சாதி மல்லிப் பூச்சரமே !!! 36

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 36

கலெக்டராய் தன் ஊருக்குப் பணி செய்ய வந்த தென்றலை அப்பணி செய்ய விடாமல் பல வகையில் இடைஞ்சலாய் இருந்தது ஐயாருவும் அவர்கள் ஆட்களும் தான். இவர்கள் இப்படி பட்டவர்கள் தான் என்பதைத் தெரியாதவளா என்ன… அதனால் தன் அதிகாரத்திலே நின்றாள். அதிலும் வேந்தன் விஷயத்தில் ஐயாரு தன் பிடிவாததையும் மூர்க்கத் தனத்தையும் காட்ட, அவையனைத்தையும் தன் பதவியால் ஒன்றும் இல்லாமல் தவிடு பொடியாக்கினாள் தென்றல்.

இப்படி தான் ஒரு முறை இவர்கள் இருவருக்குள் கோவில் திருவிழா பற்றி மதிவேந்தன் குறித்து சில வாக்குவாதங்கள் நடக்க, “ஏன் ஏன் முடியாது? சரி, இனி நான் கலெக்டராகப் பேசவில்லை… அவருடைய மனைவியாகக் கேட்கிறேன். எந்த விதத்தில் என் புருஷன் உங்களை விடக் குறைந்து போய்ட்டார்?

ஒருவரிடம் சவால் விட்டு அதில் நீங்க ஜெயிக்க, என் மாமா ஜல்லிக்கட்டில் அவர் உயிரைப் பணயம் வைக்கணும்... நீங்க மீசையை முறுக்கிகிட்டு நின்றா அங்க உங்க முன் விரல் நீட்டிப் பேசுறவன் கையை உடைக்க என் மாமா வேணும்... உங்களை யாராவது கொல்ல வந்தா தன் உயிரைக் கூட பொருட்படுத்தாம உங்களைக் காப்பாற்ற என் மாமா வேணும். முப்போகம் விளைந்து அதை நீங்க பணமா பார்க்க என் மாமாவோட ராசி வேணும். இப்படி எல்லாத்துக்கும் என் மாமா வேணும்... ஆனா கோவிலில் நடக்கிற மரியாதையை மட்டும் அவருக்குத் தரக் கூடாது.

ஏன்னா, அவர் உங்க சாதி இல்ல. வீரத்தில், குணத்தில், நற்பண்புகளில், படிப்பில், தோற்றத்தில்… இப்படி எதிலும் ஒருவரை வேற்று சாதின்னு வேறுபடுத்த முடியாம அவரின் பிறப்பை வைத்து வேறுபடுத்தித் தாழ்த்துற நீங்க தான் அந்த இழிவான சாதி ஆட்கள்.

நிச்சயமா சொல்றேன், என் மாமா உங்களை விட உயர்ந்த குலத்துல இருந்து வந்தவர் தான். அதனால் தான் வளர்த்த பாசத்திற்காக உங்களுக்கு ஒன்றுனா அவருக்கு இப்பவும் துடிக்குது. அந்த பாசம் தான் உங்களை எதிர்த்துப் பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்க விடாம அவரைக் கட்டிப் போடுது. இந்த நிமிஷம் உங்களை எல்லாம் அடித்துத் தூக்கி கோவில் மரியாதையை ஏற்க என் மாமனுக்கு வீரம் இல்லையா என்ன? ஆனா அப்படி செய்ய மாட்டார். அதான் அவர் கிட்டயிருக்கிற குணம்” என்று தென்றல் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் மாமன் புகழ் பேச,

“ஒன் மாமன் ஒனக்கு ஒசத்தினா, நீ வேணும்னா அவனத் தலையிலே தூக்கி வெச்சு ஆடு. ஆமா, இம்புட்டு ஒன் மாமனப் பத்தி பிரபாத்தை எடுத்துச் சொல்லுத நீ அவன் கூடச் சேர்ந்து வாழ வேண்டியதுதேன?” ஐயாருவோ தன்னுடைய சுயநலத்தை தென்றல் உடைத்துக் காட்டியதை நினைத்து… அடக்கப் படாத கோபத்தில் கேட்க

“நீங்க என்ன சொல்றது… வாழத் தான் போறேன்... நிச்சயம் அவரோட இந்த ஜென்மம் முழுக்க வாழத் தான் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி என் மாமன் அவர் இழந்த அடையாளத்தை அவர் திரும்ப வாங்கற வரைக்கும் ஓய மாட்டேன்” அன்று கணவனைத் துரத்தும் போது பேச முடியாமல் போன வார்த்தைகளை எல்லாம் இன்று பேசினாள் தென்றல்.

மேலும் “இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்தப் பாழாப் போன சாதியைத் தூக்கி சுமக்கப் போறீங்க? பெத்த பொண்ணுன்னு கூடப் பார்க்காம, வேற்று சாதியில் காதலித்ததாலே பொண்ணைக் கவுரவக் கொலை செய்த நீங்க மாற மாட்டிங்க தான்” இத்தனை நாள் தன் மனதில் இருந்த ரகசியத்தை அவள் வாய் விட்டே கேட்க

“என்ன வாய் நீளுது? எவனோ ஒரு அநாதைக்காக எம்மேல பழி போடுதியா?” உண்மையைப் போட்டுடைத்த தென்றலைப் பார்த்து ஐயாரு கர்ஜிக்க

“யார் அநாதை? என் மாமாவா? அவர் ராஜேந்திரன் ராஜாத்தி அம்மாள் பேரன், தாமரை சந்திரன் தம்பதிகளோட மகன். இன்னும் சொல்லனும்னா கந்தமாறன் மருமகன். இத்தனை உறவுகள் இருக்க என் மாமா எப்படி அநாதை ஆவார்? இன்னும் என்ன சொன்னீங்க? பொய்யா பல சூழ்ச்சி செய்து உங்க பொண்ண நீங்க கவுரவ கொலை செய்தது உண்மை. அதை அப்படியே தற்கொலைன்னு நீங்க மாற்றினதும் உண்மை.

என் அம்மா செத்த பிறகு என்னைத் தாய்க்கு தாயா இருந்து வளர்த்தது அவங்க தான். அப்படிப் பட்ட அவங்களை என் கண்ணு முன்னாடியே நீங்க தூக்கில் போட்டதை நான் பார்த்தேன். அந்த வயசுல தெரியல. ஆனா எத்தனை நாள் இரவில் பயத்திலே அழுதிருப்பேன் தெரியுமா?

அப்போதெல்லாம் என் பாட்டி தான் எனக்கு ஆதரவு. ஒரு நிலைக்கு மேலே அவங்களுக்கும் உண்மை தெரிந்து விட என்னைக் காப்பாற்ற, இந்தக் கொலைகாரக் குடும்பமே வேணாம்னு முடிவு செய்து, உங்களைப் பற்றி இன்னும் ஏதேதோ சொல்லி என்னை உங்க யார் கூடவும் சேரவே விடல அவங்க. அப்போ என் மாமா மேல் போன அபிப்பிராயம் தான்… அது தொடர்ந்து… பிறகு அவர் கேட்ட விவாகரத்தால் தான்...” சற்றே நிறுத்தி ‘தன் மனம் புரிந்தது’ என்பதை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் பின் தன் தொண்டையைச் சீர் செய்தவள்

“ஒரு கொலையைச் செய்திட்டு எவ்வளவு சுதந்திரமா எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் நீங்க சுத்திட்டு இருக்கிங்க. அப்படிப் பட்ட நீங்க உயர்ந்த சாதி… அப்படி தானே… இதில் பெருமை வேற! உங்கப் பொண்ண நீங்க கொலை செய்ததுக்கு ஒரே சாட்சி நான் தான். இப்போ என் அதிகாரத்தை வைத்து திரும்ப உங்கள் மகள் உடலைத் தோண்டி எடுத்து உங்களை உங்க சாதி சனம் முன்னாடி இந்த ஊர் மக்கள் முன்னாடி தலை குனிய வைக்க என்னால் முடியும்.

ஆனா அதை என் மாமனே ஏற்றுக்க மாட்டார். நீங்க கோவில் திருவிழா விஷயத்தில் ஒதுங்கி, என்னுடைய கடமையைச் செய்ய வழி விட்டா, உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மீறினா, பல விஷயங்கள் வெளியே வரும்” இவள் வெளிப்படையாகவே மிரட்ட

தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் அவளை ஆழ்ந்து பார்த்தவர், “கோவில் விசயத்துல நான் விட்டுக் குடுக்க வந்தாலும் என் குடும்பத்துல ஒருத்தனா அவனைச் சேர்த்துக்கிடுவேனு நெனைக்காத!” இவர் வேறு விதமாய் எச்சரிக்க

“ஓ! அப்படியா? அதையும் தான் பார்க்கலாமே. என் மாமாவை உங்க வம்சத்துல ஒருத்தரா நீங்க ஏற்றுக்கத் தான் போறீங்க. அவருடைய வாரிசு உங்க வீட்டில் அதாவது அவர் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடி அதிகாரம் செய்த உங்க வீட்டுலே தான் பிறக்கப் போகுது. இது சவாலே தான்! நிச்சயம் இதை நடத்திக் காட்டுவா இந்த பூந்தென்றல்” இவள் தன் கணவனுக்காக சவால் விட

பல்லு பிடிங்கிய பாம்பாக எழுந்து சென்றார் ஐயாரு. அவள் கூற்று உண்மை தானே… என்றைக்கோ நடந்த கொலை என்றாலும் கொலை கொலை தானே? அதற்காகவே அடங்கிப் போனார் அவர்.

அவர் சென்றதும் விழிகளில் நீர் திரையிட, ‘இதையெல்லாம் உனக்காக அன்றே நான் ஒரு மனைவியாகப் பேசியிருக்கனும் மாமா. இப்பவும் நீ எதையும் வேண்ட மாட்ட. ஆனா ஒரு மனைவியா உன்னை அதே பழைய மதிவேந்தனா அதே கம்பீரத்துடன் அந்த வீட்டில் நிற்க வைப்பேன் மாமா” ஏதோ கணவன் நேரில் இருப்பது போல் மானசீகமாக சொல்லிக் கொண்டாள் தென்றல்.

இது தான் இந்த எண்ணங்கள் தான்… எந்த வெளிநாட்டுப் படிப்புக்காக எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்தவள்… பின் தன் மாமனுக்காக அவன் மேலுள்ள காதலில்.. தன்னுடைய கனவையே தூக்கிப் போட்டாள் அவள்..

அன்று கணவன் வந்து விவாகரத்து கேட்ட போது… அவளின் மனம் அவளுக்கு முழுமையாகத் தெரிய வர, பின் பிடிவாதமாகத் தன் படிப்பையும் சிந்தனையையும் கலெக்டர் படிப்பில் செலுத்தினாள் தென்றல். அவன் மாமன் மேலுள்ள காதல் அவளை இந்த அளவுக்கு மாற்றியிருந்தது. மகளின் மாற்றம் மலருக்கு சந்தோஷமாக இருந்தாலும், ஏனோ அவள் கணவனைப் பார்த்து பேச மாட்டேன் என்ற பிடிவாதத்தில் மட்டும் அவருக்கு முரண்டியது. ஆனால் அவள் பிடிவாதம் தெரியும் என்பதால் அவர் ஒதுங்கிக் கொண்டார். மதிவேந்தனிடம் அவளின் படிப்புக்கான மாற்றத்தைப் பற்றி தெரியப் படுத்த.. அடுத்த கணமே ஏன்.. எதற்கு… வேண்டாம்.. அவளை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கச் சொல்ல.. இறுதியில் மனைவியின் பிடிவாதத்தை அறிந்தவனோ, எப்போது அவள் கழுத்தில் தாலி கட்டினானோ.. அன்றிலிருந்து இன்று வரை அவளுக்கான அனைத்து செலவுகளையும் இவன் ஏற்றுக் கொண்டதைப் போல், இந்த கலெக்டர் படிப்புக்கான செலவையும் இவனே ஏற்றுக் கொண்டான். யாருக்கு.. என் மனைவிக்கு நான் தான் செய்வேன் என்ற பிடிவாதம் அவனுக்கு. படிப்பில் தேர்ச்சி பெற்று வந்தவளுக்கு, தங்கள் ஊரிலேயே பலரிடம் பேசி போஸ்டிங் வாங்கி கொடுத்தார் கந்தமாறன். அந்த அளவுக்குத் தன் மகளின் செயலை மன்னித்திருந்தார் அவர்.

ஐயாருடனான வாக்கு வாதங்களுக்குப் பிறகு, இரண்டு மாதம் சென்று கும்பாபிஷேகத்துடன் கோவில் திருவிழா நடத்த என்று முடிவாக, அதற்கான வேலையும் அதி வேகத்தில் நடைபெற்றது.

நாட்கள் செல்ல, யாருடைய உறவிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

இதனிடையில் வேந்தனின் பிறந்த நாள் வர, திருமணமான புதுதில் எப்போதோ ஒருமுறை கணவன் சொன்னதை இப்போது யோசித்துப் பார்த்தவள், அதை செயல்படுத்த இன்று கிளம்பினாள் தென்றல்.

அன்று மதிவேந்தன் கழனியில் ஒரு வேலையாய் இருக்க, அழகாய் கண்டாங்கி சேலை கட்டி, நெற்றியில் அவனுக்குப் பிடித்த சாந்துப்பொட்டு வைத்து, கால் கொலுசு சிணுங்க, கை வளையல் குலுங்க, கூந்தலில் ஜாதிமல்லிப் பூ மணக்க, கணவனுக்குப் பிடித்த உணவை சும்மாடுவில் சுமந்து வந்தவள் அவனுடைய பிறந்த நாளான இன்று அவனுக்குப் பிடித்தது போல் பரிமாற வந்து விட்டாள் தென்றல்.

காட்டில் தூரத்தே தன் மனைவியைக் கண்டு கொண்ட வேந்தனின் மனதில் உள்ளுக்குள்ளே உவகை எழுந்தாலும் அதையெல்லாம் மறைத்து கண்டும் காணாதது போல் இவன் குனிந்த நிலையில் தன் வேலையில் இருக்க...

சற்று நேரம் நின்று கணவனின் கை புஜங்களையும், வியர்வை வழிய அவன் வேலை செய்யும் அழகையும் பார்த்து ரசித்தவள் கணவனைத் தன் பக்கம் திருப்ப இவள் சரியாக உள்ள தொண்டையைச் செருமி காண்பிக்க, அவனோ தன் வேலையிலேயே கருத்தாய் இருந்தான்.

அவன் திரும்பவில்லை என்றதும் “மாமோய், உன்னத் தான்… உனக்குப் பிடித்ததை செய்து எடுத்திட்டு வந்திருக்கேன். அதுவும் உனக்குப் பிடித்த மாதிரி. வா மாமா சாப்பிட” ஏதோ அன்னியோன்ய மனைவி போல் இவள் தன்னவனை அழைக்க

ஓரப் பார்வையால் தன்னவளை மனதிற்குள் ரசித்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் இவன் மறுபடியும் வேலையைத் தொடர

“க்கும்.. ஒரு பெருமூச்சுடன் சிணுங்கலாய் கணவனிடம் வந்தவள், அதை விட சிணுங்கலாய் தன் கால் கொலுசை அவன் முன் நீட்டி சிணுங்கிக் காட்ட, குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவனின் கண்ணில் அப்பட்டமாய் விழுந்தது மனைவியின் வாழைத்தண்டு காலும் இவன் வாங்கித் தந்த கொலுசும்.

‘எப்போ வாங்கிக் குடுத்தத எப்போ போட்டுகிட்டு வந்து நிக்கா பாரு..’ என்று மனதிற்குள் சாடியவனோ இப்பொழுதும் இவன் தன் வேலையைப் பார்க்க, இம்முறை இவள் தன் கை வளையலை அவன் முன் குலுங்க விட, கூடவே மனைவியின் கூந்தலில் இருந்த ஜாதிமல்லிப் பூச்சரம் அவன் தோள் வளைவில் உரசிய படி அவன் முகத்தருகே நீண்டு வழிந்தது.

எத்தனை நாள் இப்படி ஒரு காட்சியை இவன் கனவுலகில் கண்டிருப்பான்? எத்தனை நாள் இப்படி தன் மனைவி சிணுங்க ஏங்கி இருப்பான்? இன்று எல்லாம் நடந்தும் ஏனோ இரும்பென தற்போது இருக்கும் அவன் மனதிற்கு எதுவுமே எட்டவில்லை. ஏன், மனைவியை நிமிர்ந்தும் பார்க்க விழையவில்லை அவன்.

“யோவ்… மல்லு வேட்டி மன்னாரு! உனக்காக இங்க ஒருத்தி வந்திருக்கா. நீ என்னயா நிமிர்ந்தும் பார்க்காம வேலை செய்துட்டு இருக்க… ரொம்ப தான் உனக்கு..” என்றபடி இவள் கணவன் கையிலிருந்த மண்வெட்டியைப் பிடிங்கி வீச

“ப்ச்சு!” என்ற சொல்லுடன் அசரதையாக விலகிச் சென்றவன் கோபத்துடன் அங்கு சற்றுத் தள்ளியிருந்த வேலியில் கட்டியிருந்த சில வேலிக் காத்தான் செடிகள் கீழே சரிந்திருக்கவும் இவன் அதை சரி செய்ய, அதில் ஒரு முள் அப்போது இவன் கையைப் பதம் பார்க்க, “ஸ்ஸ்ஸ்ஆஆ!” என்ற சொல்லுடன் இவன் சற்றே கையை உதற

கணவன் மேல் ஏக கடுப்பில் இருந்தவள், அவன் கையில் உதிரத்தைப் பார்த்ததும் தன்னிச்சையாய் அவனை நெருங்கி அவன் விரல்களைத் தன் வாய்க்குள் இவள் வைக்க எத்தனிக்க

இவனோ தன் கையை உதற, விடாப்பிடியாய் கணவனின் கையைப் பிடித்தவள், “ஐயோ! பிறந்த நாள் அதுவும் கையில் ரத்தம் பார்த்திடுச்சே மாமா” என்று பதறியவளை

“ஏய்...” ஒரே உதறலலில் தன் கையை விடுவித்துக் கொண்டவன், “இது வேத்து சாதிக்காரன் ரத்தம்... ஒனக்குதேன் புடிக்காதே” அன்று இவள் சொன்ன வார்த்தை தான்... அதையே இன்று கணவன் சொல்லும்போது கண்கள் கலங்க வேதனையில் முகம் சுருங்கியது.. அன்று கணவனுக்கு எப்படி வலித்திருக்கும் என்பதை உணர்ந்தாள் தென்றல்.

இருந்தாலும் கணவனை அப்படியே விட மனமில்லாமல் அவன் கை அலம்பி வந்ததும் இழுத்துத் தன் பக்கத்தில் அமர வைத்தவள், தன்னவன் கழுத்தில் வடிந்த வியர்வையைத் தன் புடவை முந்தியால் உரிமையுடன் துடைத்து விட்டு, தட்டில் உணவை வைத்துப் பிசைந்து அவனுக்கு ஊட்ட நினைக்க

நீ எவ்வளவு தூரம் தான் போறேன்னு பார்க்கிறேன் என்ற நினைப்புடன் தன்னவளை ஒரு வெற்று பார்வை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தன் உதட்டருகே உணவை நீட்டவும், “நான் படிக்காதவன், ஒங்க அளவுக்கு அழகு இல்லாதவன். தெனந்தனம் புழுப் பூச்சியில உருண்டு வியர்வை நாத்தத்துல வாழுதவன். ஆனா நீங்க மெத்தப் படிச்ச கலெக்டர் அம்மா. நீங்க போய் எனக்கு சேவகம் செய்யலாமா?” என்று சாட்டை அடியாய் அன்று இவள் சொன்ன வார்த்தையைத் திரும்ப மனைவிக்கு மொழிந்து விட்டு, அவள் தந்த உணவைச் சாப்பிடாமலே எழுந்து சென்றவன் மறுபடியும் தன் வேலையைத் தொடர

உள்ளுக்குள் நொறுங்கியே போனாலும் அவளோ… “இங்க பார், சும்மா சும்மா என்ன கலெக்டர் கலெக்டர்னு சொல்லாத மாமா. நல்லா பாரு… நான் உன் பொஞ்சாதியா தான் வந்திருக்கேன்”

“எது? இப்டி வேஷம் கட்டி வந்தா நீ என் பொஞ்சாதியா மாறிடுவியா? இப்போன்னு இல்ல, எப்பவுமே நீ கலெக்டர்தேன். அது மாறப் போறதில்ல” சற்று கடுமையாகவே சொன்னவன் “மனசளவுல தூர இருந்துட்டு பெருசா பேச வந்துட்டா..” என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து அவன் விலக எத்தனிக்க

“இங்க பார் மாமா, இப்போனு இல்ல… அப்பவும் சரி எப்பவும் சரி நான் உன் பொஞ்சாதி தான். நீ தான் அதை ஒத்துக்க மாட்டேங்கிற. இன்னைக்கு உன் பிறந்த நாளுக்கு என் மாமனுக்குப் பிடிச்ச மாதிரி வந்து நின்னா, ரொம்பத் தான் பண்ற! போயா போ... இதோ, இந்த கிணத்திலே விழுந்து நான் சாகறேன். நான் இறந்த பிறகு நீ தான் டி என் பொஞ்சாதின்னு கதறுவ இல்ல அது போதும் எனக்கு” வந்ததிலிருந்து அவன் படுத்தும் பாட்டால் மனம் உடைந்து போனவள் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தாள் தென்றல்.

மனைவியின் வார்த்தையைப் பொய் என்று நம்பி அதை எதையும் காதில் வாங்காமல் வேட்டியை மடித்துக் கட்டிய படி அவளைத் திரும்பியும் பார்க்காமல் வேந்தன் நடையை எட்டிப் போட்டுருக்க, சிறிது நேரத்தில் எல்லாம் “தொபீர்” என்ற சத்தத்துடன் கிணற்று நீர் சலசலக்கும் ஓசை கேட்கவும்...

உடல் விரைக்க “ஏட்டி பாப்பு! என்னட்டி செஞ்சிருக்கறவ? இந்த ஜென்மம் முழுக்க நீ தேன் டி என் பொஞ்சாதி!” என்ற கூவலுடன் கிணற்றை நெருங்கி ஓடி இருந்தான் மதிவேந்தன்.


செவ்வாய் அன்று முழு கதையையும் பதிவேற்றம் செய்து விடுவேன் தோழமைகளே...
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 36
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN