சாதி மல்லிப் பூச்சரமே !!! 29

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 29

பொதுவாக இந்த ஊரில் ஐயாரு குடும்பம் தான் எதிலும் முதன்மை வகிக்கும். அதிலும் எந்த அரசாங்க அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தாலும் முதல் கறி விருந்து ஐயாரு வீட்டில் தான் நடக்கும். இது என் கோட்டை, இங்கு நான் தான் ராஜா... உனக்கான வேலையை ஒரு எல்லைக்குள்ளே வைத்துக் கொள் என்பதைத் தன் ஆளுமையில் காட்டி விட்டு தான் வந்தவர்களை ஊரில் வேலை செய்ய அனுமதிப்பார் அவர். அதற்கு கட்டுப்படுபவன் அங்கு அரசாங்க அதிகாரியாய் வேலை செய்யலாம். மீறுபவனுக்கு வேலை மட்டும் போகாது... பல நேரத்தில் கை காலும் இன்னும் சில நேரத்தில் உயிரும் போகும்.



அடி வாங்கியவன் எந்த M.L.A, மந்திரியிடம் போனாலும் செல்லுபடி ஆகாது. அதிலும் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் வாய் பொத்தி தான் நிற்க வேண்டும். அந்த ஊரில் மற்றவர்களுக்கு எப்படியோ… இவர்கள் சாதிக்காரர்கள் தப்பு செய்தால் ஐயாருவின் அனுமதியோடு தான் அவர்களை கைது செய்ய வேண்டும். அதனாலேயே தப்பு செய்தவர்களை ஊருக்கு வெளியே வைத்துத் தான் கைது செய்து செல்வார்கள் அதிகாரிகள். ஆனால் இன்று தன் வீட்டுப் பெண்ணே கலெக்டராய் வர, ஐயாரு அதிகாரம் செய்வாரா?



அப்படி ஒரு சாதி வெறியிலும், அதிகாரத் தோரணையிலும் ஊறிப் போன, தான் பிறந்த மண்ணில் தான் கலெக்டராக வந்திருக்கிறாள் பூந்தென்றல்.



ஐயாருக்கு மட்டுமில்லை... வேந்தனுக்குமே தன் மனைவி பூந்தென்றல் தான் கலெக்டராக வரப் போகிறாள் என்பது முன்பே தெரிந்த விஷயம் தான். அங்கு அவளை வரவேற்க ஊர் தலைகள் அனைவருமே கூடி இருந்தார்கள். இந்த மூன்று வருடத்தில் மனைவியை விட்டுப் பிரிந்த பிறகு மதிவேந்தன் தெரிந்தே மனைவி கண்ணெதிரில் போய் நின்றது இல்லை. ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளைப் பார்ப்பவன். கலெக்டர் பயிற்சிக்காக அவள் டேராடூன் சென்றிருந்த போது கூடத் தன் மனைவியைப் பார்த்துவிட்டுத் தான் வந்தான் அவன்.



கார் வந்து நின்றதும் அவளுக்கு முன்பு ஒரு உயர் போலீஸ் அதிகாரி ஓடி வந்து அவளுக்கு கார் கதவைத் திறந்து விட்டு சல்யூட் வைக்க, அதை கம்பீரமான ஒரு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டவள்



பின் அந்த அதிகாரி ஐயாரு பக்கம் அவளை அழைத்துச் சென்று அவரை அறிமுகப்படுத்த நினைக்க, அவளோ கணவன் இருக்கும் இடத்தைத் தன் கடைக்கண் பார்வையால் அறிந்து கொண்டு, ஓரப் பார்வையாலேயே தன்னவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தாள் அவள். ஏதோ பதின்ம வயது பெண் போல மனதிற்குள் சிறு படபடப்பு அவளுக்கு எழத் தான் செய்தது. பின்னே? அன்றைய தினத்திற்கு பிறகு இன்று தானே கணவனைக் காண்கிறாள்.



மனதில் ஒரு சங்கல்பம் செய்து கொண்டவள் அதன் பிறகே கணவனைக் காண வந்துள்ளாள். எதேச்சையாக தன்னவன் பக்கம் நோக்கி செல்வது போல் இவள் தன் விழிகளால் கணவனை நிரப்பியபடி நடந்து சென்று அவன் எதிரில் நிற்க, கூட வந்த அந்த போலீஸ் அதிகாரியோ அவளின் நோக்கம் புரியாமல், “மேம், இவர் பெயர் மதிவேந்தன். இந்த ஊர் பெரிய மனிதரான ஐயாருக்குப் பிறகு இவர் தான் இந்த ஊருக்கு எல்லாம். இவர் வார்த்தைக்கு இந்த ஊர் இளைஞர்கள் அப்படி கட்டுப்படுவாங்க!” என்று அறிமுகப்படுத்த



எந்த சலனமும் இல்லாமல் கம்பீரமாக, முகம் அறியாதவர்களுக்கு கை கூப்பி வணக்கம் செலுத்துவது போல் வேந்தன் தன்னவளிடம் நடந்து கொள்ள, சற்றே மனம் சுணங்கினாலும் அதை முகத்தில் காட்டாமல் உன் மனைவி நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பதாக கணவனைப் போலவே இவள் சலனமில்லா முகத்துடன் வணக்கம் வைக்க, இறுதியாகத் தன் கையில் வைத்திருந்த பூமாலையை மரியாதை செய்ய அவளிடம் கையில் கொடுக்க வேந்தன் நீட்ட



அவளோ அதை வாங்காமல் கணவனிடம் விளையாடிப் பார்க்க நினைத்தவள், தன் தலையை தன்னவன் முன் கவிழ்த்து அழகான மலரென கழுத்தைச் சாய்த்து நின்றாள் தென்றல். அதாவது உன் கையாலேயே என் கழுத்துக்கு பூமாலையை நீயே அணிவி மாமா என்பது போல் இருந்தது அவள் செயல். மனைவி சொல்லாமலே சொல்ல வருவது புரிய,



‘இதுக்குத்தாம்ல இவள வரவேற்க நான் வர மாட்டேன்னு சொன்னேன்!’ என்று கோபமாக மனைவியை மனதிற்குள் வசை பாடியவன் பல்லைக் கடித்த படி அங்கு அனைவர் முன்பும் தாங்கள் இருவரும் காட்சிப் பொருளாக நிற்பது பிடிக்காமல் உள்ளுக்குள் ஒரு புறம் ஆயிரம் சுணக்கம் இருந்தாலும் மறுபுறம் விரும்பியே கலெக்டருக்கு இவன் மாலை அணிவிக்க, அவனைப் போலவே தன்னவன் சூட்டிய மாலையை மனதால் விரும்பியே ஏற்றுக் கொண்டாள் பூந்தென்றல்.



ஏதோ இதுவரை நடந்த ஆயிரம் மனஸ்தாபங்கள் எல்லாம் இப்போது தன்னவன் இட்ட இந்த ஒரு மாலையில் சரி செய்யப்பட்டதாக நினைத்தாள் அவள். இவன் அணிவித்த நேரம் அவள் நிமிர, அவனின் விரல்கள் தன்னவளின் கழுத்தை வருடியது. இது எதேச்சையாக நடந்தாலும் இருவரும் உடல் சிலிர்க்க, கண்கள் மூடி அதை ஒரு வினாடி அனுபவிக்கத் தான் செய்தார்கள்.



டபேதார் வந்து அவள் கையில் வைத்திருந்த மாலையை வாங்க வர, அவளோ மாலையை யாரிடமும் கொடுக்காமல் தன் கையிலிலே வைத்துக் கொண்டாள் தென்றல். தன்னவன் இட்ட மாலையல்லவா?



பின் ஐயாருவிடம் வந்தவள், ஊர் மரியாதைக்காக அவர் கொடுத்த மாலையை வயதுக்கு மரியாதை கொடுத்து ஏற்றுக் கொண்டவள், மறந்தும் தங்கமுத்து பக்கம் திரும்பவும் இல்லை அவன் மாலை மரியாதையை ஏற்கவும் இல்லை அவள்.



முதல் நாளே பொறுப்பு எடுத்துக் கொண்டவள் தன் சீட்டில் வந்து அமர, அவள் முன் ஊர் பெரிய தலைகளுடன் இன்னும் சிலபேர் அமர்ந்திருந்தனர். “இந்த ஊர் ஒண்ணும் எனக்குப் புதுசு இல்ல. சொல்லப் போனா நான் பிறந்து ஐந்து வயது வரை வளர்ந்தது எல்லாம் இங்கு தான். பிறகு தான் என் அப்பாவுக்கு வேலையில் மாற்றல் கிடைக்க, வெளியூர் சென்றுவிட்டேன்.



அதன் பிறகும் நேரம் இருக்கும் போது எல்லாம் நான் வந்து போன ஊர் இந்த ஊர். இதை ஏன் நான் இங்கு சொல்றேன்னா... சிலபேர் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைத்து இங்கு நடக்கும் சில விஷமத்தனங்களை பூசி மொழுகி எதையும் மறைக்க வேண்டாம். வேண்டாம் என்ன மனதால் அப்படி நினைக்கக் கூட கூடாது” தன் கம்பீர குரலில் முடித்தவள்



“Mr. சிவகுரு, நீங்க இந்த ஊருக்குப் பெரிய தலைவரா இருக்கலாம். அதற்காக உங்க பிரிவுல இருக்கறவங்க தப்பு செய்தா, போலீஸ் வந்து பிடிச்சிட்டுப் போகக் கூடாதுன்னு அதிகாரம் செய்றீங்களாமே? இனி இப்படி ஒரு ரூல்ஸ் இங்க இருக்கக் கூடாது” என்று அதிகாரத்துடன் சொன்னவள் அங்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரி பக்கம் திரும்பியவள்,



“இனி யார் தப்பு செய்தாலும் நீங்க அரஸ்ட் பண்ணுங்க. மீறி தடுப்பவர்கள உங்க கடமையைச் செய்ய விடாம தடுக்கிறாங்க என்ற செக்ஷனில் அவர்களையும் அரஸ்ட் பண்ணுங்க. இதற்கான முழு அனுமதியும் அதிகாரமும் நான் உங்களுக்குத் தரேன்” இது என் கடமை என்ற ரீதியில் முதலில் அவள் ஊர்க் கட்டுப்பாட்டை உடைக்க, போலீஸ் அதிகாரியும் அதை ஏற்றுக் கொள்ள, ஐயாருவின் முகமோ கருத்தது.



பின் தங்கமுத்து பக்கம் திரும்பியவள், “தங்கமுத்து, அது தானே உன் பெயர்?” என்று இவள் ஒருமையில் கேட்க,



கேட்பது கலெக்டர் என்பதால் அவன் பவ்யமாய், “ஆமாங்க” என்று சொல்ல



“ம்ம்ம்... அப்பா பேர் இசக்கி, தொழில் கள்ளச்சாராயம் காய்ச்சறது. நீயும் அதைத் தான் செய்துட்டு இருந்த. இப்போ அரசியல்வாதிகிட்ட கையாளா இருக்க...”



தற்போது அவன் குறுக்கிட்டு “கையாளு இல்ல... சேக்காலி” என்று திருத்த



“ஓ... அப்படினு நீயே சொல்லிகிட்டா அதையே நானும் சொல்லணும்னு எதிர்பார்க்காத” என்று சற்று கடுமையாகச் சொன்னவள், “அப்புறம் இன்னோர் விஷயம்… நீ கம்மாய குத்தைக்கு எடுக்கல. இந்த ஊர் பெரிய மனுஷர் அதை எடுத்துட்டு... உயிரக் கொடுத்து அதை வாங்கிக் கொடுத்த நல்லவங்க எல்லோரையும் மறந்துட்டு, இன்று உனக்குக் கை மாற்றி விட்டு இருக்கார். ஊர்ல ஆயிரக் கணக்கான நிலங்கள் பாசனத்துக்கு இருக்கு.... மடை கட்டி அதைத் தடுக்கிற வேலை எல்லாம் இனி செய்யக் கூடாது.



பிறகு உன் சாய தொழிற்சாலை… அதைப் பற்றி வேறு ஒருநாள் உன்னிடம் நான் பேசறேன். சோ, நீ நீர் வரத்தைக் குறைச்சா உன்னை எதுவும் நான் செய்ய மாட்டேன். கம்மாயைக் குத்தகை எடுத்த அந்த பெரிய மனுஷன் மேல் தான் நான் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவேன்” என்ன தான் இவள் தங்கமுத்துவை எச்சரித்தாலும் பார்வை எல்லாம் ஐயாருவிடமே இருந்தது. ஆனால் அவர் பார்வையோ கடுமையாக வேறு எங்கோ பதிந்திருந்தது.



பின் வேந்தன் பக்கம் கவனத்தைத் திருப்பியவள், “இந்த வருடம் உங்க ஊரில் கோவில் திருவிழா நடத்த விரும்பம் இல்லைனு பஞ்சாயத்துல முடிவு செய்திருக்கிறதாகவும், ஆனால் ஊர் மக்கள் அதை விரும்பறதால அரசாங்கமே திருவிழாவை நடத்திக் கொடுக்கும் படி அதே ஊர் மக்கள் சார்பா நீங்க மனு கொடுத்திருக்கீங்க. படித்துப் பார்த்தேன்..



உங்க மனுவைப் பரிசீலனை செய்றேனு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்… உறுதியே தரேன். நிச்சயம் உங்க ஊரில் இந்த வருடம் கோவில் திருவிழா நடக்கும். கொடுத்த வாக்கு படி சொன்னதை நடத்திக் காட்டுவாள் இந்த பூந்தென்றல் மதிவேந்தன்” என்று உறுதி அளித்தவளின் குரலில் ஆரம்பம் முதல் முடிவு வரை கலெக்டருக்கான கம்பீரம் அப்படியே இருந்தது. ஆனால் அவள் பெயருடன் கணவர் பெயரைச் சேர்த்து உச்சரித்த போது மட்டும் அவள் விழியில் ஒரு மின்னல் மின்னி மறைந்தது. அதை அறிந்து கொண்டான் அவளின் அவன்.



மீண்டும் அவள் குரலே தொடர்ந்தது. “இந்த ஊரில் தான் எனக்குப் பதவி என்று தெரிந்ததும் நீங்க எல்லோரும் முன்பே கொடுத்த மனுவை எல்லாம் படித்ததால் தான் இன்று என்னால் பதில் கொடுக்க முடிந்தது. அதே மாதிரி என் வேலையில் நான் எப்போதும் சரியா இருப்பேன் என்பதைக் காட்டத் தான் இன்றே இந்த மீட்டிங். இப்போ நீங்க எல்லாரும் கிளம்பலாம்” எல்லாம் முடிந்தது, போகலாம் என்பது போல் அதே அதிகாரத் தோரணை இவளிடம்.



அங்கிருந்த யாரையும் பேச விடாமல் இவளே பேசி முடித்து அனைவரையும் அனுப்ப, அதை ஏற்று அனைவரும் எழுந்த நேரம், “மாமா, க்கும்... க்ஹும்” தொண்டையைச் சரி செய்தவள் “mr.மதிவேந்தன் நீங்க மட்டும் இருங்க. உங்க கிட்ட ஊர் விஷயமா கொஞ்சம் பேசணும்” என்ன தான் அதிகாரம் செய்ய நினைத்தாலும் குரல் குழைந்ததோ? அவளுக்கே சந்தேகம் தான்!



பின் வேந்தன் மட்டும் அங்கிருக்க, “எப்படி இருக்க மாமா? அத்த எப்படி இருக்காங்க? உன் தாய் மாமா, அதான்… என் அப்பா எப்படி இருக்கார்?” இப்போது அவன் மனைவியாய் இவள் அனைவரையும் விசாரிக்க



சற்றும் அசராமல் “என் குடும்பத்துல இருக்கறவைய்ங்கள பத்தி நீங்க ஏன் கேக்குதீய கலெக்டர் மிஸ் லிஸ்மிதா?” இவன் கேட்க



“நான் ஒண்ணும் மிஸ் லிஸ்மிதா இல்ல… நான் மிஸ்சஸ் மதிவேந்தன்.… நீங்க கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் இருக்கு” இவள் ரோஷமாய் பதில் கொடுக்க



“ஆனா ஒங்க மனசுல நான் இல்லையே?” கணவனின் பதிலில் ஒரு வினாடி ஸ்தம்பித்து தான் போனாள் தென்றல்.



“இப்போ எதுக்கு மாமா பழசு எல்லாம்? அதிலும் வாங்க போங்கனு எல்லாம் மரியாதையா என் கிட்ட பேசுற!” இவள் ஆற்றாமையால் கேட்க



“பழசு... ம்ம்ம்... வீட்ல போகிக்கு பழைய பொருளை கொளுத்தும் போது கூட நாம ஒபயோகப்படுத்துன ஒதவாத ஒரு சில பொருளை கொளுத்த மனசு வராது. அது அவிங்க வாழ்க்கைல நல்லது செஞ்சிருக்கோ இல்ல கெட்டது செஞ்சிருக்கோ... ஆனா நிச்சயம் நமக்கு பாடத்தை சொல்லிக் குடுத்த நம்ம வாழ்க்கையோட திருப்புமுனை பொருளா இருந்திருக்கும்.



அதுக்காண்டி அத மறக்க நெனச்சாலும் முடியாம அதை வீட்ல ஒரு எடத்துல வெச்சிருப்பாக. அதே மாதிரிதேன் இப்போ நீங்க சொன்ன பழசும். நான் படிக்காத காட்டான். இன்னொன்னு, நீங்க மெத்த படிச்ச கலெக்டர். அதுக்கு நான் மதிப்பு குடுத்துதேன் ஆகணும். அதனால நீங்கன்னு கூப்டறது சரிதேன். சரிங்க… வேற எதுவும் இல்லனா அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிடுறேன்” என்ற படி இவன் எழுந்து விலக



இவள் அன்று கொடுத்த சாட்டையடி வார்த்தைகளை இன்று கணவன் கொடுக்கவும் துடித்துப் போனவள் அவசரமாக எழுந்து கணவனை நெருங்கி, “அது... வந்து... உங்க மனைவி எப்படி இருக்காங்க மாமா? கல்யாணம் செய்துகிட்டீங்களா?” கணவன் தன் மேல் வைத்த காதலை அன்று உணராமல் போனவளுக்கு இன்று அவன் சொன்னாமலே புரிந்தது அவன் காதல்.



அந்த புரிதல் தந்த நம்பிக்கையால் தான் அவன் வாழ்வில் நடந்ததை இவள் விசாரிக்கவும் இல்லை மற்றவர் சொல்ல வந்ததையும் இவள் காது கொடுத்துக் கேட்கவும் இல்லை. அவன் வேறு திருமணம் செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவன் வாய் மொழியாகவே ‘எனக்கு இன்னும் திருமணம் நடக்கல நீ தான் டி என் மனைவி’ என்று கணவன் சொல்ல மாட்டானா என்ற ஆசையில் தன்னையும் மீறி கண்ணில் பரிதவிப்புடன் இவள் கேட்க



அவளை உச்சி முதல் பாதம் வரை தன் கூர் விழிகளால் அளவெடுத்தவன், “அவளுக்கென்ன... இந்த மதிவேந்தன் பொஞ்சாதியாச்சே… அவ கோவில் திருவிழாவில் வீதி உலா வர்ற அம்மன் கணக்கா, சும்மா ராஜாத்தி கணக்கா இருக்கா!” இவன் மீசையை முறுக்கிக் கொண்டு சொல்ல



இதை எதிர்பார்க்காதவளின் மனம் ஏனோ வெறுமையை உணர, அதை மறைத்தவள், “அவங்களை நான் பார்க்கணுமே!” விடாமல் இவள் கேட்க



“அதனால் என்ன.. பார்க்கலாமே…ரெண்டு நாள் கழிச்சு என் அம்மைங்க கோவில்ல ஒரு விஷேசம் வச்சி இருக்காங்க. கலெக்டர் அம்மா வந்தா, என் வூட்டுக்காரிய அறிமுகப் படுத்துதேன்”



கணவனின் பதிலில் உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிந்தது தென்றலுக்கு. அதை மறைத்தவள், “நிச்சயம் வரேன்... உங்க ராஜாத்தியப் பார்க்க வேணாமா?” வலி நிறைந்த குரலில் அவனுக்குப் பதில் சொன்னவள், “நான் எப்படி இருக்கனு கேட்க மாட்டியா மாமா? என்னைப் பற்றி ஒரு வார்த்தையாவது கேளேன்” என்ற எதிர்பார்ப்பு கூட்டை விட்டுப் பிரிந்த குயிலின் கானத்தில் ஒலித்தது. கணவனைப் பிரிந்திருக்கும் எல்லா மனைவிக்கும் உள்ள ஏக்கம் அது.



கேட்காமல் மீறிப் போக நினைத்தவனை மனைவியின் வலி நிறைந்த குரல் தடுக்க, “எப்டி இருக்குறீய?” இவன் கேட்ட அடுத்த நொடி அவள் விழி என்னும் ஆழியில் ஒரு துளி நீர் தளும்பி கரை தட்டத் துடிக்க,





“நல்லா இல்ல மாமா” கூறும் வார்த்தைக்கு எதிர்மறையாய் கணவன் கேட்டதே போதும் என்ற ரீதியில் முகத்தில் சந்தோஷத்துடன் தலை அசைத்தவளின் உதடுகளோ “ஐ லவ் யூ மாமா!” என்ற வார்த்தையை மிக சன்னமாய் முணுமுணுத்தது.



காதல் கொண்ட அவனால் மனைவியை அந்த நிலையில் பார்க்க முடியாதவனாக அவனோ மேற்கொண்டு அங்கு நிற்க முடியாமல் அவசரமாக வெளியேற, இப்போது மனைவிக்கு நிகராய் அவன் கண்ணுக்குள் நீர்த் தாரகை அவசரமாய் பாய் விரிக்கவும்,
எதிரில் வந்தவர் மேல் நிதானம் இல்லாமல் முட்டிக் கொண்டான் அந்த காதல் கணவன்.

செவ்வாய் அன்று அடுத்த பதிவு வந்து விடும் தோழமைகளே...
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 29
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

UMAMOUNI

Member
அடக்கடவுளே கோவிலில் தென்றல் தான் மனைவி என்று தெரிந்தால் வாவ் செமையா போகுது கதை
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அடக்கடவுளே கோவிலில் தென்றல் தான் மனைவி என்று தெரிந்தால் வாவ் செமையா போகுது கதை
நன்றிங்க சிஸ்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN