்ற ஒரு நாள் முழுக்க படுக்கையில் இருந்தாள் தென்றல்.


மறுநாள் ஒரு வேலையாய் நரேன் பெங்களூர் வந்தவன், இவர்கள் வீட்டிற்கு வர, யாரையும் பார்க்கப் பிடிக்காமல் கண்கள் மூடி படுக்கையில் தான் இருந்தாள் தென்றல். “இவ இப்படி படுத்த படி இருக்கா. இப்போ போய் விவாகரத்து கேட்கிறார் உன் அண்ணன்...” மலர் கவலைப் பட


“அங்கன நிலவழகி அண்ணி கல்யாண விஷயத்துல பிரச்சனையாயிருச்சு. அதேன் பெரியம்மா அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்ய நெனைக்குறாக” வந்தவன் பட்டும் படாமல் சொல்ல


“சரி தான்… இவ தான் பெத்த அப்பாவுல இருந்து கட்டின புருஷன் வரை யாரும் வேணாம்னு இருக்கா. அதுக்காக உன் அண்ணனும் அவர் வாழ்க்கையைப் பார்க்காம இருக்க முடியுமா? அந்த வாழ்வாது அந்த புள்ளைக்கு நல்லா இருக்கட்டும்” மலர் மனதார வாழ்த்த, மூடியிருந்த விழிகளிலிருந்து தென்றலுக்கு கண்ணீர் வழிந்து ஓடியது.


“என்ன தான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாக முடியாதுனு பெரியவங்க சொல்லுவாங்க…. ஆனா நான் என் பொண்ணுக்கு அவள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழக்க வைக்கிற இப்படி பட்ட வார்த்தைகளை சொல்லி வளர்க்காம அந்த பருந்தை விடவே உயர்ந்து பறக்கற பட்டமா இருனு சொல்லி தான் வளர்த்தேன்.


அப்படி என் பொண்ணும் தான் பறந்தா. அதைக் கண்டு எந்த தாய் பூரிக்க மாட்டா? நானும் பூரித்து தான் போனேன். ஆனா இவ அந்த உயரத்தாலே அகம்பாவம் கொண்டு இவளைப் பறக்க வைத்த எங்க கைகளையும் அறுத்தது இல்லாம சுற்றி இருக்கிற எல்லோர் கழுத்தையும் அறுக்கிறா….” ஒரு பெருமூச்சுடன் தன் துயரம் தாங்காமல் கொட்டியவர்


“அந்த புள்ள கிட்ட என்ன இல்லை? இவ அளவுக்கு படிக்கல. இவ அளவுக்கு என்ன சுத்தமா படிப்பறிவே இல்லைனு கூட இருக்கட்டும். ஆனா சமூக அறிவு இருக்கே! இவளை மாதிரி பேசவோ நடந்துக்கவோ தெரியாது. ஆனா அவரு கிட்ட பண்பு இருக்கு… இவளை மாதிரி நாகரிக உடை உடுத்த தெரியாது. ஆனா ஒழுக்கம் இருக்கே! மற்றவர்கள் பகட்டா திரிய இவ அழகான ஆடைகளை fashion designer என்ற பெயரில் ஆடையை வடிவமைத்து தரலாம். ஆனா இந்த நாட்டுக்கே சோறு போடற தெய்வமான விவசாயியா அவர் இருக்கிறாரே!


இதை எல்லாம் விட தன் மனைவி மேலே உயிரே வைத்திருக்கார் உன் அண்ணன். இதை எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி கூறு கெட்டவளா என் மக இருக்காளே! நான் என்ன செய்ய? அவ கையெழுத்து போட்டு கொடுக்கட்டும். பிறகு நடக்கிறதாவது நல்லதா இருக்கட்டும்” பேச்சோடு பேச்சாக தன் மன பாரத்தை எல்லாம் இறக்கி வைத்து விட்டுச் சென்றார் மலர்.




தாயின் பேச்சில் கணவனின் அருகாமையையும், கரிசன வார்த்தைகளையும் அதிகமாவே எதிர்பார்த்தது பெண்ணவளின் மனது. எல்லாம் தெரிந்திருந்தும் மனைவியின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்கவில்லை வேந்தன்.


இரண்டு தினங்கள் கழித்து தான் சொன்ன மாதிரியே மனைவி முன் வந்தவன், முன்பை விட மனைவியின் வாட்டத்தைப் பார்த்தவன் அதை கருத்தில் கொள்ளாமல், “என்ன கையெழுத்து போட்டுட்டியா? குடு....” என்று அதிகாரமாய் கேட்க


இவளுக்கு வந்த கோபத்திற்கு “நான் தான் முன்னாடியே சொல்லிட்டேன் இல்ல மாமா? முடியாது... முடியவே முடியாது... இந்த ஜென்மத்தில் நான் மட்டும் தான் உன் மனைவி. விவாகரத்தும் தர மாட்டேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ” என்று சோர்ந்திருந்த அந்த நிலையிலும் கணவனிடம் சவால் விட்டவள் அவன் தந்திருந்த பத்திரத்தைப் படிக்காமலே சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட,


வேந்தனின் முகத்தில் தீவிரம் கூடியது.


“நீ வெவாகரத்து தரலனா நான் இப்டியே இருந்துருவேன்னு நெனக்குறியா டி? இல்ல எனக்கான வாழ்க்கையத் தான் நான் பாத்துக்கிட மாட்டேன்னு நெனச்சியோ? இதுக்கு மேல நான் என் ரெண்டு அம்மைக்கும் நல்ல மவனா இருக்க ஆசப்படுதேன். அத ஒன் கையெழுத்து இல்லாம… அதாம்ல நீ எனக்கு வெவாகரத்து தராமலே நடத்திக்கிட முடியும். கூடிய சீக்கிரம் நடத்திக் காட்டுதனா இல்லையானு பாரு...” மிக மிக அழுத்தமாக ஆழ்ந்த குரலில் கணவன் எச்சரிக்க, முதுகுதண்டு சில்லிட்டுப் போனது தென்றலுக்கு.


இவள் தன்னிலை உணர்ந்து, கண்ணில் நீர் குளம் கட்ட கணவனை இவள் நிமிர்ந்து பார்க்க, ஐயோ பரிதாபம்! அவன் அங்கு இல்லை. தான் வந்த வேலை முடிந்தது என்ற எண்ணத்தில் வந்தவன் சென்றிருக்க, வெளியே அவன் கார் புறப்படும் சத்தம் கேட்கவும் இவள் கன்னத்தில் நீர் வழிய பால்கனி பக்கம் வந்து பார்க்க, அதற்குள் கார் அவள் கண்ணை விட்டு மறைந்திருந்தது. துக்கம் தாங்காமல் ஒரு கேவலுடன் அங்கேயே மடிந்து அமர்ந்தவள், “ஐ லவ் யூ மதிமாமா!” என்றாள் சத்தம் போட்டு.


ஆமாம்! அவளின் மதிமாமாவை அவள் விரும்புகிறாள் தான். அவன் தன் காதலைச் சொல்லும்போது இவள் உணராத காதல்... அவன் இவள் மானத்தைக் காப்பாற்றி வலுக்கட்டாயமாக தாலி கட்டிய போது உணராத காதல்.... அவனைப் பிரியும் போது உணராத காதல்.... அவனை ஊரே தூற்றிய போது இவள் உணராத காதல்…. இன்று அவன் விவாகரத்தைக் கேட்டு நிரந்தரமாகப் பிரிய நினைக்கும்போது தான் தன் உள்ளத்தின் காதலை உணர்ந்தாள் இவள்!


ஆனால் இவள் கணவனோ இவளின் எண்ணத்திற்கு எதிர்மறை முடிவை அங்கு எடுத்திருந்தான்.


செவ்வாய் அன்று அடுத்த பதிவு வந்துவிடும் தோழமைகளே...
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 27
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

UMAMOUNI

Member
மதியின் தென்றல் சுகந்தமாக வீசுமா அடுத்த பதிவில் பார்ப்போம்
 

Vijayalakshmi 15

New member
வேந்தன் எந்த விதமான முடிவு எடுத்து இருந்தாலும் கூட அது தென்றலின் நன்மைக்காக இருக்கும் இப்ப இருக்கின்ற பெண்கள் எல்லாருமே சுயநலவாதியாக இருக்கிறார்கள் இதில் தென்றல் விதிவிலக்கா! அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :):)
 

Abirami Sivakumar

New member
அருமையான பதிவு!! அடுத்து எப்ப போட முடியும் சேர்த்து போட்டீங்க அருமை!!
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மதியின் தென்றல் சுகந்தமாக வீசுமா அடுத்த பதிவில் பார்ப்போம்
Thank you sis
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN