சாதி மல்லிப் பூச்சரமே!!! 28

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 28

அவரவர் வாழ்வு அதன் போக்கில் பயணிக்க...

மூன்று வருடங்களுக்குப் பிறகு…

அந்த காலை நேரத்தில் வயது முதிர்ந்த இரு பெரியவர்கள் மற்றும் இன்னும் சில ஊர் இளவட்டங்களும் மதிவேந்தன் வீட்டு வாசல் முன் வந்து நிற்க...

“வாங்க! வாங்க!” தாமரை அவர்களை வரவேற்றபடி வெளியே வரவும்

“எங்க... பள்ளிக்கூடத்துக்கு கெளம்பியாச்சா தாயி? நாலு தலைமுறைக்கு ஒக்காந்து சாப்புடற மாதிரி ஒன் மவன் சம்பாதிக்குதான். பொறவு எதுக்கு தாயி இன்னும் இப்டி ஓடிகிட்டு கெடக்க?” வந்தவர்களில் ஒருவர் கேட்க

உள்ளே திரும்பி, “சின்னத்தாய், வந்தவுகள பாருங்க, நான் கெளம்புதேன்” என்றவர், “அவன் பத்து தலைமுறைக்குக் கூட ஒக்காந்து சாப்ட சம்பாதிக்கட்டும் பெரியப்பா. ஆனா ஒரு அம்மையா நான் சம்பாரிச்சு என் மகனுக்கு குடுத்துகிட்டுதேன் இருப்பேன். நேரமாயிருச்சு, கெளம்புதேன் பெரியப்பா” என்று பதில் தந்தவர் தனக்காக காத்திருந்த காரில் ஏறி பள்ளிக்கூடம் கிளம்பிச் சென்றார் தாமரை.

அவருக்கு இன்னும் ஒரு வருடத்தில் பதவி ஓய்வு கிடைக்க இருக்கும் நேரத்தில், ஏன்… இப்போது கூட அவருக்காக அவர் மகன் ஒரு பள்ளியைக் கட்டித் தர தயாராக இருந்தும் அன்று பிடித்த தன் வீம்பை இன்று வரை விடாமல் ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார் தாமரை.

“வாங்க! வாங்க!” சின்னத்தாய் வரவேற்க

“வேந்தன் தம்பி இல்லைங்களா தாயி?”

“அவன் கருக்கல்லயே எழுந்து காட்டுப் பக்கம் போனவன் தான், இன்னும் வரல. உள்ள வந்து ஒக்காருங்க வந்துடுவான். சாமந்தி, வந்தவங்களுக்கு மோர் கொண்டு வா” என்றவர் வேலைக்கார பெண்ணை ஏவிய படி வந்தவர்களை உபசரிக்க

“இருக்கட்டும் தாயி” என்றவர் அங்கேயே வெளி வாசலில் போடப்பட்ட சேரில் அமர்ந்தபடி, “ஒரு சோலியா வந்தோம். தம்பி எப்போம் வந்தாலும் இருந்து பேசிட்டு போறோம்” அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம், மதிவேந்தன் தன் புல்லட் சத்தத்துடன் உள்ளே நுழைந்தான்.

வண்டியை நிறுத்தி விட்டு அவன் இறங்க, இவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வேலைக்கார பையன் ஒருவன் வேந்தனை நெருங்கி ஏதோ சொல்ல, இவன் கண்ணில் ஒரு வித கூர்மையுடன் கேட்டவன் பின் தன் மீசையை முறுக்கியபடி அவனுக்கு ஏதோ கட்டளையிட, அதை அவன் பவ்யமாய் கேட்டுக் கொண்டு விலகிப் போக, பின் தன் கையில் உள்ள காப்பை முறுக்கியபடி இவர்களை நோக்கி வந்தவனைப் பார்த்து,

‘அப்டியே ஐயாருதேன்! என்னதேன் ரத்த சம்பந்தம் இல்லனாலும் அந்தப் பேச்சு, செய்கை, அதிகாரத் தோரண, கம்பீரம் எல்லாம் அவுகதேன்! ’ என்று மனதிற்குள் சிலாகித்த வந்தவரில் ஒருவர் எழுந்து நின்று அவனிடம், “வணக்கம் சின்ன ஐயா!” என்க

அவர் கையைப் பிடித்தவன், “அப்டி கூப்டாதீயனு சொல்லுதேன், என்ன சொன்னாலும் மாற மாட்டீய, அப்டிதேன?” என்று குறை பட்டவன், “எல்லாரும் உள்ளார வந்து ஒக்காருங்க. செத்த நேரம்… தோ, என்னைய சுத்தப்படுத்திகிட்டு வருதேன்” என்றவன் சொன்னபடியே சென்று குளித்து விட்டு மதிவேந்தன் வர, மகன் பின்னாலேயே கையில் ஆப்பத் தட்டுடன் திரிந்து கொண்டிருந்தார் சின்னத்தாய்.

“என்னம்மா இது? நான் வந்து சாப்டுகிட மாட்டனா?” இவன் சலித்தபடி தன் வேலையில் கவனமாய் இருக்க

“என்னத்தடா சாப்புடுவ? உனக்கு புடிக்குமேன்னு ஆப்பம் செய்யச் சொன்னேன். இதோ வந்துட்டாங்க இல்ல? பேசிகிட்டே ஒரு டம்ளர் மோர குடிச்சிட்டு போய்ட்டே இருப்ப... இதே என் மருமக இருந்திருந்தா கொமட்டுல ரெண்டு குத்து குத்தி உன்ன சாப்புட வச்சிருப்பா. எப்போ ராசா என் மருமவள என் கண்ணுல காட்டப் போற?” எங்கோ ஆரம்பித்து பின் தன் வழமை போல மருமகளிடம் வந்து நின்றார் சின்னத்தாய்.

வேலையின் ஊடே,“யம்மா, இன்னும் நாலு ஆப்பத்தக் கூட சேர்த்து வச்சி எனக்கு ஊட்டு சாப்டுட்டு போகுதேன்... ஆனா ஒன் பாட்ட மட்டும் ஆரம்பிச்சுராத தாயி” இவன் பதில் தர

“அத்த, இன்னும் ஆப்பம் எடுத்து வரவா?” என்ற படி சாமந்தி அங்கு வந்து நிற்க

“நீயுமா? போதும்... அம்ம கூடச் சேர்ந்து நீ செய்யுத வேலையால என்னால சட்டையக் கூட முழுசா பூட்ட முடியல. இதுக்கு மேல சாப்ட்டா நான் உருண்டுதேன் போகணும். ஆள விடுங்க தாய்ங்களா” வேந்தன் அவளுக்குப் பதில் தர

“என்னத்தடா தின்னுபுட்ட? எட்டு ஆப்பம் எல்லாம் ஒரு ஆப்பமா? வளர்ற புள்ள இப்படியா சாப்புடறது? சாமந்தி, நீ இன்னும் நாலு எடுத்துகிட்டு வா” சின்னத்தாய் சொல்ல

களுக் என்று சிரித்தவள், “ஆத்தாடி ஆத்தா! மச்சான், இந்த வீட்டுல நீங்க கொழந்தையா இல்ல நான் கொழந்தையானு தெரியல. இன்னும் நீங்க வளரணுமாம்! அத்த சொல்லுது... இதுக்கு மேல நீங்க வளர்ந்தா வீட்டு மேல் கூரையத் தான் முட்டிகிட்டு நிக்கணும்!” அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் அவ்வப்போது பேசுவது போல் சாமந்தி இப்போதும் துடுக்குத் தனமாகப் பேச

“போடி அறந்தவாலு! என் புள்ளையப் பார்த்து கண்ணு வெக்காதடி… போடி அங்கிட்டு” என்றபடி தன் மகனுக்குத் திருஷ்டி கழித்தார் சின்னத்தாய்.

இது தான் சின்னதாய்! தாமரை ஒரு வித அமைதியில் இருந்து மகனிடம் தன் பாசத்தை வெளிப்படுத்துவார் என்றால் இவரோ அதிரடியாய் இடம் பொருள் பார்க்காமல் தன் பாசத்தை மகன் மேல் பொழிவார். அவன் பிறந்த போது செய்து பார்க்காததை எல்லாம் இப்போது செய்து பார்க்க நினைப்பது தாயின் இயல்பு தானே?

எல்லாம் முடித்து கூடத்தில் வந்து அமர்ந்தவன், “சொல்லுங்க, என்ன விசியம்?” என்க

“என்னத்த தம்பி சொல்ல? ஒங்களுக்குத் தெரியாதது இல்ல. கம்மாய அந்த தங்கமுத்து குத்தகை எடுத்ததுல இருந்து வெவசாயத்துக்கு சரியா தண்ணி இல்ல. கழனி காட்டுல நெல்ல வெதைச்சிட்டு இப்டி ஒக்காந்து கெடக்கோம்” ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

இடையில் ஒரு இளவட்டம் உள்ளே புகுந்தவன், “அவன் கம்மாய குத்தகை எடுத்ததே அவன் சாயப் பட்டறையிலிருந்து வெளிய வருத கழிவுத் தண்ணிய அதுல கலந்து விடத்தேன?” என்று கோபத்தில் துள்ள

“செத்த பொறுலே… பெரியவக பேசிட்டு இருக்குதோம் இல்ல?” என்று இன்னொருத்தர் எகிறியவனை அடக்க

முன்பு பேசியவரே இப்போது மறுபடியும் பேசினார். “எல்லாம் ஐயாரு செஞ்சதுதேன். அன்னைக்கி கம்மாய அவுக குத்தகைக்கு எடுத்துட்டு இன்னைக்கி தங்கமுத்துவுக்கு திரும்பி வுட்டுட்டாக” சற்று நிறுத்தி ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், “கோவிலுக்கு இந்த வருசம் கும்பாபிஷேகம் செய்யணும். அவுக பிடி கொடுத்தே பேச மாற்றாக. கோவில் பூசைய சரியா செய்யலைனா பொறவு ஊருக்குள்ளாற பஞ்சம் வந்துரும் பாத்துக்கிடுங்க””

“இது எனக்கு தெரியாதது இல்ல. சுத்தி வளைக்காம நேரா விசியத்துக்கு வாங்க” இப்போது வேந்தன் இடைமறிக்க,

“என்னத்த புதுசா சொல்லிடப் போகுதோம்? இதுக்கு எல்லாத்துக்கும் தீர்வு வேணும்னா, நீங்க இந்த கிராமத்து தலைவர் பதவிக்கு போட்டி போடணும். இத இந்த ஊர் சார்பா கேட்டுக்கிடுறோம்” வந்தவர் முடிக்க

“அதுதேன் முன்னமே சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டனே. மாமா ஊருக்குப் போய் இருக்காக. வரட்டும்… அவர்ட்ட பேசுதேன். எப்டியோ இந்த வீட்லயிருந்து ஒருத்தவுக நிக்கணும்னு கேக்குதீய... அது மாமாவா இருக்கட்டும்”

“அது வந்து தம்பி...”

அவரை இடைமறித்தவன், “இதுதேங்க என் முடிவு” மதிவேந்தன் திட்டவட்டமாய் மறுத்து விட

“என்னங்க, ஒங்க குடும்ப பிரச்சனைய நீங்க பாத்துக்கிடுங்க... வேணுமட்டு பேசி வெச்சி ஊர் மக்க எங்கள ஏன் அழிக்கப் பாக்குறீய?” ஒரு இளைஞன் சத்தம்போட

கோபத்தில், “எலேய்!” வேந்தன் இருக்கையைத் தள்ளிக் கொண்டு எழவும்

“இதுக்குத்தேன் இவன வேணாம்னு சொன்னேன். எலேய் பயலுவளா, இவன கூட்டிகிட்டு வெளியே போங்கலே. யார்ட்ட வந்து நெஞ்ச நிமித்துதான்?” கூட வந்த பெரியவர் சத்தம் போட்டவனை அதட்ட, பின் அந்த இடம் அமைதியானது.

“தம்பி, தப்பா நெனைக்காதீய. இள ரத்தம் இல்லையா அதேன் எகிறிட்டான். நீங்க ஒங்க மாமாட்ட பேசி முடிவு எடுங்க. ஆனா எங்களுக்கு நல்ல முடிவுனா அது நீங்க ஐயார எதிர்த்து நிக்கறதுதேன். மறுக்கா ஒரு முறை ஒங்க முடிவ யோசிச்சிக்கிடுங்க. பொறவு, ரெண்டு நாள்ல நம்ப ஊருக்கு கலெக்டர் வராக. ஒங்களுக்கு சொல்ல வேணாம்... நீங்கதேன் முன்னயிருந்து நம்ப பக்கத்து சார்பா வரவேற்கணும். வந்துருவீங்க இல்ல?” வந்தவர் நீளமாய் பேசி வேந்தனிடம் வரச் சொல்லி கேட்க

இவ்வளவு நேரம் கோபத்தில் மிளிர்ந்த வேந்தனின் முகம் கலெக்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மென்மையைத் தத்து எடுத்தது. அவன் நினைவுகள் இங்கில்லாமல் எங்கோ சஞ்சரிக்க, பேசிக்கொண்டிருந்தவரோ இவன் பதிலை எதிர்பார்க்காமலே, “சரி தம்பி அப்போ நாங்க கெளம்பறோம்… வாரோம் தம்பி” என்றவர் அனைவரும் கிளம்பி விட

அவர்கள் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தவன் ஒரு வித மவுனத்துடன் தன் காலை எதிரிலிருந்த சேரில் நீட்டியபடி தன் இரு கைகளையும் கோர்த்து கழுத்துக்குக் கீழே கொடுத்து அப்படியே தலை சாய்த்தவன், கண்களை மூடிக் கொண்ட நேரம், அவன் முகம் இன்னும் மென்மையைத் தத்தெடுக்கவும் சற்று நேரத்திக்கு எல்லாம் அவன் உதடுகள், “பாப்பு குட்டி...” என்று அந்த பெயருக்கே வலிக்காமல் முணுமுணுத்தது. அடுத்த நொடி இது பொய்யோ என்னும் படி அவன் முகம் வாட்டத்தைக் காட்ட

மகனையே பார்த்துக் கொண்டிருந்த சின்னத்தாய் அவன் தலை கோதி, “என்ன ராசா...” என்று கேட்க, தன் முகத்தை சீராக்கியவன் ஒன்றும் இல்லை என்ற தலையசைப்புடன் அங்கிருந்து விலகிச் சென்றான் மதிவேந்தன். இத்தனை நாளில் எவ்வளவு விஷயம் அவன் வாழ்வில் நடந்திருந்தாலும் மனைவியின் நிராகரிப்பை இன்று வரை மறக்க முடியவில்லை அவனால்.

இந்த மூன்று வருடத்தில் வேந்தன் தான் ஐயாருக்கு அடுத்த படியாய் அந்த ஊரில் எல்லாம். அப்படி கூட சொல்லக் கூடாது… அவரை விடவே இப்போதெல்லாம் இவனைத் தான் தேடி முன்னிறுத்தினார்கள் ஊர் மக்கள் எனலாம்.

அதனாலேயே கோபம் கொண்ட ஐயாரு சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து கொண்டார். ஆமாம்… யார் அவரைக் குத்தி சாகடிக்க இருந்தானோ அவனின் வலது கையான தங்கமுத்துவிடம் சேர்ந்து கொண்டார் அவர். அவன் எப்படியோ சுற்றி வரும் உறவு முறையில் பங்காளி பையனாம். தன் ரத்தம், தன் சாதி என்ற மமதையில் மதிவேந்தனைப் பழிவாங்க தங்கமுத்துவுக்கு அதிகமாவே இடம் கொடுத்தார் அவர். அதன் விளைவு இவர் குத்தகை எடுத்த கம்மாயை அவனுக்குத் திருப்பி விடுவது வரை வந்து நின்றது.

அது மட்டுமா? ஒவ்வொரு வருடமும் கோவில் திருவிழாவில் ஐயாரு பரிவட்டம் கட்டி கலசம் எடுக்க, கூடவே அந்த குடும்பத்து வாரிசாக மதிவேந்தனுக்கு பரிவட்டம் கட்டிய பிறகு அவன் கையால் அம்மனுக்கு வீர வாள் சாத்துவான் அவன். ஆனால் இவன் அவரைப் பிரிந்து வந்த பிறகு கடந்த இரண்டு வருடம் மூர்த்தி தான் வாள் சாத்தினார். அது யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.

ஆனால் இந்த வருட திருவிழாவில் தன் மகனை அப்படி செய்ய வைக்கச் சொல்லி செண்பகவல்லி பிரச்சனை செய்ய, அந்தப் பக்கம் கலையரசன் தன் மகனுக்கு அந்த மரியாதையைத் தரச் சொல்லி வந்து நிற்க, என்ன செய்வது என்று திணறிய ஐயாரு ஓர் வகையில் சொந்தமான தங்கமுத்துவுக்கு அந்த இடத்தைத் தர முன்வர, அதனால் இப்போது மூர்த்தி குடும்பம் மற்றும் கலையரசன் குடும்பத்திற்குள்ளும் பூசல் அதிகமானது.

மூர்த்தி எனும்போது அமைதியாக இருந்த ஊர் மக்களும் கந்தமாறனும் தற்போது யாரோ ஒரு தங்கமுத்துவுக்கு என்றதும் பிரச்சனை செய்ய, ஏன்... வேந்தனே தன் உரிமையை யாருக்கோ விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அதன் விளைவு இப்படியாக இந்த வருட கோவில் திருவிழா தடை பட்டு வந்தது.

இவ்வளவு பிரச்னைக்கு நடுவில் புதிதாக ஊர் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வந்து நிற்க, அதற்கு எல்லோரும் ஒருமனதாகத் மதிவேந்தனையே ஐயாருக்கு எதிராய் நிற்கச் சொல்ல, அவரிடம் அவன் சண்டை போட்டு எதிர்த்துப் பேசுவது வேறு. ஆனால் வளர்த்த அவரையே போட்டியில் எதிர்த்து நிற்க வேந்தனுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் அந்த போட்டியில் கந்தமாறனை நிற்க வைக்க அவன் முடிவு செய்திருந்தான். அதையே அவன் ஊர் பெரியவர்களிடம் முன்பே சொல்லி விட்டான். ஆனால் அவன் தான் நிற்க வேண்டும் என்ற விருப்பத்தில் இதோ இன்று வரை அவனை வற்புறுத்தி விட்டுச் செல்கிறார்கள். அவன் நினைத்தது நடக்குமா?

இப்படியான பல பிரச்சனைகளுக்கு நடுவில் தான் அந்த ஊரில் புதிய கலெக்டர் பதவி ஏற்கும் நாளும் வந்தது. அதற்கு முந்தின நாள் இரவு முழுக்க வேந்தனுக்கு தூக்கமே இல்லை. கந்தமாறன் வந்து விட்டால் அவரை கலெக்டர் வரவேற்புக்கு அனுப்ப இவன் நினைத்திருக்க, அதை பொய்யாக்குவது போல் மேலும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் வருவேன் என்றார் அவர். வேறு வழியில்லாமல் இவனே கிளம்ப, விடிந்ததிலிருந்து நொடிக்கு ஒரு முறை தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் வேந்தன்.

மகனைச் சின்னத்தாய் விசித்திரமாய் பார்க்க, அதை உணர்ந்தவனாக பிறகு தான் கிளம்பினான் அவன். அங்கே ஊரே கூடி கலெக்டரை வரவேற்க நின்றிருந்தார்கள். இதுவரை இந்த ஊருக்கு எத்தனையோ கலெக்டர்கள் வந்திருந்தாலும் தற்போது வரும் கலெக்டரால் தங்களுக்கு ஒரு விடிவு வர இருப்பதை அறியாமல் நின்றிருந்தார்கள் அனைவரும். முன்னேயும் பின்னேயும் காவல் வாகனங்கள் புடை சூழ, அரசாங்க காரிலிருந்து இறங்கினாள் பூந்தென்றல். ஆமாம்! வேந்தனின் மனைவி தான் கலெக்டர் பூந்தென்றல் மதிவேந்தனாக கம்பீரத்துடன் சகல வித மரியாதையுடன் தன் சொந்த ஊரில் வந்து இறங்கினாள் அவள்.

வெள்ளி அன்று அடுத்த பதிவு வந்து விடும் தோழமைகளே...
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 28
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
இதென்ன புது திருப்பம்? ஆடை வடிவமைப்பில் விருப்பம் கொண்டவள்...மாவட்ட ஆட்சியராக எப்படி ..how this transformation hpnd?
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இதென்ன புது திருப்பம்? ஆடை வடிவமைப்பில் விருப்பம் கொண்டவள்...மாவட்ட ஆட்சியராக எப்படி ..how this transformation hpnd?
சில விஷயங்களை முடிக்க சிஸ்.. நன்றி
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Lovely update
Oii enna collector nu soldra
Thuni vadivamaipu enna achi
எல்லாம் காரணமா தான் செல்லம்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN