ஆதித்யா சக்கரவர்த்தி-4

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 4

அன்று இரவு உணவிற்குப்பின் சுவாதி மகேஷ் மலர் மூவரும் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.
வானதி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மலரின் மடியில் படுத்து தூங்கி விட்டாள்.
மகேஷ் சிறுவயதில் செய்த குறும்புகளை சுவாதியிடம் மலர் சிரித்துக்கொண்டே கூற, பழைய விஷயங்களை மறந்து கலகலப்பாகவே இருந்தது அந்த உரையாடல்.

சிறு வயதில் பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது அவளை கிணற்றில் தள்ளிவிட்டு நீச்சல் கற்றுக் கொடுத்தது... பள்ளிக்கூடத்தில் அவனது வகுப்பு தோழனை ஒரு ஆசிரியர் திட்டியதற்கு அவரது பைக்கின் டயரை கழற்றி வீட்டிற்கு கொண்டு வந்தது.... அதனால் ஒரு பெரிய பஞ்சாயத்து ஆனது... மேலும் பாட்டி இறந்து விட்டதாக பொய் கூறி வகுப்பை கட் அடித்து விட்டு நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்றது... மறுநாள் அவனின் வகுப்பாசிரியர் அவர்கள் வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த போது பாட்டி அங்கு இருப்பதை பார்த்துவிட்டு நீங்க என்னும் சாகலையா??? என்று அதிர்ச்சியுடன் கேட்டது என அனைத்தையும் மலர் சொல்ல சொல்ல அதை சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த சுவாதி சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள்.

"இந்தப் பூனையும் பால் குடிக்கிற மாதிரி இருந்துட்டு என்னெல்லாம் பண்ணிருக்கீங்க" என்று மகேஷிடம் சிரித்துக்கொண்டே சொன்னாள் சுவாதி.


மகேஷும் பழைய நினைவுகளில் அசடு வழிய சிரித்து வைத்தான்.

"கடவுளே இவங்க ரெண்டு பேரும் இப்படியே சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் ...என்னால அவங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது" என்று மனதிற்குள்ளேயே கடவுளிடம் மனு போட்ட மலர் அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களின் அந்த சந்தோஷமான மன நிலையை கெடுப்பது போல் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் ஆதித்யா ...

அந்த நேரத்தில் வந்து நின்றவனை சுவாதி "வாங்க அண்ணா" என்று வரவேற்க...
ஆனால் அவனோ எல்லை மீறிய கோபத்துடன் கண்கள் சிவக்க மகேஷை பார்த்து முறைத்தான்.

அவன் எதற்கு முறைக்கிறான் என்பதை நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்ட மகேஷ்,
"ஆதித்யா ப்ளீஸ்.... இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம். வெளில போய் பேசிக்கலாம்." என்று அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

தன் அண்ணனை பின்தொடர்ந்து ஆதித்யா கோபத்துடன் செல்வதை பார்த்த மலர், சுவாதியிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல்....
"அண்ணி அண்ணன்...." என்று திணறினாள் ...

ஆனால் சுவாதி வெகு சாதாரணமாக,
"ஏதாவது முக்கியமான வேலை விஷயமா இருக்கும் மலர் ..."என்றுவிட்டு மலரின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த மகளை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று படுக்க வைத்து விட்டு வந்தவள் மீண்டும் மலரின் அருகில் அமர்ந்தாள்.

"மகேஷ் நான் அவ்வளவு பெரிய கம்பெனில உன்ன முக்கியமான இடத்துல வச்சு இருக்கறதுக்கு முக்கியமான காரணம் ...உன்னோட நேர்மை அப்புறம் நீ என்னோட தங்கச்சியோட புருஷன் ... உனக்கும் என்னோட தங்கச்சிக்கும் சரிசமமா அந்த கம்பெனில ஷேர் இருக்கு... நீங்க ரெண்டு பேரும் போனா தான் அந்த முக்கியமான டீல முடிக்க முடியும்... ஆனால் நீ இந்த தடவ நீங்க ரெண்டு பேரும் போகாம கம்பெனி மேனேஜர் கிட்ட போக சொல்லி இருக்க... மகேஷ் உனக்கு மண்டையில மூளைனு ஒன்னு இருக்கா இல்லையா.... இது என்ன சில்லரை விஷயமா ...இந்த பிராஜக்ட் மட்டும் கிடைச்சா 100 கோடி பெனிஃபிட் இருக்கு... அதுவும் முழுசா 100 கோடி உன்னால அது லாஸ் ஆகிறத என்னால சகிச்சுக்க முடியாது" என்று அடிக்குரலில் சீரிய ஆதித்யாவை பார்த்த மகேஷுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

பயம் தொண்டையை அடைத்தது போல் இருக்க லேசாக இரும்பி தொண்டையை சரி செய்து கொண்டு....
"ஆதித்யா எப்பவும் போற மாதிரி இந்த தடவ என்னால போக முடியாது... அதனால தான் மேனேஜரை அனுப்ப முடிவு பண்ணினேன்..." என்றான்.

மீண்டும் ஆதித்யாவிற்கு கோபம் சுறுசுறுவென்று ஏற,
"இடியட் நான் என்ன இவ்வளவு நேரம் கதையா சொல்லிட்டு இருக்கேன்... இப்போ எதுக்கு நீ கொல்கத்தாவுக்கு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிற... ரீசன் என்ன??" என்று கடுகடுத்தான்.

அது என்று தயங்கிய மகேஷ் "வானதியை பாத்துக்கணும்....." என்று ஆரம்பிக்க...
"இவ்வளவு நாளும் நீங்க ரெண்டு பேரும் பிஸ்னஸ் விஷயமா வெளியே போனா வானதி என்னோட வீட்ல தானே இருக்கா ....சௌமியா அவளை நல்லா பாத்துப்பா... இப்ப மட்டும் என்ன புதுசா தயங்குற?" என்று ஆதித்யா இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பேச...

"ஆதித்யா அது வேற இது வேற தான். இப்போ என்கூட என்னோட தங்கச்சியும் இருக்கா... அவள இந்த நிலைமையில தனியா விட்டுட்டு என்னால எங்கயும் போக முடியாது.... ஏற்கனவே என்னோட அப்பா அம்மா இறந்த துக்கத்தில இருந்து அவ இன்னும் வெளியே வரல. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வாரா... "
என்று உருக்கமாக கூறி கொண்டே சென்ற மகேஷை இடைமறித்த ஆதித்யா,
"ஏன் என்னோட வீட்ல உன்னோட பாச மலர் தங்கச்சிக்கு இடம் இல்ல ன்னு சொன்னேனா.... இல்லனா அவள பார்த்துக்க முடியாதுன்னு சொன்னேனா...? உன்னோட தங்கச்சி என்னோட வீட்டுக்கு வந்தா சிங்கம்புலி எதுவும் கடிச்சு தின்று மா.... இல்ல நான் தான் அவளை கடித்து துப்பிடுவேனா? ஹான்ன்..அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாத நீ எதுக்கு என்னோட தங்கச்சி கல்யாணம் செஞ்சுக்கிட்ட...?"
என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியபடி நின்றான் மகேஷ்.

"அண்ணா எதுக்கு அவரை சத்தம் போடுற?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் சுவாதி....

இருவரும் வெளியே சென்று வெகுநேரம் ஆனதால் மலரை அவளது அறைக்கு போக சொல்லிவிட்டு அவர்களை தேடி வெளியே வந்தவளுக்கு அண்ணன் தன் கணவனை திட்டுவது தெள்ள தெளிவாகவே கேட்டது.

ஆதித்யா கோபத்துடன் தங்கையிடம் விஷயத்தை சொல்ல... சுவாதி தாங்கள் இருவரும் அங்கு செல்வதாக உறுதி கூறி அண்ணனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

ஆதித்யா சென்றபின் வீட்டிற்கு வந்த சுவாதி கணவனை சமாதானபடுத்த முயற்சி செய்தாள். ஆனால் அவனோ
எதற்கெடுத்தாலும் மலர் மலர் என்று சொல்லிக்கொண்டே இருக்க... சுவாதிக்கு கோபம் வந்தது.
ஆனால் அதைக் காட்டுவதற்கு இது சமயம் அல்ல என்பதை புரிந்து கொண்டு
தன் தங்கை சௌமியா மலரை நன்றாக பார்த்துக் கொள்வாள்... முடிந்தமட்டும் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வந்து விடலாம் என்று ஏதேதோ சொல்லி கணவனை சம்மதிக்க வைத்தாள்.
மறுநாள் காலை உணவின் போது மலரிடம் விஷயம் சொல்லப்பட...
அவளோ,
"நானும் வானதியும் இங்கேயே இருக்கிறோமே.... இந்த வீட்டிலதான் வேலைக்காரங்க எல்லாரும் இருக்காங்களே..." என்றாள் மெதுவாக.

"அதெல்லாம் எங்களுக்கும் தெரியாம இல்ல மலர்... ஆனா என் அண்ணனுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க ...அவங்க எப்ப வேணாலும் வானதியை கடத்திட்டு அண்ணனை பிளாக்மெயில் பண்ணலாம் ...அதனால தான் எப்பவுமே நாங்க வெளியூர் போகும்போது அண்ணன் வீட்ல வானதியை விட்டுட்டு போவோம். இந்த தடவ நீயும் அங்க போக போற... வேற எந்த வித்தியாசமும் இல்ல" என்று சுவாதி பொறுமையாக விளக்க....

மலர் தயக்கத்துடன் மகேஷின் முகத்தை பார்த்தாள்.
தங்கையின் தயக்கத்தை புரிந்து கொண்டு ..."அங்கு யாரும் உன்னை எதுவும் சொல்ல முடியாது மலர்... கவலைப்படாத...வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்துருவோம்"
என்றான் மகேஷ் ஆறுதலாக...

அவனுக்குமே தயக்கம் தான்...
"எப்ப கிளம்பனும்???" என்று மலர் கேட்க...

"நாளைக்கு நைட் எங்களுக்கு பிளைட் ..." என்றால் சுவாதி.

ஹம்ம்... என்ற மலர் அதன் பிறகு அவ்வளவாக பேசவில்லை அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

அன்று மாலை சுவாதிக்கு போன் செய்து அவசரமாக அவனது வீட்டிற்கு வரச்சொன்னான் ஆதித்யா.

அண்ணன் அவசரம் என்றதும் அடித்துப் பிடித்துகொண்டு வேகமாக சென்றாள் சுவாதி.

அங்கு அவளுக்காக காத்திருந்த ஆதித்யா, சுவாதியை பார்த்ததும்
சௌமியா மீண்டும் அழுதுகொண்டே இருப்பதாகவும்... சாப்பாடு வேண்டாம் என்று மறுத்துவிட்டு பட்டினியாக கிடக்கிறாள் என்றும் வருத்தமாக சொல்ல...
சுவாதி கோபத்துடன் தங்கையை பார்க்க சென்றாள். அவள் பின்னே ஆதித்யாவும் அமைதியாகப் போனான்.

"சௌமி நீ வர வர ரொம்ப ஓவரா பண்ற என்ன நெனச்சிட்டு இருக்க மனசுல... அண்ணனுக்கு ஏற்கனவே வெளியில நிறைய பிரஷர்... நீயும் இப்படி பண்ணினா எப்படி?" என்று சுவாதி தங்கையை திட்ட...
ஆதித்யா பேசாமல் சௌமியாவை பார்த்தான்.

"அக்கா என்னோட நிலைமை ல இருந்து பார்த்தா தான் உனக்கு புரியும்..." என்றவள் இன்று அவளது மதியம் கல்லூரி தோழியர் கூட்டம் வந்ததையும், அவளது நிச்சயதார்த்தம் உடைந்ததற்கு வருத்தம் காட்டுவதுபோல் அவளைக் குத்திக் கிழித்து பேசியதையும் அழுதுகொண்டே சொன்னாள் சௌமியா.

ஆதித்யா கோபமாக...
"அவங்க பேரு... அட்ரஸ் எல்லாம் தாடா சௌமி மா...அவங்கள உண்டு இல்லன்னு பண்ணிடுறேன்" என்றான்.

"நீ ஒன்னும் செஞ்சி கிழிக்க வேண்டாம் ... நீ எத்தனை பேரைத்தான் உண்டு இல்லன்னு பண்ணுவ... அதுக்கு பதிலா தயவு செஞ்சு என்ன எங்கேயாவது கொண்டு விட்டுவிடு... என்னால இந்த அவமானத்தை எல்லா தாங்கவே முடியலயே ..."என்று மீண்டும் அழுதாள் சௌமியா.

"ப்ச்ச் சௌமி... தயவு செஞ்சு இப்படி அழுதுட்டே இருந்து எங்க உயிரை வாங்காத ...உனக்கு ஒன்னு தெரியுமா? மகேஷ் ஓட தங்கச்சி மலர் இப்ப எங்க கூட தான் இருக்கா ...அவ அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்து போயிட்டாங்க... அவளுக்கும் ஒருத்தன் கூட நிச்சயதார்த்தம் ஆகி இருந்துச்சு ...அவன் இப்போ அமெரிக்காவுல இருக்கான்... அவனோட அட்ரஸ் போன் நம்பர் எதுவுமே தெரியாது ...கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் முறிஞ்சு போன மாதிரி தான் ...அவன் திரும்பி வருவான்னு உறுதியா சொல்லவே முடியாது... ஆனால் இத்தனை துக்கத்துலயும் அவ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கா தெரியுமா? தனியா இருக்கும்போது எப்படியோ...ஆனா அவ எங்க முன்னாடி இப்படி அழுது வடிய மாட்டா... நா வீக்கா இருக்கேன்னு எல்லாருக்கும் காட்டிட்டே இருக்கமாட்டா... சிச்சுவேஷன் பொருத்து பக்குவமா நடந்துக்குவா ...அவளுக்கும் கிட்டத்தட்ட உன்னோட வயசு தான் இருக்கும்... நீ மட்டும் ஏன் சௌமி இப்படி இருக்க... தயவுசெஞ்சு உன்னோட பீலிங்ஸ கண்ட்ரோல் பண்ணு..." என்றாள் சுவாதி.

"அக்கா உனக்கு கூட என்னோட கஷ்டம் புரியலையா? மலர் மலர்னு சொல்றியே..." என்று மீண்டும் மூக்கை உறிஞ்சினாள் சௌமியா.

"அண்ணா இதுக்கு மேல இவள எதுவும் பண்ண முடியாது... அவளோட இஷ்டப்படியே அவள விடுங்க... நான் வீட்டுக்கு போறேன் டைம் ஆகிட்டு..." என்று தன் கைப்பையை தூக்கிக்கொண்டு எழுந்த சுவாதி.

செல்வதற்குமுன் தங்கையின் புறம் திரும்பி,
"தினமும் உன்ன பாக்க யாராவது வருவாங்க... நீ அவங்க முன்னாடி நல்ல அழுதுட்டு இருப்ப... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி உன்ன கஷ்ட படுத்து வாங்க ....அதுக்காக நீ சாப்பிடாம அழுதுட்டே இருந்து நல்லா அண்ணா உசுர போட்டு வாங்கு" என்று கோபத்துடன் சொல்லிவிட்டு சென்றாள்.

சௌமி ஆதித்யாவை பார்க்க...
அவனோ கனிவாக...
"அக்கா ஏதோ கோபத்துல சொல்றா... அதையெல்லாம் மனசுல வச்சிக்காத... இந்தா ஜூஸ் குடி"என்று வேலையாள் கொண்டு வந்து கொடுத்த ஜூஸை அவளை குடிக்க வைத்தான்.

அண்ணனின் அன்பு சௌமியாவை நெகிழ வைத்தது.

அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டு ..
"அண்ணா உன்ன ரொம்ப கஷ்டப் படுத்துறேனா? சாரி " என்றாள்.

தங்கையின் தலையை வருடி விட்டவன்...
"நீ குழந்தை மா... நீ பண்றதெல்லாம் அண்ணனுக்கு கஷ்டமே இல்லை... ஆனா இனிமே என்ன கேக்காம யாரும் உள்ள வந்து உன்னை கஷ்டப்படுத்த முடியாதும்மா..." என்ற ஆதித்யா.
"இனிமே உன்னோட கல்யாண விஷயத்துல கூட நான் எதுவுமே சொல்ல மாட்டேன்... நீ ஃப்ரீயா சந்தோஷமா என் கூடவே இருக்கலாம். உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம் ... "
என்றான் உறுதியான குரலில்.
சௌமியா எப்பொழுதும்போல் அண்ணனின் பாசத்தில் கரைந்தாள்.

மறுநாள்...
"மலர் கொஞ்சம் எனக்கு பேக்கிங் பண்ண ஹெல்ப் பண்ணு" என்று அவளது அறைக்கு மலரை அழைத்தாள் சுவாதி.
அவளுக்கு உதவி செய்ய வந்த மலரிடம், தன் அண்ணனின் கோபத்தைப் பற்றி கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொன்னாள்.
வானதியையும் கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னாள். முடிந்த மட்டும் இருவரும் சீக்கிரமாக திரும்பி வந்துவிடுவதாக சொன்னாள்.

அவள் சொன்ன எல்லாவற்றுக்கும் ம்ம்ம்...ம்ம்ம் என்று மட்டுமே மலரிடம் பதில் வந்தது.

மகேஷும் மலரை தனியாக அழைத்து சென்று இதையேதான் சொன்னான். மேலும் நேரத்திற்கு நேரம் சரியாக சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்ளுமாறும் கூடுதலாக சொன்னான். அது மட்டும் அவளுக்கு லேசாக ஆறுதலாக இருந்தது.

மாலை ஏர்போட்டிற்கு கிளம்பினர் அனைவரும்....
அங்கு அவர்களை வழியனுப்ப
ஆதித்யாவும் வந்திருந்தான்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வானதி,
தாய் தந்தை இருவரும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நகரவும் அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளை தூக்கி வைத்திருந்த மலர் எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திணற...
ஆதித்யா அவளிடமிருந்து வானதியை தூக்கி கொண்டான்.

பின் அவனது பாக்கெட்டிலிருந்து பெரிய சாக்லேட் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

வானதி அழுவதை நிறுத்திவிட்டு அமைதியாக சிரித்துக்கொண்டே ...அதை சாப்பிட ஆரம்பிக்க... மலர் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.

திரும்பி போகும்போது ஆதித்யா தனது காரில் தான் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றான். டிரைவர் காரை ஓட்ட.... நடுவில் வானதியை வைத்து விட்டு இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.

ஆதித்யாவிற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்க, அவன் தனது மொபைலில் பேசிக்கொண்டே தான் வந்தான்.

அவனின் குரலில் இருந்த அதிகாரம், ஆணவம், பேசும் பாணி... எதுவுமே பிடிக்காமல் மலர் ஜன்னலோரம் ஒடுங்கி அமர்ந்திருந்தாள்

வானதி வேறு விடாமல் சாக்லேட்டை சப்பிக்கொண்டே வர....
"சாக்லெட் சாப்பிட்டா பல் சொத்தையாகிடும் குட்டி "என்று மலர் வானதியிடம் கிசுகிசுத்தாள்...

"பரவால்லை அத்தை... ஆனா இது ரொம்ப டேஸ்டா இருக்கே" என்று சொல்லிவிட்டு திரும்பவும் சாப்பிட ஆரம்பித்தாள் வானதி.

அப்பொழுதுதான் மொபைலை அணைத்துவிட்டு அவர்கள் புறம் திரும்பிய ஆதித்யாவின் காதில் இவர்கள் பேசியது விழுந்து தொலைக்க.... அவன் மலரிடம் கத்த ஆரம்பித்து விட்டான்.

"குழந்தைக்கு பிடிச்சது எதுவோ அதுதான சாப்பிடும்.... பிடிக்காதத குடுக்க உன்ன மாதிரி நாங்க ஒன்னும் மிடில் கிளாஸ் இல்ல... அதுமட்டுமில்லாம பல் சொத்தையாகாம இருக்க வீட்டுக்கு போனதும் மவுத்வாஷ் யூஸ் பண்ணி வாய் கொப்புளிக்க வெச்சுடுவேன்" என்று கடுகடுப்பாக கத்தினான் ஆதித்யா.
மலர் அவனது கோபத்தில் பயந்து நடுங்க ஆரம்பிக்க....
அதற்குள் வீடும் வந்து விட்டது.

வீட்டிற்குள் நுழைந்ததும், வேலை ஆளை கூப்பிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்கு அவளை அழைத்துப் போக சொன்னவன்.
குழந்தையை தூக்கிக்கொண்டு சௌமியாவின் அறைக்கு சென்றான்.

மலரின் பூவுடல் இன்னும் நடுங்கிக்
கொண்டே இருக்க... அச்சத்துடன் அவ்வீட்டை பார்த்தாள்.
அதுவும் அவளை நன்றாக மிரட்டியது .. என்று தான் சொல்ல வேண்டும்...
வேலையால் அழைத்துச்சென்ற அறைக்கு சென்று முகம் கழுவிட்டு அமர்ந்தவள். தனது அறையின் கதவை யாரோ வேகமாக தட்டுவது போல் இருக்கவும் "யாரு???"என்று பயந்து கொண்டே கேட்டாள்.

"நான்தான்..." என்றான் ஆதித்யா கடுப்பான குரலில்....
நடுங்கிக்கொண்டே கதவைத் திறந்தவளிடம்... "யாருன்னு சொன்னா தான் கதவை திறப்பிங்களோ?" என்று ஏளனமாக கேட்டவன் வானதியை அவளிடம் கொடுத்தான்.
"அத்தை" என்று அவளிடம் தாவிய குழந்தையை தூக்கிக்கொண்டவளிடம்.... வானதிக்கு உடைமாற்றி விட்டு சாப்பாடு ஊட்டி விட சொன்னவன்... செல்லும்பொழுது ...
"நான் அடுத்த தடவை கதவை தட்டும்போது உடனே திறக்கணும் இல்லனா அவ்வளவுதான்..." என்று மிரட்டிவிட்டு சென்றான் ஆதித்யா.

"கடவுளே இந்த அரக்கன் கூட இன்னும் எத்தனை நாள் நா ஒரே வீட்ல இருக்கணும்..." என்று நினைத்து பயத்தில் நடுங்கினாள் மலர்.
முடிந்த மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இனி இவனிடம் எந்த திட்டும் வாங்க கூடாது என்றும் மனதில் நினைத்தவள்...மறுநாளே... பலமுறை அவனிடம் திட்டு வாங்க வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை...

தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN