சாதி மல்லிப் பூச்சரமே !!! 38

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 38

கணவன் இரண்டு முறை நடந்து கொண்ட விதத்திலிருந்து தென்றலுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. இன்னும் அவள் மேல் அவனுக்குக் காதல் இருப்பது என்பது தான் அது. ஆயிரம் வீம்புடன் அன்று அவன் சென்றிருந்தாலும் மனைவி கிணற்றில் குதித்து விட்டாள் என்ற போது, அவன் துடித்த துடிப்பு கொஞ்சமா நஞ்சமா? அதே போல் அவள் ஒரு பிரச்சனையில் மாட்ட இருக்கிறாள் என்றதும் முதல் ஆளாய் கணவன் தானே வந்து நின்றது.

பிரிந்திருந்தாலும் ஐயாரு முன் தன்னைக் கொண்டு போய் நிறுத்தி, தன்னவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அது தன்னை மீறி தான் எதுவும் என்று அன்று பறைசாற்றவில்லையா அவன்? இதை எல்லாம் யோசித்தவளுக்கு கணவனின் காதல் இன்னும் மாறவில்லை என்பதை அறிந்தவளுக்கு, இவை எல்லாவற்றையும் விட கணவன் மனதில் வேறு ஏதோ இருக்கிறது என்பதையும் அவளால் உணர முடிந்தது.

அது என்ன என்பதை அறிய இவள் முயற்சி எடுக்க, அதற்கான வழியை அவள் கணவனே கொடுத்தான்.

அன்று சாமந்தியின் அக்காவுக்கு பிரசவம் என்பதால் சின்னத்தாய், தாமரை, சாமந்தி என்று மூவரும் ஊருக்குக் கிளம்ப, அவர்களுக்குத் துணையாக கந்தமாறனும் கிளம்பி விட, வேந்தன் மட்டுமே வீட்டில் தனித்திருந்தான். அவனுக்கு என்ன நேரமோ… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவனுக்கு ஜுரம் வந்து விட, இவன் அதை யாரிடமும் சொல்லாமல் படுக்கையில் அனத்திக் கொண்டிருந்த நேரம், சின்னத்தாய் மூலமாக கணவன் தனியே இருப்பதை அறிந்த தென்றல் கணவனுக்கு உணவு பரிமாற இவள் கணவன் வீட்டுக்கு வர, அவள் கண்டது என்னமோ ஜுரத்தில் சுருண்டு படுத்த படி அனத்திக் கொண்டிருந்த கணவனைத் தான்.

“என்ன மாமா, என்ன ஆச்சு? என்ன செய்யுது?” இவள் கணவன் நிலை கண்டு பதற

தன்னவளின் மூன்றாவது அழைப்பில் தான் சற்றே தெளிந்தவன் அந்த அரை மயக்கத்திலும் தன்னவளின் குரலை உணர்ந்து, “பெருசா ஒண்ணும் இல்ல. செத்த மேலுக்கு முடியல பாப்பு” கண்களைத் திறவாமலே இவன் திக்கித் திணறி சொல்லவும்

இவள் பதட்டத்துடன் அவன் நெற்றியிலும் கழுத்திலும் தொட்டுப் பார்க்க, உடம்பு அனலாய் கொதித்தது. “என்ன மாமா, high fever போல. ஏதோ சாதரணமா உடம்பு சரியில்லைனு சொல்ற. எழுந்திரு, டாக்டர் கிட்ட போய் ஒரு blood test எடுத்திட்டு வருவோம்” இவள் அவசரப்படுத்த

தன்னவளின் கையைப் பிடித்து தன் கழுத்துக்குக் கீழே வைத்துக் கொண்டவன், “ஏட்டி, காலையில் செத்த முடியாத மாதிரிதேன் இருந்துச்சு. அதேன் டாக்டரைப் பார்த்திட்டு வந்தேன். அங்கன மேச மேல மாத்திரை இருக்கு. ஏதாச்சும் சாப்ட்டு விழுங்கச் சொன்னாக. வீட்ல யாரும் இல்ல பாப்பு. எனக்கும் முடியல… அதேன் படுத்துட்டேன்” என்றவன் அவள் கையை இன்னும் தன் கன்னத்தில் அழுத்திக் கொள்ள, அவன் உடலின் சூடு இவள் கைகளில் ஏறியது.

“இதை முன்னாடியே சொல்ல மாட்டியா மாமா? இரு, நான் போய் கஞ்சி செய்து எடுத்திட்டு வரேன்” என்றவள் விலக நினைக்க

அவனோ விடாமல் தன்னவளின் கையைப் பிடித்திருந்தான். “மாமா, கொஞ்சம் நேரம் தான் மாமா. உடம்பு எப்படி அனலா கொதிக்குது பாருங்க. இதோ வந்திடறேன் மாமா. பிறகு இன்று முழுக்க உங்க கூட தான் மாமா இருப்பேன்” இவள் சின்னக் குழந்தைக்கு சமாதானம் சொல்வது போல் கணவனுக்குச் சொல்ல

“ஆனா கடைசிவரைக்கும் இருக்க மாட்டேங்குறியே டி” இவன் கண்ணைத் திறவாமலே பிதற்ற

இவளுக்கு மனதிற்குள் பிசைந்தது. ‘நானா மாமா இருக்க மாட்டேனு சொல்றேன்? நீ தானே மாமா மனசுலே எதையோ வைத்திருக்க’ தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் மெதுவாய் தன்னவனிடமிருந்து விலகினாள் தென்றல்.

அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டு அவசரமாய் கஞ்சி வைத்தவள் கூடவே கணவனின் வாய்க்கு இதமாய் துவையல் அரைத்து, கஞ்சியை மிதமான சூட்டில் எடுத்து வந்து கணவனை எழுப்பிக் கொடுக்க, அவனோ செல்ல ஆர்ப்பாட்டங்களுடன் சிணுங்கலுடன் அதைக் குடித்தான். அதன் பிறகு வம்பு செய்து மாத்திரையை விழுங்கச் செய்தவள் கணவன் தூங்கிய பிறகு அவன் பக்கத்திலேயே அமர்ந்து, வியர்வையால் குளிர்ந்திருக்கும் அவன் உடலைத் துடைத்து விட்ட படி இருந்தாள் அவள்.

எப்போதும் தென்றலுக்கு கணவனிடம் பிடித்தது முறுக்கி விட்ட அவன் மீசையும் அவன் கண்களும் தான். அதுவும் அந்த கண்கள் காதலோடு பார்க்கும் போது, இந்த உலகத்தையே மறந்து போவாள் அவள். இப்போதெல்லாம் கணவனின் அப்படி ஒரு காதல் பார்வைக்கு ஏங்கச் செய்தது அவள் மனது. இப்போது கூட கணவன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் தன்னை காதலோடு பார்ப்பதாகவே உணர்ந்தாள் அவள்.

மாலை வரை கணவன் பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டவள் அனத்தல் நின்று அவன் அசந்து தூங்கவும், தனக்கு ஒரு காபியைப் போட்டுக் குடித்தவள், பின் வெளிவாசலில் வந்து காற்றாட நின்றவளின் மனது பம்பு செட்டைப் பார்த்ததும் அன்று கணவனோடு இங்கு வந்து போட்ட ஆட்டங்கள் நினைவு வர, ஒரு வித ஏக்கத்துடன் அங்கு நெருங்கியவள் அதன் விளிம்பில் அமர்ந்து, கட்டியிருக்கும் சேலையை சற்றே மேலே ஏற்றிய படி இவள் தன் பாதங்களை நீரில் அலைய விட, எவ்வளவு நேரம் அங்கு அப்படியே இருந்தாளோ... அதே நேரம் மேலே ஏற்றியிருந்த அவள் சேலை நழுவவும், சேலை நீரில் நனையாமல் இருக்க இவள் பதற்றத்துடன் சேலையைப் பற்ற, ஐயோ பரிதாபம்! சேலைக்குப் பதில் தொட்டி நீரில் இவளே எதிர்பாராமல் விழுந்து மூழ்கியிருந்தாள்.

கொஞ்சம் நேரம் நீரில் அமிழ்ந்திருந்தவள். பின் இவள் தன்னைத் தானே திட்டிய படி மேலே ஏறி உடலிலிருந்து நீர் சொட்ட சொட்ட, மறுபடியும் அதே விளிம்பில் அமர்ந்து கொள்ளவும், சற்று நேரத்திற்கு எல்லாம் அவள் முதுகில் தேக்கு மரம் போல் பறந்து விரிந்த மார்பு உரசியது, கூடவே அந்த மார்புக்கு சொந்தக்காரனின் விரல்களோ பட்டும் படாமலும் அவளின் வயிற்றில் ஊர்ந்து நண்டு பிடித்த படி அவளின் உடல் ஈரத்தையும் உணர்ந்தது அதன் விரல்கள்.

இங்கு அந்நியர் யாரும் வர மாட்டார்கள் என்று அறிந்து இருந்தவளுக்கு, இது தன்னவனின் தொடுகை தான் என்று உணர்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்.

உள்ளே மதிவேந்தனுக்கு நல்ல தூக்கத்திலும் தன் பக்கத்தில் மனைவி இல்லை என்பது தெரிய வரவும், உடனே கண்விழித்தவனின் உடல் இப்போது முன்பை விட தேறி இருந்தது, இவன் மனைவியைத் தேடி வெளியே வர வந்தவனின் கண்ணில் தொட்டி நீரிலிருந்து ஆடைகள் நனைந்து நழுவியிருக்க, நீர் துளிகள் உடலிலிருந்து வழிந்து ஓட நீர் தொட்டியில் இருந்து எழுந்து நின்ற மனைவியே இவன் கண்ணில் விழ, அதிலும் ரவிவர்மனின் ஓவியம் போல் முதுகில் கூந்தல் படர்ந்து இருந்தாலும் அது நீரில் ஒன்றோடொன்று ஒட்டிய படி அங்கங்கே முதுகில் நீர் சொட்டச் சொட்ட பரவியிருக்க, அவள் இடப்பகுதி சேலையோ நீரின் உபயத்தால் விலகியிருக்க, இப்படி எல்லாம் மனைவியை பார்த்த இவனுக்கும் அன்று தன்னவளுடன் இதே இடத்தில் கழித்த காட்சிகள் நினைவு வரவும், இடையில் நடந்த எல்லாவற்றையும் மறந்தவனாக சத்தம் இல்லாமல் காதலுடன் மனைவியை நெருங்கியிருந்தான் மதிவேந்தன்.

இவனின் தொடுகைக்கு மனைவியின் உடல் சிலிர்த்து அடங்கி அவள் அமைதி காக்கவும், அதில் இன்னும் பித்தானவனாக அவள் கூந்தலை முழுமையாக விலக்கி அவளின் இடது புற தோள் பகுதியில் தள்ளியவன், அவள் ஆடை மூடாத வலது புற தோள் பகுதியில் உருண்டிருந்த நீரை குனிந்து தன் உதட்டால் அந்நீரை உரசியவன் கூடவே தன் பலம் மொத்தத்தையும் கை விரல்களில் கொண்டு சென்று தன்னவளின் இடையை அழுத்த, முதல் முறையாக தென்றலுக்குள் மின்சாரம் பாய்ந்தது.

அதில் அவளிடமிருந்து வேக மூச்சுகளுடன் காதலோடு மாமா என்ற அழைப்பு வெளி வரவும், உடனே இவனின் உதடுகளோ தோள் புறத்தில் இருந்த நீரை அருந்தி விட்டு, ஒரு முடிவுடன் தன்னவளின் கழுத்துப் பகுதியில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது, ஊர்ந்து செல்லும் தன்னவனின் உதட்டால் இவளுக்குள் குறுகுறுக்கவும் இவளோ முழுமையாகத் தன் உடலை கணவன் மேல் சாய்த்துக் கொண்டவள் தன் வலது கையை உயர்த்தி தன்னவனின் பின்புறக் கழுத்தில் விரல்களால் ஊர்ந்தவள் பின் அங்கிருந்த அவன் முடிகளைக் கோதி விட்டபடி... மறுபடியும் “மாமா!” என்று ஒரு விளங்காத குரலில் தன்னவனை அழைக்க,

அவனுக்கோ அவனுள் காதல் கரைபுரண்டு ஓடவும் அவள் கழுத்துப் பகுதியில் ஒரு முத்தம் வைத்து விட்டு, “ம்ம்ம்... ஒன் மாமன்தேன் டி” என்றவன்

அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல நினைத்து மனைவியின் முகத்தை மட்டும் தன் புறம் திருப்பி தன் சுவாசத்தால் அவளை உஷ்ணமாக்கியவன் தன்னவளின் இதழில் குனிந்து முத்தமிட முனைய, இருவரும் காதல் கொண்ட இதயங்கள் இல்லையா?

கணவனின் கண்ணில் பழைய படி காதலைப் பார்த்த இந்த பேதையின் மனமோ அந்த நிலையிலும் அவனிடம், “என்ன மன்னிச்சுட்டிங்களா மாமா?” என்று கேட்டு வைக்க

அடுத்த நொடி தன் காதல் வலையில் இருந்து விடுபட்டான் வேந்தன். அப்போதும் மனைவியின் விழிகளிலும் இவனுக்கு நிகராக காதலைப் பார்த்தவனோ கோபம் எழ, “இன்னும் எப்டி எல்லாம் நடிச்சு என்னைய ஏமாத்திட்டு திரும்ப எப்போ ஓடிப் போறதா இருக்க டி?” அனலென வார்த்தைகளை மனைவியிடம் கொட்டியவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் அவ்விடத்தை விட்டு அகன்று இருந்தான் அவன். கணவனின் வார்த்தையில் தென்றல் தான் ஏனோ திக்பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்து இருந்தாள் இவள்.

நடந்த இவை அனைத்தையும் கனவு என்று ஒதுக்கிப் பார்க்க தென்றல் ஒன்றும் முட்டாள் இல்லையே? கணவனின் விரல் தீண்டலில் அப்படி ஒரு அந்நியோன்யம் இருந்ததை உணர்ந்தாளே... தீண்டலில் மட்டுமா? அணைப்பில் என்ன ஒரு உரிமை இருந்தது. இது தான் வாழ்கை என்று சொல்ல முடியாது தான். ஆனால் கணவன் மனைவி உறவுக்கு இந்த காதல் தானே அடிப்படை? அப்படிப் பட்ட என் காதலை எப்படி பொய் என்று சொல்ல முடிந்தது? கணவனுக்கு இவள் கொடுத்த வலியை விட இது பெரிது இல்லை என்றாலும் ஏனோ இப்படி ஒரு வார்த்தையை தென்றலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த முறை பெண்ணவளுக்குக் கோபம் கூட வந்தது எனலாம். வழக்கம் போல் கண்ணீர் சிந்தாமல் மாறாக கணவனின் சட்டையைப் பிடித்து என் காதல் எப்படி பொய்யாக போகும் என்று கேட்கத் தோன்றியது இவளுக்கு. அதனால் ஒரு முடிவுடன் உள்ளே வந்தவளின் வேகம் எல்லாம் அங்கே முகத்தில் ஆயிரம் வேதனைக் கோடுகள் சரம் தொடுக்க, கண் மூடி நாற்காலியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்ததும் விலகி விட, தனக்கு நிகரான வேதனையைக் கணவனிடம் கண்டவள் தன் வலி மறந்து அவனைத் தேற்ற இவள் அவனிடம் நெருங்க...

கண்ணைத் திறவாமலே “என்னையத் தொடாத டி” மனைவியின் வாசம் வைத்தே இவன் கர்ஜிக்க, அதில் ஒரு நொடி தயங்கியவள், “சரி தொடலை... ஆனா சொல்லு, என் காதல எப்படி மாமா நீ பொய்னு சொல்லலாம்? அப்படி நான் என்ன தவறு செய்தேன்? அதிலும் உன்னை விட்டு போய்டுவேனு சொல்ற. நான் அப்படி செய்றவளா?” ஒரு வேகத்தில் அன்று செய்த தவறை மறந்து இவள் கேட்டு விட

“ம்ஹும்... அப்டியா?” தன்னவளை ஆழ்ந்து பார்த்தவன், “நீ போக மாட்ட… ஆனா என் பொஞ்சாதி போவா… போயும் இருக்கா” கணவனின் பதிலில் உள்ளம் வலிக்க தலை குனிந்தவளின் மனதோ தன்னவன் சொல்வது உண்மை தானே என்று எடுத்துரைத்தது.

"என்னோட அன்பு, பாசம், காதல், என்னோட தீண்டல்... நான் காட்டுன அரவணைப்பு... இப்டி எதுவுமே ஒன்னைய பாதிக்கலையா? ஏட்டி, நான் ஒன் பக்கத்துல இல்லங்கற நெனப்பு ஒன் நெஞ்சுக்கூட்ட நெருக்கலையா? என் கூடச் சேர்ந்து வாழறது என்னவோ உத்தரத்துல தொங்கறதுக்குச் சமம்னு சொன்னியேடி..." அன்று அவள் கொட்டிய வார்த்தைகள் இன்றும் ஆறாத ரணமாய் அவனுக்கு வலிக்கவே செய்தது.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 38
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN